Tuesday, January 21, 2014

பால் அபிஷேகம்

நம்மில் பலர் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். கூடவே வித்யா கர்வமும் வந்து விடுகிறது. " ஈசான   ஸர்வவித்யானாம் ஈச்வர சர்வபூதானாம் " என்ற வாக்கியப்படி, ஈச்வரன்  எல்லா வித்தைகளையும் தோற்றுவித்து அருளுபவன்  என்ற  நினைப்புக்கூட இல்லாமல் போய் விடுகிறது. ஏழு வயது பச்சிளம் பாலகனாக இருந்தபோதே சண்டிகேச்வரருக்கு என்ன எண்ணம் ஓங்கியிருந்தது தெரியுமா? இத்தனை  கலைகளுக்கும் எல்லையாக இருப்பது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் இறைவனது கழல்களே என்று எண்ணினாராம்.

வயதில் மிகச் சிறியவராக இருந்தாலும் அறிவால் மிகப் பெரியவராக இருந்தபடியால், சேக்கிழார் அவரைச் " சிறிய பெருந்தகையார்" என்று சிறப்பிக்கிறார். அவர் பசுக்களை மேய்த்ததும், அவற்றின் பாலால் மண்ணி ஆற்றங்கரையில் சிவலிங்கம் அமைத்துப் பாலபிஷேகம் செய்ததும், அதைக் கண்டு அவரது தந்தை கோபத்துடன்  பூஜைக்காக வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தவுடன் சிவத்தியானம் கலைந்து கண் விழித்த பாலகன், உதைத்தது தந்தையே என்று தெரிந்ததும் சிவாபராதத்திற்குத் தண்டனையாகத் தனது கையிலிருந்த கோல் கொண்டு அவரது கால்களை ஒச்சவும் அதுவே மழுவாக ஆகிக் கால்களைத் துண்டப்படுத்தியது என்பதும் , அந்தக்கணமே, உமா மகேச்வரர்கள் தோன்றி அக் குழந்தையை அணை த்து அருளினர்  என்பதும், பெருமான் தனது கொன்றைமாலையை அச்சிறுவனுக்குச் சூட்டி, சண்டேச  பதம் தந்தார் என்பதும் பெரிய புராணத்தால் நாம் அறிகிறோம்.

புராணக்கதை ஒரு பக்கம் இருக்கட்டும் . அப்புராணம் நமக்குத் தெரிவிப்பது என்ன என்பது அதை விட முக்கியம். பசுக்களின் பெருமையை நாம் இதன் மூலம் முதலில் தெரிந்து கொள்கிறோம். அப்பாலகன் " ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார்" என்று வியந்து உரைக்கிறார் சேக்கிழார் பெருமான்.

உலகில் உள்ள எல்லா யோனிகளுக்கும் மேம்பட்டவைகளாகவும்  எல்லாப் புனிதத் தீர்த்தங்களுக்கும் உறைவிடமாகவும் தேவர்களும் முனிவர்களும் தேவ கணங்களும் பிரியாது உறையும் மேனியையும் கொண்டு விளங்குவன பசுக்கள் என்பதை அச்சிறுவன் உணர்ந்தான். எல்லாவற்றுக்கும் மேலாகப் பரமேச்வரனுக்கு அபிஷேகத்திற்காக பால் முதலான ஐந்து திரவியங்களையும், விபூதியையும் தருபவை அப்பசுக்களே என்பதால் அக்குழந்தைக்கு இயல்பாகவே பசுக்கூட்டங்களிடம் இணையற்ற அன்பு பெருகியதைக் காண முடிகிறது. அவற்றை மேய்த்துக் காப்பதே நடராஜப்பெருமானை வழிபடும் நெறி யாவதாகத் தெளிந்தான்  அக்குழந்தை.  அபிஷேகம் செய்வதிலும் , உள்ளத்தை ஒன்றி பூஜை செய்வதைக் காட்டினான்  அம்மறைச்சிறுவன் . " மற்றொன்று அறிந்திலர்"  என்பது சேக்கிழார் அதற்குத் தரும் சிறப்பு. இவ்வாறு  " பக்தி முதிர்ந்த பாலகனாகக்" காட்டும் தெய்வச் சேக்கிழார் ,  தந்தையை எறிந்த பாதகத்துக்குப் பரிசாக, சிவபெருமான் தன் தேவியோடு விடைமேல் காட்சி தந்து, அச்சிறுவனை உச்சி மோந்து , செயற்கு அரிய செயல் செய்த அச்சிறுவனை நோக்கி, " அடுத்த தாதை இனி உனக்கு நாம்" என்று அருளினார். இவ்வாறு பசுவின் பெருமையையும், ஒன்றுபட்ட மனத்தோடு செய்யும் பக்தியின் சிறப்பையும் ஒருங்கே நாம் புராண வாயிலாக அறிந்து கொள்கிறோம்.

இனி இக்காலத்திற்கு வருவோம். வீட்டிலேயும் சரி, கோயிலிலும் சரி, பால் அபிஷேகம் செய்யும்போது மற்றொன்று அறியா நிலை நமக்கு வருகிறதா? கலப்படம் அற்ற பசுவின் பாலால் அபிஷேகம் செய்கிறோமா? பசுவின் மடியிலிருந்து கறந்த பால் அதே வேளையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறதா? பாக்கெட் பாலில் பசுவின் பால் மட்டுமா இருக்கிறது? அது எத்தனை நாள் முன்பு பதப்படுத்தப்பட்டு,குளிரூட்டப்பட்டு, நம் கைக்கு வந்ததோ நாமறியோம். நாம் தெரிந்தே தவறுகள் செய்வதுபோல் இருக்கிறது. அபிஷேகத்திற்குப் பால் வாங்கிக் கொடுத்தால்  புண்ணியம் தான். சந்தேகம் இல்லை. அதற்காகப் பாக்கெட் பால் வாங்கிக்கொடுக்கவேண்டுமா?  புண்ணியத்தை சம்பாதிக்கப்போய் பாவத்தை சம்பாதிப்பது போல் அல்லவா இருக்கிறது ! இதை எல்லாம் மக்களுக்கு ஆலய அர்ச்சகர்களும் , குருமார்களும் எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும். எத்தனை லிட்டர் பாலால் அபிஷேகம் செய்தோம் என்பதைவிட, சுத்தமான பசும்  பால்,பசும்  தயிர் ஆகியவற்றால் சிறிது அளவே செய்தாலும் உயர்ந்தது. ஒருவேளை பசும்  பால் கிடைக்காவிட்டால், இளநீர் வாங்கித் தரலாமே!

இன்று சண்டிகேச்வரரது  குருபூசைத் திருநாள். தை மாத உத்திர நக்ஷத்திரத்தில் இது வருகிறது. பூஜையே அறியாதவர்கள் குருபூஜையை எவ்வாறு அறியப்போகிறார்களோ தெரியவில்லை. இவ்வாறு அரன் மகன் ஆகும் பேறு பெற்ற சண்டேச நாயனார் பெற்ற பதம் மட்டுமல்ல. அவர் இல்லாத சிவாலயமே இருக்காது. பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும் திகழ்கிறார். உற்சவ காலங்களில் இவரும் ரிஷப வாகனத்தில் சுவாமியோடு பவனி வருகிறார். இதைக் காட்டிலும் பேறு மற்றொன்று உண்டோ?  ஆகவே அவர் காட்டிய பாதையில் நாமும் நின்று ,தூய பசும் பாலால் பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை  நாம் நினைவில் கொண்டு பாக்கெட் பாலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிறருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான் குருபூஜை அர்த்தமுள்ளதாக ஆகிறது. 

3 comments:

  1. மிக நல்ல பதிவு. நாயன்மார்களின் பக்தியை நினைகையில் நம்முடைய க்வாலிஃபிகேஷனை எண்ணி வெட்கப் படத்தான் தோன்றுகிறது. அதே சமயம், நம்மிடையே உள்ள பக்தி இன்று பெரும்பாலும் "மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம்" போல, ஏதாவது ஒரு குறையுடனேயே இருக்கிறது. அதில் பால் பாக்கெட்டும் சேர்ந்து விட்டது இப்போது. இருந்தபோதிலும், சர்வம் ஷிவார்ப்பணம் என்ற எண்ண சுத்தியுடன், பாக்கெட் பாலாக இருந்தாலும் பரவாயில்லை என்று சமர்ப்பிக்கத்தான் தோன்றுகிறது. இது சுத்த பசும் பால் கிடைக்காதவர்களுக்கு மிகப் பொருந்தும். ஆனால் ஆடல்வல்லான் எதையும் ஏற்பவனாகையால் பாதகமில்லை என்பதால் எண்ண சுத்தியுடன், சுத்த பக்தியுடனேயே பாக்கெட் பாலாக இருப்பினும் சமர்ப்பிப்பது நன்று என்பது எம் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து தவறு செய்ய வேண்டாமே என்பதே அடியேனது கருத்து. வெளுத்ததெல்லாம் பால் அல்ல அல்லவா? இயலாதவர்கள், பழங்களையோ , இளநீர் , எலுமிச்சை,நாரத்தை போன்றவற்றையோ சமர்ப்பித்து அருளையும் வேண்டிய பலனையும் பெறமுடியும். சுத்தமான பாலால் உன்னை அபிஷேகிக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஆடல்வல்லான் நிச்சயமாக அருளுவான். , பாக்கெட் பாலைக் கொண்டு அபிஷேகிக்காமல் கிடைக்கக்கூடிய சுத்த திரவியங்களால் சுத்தமான மனத்தோடு வழிபட்டு சிவபுண்ணியம் பெறுவோமாக. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. பசும் பால் கிடைக்காவிட்டால், இளநீர் வாங்கித் தரலாமே...nice line....thanks for your good suggestion.

    ReplyDelete