Wednesday, July 22, 2020

சுப்ரமண்யனும் முருகனும் ஒன்றே

இறைவன் அநாதி என்பது போல உயிர்களும் அநாதி என்பது சித்தாந்தக் கொள்கை.அதேபோல ஆன்மீகம் தோன்றிய காலத்திலேயே நாத்திகமும் இருந்திருக்க வேண்டும். இறைவனது திருவுள்ளமும் ஒருவேளை அதுபோல இருக்கலாம்." நாத் தழும்பு ஏற நாத்திகம் பேசினர் " எனக் கூறும் மாணிக்கவாசகரே , உயிர்கள் பலவடிவெடுத்து உழன்ற பின்னர் வினை நீக்கம் வரும் காலத்தில் " தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி "  அவனருளால் தூய்மை செய்யப்படுவதை விளக்குகிறார். நமக்கு அதிகமாகத்  தெரிந்ததெல்லாம்  நாம் வாழும் காலத்தில் ஆன்மீகமும் நாத்திகமும் எப்படி உள்ளன என்று அறிய முடிந்ததே ஆகும்.

நாஸ்தி என்பதற்கு இல்லை என்று பொருள் சொல்வார்கள். இறைவன் இல்லவே இல்லை என்றும் அவன் கற்பிக்கப்பட்டவன் என்றும் வாதிடும் நாத்திகர்களை இன்றும் பார்க்கிறோம். சிலரோ நாத்திகத்தை வாய் விட்டுப் பேசாமல் ஆத்திகத்தையும் ஆதரிக்காமல் கடவுட் கொள்கையில் ஏதும் தெரியாமலும் காலத்தைக் கழிக்கிறார்கள். அவர்களும் ஒருவகையில் நாத்திகர்களே.

நம் தேசத்து ஆன்மீகத்திற்கும் பிற நாடுகளின் ஆன்மீகத்திற்கும் வேறுபாடு உண்டு.நம் நாட்டிலுள்ளோர் பிறரது நம்பிக்கையைப் புண்படுத்தாமல், பிறரது கொள்கையைப் பழிக்காமலும் இருப்பவர்கள். ஆனால் அயலவர்களோ நமது கொள்கையை ஏற்காததோடு அவர்களது கொள்கையைப் பிறருக்கும் புகுத்தி அவர்கள் பால் ஈர்ப்பதில் வல்லவர்கள். எந்தக் கொள்கையையும் அறியாதவர்கள் அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி அம்மாயையில் வீழ்ந்து விடுகிறார்கள். சமீப காலமாக அவர்களால் தரப்படும் அனுகூலங்களுக்கு ஆசைப்பட்டு நம் சமயத்தை ஏசவும் துவங்கி விட்டனர்.

சமூக வலைத்  தளங்கள் மூலம் ஆன்மீகமும் நாத்திகமும் பரப்பப்படுவதைப் பலரும் அறிவர். யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் அவற்றின் மூலம் பேசத்  தொடங்கி விடுகின்றனர்.நமது புராணங்களும் தோத்திர நூலகளும் பழிக்கப்படுகின்றன. ஒற்றுமையாக இதனை எதிர்த்துக் குரல் கொடுப்போர் மிகக் குறைவாக இருப்பதால் நாத்திகர் கை  ஓங்குகிறது. அனுகூலங்களால் ஆன்மிகர்களும் கவரப்பட்டு நமது தெய்வங்களைப் பழித்தும் மாறுபடுத்திப் பேசியும் வருகின்றனர்.

சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பேசியிருக்கிறார். எப்படித்தான் அவரது சிந்தையில் இப்படிப்பட்ட கருத்துக்கள் உதயமாகின்றதோ நாம் அறியோம். ஏதும் அறியாத நடு நிலையாளர்களுக்கு இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகவே தோன்றுகிறது. இல்லாவிட்டால் அவர் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்க முடியுமா ? இக்கண்டுபிடிப்பு நாத்திகர்களுக்கு அல்வா கொடுத்த மாதிரி..

முதலில் அவர் இதைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டார் என்று பார்ப்போம். முருகன் தமிழ்க்  கடவுள் என்பதால் சுப்ரமணியன் என்ற பெயர் இருக்க நியாயமில்லையாம். பண்டைத் தமிழ் நூல்களில் அப்பெயர் காணப்பட வில்லையாம். பிற்காலத்தில் இவ் வடமொழிப் பெயர் புகுத்தப்பட்டதாம் ! நாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கம் கடல் சீற்றத்தால் அழிந்தபோது ஏராளமான தமிழ் நூல்கள் அழிந்ததாகவும். கவிராயர் பலரது வீடுகளிலிருந்து பழைய ஓலைச் சுவடிகள் ஆற்றில் எறியப்பட்டதாகவும் வரலாறு உள்ளது. அப்படியாயின் அவற்றில் சுப்ரமணியன் என்ற பெயர் இடம்பெற்ற நூல் மறைந்திருக்கலாம் அல்லவா ?

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்  நூல் ஒன்றில் சுப்ரமணியன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டினால்  இவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் சேந்தனார் என்பவர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது. திருவிடைக்கழி என்ற தலத்திலுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற பதிகம் அது. அதில்  வரும் ஒரு பாடலில் " சுப்பிரமணியன் " என்று முருகப் பெருமான் குறிப்பிடப்பெறுகிறார்.அதே பதிகத்தில்  வேறோர் பாடலில் " சுவாமி " என்ற வட மொழிப் பெயரும் காணப்படுகிறது. அமர சிம்மன் என்ற ஜைனன் வடமொழியிலியற்றிய அமர கோசம் என்ற அகராதியில் சுவாமி என்ற சொல்லுக்குப் பொருள் முருகக் கடவுளையே குறிப்பதாகக் காணப்படுகிறது. இதனால் சுவாமி என்றாலும் சுப்ரமணியன் என்றாலும் முருகனைக் குறிப்பதாகக் கூறும் இத் தமிழ் நூலைக் காட்டிலும் வேறு ஆதாரம் என்ன வேண்டும் ?

அதே பதிகத்தில் தூய தமிழ்ச் சொற்களாலும் கந்தப்பெருமான் காட்டப்படுகிறார். அவையாவன: " மலையான் மதலை " குமர வேள் ",  வள்ளி மணாளன் " " நங்கை யானைக்கும் குழகன் " , " வேலுலாம் தடக்கை வேந்தன்  " வேற்  செல்வன் ", " பன்னிரு நயனத்து அறுமுகத்து அமுது " , " கிரி தனைக் கீண்ட ஆண்டகை" , "தொகை மிகு நாமத்தவன் " " சூர் மார்பினைத் தடிந்தோன் " என்பவை அவற்றுள் சிலவாம்.

தமிழ் முருகன் என்று பிரித்தும் திரித்தும் கூறும் அச் சொற்பொழிவாளர் அம்முருகனது தாய் தந்தையர் யார் என விளக்குவாரா? சுப்ரமண்யனை வட நாட்டவராகக் கூறினால் அப்பெருமானின் பெற்றோர் சிவ பார்வதி ஆகி விடுவர். அப்படியானால் தமிழ் முருகனின் பெற்றோர் யார் ? அறிவீனத்தின் உச்சம் தொடப்படுகிறது. ஆனால் திருவிடைக்கழி முருகனது உறவினர் யார் என்று சேந்தனார் அடையாளம் காட்டும் அழகைப் பாருங்கள் : " புரம் பொடி படுத்த மலை வில்லி தன் புதல்வன் " ( திரிபுரம் எரி  செய்த அச்சிவனது குமாரன் ),     " மலை மகள் மதலை", " கங்கை தன்  சிறுவன் "  " மான் அமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை " ( கையில் மான் ஏந்திய சிவபிரானது பிள்ளை); " " இளம் பிறைச் செஞ்சடை அரன் மதலை" ( பிறைச்  சந்திரனை சிவந்த சடையில் ஏற்ற சிவபெருமானின் மகன்); " கணபதி பின் இளம் கிளை " ( கணபதிக்குப் பின் தோன்றியவன் ) ; என்ற சொற்களால் திருவிடைக்கழி முருகனும் திருக்கயிலாயத்து சுப்ரமண்யனும் ஒருவரே என்று சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி சேந்தனார் பாடி அருளியுள்ளார்.

இறைவன் எல்லா மொழியாலும் வணங்கப்படுபவன்.  " தாய் மொழியாகத் தூய் மொழி அமரர் கோ மகனை " என்ற சொற்றொடர் இதனைச் சுட்டிக் காட்டுகிறது. " தொகை மிகு நாமத்தவன் " என்பதால் அளப்பரிய ஆற்றல் உடைய ( " அசிந்த சக்தயே நம: என்றே  சுப்பிரமணிய ஸஹஸ்ரநாமம் துவங்குகிறது). பரம்பொருளை ஒரு குறுகிய வட்டத்தில் அடக்குவதா? இதுதான் சொற்பொழிவாளருக்கு அழகா ?

தமிழ் நாட்டில் இருப்பதுபோல வடநாட்டில் முருகன் வள்ளி தேவசேனை சமேதராக இல்லையாம் . அதனால் என்ன ? வடநாட்டில் பிள்ளையார் சித்தி புத்தி சமேதராக இருப்பதுபோல் தமிழகத்தில் இல்லையே ! அதனால்  தமிழ்ப் பிள்ளையார் வேறு வட நாட்டுப் பிள்ளையார் வேறு என்பாரா ? அங்கு முருகன் பிரம்மச்சரியக் கோலத்தில் வழிபடப் படுவதால் தேவிகளின் திருவுருவங்கள் அமைக்கப்படவில்லை.ஆறுமுகமும் மயிலும் கூடவே இருக்கும் மூர்த்தங்கள் பல அங்கும் உண்டு. . வடமொழி  அஷ்டோத்திரத்தில் தேவிமார் பெயர்கள் இல்லையே என்கிறார் . எதையும் யோசித்து விட்டுப் பேச வேண்டும். தமிழகக் கோயில்களில் செய்யப்படும் அர்ச்சனைகள் வட மொழியில் உள்ள புராணங்கள் வாயிலாக அமைந்தவை ஆதலால் அவ்வாறு உள்ளன என்பதில் வியப்பேதும் இல்லை. அதனால் தெய்வம் வேறாகி விடாது.

இவரது நோக்கம் தான் என்ன? சமயத்தைக் கிண்டலாகப் பேசுவதா? அல்லது வடக்கு தெற்கு என்று பிரிவினையை உண்டு பண்ணுவதா ? ஒரே பாலமாகத் திகழும் வட மொழியைக்  கோயில்களிலிருந்து விரட்டுவதா அல்லது கிரியைகளுக்கு மட்டுமே வட மொழியைப் பயன் படுத்திக்கொண்டு வாழ் நாள் முழுதும் தமிழைத் தவிரப் பிற மொழிகளை அறியாத ஏழை அந்தணர்களைக் கோயில்களிலிருந்து விரட்டுவதா ?  அவர்கள் செய்த பாவம் தான் என்ன ? நெஞ்சைத்  தொட்டுச் சொல்லட்டும்.

இவரை விடுங்கள். ஆத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் மௌனிகளாக இருப்பது ஏன்?

" பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் " என்பது திருமுறை வாக்கு. எல்லோரையும் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.ஞாபகம் இருக்கட்டும். 





Sunday, July 12, 2020

பச்சைத் துரோகம்



ஆண்டுக்கணக்கில் மாத சம்பளம் ஆலய சிப்பந்திகளுக்கு வழங்கப்படாமல் உள்ள கிராமக்கோயில்கள் ஏராளம். மக்கள் வருகையாலும், உபயதார்களது உதவியாலும் மட்டுமே அர்ச்சகர்களின் வாழ்க்கை நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கிடையில் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலச்  சித்தரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர்களும் இருக்கிறார்கள்.

உபயதாரர்கள் அளிக்கும் நன்கொடை மூலமே நடைபெறும் அன்னதானமும் , ஒரு கால பூஜை திட்டமும், ஏதோ அறநிலையத்துறையே செய்வது போன்ற தோற்றத்தை உண்டாக்கி விளம்பரம் செய்து வருகிறார்கள். ஒரு கால பூஜை துவங்க கிராமத்தினர் ஒரு லட்சம் வழங்கினால் அற  நிலையத்துறை தனது பங்கை அளிக்க முன் வரும். அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து சுமார் ரூ 750 அர்ச்சகருக்கு மாத சம்பளமும் , பூஜை சாமான்களும் கொடுக்க வேண்டும் என்பதே திட்டம். தற்போது அந்த சொற்பத்தொகையும் பல மாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இவர்களை நம்பி ஒரு லட்சம் வசூல் செய்து கொடுத்த கிராமத்தினருக்குச் செய்யும் துரோகம் இது.

இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகியும் மாத சம்பளம் தராமல் காலம் தாழ்த்தும் இந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாக்கி வைத்துள்ளதா ? வருமானம் வந்தால் தானே சம்பளம் வழங்க முடியும் என்றால், அவ்வாறு வருமானம் இல்லாத ( ? ) கோயில்களின் நிர்வாக (? ) அதிகாரிக்கு மட்டும் மாதம் தோறும் எதற்காக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதே கேள்வி. ஒருவேளை, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டால் தான் பதில் சொல்வார்களோ என்னவோ !

கோயிலுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது யாருடைய கவனக்குறைவு? எதுவும் செய்ய முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு? உண்டியல் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கா ? அறமற்ற செயல்களை செய்வதற்கா ? அந்த நிலங்களின் அருகே கூடச் செல்லாமல் கணக்கு எழுதும் கூட்டம் எதற்கு என்று பலரும் கேட்கிறார்கள். எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

நிலங்களிலிருந்து விளைந்து வராவிட்டால் வருமானம் இல்லை என்று  மூக்கால் அழுதார்கள். விளைந்து வந்த பிறகும் சம்பளம் கொடுக்காத அவலத்தை என்னவென்று சொல்வது? கடந்த தை மாதத்தில் அறுவடை ஆகி சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு வந்து சேர்ந்த நெல் நிர்வாக அதிகாரியின் அலட்சியத்தால் விற்கப்படாமல் மூட்டைகளாகக் கிடைக்கும் கோயில்கள் ஏராளம். விற்கப்போனால் கோயில் பெயரில் ஆதார் கார்டு கேட்கிறார்களாம். ஆதார் கார்டு தனி நபர் பெயரிலேயே கொடுக்கப்படும் போது, எவ்வாறு சுவாமி பெயரில் கொடுக்க முடியும் ? கொஞ்சமாவது யோசித்தார்களா ? புகார் அளித்தால் மதிப்பதே இல்லை. அலட்சியமும் ஆணவமும் மேலோங்குகிறது.

இந்து அறநிலையத் துறை என்பது ஆட்சித் துறை அன்று. நிர்வாகத் துறை என்பதை உணராமல் அதிகாரம் செலுத்துகிறார்கள். நிர்வாக அதிகாரி என்றால் அதிகாரம் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்பதவியின்  பெயரை நிர்வாகி என்று மாற்றி அமைக்க வேண்டும். அதிகாரம் செய்ய இவர்கள் யார்? நிர்வாகம் செய்யவே திறமை அற்றவர்களை எவ்வாறு அதிகாரிகளென்பது ?

வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு நிர்வாகம் செய்ய வேண்டியதே இவர்களது வேலையே தவிர அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வது அல்ல. நிர்வாகம் சரிவர நடைமுறையில் உள்ளதா என்பதைக் கண்காணிக்க அவருக்கு மேல் உள்ளவர் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் சிப்பந்திகளை மிரட்டவோ, சம்பளம் கொடுக்காமல் காலம் தாழ்த்துவதோ இவர்களாகவே எடுத்துக் கொண்டுள்ள அதிகாரங்கள் .

நிர்வாகி என்பவர் தன்னிடம் வேலை பார்க்கும் நபர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை  அவர்கள் தவறுகள் செய்தாலும் ,  சுட்டிக் காட்டுவதிலும் ஒரு நாகரீகத்தைக் கையாள வேண்டும். அப்படிச் செயல்பட்டால் தவறு செய்தவரும் தனது தவறுக்கு வருந்தி மீண்டும் அத்தவறை ஒரு நாளும் செய்ய முன்வர மாட்டார்.

சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகின்றேன். சுமார் 45 ஆண்டுகள் முன் ஒரு கம்பெனியில் பரிசோதனைச் சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை 5 மணி இருக்கும். மத்தியான ஷிப்டில் இருந்தபோது ஒருகண்ணாடி  சிலிண்டரைத் தண்ணீரால் கழுவியபின்னர் அதிலிருந்த ஈரத்தை அகற்ற வேண்டி, அசிட்டோன் என்ற திரவத்தால் சற்றுக் கழுவி, உலர வைக்க வேண்டும். நானோ அசிடோனால் அந்த சிலிண்டருக்குத் தாராளமாக அபிஷேகம் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் எங்கள் துறையின் தலைவர் (HOD ) நின்றுகொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. இன்னொருவராக இருந்தால் என்னைக்  கடுமையாகத் திட்டியிருப்பார். சந்தேகமே இல்லை. ஆனால் அவரோ , ஆங்கிலத்தில், This is Acetone my dear friend ( இது அசிடோன் நண்பரே ) என்றார். அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்துவிட்டு என் பிழைக்கு வருந்தித் தலை குனிந்தேன். அன்றிலிருந்து கனவிலும் அத்தவறை மீண்டும் செய்ததே இல்லை. இதன் காரணம் அவர் தன்னை ஒருபோதும் அதிகாரி என்று நினைத்ததில்லை. அதிகாரம் செலுத்தியதும் இல்லை. இது போன்ற நற்பண்புகள் நமக்கு இல்லையே என்று இன்றும் நினைப்பது உண்டு.

கொரானாவால் உலகமே திண்டாடிக்கொண்டு இருக்கும்போது ஆலய சிப்பந்திகள் தங்கள் கடமை தவறாமல் பணி  ஆற்றுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முன்வராததோடு, பழி சுமத்தி அவர்களைப் பணி   நீக்கம் செய்வதையும், மிரட்டுவதையுமே  செய்துவருகிறார்கள் அதிகாரிகள். அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோஉள்ளூரில்  எவருமே இல்லாததால்  நிர்வாக அதிகாரி செய்வதே சட்டம் ஆகி விடுகிறது. ஓரிருவரைத் தவிர எவரும் நீதி மன்றத்தை நாடுவதில்லை. நாடாவிட்டாலும், குரல் கொடுப்பவர்களுக்குத் துணையாக ஓரிரு வார்த்தைகளாவது சொல்ல முன் வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. வெட்கக்  கேடு.

ஊர் நலனுக்காக ஆலய பூஜை செய்பவர்களுக்குத் துணையாக இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களை  நன்றி கெட்டவர்கள் என்றோ பச்சைத் துரோகம் செய்பவர்கள் என்று தானே கூற முடியும் ? 







Sunday, June 28, 2020

அறமா அநீதியா ?


கோயில்களின் வழிபாட்டு முறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கலாகாது என்று பலமுறை கூறினாலும் பலன் இல்லை. காரணம் தங்க முட்டையிடும் வாத்தை விட்டுவிட மனம் வராததுதான். இந்து அறநிலையத் துறையின் சட்டத்திலும் மேலெழுந்தவாறு நிர்வாகத்தைக் குறை இல்லாதவாறு  கண்காணிக்க வேண்டும் என்றே சொல்லியிருக்கிறது என்று பல சட்ட வல்லுனர்கள்  சொல்லியும் திருத்தம் இன்னமும் ஏற்படவில்லை. ஆனால் கோயில்களின் சொந்தக்காரர் போல் எண்ணிக்கொண்டு  செயல் படுவது விந்தை ! நிர்வாக அதிகாரி என்பவர் நிர்வாகத்தை மேற்பார்வை இடுபவரே தவிர அதிகாரம் செய்பவர் இல்லை என்பதை  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கோயில் சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும், துஷ் பிரயோகம் செய்யாமல் இருக்கச் செய்யவும் ,வருவாய் ஒழுங்காக செலுத்தப்படுகிறதா என்பதையும் மேற்பார்வை இடுவதற்கு  அரசுத் துறை தேவை என்று சொல்லிக் கொண்டு மேற்கண்ட எதையும் சரிவரச் செய்யாமல் இருப்பதோடு சிப்பந்திகளின் நலனில் அக்கறை இல்லாமல் செயல் படுவது எதற்காக ?

கோயில் நகைகள், விவசாய நிலங்கள் , மனைக் கட்டுக்கள், உண்டியல்கள் ஆகிய எல்லாவற்றிலும் கை  வைக்கத்  தவறாததோடு விக்கிரகங்களைக் களவாடவும் துணிந்துவிட்ட போது இனிமேலும் இந்தத் துறை வேண்டுமா என்று  கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும் ? 

அதிகாரிகள் மாதம் தவறாமல் சம்பளம் வாங்குவதோடு பல வசதிகளையும் கோயில் வருமானத்திலிருந்து பெறும்போது முந்நூறும் நானூறும் சம்பளம் வாங்கும் சிப்பந்திகளின்  வயிற்றில் ஏன் அடிக்கிறார்கள் ? பல ஆண்டுகளாக இந்த சொற்ப சம்பளமும் வழங்கப்படாத  கோயில்கள் அநேகம். இந்த லட்சணத்தில் ஏதோ எஜமான்கள் போல நினைத்துக் கொண்டு சிப்பந்திகளை மிரட்டுவது நியாயம் தானா ?

 ஆலயத்தில் ஏதேனும் களவு நேர்ந்து விட்டால் சிப்பந்திகள் மீது களவுப் பட்டம் சூட்டிக் காவல் துறையிடம் காட்டிக் கொடுப்பவர்கள் இந்த அதிகாரிகள். லஞ்சம், விக்கிரகத் திருட்டு போன்ற பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதித் துறையால் தண்டிக்கப்பட்டவர்களை மீண்டும் உயர் பதவியில் பணி நியமனம் செய்யும் துறையிடம் இனிமேலும் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?

இவர்கள் மனது வைத்தாலே அற்ப சம்பளம்( பிச்சை ?) பெற முடியும் என்ற நிலையிலும் இறைவனுக்காகவே தொண்டாற்றும் அர்ச்சகர்களை அறுபது வயது ஆனால் ஈவிரக்கம் இல்லாமல் வெளியேற்றுவது வெட்கக்  கேடு. நிலத்திலிருந்து வருமானம் வந்தால் தான் சம்பளம் என்று சொல்லத்  தெரிந்த  அதிகாரிகள் அந்த வருமானத்தைப் பெற்றுத் தராதது என்? முடியாவிட்டால் அவர்களுக்கு மட்டும் ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும் ? உரிய நேரத்தில் நெல்லை விற்று கோயிலுக்குச் சேர்த்துவிட்டு சிப்பந்திகளுக்கும் சம்பளம் தராமல் இழுக்கடிக்கிறார்கள். டெண்டர் விடுவதில் முறைகேடுகள் செய்யத் தெரிந்தவர்களுக்கு கோயில் திருப்பணிக்கு உதவ மனம் வராது. வெளியார் திருப்பணி செய்து கொடுக்க இவர்களிடம் மண்டியிட்டு அனுமதி பெற வேண்டும். பல ஆண்டுகள் இதற்கு இழுத்தடித்தாலும் எதுவும் செய்ய முடியாது. விரைவாக அனுமதி வேண்டினால் தனியாகக் கவனிக்க வேண்டும் என்பார்கள். இவ்வளவு ஏன்? திருப்பணி நடைபெறும்போது கோவில் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள் கும்பாபிஷேகம் செய்ய அனுமதி பெற வேண்டும் என்பார்கள்.

கோயில்களில் உற்சவ விக்கிரகங்கள் இருந்துவிட்டால் போதும். பாது காப்பு என்ற பெயரில் அத்தனையையும் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இல்லாவிட்டால் களவுபோனால் பொறுப்பு ஏற்பேன் என்று எழுதித் தரும்படி அர்ச்சகரை மிரட்டுவார்கள். சுவாமி என்ற எண்ணமே இல்லாமல் உற்சவர்கள் தர தர என்று இழுக்கப்பட்டு வேனில் ஏற்றப்படுவதைக் கண்டால் கண்ணில் இரத்தம் வடியும். இந்துக்கள் அல்லாதவர்கள் இத்துறையில் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் நாம் எதை எதிர் பார்க்க முடியும் ?

சில நாட்கள் முன்பு தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள கண்டியூரில் பல்லாண்டுகளாகப் பணி செய்யும் வயதான அர்ச்சகரை மிரட்டி இம்மாத முடிவோடு நின்று விடும்படி சொன்னதாகவும், அவரால் பயிற்சி செய்யப்பட்டு சில ஆண்டுகளாகப் பணியாற்றும் இன்னொருவரை அதற்குப் பிறகு தொடர்ந்து பணியாற்றத் கூடாது என்றும் வேறிடத்திற்கு மாற்றல் செய்து விடுவோம் என்றும்  கூறியதாகச்  செய்தித்தாள் மூலம் அறிகிறோம். இவ்வாறு செய்வதற்கான அதிகாரம் அற நிலையத்துறைக்கு உண்டா என்பதை நீதி மன்றமே தெளிவு படுத்த வேண்டும். அறுபதாண்டு ஆன அர்ச்சகரை  வீட்டுக்கு அனுப்புவது என்பதும் அபாண்டமான செயல். இந்த உத்தரவை திரும்பப்பெறுமாறு நீதிபதிகள் நீதி வழங்குவர் என்று நம்புகிறோம்.

மாமனாக வந்து வழக்கு உரைத்த மதுரைப் பெருமானையும், காஞ்சியில் நீங்காது உறையும் வழக்கறுத்தீசுவரப் பெருமானையும், கண்டியூர் வீரட்டேசப் பெருமானையும் வணங்கி , அவன் தாளே துணையாக சென்னியின் மேல் இருத்துவோமாக.   

Tuesday, February 4, 2020

தமிழ் நீச பாஷை என்று யாரும் சொல்லவில்லை



உண்மையை மறைப்பதும், பொய்யைப் பரப்பி அதனை உண்மை என்று நம்ப வைப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், பொறாமை கொள்வதும் ஆணவமும் யாருக்கும் அடங்காத போக்கும் உடையவர்கள் இவ்வாறு மக்களைத் திசை திருப்புவதோடு மாறான வழிக்கும் , மரபு மீறிய செயல்களுக்கும் வித்திடுகிறார்கள். பொய் சொல்லாதவர்களே இல்லாத இந்தக் காலத்தில் விரல் விட்டு எண்ணும்படி பொய் சொல்லாமல் வாழ்ந்த / வாழ்ந்துவரும் ஒருசில  உத்தமர்கள் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள். இப்பொய்களை உண்மை என்று நம்பி அவர்கள் பின் போகிறவர்கள் ஏராளம்.

தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வழிவழியாக மகுடாகமப் படி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுவருவதை அறிந்தும் வீணாகச் சர்ச்சையைக் கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இந்நிலையில் மரபை மதிப்பவர்கள் பல்வேறு ஆதாரங்களைக் காட்டி வாதிடுவதையும் பார்க்கிறோம். இவ்வளவுக்கும் காரணம் மொழி மற்றும் ஒரு இனத்தின் மீது உள்ள துவேஷமே. இதனால் மக்களிடையே பிளவு ஏற்படுத்தி, சமயத்தை சீர்குலைய வைக்கும் வல்லூறுகள் வட்டமிடுவது தெரியவில்லையா ? இந்த ஒற்றுமையின்மைதானே அவர்களுக்குத் தேவைப்படுகிறது !

எவன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று  அளவுக்கு மீறிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா அல்லது தாமாகவே உண்டாக்கிக் கொள்ளப்பட்டதா என்று அறிஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்தத் துவேஷம் பரவப்படுகிறது. விஷத்தை விடக் கொடுமையான வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்கள். நாட்டின் சட்டங்களைத் தமக்குச்  சாதகமாக்கிக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

ஒரு அம்மையார் யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியைக் காண நேரிட்டது. அர்ச்சகர்களையும் தில்லைவாழ் அந்தணர்களையும் சரளமாகச் சாடியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் நீச பாஷை என்று காஞ்சி மகா பெரியவர் சொன்னதாகப் பொய்த் தகவலை அதில் வெளியிட்டுள்ளார்கள். அவரைப் போன்றவர்கள் அதை உண்மை என்றே நம்புவர். ஆனால் பெரியவருக்குத் திருமுறைகள் மீதும் தமிழ் மொழி மீதும் எவ்வளவு பற்று இருந்தது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே அதற்கு விளக்கமாகவே விடை தர  வேண்டியிருக்கிறது.   
   
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனத்திற்குக் காஞ்சிப் பெரியவர் சென்ற போது அங்கிருந்த வேத,ஆகம பாடசாலைகளைப் பார்வையிட்டுவிட்டு, தேவாரப் பாடசாலைக்கும் விஜயம் செய்தார்கள். அந்நேரத்தில் பாடசாலை ஆசிரியர் திரு வேலாயுத ஓதுவாமூர்த்திகள் வெளியில் சென்றிருந்ததால் மாணாக்கர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அங்கிருந்த மாணவர்களிடம் அளவளாவிய பெரியவருக்கு , யாராவது ஒரு மாணவன் மூலம்  அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகம் பாடச் சொல்லிக் கேட்கும் விருப்பம் ஏற்பட்டது. ஒரு மாணவன் தான் கற்றிருந்த ஒரு திருத்தாண்டகத்தைப் பாடத் துவங்கினான்.

 அப்பாடல் திருப்புன்கூர் என்ற தலத்தின் மீது அமைந்தது. அவன் பாடிய  அடியாவது :

“ கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை ;  கடுநரகம் சாராமே காப்பான் தன்னை “

என்பனவாகும். அதற்கு அடுத்த வரி மறந்து விட்டபடியால் தயங்கி நின்றான். ஆனால் பெரியவரோ அந்த இரண்டு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டார். அதே நேரத்தில் பாடசாலை ஆசிரியர் திரும்பி வந்துவிட்டார். அவர் கண்ட காட்சி, மாணவன் பாடிக் கொண்டிருக்கும் இரண்டு வரிகளைக்  கேட்டவாறு பெரியவர் உருகியவராக நின்றிருந்தார் என்பது. அவரது  கண்கள் நீரைப் பெருக்கியவாறு இருந்தன. மற்ற வரிகளை ஆசிரியர் பாடிப் பூர்த்தி செய்தார் . அதன் பின்னர் தருமபுர ஆதீனம் கயிலைக் குருமணி அவர்களை சந்தித்து அளவளாவும்போது, பெரியவர், “ உங்கள் பாடசாலை மாணவன் பாடிய தாண்டக வரிகள் கண்ணீர் வரச் செய்து விட்டன “ என்றாராம். இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தவர் திருமுறைக் கலாநிதி தருமபுரம் சுவாமிநாத ஒதுவா மூர்த்திகள் அவர்கள்.

மற்றொரு சமயம் காஞ்சியில் பெரியவரைத் தரிசிக்கச் சென்றபோது அங்கிருந்தவர்களைப் பார்த்து, “ சந்தோக சாமம் ஓதும் வாயானை.. திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே “ என்ற வரியைச் சொல்லி அவ்வரிகள் எதில் வருகின்றன எனக் கேட்டுப் பிறகு தானே அதற்கு விளக்கமும் அளித்தார். ஒருமுறை காஞ்சிக்கு ஒரு ஓதுவாமூர்த்திகள் திருவீழிமிழலையிலிருந்து வந்திருந்தார். அவரைச் சுட்டிக் காட்டியவ பெரியவர், “ இவர் ஊர் பதிகத்தில் மட்டுமே பரமேசுவரன் இளநீர் அபிஷேகத்தை ஏற்பதாக வருகிறது “ என்று எடுத்துக் காட்டினார்கள். “ நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண் “ என்று அப்பாடலில் வருகிறது.  

அருமை நண்பர் டன்லப் கிருஷ்ணையர்  அவர்கள் பெரியவரிடம் மிகுந்த பக்தி உடையவர். அதே அளவு பக்தி அவருக்குத் திருமுறைகளிடமும் இருந்தது. தனது இல்லத்தில் பூஜை அறையில் ஓவியரைக் கொண்டு நால்வர் படங்களைச் சுவற்றில் வரைந்திருந்தார். இவ்வளவு ஈடுபாடு வரக் காரணமாக இருந்தவர்களே பெரியவர் தான். ஒருமுறை ஆந்திராவிலுள்ள கார்வேட்நகரில் பெரியவர் தங்கியிருந்தபோது,  கிருஷ்ணையர் தரிசனத்திற்காகச் சென்றிருந்தார். விடை பெற வேண்டி நின்றபோது அவரிடம், “ இன்னும் சில நாட்கள் நீ இங்கேயே தங்கி இருந்து என் பக்கத்தில் அமர்ந்து தேவாரத்தை வாசி . நான் கேட்கிறேன் “ என்றாராம். அப்படியே கிருஷ்ணையர்,தான் கொண்டு சென்ற தேவாரப்புத்தகத்தை வாசித்துக் கொண்டு வரும்போது அருமையான விளக்கங்கள் பெரியவரிடமிருந்து வருமாம்.

ஒரு நவராத்திரியின் போது பெரியவர்கள் உத்திரவுப்படி பத்து நாட்களும் திருவாலங்காட்டில் தங்கியிருந்து தேவாரம்,திருவாசகம் முழுவதையும் பாராயணம் செய்தோம். அத்தலத்தில் தலையால் நடந்து வந்து காரைக்கால் அம்மையார் தரிசித்தபடியால், பெரியவர்கள் அங்கு கால்கள் நிலத்தில் படக் கூடாது என்று தனது கால்களைத் துணியால் கட்டியபடி நடந்து வந்ததாகக்   கிருஷ்ணையர் கூறினார். காரைக்கால் அம்மையாரது சரித்திரத்தை வந்திருந்தவர்களும் தானும் கேட்குமாறு தரிசிக்க வந்த ஒருவரை விட்டுச் சொல்லச் சொன்னதைக் கண்டு அனுபவித்திருக்கிறோம். ஒருவர் அப்படிச் சொல்ல ஆரம்பித்தபோது பெரியவர் குறுக்கிட்டு, அம்மையாரது தகப்பனார் பெயரையும் சொல்லும்படி சொன்னது, பெரியபுராணத்தை எவ்வளவு உயர்வாகப் பெரியவர் போற்றியுள்ளார் என்பது தெரிந்தது.

பெரியவரின் ஏற்பாட்டின்படி, சீர்காழியில் திருஞானசம்பந்தர் அவதரித்த இல்லம் மடத்திற்கு வாங்கப்பட்டு அங்கு பூஜைகளும் ஆகமம் மற்றும் தேவார பாடசாலை நடைபெற்று வருகிறது. காஞ்சி மடம் எத்தனையோ ஒதுவாமூர்த்திகளை கௌரவித்திருக்கிறது. சீனப் படை எடுப்பின்போது நாட்டுக்கு வந்த ஆபத்து நீங்கும்படி அனைவரையும் ஞான சம்பந்தர் அருளிய “ வேயுறு தோளி பங்கன் “ எனத் தொடங்கும்  தேவாரப்பதிகத்தைப் பாராயணம் செய்யச் சொன்னதும் திருப்பாவை- திருவெம்பாவை மாநாடுகள் நடத்தியதும் நாடறிந்ததே .
அதேபோல் பெரியவர்கள் தமிழறிஞர்களோடு அளவளாவுவதும் அவர்களைக் கௌரவிப்பதும்  அடிக்கடி நிகழ்ந்து வந்தன. தமிழ்த்தாத்தா உ.வே.சா , கி.வா.ஜ. வாரியார் ஆகிய தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நீதிபதி இஸ்மாயில் அவர்களிடம் கம்பராமாயணம் பற்றிப் பெரியவர்கள் நீண்ட நேரம் உரையாடியதும் உண்டு.

தமிழ் மீதும் திருமுறைகள் மீதும் பெரியவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில எடுத்துக்காட்டுக்களே இங்கு தரப்பட்டுள்ளன.தெய்வத்தமிழை யாராவது நீச பாஷை என்று சொல்ல முடியுமா? வீணான கட்டுக் கதைகளைக் கிளப்பிவிட்டுக் குளிர்காய்பவர்களை இனியேனும் தமிழுலகம் அடையாளம் காண வேண்டும்.     
     
“ உரையினால் வந்த பாவம் “ என்பார் சம்பந்தர். தேவாரம் படித்த அந்த அம்மையார் இதைப் படித்திருக்கக் கூடும். பொய்யை அள்ளி வீசிப் பாவத்தைச் சுமப்பானேன்!  “ பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய் அன்றே “ என்பது அப்பர் பெருமான் வாக்கு. எல்லாப் பிழையையும் பொறுக்கும் பெருமான் இந்தப்பிழையையும் பொறுத்தருளி நல்வழி காட்ட வேண்டும்.

Tuesday, January 21, 2020

தஞ்சைப் பெரிய கோவில் சர்ச்சை


                 தஞ்சைப் பெரிய கோவில் சர்ச்சை
                                         சிவபாதசேகரன்

எதற்கெடுத்தாலும் சர்ச்சையைக் கிளப்பி எதிர்ப்பைத் தெரிவித்து மக்களைக் கவரும் முயற்சி சிறிது காலமாகவே நாடு முழுதும்  நடந்து வந்தபோதிலும் தமிழ்நாட்டில் மொழி ,இனம் ஆகிய பெயர்களில் அதிகமாகவே காணப்படுகிறது. சமய உலகையும் இது விட்டு வைக்கவில்லை. இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வரும் 5.2.2020 அன்று தஞ்சைப் பெரிய கோவிலில் நடைபெற இருக்கும் வேளையில் அதனைத் தமிழ் மொழியில் தான் செய்ய வேண்டும் என்று அரசியல் வாதிகள் சிலரும் ஆத்திகத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இதற்கான  அடிப்படைக் காரணங்களைப் பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்ப்புக்கான முதல் காரணம் வடமொழித் துவேஷம். இதற்கு  முன்னர் நடைபெற்ற கும்பாபிஷேகங்கள்  தமிழ் மொழியில்  செய்யப்பட்டனவா  என்று முதலில் இவர்கள் விளக்கட்டும்.
கடவுள்  இல்லை என்று சொல்பவர்களுக்கு ஏன் இந்த அக்கறை ? பின்புலத்திலிருந்து தூண்டி விடும் தீய சக்திகள் இருக்கிறார்களா? அதனால் எவ்வகையில் இவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள் ?
தமிழில் கும்பாபிஷேகம் செய்வதற்கான விதிகள் அடங்கிய பழங்கால நூல்கள் இல்லை என்பதால் அது மொழியின் குறை இல்லை. வடமொழியில் உள்ள ஆகமங்களை இத்தனை காலமும் பின்பற்றிவிட்டு இப்பொழுது தமிழில் செய்தாலென்ன என்று கேட்பதால்   சர்ச்சையைக் கிளப்பவேண்டும் என்ற ஒரே நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஊர் இரண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்று சொல்வார்கள். வெறும் வாயையே மெல்லும் தொலைக் காட்சிகளுக்கு அவல்  கிடைத்துவிட்டது. விவாதப்பொருள் ஆக்கி மக்களை வேடிக்கை பார்க்கச் செய்கிறார்கள்.

வைணவக்கோயில்களிலும் இதுபோலவே திவ்வியப்பிரபந்தம் மூலம் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். கோர்ட்டுக்கும் போவார்கள். தடை தரத் தயாராக நீதி மன்றங்கள் இருக்கும் நிலையில் இவர்கள் எண்ணியது எளிதாக நடைபெற்று விடும்.

கோயில் சொத்துக்களைத் திருடுபவர்கள் குரல் கொடுப்பதைப் பார்த்தால் திருடனை விரட்டிக்கொண்டு ஒடுபவர்களோடு உண்மைத்  திருடனும், “ திருடன்,திருடன் “ என்று கூவிக் கொண்டு அவர்களோடு ஓடுவது போல இருக்கிறது.

ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேத மந்திரங்களால் செய்யப்படுவது கிரியை. ஆனால் திருமுறைகள் என்பவை பக்தி இலக்கியங்கள். இறைவனைப் போற்றித் துதிப்பனவாக நமக்குக் கிடைத்த அரும் பொக்கிஷங்கள். நமக்கு இரண்டும் வேண்டும் என்று சொல்வதே உண்மையான அடியார்களுக்கு இலக்கணம். “ ஓம் என்று மறை பயிலும் “ என்றும்   “ ஆகமமாகி அண்ணிப்பான் “ என்றும் “ ஆகமசீலர்க்கு ஓர் அம்மானே “ என்றும் வரும் திருமுறை வாக்கியங்கள் ஆகமம் அருமறைப் பொருளாவதைச் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழன் கட்டிய கோயிலில் வடமொழி எதற்கு  என்பவர்கள் , மகுடாகமத்தைப் பின்பற்றிக்  கும்பாபிஷேகம் செய்ததாக இராசராசனே கல்வெட்டில் பொறித்து வைத்திருப்பதைப் பார்த்தாவது, அம் மாமன்னன் தமிழையும் வடமொழியையும் பேதமின்றிப் பேணியதை அறிந்து கொள்ளலாமே . பெருவுடையார் என்ற பெயரை பிரகதீஸ்வரர் என்று மொழி பெயர்த்து விட்டார்கள் என்று கொந்தளிப்பவர்கள் ராஜராஜன் என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்பதை விளக்கட்டும்.

தமிழில்  பற்று இருப்பதைப் போலக் காட்டிக் கொள்பவர்களில் கோவில் பக்கமே வராதவர்களும் தேவாரத் திருமுறைகளைக் கற்காதவர்களும் உண்டே ! இந்த லட்சணத்தில் விவாதம் செய்ய மட்டும் முந்திக் கொண்டு வருவது பரிதாபத்திற்குரியது. தமிழையே தாங்குவது போல நடிப்பவர்கள் பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை பற்றி ஏன் பேசுவதில்லை? அது வியாபாரம் என்ற காரணத்தினாலா 

வைதீகமும் சைவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. திருஞான சம்பந்தரது  திருவவதார நோக்கத்தைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் , “ வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க “ என்று தெளிவு படக் கூறியுள்ளார்.  மேலும் ,    வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்  “ என்று இறைவனைத் தேவாரம் துதிக்கிறது.   

உள்நோக்கம் இல்லாமல் இவர்கள் ஆகம வழியை நிந்தித்து எதிர்க்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இக்கோயில் பரம்பரைத்  தர்மகர்த்தாக்களான தஞ்சாவூர் சமஸ்தானத்திடமும், மத்தியத் தொல் பொருள் ஆராய்ச்சித் துறையிடமும் உள்ளது. தவிரவும் உலகப் பாரம்பர்ய சின்னமாகவும் போற்றப்படுகிறது. தமிழன் கட்டிய கோயில் என்றும்,திராவிடக் கலைக்கூடம் என்றும் பெருமிதம் கொள்வதில் தவறில்லை. கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் முதல் கோவிலுக்கு வருகை தரப் போகிறவர்கள் பக்தர்களும், கலைப் பிரியர்களும் மட்டுமே. இந்த எதிர்ப்பாளிகளின் குரல்கள் ஓய்ந்து விடும். இதற்குத்தான் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அதற்குப்பின் கோவிலைப் பற்றிக் கவலைப் படாமல் வேறெங்காவது நாத்திகம் பேசியும் , வடமொழியை இழித்துப் பேசியும் வயிறு வளர்க்கும் பிறவிகள் இவர்கள் . இந்த ஈனப் பிழைப்பு இவர்களுக்குத் தேவையா ?  இறைவன் அவர்களுக்கு நல்ல அறிவை வழங்கட்டும்.
எத்தனையோ பழங்காலக் கோயில்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகக் கும்பாபிஷேகத்திற்காகக் காத்திருக்கும்போது, இருபத்துமூன்று  ஆண்டுகள் காத்திருந்ததோடு இன்னும் சற்றுக் காத்திருந்து மரபு வழியில் கும்பாபிஷேகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் இந்த எதிர்ப்புக்களை அடுத்த தலைமுறையினர் எளிதாகச்  சமாளித்து விடுவர். தடைக்கற்கள் தானாகவே மாண்டுவிடும். இல்லையேல் தகர்த்தெறியப்படும். அதுவரையில் பொறுமை காப்பதோடு அப்பொன்னான தருணம் சீக்கிரமே வருமாறு எல்லாம்வல்ல பெருவுடையாரைப் பிரார்த்திக்கிறோம்.  


Wednesday, November 20, 2019

பெண்கள் பாதுகாப்பு

எல்லாம் வல்ல சித்தர்,மதுரை; வலைத்தளப் படம் 

அண்மையில் ஒரு நீண்ட கால நண்பரைச்  சந்திக்க நேர்ந்தது. மனிதர் நல்லவர் மட்டும் அல்ல. எதையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுபவர். இத்தனைக்கும் ஒரே இடத்தில் இருக்காமல் பல ஊர்களுக்குப் பிரயாணம் செய்து கொண்டே இருப்பவர். இரவும் பகலும் நாட்டு நலன் பற்றியும், மக்களின் நல்வாழ்வு ,நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவர். இன்னும் சொல்லப்போனால் இவர் போன்ற சமூக அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது அரிது. தகவல்களைப் பகிர்வதால் ஆகப்போவது பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், சிறிதளவாவது மாற்றம் உண்டாகாதா என்று ஏங்குபவர் இவர்.

அன்றைய தினம் அவர் பேசியது பெண் பாதுகாப்பு பற்றியது. நானும் உற்றுக் கேட்கலானேன். “ இன்றைக்குப் பெண் சமுதாயம் சீரழிவை நோக்கி அடி எடுத்து வைத்திருப்பது ஏன் தெரியுமா? “ என்று கேள்வியை எழுப்பினார். எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேட்கிறாரே என்று எண்ணினேன். ஒருவழியாக சமாளித்துக் கொண்டு, “ அதை உங்கள் வாயிலாகத் தான் சொல்லுங்களேன்,கேட்கிறேன் “ என்றேன்.
அடுத்த கணம் நான் எதிர்பாராத விளக்கம் அவரிடம் வெளிப்பட்டது. “ பெண்களின் உயர் கல்வியும், வேலைகளுக்குச் செல்வதுமே “ என்றார் அவர். அதற்கு நான், “ பெண்முன்னேற்றம், ஆண்களுக்குச்  சரி நிகர் சமானம் ,சொந்தக் காலில் நிற்பது போன்ற பல காரணங்கள் இருக்கும்போது இப்படிச் சொல்கிறீர்களே “ என்றேன் நான். “ குறுக்கிடாமல் இருந்தால் விளக்கமாகச் சொல்கிறேன்” என்றார் அவர். நான் அதற்கு ஒப்புக்கொண்டபின் மிகப் பெரிய விளக்கம் தந்தார்.

“ மனிதன் தான் வாழும் காலத்திற்குள் படிக்க வேண்டியது தான்; சம்பாதிக்க வேண்டியது தான்; இந்தப் பிறவிக்கான செலவினங்களை எதிர்கொள்ள சேமித்துக் கொள்வதும் நியாயம் தான். இப்படி இருந்த பாரத தேசம் தனது அடிப்படைக்  கலாசாரத்தையும், பண்பாட்டையும் காசுக்காக இழக்கத் தொடங்கியது முதல் சீரழிவு ஆரம்பித்து விட்டது. முதலில் இதைத் துவக்கி வைத்தவர்கள் ஆண்கள் தான். ஆனால் நம் நாட்டின் ஸ்த்ரீ தர்மம் மிகவும் வலிமையானது. அது மட்டுமே இன்றளவும் நமது நாட்டைக் காப்பாற்றி வருகிறது. இந்த தர்மம் வலிமை இழக்கும்போதுதான் சீரழிவு வேகப்படுத்தப்படுகிறது “ 

“ பெண்களின் உயர் கல்வி அவர்களுக்கே ஆபத்தாக முடிவதைப் பலர் யோசிப்பதில்லை. இவ்வளவு ஏன் ? இந்தக் கருத்தை எதிர்ப்பவர்களே இன்று அதிகம். விண்வெளி ஆராய்ச்சி முதல், பள்ளிக்கூட ஆசிரியை வரைப் பெண்கள் பதவி வகிக்காத இடமே இல்லை என்றுகூடக்  கூறலாம். உண்மைதான். வாழ்க்கை என்பது வெறும் படிப்போடும் சம்பாதிப்பதோடும் முடிந்து விடவில்லை. பெண்களுக்கென்றே சமுதாயத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த கடமைகள் உண்டு. “

“ ஒருவர் கேட்டார், “ திருமணம் என்பது அவசியமா “ என்று. விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ அவசியம் இல்லை . ஆனால் ஆறறிவுள்ள மனிதன் ஒழுக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறான். இயற்கையிலேயே பலஹீனம் வாய்ந்தவர்கள் பெண்கள் என்று மேற்கத்தியரும் சொல்கின்றனர். ஆகவே ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டியவளாகிறாள். அந்தக் காலத்தில் வயது வந்த பெண்ணைத் தகுந்த வரனுக்கு சிறு வயதிலேயே மணம் செய்து வைத்தார்கள். காரணம், மறந்தும் தவறான வழிக்குப் போகாமல், தன்னை நம்பி வந்தவளைக் கடைசிவரை கை விடாமல் காப்பாற்றுவேன் என்று அக்னி முன்பாக சபதம் செய்ததோடு நின்றுவிடாமல்  அந்தப் பொறுப்பை ஆயுட்காலம் முழுதும் கடைப்பிடிக்கவேண்டியது ஒவ்வொரு ஆணின் கடமை என்பதால்தான் “ இதைத்தான் கால் கட்டு என்றார்களோ “ என்று நான் கேட்டேன். சிரித்துக் கொண்டே ,“ குறுக்கே பேசக் கூடாது என்று சொன்னேனே” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ சிலர் நினைக்கலாம். மேல்கல்வியால் அறிவுத்திறன் அதிகரிக்கிறது என்று. மறுக்கவில்லை. அதற்காகப் பணயம் வைக்கவேண்டியத்தை நினைத்தால் அச்சப்படாமல் இருக்க முடியாது. கல்லூரிகளிலும், வேலைசெய்யும் இடங்களிலும் பெண்கள் ஒழுங்கீனத்தில் தள்ளப்படுவதாகச் செய்திகள் அடிக்கடி வருகின்றன. பள்ளிக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியையிடம் முறையின்றி நடந்ததாகச் செய்தி வந்ததே, படித்திருப்பீர்களே !  எங்கோ எப்போதோ நடைபெறும் இதுபோன்ற சம்பவத்திற்காக ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அப்படி இணைத்துப் பார்க்கலாமா என்று நீங்கள் கேட்கலாம். இதே சம்பவமே எல்லா இடங்களிலும் நடை பெறாமல் இருக்கலாம். ஆனால் வேறு வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் மறுக்க முடியுமா ? சர்வகலாசாலைகளிலும்,கல்லூரிகளிலும் நடைபெறும் முறைகேடுகளுக்குக் கவலைப்படப்போவது யார் ? குடிப்பதையும் புகை பிடிப்பதையும் குட்டிச்சுவராகப் போன ஆண்கள் மட்டுமே செய்து வந்த காலம் போய், பெண்களும் அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படிப்பட்ட கல்வியை நம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டுமா?  சம்பாதிக்கக் கிளம்பி விட்ட  பெண்கள் படும் வேதனைகள் பலப்பல. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதெல்லாம் மேற்கத்திய நாகரீகத்திற்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். “

சிறிது பெருமூச்சு விட்டு விட்டு மேலும் தொடர்ந்தார் “  தீ சுடும் என்று தெரிந்தும் அதில் கை விட்டுப் பார்ப்பது போலத்தான் இதுவும். சில துறைகள் ஆபத்தானவை என்று தெரிந்தும், பேருக்கும் புகழுக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு வலையில் விழும் பெண்கள் ஏராளம். பிறகு வருத்தப்பட்டு என்ன பயன் ? வாழ்க்கை சீரழிந்தது அழிந்ததுதான். 

இதில் முக்கியமான பிரச்னை என்ன தெரியுமா ? முப்பது வயதாகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் பெண்களும் ஆண்களும் தான். முன்பெல்லாம் வரதக்ஷினை மட்டுமே முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் இப்போதோ பேராசை மட்டுமே முட்டுக்கட்டை ஆகி விட்டது. பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் டாக்டராகவோ என்ஜினியர்களாகவோ ஆக வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு ஆனவர்களின் ஆண்டு வருமானம்  சில ஆண்டுகளுக்குள்ளாகவே கணிசமாக உயர்ந்து விடுகிறது. தனக்கு மேல் சம்பாதிப்பவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் காத்திருக்கும் நிலை!  அதற்கேற்ற வரன் கிடைக்காவிட்டால் கல்யாணமே ஆகாமல் நிற்கும் ஆபத்தான நிலை . இப்படி இருக்கும்போது கலை, மற்றும் விஞ்ஞானம் பயின்ற ஆண்களுக்கோ வரன் கிடைப்பது அதை விடப் பரிதாபமாக ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் விரக்தியால் வழி மாறிப் போவதும் நடக்கத் தொடங்கி விட்டது. பெற்றோர்கள் மட்டும் என்ன செய்வார்கள், பாவம். தாங்கள் செய்த தவற்றின் பலனைக் கண்ணெதிரே அனுபவிக்கிறார்கள் “  

“ காலம் காலமாகச் செய்து வந்த தொழில்களும் உயர் கல்வி வழங்குவதால் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றன. அவர்களும் மனிதர்கள் தானே! என் குழந்தைகளாவது படிக்கட்டும். இந்தத் தொழில் என்னோடு போகட்டும் என்ற மனோபாவம் இப்போது எல்லோருக்கும் வந்து விட்டது. நாற்று நடுவதற்கு ஆட்கள் இல்லாததால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் என்று செய்தி  வருகிறது. விவசாயம் செய்தால் நஷ்டம் என்ற எண்ணமும் வேறு வேலைக்குப் போனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதும், சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைக்கும் என்ற எண்ணமும் இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் தான் செய்யும் தொழில் பிற தொழில்களுக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல என்ற எண்ணமாவது இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் காலம் போனால், விவசாயம் மட்டும் அல்ல, கொத்து வேலை, நகை வேலை, மர வேலை, வீட்டு வேலை போன்ற எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைக்கப்போவதில்லை. “

“ கோவில் அர்ச்சகர்களும் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புவதையே விரும்புகின்றனர். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் அவர்களது பெண்களோ  அதே குலத்துப் பையன்கள் வேலைக்குச் செல்வதையே விரும்புகிறார்களே தவிர,  கோவில் பூஜை செய்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் கோவில்களில் சிவாசார்யர்களைப் பார்ப்பது துர்லபமாகி விடும்போல இருக்கிறது. சுய நலம் கண்ணை மறைக்கிறது. நாடு தனது கலாசாரத்தை இழந்து சீரழிவைக் காணும் போது சகிக்க முடியாத வேதனை மேலிடுகிறது “ என்றார் நண்பர். ஆதற்கு மேல் அவரால்  பேசமுடியவில்லை. தொண்டை தழுதழுத்தது. கண்களில் நீர் முட்டியதைக் கண்டேன்.

எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தனி நபர் சுதந்திரம் என்று முழக்கமிடும் இந்தக் காலத்தில் இவரது கருத்துக்களை யார் ஏற்கப்போகிறார்கள் ? அவநம்பிக்கையே நாளுக்கு நாள் மேலோங்குகிறது. நெறிப்படுத்த அரசனோ, குருமார்களோ இல்லாத காலத்தில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? என்னைத் திருத்த நீ யார் என்பார்கள். நண்பரது வேதனை புரிந்தும் தீர்வை இறைவனிடமே விட்டு விடுகிறோம் . அதுவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கி இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். எல்லாம் வல்ல சித்தராக மதுரையில் எழுந்தருளியது போல் இன்றே , இப்போதே எழுந்தருளிக் காக்க வேண்டும் என்று அந்த சித்தநாதப் பெருமானிடம் வேண்டுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.
       

Saturday, October 26, 2019

ஆசிச் செய்தியோடு நிறுத்திக் கொள்வதா ?

கிராமங்களின் இன்றைய நிலை
தீபாவளித் திருநாள் வந்துவிட்டால் வானொலி, தொலைக்காட்சி ஆகியவை மடாதிபதிகளின் ஆசிச் செய்திகளை ஒலி / ஒளி பரப்புவது என்பது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. சற்றுக் கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். ஆண்டுதோறும் இந்த ஆசிச் செய்திகளில் நரகாசுரன் கதை , எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை உடுத்தல், பட்டாசு வெடித்தல், இனிப்புப் பலகாரங்கள் உண்ணுதல் ஆகியவற்றோடு தீயன கழித்தல், நல்லன பெற வேண்டுதல் ஆகிய கருத்துக்கள் திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லப்படுகின்றன. இவை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இவை எல்லாம் மக்கள் செவியில் எவ்வளவு தூரம் ஏறிப் பயன் விளைவிக்கின்றன என்றுதான் தெரியவில்லை. காலையில் தீபாவளி ஆனவுடன் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே வானொலியிலும் தொலைக் காட்சியிலும் இவற்றைக் கேட்கும்போது, அப்பலகாரங்கள் வயிற்றுக்குள் சென்று கரைவதற்குள் ஆசிச் செய்திகளும் கரைந்து போய் விடுகின்றனவோ என்று தோன்றுகிறது. நல்லுபதேசங்கள் வீணாகப் போக  விடலாமா ?

இன்றைய கால கட்டத்தில் மடாலயங்கள் ஆசிச் செய்தி வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளலாமா என்பது கேள்வி. களப்பணி ஆற்றுவதற்கு யார் தான் முன்னோடியாக நின்று மக்களுக்கு வழி காட்ட முடியும் ? பெரிய நகரங்களுக்கு விஜயம் செய்வதால் ஆதாயம் இருக்கக்கூடும். அதை இங்கு விவரிக்கத் தேவை இல்லை. அதே சமயத்தில் மக்களிடையே ஏற்படும் கலாசாரச் சீரழிவுக்கு யார் பொறுப்பேற்பது? கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டால் மட்டும் போதாது. மற்ற நாட்களில் மக்கள் திசை மாறிச் செல்வதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதா ?

நாட்டின் நிர்வாகம் மக்கள் கையில் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு தேர்தலை நோக்கியே காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதற்காகக் கவலைப் படப் போவதில்லை. ஒருவேளை அவர்களில் ஒரு சாரார் கவலைப்பட்டால் எதிர் தரப்பினர் மக்களைத் தன் பக்கம் ஈர்த்து விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஆகவே அரசும் நீதி மன்றங்களும் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யத் தயாராக இல்லை. ஆகவே மக்களை நெறிப்படுத்தும் முக்கிய பொறுப்பை மடாதிபதிகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆனால் நடப்பது என்ன ? மடத்துப் பூஜை, நிர்வாகம், பெரிய மனிதர்களை சந்தித்தல், அவ்வப்போது நூல் வெளியீடு செய்தல், பிரபலங்களை மடத்து விழாக்களுக்கு அழைத்தல், கல்விக் கூடங்கள் அமைத்தல் , தங்களது நிர்வாகத்தில் உள்ள கோயில்களுக்கே சௌகரியப்பட்டபோது திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்தல் – இதைத்தானே பார்க்கிறோம். நமது கிராமங்களுக்கு விஜயம் செய்து இரண்டு நாட்களாவது தங்கி அங்குள்ள மக்களுக்கு நல்லுபதேசம் செய்து அவர்களைத் திசை மாறாமல் இருக்கச் செய்யலாம் அல்லவா ? சின்னஞ்சிறு கிராமங்களின் இன்றைய நிலையைப் பார்த்தவர்களுக்கே தெரியும். பூட்டிக் கிடக்கும் கோயில்களும், தினசரி வழிபாட்டின் முக்கியத்துவம் தெரியாத மக்களும் , திசை மாறிய மக்களும், அவர்களின் அடையாளச் சின்னங்களுமே எஞ்சி நிற்கின்றன என்பதை .  இவற்றிற்குத் தாக்குப்பிடிக்கமாட்டாமல் கிராமத்தைக் காலி செய்து கொண்டு வெளியேறுபவர்களைப் பற்றிக் கவலைப் படுபவர்களே இல்லையே !

மடாதிபதிகள் கால் நடையாகத் தங்கள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அங்குள்ள கோயில்களையும் தரிசித்துத்  தேவையான பணிகளை மேற்கொள்ளச் செய்வது அப்போது எளிதில் சாத்தியமாகிறது. நித்திய பூஜைகளையும் அங்கிருந்தே செய்யலாம் . இவ்வாறு பல மடாதிபதிகள் முன்பெல்லாம் செய்ததாக நாம் அறிகிறோம்.  இப்போது அவ்வாறு பின்பற்றப்படாமைக்குக் காரணம் புலப்படவில்லை. தங்களது மாதாந்திர ஜன்ம நக்ஷத்திரத்தன்றாவது நேரிடையாக ஒரு ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வதோடு அவ்வூர் மக்களுக்கும் தினசரி வழிபாட்டின் முக்கியத்தை எடுத்துரைக்கலாம். மற்ற நாட்களில்  மடத்தில் உள்ள சிப்பந்திகளோ, தம்பிரான்களோ அருகாமையில் உள்ள கிராமக் கோயில்களுக்குச் சென்று ஊர் மக்களை ஈடுபடச் செய்யலாம். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளுக்கும் நடந்து சென்று மக்களைச் சந்தித்து நம் கலாசாரம் மேலும் சீரடையச் செய்யலாம். திருக்குளப்பராமரிப்பு , கால்நடைப் பராமரிப்பு ஆகியவை பற்றி எடுத்துச் சொன்னால் மக்கள் நிச்சயம் வரவேற்பர். மறுமுறை அங்கு சென்றால் மாற்றத்தைக் காண வேண்டும். அதற்கான இலக்கையும் நிர்ணயிக்கலாம்.

இப்படி எழுதுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறோமே, அவையெல்லாம் கண்ணில் படவில்லையா என்று கேட்பார்கள். என்ன செய்வது ? அவையெல்லாம் இன்று பாமர மக்களை விழிப்படையச் செய்யவில்லையே ! இந்த ஆதங்கமே இவ்வாறு எழுதத் தூண்டியதே தவிர நமக்கு எந்த ஒரு ஸ்தாபனத்தையும் குறை கூறும் நோக்கம் இல்லை. அவ்வாறு குறை கூறி ஆகப்போவதும் ஏதும் இல்லை. சுவாமி பார்த்துப்பார் என்று கைகளைக் கட்டிக் கொண்டிருக்கவும்  நம்மால் முடியவில்லை ! உண்மையாகவே சுவாமிதான் அருளவேண்டும்.