Tuesday, April 30, 2013

விஜய வருஷ காலண்டர்


பொதுவாகவே நமது பண்பாடு அதன் தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்துவருகிறது. வாய்ச் சொல்லில் வீரர்கள் மட்டும் நிறையவே இருக்கிறார்கள்! நமது பண்பாட்டின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்வதெல்லாம்  மக்களது கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்கத்தான்! தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா என்ற சர்ச்சை வேறு. தமிழ் ஆண்டுகள் அறுபதின் பெயர்களை எந்தப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. சுவாமிமலையிலுள்ள அறுபது படிக்கட்டுக்கள் மட்டும் அப்பெயர்களைத்  தாங்கிக் கொண்டு இருக்கின்றன. மற்றவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்தாவது தெரிந்துகொண்டால் சரி!

தமிழ்ப் புத்தாண்டு தினமும் ஏதோ சம்பிரதாயமாக வந்த வேப்பம்பூ பச்சடி,பானகம்,நீர்மோரோடு நின்றுவிடுகிறது. சிலர் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். அதே சமயம், ஆங்கிலப் புத்தாண்டைப் பாருங்கள். கண் விழித்தாவது நடு ராத்திரி 12 மணிக்கு பட்டாசு வெடித்துவிட்டு sms அனுப்பி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். சில கோயில்கள் இரவு பூராவும் திறந்து வைக்கப் படுகின்றன. இவர்கள்  எல்லாம் சிவராத்திரிக்குக் கண் விழிக்கிறார்களோ இல்லையோ, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்! இதெல்லாம் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட பிறகு ஏற்பட்ட விளைவுதானே! அப்படியானால் நமது பாரம்பர்யம்,கலாசாரம் ஆகியவை எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை அதெல்லாம் பழைய பஞ்சாங்கம் என்று ஒதுக்குகிறார்களா என்று புரியவில்லை. பெண்மணிகளும் இம்மாயையில் சிக்கி, வீட்டு வாயிலில் போடும் கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் வரைகிறார்கள்.

இவ்வளவுக்கும் நடுவில் நமது பண்பாட்டில் அக்கறை உள்ளவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இன்னும் இருக்கிறார்கள் என்பதே பெருமைப் பட வேண்டிய விஷயம். நகரங்களில் வேண்டுமானால் இப்போது நடக்கும் தமிழ் ஆண்டு,மாதம்,தேதி முதலியவை தெரியாதவர்கள்  ஏராளமாக இருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னமும் தமிழ் மாதங்களும்,தேதிகளுமே நடைமுறையில் இருக்கிறது.  வைகாசி 15 ம் தேதி கும்பாபிஷேகம் வைத்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்களே தவிர அதற்கான ஆங்கிலத்தேதியைக் கும்பாபிஷேகப் பத்திரிகையைப் பார்த்தே தெரிந்து கொள்ளவேண்டும் .

கிராமத்து மக்கள் இவ்வாறு தமிழ் மாதங்களை அனுசரித்து வந்தபோதிலும் ,அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மாதக் காலண்டர் யாரும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. பஞ்சாங்கத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் குறை நீங்கும்படி, சதுரா பதிப்பகம் வெளியிட்டுள்ள விஜய வருஷ காலண்டரைப் பார்த்தால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பக்கமாக நல்ல தாளில் நேர்த்தியாக அச்சிட்டிருக்கிறார்கள்.தெய்வங்களின் அருமையான படங்கள் ஒவ்வொரு மாத முகப்பிலும் அலங்கரிக்கின்றன. தமிழ்த் தேதிக்கு அடியில் ஆங்கில தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.விசேஷ தினங்கள், பண்டிகைகள்,நாயன்மார்களின்  குருபூஜை தினங்கள்  ,சுப முகூர்த்த நாட்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மேலும் விவரம் வேண்டுவோர், சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம்,சோமங்கலம்,சென்னை என்ற முகவரியிலும், 9894190999 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். பதிப்பகத்தார்க்கு நமது நன்றியும் வாழ்த்துக்களும்.

Tuesday, March 26, 2013

சிவாசார்ய வந்தனம் - V


உலக நன்மைக்காகச்  செய்யப்படும் பரார்த்த பூஜைக்கு உரியவர்கள்  சிவாச்சார்யர்கள் ஆவார்கள். சிவாகமப்படி காலம் தோறும்  நியமத்துடன் இப்பூஜைகள் நடைபெறுவதற்காக அரசர்கள் பலர் நிபந்தங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். காலப்போக்கில், இத்தருமங்கள் யாவும்  சரிவரப் பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவை விரைவாகத் திருத்தம் பெற வழி வகைகள் செய்யப்படாமல் இருப்பதால், பல கிராமங்களில் பூஜைகள் ஒரு காலம் நடைபெறுவதே சிரமமாக இருக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆலய சிப்பந்திகளே ஆவார்கள். கோயில் மேளங்களும், மடைப்பள்ளி ஊழியர்களும், ஓதுவார்களும், இப்பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். இதில் எஞ்சியவர்கள் சிவாசார்யர்கள் மட்டுமே. அவர்களிலும் பலர்,வறுமையால் பெரிதும் துன்பப்படுகின்றனர். அரசாங்கமோ அவர்களது நிலைக்கு இரக்கப்படுவதாகத் தெரியவில்லை. கொடுக்கும் இருநூறு- முன்னூ று ரூபாய்  சம்பளத்தையும் ஒவ்வொரு மாதமும் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏராளமான கிராமக் கோயில்கள் பூட்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவரவர்கள் தங்கள் பூர்வீக கிராமக் கோயில்களுக்குத் தங்களால் ஆன உதவியைச் செய்யலாம். இன்னும் கொஞ்சம் வசதி உள்ளவர்கள், திருப்பணிக்கு உதவலாம். இன்னும் சிலர், பூஜைப் பொருள்களுக்கும், சிவாசார்யாரது சம்பளத்திற்கும் உதவ முன்வரவேண்டும். இதைத் தங்கள் கடமையாகக் கருதினால் நல்லது. வறுமையில் வாடும் பலரது வாழ்வில் ஒளி ஏற்றினால் நாமும் நமது குடும்பமும் சிவனருள் பெறலாம் அல்லவா? "முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்று பாடிக்கொண்டு மட்டும் இருக்காமல் அதைச்  செயலிலும் காட்டினால் உயர்ந்தது தானே?

கடந்த இரு ஆண்டுகளாகத் திருவாதிரையான் திருவருட்சபை, கிராமங்களில் உள்ள சிவாலயங்க ளில்  பரம்பரையாகப் பூஜை செய்துவரும் சிவாச்சார்யர்கள் இருபது பேரை அவர்களது துனைவியார்களோடு அர்ச்சித்து, கௌரவிக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி , திருவாரூருக்கு அண்மையில் உள்ள சாட்டியக்குடி என்ற தலத்தில் உள்ள    ஸ்ரீ  வேதநாயகி  சமேத ஸ்ரீ  வேதபுரீச்வர ஸ்வாமி ஆலயத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. சாட்டிய முனிவரால் வழிபடப்பெற்ற இத்தலத்தைக் கருவூர்த்தேவர் திருவிசைப்பா பதிகத்தால் போற்றியுள்ளார். இத் தலத்தின் அருகிலுள்ள வலிவலம் , வடகரை,பொரவாச் சேரி,பெரிய குத்தகை ஆகிய தலங்களின் சிவாசார்யர்களும் தங்கள் துனைவிமார்களோடு வந்திருந்து சிறப்பித்துத் தந்தார்கள்.

கணபதி பூஜை,புண்யாவசனம் ஆகியவை நடைபெற்றபின்னர் , ஸ்வாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. புதிய வஸ்திரங்கள் மற்றும் மலர் அலங்காரம் செய்த பிறகு, சுவாமிக்கு ருத்ர த்ரிசதியும் அம்பாளுக்கு அஷ்டோத்திரமும் செய்யப்பெற்று, பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஐந்து தலத்து சிவாச்சார்ய தம்பதிகளுக்கு புதிய வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின் , அர்ச்சனைகளும் தீபாராதனைகளும் செய்விக்கப்பட்டு  சம்பாவனை செய்யப்பட்டு,அவர்களின்  ஆசி பெறப்பட்டது. நிறைவாக மாகேச்வர பூஜையும் நடைபெற்றது. தலத்து ஓதுவா மூர்த்தி, மேளக் காரர், பிற சிப்பந்திகள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். நமது சபை அண்மையில் துவக்கியுள்ள Ardhra Foundation என்ற அமைப்பு இதுபோன்ற சிவபுண்யங்களை மேலும் மேலும் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீ முருகப்பன்,ஸ்ரீ வெங்கடேசன்,ஸ்ரீ கார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோருக்குச் சிவனருள் துணை நிற்பதாக.

இது போன்ற நிகழ்ச்சிகள் அன்பர்களால் பல ஊர்களிலும் நடத்தப்பெற வேண்டும் . கிராமக் கோயில்களில் தீபம் இல்லாதிருக்கும் நிலை வரவே கூடாது. அதற்கு இறைவன் நிச்சயம் துணையிருப்பான். வாடிய வாட்டம் தவிர்ப்பவன் அவன். அனைவரையும் துன்பக்கடலில் இருந்து கரை ஏற்றும் தோணியாவானும் அவனே. இது போன்ற பணிகள் ஊர் தோறும் நடைபெறச் செய்யும் மனத் தெளிவையும்  அப்பரமனே அருள வேண்டும்.

Tuesday, March 19, 2013

திருச்சோற்றுத்துறையில் முப்பெரும் விழா



திருவையாற்றின் சப்த ஸ்தான ஸ்தலங்களில் திருச்சோற்றுத்துறை என்பதும் ஒன்று. இது கண்டியூருக்குக் கிழக்கில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கௌதம முனிவர் ஆசிரமம் அமைத்துக்கொண்டு , சிவ பூஜை செய்து வந்தார். அதன் பயனாக ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்தார். தவிரவும், அருளாளன் என்ற வேதியனுக்கு ஸ்வாமி, எடுக்க எடுக்கக் குறையாதபடி அன்னம் கிடைக்க ஒரு அக்ஷய பாத்திரத்தை அருளினார். இதனால் அவ்வூர் ஓதன வனம் (ஒதனம்= சோறு) என்றும் சோற்றுத்துறை என்றும் வழங்கப்பட்டது. அம்பிகை, அன்னபூரணி எனப்படுகிறாள். சோறு என்பதற்கு  மோக்ஷம் என்ற பொருளும் உண்டு. தரிசிப்பவர்களுக்கு இத்தலம் மோக்ஷத்தைத் தருவதால், சோற்றுத்துறை எனப்பட்டது. ஸ்தல புராணமும், இங்கு ஒரு பிடி அன்னம் அளிப்பது, ஆயிரம் அந்தணர்களுக்கு அறுசுவை உணவு கொடுத்த பலனை அளிக்கும் என்று கூறுகிறது. ஒதனவனேச்வரரை சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகிய மூவரும்  தேவாரப் பதிகங்களால் பாடியிருக்கிறார்கள்.

மண்ணில் பிறந்த பயனே, சிவனடியார்களுக்கு அன்னம் அளிப்பதுதான் என்று பெரிய புராணமும் கூறுவதால், இந்த ஊரில் சுமார் 350-400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு அந்தணக் குடும்பம் , அன்னபூரணி தர்ம சத்திரம் என்ற கட்டிடத்தைக் கட்டி, அதில் அன்ன தானமும், வேத பாடசாலையும்,கோசாலையும் நடத்தி வந்தது. அவர்களது தலைமுறையினர் இன்று வரையில் அன்னதானத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.காலப்போக்கில், கோ- சாலையையும் , வேத பாட சாலையையும் தொடரமுடியாமல் போனாலும், அன்னதானம் மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது. சித்திரையில் சப்த ஸ்தான ஸ்தலங்களுக்குத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பர் பல்லக்கில் எழுந்தருளும்போது, பின்னால் நடந்துவரும் பக்தர்களுக்கு இங்கு அன்னதானம் வழங்கப்படுவது , சோற்றுத்துறை என்ற பெயருக்கு மிகவும் பொருத்தம் தானே!

இந்த அன்னதானப் பரம்பரையில் வரும் இன்றைய டிரஸ்டி ஸ்ரீ கண்ணன் அவர்களுக்குத் தன் முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த கோ சாலையை மீண்டும் துவக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. அதற்காகப் பழைய கோ சாலையைத் சீர் திருத்தி, பசுக்கள் நிற்பதற்குத் தகுந்தாற்போல் இடம் அமைத்து, வைக்கோல் சேகரித்து வைக்க ஓரிடமும் ஒதுக்கியமைத்து, அன்னபூரணி கோசாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதோடு, ஆலய சிவாச்சாரியார் வசிக்க வீடு அமைத்துத் தரவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இவ்விரு சிவபுண்ணியங்களுக்கும் உறுதுணையாகச்  சில மெய்யன்பர்கள் முன் வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாகத் திருவருளும் துணை செய்தது. இத்தலத்தின் மீது இயற்றப்பட்ட புராணத்தின்  மூலம் மாத்திரம் பல்லாண்டுகளுக்கு முன் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அப்புராணத்தைப் பொழிப்புரையோடு ஆதீன வெளியீடாக அச்சிட்டுத் தருவதாகத் திருவாவடுதுறை ஆதீன 23 வது குருமூர்த்திகளாகப் பீடத்தில் இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்ரகாச தேசிக மூர்த்திகள் கருணை பாலித்திருந்தார்கள். நூல் வெளியாவதற்கு முன்னரே அவர்கள் சிவமுக்தி அடைந்துவிட்டபடியால், அடுத்ததாகப் பட்டம் ஏற்றுள்ள 24 வது குருமகாசந்நிதானம்,ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அதனைப் பூர்த்தி செய்து வெளியிட்டுத்தருவதாகக் கூறியருளினார்கள். இவ்வாறு மூன்று நிகழ்ச்சிகளும் முப்பெரும் விழாவாக உதயம் ஆயிற்று.

18.3.2013 திங்கள்கிழமையன்று சிவாச்சார்யாருக்குப் புதியதாகக் கட்டப்பட்ட மனையில்  கணபதி ஹோமம் முதலியன நடைபெற்றன. காலை சுமார் 9 மணிக்குத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரும், அதன் பிறகு, திருப்பனந்தாள் காசி மடத்து இணை அதிபரும், பின்னர், தருமபுர ஆதீனக் கட்டளை சுவாமிகளும் வருகை தந்தனர். ஆலய தரிசனத்திற்குப் பின் கோசாலையைத் திறந்து வைத்தும், திருச்சோற்றுத்துறைப் புராணத்தை வெளியிட்டும் ஆசி வழங்கினார்கள். அடியேனுக்கும் , " ஆன்  ஐந்தும் ஆடினான்" என்ற தலைப்பில் உரை ஆற்றும் பேறு கிட்டியது.  

ஆன்மீக உலகிற்குச் சவாலாக விளங்கிவரும் சிவாச்சார்யர்  நிலை, பசுப்  பராமரிப்பு, தல புராணங்களைப் பேணுவோர்/படிப்போர் குறைதல் ஆகிய மூன்றையும் முன்னிருத்தி, இம் மூன்றுக்குமே முடிந்த அளவில் தனது ஊரிலாவது தீர்வு  காண முயலும் ஸ்ரீ கண்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வேத பாடசாலையையும் மறுபடியும் துவக்கவேண்டும் என்ற இவரது ஆசையை வேத நாயகனாகிய பரமேச்வரன் நிறைவேற்றப் பிரார்த்திக்கிறோம். பல இளைய சமுதாயத்தினருக்கு இவரது தொண்டு முன் உதாரணமாக விளங்க வேண்டும். அதனால், இவரைப் போன்றோர் பலர் சிவத்தொண்டு ஆற்ற முன் வர வேண்டும். இதற்குத் திருவருளும் குருவருளும் துணை நிற்பதாக.


Friday, March 8, 2013

எது முக்கியம்??


திருவிளக்கு பூஜைகள் கோவில்களில் நடைபெறுவது என்னவோ சமீப காலத்ததாக இருக்கலாம். இதுபோல் ராகு கால துர்க்கை  பூஜை, குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்- கொண்டைக் கடலைமாலை சார்த்துதல்,ராகுகால சரபர் அர்ச்சனை, கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று பைரவர் பூஜை , ஆகியனவும் அண்மையில் சேர்ந்தவை தான் என்றாலும், இப்படியாவது மக்கள் கோயில்களுக்குச் செல்கிறார்களே என்று நினைக்க வேண்டுமே தவிர, ஏது சரி ஏது தப்பு என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. குறைகளை மன்னித்துத் தினை அளவாவது நிறை இருந்தால் இறைவன் அதை மகிழ்ந்து ஏற்பான். இதைத்தான் சம்பந்தரும் , "குறை உடையார் குற்றம் ஒராய் கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய்.." என்று பாடுகிறார். தவிரவும், எத்தனை நியமமாகப் பூஜை செய்தாலும், குறைகள் இருக்கவே செய்யும். அதற்காகத்தான், பூஜை முடிவில், நியமலோபம், கால லோபம், ஸ்ரத்தா லோபம் ஆகியவற்றிற்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டப்படுகிறது.

லக்ஷார்ச்சனை என்பது நெடுங்காலமாகச் செய்யப்பட்டு வருவது. சகஸ்ர நாமத்தால் செய்யப்படும் அர்ச்சனை லக்ஷம் நாமாக்கள் ஆவதற்குப் பொதுவாகப் பத்து தினங்கள் அன்பர்களின் ஆதரவோடு செய்யப்படுகிறது. இதுவும் பெரும்பாலும் பெரிய ஊர்களில் பக்தர்களின் ஆதரவுக்கேற்ப நடக்கிறது. ஏக தின லக்ஷார்ச்சனை என்பதே பெரிய விஷயம். அதைவிடச் சிறந்த வகையில் ஏக கால லக்ஷார்ச்சனை, சிதம்பரத்தில் ஆனியிலும்,மார்கழியிலும் ஸ்ரீ நடராஜப்பெருமான் தேரிலிருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்ததும் செய்யப்படுவதைக் காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது.

இப்போது நமது கவனத்தில் எழுந்ததைச் சொல்லியே ஆகவேண்டும். முன்பெல்லாம் அர்ச்சனைக்குக் கொடுத்தால் பிரசாதமாக விபூதி-குங்குமம், தேங்காயின் ஒரு பகுதி, ஒரு வாழைப் பழம் ஆகியவை பிரசாதமாக அளிப்பதைப் பக்தர்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். எந்தப் புண்ணியவான் துவக்கிவைத்த பழக்கமோ தெரியவில்லை, ரூபாய் நூறு முதல் ஐநூறு வரை கட்டணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மேற்கூறிய பிரசாதங்களுடன் , கட்டணத்துக்கு ஏற்றபடி அதிரசம்,முறுக்கு,லட்டு,சர்கரைப் பொங்கல்,சுவாமி-அம்பாள் படங்கள், ப்ளாஸ்டிக் தட்டுக்கள், டப்பாக்கள்,  எவர்சில்வர் டிபன் பாக்ஸ்,துணிப்பை ,வெள்ளி டாலர்கள் போன்ற பொருள்களும் கொடுக்கப் படுகின்றன.  வீட்டில் இந்தப்போருள்கள் எல்லாம் இல்லாததுபோலப் பறக்கும் கூட்டம்! உண்மையான பிரசாதத்திற்கு மதிப்பு இல்லாமலேயே போய் விடுகிறது. நம்மிடம் கூடுதலாகப் பணம் வசூலித்து நமக்கு மேற்கண்ட பொருள்களைக் கொடுக்கிறார்கள் என்று ஏன் தோன்றுவதில்லை? அப்படியானால் இந்த வியாபாரத்திற்கு நாமும் உடந்தை தானே?

கோவிலுக்குள் நுழைவதிலிருந்து பலப்பலக் கட்டணங்கள் வசூலிக்கும் நமது அறநிலையத்துறை மட்டும் சும்மா இருக்குமா? கோவில் நிர்வாகத்தின் மூலமே லக்ஷார்ச்சனை, திருவிளக்கு பூஜை முதலியவை செய்யப்படவேண்டும் என்று உத்தரவும் போட்டுவிட்டது. இம்முறை, வரும் சித்திரை  முதல் தேதியில் இருந்து அமுலுக்கு வருகிறது. இதன்மூலம் வருமானத்தை பெருக்குவதும் சாத்தியம் தானே! வியாபாரம் இனிமேல் கொடிகட்டிப் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வளவும் அற்ப சாமான்களுக்கு ஆசைப்பட்டு, பிரசாதத்தை இரண்டாம் பட்சமாக எண்ணியதால் வந்த வினை. எது முக்கியம் என்று நமக்குத் தோன்ற வேண்டும்  அதுவரை இதை அனுபவித்தே ஆகவேண்டும்.  

Tuesday, February 12, 2013

நம்மைக் கவரும் முன்னோடிகள்


தேவாரம்,திருப்புகழ் பெற்ற தலங்களுள் சில தலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாத நிலையில் மிக்க முயற்சி எடுத்து அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததவர்கள் வரிசையில் வலையப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களும் ஒருவர். நமது வலைப்பதிவுக்கு  இவர் புதியவர் இல்லை. திருப்புகழ் பெற்ற ஞானமலை எது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து ஆன்மீக உலகம் அறிய வைத்த இவரது அரும்பணி பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
அருணகிரி நாத ஸ்வாமிகள் பாடிய த்ரியம்பகபுரம் எங்கு உள்ளது என்பது சரிவரத் தெரியாத நிலையில், ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் , அத்தலம் , சேங்காளிபுரத்திற்கும்,  கும்பகோணம் - திருவாரூர்  வழியிலுள்ள பெரும்பண்ணயூருக்கும் அண்மையில் உள்ளது என்று ஆதாரங்களுடன்  நிரூபித்திருக்கிறார் .  

"உரை ஒழிந்து " எனத் தொடங்கும் திருப்புகழில் " த்ரயம்பகபுர மருவிய கவுரி தந்த கந்த ; அறுமுக என இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல  பெருமாளே." என்று அருணகிரியாரால் பாடப்பெற்ற முருகனது திருவுருவம் தற்போது அங்கு காணப்படவில்லை. மயானக் கொல்லையில் உள்ள ஒரு பெயர்ப் பலகை "திரியம்பகபுரம்" என்ற ஊர்ப் பெயரை உறுதி செய்கிறது. எங்கு நோக்கினாலும் வயல்கள் உள்ள இந்த இடத்தில் தான் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் கோயிலைத் தேடியிருக்கிறார். வயல்களுக்கு நடுவில் சிவலிங்கம் மாத்திரம் காணப்பட்டுள்ளது. இவரே த்ரியம்பகேச்வரராக இருக்கக் கூடும்.

 சிவலிங்கங்களோ அல்லது பிற  மூர்த்திகளோ இதன் அருகில் காணப்படவில்லை. சற்றுத் தொலைவில் சாஸ்தா கோவில் ஒன்று இருக்கக் காண்கிறோம்.  சேங்காளிபுரத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு இந்த சாஸ்தா குலதெய்வமாக விளங்குகிறார். இவர் மீது அமைந்துள்ள ஸ்லோகங்களை ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஊர்ப் பெயர் த்ரயம்பகபுரம் என்றே வருகிறது.

அருணகிரியார் பாடிய தலம் இது என்ற முடிவுக்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் அங்கு தனித்துக் காட்சி அளிக்கும் சிவலிங்கப்பெருமானுக்குக் கோவில் எழுப்பி அதில் முருகப்பெருமானைப் பரிவார மூர்த்தியாக எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு  அன்பர்கள் ஆதரவு  மிகவும் தேவைப்படுகிறது.  இவ்வளவு தூரம் முயன்று நமக்கு முருகன் அருளைப் பெற வகை செய்யும் இவருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டாமா?

இவரைப்போலவே  மற்றொரு தொண்டரைப் பற்றியும் இங்கு சொல்லத் தோன்றுகிறது.இவர்  இளமையில் வறுமையில் வாடியவர். பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் சிவாலயங்களில் மடைப்பள்ளிகளில் பணியாற்றியவர். பின்னர், பி.காம். படித்துவிட்டு, வங்கிப் பணியில் சேர்ந்து,படிப் படியாக முன்னேறி உயர்ந்த பதவிகளை வகித்தவர். இத்தனையும் தான் பணி செய்த ஆலயத்தின் அம்பாளது அருள் என்று அடக்கமாகக் கூறிக் கொள்கிறார். அந்த ஆலயத்தின் திருப்பணிகளில் தீவிரமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

முன்னோடிகள் (Role Models)என்று யார் யாரையோ ஏற்றுக் கொள்கிறோம்.மேற்கண்ட அடியார்களைப் போன்று  நமக்கு நல்ல வழியைக்  காட்டிப் , பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் இறைபணியிலேயே நிற்பவர்களை ஏற்கத் தயங்குகிறோம். இளமையிலிருந்தே இறைபணி செய்வது பலன் அளிக்க வல்லது என்பதை நாமும் உணர வேண்டும்.  இந்தக் காலத்தில் ,பணிஓய்வு  பெற்றவர்கள் எப்படிக் காலத்தைக் கழிப்பது என்று தெரியாமல் வீண் வம்பிலும் ,கேளிக்கை போன்றவற்றிலும் ஆயுட்காலத்தை வீணாக்குகிறார்களே என்பதைக் காணும்போது  வருத்தப் பட வேண்டியிருக்கிறது
.
இந்த உலகத்தில் பிறந்து விட்டோம். ஏதாவது நல்ல காரியத்தை ஆயுள் முடிவதற்குள் செய்ய வேண்டாமா? அப்படிப்பட்ட எண்ணம் எல்லோருக்கும் தோன்றும்படி ஸ்ரீ பரமேச்வரனைப்  பிரார்த்திக்கிறோம்.

Friday, January 25, 2013

கோயில்கள் புத்துயிர் பெற....


கோயில்களில் உண்டியல் மற்றும் பிற காணிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது அவை முறைப்படி செலவழைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கை. கடந்த மூன்று மாதங்களில் முடிகாணிக்கை மூலமாக மட்டும் திருப்பதி கோயிலுக்கு   ரூ 29 கோடி வசூலாகியிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதேபோலத் திருத்தணி  , பழனி,மதுரை, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் மாதம் தோறும் பலலக்ஷங்களில் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக விசேஷ நாட்களிலும், ஐயப்பன் சீசனிலும் இத்தொகை பல மடங்கு அதிகரிக்கிறது. வாகனங்களை வெளியில் நிறுத்துவதற்கு ரூ 50 வசூலிக்கப் படுவதாக ஒரு பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சாதாரண நாட்களில், அதிலும், சொல்லும்படியாக தரிசனத்திற்கு வருவோர் இல்லாத காலங்களிளும்கூட  வாகன நிறுத்தக் கட்டணம் ரூ 10 முதல் ரூ 25 வரை  வசூலிக்கப்படுகிறது. இலவசக் காலணி  பாதுகாக்கும் இடத்திலும் கையை நீட்டுகிறார்கள். சிறப்புத் தரிசனக் கட்டணம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இவ்வாறு அதிக வருமானம் வரும் கோயில்களிலிருந்து மட்டும் மாதம் பல கோடிகளைத் தாண்டும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியத் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது. நித்திய பூஜைகளும், திருவிழாக்களும்  அன்பர்கள் ஆதரவிலேயே நடைபெற்றுவிடுகிறது. பிரபல ஆலயங்களின் திருப்பணி, கும்ப்பாபிஷேகம் ஆகியவற்றையும் பக்தர்களே செய்துவிடும் போது, ஆலய துப்புரவு,சிப்பந்திகளின் சம்பளம் போன்றவற்றுக்கு மட்டுமே இக்கோவில்களுக்கு செலவு ஆகிறது. இப்பெரிய கோயில்களின் உபகோயில்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுவது உண்மை தான். அவை சிறு கோயில்களாக இருந்தால் வழங்கப்படும் தொகை சொற்பமே. திருப்பணிக்கு ஆகும் செலவில் சுமார் கால்பங்கு கூடத் தரப்படுவதில்லை.
இனி இதற்குத் தீர்வுதான் என்ன? சிதம்பரம் கோயில் இதற்கு வழிகாட்டியாக விளங்கியது. அதுவும் தற்போது அறநிலையத் துறையின் மேற்பார்வையில் வந்து விட்டது. உண்டியல் இல்லாமலேயே, நடராஜப் பெருமானுக்கு அன்பர்கள் ஆதரவுடன் தினப்படி பூசையும்,எல்லா உற்சவங்களும் சிறப்பாக நடைபெற்று வந்தன. இப்போதோ உண்டியலைக் கொண்டுவந்து வருமானம் பார்க்கிறார்கள்!

சிந்தனைக்காக சில தீர்வுகள்:
* அறநிலையத்துறை கலைக்கப்பட்டு, நான்குபேர் கொண்ட ஒரு குழு மாநிலத்திலுள்ள எல்லாக் கோயில்களையும் கண்காணிக்க வேண்டும். இதில் ஒரு IAS அதிகாரியும், ஒரு மடாதிபதியும், ஒரு அனுபவம் மிக்கவரும் ஆன்மீகவாதியுமான தொழிலதிபரும், பிரபலமான இறைத் தொண்டர் ஒருவரும் இடம் பெற வேண்டும்.   இக்குழுவினது ஆட்சிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இதில் இடம்பெற்ற நபர்  சுழற்சி முறையில் மீண்டும் ஆறு ஆண்டுகள் கழித்தே வர முடியும். இக் குழு குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடி ஆலோசனைகளும்,தீர்ப்புகளும் வழங்கி, அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

* பிரபலமான கோயில்கள் சுமார் இருபதின் கீழ் மாநிலக் கோயில்களின் நிர்வாகம் கொண்டுவரப்படுவதுடன் அவை தன்னாட்சிக் கோயில்களாக அறிவிக்கப்பட வேண்டும். இதனால், கிளைக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் தலைமைக் கோயிலையே சாரும். இத்தலைமைக் கோயில்களின் வருமானம் அரசுக்குச் செலுத்தப்படாமல், அந்தத்  தலைமைக் கோயில்களின் வங்கிக்  கணக்கிலேயே இருக்க வேண்டும். இதிலிருந்தே, தலைமைக் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் செலவுகள் ஏற்கப்பட வேண்டும்.

* ஒவ்வொரு தலைமைக் கோயிலுக்கும் நியமிக்கப்படும் அதிகாரி, அரசியல் தொடர்பு இல்லாத , சமய நம்பிக்கை உள்ள நபராக இருக்க வேண்டும்.

* தலைமை அதிகாரி, அக்கோயிலின் உபகோவில்களை மாதம் ஒருமுறையாவது சென்று பார்வையிட வேண்டும்.

" ஒவ்வொரு தலைமைக் கோவிலின் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

* தரிசனக் கட்டணம் முற்றிலுமாக நீக்கப் படவேண்டும்.

* பிற காணிக்கைக்கான   கட்டணங்கள்  ஏழைகளும் ஏற்கும்படியாக இருக்க வேண்டும்.

* வண்டிகள் நிறுத்த ரூ 5 வசூலித்தால் போதுமானது. அதை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறிது உயர்த்துவது, உயர் மட்டக் குழுவின் பரிந்துரையைப் பொறுத்தது.

கீழ்க் கண்ட கோயில்களைத் தலைமைக் கோயில்களாக வருமான {அடிப்படையில்) அறிவிக்கலாம்:

திருத்தணி, சென்னை (கபாலீஸ்வரர் கோயில்), காஞ்சிபுரம்(வரதராஜர் கோயில்) , திருவண்ணாமலை, சமயபுரம், செட்டிகுளம்/கலியபெருமாள் கோயில், ஸ்ரீரங்கம்,சுவாமிமலை, மதுரை, பழனி, திருக்குற்றாலம்,திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற தலங்களின் ஆலயங்கள் இவ்வாறு அந்த அந்த மண்டலங்களுக்கான தலைமைக் கோயில்களாக அமையக்கூடும்.

இந்த அமைப்பால், நிலங்களிளிருந்தும், கோயில் வீடுகளிலிருந்தும் வர வேண்டிய வருமானம் முறைப்படுத்த வகை செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பை அந்தந்த மண்டலத் தலைமை அதிகாரிகளே ஏற்கவேண்டும்.

* தலைமைக் கோயில்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கை, தணிக்கை செய்யப்பட்டபின் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட வேண்டும்.

* சிப்பந்திகளின் சம்பளம் முறைப்படுத்தவும், கோயில்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்படி எழுந்த சிந்தனைகள் சிலவே. சமயச் சான்றோர்கள் மற்றும் தக்கோர்கள் இன்னும் எத்தனையோ பரிந்துரைகள் வழங்குவர். இவற்றை எல்லாம் அரசு தயங்காமல் ஏற்க முன்வந்தால் நமது ஆலயங்கள் மீண்டும் பொலிவு பெறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

Tuesday, January 15, 2013

பொங்கல் தினச் சிந்தனை


திரு நெல்வேலிக்கு  அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையன்  சொன்னான்: " நகரங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை விட கிராமங்களிலேயே அதன் உண்மையான அழகும் மகத்துவமும் தெரிய வரும்" என்றான். அநேகமாக எல்லோரும் இதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்! கிராமங்களில் மார்கழி முழுவதும் சிறு குடிசை வாசலிலும் அழகான கோலம் போட்டு அதன்  நடுவில் பசும்  சாணத்தில் ஒரு பரங்கிப்பூவையும் செருகி வைப்பார்கள்.               ( நகரத்திலோ,சாணத்தைக்  கையால் தொடுவார்களா என்ன? )  கொட்டும் பனியிலும் கூட விடியற்காலையில் கோலம் போடுவார்கள். நகரவாசிகளில் பலர் முதல் நாள் ராத்திரியிலேயே  கோலத்தைப் போட்டு விடுகிறார்கள். பலர்  அந்த வேலையையும்(?) வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உடற்பயிற்சி என்று காசு கொடுத்தாவது முதுகை வளைப்பதற்குப் பதிலாகக் கோலம் போடுவதற்குச் சற்று வளைக்கலாம்.

நிலைமை இப்படி இருக்கும்போது, பொங்கல் அன்று பெரிதாகக் கோலம்  போட்டு அதற்குக் காவியில் பார்டர் அடிப்பது என்ற வழக்கத்தைக் காண்பதும் நகரங்களில் குறைந்து வருகிறது. கோலம்  போடுவதும் விளக்கு ஏற்றுவதும் மங்கலமான காரியங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலுள்ள பெண்மணிகளும் உணர்ந்துவிட்டால் நல்லது.

கனுப் பொங்கல் அன்று விடியற்காலையில் மஞ்சள் இலைகளில் கனு வைப்பதும் உடன் பிறந்தோர் நலனுக்காகவே என்பதை அறிந்தால், இன்னும் உற்சாகத்துடன் அதைக் கொண்டாட முடியும். இதையெல்லாம் தாயார் தான் தன் பெண் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்படி இலையைப் போடுவது;எப்படிப் பரிமாறுவது என்றுகூட சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் மாடுகளுக்குக் கொம்புகளில் வர்ணம் அடித்து வண்டிகளில் பூட்டி, அவ்வண்டி வழியும் அளவுக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு, "பொங்கலோ பொங்கல்" என்று கோஷமிட்டுக் கொண்டு அம்மாடுகளை விரட்டி ஓட்டுவது என்று ஆகிவிட்டது. வணங்க வேண்டிய கால்நடைகளை இப்படி அடித்து ஆர்ப்பாட்டம் செய்வது முறையா என்று யோசிக்க வேண்டும். வீர விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு காளைகளை ஓட ஓட விரட்டுவதும் அதைப் பலர் அடக்க முற்படுவதும் ஜல்லிக் கட்டு என்ற பெயரில் நடைபெறுகிறது. மற்ற மிருகங்களிடமிருந்து  தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் கொம்பு வேண்டிப் பசு இனங்கள் , விழுப்புரத்துக்கு அருகில் உள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தில் சிவபெருமானை வழிபட்டன . இப்போது மனிதர்களும் அந்த இனத்திற்குக் கொடுமை செய்வதைப் பார்த்து அவை மீண்டும் அப்பெருமானிடமே முறையிடவேண்டும்.

ஆவூர்,பேரூர்,கரூர், பட்டீஸ்வரம் முதலிய ஊர்கள் பசுக்கள் பெருமானை வழிபட்ட தலங்கள்.பசு இனங்கள் இறைவனுக்கு அபிஷேகத்திற்காக அவன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஆன் ஐந்தையும் தருவதோடு மனிதகுலத்திற்கும் தாயாக இருக்கின்றன. திருவண்ணாமலை போன்ற பெரிய தலங்களில் மாட்டுப் பொங்கலன்று நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடை பெறுகின்றன. சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று காலையில் நந்தி கேச்வரருக்குச் செய்யப்பட அலங்காரத்தை இங்கு தரிசிக்கிரீர்கள். வயதான பெண்மணிகள் திருக் குளக் கரையில் கனு  வைத்தவுடன் அங்கு எழுந்தருளியுள்ள கற்பகாம்பிகைக்கு அபிஷேக - ஆராதனைகள் நடைபெறுகின்றன. உண்மையிலேயே அரிய காட்சிதான்!

சொல்லிக் கொடுக்க வேண்டிய நமது பண்பாடுகள் எவ்வளவோ இருக்க, நமது தொலைக் காட்சிகளோ, சினிமாவையே சுற்றிசுற்றி வருவது வருத்தத்திற்கு உரியது. பண்டிகை தினங்களிலாவது மக்கள் நல்ல சிந்தனையோடு இருக்க இவர்கள் விட மாட்டார்களா? இவர்களின் தூண்டில்களில் மீன்கள் போல் மக்கள் விழுவது காலத்தின் கொடுமையைக் காட்டுகிறது. பண்டிகை தினத்தை சந்தோஷமாகக் கொண்டாடுவது என்ற போர்வையில், கடற்கரைக்கும் , மிருகக் காட்சி சாலைக்கும் , சினிமா அரங்குகளுக்கும்  மக்கள் திசை திருப்பப் படுகின்றனர்.

பெற்றோர்களே! மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகள் நல்ல பிரஜைகளாக உருவாக வேண்டாமா? நாம் அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் முன் உதாரணமாகவும் இருக்க வேண்டாமா? ஒருக்கால் தவறான வழியில் அவர்கள் சென்றுவிட்டால் அவர்களைத் திருத்துவது சாத்தியமா? வாழ் நாள் முழுவதும் அவர்கள் துன்பப்படவேண்டியதுதானா? தேவைப் பட்டால் அவர்களது நலனுக்காவது நாம் சிறிதளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? அற்ப சுகங்களைக் களைந்து அவர்களது அறிவாற்றலை வளர்க்க வேண்டாமா? தூய பண்பாடுகள் அவர்களிடம் மலரச் செய்யும் பொறுப்பு நம்மிடம்  இருப்பதை மறப்பது நியாயமா; தர்மம் தானா?
 காலம் தான் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.