திருவையாற்றின் சப்த ஸ்தான ஸ்தலங்களில் திருச்சோற்றுத்துறை என்பதும் ஒன்று. இது கண்டியூருக்குக் கிழக்கில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கௌதம முனிவர் ஆசிரமம் அமைத்துக்கொண்டு , சிவ பூஜை செய்து வந்தார். அதன் பயனாக ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்தார். தவிரவும், அருளாளன் என்ற வேதியனுக்கு ஸ்வாமி, எடுக்க எடுக்கக் குறையாதபடி அன்னம் கிடைக்க ஒரு அக்ஷய பாத்திரத்தை அருளினார். இதனால் அவ்வூர் ஓதன வனம் (ஒதனம்= சோறு) என்றும் சோற்றுத்துறை என்றும் வழங்கப்பட்டது. அம்பிகை, அன்னபூரணி எனப்படுகிறாள். சோறு என்பதற்கு மோக்ஷம் என்ற பொருளும் உண்டு. தரிசிப்பவர்களுக்கு இத்தலம் மோக்ஷத்தைத் தருவதால், சோற்றுத்துறை எனப்பட்டது. ஸ்தல புராணமும், இங்கு ஒரு பிடி அன்னம் அளிப்பது, ஆயிரம் அந்தணர்களுக்கு அறுசுவை உணவு கொடுத்த பலனை அளிக்கும் என்று கூறுகிறது. ஒதனவனேச்வரரை சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரப் பதிகங்களால் பாடியிருக்கிறார்கள்.
மண்ணில் பிறந்த பயனே, சிவனடியார்களுக்கு அன்னம் அளிப்பதுதான் என்று பெரிய புராணமும் கூறுவதால், இந்த ஊரில் சுமார் 350-400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு அந்தணக் குடும்பம் , அன்னபூரணி தர்ம சத்திரம் என்ற கட்டிடத்தைக் கட்டி, அதில் அன்ன தானமும், வேத பாடசாலையும்,கோசாலையும் நடத்தி வந்தது. அவர்களது தலைமுறையினர் இன்று வரையில் அன்னதானத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.காலப்போக்கில், கோ- சாலையையும் , வேத பாட சாலையையும் தொடரமுடியாமல் போனாலும், அன்னதானம் மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது. சித்திரையில் சப்த ஸ்தான ஸ்தலங்களுக்குத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பர் பல்லக்கில் எழுந்தருளும்போது, பின்னால் நடந்துவரும் பக்தர்களுக்கு இங்கு அன்னதானம் வழங்கப்படுவது , சோற்றுத்துறை என்ற பெயருக்கு மிகவும் பொருத்தம் தானே!
இந்த அன்னதானப் பரம்பரையில் வரும் இன்றைய டிரஸ்டி ஸ்ரீ கண்ணன் அவர்களுக்குத் தன் முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த கோ சாலையை மீண்டும் துவக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. அதற்காகப் பழைய கோ சாலையைத் சீர் திருத்தி, பசுக்கள் நிற்பதற்குத் தகுந்தாற்போல் இடம் அமைத்து, வைக்கோல் சேகரித்து வைக்க ஓரிடமும் ஒதுக்கியமைத்து, அன்னபூரணி கோசாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதோடு, ஆலய சிவாச்சாரியார் வசிக்க வீடு அமைத்துத் தரவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இவ்விரு சிவபுண்ணியங்களுக்கும் உறுதுணையாகச் சில மெய்யன்பர்கள் முன் வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாகத் திருவருளும் துணை செய்தது. இத்தலத்தின் மீது இயற்றப்பட்ட புராணத்தின் மூலம் மாத்திரம் பல்லாண்டுகளுக்கு முன் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அப்புராணத்தைப் பொழிப்புரையோடு ஆதீன வெளியீடாக அச்சிட்டுத் தருவதாகத் திருவாவடுதுறை ஆதீன 23 வது குருமூர்த்திகளாகப் பீடத்தில் இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்ரகாச தேசிக மூர்த்திகள் கருணை பாலித்திருந்தார்கள். நூல் வெளியாவதற்கு முன்னரே அவர்கள் சிவமுக்தி அடைந்துவிட்டபடியால், அடுத்ததாகப் பட்டம் ஏற்றுள்ள 24 வது குருமகாசந்நிதானம்,ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அதனைப் பூர்த்தி செய்து வெளியிட்டுத்தருவதாகக் கூறியருளினார்கள். இவ்வாறு மூன்று நிகழ்ச்சிகளும் முப்பெரும் விழாவாக உதயம் ஆயிற்று.
ஆன்மீக உலகிற்குச் சவாலாக விளங்கிவரும் சிவாச்சார்யர் நிலை, பசுப் பராமரிப்பு, தல புராணங்களைப் பேணுவோர்/படிப்போர் குறைதல் ஆகிய மூன்றையும் முன்னிருத்தி, இம் மூன்றுக்குமே முடிந்த அளவில் தனது ஊரிலாவது தீர்வு காண முயலும் ஸ்ரீ கண்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வேத பாடசாலையையும் மறுபடியும் துவக்கவேண்டும் என்ற இவரது ஆசையை வேத நாயகனாகிய பரமேச்வரன் நிறைவேற்றப் பிரார்த்திக்கிறோம். பல இளைய சமுதாயத்தினருக்கு இவரது தொண்டு முன் உதாரணமாக விளங்க வேண்டும். அதனால், இவரைப் போன்றோர் பலர் சிவத்தொண்டு ஆற்ற முன் வர வேண்டும். இதற்குத் திருவருளும் குருவருளும் துணை நிற்பதாக.
நமஸ்காரம். ஸ்ரீ கண்ணன் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் அளித்து உதவ முடியுமா? அந்த பக்கம் செல்லும் போது என்னால் ஆனதை செய்ய விரும்புகிறேன். venugpl60 @ஜிமெயில்.com 9443486117
ReplyDelete