Friday, July 22, 2016

என்னதான் வேண்டிக் கொள்வது?

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. இது நடைபெற்ற இடம் சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் ஆலயத்திலுள்ள ஆயிரம் கால் மண்டபம். அதிகாலை மூன்று மணிக்கு மேல் இருக்கும். மார்கழித்  திருவாதிரையை முன்னிட்டு மண்டப முகப்பில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அந்த இரவு நேரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வளவு பேரும் தரையில் உட்கார்ந்த வண்ணம் வைத்தகண் வாங்காமல் ஆடல் வல்லானது அபிஷேகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நமக்கு முன்னால் நான்கு வரிசைக்கு அப்பால் சிறிய சலசலப்பு கேட்டது. அதற்குக் காரணமானவர் ஒரு பெண்மணி. அவருக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் சற்று உயரமாக இருந்ததால் அப்பெண்ணால் அவர்களது தலைகளை மட்டுமே பார்க்க முடிந்தது. முன்னால் இருந்தவர்களும் ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் வேண்டும் என்றே நகராமல் , சுவாமி தரிசனம் செய்ய விடாமல் மறைக்கிறார்கள் என்று நினைத்த அப்பெண்ணுக்கு அவர்கள் மீது கோபம் பொங்கி எழுந்தது. என்ன சத்தம் போட்டாள் தெரியுமா? " நடராஜா, இவர்களையெல்லாம் அழித்துவிடு" என்று. சுற்றி இருந்தவர்களுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. மாறாகச்  சிரிப்புத்தான் வந்தது. இப்படியும் ஒரு பிரார்த்தனை செய்யமுடியுமா என்று எல்லோருக்கும்ஆச்சர்யம் ! 

வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தாராம். அவருக்கு ஒரு சிஷ்யன் கூடவே இருந்தானாம். சிஷ்யனும்  குருவைப்போல் நிறையப் படித்தவன்தான். தன்னையும் உலகம் குருவை வணங்குவதைப்போல மதிக்கவேண்டும் என்று எண்ணினானாம். நாளடைவில் அது குரு மீது பொறாமையாக ஆகிவிட்டது. கடவுளிடம்  சீக்கிரமே தனது குரு மறைந்து , தான் மடாதிபதி ஆகவேண்டும்  என்று வேண்டினானாம்! மேற்கூறிய பெண்ணுக்கும் இந்தக் கதையில் வரும் இளம் துறவிக்கும் சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இருந்ததோடல்லாமல் பிறர் அழிய வேண்டும் என்ற பிரார்த்தனை வேறு! 

இன்னும் சிலர் பேருக்காகவும் புகழுக்காகவும் பதவிக்காகவும் வேண்டிக் கொள்வதுண்டு. பணத்தாசை பிடித்தவர்கள் உறவினர்களைக்கூடத் தவிர்த்து விடுவர். சொத்துத்  தகராறினால் பிளவு பட்ட குடும்பங்கள் ஏராளம். பத்திரப் பதிவு மற்றும் நீதி மன்றங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்வதோடு, தங்களுக்கே சாதகமாக அமையவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்வார்கள்! 

வேடிக்கையான பிரார்த்தனைகளும் இல்லாமல் இல்லை. தங்களுக்குப்  பிடித்த விளையாட்டு வீரர் ஒருவர் வெற்றி பெறுவதற்கு வழிபாடுகளும் வேள்விகளும் நடத்துகிறார்கள். திரைப்பட ரசிகர்களோ படம் வெற்றி அடையப் பிரார்த்தனை செய்கிறார்கள்! உலகத்திலேயே புனிதமான தொழில் என்று கருதப்படும் மருத்துவத்தொழில் செய்பவர்களும் தங்கள் தொழில் வளமாக நடைபெற இறைவனை வேண்டுகிறார்கள். உலகம் முழுதும் நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்றால் இந்தத் தொழிலே இல்லாமல் போய் விடலாம் அல்லவா? 

இவ்வளவுக்கும் நடுவில் மனக்கவலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் பிரார்த்தனைகள் காலம் காலமாகத் தொடர்கிறது.  நோய் குணமாவதற்கும் , கால தாமதமான திருமணம் நடைபெறவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் , தேர்வில் வெற்றி பெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் நடத்தப்படும் பிரார்த்தனைகள் தொடருகின்றன. 

பிரார்த்தனை நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதாகக் கூடப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. கோயில்உண்டியல் நிரம்புகிறது. சில கிராமத்து மக்கள் கிடா வெட்டிக் காணிக்கை செலுத்துகின்றனர். 

மேற்கூறிய  எல்லாம் சரியா தவறா என்ற ஆராய்ச்சி இங்கு தேவையில்லை. இப்படி வகை வகையாகக் கோரிக்கைகள் வைக்கப்படும் முன்பு  அவை நியாயமானவைகளா,தருமத்திற்கு உட்பட்டவையா என்று சிந்திப்பது நல்லது. காணிக்கையால் கடவுளை விலைக்கு வாங்கி விட முடியாது. மாசற்ற, என்றும் நீங்காத அன்பு ஒன்றுக்கு மட்டுமே இறைவன் கட்டுப்பட்டவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை முடிவில் செய்யும் பிரார்த்தனை, நைவைத்தியம்  ஆகியவைகளும் அப்பழுக்கில்லாத காணிக்கைகளே. 

குடும்ப நலன் மட்டுமல்லாமல் உலகமே சுகமாக இருக்கச் செய்யப்படும் பிரார்த்தனையையும் , உண்பதன்  முன் மலர் இட்டு அர்ச்சித்துவிட்டு, உண்பனவும் உடுப்பனவும் தந்தவன் இறைவனே என்பதை உணர்ந்து அவனுக்கு நன்றியுடன் செய்யப்படும் நைவைத்தியத்தையும் விட எளிய - உயர்ந்த பிரார்த்தனை இருக்க முடியுமா? " எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லால் வேறொன்று அறியேன்" என்று தாயுமானவர் சொன்னதுபோல்  வேண்டிக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் பெற முயற்சிக்க  வேண்டும். அந்த மனோபாவத்தை நாம் பெற பரமேச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும்.    
    

Monday, June 20, 2016

கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டுமே

நமது கோயில்கள் வழிபாட்டுக்கு உரிய இடங்களாகவே மட்டும்  இருக்கவேண்டும். ஆனால் நாம் இன்று காண்பது என்ன ?  ஊர் வம்பு பேசவும் காற்று வாங்கும்  இடங்களாகவும் பலர்  அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மன அமைதியை நாடி வருபவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இந்த நிலை பெரும்பாலும் நகர்ப்புறக்  கோயில்களில் அதிகம். சில கோவில்களில் எழுதி  வைத்திருக்கிறார்கள் , " பரம்பொருளின் நாமத்தைத்தவிர வேறொன்றும்  ஆலயத்தில்  பேச  வேண்டாம் "  என்று.  கேட்டால் தானே?  நான் பேசுவதைக் கேட்க இவர்கள்  யார் என்பார்கள். சன்னதியை மறைத்துக் கொண்டு பிறரைத்  தரிசிக்க விடாமல்  செய்வார்கள். அண்மையில் நடைபெற்ற திருவாரூர் தேர் விழாவின் போது தேர் சக்கரத்தருகில்  எவரும்  நிற்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப ஒலிபெருக்கி  மூலம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு இருந்தார்கள். சக்கரத்திற்கு அருகில் நிற்பது ஆபத்து  என்று சொன்னாலும் கேட்காமல் அடம் பிடிப்பவர்களை என்ன  செய்வது ? கோயில் வழிபாட்டில் கூடவா ஒழுங்கீனத்தைக்  கையாள  வேண்டும் ? 

பல கோயில்களில்  படப்பிடிப்பு தாராளமாக நடத்தப்படுகிறது.  அப்படி நடக்கும்போது தரிசிக்க வருபவர்களை  உள்ளே நுழைய விடாமல்  படப்பிடிப்புக் குழுவினர் தடுக்கிறார்கள். அப்படித் தடுக்க இவர்களுக்கு ஏது அதிகாரம் என்று புரியவில்லை. சின்னத்திரைப் படப்பிடிப்பும் இதேபோல நடந்து வருகிறது. எதிர்ப்பவர்களைக் காணோம். அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு கோயில் பின்னணியில் கண்ட கண்ட நடனங்களைக் கொண்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சில நோட்டுக் கற்றைகளை வீசி  அனுமதி பெற்று விடுகின்றனர். இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்ன  என்றால் கோயிலுக்கு வந்தவர்கள்  படப்பிடிப்பை வேடிக்கை  பார்ப்பதுதான். 

அண்மையில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம்  கோவிலில் விக்கிரகங்கள் களவாடுவதை மையக்  கருத்தாகக் கொண்டு இருப்பதாக அறிகிறோம். இந்த  தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் சமூகப் பொறுப்பு என்ற ஒன்றே கிடையாதா? நாடு எக்கேடு கேட்டாலும் காசு சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்களா? இவர்களுக்கு சிந்திப்பதற்கு வேறு கதையே கிடைக்கவில்லையா? சதித் திட்டம் தீட்டுவதற்கு சின்னத்திரையில் கோயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களைக்  கேட்கிறோம். நீங்கள்  மாறப்போவதில்லை. சின்னஞ் சிறிய வயதினரைப் பாழ் செய்தது போதும். கோவிலில் களவாடக்  கற்றுக்  கொடுக்காதீர்கள். கோடியில் ஒருவன் அதைப் பார்த்து வீணாகப் போனாலும் நாடு  தாங்காது. நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள்.  

களவு போவது ஒரு பக்கம்  போதாததற்கு விக்கிரகத்தையே மாற்றும்  ஏற்பாடுகள் அற நிலையத்துறையால் செய்யப்படுகிறது. இதைக்  கண்டித்து அடியார்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.  அதோடு நிறுத்தக்கூடாது. கோயில்கள் வியாபாரக் கூடங்களாக மாறுவதையும், படப்பிடிப்பு நிலையங்களாக  ஆவதையும் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும். கேட்பதற்கு யாரும் இல்லாததால் தானே இவ்வாறு படம் எடுக்கத் துணிகிறார்கள்?  அடியார் பெருமக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே இதற்கு விடிவு காலம். 

Friday, June 3, 2016

இன்று நல்ல நாள்

" எல்லா நாட்களும் நல்ல நாட்களாக இருப்பதில்லை. அதேசமயத்தில் நல்லது ஒன்று கூட நடைபெறாத நாளே இருப்பதில்லை " என்ற ஒரு வாசகத்தை அண்மையில் படிக்க நேரிட்டது. அது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஏற்றது என்று அப்போது அவ்வளவாக விளங்கவில்லை. படித்த சில மணி நேரத்தில் வீட்டிற்குப் பசும்பால் கொடுப்பவர் ஒருவர் அடியேனிடம் வந்தார். அதுவரையில் ஒருவருக்கு ஒருவர் அளவளாமல் இருந்தும், அடியேனது கழுத்தில் இருந்த ருத்திராக்ஷத்தைப் பார்த்ததாலோ என்னவோ  அண்மையில் வந்து ஒரு கேள்வி கேட்டார். " ஐயா, ஒரு மாதம் முன்பு எனக்கு நான்கு முக ருத்திராக்ஷம் ஒன்று கிடைத்தது. அதை வீட்டில் உள்ள சிவன் படத்தருகில் வைத்திருந்தேன். என்னிடம் பதினொரு பசுக்கள் உள்ளன. நன்றாகப் போய்க் கொண்டிருந்த பால் வியாபாரம் திடீரென்று சரிவடையத் தொடங்கியது. அசைவம் சாப்பிடும் வீட்டில் ருத்திராக்ஷம் வைத்துக் கொண்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். அதை ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடலாமா? அல்லது தங்களிடமே வேண்டுமானாலும் கொடுத்து விடட்டுமா? " என்றார்.

அவரது பேச்சில் ஒரு வித பயம் கலந்திருப்பது தெரிந்தது. ருத்திராக்ஷம் போடுபவரிடம் அதைப் போட வேண்டாம் என்ற பதிலை எதிர் பார்க்கிறாரோ? ஒருவாறு அவரை சமாதானப் படுத்தத் துணிந்தோம். " நீங்கள் வாரம் ஒரு முறை அசைவம் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். அசைவ உணவும் அப்படி ஒன்றும் மலிவாகக் கிடைப்பதில்லை என்று தெரிகிறது. மேலும் மனிதக் கழிவுகளும் ரசாயனக் கழிவுகளும் கொட்டப்படும் கடலில் பிடிபட்ட மீன்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவைகளாக இருந்தால் அம்மீன்களை உட்கொள்பவர்களுக்குக் கொடிய வியாதிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்கள். எனவே எந்த மாற்றத்தையும் உடனே செய்துவிடுவது கஷ்டம்தான். படிப்படியாகத் தான்  மாறியாக வேண்டும். உங்களைப் பொறுத்தவரையில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். உங்களைப் பார்த்து வீட்டில் உள்ளவர்களும் மாறலாம். முழுவதும்  மாறியபின் அந்த ருத்திராக்ஷத்தைக் கயிற்றில் கட்டிக் கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். பால் வியாபாரம் மட்டுமல்ல. எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள். குடும்பமும் செழிக்க ஆரம்பித்து விடும். அந்த நல்ல செய்தியை ஒரு மாதத்தில் நீங்களே வந்து சொல்வீர்கள் என்று நம்புகிறேன் " என்று கூறி விடை கூறி அனுப்பி வைத்தோம்.
 
இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ருத்திராக்ஷம் போடுவதையோ  அல்லது அதை வேறிடத்தில் கொடுத்து விடுவதையோ , வியாபார முன்னேற்றத்தையோ மட்டும் நாம் இங்கு கவனிப்பதை விட ருத்திராக்ஷம் இருக்கும் இடத்தில் தூய்மையும் பக்தியும் இருக்க வேண்டும் என்று அவர் உணரத் தொடங்கி விட்டார் அல்லவா? அதைப் பாராட்டியே ஆக வேண்டும். அதைப் போட்டுக் கொள்வதை நாகரீகச் சின்னமாக நினைத்து ஆட்டம் பாட்டம் போடுவதும் கேலிக் கூத்தாக்குவதும் வாடிக்கை ஆகிப் போய் விட்ட இக்காலத்தில் இப்படியும் சிலர் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாளையும் நல்ல நாளாக ஆக்கிய அந்த அன்பருக்கும் மறைந்திருந்து நம்மை ஆட்டுவிக்கும் அந்த இறைவனுக்கும் எந்த வகையில் நன்றி செலுத்துவது?  

Saturday, May 28, 2016

இப்படியும் சிவதருமம் செய்யலாமே

தானம் என்பதும் ஒருவகையில் பார்த்தால் தவம்தான்.  தவம் செய்யாதவர்கள் தானத்தை செய்வதன் மூலம் தவம் செய்த பலனைப் பெறலாம் . அன்ன  தானம் உயர்ந்தது தான். ஆனால் எங்கே யாருக்கு அது செய்யப்படுகிறது என்பது அதை விட முக்கியம். பிரதோஷம் நடைபெறும் பல சிவாலயங்களில்  அண்டா அண்டாவாகப் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்வோர்  ஏழை எளியவர்களாகவோ  அல்லது தேசாந்திரிகளாகவோ இருந்தால் பரவாயில்லை. அண்டையிலுள்ள  வீடுகளிலிருந்து வருபவர்களும் கைகளை நீட்டுகிறார்கள். பிரசாதம் என்ற அளவில் கொடுத்தாலும் பரவாயில்லை. (அதுவும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.)வரிசையில் சென்று பெரிய தொன்னைகளில் சுண்டல்,சாத வகைகள் போன்றவை விநியோகிக்கப்படுகின்றன. அப்படி விநியோகம் செய்தால் தான் கூட்டம் வருகிறது என்ற வியாக்கியானம் வேறு !!

பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தது போக, பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்போடு செல்பவர்களுக்கு என்ன சொல்வது?  இவ்வளவு இருந்தும், பலர் அந்த நாட்களில் உபவாசம் மேற்கொள்வதை இன்றும் பார்க்கிறோம். எடுத்துச் சொல்பவர்கள் இல்லாமல் போய் விட்டதால் இப்படி ஆகி விட்டதா என்று தெரியவில்லை. பரமேசுவரன் ஆலகால நஞ்சை உண்டு அகில உலகங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றிய வேளை யில் நாம் அந்த கருணைக்குத் தலை வணங்க வேண்டியது போக வயிற்றுக்கு இரை தேடுவது கொடுமை !!

முற்காலத்தில் திருவிழாக்களைக் காண்பதற்காகப்  பக்கத்து ஊர்களிலிருந்தும் தொலைவிலிருந்தும் யாத்திரையாக வருபவர்கள் தங்க இடமும் உண்ண உணவும் பல சத்திரங்கள்  மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. உள்ளூரில் உள்ள ஏழை மக்களும் தங்களால் இயன்ற உபகாரமாகத் தண்ணீர்ப்பந்தல் அமைத்துத் தந்தனர். இக்காலத்தில் அன்னதானம் செய்கிறோம் என்ரு நினைத்துக் கொண்டு , வயிறார உண்டு விட்டு வருபவர்களுக்குப்  பிரதோஷ நேரத்தில் அன்ன  தானம் செய்வதைத்  தவறு என்று எவரும் சொல்வதாகத் தெரியவில்லை.

ஏதோ செய்துவிட்டுப் போகட்டுமே, சிவதருமமாக  நினைத்துக் கொள்ளலாமே என்று சமாதானம் சொல்பவர்களும் உண்டு. கோயில் இடிந்து கிடந்து பூஜைகள் நின்று விட்டதைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறவர்களின் வெட்டிப் பேச்சுக்களில் இதுவும் ஒன்று. இவர்களில் எத்தனை பேர் சிவதருமமாகத் தங்கள் வீட்டு வைபவங்கள் நடைபெறும்போது பூஜையற்ற கோயில்களை எண்ணிப் பார்க்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் சொந்த கிராமத்துக் கோயில்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று பார்க்கிறார்கள்?  கோயில்களில் பணிபுரியும்  சிப்பந்திகளின் நலனைப் பற்றி சிந்தித்ததுண்டா?  அன்றாடம் செய்யும் ஊதாரிச் செலவுகளின் சிறு துளியையாவது அந்தப் பக்கம் திருப்பி விட்டிருப்பார்களா?

பொழுது விடிந்து பொழுது போனால் பணப் புழக்கத்தில் மூழ்கியிருக்கும் வியாபாரிகளாவது இதைப் பற்றி சிந்திக்கலாம். அண்மையில் ஒரு கல்யாண மண்டப மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த எண்ணத்தை வெளியிட்டோம். வழக்கமாக எல்லோரும் சொல்வது  போல் " என்ன  செய்வது? காலத்தின் கோலம் " என்ற பதிலே அவரிடமிருந்து வந்தது. அவரிடம் ஒரு யோசனை சொன்னோம். மண்டப வாடகையாகப் பல ஆயிரங்கள் கட்டணம் பெறும்போது கூட ஒரு ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயை சேர்த்து வாங்கிக் கொண்டால் அத்தொகையை ஆலய பராமரிப்புக்காக வைத்துக் கொள்ளலாம். அப்படிச் சொல்லிக் கேட்டால் யாரும் கொடுக்கப் போவதில்லை. ஆகவே இவ்வாறு மறைமுகமாகப் பெறப்படவேண்டியிருக்கிறது. மாதம் சராசரியாக ஒரு மண்டபத்தில் நான்கு திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு மாதமும் 2000 முதல் 4000 வரை இப்புனிதப் பணிக்காக சேர்ந்து ஆண்டு முடியும் போது பெரிய தொகையாகச் சேர்ந்து விடும். இதே போல் புடவை வியாபாரம் செய்பவர்கள் புடவை விலையோடு ஐம்பதோ அல்லது நூறோ சேர்த்து விற்றால் அந்த அதிகத் தொகையைக் கொண்டு பல ஆலயங்களையும் சிப்பந்திகளையும் காப்பற்றலாம். ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் இதுபோல் சிந்திக்கலாம்.

நிலவருமானமோ, அரசாங்க உதவியோ  இல்லாத நிலையில் இதுபோன்ற மாற்று வழிகள் மூலம் சிவதருமத்தை செய்ய முடியும். ஆம்! மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும். அந்த எண்ணத்தை  எல்லோரது மனதிலும் தோன்றும்படி அருளவேண்டும் என்று ஈசுவரனைப் பிரார்த்திப்போம். சிவகிருபை இருந்து விட்டால் நடக்காதது எது?

Saturday, May 7, 2016

தவத்திற்கு அழகு

தன்னுடைய சொந்த பந்தங்களைத் துறந்து விட்டுக் காவி உடை தரித்துவிட் ட எல்லோரையுமா உலகம் கொண்டாடுகிறது?  பஞ்சேந்திரியங்களை அடக்கித்  தவம் செய்பவர்களையே மக்கள் நாடுவர். ஆகவே, வெளியில் காவி உடையோடு  சமயச் சின்னங்களைத்  தரித்துக் கொண்டால் மட்டும் போதாது. காவி உடை மேல் பட்டாடைகளை அணிந்தும், வெற்று மார்புடனும்  மக்கள் மத்தியில்  வலம் வரும் துறவிகளைப் ( ? ) பற்றி என்ன  சொல்வது?  அவர்களது சீடர்களும் அதைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகிறார்கள். பிறருக்கு முன் உதாரணமாக இருந்து காட்டவேண்டி யவர்களே நெறி மாறி நடக்கும்போது  மற்றவர்களால் என்ன  செய்ய முடியும்.?

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மூர்த்தி நாயனார் என்பவர்  மதுரைப் பெருமானுக்கு சந்தனம் அளித்துவரும் நியமத்தோடு வாழந்தவர். அவருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காமல் சமணர்கள் செய்துவிடவே, தனது முழங்கையால் சந்தனக் கல்லில் கை நரம்பும் தோலும் கரையும்படி தேய்த்தார். அவரது பக்திக்கு இரங்கிய பரமேசுவரன் அவருக்கு மதுரையை ஆளுமாறு அருளினான். அரசரானபோதும் தனது சந்தனம் அளிக்கும் கைங்கரியத்திலிருந்து அவர் தவறவே இல்லை. அமைச்சர்களை நோக்கிய மூர்த்திநாயனார்," விபூதியே எனக்கு அபிஷேகப் பொருளாகவும், ருத்ராக்ஷமே ஆபரணமாகவும், ஜடாமுடியே கிரீடமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை ஆள்வேன்" என்றார். இந்த மூன்றாலும் ஆண்ட அவரை, சுந்தரர், " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும்  அடியேன் " என்று சிறப்பித்துப்  பாடியிருக்கிறார். . ஓரு அரசர் இவ்வாறு வாழ்ந்து காட்டியபோது, துறவிகள் , தாம் மேற்கொண்ட துறவறத்திற்கு இலக்கணமாக இருக்க வேண்டியது  எவ்வளவு  அவசியம் என்பதை  சொல்ல வேண்டியதில்லை. .வையகத்தை நல்ல வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசனுக்கும் ஆசானுக்கும் உண்டு. அதை மூர்த்தி நாயனார்  வரலாற்றில் சேக்கிழார் கோடிட்டுக் காட்டுகிறார்:

" வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே
 செய்யும் அபிடேகமும் ஆக; செழுங் கலன்கள்
ஐயன் அடையாளமுமாக; அணிந்து தாங்கும்
மொய்புன் சடை மாமுடியே முடி ஆவது என்றார்."  

உள்ளத்து அழுக்கை நீக்கி இருள் நீக்கி அருள் தர வல்ல குருநாதரை நாடினால் குருவருளால் சிவனருள் எளிதில் பெறலாம். " தவத்திற்கு அழகு  சிவத்தைப் பேணுதல்"  என்பதால் இங்கு பேணுதல் என்பதைத்  தவத்தால் பேணுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு தவம் செய்வதால் குருவினது ஆற்றல் பன்மடங்கு பெருகும். எனவே , " என்பும் உரியர் பிறக்கு" என்றார் வள்ளுவர்.

காஞ்சி பெரியவர்கள் , சேஷாத்ரி சுவாமிகள்,ரமண மகரிஷிகள் போன்றோர் அண்மைக் காலத்தில் வாழ்ந்து தவம் செய்து காட்டியவர்கள். " நாட்டில் மக்கள் நெறி தவறி  நடக்கிறார்கள் என்றால் நான் செய்த தவம் போதாது என்று அர்த்தம். . முதலில் நான் மேலும் தவம் செய்து உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வேன்" என்று ஒருமுறை காஞ்சி பெரியவர்கள் சொன்னார்கள்.  

தவத்திற்கும் நெறி உண்டு. அந்த நெறியைக் காட்டி மன இருளை மாய்க்க வல்லவரே சற்குரு. அவரையே, திருமூலர்,  "  குருட்டினை  நீக்கும் குரு"  என்கிறார். அதுவரையில் முகத்தில் கண் கொண்டு காணும்  மூடர்களாக இருந்தவர்களை அகத்தில் கண் கொண்டு காணச் செய்து ஆனந்த மயமாக்கும் சற்குரு நாதர் கிடைக்க  நாமும்  தவம் செய்திருக்க  வேண்டும்.   தாயுமானார் சொல்லியதுபோல, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று முறையாக யாத்திரை செய்யும் போது சற்குரு  வாய்ப்பதும் உண்டு. அருளாளர்களுக்கு  இறைவனே சற்குருநாதனாக  எழுந்தருளுகிறான். திருத் துறையூர் என்ற தலத்தை அடைந்து " தவ நெறி தந்தருள்" என்று வேண்டிய சுந்தரருக்கு அவ்விதமே பெருமான் அருளினான். அங்கு சுவாமிக்கு சிஷ்ட குருநாதர் என்ற பெயர் உண்டு. அதேபோன்று திருப்பெருந்துறையில்(ஆவுடையார் கோயிலில்) மாணிக்க வாசகருக்காகக்  குருந்தமரத்தடியில் ஞானாசிரியனாக அருளினான் சிவபெருமான் .

மலைப் பிரதேசங்களிலும் காடுகளிலும் அவதூதர்களாக இரவில் யார் கண்ணிலும் படாமல் சஞ்சரித்தும், தவம் செய்தும் பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அப்படியெல்லாம் இப்போது ஒருவேளை இல்லாமல் போனாலும் துறவறம் ஏற்றவர்கள் கால் நடையாகவே சென்று ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தங்கி, மக்களை நல்வழிப்படுத்தும் நெறியிலிருந்து மாறிவிட்டால் யார்தான் அவர்களைக் கரை ஏற்றுவார்கள்? நகர வாழ்க்கை வாழ்பவர்களையே சந்திப்பதும் அங்கே தங்குவதும் தவத்திற்கு இடையூறாகவே அமையும். தவத்திற்கு அழகான சிவத்தைப் பேணுவதிலும் சிரத்தை குறைய ஆரம்பித்து விடும். இருவேளை பூஜைகள் ஒரு வேளை  ஆகி விடும். அதர்மத்தில் மூழ்கியுள்ள மக்களைத் திருத்த வழி இல்லாமல் போய் விடும். நாளடைவில் துறவறத்தை ஏற்று மக்களை நன்நெறிப்படுத்துவோர்  எண்ணிக்கையும் குறைந்து விடுமோ என்ற அச்சமும் எழுகிறது. தவநெறி தந்தருளும் தயாபரனாகிய ஞான பரமேசுவரனே இதற்கும் வழி காட்ட வேண்டும்

Thursday, April 14, 2016

அற நிலையத் துறை விளக்கம் தரட்டும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றை முகநூலில் ஒரு அன்பர் வெளியிட்டிருந்தார்.   தெய்வங்களுக்கு அணிவிக்க  வழங்கப்படும் நகைகள் பல கோயில்களில் களவு போவதும்,போலியாக மாற்றி வைக்கப்படுவதும் நடைபெறுவது தொடர்கதை ஆகி விட்டது. அது மட்டுமல்ல. பல கோயில்களில் கல்லாலும் பஞ்ச லோகத்தாலும் ஆன  மூர்த்திகள்  களவாடப்பட்டுள்ளன. இப்படி நகைகளும் மூர்த்திகளும் எத்தனை களவாடப்பட்டுள்ளன என்றும் எத்தனை மீட்கப்பட்டுள்ளன என்றும் இச்சட்டத்தின் மூலமாகக் கேட்கப்பட்டதற்கு அறநிலையத்துறை தந்துள்ள விவரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  இவ்வளவு நடைபெற்றும் அற நிலையத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

26.7.2010  தேதியிட்ட கடிதத்தில் தந்துள்ள தகவலின்படி 1999 ம் ஆண்டு முதல்  ஜூலை 2010 இடைப்பட்ட காலத்தில் 215 கோயில்களில் நகைத் திருட்டு நடைபெற்றுள்ளது. அதில் 16 கோயில்களின் நகைகளே மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 175 கற்சிலைகள் காணாமல் போனதில் 30  மட்டும் மீட்கப்பட்டுள்ளன. களவாடப்பட்ட 415 பஞ்சலோக விக்கிரகங்களில் 25 மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 1999 ம் ஆண்டுக்கு முன்பும், 2010 ம் ஆண்டுக்குப் பிறகும் நாம் இழந்தது எத்தனையோ!!




மேற்கண்ட கடிதத்தின் பெறுநர் விவரம்  முகநூலில் மறைக்கப்பட்டிருக்கிறது. எப்படியானாலும் தரப்பட்ட தகவல் உண்மையானது என்று நம்புவோம்.
அறநிலையத்துறை அமைக்கப்பட்டதன் நோக்கமே ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குத்தான். களவாடவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. இந்தத் திருட்டுக்களுக்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? துறையின் அமைச்சரா, அல்லது,ஆணையரா, அல்லது இணை/துணை கமிஷனர்களா அல்லது குறைந்த பட்சம் நிர்வாக அதிகாரியா? திருட்டு நடைபெற்றால் ஒருவரும் தண்டிக்கப்படுவதில்லை. இடமாற்றம் கூடச் செய்யப்படுவதில்லை.        " இதெல்லாம் ஆலயங்களில் நடைபெறுவது சாதாரணம் அப்பா.." என்று கூடச் சொல்லிவிட்டு மௌனிகளாகி விடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது இந்த அரசுத் துறை தேவையற்றது என்று சட்ட சபையில் எவரும் குரல் எழுப்புவதில்லை.

பஞ்சலோக மூர்த்திகள் களவாடப்படுவதைத் தடுப்பதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை வேறு ஒரு பெரிய கோயிலுக்கு இட மாற்றம் செய்கிறார்கள். எந்தக் கோயிலுக்காக அம்மூர்த்திகள் மன்னர்களால் செய்து வைக்கப்பட்டதோ  அவை இப்போது அங்கு இல்லாமல் போய் விடுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்றால் அவற்றை உரிய கோயிலுக்குக் கொண்டு வர அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. அர்ச்சகரும் ஊராரும் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்து கையெழுத்து இட வேண்டியிருக்கிறது. அதற்கான முழுச் செலவையும் ஊராரே ஏற்க வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரிக்கு வேறு என்னதான் பொறுப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

 ஐம்பொன் மூர்த்திகளை இட மாற்றம் செய்து வீட்டுப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். கற்சிலைகள் பராமரிப்பின்றி அனாதையாக விடப்படுவதை ஏன் இவர்கள் கண்டு கொள்வதில்லை? சுற்றுச் சுவர் கூட அமைக்கப் படாமல் , உளுத்துப் போன கதவுகளே காவல் என்று இருக்கும் அவல நிலைக்கு யார் காரணம்?  சில ஊர்களில் அந்தக் கதவுகளுக்கும் வருகை தரும்  சேவார்த்திகளே பூட்டு  வாங்கித்தருகிறார்கள். மின்சார பல்பு பழுதுபட்டால் அதையும் அவர்களே வழங்குகிறார்கள்.  இதெல்லாம் யார் செய்ய வேண்டியது? நில வருவாயைத்தான் மீட்டுத் தர முடியவில்லை. பாதுகாப்பையாவது பலப் படுத்தக் கூடாதா?

இனி உடனடியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுற்றுச் சுவர் அமைத்தல், பலமான விக்கிரகப் பாதுகாப்பு அறை , பாதுகாப்பு அலாரம், முழுநேரக் காவலர்கள் , நகைப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.  இவற்றைச்  செய்யாமல் களவு பற்றிப் போலீசாரிடம் தகவல் தந்துவிட்டால் கடமை முடிந்து விடாது.  கடமை தவறும் அரசுத் துறையால்  ஆலயங்கள் இழந்தவை ஏராளம். எஞ்சியவற்றையாவது பாதுகாக்க வேண்டாமா?  

Sunday, April 10, 2016

யாக சாலைக்குள் மொபைல் போன் வேண்டாமே

உலகம் எதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ அதன்படி நம்மை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. " உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்றார் வள்ளுவர். பொதுக் காரியங்களில் ஈடுபடும்போது இன்னமும் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. எத்தனையோ கண்கள் நம்மைப் பலவகைப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு பார்க்கின்றன என்பதை உணர வேண்டும். எனக்குப் பிடித்ததைச் செய்வேன் என்ற கொள்கையைத் தளர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிலும் ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் அதற்குரிய நியமங்களுடன் விளங்குவதையே மக்கள் விரும்புவர். இன்னும் சொல்லப்போனால், இறைவனைத் தீண்டி அன்றாடம் பூஜை செய்வோர்  பாரம்பர்யத்திலிருந்து சிறிது விலகினாலோ,அசிரத்தை காட்டினாலோ பார்ப்பவர்கள் முகம் சுளிக்க நேரிடுகிறது. எல்லோருக்கும் காலமாற்றத்தால் ஏற்படும் ஆசா பாசங்கள் எங்களுக்கும் ஏற்படுவது தவறா என்று வாதிடுவதால் உபயோகம் எதுவும் இல்லை.

“ முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்” என்று ஆதி சைவப் பெரு  மக்களைத் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்திருக்கிறார் சுந்தரர். அவ்வாறு தொகை அடியார் வரிசையில் வைத்துப் புகழப்படும் அளவுக்கு சிவபெருமானிடம்  மாறாத அன்பு பூண்டவர்கள் ஆதி சைவர்கள். தினையளவும் ஆகம வழியிலிருந்து மாறாமல் நியமத்துடன் பூஜைகள் செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நேர வாய்ப்பு உண்டு என்பதால் சிவாகம வழி பூஜை முடிவில் ஆசீர்வாதம் கூறும்போது மந்திர,தந்திர, கால, ,சிரத்தா,நியம லோபங்கள் (குற்றங்கள்) தற்செயலாக நிகழ்ந்து விட்டால் அதற்குப் பெருமானிடம் மன்னிப்பு வேண்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது அறிந்தே தவறு செய்யத் துணியலாமா?

கால நிலைமையால் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வந்த ஆலயங்கள் பலவற்றில் ஒரு கால பூஜையே நடக்கக் காண்கிறோம். அந்த ஒரு கால பூஜைக்கும் ஆபத்து வந்து விடும் சூழ்நிலை உருவாகிறது. இதற்கிடையில் பல ஆலயங்கள் திருப்பணி செய்யப்பட்டுக்  கும்பாபிஷேகம் நடைபெறுவது ஆறுதலான விஷயமாக இருந்தாலும் அவையும் நவீன மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

 இந்நாட்களில் சிவாசாரியப் பெருமக்களுக்கு ஓரளவு வருவாயைத் தருவது கும்பாபிஷேகங்களும் ஹோமங்களும் மட்டுமே. கிராமக் கோயில்களில் பணி செய்பவர்கள் இவற்றையே பெரும்பாலும் நம்பி அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அப்படி கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும்போது மேற்கண்ட லோபங்கள் நடைபெறாமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த வைபவத்தால் மூர்த்திகளின் சாந்நித்தியம் கூடுவதோடு, உலக நன்மையையும் கோரப்படுகிறது. அது சித்திக்க வேண்டுமானால் பங்குகொள்பவர்களது சிரத்தையும் நியமமும் முக்கியம் தானே?

சில ஊர்களில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற சிவாசார்யார்களுக்கு உரிய சம்பாவனை கொடுக்கப்படாமலோ,காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டோ அவர்களுக்கு மனவேதனையை அளிப்பது உண்மை தான்.பிரபலமான ஒரு கோயிலிலும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டதை ஒரு சிவாசாரியார் அண்மையில் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அதே ஆலயத்தில் அனேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறும்போது சில ஆசாரியர்கள் அங்கு வருகை தரும் முக்கிய புள்ளிகளோடு மொபைலில் படம் எடுத்துக் கொள்வதைக் கண்டு ஓர் அன்பர் முகநூலில் மனம் வருந்திக் குறிப்பிட்டிருக்கிறார். தங்களது கோயிலில் சிவராத்திரி பூஜை செய்த ஒருவர் மூலவரின் பக்கத்தில் நின்று கொண்டு படம் எடுத்து முக நூலில் வெளியிட்டிருக்கிறார். இவற்றைக் காணுபவர்கள்  என்ன நினைப்பார்கள் என்று எண்ணிப் பார்ப்பதோடு இந்த செய்கைகள் முறைதானா என்று தங்களுக்குள்ளே கேட்டுப்பார்ப்பது நல்லது எனக் கருதுகிறோம். யாக சாலையில் ஜோதிப் பிழம்பாகப் பெருமான் காட்சி அளிக்கும்போது அதனைக் கண்டு களித்து, வேத- ஆகம மந்திரங்களால் பெருமானைப் போற்ற வேண்டிய  கடமையிலிருந்து விலகுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?


இவ்வாறு சுட்டிக்காட்டுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இவ்வாறு எழுதுவதை நாம்  பல காலம் தவிர்த்து வந்த போதிலும் சமூக வலைத்தளங்களில் பலரும் எடுத்துக் காட்டும் போது இனியாவது அப்படி நேராதபடி திருத்திக் கொள்ள வேண்டும் என்பதால் எழுதும்படி ஆகி விட்டது. ஒரு சிலர் இவ்வாறு செய்வதால் ஆதிசைவ குலம் முழுவதையும் ஒன்றாகவே மக்கள் எடை போடுவார்கள் என்பதால் முன்னைக் காட்டிலும் அதிகக் கட்டுப்பாடு அவசியமாகிறது. யாக சாலை பூஜைகளின்போது மொபைலில் பேசுவதையோ,படம் எடுப்பதையோ பங்குகொள்ளும் சிவாச்சாரியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எவ்வளவு பேர் இக்கருத்தை ஏற்பார்கள் என்று தெரியவில்லை. ஏற்க மறுக்கும் பட்சத்தில் கும்பாபிஷேக யாக சாலைகளில்  ஒருபுறத்தில் போட்டோ ஷாப்பும், மற்றொரு புறம் காப்பி பாரும் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். அதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சுவாமிதான் யாக சாலாப் பிரவேசம் செய்ய வேண்டும். மொபைல்போன் அல்ல!