Friday, January 25, 2013

கோயில்கள் புத்துயிர் பெற....


கோயில்களில் உண்டியல் மற்றும் பிற காணிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது அவை முறைப்படி செலவழைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கை. கடந்த மூன்று மாதங்களில் முடிகாணிக்கை மூலமாக மட்டும் திருப்பதி கோயிலுக்கு   ரூ 29 கோடி வசூலாகியிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதேபோலத் திருத்தணி  , பழனி,மதுரை, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் மாதம் தோறும் பலலக்ஷங்களில் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக விசேஷ நாட்களிலும், ஐயப்பன் சீசனிலும் இத்தொகை பல மடங்கு அதிகரிக்கிறது. வாகனங்களை வெளியில் நிறுத்துவதற்கு ரூ 50 வசூலிக்கப் படுவதாக ஒரு பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சாதாரண நாட்களில், அதிலும், சொல்லும்படியாக தரிசனத்திற்கு வருவோர் இல்லாத காலங்களிளும்கூட  வாகன நிறுத்தக் கட்டணம் ரூ 10 முதல் ரூ 25 வரை  வசூலிக்கப்படுகிறது. இலவசக் காலணி  பாதுகாக்கும் இடத்திலும் கையை நீட்டுகிறார்கள். சிறப்புத் தரிசனக் கட்டணம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இவ்வாறு அதிக வருமானம் வரும் கோயில்களிலிருந்து மட்டும் மாதம் பல கோடிகளைத் தாண்டும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை நிலவரம் தெரியத் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது. நித்திய பூஜைகளும், திருவிழாக்களும்  அன்பர்கள் ஆதரவிலேயே நடைபெற்றுவிடுகிறது. பிரபல ஆலயங்களின் திருப்பணி, கும்ப்பாபிஷேகம் ஆகியவற்றையும் பக்தர்களே செய்துவிடும் போது, ஆலய துப்புரவு,சிப்பந்திகளின் சம்பளம் போன்றவற்றுக்கு மட்டுமே இக்கோவில்களுக்கு செலவு ஆகிறது. இப்பெரிய கோயில்களின் உபகோயில்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுவது உண்மை தான். அவை சிறு கோயில்களாக இருந்தால் வழங்கப்படும் தொகை சொற்பமே. திருப்பணிக்கு ஆகும் செலவில் சுமார் கால்பங்கு கூடத் தரப்படுவதில்லை.
இனி இதற்குத் தீர்வுதான் என்ன? சிதம்பரம் கோயில் இதற்கு வழிகாட்டியாக விளங்கியது. அதுவும் தற்போது அறநிலையத் துறையின் மேற்பார்வையில் வந்து விட்டது. உண்டியல் இல்லாமலேயே, நடராஜப் பெருமானுக்கு அன்பர்கள் ஆதரவுடன் தினப்படி பூசையும்,எல்லா உற்சவங்களும் சிறப்பாக நடைபெற்று வந்தன. இப்போதோ உண்டியலைக் கொண்டுவந்து வருமானம் பார்க்கிறார்கள்!

சிந்தனைக்காக சில தீர்வுகள்:
* அறநிலையத்துறை கலைக்கப்பட்டு, நான்குபேர் கொண்ட ஒரு குழு மாநிலத்திலுள்ள எல்லாக் கோயில்களையும் கண்காணிக்க வேண்டும். இதில் ஒரு IAS அதிகாரியும், ஒரு மடாதிபதியும், ஒரு அனுபவம் மிக்கவரும் ஆன்மீகவாதியுமான தொழிலதிபரும், பிரபலமான இறைத் தொண்டர் ஒருவரும் இடம் பெற வேண்டும்.   இக்குழுவினது ஆட்சிக் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இதில் இடம்பெற்ற நபர்  சுழற்சி முறையில் மீண்டும் ஆறு ஆண்டுகள் கழித்தே வர முடியும். இக் குழு குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடி ஆலோசனைகளும்,தீர்ப்புகளும் வழங்கி, அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

* பிரபலமான கோயில்கள் சுமார் இருபதின் கீழ் மாநிலக் கோயில்களின் நிர்வாகம் கொண்டுவரப்படுவதுடன் அவை தன்னாட்சிக் கோயில்களாக அறிவிக்கப்பட வேண்டும். இதனால், கிளைக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் தலைமைக் கோயிலையே சாரும். இத்தலைமைக் கோயில்களின் வருமானம் அரசுக்குச் செலுத்தப்படாமல், அந்தத்  தலைமைக் கோயில்களின் வங்கிக்  கணக்கிலேயே இருக்க வேண்டும். இதிலிருந்தே, தலைமைக் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் செலவுகள் ஏற்கப்பட வேண்டும்.

* ஒவ்வொரு தலைமைக் கோயிலுக்கும் நியமிக்கப்படும் அதிகாரி, அரசியல் தொடர்பு இல்லாத , சமய நம்பிக்கை உள்ள நபராக இருக்க வேண்டும்.

* தலைமை அதிகாரி, அக்கோயிலின் உபகோவில்களை மாதம் ஒருமுறையாவது சென்று பார்வையிட வேண்டும்.

" ஒவ்வொரு தலைமைக் கோவிலின் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

* தரிசனக் கட்டணம் முற்றிலுமாக நீக்கப் படவேண்டும்.

* பிற காணிக்கைக்கான   கட்டணங்கள்  ஏழைகளும் ஏற்கும்படியாக இருக்க வேண்டும்.

* வண்டிகள் நிறுத்த ரூ 5 வசூலித்தால் போதுமானது. அதை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறிது உயர்த்துவது, உயர் மட்டக் குழுவின் பரிந்துரையைப் பொறுத்தது.

கீழ்க் கண்ட கோயில்களைத் தலைமைக் கோயில்களாக வருமான {அடிப்படையில்) அறிவிக்கலாம்:

திருத்தணி, சென்னை (கபாலீஸ்வரர் கோயில்), காஞ்சிபுரம்(வரதராஜர் கோயில்) , திருவண்ணாமலை, சமயபுரம், செட்டிகுளம்/கலியபெருமாள் கோயில், ஸ்ரீரங்கம்,சுவாமிமலை, மதுரை, பழனி, திருக்குற்றாலம்,திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற தலங்களின் ஆலயங்கள் இவ்வாறு அந்த அந்த மண்டலங்களுக்கான தலைமைக் கோயில்களாக அமையக்கூடும்.

இந்த அமைப்பால், நிலங்களிளிருந்தும், கோயில் வீடுகளிலிருந்தும் வர வேண்டிய வருமானம் முறைப்படுத்த வகை செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பை அந்தந்த மண்டலத் தலைமை அதிகாரிகளே ஏற்கவேண்டும்.

* தலைமைக் கோயில்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கை, தணிக்கை செய்யப்பட்டபின் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட வேண்டும்.

* சிப்பந்திகளின் சம்பளம் முறைப்படுத்தவும், கோயில்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேற்படி எழுந்த சிந்தனைகள் சிலவே. சமயச் சான்றோர்கள் மற்றும் தக்கோர்கள் இன்னும் எத்தனையோ பரிந்துரைகள் வழங்குவர். இவற்றை எல்லாம் அரசு தயங்காமல் ஏற்க முன்வந்தால் நமது ஆலயங்கள் மீண்டும் பொலிவு பெறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

Tuesday, January 15, 2013

பொங்கல் தினச் சிந்தனை


திரு நெல்வேலிக்கு  அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையன்  சொன்னான்: " நகரங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை விட கிராமங்களிலேயே அதன் உண்மையான அழகும் மகத்துவமும் தெரிய வரும்" என்றான். அநேகமாக எல்லோரும் இதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்! கிராமங்களில் மார்கழி முழுவதும் சிறு குடிசை வாசலிலும் அழகான கோலம் போட்டு அதன்  நடுவில் பசும்  சாணத்தில் ஒரு பரங்கிப்பூவையும் செருகி வைப்பார்கள்.               ( நகரத்திலோ,சாணத்தைக்  கையால் தொடுவார்களா என்ன? )  கொட்டும் பனியிலும் கூட விடியற்காலையில் கோலம் போடுவார்கள். நகரவாசிகளில் பலர் முதல் நாள் ராத்திரியிலேயே  கோலத்தைப் போட்டு விடுகிறார்கள். பலர்  அந்த வேலையையும்(?) வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உடற்பயிற்சி என்று காசு கொடுத்தாவது முதுகை வளைப்பதற்குப் பதிலாகக் கோலம் போடுவதற்குச் சற்று வளைக்கலாம்.

நிலைமை இப்படி இருக்கும்போது, பொங்கல் அன்று பெரிதாகக் கோலம்  போட்டு அதற்குக் காவியில் பார்டர் அடிப்பது என்ற வழக்கத்தைக் காண்பதும் நகரங்களில் குறைந்து வருகிறது. கோலம்  போடுவதும் விளக்கு ஏற்றுவதும் மங்கலமான காரியங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலுள்ள பெண்மணிகளும் உணர்ந்துவிட்டால் நல்லது.

கனுப் பொங்கல் அன்று விடியற்காலையில் மஞ்சள் இலைகளில் கனு வைப்பதும் உடன் பிறந்தோர் நலனுக்காகவே என்பதை அறிந்தால், இன்னும் உற்சாகத்துடன் அதைக் கொண்டாட முடியும். இதையெல்லாம் தாயார் தான் தன் பெண் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்படி இலையைப் போடுவது;எப்படிப் பரிமாறுவது என்றுகூட சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் மாடுகளுக்குக் கொம்புகளில் வர்ணம் அடித்து வண்டிகளில் பூட்டி, அவ்வண்டி வழியும் அளவுக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு, "பொங்கலோ பொங்கல்" என்று கோஷமிட்டுக் கொண்டு அம்மாடுகளை விரட்டி ஓட்டுவது என்று ஆகிவிட்டது. வணங்க வேண்டிய கால்நடைகளை இப்படி அடித்து ஆர்ப்பாட்டம் செய்வது முறையா என்று யோசிக்க வேண்டும். வீர விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு காளைகளை ஓட ஓட விரட்டுவதும் அதைப் பலர் அடக்க முற்படுவதும் ஜல்லிக் கட்டு என்ற பெயரில் நடைபெறுகிறது. மற்ற மிருகங்களிடமிருந்து  தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் கொம்பு வேண்டிப் பசு இனங்கள் , விழுப்புரத்துக்கு அருகில் உள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தில் சிவபெருமானை வழிபட்டன . இப்போது மனிதர்களும் அந்த இனத்திற்குக் கொடுமை செய்வதைப் பார்த்து அவை மீண்டும் அப்பெருமானிடமே முறையிடவேண்டும்.

ஆவூர்,பேரூர்,கரூர், பட்டீஸ்வரம் முதலிய ஊர்கள் பசுக்கள் பெருமானை வழிபட்ட தலங்கள்.பசு இனங்கள் இறைவனுக்கு அபிஷேகத்திற்காக அவன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஆன் ஐந்தையும் தருவதோடு மனிதகுலத்திற்கும் தாயாக இருக்கின்றன. திருவண்ணாமலை போன்ற பெரிய தலங்களில் மாட்டுப் பொங்கலன்று நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடை பெறுகின்றன. சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று காலையில் நந்தி கேச்வரருக்குச் செய்யப்பட அலங்காரத்தை இங்கு தரிசிக்கிரீர்கள். வயதான பெண்மணிகள் திருக் குளக் கரையில் கனு  வைத்தவுடன் அங்கு எழுந்தருளியுள்ள கற்பகாம்பிகைக்கு அபிஷேக - ஆராதனைகள் நடைபெறுகின்றன. உண்மையிலேயே அரிய காட்சிதான்!

சொல்லிக் கொடுக்க வேண்டிய நமது பண்பாடுகள் எவ்வளவோ இருக்க, நமது தொலைக் காட்சிகளோ, சினிமாவையே சுற்றிசுற்றி வருவது வருத்தத்திற்கு உரியது. பண்டிகை தினங்களிலாவது மக்கள் நல்ல சிந்தனையோடு இருக்க இவர்கள் விட மாட்டார்களா? இவர்களின் தூண்டில்களில் மீன்கள் போல் மக்கள் விழுவது காலத்தின் கொடுமையைக் காட்டுகிறது. பண்டிகை தினத்தை சந்தோஷமாகக் கொண்டாடுவது என்ற போர்வையில், கடற்கரைக்கும் , மிருகக் காட்சி சாலைக்கும் , சினிமா அரங்குகளுக்கும்  மக்கள் திசை திருப்பப் படுகின்றனர்.

பெற்றோர்களே! மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகள் நல்ல பிரஜைகளாக உருவாக வேண்டாமா? நாம் அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் முன் உதாரணமாகவும் இருக்க வேண்டாமா? ஒருக்கால் தவறான வழியில் அவர்கள் சென்றுவிட்டால் அவர்களைத் திருத்துவது சாத்தியமா? வாழ் நாள் முழுவதும் அவர்கள் துன்பப்படவேண்டியதுதானா? தேவைப் பட்டால் அவர்களது நலனுக்காவது நாம் சிறிதளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? அற்ப சுகங்களைக் களைந்து அவர்களது அறிவாற்றலை வளர்க்க வேண்டாமா? தூய பண்பாடுகள் அவர்களிடம் மலரச் செய்யும் பொறுப்பு நம்மிடம்  இருப்பதை மறப்பது நியாயமா; தர்மம் தானா?
 காலம் தான் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

Saturday, January 5, 2013

பெரியவர்கள் காட்டிய பாதை


ஆப்த நண்பர்  ஒருவர்  ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர்களைப் பற்றிய  ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். அது எதில் ,எப்பொழுது வெளியானது என்று தெரியவில்லை.எந்த வருஷம் நடந்த சம்பவம் என்றும் தெரியவில்லை. சுமார் அறுபது எழுபது வருஷங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம். அந்தக் காலத்தில், ஸ்ரீ பெரியவர்கள் பல்லக்கில் ஊர் ஊராக யாத்திரை செய்துகொண்டு இருந்தார்கள். அவர்களோடு மடத்துப் பூஜையும், யானை, ஒட்டகம் ஆகியவையும் கூட வரும். திரு நாட்டியத்தான்குடி என்ற சிவஸ்தலத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் மாவூர் ரோடு என்ற ஊருக்கு சுமார் ஏழெட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த நாட்டியத்தான்குடி என்ற கிராமம். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இந்த ஊர் சுவாமியின் மீது தேவாரம் பாடியிருக்கிறார். மேலும் இங்கு அறுபத்து மூன்று நாயன்மார்களில்  ஒருவரான கோட்புலி நாயனார்  அவதரித்துள்ளார். ஸ்வாமிக்காக வைத்திருந்த நெல்லைப் பஞ்ச காலத்தில் உபயோகப்படுத்திய தன் குடும்பத்தார்களைத்  தண்டிக்கத் தயங்காத இவரது வரலாறு பெரிய புராணத்தில் காணப்  படுகிறது.

ஸ்ரீ பெரியவர்கள் இந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மாசி மாத விடியற்காலை நேரம். சின்னஞ்சிறு கிராமங்கள் வழியாகப் பல்லக்கு போய்க்கொண்டு இருந்தது.நத்தம் என்ற ஊருக்கு அருகில் வந்தவுடன் பாதை இரண்டாகப் பிரிந்தது. நாட்டியத்தான்குடிக்கு இடது பக்கம் செல்லும் பாதையில் போக வேண்டிய அந்த வேளையில் , பல்லக்கிலிருந்த ஸ்வாமிகள், சைகை மூலம் வலது புறம் செல்லும் பாதையில் போகச் சொன்னார்கள். அது மணமங்கலத்திற்கு அல்லவா போகிறது? இருந்தாலும் பெரியவர்  சொன்ன பாதையிலேயே பயணம் தொடர்ந்தது.இருள் விலகுவதற்கு முன்னால் ஒரு கிராமத்தை அடைந்ததும் அங்கேயே நிற்கும்படியும் உத்தரவு ஆயிற்று.

கிராமவாசிகளுக்கோ ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்கவில்லை. மௌனம் அனுசரித்திருந்தபடியால் சைகையாகவே, இந்த ஊரில் சிவன் கோயில் இருக்கிறதா என்று பெரியவர் கேட்கவே, இல்லை என்றே பதில் வந்தது. கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பெரியவரது எண்ணம்.
நேரம் ஆக ஆக செய்தி பரவ ஆரம்பிக்கவே, அக்கம்பக்க கிராம மக்களும் தரிசனத்திற்கு வந்தார்கள். பூஜை முடிந்து பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்த சமயம். ஒரு முஸ்லிம் தம்பதிகள் பழங்களோடு வந்து பெரியவர்களை வணங்கினார்கள். அந்த முஸ்லிம் சொன்னார்: " நேற்று  என் வீட்டுக் கொல்லையைத் தோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு சிவ லிங்கமும் கோவில் தூண்களும் இருப்பதைக் கண்டோம். பழையகால ஆலயம் இடிந்து மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரிய வந்தது. சிவ சொத்து குல நாசம் என்பதால் குத்தகை நெல்லை முறைப் படி அளந்துவந்தோம். இருந்தாலும் சில சோதனைகள் வந்தன. இந்த மனைக்கட்டைக் கோவிலைத் திரும்பக் கட்டிக் கொள்வதற்காகக் கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஒரு பைசாவும் அதற்காகக் கொடுக்க வேண்டாம். என்னுடைய பங்காகத் திருப்பணிக்கு நூறு ரூபாய் அளிக்கிறேன்" என்று சொல்லி, அக்  காணிக்கையை அங்கேயே செலுத்தினார். அப்பொழுது பெரியவர், "நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்து விட்டீர்களா?" என்று ஒரு  ஸ்லேட்டில் எழுதிக் காட்டினார். அதைப் புரிந்து கொண்ட முஸ்லிம் அன்பர், " இன்னமும் மெக்கா - மதினாவுக்குப் போக வசதி இல்லாமல் இருக்கிறேன்" என்றார். கோவில் கட்ட நிலத்தையே அளித்தவருக்கு நீங்கள் பதிலுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்பதுபோல் பெரியவர்கள் அக்கிராம மக்களைப் பார்த்தார்கள். உடனே, எல்லோருமாக "அதற்கான முழு செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்" என்றார்கள். இதை கேட்ட பெரியவர்கள் முகத்தில் ஏற்பட்ட திருப்தியை நேரில் பார்த்தவர்களே அனுபவித்துச் சொல்லமுடியும். வந்த காரியம் ஒரு கோவிலை வெளி உலகத்திற்குக் கொண்டு வருவதற்காகவே என்பது அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது.  அதற்குப் பிறகு நாட்டியாத்தான்குடியை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

லக்ஷக் கணக்கிலும் கோடிக்  கணக்கிலும் செலவழித்துப் புதுக் கோயில்கள் கட்டுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. கிராமக் கோயில்கள் மண்ணோடு மண்ணாகப் போனாலும் கவலைப் படாத காலம் இது. பெரியவர்கள்  முக்காலும் தெரிந்தவர்கள் என்றும், மகான் என்றும் இருந்த இடத்தில் இருந்தே சொல்லிக் கொண்டும்  இருந்தால் போதாது. அவர்கள் நடந்து காட்டிய பாதையில் நாமும் பயணிக்க வேண்டும். அதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி. தூய பக்தியும் அதுவே. அன்று அவர்கள் மாற்றுப் பாதையைக் காட்டி ஒரு சிவாலயத்தைக் காட்டினார்கள். இன்றோ ஒரு ஆலயம் பூஜையின்றி இடிந்து கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகிறோம். "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து" என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடுவது நினைவுக்கு வருகிறது. உண்மையில் பார்த்தால் நாம் தான் அவ்வாறு நாடகம் ஆடுகிறோமோ என்று தோன்றுகிறது. பெரியவர்கள் தரிசித்தது போல் நாமும் கிராமக்கோயில்கள் பக்கம் போகிறோமா? இடிந்த கோவில்களின் திருப்பணிக்காகக் குண்டுமணி அளவாவது கொடுக்கிறோமா ? பூஜைகள் நடத்த நம்மாலான உதவியைச் செய்கிறோமா? பெரும்பாலோர்களது மனசாட்சி "இல்லை" என்று தான் சொல்லும். அப்படியிருந்தும் நாம் பெரியவர்களின் பக்தன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக நடந்து கொள்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ளவேண்டும். அது ஒன்றுதான் அவர்கள் பாதையில் நாமும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.

நிறைவாக ஒரு வார்த்தை. மத நல்லிணக்கம் என்று வாய் அளவில் மட்டும் நிறைய பேர் இப்போது பேசுவதைக் கேட்கும்போது மேற்கண்ட சம்பவத்தை ஏன் முன் உதாரணமாக மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடாது என்று தோன்றுகிறது. இது போன்ற சம்பவங்கள் பற்றி இளைய தலைமுறைக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமைதானே?