Monday, September 29, 2014

மூலவர் தனி நபரா ?

இவர் தனி நபரா ?
ஒரு கால கட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்த கோயில்கள் பலவற்றின் தல வரலாற்றுப் புத்தகங்களில், அந்த ஆலயங்களின் சொத்து விவரமும் ஆண்டு வருமானமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பொழுது அவ்விவரம் தரப்படுவதில்லை. அண்மையில் சில ஆலயங்களின் முழு விவரங்களை  வலைத்தளத்தில் தரும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது பூர்த்தி அடையப் பல்லாண்டுகள் காக்க வேண்டியிருக்கும்.

சமீப காலமாக மக்களுக்கு அறநிலையத்துறையின் செயல் பாடுகளில் நம்பிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. கோயில் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்த விஷயத்தில் மட்டும் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்காததால் , மக்களின் குரல்கள் மங்கிப்போகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். இந்நிலையில் யாரை யார் திருத்துவது ? இதற்குக் கூட்டுக் கொள்ளை என்று பெயரிட்டாலும் தவறில்லை என்று தோன்றுகிறது.

கிராமக்கோயில்களில் பணியாற்றிவந்த மடைப்பள்ளி ஊழியர்களும், நாதஸ்வரக் கலைஞர்களும், துப்புரவாளர்களும் ,மாலை கட்டுவோரும் இப்போது எங்கே போயினர்? அறநிலையத்துறை தரும் சில நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு இன்னமும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையைக் கண்டு யார் பரிதாபப் படுகிறார்கள்? எத்தனை ஊர்களில் செயல் அலுவலர்கள் இதுபோன்ற கோவில்களுக்கு வருகை தருகிறார்கள்? அவர்களது வருமானம் மட்டும் ஏறிக்கொண்டே போகவில்லையா? அர்ச்சகர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று ஏன் தோன்றுவதில்லை? வறுமையின் உச்ச கட்டத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஊரைவிட்டே அகன்றபின் கோவில்கள் ஒவ்வொன்றாய் பூட்டப்பட்டோ , பெயரளவில் ஒரு கால பூஜை நடை பெற்றோ இருந்துவிட்டால் இவர்களுக்கு  நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சில ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைப்பதைத்  தான்  எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ ? இப்படிப்பட்ட செயல் வீரர்களைத்தான் நாம் செயல் அலுவலர்கள் என்கிறோமா ? . இதிலும் சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும். அதனால் எத்தனை கோயில்களைக் காப்பாற்ற முடியப் போகிறது?

சொத்து விவரம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால் ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பு அண்மையில் சட்டத்தின் துணையை நாடியது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவரங்கள் கேட்டால் சென்னைக் கோயில்கள் இரண்டின் செயல் அலுவலர்கள் அதிர்ச்சிதரும் பதிலைத் தந்துள்ளதை 29. 9. 2014 தேதியிட்ட தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அவர்கள் தந்த பதிலாவது: "கங்காதரேஸ்வரர் /ஏகாம்பரேஸ்வரர்  சட்டப்படி தனி நபர். எனவே அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது. கோயில் சொத்துக்கள் அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை  அவரே இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சட்ட நபர்(தனி நபர்) ஆவார். "  சட்ட வல்லுனர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட செய்தியைக் கண்ட அன்பர் ஒருவர் தினமலர் வலைத் தளத்தில் தந்துள்ள கருத்தை இப்போது காண்போம்:  " செயல் அலுவரை நியமித்தது மூலவரா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அரசால் நியமிக்கப்பட்டவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் .  இல்லாவிட்டால் உண்டியல் வசூலை மூலவரே எண்ணிக்கொள்ளட்டும். செயல் அலுவலர் தனது சம்பளத்தை மூலவரிடமே வாங்கிக்கொள்ளலாம் ."  இந்த அன்பரின் மனக்குமுறலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று கேட்டால் தகுந்த விளக்கம் தரப்படுவதில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் அறநிலையத்துறை தக்க விளக்கத்தை அளிக்கவேண்டும்.  

Friday, September 12, 2014

சிலை திருட்டைத் தடுக்க என்னசெய்யப்போகிறோம்?

                                                                                                        படம்: நன்றி,தினமலர்
ஸ்ரீ புரந்தரன் ப்ருஹதீஸ்வரர் ஆலயத்திலிருந்தும் விருத்தாசலம் ஆலயத்திலிருந்தும் களவாடப்பட்ட தெய்வத் திருமேனிகள் மீண்டும் நமது நாட்டை வந்து அடைய உதவிய இந்திய அரசுக்கும் பிற அதிகாரிகளுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுபோலவே  முன்பும்  சிவபுரம் , திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் மூர்த்திகள் களவாடப்பட்டு மீட்டுக் கொண்டுவரப் பட்டன.  இதுபோலப் பறிகொடுப்பது பல ஊர்களில் நடந்தும், நாம் தகுந்த பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நமது அஜாக்கிரதையாலும்,அலட்சியத்தாலும் இவ்வாறு ஒவ்வொன்றாகக் களவாடப் படுகின்றன.கூட்டுக் கொள்ளையும் ஒரு  காரணமாகலாம். இல்லாவிட்டால் மிகக்கனமான மூர்த்தியை மிகப்பெரிய விமானமான  ஜம்போ ஜெட்டில் மட்டுமே கொண்டு வர முடிகிறது என்றால் எப்படித் திட்டமிட்டு இச் சதியைச் செய்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். சட்டத்தின் பிடியில் இக்கொள்ளைக்காரர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

 இனிமேல் ஒரு ஊரில் கூட இதுபோன்ற கொள்ளை நடக்கக் கூடாது என்பதற்கு நாம் என்ன செய்கிறோம்? சிலை பாதுகாப்பு மையங்கள் வைத்துள்ளோம் என்று அறநிலையத் துறை பதில் சொல்லும். பாதுகாப்பு மையங்களில் காற்றுக் கூடப் போகாதபடியும்,வழிபாடு இன்றியும் பூட்டி வைப்பதற்காகவா அக்காலத்தில் மூர்த்திகளைக் கோயில்களில் நிறுவினார்கள்? ஒவ்வொரு ஆலயமும் தகுந்த பாதுகாப்புடன் இருந்தால் இதற்கான அவசியம் ஏற்படாது. வருடக்கணக்கில் இம்மையங்களில் பூட்டப்படுவதால் அவை பாசியும் தூசும் படர்ந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன.

களவாடப்பட்ட மூர்த்திகள் எங்கெங்கெல்லாமோ  அம்மூர்த்திகளுக்கான மரியாதை கிடைக்காத இடங்களில் காட்டப்பட்டு சிலவேனும் தாயகம் திரும்புகின்றன. அவற்றைத் தெய்வமாகக் கருதாமல், வெறும் கலைப் படைப்புக்களாகவே சிலரால் கருதப்படுகின்றன. ஒருகாலத்தில் இறை நம்பிக்கை மிகுந்தவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு நியமத்தோடு பூஜைகள் செய்யப்பட்டு மக்களின் பக்திக்குப் பாத்திரமாக அவை திகழ்ந்தன என்று நினைத்துப் பார்ப்பர்களேயானால் இங்ஙனம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஆலயம்தோறும் அவற்றை அளக்கவும் எடைபோடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

எப்படியோ தாயகத்துக்குத் திரும்பி வந்து விட்டாலும் அவை உரிய கோயில்களில் மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றனவா? கேட்டால் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பார்கள். உரிய பாதுகாப்பை ஏன் செய்து தரக்கூடாது என்பதே கேள்வி. உள்ளூர் மக்களிடம் பொறுப்பைத் தள்ளிவிடப்பார்க்கிரார்கள். அர்ச்சகரே கையெழுத்துப்போட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அர்ச்சகர்கள் தயங்காமல் பொறுப்பு ஏற்பர்? இதற்கு மாறாக ஸ்ரீ புரந்தரன் ஊர் மக்கள் தங்கள் ஊர் ஆலய மூர்த்தி மீண்டும் கோயிலுக்கே திரும்ப வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற பத்திரிக்கை செய்தி ஆறுதலைத் தருகிறது. அவ்வூராரை மனதாரப் பாராட்டுகிறோம்.

உற்சவர்கள் சன்னதியைத் திறக்க அதன் கதவுகள் வங்கிகளில்  பாதுகாப்பு அறையில் உள்ளதுபோல் இருவர் சாவி போட்டால் மட்டுமே திறக்கும்படி அமைக்கப்படவேண்டும். அர்ச்சகர், மெய்காவல்/ ஆலய அதிகாரி ஆகியோர் தனித்தனிச் சாவிகள் போட்டுத் திறக்கும்படி அமைக்கவேண்டும். தொங்கும் பூட்டால் எந்தவிதப்பயனும் இல்லை.

அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் அத்தனை ஆலயங்களிலும் மதில்  சுவர்கள் உயரமாகவும், சன்னதிக் கதவுகள் உறுதியாகவும், எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டதாகவும் உடனடியாக அமைக்கப்படவேண்டும். இதற்கான அறிக்கையை அத்துறையிடம் மக்கள் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். செய்வார்களா?

நிறைவாக ஒரு வார்த்தை. விக்கிரகங்களைக் கொள்ளை அடித்தவனைக் கைது செய்வது ஒரு பக்கம். அச்செய்தியை வெளியிடும் நாளிதழ்கள் இன்னமும் கொள்ளைக்காரனைக் "கடத்தல் மன்னன் " என்ற பட்டம் தந்து  "கௌரவிக்கிறார்கள்" இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

Friday, August 29, 2014

எளிய கடவுள்

விநாயகப்பெருமான் எளிமையை விரும்புபவர். தாமும் எளிமையாகத் தோற்றம் அளிப்பவர். தனக்கென்று மேற்கூரைகூட வேண்டாமல் ஆற்றங்கரையிலும் மரத்தடியிலும் வீற்றிருப்பவர். வெய்யில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் தாங்குபவர். மழை வேண்டுவோர்க்கு ஆலங்கட்டி மழையையே வரவழைப்பவர். இவருக்கு சாத்தனூர் என்ற ஊரில் ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயரும் உண்டு(இப்பெயரை அவருக்குச் சூட்டியவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் ஆவார்கள்) சர்வ வல்லமை படைத்த முதல் மூர்த்தியானாலும் எளிய பூஜையை ஏற்பவர். உடனேயே வேண்டிய பலனை அளிப்பவர் . ஆதலால் க்ஷிப்ர பிரசாதர் எனப்படுவார். வள்ளியை வேட்ட கந்தப்பெருமானுக்கு அக்கணமே மணம் அருளிய பெருமான் ஆவார்.

பிள்ளையாரின் அருள் பெறுவதும் இதனால் எளிதான காரியமாகி விடுகிறது. வன்னி,கொன்றை, ஊமத்தை,வெள்ளெருக்கு,வில்வம் போன்றவற்றை விரும்பும் தமது தந்தையாகிய சிவபெருமானைப்போலவே தாமும் எளிமையான, மக்கள் ஏற்காத மலர், இலை போன்றவற்றை ஏற்கிறார். இவருக்கு வேண்டியதெல்லாம் எருக்கம்பூ மாலையும் அருகம்புல்லும் தான். முடிந்தவர்கள் கொழுக்கட்டை,அப்பம் போன்றவற்றையும் நிவேதிப்பார்கள்.
மிக எளிமையாகச்  செய்ய வேண்டிய பூஜையை மிகக் கடினமாகவும், செலவு மிக்கதாகவும், ஆடம்பரம் மிக்கதாகவும் மாற்றிக் கொண்டு வருகிறோம்.எந்த பூஜை ஆனாலும் அதன் ஒவ்வொரு அங்கமும் பக்தி நிறைந்ததாக இல்லாவிட்டால் ஆடம்பரமே மிஞ்சும்.

மண்ணாலும்,மஞ்சளாலும்,வெல்லத்தாலும் விரல்களால் பிடித்து வைத்து பூஜை செய்து வந்த காலம்போய் , தெரு முனையில் அச்சில் செய்த மண் பிள்ளையார் பிம்பங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். பத்து வருஷம் முன்னால்  ஐந்து ரூபாய்க்கு வாங்க முடிந்த மண் பிள்ளையாரை இப்போது நூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்குக் கிடைத்த குடையை  இப்போது இருபது ரூபாய் என்கிறார்கள்.  குடையை வீட்டிலேயே சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்னதாகவே வீடுகளில் செய்து வந்த காலம் போய் விட்டது. ஒரு முழம் பூ இருபத்தைந்து ரூபாய் என்று கூசாமல் விற்றாலும் வாங்குகிறார்கள். பழங்களின் விலையோ சொல்ல வேண்டாம்.

இத்தனை விலை கொடுத்து வாங்கியும் பூஜையில் மனம் லயிப்பதில்லை! செய்யாமல் விடக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. பூஜை எப்போது முடியப்போகிறது என்று  காத்திருந்துவிட்டு, ஓடிச்சென்று தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்வது!
கையில் பணம் மிதமிஞ்சிப்போனால் இப்படிதான் ஆகும். எல்லாம் செயற்கை ஆகிவிடும். பணத்தை வீசினால் எதையும் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விடும். விநயம்,பக்தி ஆகியவை பறந்து விடும். ஆனால் சுவாமியை ஏமாற்றி விட முடியாது. காலையும் மாலையும் கருத்து ஒன்றி நினைப்பவர் மனமே இறைவனுக்கு ஆலயம் என்பதை மறந்து விடக்கூடாது.

பணம் வசூலாகி விட்டது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தையும் அலங்காரத்தையும் ஆடம்பரப்படுத்தவேண்டும் என்பதில்லை. கோயில் இருக்கும் பகுதியில் கம்பங்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இரவு பூராகவும் அவை ஒளி வீசுகின்றன. இவற்றால் என்ன விளம்பரம் என்பது புரியவில்லை. இராப்பகலாக சம்பந்தமில்லாத பாடல்களை செவி கிழியும்படி ஒலிபெருக்கிகளில் அலற விடுகிறார்கள். அதைக்  கேட்பவர்களுக்குப்  பக்தி தோன்று வதாகவோ அதிகரிப்பதாகவோ எப்படிக் கருத முடியும்?

எனக்குப்பிடித்ததை நான் செய்கிறேன். பெரிதாகக் குறை கண்டுபிடிப்பதைப் பார் என்று நம் மேல் சீறுபவர்களையே காண முடிகிறது. இப்படி வாங்கும் ஒவ்வொரு பொருளும் மக்களின் சக்திக்கு அப்பால் பட்டதாக ஆகி விட்டால் வழிபாடு குறையவும், நம்பிக்கை குறையவும் வழி ஆகி விடுகிறது. எத்தனை காலம் ஆனாலும் இவ்வழிபாடுகள் குறையவோ நின்றுவிடவோ விலைவாசி ஒரு காரணமாகி விடக்கூடாது.எளிமை என்று சொன்னால் கஞ்சத்தனம் என்று அர்த்தம் இல்லை. ஆடம்பரமற்ற நிலை என்பதே பொருள். அதைப் பின்பற்றி வந்தால் இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நம்முடைய  கலாச்சாரத்திற்குக் குந்தகம் வந்து விடாது. அதற்கு நாம் நம்மைத்  தயார்படுத்திக்கொண்டு, மெதுவாகப் பழகிக்கொள்ள வேண்டும்.  

Tuesday, August 26, 2014

திருச்செந்தூரில் நடந்த அட்டூழியம்

திருச்செந்தூர் தினமும் திருவிழாக்கோலம் கொண்டு விளங்கினாலும், ஸ்கந்த சஷ்டியில் விரதம் மேற்கொண்டு இங்கு வந்து செந்திலாண்டவனைத் தரிசிப்போர் ஏராளம். அதேபோன்று ஆவணிமாதத்தில் வரும் உற்சவ நாட்களில் ஷண்முகப்பெருமான் பிரம்ம,விஷ்ணு,ருத்ர மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி அளித்து வீதிஉலா வருவார். கந்தப்பெருமானைக் கண் கண்டதெய்வமாகத் தினமும் வழிபடுவோர்  இந்த நாட்களில் திருச்செந்தூர் வந்து இறைவனைத் தரிசிப்பர். கயிலை மலை அனைய செந்தில் பதி என்று அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பதி  தெய்வப்பதி என்பதால் அதன் சாந்தித்தியம் எப்போதும் போற்றப்படவேண்டும்;அது மட்டுமல்ல. காப்பாற்றவும்படவேண்டும்.

தெய்வமே! உன் கோயிலிலா இப்படி??
கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் ஆவணி உற்சவத்தில் நடைபெற்ற முறைகேட்டை  ஒரு முகநூல் பதிவில் காண நேரிட்டது. பெருமான் உலா வரும் பல்லக்கு பிராகாரத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அதற்குள் சில விஷமிகள் நுழைந்து படுத்திருக்கிறார்கள். அதைவிட அதிர்ச்சிதருவது என்னவென்றால், குடித்துவிட்டு ,மது பாட்டில்களைத் தங்களுக்கு  அருகில் வைத்துக்கொண்டு பல்லக்கில் உறங்குவதை முகநூலில் (Facebook) வெளியிட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்களின்  மனத்தைப் புண்படுத்தியுள்ள இச்செயல் சொல்லொணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்கித் தலைகுனியவேண்டிய அயோக்கியத்தனத்தின் உச்ச கட்டம் இது. இதற்கு ஆலய அதிகாரிகள் பொறுப்பு ஏற்பார்களா? தங்கள் பதவியில் இருந்து விலகுவார்களா? அறநிலையத்துறை விசாரணை நடத்துமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டாலும் விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுவிடும். பக்தர்களும் போராடப்போவதில்லை. இதுவே தொடர்கதை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பல ஊர்களில் உற்சவங்கள் நடைபெறும்போது, குடித்துவிட்டு வந்து சுவாமி தூக்குவதைக் கண்டிருக்கிறோம். பல்லக்கிற்குள்ளே போதை மேலிடத் தூங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம். இன்னும் இதுபோன்ற அக்கிரமங்கள் எவ்வளவு நடக்கப்போகிறதோ என்று நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. தவறுகள் தண்டிக்கப்படாத போது,  தெய்வமே அப்பாவிகளைத் தண்டிப்பதுதான்  முறை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் கொடாமல் தண்டித்தால் தான் உலகம் திருந்தும். செந்திலாண்டவன் சூரனைத் தண்டித்துத் திருத்தியது போல் இவர்களிடத்து இன்னமும் இரக்கம் காட்டாது தண்டித்துத் திருத்தவேண்டும். நடைபெற்ற பாவச்செயலுக்குப் பரிகாரங்களை ஆகம முறைப்படி நிர்வாகத்தினர் உடனே மேற்கொள்ளவேண்டும். என்னதான் பரிகாரம் செய்தாலும், இதனால் முருகபக்தர்களின் மனத்தில் ஏற்பட்ட வடு ஒருபோதும் அழியாது.   

Saturday, August 16, 2014

பாழடையும் குளங்கள்

தலயாத்திரையில் தீர்த்தயாத்திரையும் அடங்கிவிடுகிறது. உதாரணமாகக் காசிக்குச் செல்பவர்கள் விச்வநாதரையும்,கங்கையையும் தரிசிப்பதும் , இராமேச்வரத்திற்குச் சென்று இராமனாதரைத் தரிசிப்பதோடு, அனைத்துத் தீர்த்தங்களிலும் நீரா டுவதும் தொன்றுதொட்டு நடந்து வருபவை. தீர்த்தங்கள் எல்லாம் சிவவடிவமாகவே கருதப்படுபவை. "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே" என்கிறது அப்பர் தேவாரம்.

பொதுவாக எல்லாத் திருக்கோயில்களின் அண்மையிலும் திருக்குளங்கள் இருக்கக் காண்கிறோம். இவை அனைத்தும் இறைவனுக்குச் சமமான புனிதத்துவம் வாய்ந்தவை. வேண்டிய அனைத்தும் வழங்கும் வள்ளல் தன்மை வாய்ந்தவை. தீரா நோய்களைத் தீர்த்து அருள வல்லவை. எடுத்துக்காட்டாக  வைத்தீஸ்வரன் கோயில் ஆலயத்திற்குள் உள்ள சித்தாமிர்தத் தீர்த்தத்தின் சிறப்பைக் கூறும்பொழுது அதன் துளி ஒன்று நம் மீது பட்டாலே வினையும் நோயும் நீங்கப்பெறும் என்று நூல்கள் வாயிலாக அறிகிறோம்.

 திருவாரூருக்கு அண்மையில் உள்ள திருக்காரவாசல் (திருக்காறாயில்)என்ற பாடல் பெற்ற சிவத் தலத்தின் திருக்குளப்படிக்கட்டுக்களைக் கருங்கல்லால் அமைத்துக்  கட்டியுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பக்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதன் எழிலான காட்சியையே மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

ஆலயத்தோடு தொடர்புடைய குளம் , திருக்குளம் எனப்படுகிறது. ஏனையவற்றைக் குளம் என்று மட்டும் அழைக்கிறோம். அவை மக்களின் அன்றாட தேவைகளுக்காக அகழப்பெற்றவை. கிராமங்களில் அத்தகைய குளங்கள் நீராடுவதற்கும், துணி தோய்க்கவும், பாத்திரங்களைக் கழுவவும் பயன்படுத்தப்படுகின்றன.. இவற்றைத் திருக்குளங்களில் ஒருபோதும் செய்யக்கூடாது. நமது பிற தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குளங்கள் கால்நடைகள் நீர் பருகவும்,நீராடவும் எதுவாக ஒருபுறம் படிக்கட்டுக்கள் இல்லாமல் அப்பிராணிகள் எளிதாக இறங்கும் வகையில் சரிவாக அமைக்கப் பட்டிருக்கும். இவற்றை சிறந்த தருமங்களாக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்தார்கள்.   "குளம் பல தொட்டும்"  என்பது சம்பந்தர் வாக்கு. குளம் அமைப்பது சிறந்த சிவதருமம் என்பது இதனால் அறியப்படுகிறது. இவற்றைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய நாம் பாழடிக்கிறோம் என்பது உண்மை. புதிய குளங்களை அகழும் புண்ணியத்தை ஏற்காவிடினும், பழைய திருக்குளங்களையும் ஏனைய குளங்களையும் தூர்க்கத் துணிந்துவிட்டோம்.

கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளம், திருவாரூரிலுள்ள கமலாலயத் திருக்குளம்  போன்றவற்றில் மக்கள் பெருந்திரளாக வந்து நீராடுவர். எனவே இவற்றை மாசுபடாமல் காக்க வேண்டியது நம்  ஒவ்வொருவரின் கடமை. திருக்குளங்களிலேயே,குப்பைகளையும் பிற கழிவுகளையும் வீசத் துணிந்துவிட்ட நாம், ஏனைய குளங்களை அலட்சியப்படுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. பல இடங்களில் கிராம ஊராட்சிக் கட்டிடங்களே கோயில் நிலங்களிலும் நீர்நிலைகளை ஒட்டியும்  ஆக்கிரமித்துக்   கட்டப்பட்டிருக்கும்போது, பிறருக்கும் தைரியம் வந்துவிடுகிறது.

இந்நிலையில் வயதானவர்களைத் திருத்துவதென்பது சாத்தியமாகத் தோன்றவில்லை. கிராமப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நமது ஊரிலுள்ள திருக்குளமும் பிற குளங்களும் எவ்வாறு பாழாகிக் கிடக்கின்றன என்பதை அவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று நேரில் காட்டி விளக்க வேண்டும். அவை தூர்க்கப்படுவதால் நிலத்தடி நீரின் அளவு பாதிப்படைகிறது என்பதை எடுத்துக் கூற வேண்டும். குளம் , வாய்க்கால் ஆகியவற்றிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கோடைக்காலத்தில் அகற்ற முன்வர வேண்டும்.குளங்களைச் சுற்றிக் கருவேலி மரங்கள் இருந்தால் அவை அருகிலுள்ள நிலத்தடி நீரைப் பெரிதும் உறிஞ்சி விடுகின்றன என்று அறியப்பெற்று, அவற்றைப் பலர் நீக்க முன்வருகின்றனர். இளைய சமுதாயத்தின் சீரிய பங்கினால்  திருக்கோயில்களும்  திருக்குளங்களும்  மீண்டும் பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்விளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆணி வேராகவும் ஏணிகளாகவும் திகழும் ஆசிரியப்பெருமக்கள் ,கல்வி புகட்டுவதோடு நின்றுவிடாமல் சமூக சிந்தனையையும் உருவாக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும் என்பது நமது வேண்டுகோளும் ஆசையும் ஆகும். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாங்கம்  நல்லாசிரியர் விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும். ஆசிரியர்கள் முன்வருவார்களா? நல்லாசிரியர்களாகத் திகழ்வார்களா?  

Friday, July 25, 2014

இராஜேந்திர சோழருக்கு நினைவஞ்சலி

கங்கை கொண்ட சோழபுரம் 
இராஜேந்திர சோழ மாமன்னர் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைத் தமிழ் உலகம் நினைவு கொள்ளக் கடமைப் பட்டுள்ளது. அப்பேரரசர் சிவன் கோயில்கள் கட்டியதும் சோழப் பேராசை விரிவடையச் செய்ததும் பற்றி மட்டுமே நாம் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது பிற குண நலன்களையும் நாம் இத்தருணத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். " தன்  கரங்களால் எல்லா உலகுக்கும் உபகாரம் செய்பவனும்..." என்று கரந்தைச் செப்பேடு இவரைப் புகழ்ந்து உரைக்கிறது.

கங்கைகொண்டசோழபுரம் கலைமகள் 
திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தைச் சூழ்ந்த ஐம்பத்தோறு கிராமங்களைத் தக்கோருக்குத் தானமாகத் தந்துள்ளார் இம்மன்னர்.   1073 பேருக்கு இவர் கொடை அளித்த செய்தியைக் கரந்தைச் செப்பேட்டின் மூலம் அறிகிறோம். சதுர்வேதி பட்டர்களுக்கும், உகச்சர்களுக்கும் நாவிதர்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் நில தானம் செய்யப்பட்டது. பல ஊர்களில் சிவாலயங்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. திருமழபாடி சிவாலயத்தைப்  புதுப்பிக்கும் பணி கி.பி. 1026 ல்நிறைவு பெற்றது. திருவாலங்காட்டில் கோயில் ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரவும், நிலத்தைப் பயிரிடவும் உதவப்பட்டது. கல்வி வளர்ச்சிக்காக எண்ணாயிரம் என்ற ஊரில் கல்லூரிக்கு முன்னூறு ஏக்கர் நிலத்தை மானியமாக அளித்துள்ளார் இராஜேந்திர சோழர். மேலும் வேப்பத்தூர்,திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய ஊர்க் கல்லூரிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான கொடை அளித்துள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் - எழில்மிகு நந்தி 
சோழகங்கம் என்ற பெரிய ஏரியை உண்டாக்கியும் பூம்புகாருக்கு அருகில் கங்கை கொண்டான் கால்வாய் வெட்டுவித்தும்,சோழபுரத்தில் கன்னி  நங்கை ஏரியை உண்டாக்கியும், மக்களுக்காக நீர்ப்பாசன வசதி செய்துள்ளார். வடமொழியிலும் தமிழிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவராய் பல புலவர்களை ஆதரித்தார். இளமையில் தன்னை வளர்த்து நற் பண்புகளைப் புகட்டியவரும் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் நினைவாக நாகைக்கு அருகில் செம்பியன் மாதேவி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் அவருக்குப் படிமம் நிறுவி , நிவந்தமும் அளித்துள்ளதால் இராஜேந்திர சோழரின் நன்றி மறவாத பண்பு விளங்குகியது. அது மட்டுமல்ல. தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும்   தானங்கள் செய்து நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார். பிற  சமயங்களையும் போற்றியுள்ளார். இவரது கலை ஆர்வத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களே சான்று. திருக்கோயில் அமைப்பில் புதுமையாகப் பிரதானக் கோயிலருகே அம்பிகைக்குத் தனிச்  சன்னதி கட்டுவித்தார்.
விஜயாலய சோழர் முதல் இராஜராஜ சோழர் வரை தலை நகரமாக தஞ்சை இருந்தது.இவரது காலத்தில் அது கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. தந்தையைப் போலவே பிரம்மாண்டமான சிவாலயத்தை அங்குக் கட்டுவித்தார். திருக்கோயில்களில் ஒதுவார்களும், இசைக்கருவி வாசிப்போர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆடல், ஓவியம்,சோதிடம்,வான நூல், மருத்துவம். மல்யுத்தம், சமையல், அணிகலம் செய்தல் போன்ற கலைகள் ஊக்கம் பெற்றன.

இவரது காலத்திய ஊராட்சி முறை பாராட்டுக்குரியது. சொந்த வீடும், அரைக்கால் வேலி  நிலம் மட்டுமே  உடையவர்களும், அறவழியில் பொருள் ஈட்டியவர்களும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களும் மட்டும்  ஊராட்சி உறுப்பினராகத் தகுதி உடையவர்கள். லஞ்சம் வாங்கியவர்கள்  உறுப்பினராகும் தகுதியை இழந்தார்கள். குடவோலை முறைப்படி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். நேர்மை அற்றோர் தண்டிக்கப்பட்டனர்.

மானம்பாடி- நாகநாத சுவாமி சன்னதி  
கடாரத்தையும்,கங்கையையும்,ஈழத்தையும் வென்ற இம்மாமன்னர் மா வீரர் மட்டுமல்ல. மாமனிதராகத் திகழ்ந்தார் என்பதை நினைவு கூறவே ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டோம். மக்கள் பணியும் மகேசன் பணியும் கண்ணெனக் கொண்டு ஆண்ட இராஜேந்திர சோழரை நாம் இப்போது எவ்வாறு நினைவு கூர்கிறோம் தெரியுமா? கலை நிகழ்ச்சிகள், மலர் வெளியிடுதல், சொற்பொழிவு ஆற்றுதல் இப்படிப் பலப்பலவற்றை இரண்டு தினங்கள் நடத்துகிறார்கள். இதற்காகும் செலவு 25 லட்சம் என்று சொல்லப்படுகிறது. அரசு இதில் பங்கேற்பதாகத் தெரியவில்லை.

இவ்வளவு பெரிய தொகையை அம்மாமன்னர் எவ்விதம் நடந்து காட்டினாரோ அவ்வழிகளில் செலவிட்டால் எவ்வளவு நன்மை பயக்கும்? அவர் கட்டிய கோயில்களைப் புனரமைத்தல், ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு உதவுதல் பல்கலைகளை ஆதரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதால் , அவரை நினைவு படுத்தும் போது அவரது நற்பண்புகளில் சிலவாவது நமக்கும் வர எதுவாக இருக்கும்.

              மானம்பாடி சிற்பம் 
குடந்தைக்கு அருகிலுள்ள மானம்பாடி சிவாலயத்தைச் சென்று பாருங்கள். எவ்வளவு ஆண்டுகளாக அது சிதைவதை அரசும் மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். கலைச் சின்னமாகத் திகழும் இந்த ஆலயத்தை தேசீய சாலை அமைப்பவர்கள் சென்ற ஆண்டு இடிக்கவும் நினைத்தார்கள். அவ்வளவு தூரம் இருக்கிறது நாம் பண்டைய வரலாற்றுச் சின்னங்களைப் போற்றும் லட்சணம்!  ஒரு வழியாக நல்லோர் சிலரின் முயற்சியால் இக்கோயிலைத் திருப்பணி செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் அது முழுமையாக நிறைவேறும் காலம் தான் தெரியவில்லை!  இதுபோல எத்தனையோ கோயில்கள் பராமரிப்பின்றி மரங்களால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

மாமன்னர் ராஜேந்திர சோழரது பள்ளிப்படைவீடு பிரம தேசம் என்ற ஊரில் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. தொல்பொருள் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. நாளடைவில் பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

விழாக்கள் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால், வெறும் சொற்பொழிவோடும் மலர் வெளியீட்டோடும் அவை நின்றுவிடக்கூடாது. மக்களும் அரசாங்கமும் நமது கலைச் சின்னங்களை அழிய விடக்கூடாது. வாய்ப்பேச்சாலும் கட்டுரைகள் எழுதியும் சாதிப்பதை விடக் களத்தில் இறங்கிப்  பணியாற்றுவதே அம்மாமன்னருக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவஞ்சலி.  

Saturday, July 19, 2014

துவேஷம் மறைந்து அன்பு மலரட்டும்

இந்தியாவுக்கென்று தனிப்பட்ட கலாசாரம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அது எப்படி யாரால் ஏற்பட்டது என்பதெல்லாம் தேவையற்ற விவாதங்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை பலவீனப்படுத்துவதாக இவ்வரலாற்று ஆராய்ச்சி முடிந்து விடும். இன்று நாம் ஒற்றுமையாகத் தேச வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோமா என்பதே கேள்வி. இதில் மக்களின் பங்கு ஒருபுறம் இருக்க அரசியல்வாதிகளின் பங்கும் உண்டு. தங்களது  நலனுக்காக அவர்கள் ஒருபோதும் இவ்வொற்றுமை குறைய அனுமதிக்கக் கூடாது.

பாடப்புத்தகங்களில் வரலாறு எழுதுபவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு   சாராரைப் பற்றி அவதூறுகள் பாடப்புத்தகங்களில் அள்ளி வீசப்படுகின்றன. அவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தங்களுக்குத் தேர்தலில் எவ்விதப் பாதிப்பும் வராது என்ற எண்ணமே இதற்குக் காரணம். அதற்காக ஒரு வரை முறை வேண்டாமா? அவர்கள் இந்நாட்டுக்கு ஏராளமான தொண்டுகள் செய்தும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கலாம் அல்லவா?

அரசு வெளியிட்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு சமூக நூலில் ஒருசாரார் மற்றவர்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் கொடுக்காமல் தாங்களே அத்துறைகளில் விளங்கி வந்தார்கள் என்று பொருள் படும்படி  குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த துவேஷ பிரசாரம் தற்காலத்திற்குத் தேவையா? பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவும் செயல் அல்லவா இது? ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அறிவுறுத்த வேண்டிய உபயோகமான தகவல்கள் எத்தனையோ இருந்தும் இது போன்ற வெறுப்பை உமிழும் வாசகங்கள் எவ்விதம் உபயோகமாக இருக்கும்?

தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்தது அல்ல.  அதற்கென்று தனி இடம் என்றும் உண்டு. அதைச்  சிறப்பிக்கும்போது மற்றொரு மொழியைத் தாழ்த்தி எழுதாமல் இருப்பது நல்லது. மத்திய அரசு பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழுக்கு ஒருபோதும் ஆபத்து வந்து விடாது. அந்நிய மொழிகளைக் கற்கும்போது நமது நாட்டு மொழியைக் காப்பதிலும் கற்பதிலும் மட்டும் ஏன் இந்த துவேஷம்? கிராமங்களிலும் தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளுக்கே மாணவர்கள் செல்லும்போது இந்தத்தேவை இல்லாத பாய்ச்சல் என்? தனி மனிதனின் நலத்திற்குச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தும் அரசியல் கட்சிகள் ஏன் இப்படி செத்த பாம்பையே அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.  

அதே போலத்தான் இந்த "வேட்டி" விவகாரமும். தனியார் கிளப்களில் வேட்டி அணிந்து வருவதை  அனுமதிக்காவிட்டால் தமிழ்ப் பண்பாட்டுக்கே அவமானம் என்று நினைப்பவர்கள், கோயில்களில் நமது பண்பாட்டின்படி பான்ட் -சட்டை அணியாமல் வேட்டி அணிந்து  வரவேண்டும் என்று உத்தரவு இட வேண்டியது தானே! கேரளத்தில் இன்றும் ஆண்கள் மேல்சட்டை இன்றி வேட்டி அணிந்து செல்வதைப் பார்க்கிறோம். நாகரீக உடைகள் கேரளக் கோயில்களில் அனுமதிக்கப் படுவதில்லை. தமிழகக் கோயில்களில்  மட்டும் நமது பாரம்பரிய உடையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லையே!

நீதியும் நேர்மையும் ஆட்சியாளர்களின் இருகண்கள். அவற்றை நிலை நிறுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள்  மாணவர்களிடையே துவேஷத்தை வளர்க்கும் பாடப்பகுதிகளை நீக்கி விட்டு நாட்டு ஒற்றுமை, மத நல்லிணக்கம், மொழி துவேஷமின்மை  ஆகியவற்றை வளர்ப்பதாக அவற்றை மாற்றி அமைக்கவேண்டும். ஆட்சியாளர்கள் இதற்குத் தனி கவனம் செலுத்தவேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பும் கூட.