Monday, March 31, 2014

பட்டமும் பணிவும்

படித்துப் பட்டம் வாங்குவது ஒரு விதம். கௌரவப் பட்டம் வாங்குவது இன்னொருவிதம். பட்டம் கொடுப்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் படித்துப்பட்டம் வாங்கியவரை அந்த ஒன்றில் மட்டும் பாராட்டிவிட்டுப் போகட்டும். அலகில் கலைகள் அத்தனையும் வல்லவராகப் பாராட்ட வேண்டாமே! உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச்   சொல்லுவோம். ஒருவர் தமிழ் நூல்கள் சிலவற்றைக் கற்றுவிட்டால் அவரை முத்தமிழ் காவலர் என்றோ முத்தமிழ் விரகர் என்றோ எப்படி அழைப்பது ? தமிழ்க் கடவுளாகவே கூட அவர்களை வருணிக்கிறார்கள்.  அதேபோன்று நடனம், நடிப்பு ,இசை போன்ற துறைகளிலும் பட்டங்கள் தாராளமாகவே கொடுக்கப்படுகின்றன. உலகநாயகனாகவே புகழத்தொடங்கிவிடுகிறார்கள்.

அந்தக் காலத்தில் தமிழில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களை வித்துவான் பட்டம் தந்து கௌரவிப்பார்கள். செய்யுள் இயற்றும் பெரும் புலமை படைத்தவர்களை "மகா வித்துவான்" என்றும் கௌரவித்தனர். தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் ஆசிரியரும் ஏராளமான தமிழ் நூல்களை இயற்றியவருமான திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் "மகாவித்துவான்" என்று திருவாவடுதுறை ஆதீனத்தால்          கௌரவிக்கப்பட்டார். அது தமிழ்தாய்க்கே தந்த கெளரவம்.

 "தமிழ் விரகர்" என்ற தூய பட்டம், திருஞானசம்பந்தப் பெருமான் ஒருவருக்கே உரியது. அதுபோல , "சைவ சிகாமணி" என்ற பட்டமும் அவருக்கே உரியது. இன்று சைவ நூல்களைப் பற்றிப் பேசியும் எழுதியும் வருபவர்களை  தமிழ் விரகர் என்றோ திருமுறை வித்தகர் என்றோ தமிழாகரர் என்றோ எப்படி ஏற்றுக்கொள்வது? சிறந்த பேச்சாளர்கள் எல்லாம் நாவன்மை படைத்தவர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களை நாவுக்கரசர் என்று எப்படிப் போற்ற முடியும்?

பட்டங்களை அளிக்கும் நிறுவனங்களும், அடியார் திருக் கூட்டங்களும், திருமடங்களும் நமது அருளாளர்களின் பெருமைக்கும்,புகழுக்கும் குந்தகம் ஏற்படாமலும், எல்லைக்கு உட் பட்ட வகையில் அப்பட்டங்களைத் தருவது நல்லது என்று எண்ணுகிறோம். இவ்வாறு ஓகோ என்று புகழ்வதன்மூலம் பட்டங்களைப் பெறுவோர் இறுமாப்பு அடையவும் வாய்ப்பு உண்டு.தமது பெயருக்கு முன்னர் கௌரவ  பட்டங்களைப் போட்டுக் கொள்வதைத் தவிர்ப்பதால் மனம் மாசடைவதைத் தவிர்க்க முடியும். ஏதாவது போட்டுக் கொள்ளவேண்டும் என்று தோன்றினால்,     "ஆரூரன் அடிமை"  என்று போட்டுக்கொள்ளலாமே!  எண்திசையும் புகழும்படி செங்கோல் ஓச்சிய ராஜ ராஜ சோழனும், தன்  பெயரை,      " சிவபாதசேகரன்" என்று எவ்வளவு அடக்கத்துடன் கல்வெட்டில் பொறித்து  வைத்திருக்கிறார் பார்த்தீர்களா? 

இந்தக் காலத்தில் பத்திரிகைகளும் பட்டங்களோடு பெயர்களைக் குறிப்பிடுவதில்  முன் நிற்கின்றன. சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோரைக் குறிப்பிடும் பொது, "வெடிகுண்டு வெங்கடேசன்" " அரிவாள் அறிவழகன்"  "புல்லெட் பூபதி" என்றெல்லாம் அடைமொழி கொடுக்கிறார்கள். சர்வதேச  கொள்ளைக்காரர்களைக் குறிப்பிடும்போதும் இப்படித்தான்! தமிழகக் கோயில்களிலிருந்து தெய்வத் திருமேனிகளைக் கடத்தி விற்ற கொள்ளைக் காரனை , சிலநாட்கள் முன்பு, ஒரு தமிழ் செய்தித் தாள், " கடத்தல் மன்னன்" என்று குறிப்பிட்டிருக்கிறது. விட்டால் "கடத்தல் திலகம்" " கடத்தல் சக்கரவர்த்தி" என்றெல்லாம் குறிப்பிடுவார்கள் போலிருக்கிறது. அவன் எவ்வளவுக்கு விற்றான் என்பது பொது மக்களுக்குத் தெரிய வேண்டுமா? இப்படி சமூகத்தில் பொறுப்புடன் செயல் பட வேண்டிய பத்திரிகைகள் பரபரப்பான செய்தி வெளியிடுவதாக நினைத்து மேன்மேலும் தவறுகள் நடக்கத் தூண்டுகோலாக மாறிவிடக் கூடாது. 


இனிமேலாவது, இதுபோன்ற பட்டங்களைத் தந்து மக்களின் மதியை மழுங்கச் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நம்மை எவ்வளவு  அடக்கமாக ஆக்கிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு  வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம். பல்லவனது பெருஞ்சேனையை நடத்திய சேனாபதியான பரஞ்சோதியார் தன்னைச்  "சிறுத் தொண்டர்" என்றே கூறிக்கொண்டார். தான் செய்த  சிவதருமங்களில் எல்லாம் தன்  பெயரை எழுதாதுதான் வழிபடும் குருநாதரான திருநாவுக்கரசரின் திருப்பெயரையே எழுதினார் அப்பூதி  அடிகள்.  தனது திருப்பதிகம் ஒன்றின் நிறைவுப் பாடலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள், " .. அடி நாய் .." என்று தன்னைச் சொல்லிக் கொள்வதைக் காண்க. இதுபோலவே, மாணிக்க வாசகரும் " நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு.."  என்றும், " வேண்டேன் புகழ்.." என்றும் அருளியுள்ளார். ஆனால் நமக்கோ  இதுபோன்ற பணிவு இன்னும் எத்தனை பிறவிகளுக்குப் பிறகு  வருமோ தெரியவில்லை .

 ஆலயங்களில்  அடியார்களோடு இணைந்து கைத்தொண்டு செய்யும் போது உயர்ந்த மனப்பான்மை சிறிது சிறிதாக நம்மைவிட்டு அகலுவதைக் கண்கூடாகக் காணலாம்.அடியார்க்கு அடியானாகும் பண்பு மேலோங்கத் தொடங்குவதையும் காண முடிகிறது. “உனக்குப் பணி செய்ய உன்தன்னை எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீ தா”  என்றபடி, அத்தகைய பண்பையும் பணிவையும் இறைவனே அருளவேண்டும்.    

Monday, March 24, 2014

கடிகாரம் காட்டும் தத்துவம்

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒன்றில் நாட்டம் இருக்கத்தான் செய்கிறது. வயது ஆக ஆக , இதில் மாற்றம் எற்படுவதும் உண்டு. தலைகீழாக மாறிவிடுவதையும் பார்க்கிறோம். சூழ்நிலைகளாலும் இவ்வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் எல்லோரும் மறந்து விடுவது ஒன்று உண்டு. ஒரு நாள் ஆனவுடன் நமது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டது என்று நினைப்பதில்லை. சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்க்கை அமைக்கப்பட்டுவிட்டது. நம்மை அறியாமலேயே, நாம் சாவி கொடுத்த பொம்மை போல இயங்கிக்கொண்டிருப்பதை  மறந்து விடுகிறோம். கொடுக்கப்பட்ட சாவி முடிந்தவுடன் இயக்கமும் நின்றுவிடுகிறது. மீண்டும் சாவி கொடுக்கமுடியாத பொம்மை இது. " use and throw" என்கிறார்களே அதுபோலத்தான்!  எப்படி இயங்குகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களிலும் பலவகை !  ஆன்மிகம் வேறு, கடவுள் பக்தி வேறு என்று ஒரு அறிவு ஜீவி சொன்னால் அதையும் பிரசுரிக்கும் போலி ஆன்மீகப் பத்திரிகைகள் !  இவர்களது சிந்தனைகள் எல்லாம் வித்தியாசமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு பிதற்றுகிறார்கள். இதைப் படிப்பவர்களும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். எதிலும் வியாபாரம் தலை விரித்து ஆடுகிறது. ஆன்மார்த்தம் விலகிக் கொள்கிறது. பக்தி கேள்விக்குறியாகிவிடுகிறது. பக்தி இல்லாத ஆன்மிகம் வெறும் வேஷமே. " பக்தியால் யான் உன்னைப் பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாடி" என்கிறார் அருணகிரிநாதர். " பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே, பரமயோகீ ''  என்று உருகுகிறார் திருநாவுக்கரசர்.

பத்து நாட்களில் எத்தனை கோயில்கள் பார்த்தேன் என்று சொல்லிக் கொள்பவர்களும் உண்டு. மனம் ஒன்றிப் பார்த்திருப்பார்களா என்றால் சந்தேகமே. எண்ணிக்கைதான் இவர்களுக்கு முக்கியம். திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் பார்த்தீர்களே, அங்கே தட்சிணாமூர்த்தி தனது கரங்களில் மானும் மழுவும் ஏந்தியபடி காட்சியளிப்பதைப் பார்த்தீர்களா என்று  கேட்டால் , " அப்படியா , பார்க்கவில்லையே" என்றே பதில் வரும். அவர்களின் நினைவில் இருப்பதெல்லாம் கோவில் வீதிக் கடையில் திருநெல்வேலி அல்வா வாங்கியதுதான்!

இன்னும் சிலரோ, பிரதான மூர்த்திகளைப் பார்ப்பார்கள். போட்டோவும் எடுப்பதில் தீவிரமாக இருப்பார்கள். புராண வரலாறுகளில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். ஊர்ப் பெயர் எப்படி வந்தது என்று கேட்டுக் கூடத் தெரிந்துகொள்ள முனைய மாட்டார்கள். அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே அக்கறை இல்லாத போது வெளி ஊர்க் காரர்களைப் பற்றிக் கேட்பானேன்! கும்பகோணத்திற்குப் பக்கத்தில் வலங்கைமான் என்று ஒரு ஊர் இருக்கிறது. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேட்டுப் பாருங்கள். " யாருக்குத் தெரியும்? " என்று பதில் வருமே தவிர, "உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் கேட்டுத்   தெரிந்து கொள்கிறோம் " என்று ஆர்வம் காட்ட மாட்டார்கள். (வழக்கமாகத்  தனது இடது கரத்தில் மான் ஏந்தியவராகக் காட்சி தரும் சோமாஸ்கந்தர், இந்த ஊர் ஆலயத்தில் வலக் கையில் மானை ஏந்தியதால் ஊரின் பெயரும் வலங்கைமான் ஆனது.)

ஒரு கடிகாரத்தில் சுற்றிவரும் முட்கள் போல நாமும் பகலையும் இரவையும் மாறி மாறி சுற்றி வருகிறோம். பொழுதுபோனால் பொழுது வரும் என்று சுற்றாமல் பன்னிரண்டாகப் பிரிக்கப்பட்ட மணி நேரத்தை பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களாகப் பாவித்து அவற்றை வலம் வரவேண்டும். வினாடி முள்ளைப்போல் கிடுகிடுவென்று சுற்றிவந்து மனத்தில் எதுவும் நிலைக்காமல் போவதை விட, பெரியமுள் போலவாவது  சற்று மெதுவாக வலம் வரும்போது பல்வேறு  புரியாத  புதிர்கள் விளங்க ஆரம்பிக்கின்றன.  அடுத்த நிலையாகச் , சிறிய முள்ளின் வேகத்துக்கு வந்து,  பரபரக்காமல் இறை ஆற்றலுக்குத் தலை வணங்கி ஒவ்வொரு ஜோதிர் லிங்கத்தையும் அனுபவிக்கிறோம். முள் சிறிதானாலும் கிடைக்கும்  அனுபவம் பெரியது. கடிகாரம் என்றாவது ஒருநாள் நின்று விடும்போது, அச்சிறுமுள்ளும் அந்த நிலையிலேயே நின்று பேரின்பம் பெற்றுவிடுகிறது.  கடிகாரம் மணியை மட்டுமா காட்டுகிறது? பெரிய தத்துவத்தை அல்லவா உள்ளடக்கிக் கொண்டு எதுவும் தெரியாதது போல மீண்டும் மீண்டும் வலம் வருகிறது !  

Tuesday, March 18, 2014

மங்கையர் திலகம்

                                                                                                      Pic courtesy: Shaivam.org
பெண் என்றாலே கருணையின் வடிவம் என்றும் உயர்ந்த குணங்களின் இருப்பிடம் என்றும் ஆன்றோர் கருதினர். ஒரு உருவமோ,ஒரு நாமமோ இல்லாத பரம்பொருளை ஆண் வடிவிலும் பெண் வடிவிலும் இரண்டும் கலந்த அர்த்த நாரீச வடிவிலும் வழிபடுகிறோம். பாலை மட்டுமல்ல. நல்ல குணங்களையும் புகட்டும் குணவதியாகவும் தாய் கருதப்படுகிறாள். அத்தாயை விடச் சிறந்த தயாபரன் இறைவன் ஒருவனே.  தாய் அன்புக்காக ஏங்குபவர்க்கு அவன் ஒருவனே தாயும் ஆக முடியும். திருச்சிராப்பள்ளியிலும் வட குரங்காடுதுறையிலும் இறைவனே பிரசவ காலத்தில் உதவியதை இது காட்டுகிறது.

 இப்படி அகில உலகங்களுக்கும் தாயான ஈசனே தனது திருவாயால் " அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்கால் அம்மையார். கணவனே தன்னை வணங்கிய பிறகு மானுட உடலைத் துறந்து பேய் வடிவம் வேண்டிப்பெற்ற புனிதவதி அவர். அறுபத்துமூவர் திருவுருவங்களுள் அம்மையார் ஒருவர் மட்டும் அமர்ந்த நிலையில் காணப்படுவார். அதேபோல், திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்துச்  சைவம்  தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியும் பெருமை மிக்கவர். " எங்கள்  தெய்வம்" என்று சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்டவர்.

இவ்வளவு வானளாவிய புகழ் வாய்ந்த மங்கையர் குலத்தின் தற்போதைய நிலை என்ன? பெண் உரிமை , பெண் சுதந்திரம், ஆட்சியில் ஒதுக்கீடு, என்றெல்லாம் குரல்கள் ஒலித்தும் உண்மையில்    பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லையே! அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வணங்கப்படவேண்டிய பெண்மை இப்படி விபரீதங்களைச் சந்திக்க வேண்டியதற்குப்  பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எப்போது நமது வாழ்க்கை முறையில் நமக்கு ஒத்துவராத மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டோமோ அப்பொழுதிலிருந்தே  இதுபோன்ற விளைவுகளைச்  சந்திக்க ஆரம்பித்து விட்டோம்.

உயர் கல்வியும்,வேலை வாய்ப்புக்களும் பெண்களுக்கு விளைவித்துள்ள நன் மைகளைவிடத் தீமைகளே  அதிகம் என்கின்றனர். பெற்றோர் பலர்  தமது பெண்கள் அடங்காமல் போய்விட்டதாகப் புலம்புகின்றனர். தற்காலச் சூழலில் சிக்காமல் பெண்களை வளர்க்காது  விட்டதன் பலன் இது என்றும் கருதுகிறார்கள். முன்பு திரைப்படத்தோடு நின்றது இப்போது வீடு தேடி வந்து விட்டது. மதியம் குறைந்தது நான்கு மணி நேரமாவது தாய்மார்கள் மெகா சீரியல்கள் பார்க்கிறார்கள். இரவு குடும்பத்தோடு நள்ளிரவு வரை பார்த்துவிட்டுக் காலை ஏழு மணி வரை தூங்குவது அதை விடக் கொடுமை. அத்தனை தொடர்களிலும் காட்டப்படுவது ஓயாத அழுகையும்,பழி வாங்குவதும் எழுதவே கை கூசும் சதித் திட்டங்களுமே . தான் விரும்பிய ஒருவனை மணக்கமுடியாமல் பெற்றோரின் நிர்பந்தத்திற்காக வேறொருவனை மணந்த ஒரு பெண் , தன்னை சந்திக்க வந்த தனது தந்தையிடம் என்ன பேசுகிறாள் தெரியுமா? " உனக்கு அறிவு இருக்கா?  உன்னை வெட்டி போட்டுடுவேன். கோவில் என்று கூட பார்க்க மாட்டேன். உன்னை நாற  அடிச்சுடுவேன்"  என்பன அவள் கக்கிய விஷ  வார்த்தைகளில் சில. வசனம் எழுதுபவர்கள் தங்களது பேனாவை விஷத்தில் தோய்த்து எழுதுகிறார்கள் போல் இருக்கிறது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம், பணம் ,... பெண் குழந்தைகள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?  விளம்பரம் தந்து ஆதரிக்கும் பொறுப்பற்ற கம்பெனிகள் நம் நாட்டில் ஏராளம். மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் விளம்பரங்கள் வந்து குவிகின்றன. இதற்கு சென்சார் இருந்தால் மட்டும் என்ன நடந்து விடப் போகிறது?

ஆனால் அடிப்படைக் காரணம் பெண்களிடமே இருக்கும்போது அடுத்தவர்களைக் குறை கூறி என்ன பயன்?  எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று பெண்கள் கிளம்பிவிட்ட போது யாரை நொந்து கொள்வது?  இப்படியாவது சம்பாதிக்க வேண்டுமா? தாங்கள் அழிவதோடு மற்ற இளம் குழந்தைகளையும் அல்லவா இந்த அற்ப வலையில் விழச் செய்கிறார்கள்! இந்த மாயையில் முதியவர்கள் கூட மயங்கி விடுகிறார்களே ! செல்போனும் டிவி யும் செய்துள்ள நன்மைகளை விட அநியாயங்களே மிக மிக அதிகம். கண்ட கண்ட பாடல்களைப் பதிவு செய்துகொண்டு ஓடும் பஸ்ஸில் பெண்கள் மத்தியில் அவற்றை அலற விடும் மாணவர்களை சக பிரயாணிகளோ , நடத்துனரோ தட்டிக் கேட்பதில்லை. அக்கிரமத்திற்கு எல்லை இல்லாமல் போய் விட்டது. பத்திரிகைகளும் இவற்றை அரங்கேற்றம் செய்கின்றன. எப்படியாவது பத்திரிக்கை விற்றால் போதும்.

தாய்க்குலம் என்று வாயளவில் பேசினால் போதாது. அக்குலம் எப்படிச் சித்தரிக்கப்படுகிறது என்று தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது என்? இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டியது என்ன என்பதை சிந்திப்போம். தனது குலப்பழக்க வழக்கங்களைக் கற்று அவற்றைப் பின்பற்றுதல்,   இளமையில் இருந்தே தெய்வபக்தியோடு இருத்தல் , தீய சக்திகளைப் புறக்கணித்தல் போன்ற நற்குணங்களோடு திகழ வேண்டும். சத்ரபதி சிவாஜியின் தாயாரைப் போல் நல்ல மகனை நாட்டுக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் தேசத்திற்கு நல்ல காலம் பிறக்கும். இல்லா விட்டால் மனித வாழ்க்கை மிருக வாழ்க்கை ஆகிவிடும்.

காரைக்கால் அம்மையாரை நினைத்தவுடன் நம் மனம் புனிதமடைவதை அனுபவத்தால் அறியலாம். பங்குனி சுவாதியன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது. அன்று கோயில்களில் நடைபெறும் வழிபாட்டின்போது, அம்மங்கையர்  திலகத்தின் அருளால் நம் பெண் குழந்தைகள் எல்லாப் பேறும் பெற்றுப் பெரு   வாழ்வு வாழ வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திப்போம். புனிதவதியார் அருளால் பெண்மணிகள் மேலும்  புனிதமாகிப் பிரகாசிக்கட்டும்.