Wednesday, November 25, 2015

ஆண்டவனுக்கு அழுக்கு ஆடையா ?

ஐயோ தெய்வமே உனக்கா இப்படிப்பட்ட ஆடை!
" கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு "  என்பார்கள். முதலில் உடையிலும் உடலிலும்  அழுக்கடையாமல் பார்த்துக்   கொண்டால் உள்ளத்தில் அழுக்கடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அடுத்ததாக ஏற்பட வேண்டும். அவ்வாறு அந்த எண்ணம் ஏற்பட்டவுடனேயே இறைவனது அருள் அதற்குத் துணை செய்கிறது. " அழுக்கடையாமல் ஆண்டு கொண்டு அருள்பவன் " என்று இறைவனைத் துதிக்கிறார்  மாணிக்க வாசகர். இது உள்ளத்து அழுக்கைக் குறிப்பது. அகத்தில் உள்ள அழுக்கு களையப்பட்ட பின்புதான் அகக் கண் திறக்கப்படுகிறது. நம் உடல்,பொருள்,உடைமை எல்லாம் அவன் தந்தது என்ற ஞானம் பிறக்கிறது.

ஞானம் கைவரப்பெற்ற ஆன்றோர்கள் வகுத்துத் தந்த பூஜை முறைகளின் படி  நாம் நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஐசுவர்யமான  பசுவிடமிருந்து பெறப்பெற்ற பொருள்களால் இறைவனுக்கு அபிஷேகிக்கிறோம். பழங்கள்,மலர்கள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றை அர்ப்பணிக்கிறோம். இவ்வாறு நன்றி தெரிவிக்கும் செயலாக நமது பூஜை அமைந்துள்ளது. இந்நிலை வந்துவிட்டால் உள்ளம் பெரும் கோவிலாக மாறுகிறது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும்  கொண்டு  அவனுக்குச் சேவை செய்து  அவற்றை அர்ப்பணிப்பது என்ற  உன்னத நிலையை  அடைவது  சாத்தியமாகிறது.

பல கோவில்களில் நாம் இன்று காண்பது என்ன ?  அதிலும் குறிப்பாகக் கிராமக் கோயில்களில் காண்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மூலவருக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்கள் முறையாகத் தோய்க்கப்படாமல் எண்ணெய் பிசுக்கு எடுத்துத்  துர்நாற்றம் வீசுகிறது. அபிஷேகம் ஆனவுடன் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே வஸ்த்திரம் மீண்டும் போர்த்தப்படுகிறது.

அகிலாண்ட நாயகியை இப்படியா அலங்கரிப்பது!
சிவாசாரியப்பெரு மக்களைக்  கேட்கிறோம். இது போன்ற எண்ணெய் நாற்றத்துடனும் அழுக்குடனும் இருக்கும் வஸ்திரத்தை நாம் ஐந்து  நிமிடமாவது உடுத்திக்கொள்வோமா?  மாற்று வஸ்திரத்தைப் பயன்படுத்தி விட்டு அழுக்கு வஸ்திரத்தை அலசித் துவைக்க ஏற்பாடு செய்யக் கூடாதா? அதற்கு ஆளுக்கு எங்கே போவது என்ற கேள்வி உடனே எழும். நமக்கு அந்த நிலை   எற் பட்டால் நம் கை தானே நமக்குத் துணை செய்கிறது ? பிறரையா நாடுகிறோம்?  சுவாமியைக் கல்லாகப் பார்த்தால் அலட்சியமே மிஞ்சும்.

ஒருக்கால் வேறு வஸ்திரமே இல்லாத கோயிலாக இருந்தால் சேவார்த்திகளாகிய நாம் முதல் வேலையாகப் புதிய வஸ்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டியதை நமது கடமையாகக் கருதவேண்டும். அப்படிச் செய்தால் அந்த சிவ தருமத்தின் பலனாகப்   பல தலைமுறைகளுக்கு உணவுக்கும்  உடைக்கும்  பஞ்சம் இல்லாதபடி நம்மைத் தூக்கி விடும். இன்று முதலாவது செய்யத் துவங்கலாம் அல்லவா?  நமக்கு வாங்கிக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளாதபோது நமது முன்னோர் செய்து வந்த இதுபோன்ற தருமங்களையாவது  கை விட்டுவிடாமல் மறுபடியும் துவங்கலாமே! .

 தறி  வைத்திருப்பவர்களும் , ஜவுளிக் கடைக் காரர்களும் இந்த தருமத்தைச்  செய்வது என்று ஆரம்பித்தால் ஒரு கோயிலிலாவது அழுக்கு வஸ்திரத்தோடு தெய்வ வடிவங்களைத் தரிசிக்கும் நிலை ஏற்படாது. பிறருக்கும் அச்செயல் ஈடுபாட்டை வரவழைக்கும். அதற்காகவாவது அன்பர்கள் தங்கள் சுற்று வட்டாரத்திலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று இதுபோன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நமது கோயில்கள் மீண்டும் பொலிவு பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Monday, November 9, 2015

கொட்டும் மழையில் திருவாரூர் கும்பாபிஷேகம்

தமது வாழ்நாளில் ஒருமுறையாவது கும்பாபிஷேக தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் ஏங்கும்  கோயில்களில் திருவாரூரும் ஒன்று.  தியாகேசனின்  ஆழித்தேர்  பவனியைக் காண  ஆயிரமாயிரம் பேர் கூடும் போது கும்பாபிஷேகத்தைக் காண  வருவோரது எண்ணிக்கையை எப்படிக் கணக்கிட முடியும்? மூலாதாரத் தலமான திருவாரூரில் நடக்கும் இவ்வைபவத்தைக் காண வேண்டும் என்று தொலைவிலுள்ள ஊர்களிலிருந்து வருகை தருவோர் ஏராளம்.

பூங்கோயில் எனப்படும் தியாகப் பெருமானது திருக்கோயில் மிகப் பெரியது என்பதால் திருப்பணிகள் ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே துவக்கப்படுகின்றன. முதலில்  ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள் கும்பாபிஷேகத் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேகமாக நடைபெறுவது எல்லா ஊர்களிலும்  நடைபெறுவது தான். ஆனால் இங்கோ ஆழித்தேர் திருப்பணியும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததும் வெள்ளோட்டம் விடப்பட்டது. ( ஆனால்  லட்சக் கணக்கில் செலவழித்துத் தயாரிக்கப்பட்ட தேர், வெளி வீதியில் மழையிலும் வெய்யிலிலும் வீணாவது ஏன் என்பது விளங்கவில்லை)

திருவாரூர் கோயிலில்  உபயதார்களது முயற்சியாலும்,ஆதரவாலும் எல்லா சன்னதிகளிலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. கோபுரங்களும், விமானங்களும் செப்பனிடப்பெற்று வண்ணப்பூச்சு பூசப்பெற்றுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று யாக சாலை தயாரானது.

திருவாரூர் நகர மக்களும் வெளியூர் அன்பர்களும் கும்பாபிஷேக தினத்தை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்த வேளையில், 8.11.2015 ஞாயிற்றுக் கிழமை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. பொதுவாகக் கும்பாபிஷேகம்  உத்தராயணத்தில்( தை மாதம்  முதல்  ஆனி மாதம் வரை )  செய்வதை சிவாகமங்கள் உத்தமமாகப் பரிந்துரைக்கின்றன. அதிலும் சுக்ல பக்ஷத்தில் ( வளர் பிறையில்) செய்வது உத்தமம் என்கின்றன. ஆனால் இப்போது நடைபெற்றதோ  தட்சிணாயணத்தில் ,கிருஷ்ண பக்ஷத்தில் . இதற்கு ஆயிரம் சமாதானங்களும் விளக்கங்களும் இருக்கலாம்.

கொட்டும் மழையில் கும்பாபிஷேக தரிசனம் 
நடைமுறையில் இப்படித் தேதி நிர்ணயிப்பதால் ஏற்படும்   அசௌகர்யங்களைப் பற்றிச் சற்று சிந்திப்பது நல்லது. ஐப்பசியில் அடை மழை பெய்யும் என்பது எல்லோரும் அறிந்தது தான். அதிலும் இந்தத் தேதியை ஒட்டி தீபாவளிப் பண்டிகை வரும்போது, வெளியூர்மக்கள் எப்படி வர முடியும்? கும்பாபிஷேகம் முடிந்த மறுநாளே தங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால் கிடைத்த பேருந்துகளில் வழி நெடுகிலும் மாறி மாறிச் செல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் ஊர்களிலும் பேருந்து நிலையங்களிலும் நிரம்பி வழியும் போது மேலும் சங்கடம் நேர்வது தவிர்க்க முடியாததாகிறது. பேருந்து  நிலையத்தை ஒட்டியுள்ள உணவுக் கூடங்களிலும்  ஏராளமான மக்கள் கூட்டம்.
எல்லாவற்றுக்கும் மேலாக மழையினால் சேதமடைந்த சாலைகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் நடக்க வேண்டியுள்ளது. சாலை ஓர அசுத்தங்கள், கழிவுகள் இந்நீரில் கலந்து வருவதை நகராட்சி ஆண்டுதோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே சுகாதாரக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை ஓரங்கள் பொதுக் கழிப்பிடங்களாக மக்களால் சீரழிக்கப்படுகின்றன. எங்கும் நாற்றம், எதிலும் துர்நாற்றம் என்ற நிலை!! இப்படிப்பட்ட சுகாதாரமற்ற நிலையில் ,  கொட்டும் மழைக் காலத்தைத் தவிர்த்துத் தை மாத வளர்பிறையில் கும்பாபிஷேகத்தை வைத்துக்  கொண்டிருக்கலாம் அல்லவா? தை மாதத்திற்கு இன்னமும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அப்படி என்ன  அவசரம்?

கும்பாபிஷேகத் தேதியை நிர்ணயிப்பது சிவாகமத்தை ஒட்டியே நடை பெற வேண்டும். ஆகம விற்பன்னர்கள் கூறும் பரிந்துரையை கும்பாபிஷேகக் குழுவினரும்,அரசாங்கமும் முழுவதுமாக ஏற்க வேண்டும். இதில் பிற தலையீடுகள் இருக்கலாகாது. திருப்பணிகளை உபயதாரர்களே செய்யும்போது அறநிலையத்துறையும் ஒத்துழைப்புத் தருவதே நல்லது. கும்பாபிஷேக தேதியை விருப்பம்போல மாற்றுவது ஆகம விரோதமானது மட்டுமல்ல. மக்களுக்கும் பல இன்னல்களை விளைவிப்பதாக முடிந்து விடுகிறது.

கோபுரங்களிலும் விமானங்களிலும்  யாக சாலையிலிருந்து தலையில் கடங்களைச் சுமந்தவாறு சாரத்தில் ஏறி உச்சிக்குச் செல்லும் சிவாச்சாரியப் பெருமக்களில் பெரும்பாலோர் வயது முதிர்ந்தவர்கள். கொட்டும் மழையில் சாரப் படிகளில் சறுக்கி விழாமல் மிகுந்த எச்சரிக்கையாக ஏற வேண்டும். அடை மழையால் சாரப் படிகளைக் கட்டியுள்ள கயிறுகள் தளர்ந்து விட்டாலும் ஆபத்துத் தான்.    அத்தனை உயரத்திலிருந்து ...... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

லட்சக் கணக்கானோர் கண்டு ஆனந்திக்க வேண்டிய வைபவம் கொட்டும் மழையாலும், தீபாவளி தொடர்வதாலும் சில ஆயிரம் அன்பர்கள் மட்டும் தரிசிப்பதாகி ஏனையோருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இனியேனும் சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா?
  

Thursday, November 5, 2015

இயலும் இசையும்

மயிலாடுதுறை கடைமுகத்தில் நாதஸ்வர வித்துவான்கள் 
புகழ் ஏணியின் உச்சியில் ஏறிவிட்டால் எதை வேண்டுமானாலும் மக்களிடம் பேசலாம் என்னும் காலம் இது. அப்படி இருக்கும்போது,தான் மேலே ஏறிவந்த படிகளை மிகச் சிலரே திரும்பிப் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட பணிவோடு பேசுபவர்கள் பெறும்  மதிப்பைக் காட்டிலும் வித்தியாசமான அணுகுமுறை என்று கூறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்களே பத்திரிகைகள் மூலமும் தொலைக் காட்சி மூலமும் அதிக வரவேற்பையும் மதிப்பையும்  பெறுகிறார்கள் !

இசைக்கு ஆதாரமாக விளங்குவது இயல். அதுவும் பக்தி பாவத்தோடு இசைக்கப்படும் போது மேலும் மெருகூட்டப்படுகிறது.   ஒரு முன்னணி     கர்நாடக சங்கீதக்காரர்  ஒரு தினசரிக்கு சமீபத்தில் தந்துள்ள  பேட்டியில் இசைதான் பிரதானம் என்றும் பக்தி , சாகித்தியம் ஆகியவை அடுத்தபடிதான் என்றும் சொல்லியிருக்கிறார். இவர் பாடும் பாடல்கள் பக்தியோடு பாடப்பெற்றவை . பணத்திற்காகப் பாடப் பெறாதவை. அழியா வரம் பெற்றவை. ஒரே பாடலைத் திரும்பத்திரும்ப எத்தனை பேர் எத்தனை முறை பாடினாலும் அலுப்பைத் தராதவை. வாய்ப்  பாட்டின் மூலம்   பக்தியைக்  கேட்பவருக்கு ஊட்டக் கூடியவை. அவற்றோடு இசையும் சேரும்போது  கேட்போரைப் பரவசப் படுத்துபவை. இவர் சொல்லும் இக்காலப் பாடல்களுக்கு  இந்தப் பெருமைகள் உண்டா? அவை தற்காலிகமாகக் கேட்போரை  லயிக்க வைப்பது உண்மைதான். ஒரு  கால கட்டத்திற்குமேல் அவை தாமாகவே மக்களிடமிருந்து விலகிக் கொள்ளக் கூடியவை என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு கருத்துக் கூற மாட்டார்கள்.

எல்லா இசையும் இசை ஆகி விட முடியாது. தற்காலிகமாக மக்களைத் தன்  பக்கம் ஈர்க்கும் இசையையும், காலம் காலமாக நிலைத்து நின்று மக்களை இறை உணர்வு ஊட்டி நல்வழிப் படுத்தும் இசையையும் ஒன்றாகவே கருதுவதால் ஏற்பட்ட குழப்பம் இது. " நல்லிசையாளன்  புல்லிசை கேளா நற்றமிழ் ஞான சம்பந்தன் " என்று  தேவாரம் கூறுகிறது. நல்லிசையும் புல்லிசையும் வேறு வேறு என்று இப்பொழுதாவது உணருவார்களாக.
படித்ததெல்லாம் / கற்றுக்கொண்டதெல்லாம்  பக்திப் பனுவல்கள். ஆனால் வெளியிலோ  இறை நம்பிக்கை தனக்கு  இல்லை என்று கூறிக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அப்படியானால் பணம் சம்பாதிப்பதற்காகப் போடும் வேஷம் என்று கருதலாமா? என்னவோ இவர்கள் இல்லாவிட்டால் கர்நாடக இசை குடிமுழுகிப் போய் விடுவதுபோல அறிக்கை விடுவதும் , மக்களும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கொடுமையிலும் கொடுமை. சபாக்காரர்களும் ரசிகர்களும் தன்  காலில் வந்து விழவேண்டும் என்ற இறுமாப்பில் பேசுவதாகத்தானே அர்த்தம்? கொஞ்சம் நாள் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைத்தால்   தானாகவே  திருந்தி விடுவர். ஆனால் அது நடக்கக் கூடியதா? இவர்களைத்தான்  அயல்நாடுகளில் வாழ் இந்தியர்கள் உட்பட எல்லோரும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறார்களே!

தன்னால் ஞானசம்பந்தர் பாடிய ஒரு பதிகத்தை யாழில் இசைக்க முடியவில்லை என்றவுடன் அந்த யாழையே முறிக்கச் சென்றார் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவ்வாறு இசைக்குள் அடங்காதது தெய்வப் பனுவலாகிய இயல் என்பதைக் காட்டி அருளியவர் ஞானசம்பந்தர்.  இசை ஒன்றே போதும் என்பவர்கள் வெறும் ஆலாபனை செய்து கொண்டு இருக்க வேண்டியது தானே! இயல்,இசை இரண்டும் இறைவனின் கொடைகள். இரண்டும் இணைந்து பக்தி உணர்வோடு இசைப்பதே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி. கொட்டும் மழையிலும் பக்தியோடு சுவாமி புறப்பாட்டில் மல்லாரி வாசிக்கும் நாதஸ்வர வித்துவான்கள் எங்கே, இவர்கள் எங்கே!  உள்ளம் உருகி ,சொற்ப வருமானம் இருந்தபோதும் இறைவனது சன்னதியில் பக்திப் பாடல்களைப் பாடும் ஒதுவா மூர்த்திகள் எங்கே,இவர்கள் எங்கே!

எனது வழி  தனி வழி என்று பேசுபவர்களை ஒருக் காலும் திருத்த முடியாது. கருத்து சுதந்திரம் அவர்களுக்குத் துணை நிற்கும். அக்கருத்துக்களைத் தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் பிறருக்கும் திணித்து அவர்களைத்  திசை மாறச் செய்வதைச் சுட்டிக் காட்டாமல் இருக்கலாமா?  

Wednesday, October 28, 2015

பாடல் பெற்ற தலங்கள் பொலிவிழக்க விடலாமா?

திருக்கருப்பறியலூர் என்பது திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப்  பாடல் பெற்ற சிவஸ்தலம். தற்போது தலைஞாயிறு என்று மக்களால் அழைக்கப்பெறும் இத்தலம், வைதீஸ்வரன் கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் பட்டவர்த்திக்கு முன்பாக உள்ள சர்க்கரை  ஆலையை ஒட்டி வடக்கெ செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது. சுவாமிக்குக் குற்றம் பொறுத்த நாதர் என்றும் அம்பிகைக்குக் கோல்வளை நாயகி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சுவாமி-அம்பாள் சன்னதிகள் சற்று உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளன. சுவாமியின்  கர்ப்ப  கோஷ் டங்களில் விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன்,துர்க்கை ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் கட்டுமலை அமைப்பைக் காணலாம். இது சீர்காழி ஆலயத்தை நினைவு படுத்துவதாக உள்ளது. படி ஏறிச்  சென்றால், தோணியப்பர் சன்னதியும் அதற்கும் மேலே மரப்படிகளில் ஏறினால்  சட்டநாத சுவாமியின் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.  அற்புதமான சோழர்காலக் கட்டிடக்  கலையைக்  கண்டு வியக்கிறோம். படிகளில் இறங்கி வந்து பிராகாரத்தை  வலம் வரத் துவங்கினால் ஸ்தல விருக்ஷமான முல்லையையும் அதன் அருகில் சிவலிங்க மூர்த்தியையும் தரிசிக்கிறோம்.

இப்படிப்பட்ட சிறப்புக்களைக் கொண்ட இத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.  நுழை வாயிலில் உள்ள மூன்று நிலைக்  கோபுரம் மரங்கள் வேரூன்றியதால் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்நிலை நீடித்தால் கோபுரமே இடிந்து விழும் அபாயம் உள்ளது. தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள இத்திருக்கோயில் திருப்பணியும் கும்பாபிஷேகமும் கண்டு  ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என அறிகிறோம். அதாவது , நான்கு கும்பாபிஷேகங்கள் நடந்திருக்க வேண்டிய இவ்வாலயம் ஒரு கும்பாபிஷேகத்தைக் கூட இக்கால  கட்டத்தில்     காணவில்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. மேல்தளமும் மழைக்காலங்களில் ஒழுகுவதாக அறிகிறோம். இதே போன்று ஐம்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேகமும் திருப்பணியும் காணாது பழுது பட்ட நிலையில் இவ்வாதீனக் கோயில்கள் பல உள்ளன. எனவே  தனது நிர்வாகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் உடனடியாகத் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நடைபெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சைவ உலக அடியார்  பெருமக்கள் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம். 

Wednesday, October 14, 2015

பெண்மையைப் போற்றுவோம்


கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில், பிரமச்சாரி பூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை,சுமங்கலி பூஜை ஆகியவை  நடைபெறுவது வழக்கம். அதுபோலவே நவராத்திரியின் போதும் கன்னிப் பெண்களையும் சுமங்கலிகளையும் அம்பிகையாகவே பாவித்துப் பூஜிப்பது நடைபெறுகிறது. அம்பாளைப்  பத்து வயது உள்ள இளம் சிவப்பு நிறம் வாய்ந்த " கௌரி" என்றும், சதாசிவ பதிவ்ரதை என்றும் , சதாசிவ குடும்பினியாக லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. இவ்வாறு பாலாயை என்றும், சுமங்கல்யை என்றும் சொல்லும் சஹஸ்ரநாமம், " சுவாசின்யர்ச்சன    ப்ரீதாயை"  என்று  பரமேசுவரி விளங்குவதாகக்  கூறுவதை ஒட்டி,  நாமும் பழங்காலம் தொட்டே பெண்களைப் பராசக்தியின் அம்சமாகப்  போற்றி வருகிறோம். நமது ஆலயங்களிலும் , அறம் வளர்க்கும் அன்னையாய் தர்ம   ஸம்வர்த்தனி என்றும் , மங்களத்தைத் தரும் மங்களாம்பிகையாகவும், அஞ்சேல் என்று அபயமளிக்கும் அபயாம்பிகையாகவும், கருவைக் காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகையாகவும் , ஞானம் அளிக்கும் ஞானாம்பிகையாகவும் பலப்பல நாமங்களோடு அம்பிகை காக்ஷி அளிக்கிறாள்.

இன்று ஆலய வழிபாடுகளில் அதிகமாகப் பங்கேற்பவர்கள் பெண்கள் என்பது உண்மை. பிரதோஷம்,வெள்ளிக் கிழமை ,பௌர்ணமி, நவராத்திரி போன்ற நாட்களில் பெண்கள் அதிக அளவில் ஆலய தரிசனத்திற்கு வருகிறார்கள். இந்த ஸ்திரீ தர்மத்தால் தான் ஓரளவாவது நமது கலாசாரம் பாதுகாக்கப் படுகிறது. சைவத்தைப் பாதுகாத்தவர்களில் மங்கையர்க்கரசியாரும், அப்பரது தமக்கையான திலகவதியாரும் ஆற்றிய தொண்டை நாம் நினைவு கூர  வேண்டும்.  காலக் கோளாறினால் பல பெண்கள் தொலைக் காட்சி, திரைப்படங்கள் ஆகியவற்றால் கவரப்பட்டாலும் ஆலய வழிபாட்டிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியைத் தரும் விஷயம். இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே எழுந்து விடுகிறது.

பெண்கள் பெருவாரியாகப் பங்கேற்கும்  நவராத்திரி நாட்களில் வயதானவர்களே அதிகம் காணப்படுவதால் இம்மாற்றம் தற்காலக் கல்வி முறையால் ஏற்பட்டதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. வீடுவீடாகச் சென்று தேவியின் மீது கொலுவின் முன் அமர்ந்து பாடிவிட்டுப் பெரியவர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைத்த குழந்தைகள் இப்போது எங்கே? முன்கூட்டியே இத்தனை மணிக்கு வருகிறோம் என்று " அப்பாயின்ட் மென்ட் "  வாங்கிக்கொண்டல்லவா போக வேண்டி இருக்கிறது!  அப்படியே போனாலும் எல்லாமே செயற்கையாக , பக்தியில்லாத, வெளி -வேஷம் கொண்ட  படாடோபமாகவே எஞ்சுவதைப் பார்க்கிறோம்.

பெண்ணடிமை என்ற விலங்கை உடைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாதுகாப்பற்ற சுதந்திரத்தை அல்லவா அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம்! மேற்கத்திய கலாச்சாரமும், நவீனக் கல்வியும் இவ்வாறு புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டு  அஞ்ச வேண்டிய நாம் ,  ஆனந்தப் படும் பெற்றோர்களைத்தான்  பார்க்க வேண்டியிருக்கிறது.

தொலைக் காட்சியில் தொல்லைக் காட்சிகளே அதிகம்.   மனத்தைக் கெடுப்பதும் , குற்றங்கள் புரியத் தூண்டுவதும் இதனால் முன்பை விடத்  துரிதமாக்கப் படுகின்றன.வீட்டில் உள்ள பெண்களை உருப்படியான வேலை செய்ய விடாமல் மதியம் முதல் நள்ளிரவு வரை அடிமைப் படுத்தி விடுகிறார்கள்.  ஆம்! இதுவும் ஒருவகையில் அடிமைத்தனம் தான். பெண்ணடிமை பற்றிப் பேசுபவர்கள் இந்த அடிமை விலங்கை உடைக்கக் காணோமே! இதன் பாதிப்பு அவரவர்கள் வீடுகளில் நடக்கும்போதுதான் உணருவார்களோ என்னவோ! அப்படிப்பட்ட நிலையும் பல குடும்பங்களில் நடைபெறுவது ஆரம்பமாகி விட்டது.

முன்பெல்லாம் பள்ளிக்கூட அளவில் தவறுகள் அவ்வளவாக நடை பெறவில்லை. இப்போது அதுவும் சீரழிந்து வருவது பரிதாபம். ஒருவேளை ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில் படிப்பதால் இவ்வாறு நடக்கிறதா என்று தெரியவில்லை. தனித்தனியே பள்ளிகள் இருந்தது போக, மேலை நாட்டுக் கல்வியை இருபாலாரும் ஒரே பள்ளியில் கற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது அதோடு நிற்காமல் சினிமா பாணியில் உடை அணிவதும் ஊர் சுற்றுவதும் பெற்றோரை அவமதிப்பதுமாக  அதிகரித்து வருவதை யாராவது மறுக்க முடியுமா ?  கோடியில் ஒரு பெண் குழந்தைக்குக் கூட இதுபோன்ற நிலை வர நாம் அனுமதிக்கலாமா?  இவற்றை நியாயப் படுத்துபவர்கள் இருப்பதால் தான் தவறுகள் ஊக்குவிக்கப் படுகின்றன.  அக்கிரமங்கள் நாளடைவில்  தொடர் கின்றன.  போலீஸ் ஸ்டேஷன்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவற்றைச் சுட்டிகாட்டுபவர்களைப் பத்தாம் பசலிகள் என்றும், அடிப்படைவாதிகள் என்றும் பெயர் சூட்டி விட்டுப்  , பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டிப்பதாக அறிக்கை விட்டு விட்டுக் கண்களை மூடிக் கொண்டு இருப்பது இன்றைய அலங்கோலம்!

ராஜராஜனின் பெரியன்னை செம்பியன்மாதேவியார் போன்ற சிவபக்தியும் பதிபக்தியும் மிக்கவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் புண்ணிய பூமி இது. அது கறை  பட்டு விடக் கூடாது. சைவ மறு மலர்ச்சிக்காகத் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்த மங்கையர்க்கரசியார்  சேக்கிழார் பெருமானால் " குல தெய்வம்" என்று போற்றப்படுகிறார். அத்தனை பெருமை மிக்க நமது பாரம்பர்யம் வீணாகாமல் தடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. குழந்தைகளை நல்வழியில் வளர்க்கும் பெற்றோர்களாகப் பெற்றோர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொண்டு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகள் அவ்வழியையே பின்பற்றுவார்கள். நமது பாரம்பரியமும் காப்பாற்றப் பட்டுவிடும். ஈசனைப் பிரியா நாயகியான அம்பிகையின் அருள் முன் நிற்பதாக.

Thursday, October 1, 2015

எல்லாப் பிழையும் பொறுப்பாய்

பெரியவர்கள் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்த காலம் போய் தற்போது ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு புதிய வழியை அமைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இதற்குத் தனி மனிதர் சுதந்திரம் என்று பெயர் இட்டு விடுகிறார்கள்! தற்கால நீதியும் இதற்குத் துணை செய்வதால் எனக்குப் பிடித்ததை நான் செய்வேன் என்ற எண்ணம் தலை தூக்குகிறது. தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழைகளைப் பொறுப்பாயாக என்று இறைவனிடம் வேண்டிய காலம் போய் விட்டது. வேண்டுமென்றே தவறுகள் செய்யும் காலம் இது. என்னைப் பொறுத்தவரையில் அது தவறு அல்ல என்ற எதிர் வாதம் வேறு! ஆகவே யாரும் யாரையும் திருத்த முடியாது என்ற நிலை இப்போது உருவாகி விட்டது.

தான் வேறு வழியில் போவதோடு நிற்காமல் மற்றவரை ஏளனம் செய்வதையும்  குறை  கூறி எழுதுவதையும்  தொழிலாகக் கொண்டவர்களையும்  பார்க்கிறோம். இதனால் பழைய நெறி முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர். நாகரீக உலகம் அவர்களை ஏற்பதில்லை. எளிய வாழ்க்கை முறை  நாகரீக வாழ்க்கைக்கு முன் அடி பட்டு விடும் போல் இருக்கிறது. சமூகத்தில் ஒரு அந்தஸ்தை நாடுபவர்கள்  இந்த நாகரீகப் போர்வையைப் போர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எப்பொழுது இந்த நாகரீகம் வீட்டிலேயே ஆரம்பித்து விட்டதோ அப்பொழுதே பழைய வாழ்க்கை முறைகள் திரும்பிப் பார்க்கப் படுவதில்லை.

இந்த மாற்றங்கள் ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. " வேத நெறி தழைத்து ஒங்க " என்று திருமுறை பாடி விட்டு மறுகணமே " புரியாத பாசை நமக்கு எதற்கு? "  என்று கேள்வி எழுப்புகிறார்கள். வடமொழி புரியாத பாஷையாகவே இருக்கட்டும். தமிழை முற்றிலும் பொருள் உணர்ந்து இவர்கள் படிக்கிறார்களா? இந்த மொழி துவேஷம், கோயில் வழிபாட்டிலும் சடங்குகளிலும் காட்டப்பட்டுத் திருமுறைகளை ஓதிக் குடமுழுக்கு செய்வதும் , திருமணங்கள் செய்வதும், இறுதிச் சடங்குகள் செய்வதும் சில இடங்களில் ஆரம்பமாகி இருக்கிறது. இவை எல்லாம் மொழியின் மேல் உள்ள பற்று என்றா நினைத்தீர்கள்? இல்லவே இல்லை. தமிழில் செய்து வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களை அல்லவா  பார்க்கிறோம்!

திருவாசக முற்றோதல் , கயிலாய வாத்தியம் ஒலித்தல் என்பன போன்ற மாற்றங்களும் அண்மைக் காலத்தில் அரங்கேறியுள்ளன. திருவாசகத்தை முற்றோதுவது சிறப்பானது தான். அதனை ஒரே மூச்சாக அரை நாளில் வாசிப்பதால் எத்தனை பேருக்கு அதன் பொருள் புரியும்? இதை விடக் கொடுமை என்னவென்றால் உயிர் நீத்தவர்களின் அந்திமக் கிரியைகளுக்கும் திருவாசகம் ஓதப் படுவதுதான். இதுபோன்ற தவறான வழி காட்டுதல்களை மடாதிபதிகள் திருத்த வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தான் நினைத்ததை எல்லாம் செய்வது என்று ஆகி விட்டால் சமயத்திற்கென்று ஒரு  நெறி இல்லாது போய் விடும். ஊர் ஊராக அவர்கள் விஜயம் செய்து மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். கயிலாய வாத்தியக் குழுக்கள் வந்தவுடன் நாதஸ்வரங்கள் உறையில் இடப்படுகின்றன. மந்திர ஒலியோ தேவார இசையோ கேட்பதில்லை. இவையெல்லாம் ஆரம்பத்திலேயே திருத்தப்படாவிட்டால் ஆல  விருட்சம்  ஆகி சமயத்திற்கே ஆபத்து விளைவித்து விடும்.

மாற்றங்கள் கால நிலைமையால் ஏற்படுபவை என்பது உண்மைதான். ஆனால் அவற்றின் மூலம் தலை கீழான மாற்றங்கள் ஏற்படுமானால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக் கூடும். ஆலயங்களை  பயபக்தியுடன் அணுகாவிட்டால்  அதிகாரம்,ஆணவம், ஆகியவை தலைதூக்கி விடும். இறைவனுக்கும் தலை வணங்காதபடி அகம்பாவம் நம்மைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

திருநாவுக்கரசரது  தேவாரப் பாடலின் ஒரு பகுதியை நாம் இங்கு நினைவு கூர்வோம்:
...." எ(ன் )னை  ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய் ; பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்  பிழைத்தனகள்  எத்தனையும் பொறுத்தாய் அன்றே..."

  நாம் அன்றாடம் செய்யும் அக்கிரமங்களை இறைவன் ஒருவனால் மட்டுமே பொறுக்க முடியும். ஆனால்  பிழைகள் நாளடைவில் எல்லையில்லாமல் போய்க் கொண்டு இருக்கின்றன. " எல்லாப்  பிழையும்  பொறுத்து அருள்வாய்" என்று  இப்போதாவது பிழை பொறுத்து மன்னிக்க வேண்டி நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். நம்மைப் பிடித்த ஆணவ மலம் அப்போதுதான் அகலும்.

Thursday, August 27, 2015

கிராமக் கோயில்களின் புனிதம் காப்போம்

நாம் கோயிலுக்குச் செல்வதால்  நமக்கு என்ன  நன்மை என்பதைவிடக்  கோயிலுக்கு என்ன நன்மை என்று  எண்ண வேண்டியிருக்கிறது. தனியாகச் சென்றாலோ குழுவாகச் சென்றாலோ உண்டியலிலோ தட்டிலோ சில்லறைக் காசுகளைப் போட்டுப் புண்ணியம் தேடுவதும்,பரிகாரம் தேடுவதும்  வழக்கமாக ஆகி விட்டது. ஆனால் கோயிலின் நிலையோ அல்லது சிப்பந்திகளின் நிலையோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஜோதிடர் சொன்னார் என்பதாலோ, பத்திரிகைகள் மூலம் படித்ததாலோ  கோயில்களைத் தேடிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தும் இந்த நிலை தொடர்கிறது. புராதனச் சின்னங்களை அருங்காட்சியகத்தில் பார்ப்பது போல ஆலயங்களில் பார்த்துவிட்டுப் போவோரும் இதில் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் பக்தி உணர்வோடு ஆலயம் தொழுவோர்  குறைந்து சுயநலம் மேலோங்குவதையே காண்கிறோம்.

ராஜராஜனின் ஆயிரமாண்டு,ராஜேந்திரனின் ஆயிரமாண்டு என்று விழாக்கள் எடுத்தும், அம்மன்னர்கள் கட்டிய/ பராமரித்த  கோயில்களும் தருமங்களும் பராமரிக்கப்படாமலே உள்ளன. கிராமங்களில் ஒருகால பூஜை நடப்பதே சிரமமாக இருக்கிறது. அந்த ஒருகால பூஜையிலும் அன்றாடம் பங்கேற்கும் உள்ளூர் வாசிகள் எத்தனை பேர்?? இந்நிலை தொடர்ந்தால் ஒருகால பூஜையும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பூர்வீக கிராமங்களை விட்டுச் சென்றவர்களில் மிகச் சிலரே தங்கள் கிராமக் கோயில்களைப் பற்றி அக்கறை காட்டுகிறார்கள்.

நில வருவாயைப் பெற்றுத்தருவதில் நிர்வாக அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது அரசாங்கத்திற்குத் தெரிந்தும்  என்ன பயன்? சொற்ப மாத சம்பளத்தையும் தராமல் அர்ச்சகர்களை வாட்டும் அறநிலையத்துறையின் பிடியில் கிராமக் கோயில்கள் சிக்கித் தவிக்கின்றன. இவ்வாறு வருமானமே இல்லாமல் எத்தனை காலம் தான் சிப்பந்திகள் துன்பப்படுவார்கள் ?  சமயத்தைக் காப்பதற்கென்றே ஏற்பட்ட மடாலங்கள் இதற்கு என்ன  செய்யப் போகின்றன?  அடுத்த தலைமுறைக்கு ஆள் இல்லாது போகும் நிலை வந்தபிறகு விழித்துக் கொள்வார்களோ என்னவோ தெரியவில்லை. இப்போதே அதன் அறிகுறிகள் பல இடங்களில் தெரிய ஆரம்பித்து விட்டன.

சிரத்தை குறைந்தால் ஆலயங்களில் இறைவனின் சாந்நித்தியம் குறையவே செய்யும். அப்படிக் குறையக் கூடாது என்பதற்காகவே, ஆகம விதிகளின்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  கும்பாபிஷேகம் நடத்தினர் நமது முன்னோர். முந்திய கும்பாபிஷேகம் நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் எத்தனையோ கோயில்கள் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருக்கின்றன. . இதில் மடாலயங்களின் பராமரிப்பில் உள்ள கோயில்களும் இருப்பது நமது துர்பாக்கியம்.

நித்திய பூஜைகள் இவ்வாறு கடுமையாகப் பாதிக்கப் பட்ட நிலையில் நாம் செய்யக் கூடியது ஒன்று உண்டு. சாநித்தியம் குறையாமலிருக்க அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும், பாராயணங்களும் செய்யலாம். இவை எல்லாம் நமது பிழை பொறுக்குமாறு  இறைவனை வேண்டும் மனப் பாங்குடன் நடைபெற வேண்டும்.

அண்மையில் திருவிசைப்பா பதிகம் பெற்ற சாட்டியக்குடி ஸ்ரீ ருக் வேத நாத சுவாமி ஆலயத்தில் ஆர்த்ரா பவுண்டேஷனின் சார்பில் ருத்ர ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக சுவாமிக்கும் வேத நாயகி அம்பாளுக்கும் கலசங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனைகள் நடைபெற்றன. இதுபோலப் பலரும் முன்வந்து தமது ஊர்க் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறச் செய்ய வேண்டும். அதனால் ஊரார் ஒன்று கூடுவதோடு, கோயிலும் பொலிவு பெறும். சிப்பந்திகளும் உற்சாகத்தோடு பணி ஆற்றுவர். எடுத்துச் சொல்பவர்கள் இருந்துவிட்டால் கேட்கத் தயாராக மக்கள் இருக்கிறார்கள். நகரத்தை விட்டு நல்ல மனம் படைத்தவர்கள் கொஞ்சம் கிராமப்புறம் எட்டிப் பார்க்க வேண்டும். எத்தனையோ பணிகள் அங்கு காத்திருக்கின்றன. செய்வதற்கு மனமும் இறை அருளும் வேண்டுமே!!