Friday, November 9, 2012

ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.


ஒளி மயமான தீபாவளித் திரு நாளில் ஒலி மயமும் சேர்ந்துவிடுவதால்  குழந்தைகளின்  மகிழ்ச்சிக்குக்  கேட்கவா வேண்டும்?  பொழுது எப்பொழுது விடியப்போகிறது என்று ஆவலுடன்  இருப்பார்கள். தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் ,நடுத்தர வயதுக்காரர்கள், பெரியவர்கள் என்று ஒவ்வொருவரும் இம்மகிழ்ச்சியைப் பல விதமாகக் கொண்டாடினாலும்  சதுர்த்தசி தினமான தீபாவளியன்று விடியற்காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு நீராடுவது எவ்வளவோ தலைமுறைகளாக நடைபெறுவதொன்று.சதுர்த்தசி , பரமேச்வரனுக்கு மிகவும் உகந்த நாள். அமாவாசைக்கு முன் வரும் சதுர்தசியை பிரதி மாதமும் மாத சிவராத்திரி யாகவும், மாசி மாதத்தில் வருவதை மகாசிவராத்திரி என்றும் கொண்டாடுகிறோம். தீபாவளியும் மாஸ  (ஐப்பசி மாத ) சதுர்தசியே. நடராஜப் பெருமானுக்கு ஆண்டு தோறும்  நிகழும் ஆறு அபிஷேகங்களில், மூன்று , சுக்ல பக்ஷ( வளர் பிறை)   சதுர்தசிகளில் ( ஆவணி, புரட்டாசி, மாசி  மாதங்களில்) நடைபெறுகிறது. தீபாவளியன்று செய்யும் ஸ்நானம் ,கங்கா ஸ்நானமாகக் கருதப்படுகிறது.

அவரவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி கொண்டாடிமகிழும் இந்த சமயத்தில் , சக்திக்கு மீறிய செலவுகள் செய்வதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துணிமணிகளோ,பட்டாசுகளோ  என்ன விலை விற்றாலும் வாங்குவோர் ஏராளம். வயதானவர்கள் சிலர் மட்டும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். "காசைக் கரியாக்காதே" என்று முதியவர் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்! இப்படித் தாராளமாகச் செலவு செய்பவர்கள் , பிறருக்கு உதவுவதிலும் தாராளம் காட்டினால் நல்லது. இந்த வேளையில் ஏதாவது ஓரிரு குடும்பங்களில் தீபாவளி பிரகாசிக்கச் செய்யலாமே! 

நாம் மீண்டும் மீண்டும் கிராமக் கோயில்களைப் பற்றியும் அதில் பூஜை செய்பவர்களைப் பற்றியும் கவலைப் பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் , ஆதரிப்போர் யாரும் இல்லாத சூழ்நிலைக்கு அவர்களில் பலர் தள்ளப்பட்டுள்ளனர். எத்தனை கோயில்கள் தீபாவளியன்றும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன  என்பதை அறியும்போது , நாம் நமக்கு மட்டும் எதையும் குறைத்துக் கொள்ளாமல் , கோயிலைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. யாராவது மனது வைத்துப் புது வஸ்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் , வழக்கமான எண்ணெய் பிசுக்கு ஏறிய பழைய வஸ்திரமே அன்றும் சார்த்த வேண்டியிருக்கிறது.  

நாம் எண்ணெய் ஸ்நானம் செய்வது போல் கோவிலில் இருக்கும் மூர்த்திகளுக்கும் எண்ணெய் ஸ்நானம் செய்வித்துப் புது வஸ்திரங்கள் சார்த்த வேண்டாமா? இந்த வருஷம், கிராமங்களில் உள்ள  ஐந்து சிவாலயங்களுக்குத்  தலா ரூ ஆயிரத்தை நமது சபை  வழங்குகிறது. இதனை ஏற்றுப் போற்றும் அன்பருக்குச் சிவனருள் பெருகுவதாக. இதில் ரூ 250 , கோயிலில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் தீபாவளியன்று சார்த்த உபயோகிக்கப்படும். மீதமுள்ள ரூ 750 , ஆலய அர்ச்சகருக்குத் தீபாவளியை முன்னிட்டு சம்பாவனையாக அளிக்கப்படுகிறது.   சாத்தனூர், திருமங்கலம் (குத்தாலம் அருகில்), கோட்டூர், திருக்களர், இடும்பாவனம் ஆகிய தலங்களின்  அர்ச்சகர்களுக்கு இத்தொகை அனுப்பப் பட்டுவிட்டது. பலரும் தமக்கு முடிந்த அளவில் இது போன்ற விசேஷ தினங்களில் ஆலயங்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் உதவ முன்வர வேண்டும்.ஒளி விளக்கு ஏற்ற வாருங்கள்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றபடி, நாம் மகிழ்ச்சியோடு தீபாவளி கொண்டாடும் இச்சமயத்தில், இன்னும் சிலர் முகங்களிலாவது மகிழ்ச்சியைக் காண வகை செய்யலாம் அல்லவா? 

Wednesday, October 31, 2012

பெண்மையைப் போற்றுவோம்



நண்பர் ஒருவர் தனக்கு வந்திருந்த வலைப்பதிவை அனுப்பியிருந்தார். சில பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள் நெற்றிக்குப் பொட்டு வைக்காமலும் தலையை வாரிப் பின்னிக்கொண்டு பூச்சூடாமலும் வரவேண்டும் என்று நிர்வாகம் நிர்பந்திப்பதால் நமது பாரம்பர்யம் விலகிச் செல்வதைப் பற்றிய ஆதங்கம் அது. பள்ளிகள் அதுபற்றிக் கவலைப் படாத நிலையில், தங்கள் குழந்தைகள் எப்படியோ படித்தால் போதும் என்று பெற்றோர்கள் வேறு வழி இல்லாமல் இருந்துவிடும் நிலை. வீட்டிலாவது நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுப்போம் என்று சில பெற்றோர்கள் மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள். நண்பர் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதை எழுதியவர் ஒரு பெண்மணி. 

ஆண்கள் நெற்றிக்கு எதுவும் இட்டுக்கொள்ளாதபோது பெண்கள் மட்டும் ஏன் இட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பூக்கள் வைத்துக்கொள்வதும், வளை அணிவதும் அழகுபடுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்கிறார் அவர். ( பூங்குழல் நாயகி, கோல்வளை நாயகி போன்ற அம்பிகையின் பெயர்களை இப்போது நினைவுக்கு வரவழைத்துக் கொண்டு சங்கடப் படவேண்டாம்)  அவற்றை அணிவதால் ஏற்படும் பலனுக்கு உத்த்திரவாதம் எதுவும் இல்லையாம்.  "ஆண் ஆதிக்கம்" உள்ள சமுதாயத்தில்  ( ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், முதலிய பதவிகளில் பெண்கள் சாதித்து இருக்கிறார்களே என்று கேட்கக் கூடாது)  விதவைப் பெண்களும் பொட்டு வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பாதுகாப்பு என்கிறார் இந்தப் பெண்.( பொட்டணிவதால் எந்தப் பலனும் இல்லை என்ற இவர் இப்படி மாற்றுக் கருத்து வழங்குவது ஏன் என்று புரியவில்லை.) 

ஒரு காலத்தில் திருமாங்கல்யமும் காலில் மெட்டியும் அணிந்து வந்த ஆண்கள் அவற்றைக் கைவிட்ட பிறகு பெண்கள் மட்டும் அவற்றைப் பின்பற்ற வேண்டுமா என்பது இவரது கேள்வி.ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிமுறைகளில் பேதம் ஏன் என்று கேட்கிறார் இவர். மேலும் ஆண்கள் தங்களது பாரம்பர்ய உடைகளை அணியாமல் பேண்டும் சட்டையும் அணியும் போது , பெண்களும் மாறினால் என்ன தவறு என்பது இவரது வாதம். ( உண்மை தான். அதற்காக ஆண்கள் செய்யும் தவறுகள் அத்தனையையும் பெண்களும் செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டுவது போல் இருக்கிறது.) ஆண்களுக்கு விதிமுறைகள் எதுவும் இல்லையா- அவை கடலில் எறியப்பட்டு விட்டனவா என்று கேட்கிறார் இப்பெண்மணி.  பெண்களை ஆண்கள் குறை கூறிக்கொண்டு இருப்பதுபோல் ஏன் பெண்களும் ஆண்களின் குறைகளை எடுத்துக் கூறக் கூடாது என்கிறார்.(தாராள மாகக் கூறலாமே! இப்போது அப்படி யாரும் கூறவில்லை என்றா சொல்கிறீர்கள்?)   கோயில்களில் உள்ள பெண் வடிவங்களின் ஆடை அலங்காரங்கள் போல பிற பெண்களும் அணியும்போது ஏன் இவ்வளவு கூச்சல் என்கிறார். (உயிருள்ள வடிவங்கள் இவ்வாறு அணிவதால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை இப்பெண்மணி மறந்து விட்டார் போலிருக்கிறது! வெளி நாட்டவர்களுக்கு மேலேழுந்தவாறு தோன்றுவதை எல்லாம் ஏற்றுக்கொள்வதோ மறுப்பதோ உங்கள் கையில் அல்லவா இருக்கிறது!) 

பல புருஷர்களைக் கொண்டவளைப் பதிவிரதை என்று புராணங்கள் சொல்லும்போது தற்காலத்தில் மட்டும் ஏன் அவ்வாறு செய்யத் தடை என வினவுகிறார்.( ஏக புருஷ விரதம் பூண்ட சீதா தேவி, அருந்ததி, அனுசுயா போன்ற பதிவிரதைகளையும், ஏக பத்தினி விரதம் பூண்ட ராமபிரானையும் பற்றிப் புராணங்களில் படித்திருப்பீர்களே!) எனவே, கடவுளர்களைவிடத் தற்கால இளைஞர்கள் பரிசுத்தமானவர்களாம்              ( எல்லோருமா அப்படி?) 

மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் அப்பெண்மணியின் சொந்தக் கருத்துக்களாக இருக்கலாம். காலம் எவ்வளவோ மாறிவரும் போதும் பெரும்பாலான பெண்மணிகள் நமது பாரம்பர்யத்தைக் காப்பாற்றி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ பழைய காலம் முதல் இந்து மதம் அவர்களுக்குச் சிறப்பான ஸ்தானம் வழங்கியிருக்கிறது. புதியதாக ஒரு வீடு கட்டி, கணவன் மனைவியர் குடிஏறுவதாக வைத்துக் கொள்வோம். பெண்ணின் நக்ஷத்திரத்தை வைத்தே கிரகப்பிரவேச நாள் நிச்சயிக்கப்படுகிறது. அவளே வீட்டின் எஜமானியும் ஆவாள். "க்ரஹிணி" என்று அவளை மட்டுமே சொல்லும் சாஸ்திரம், ஆணை எஜமானனாகச் சித்தரிப்பதில்லை. அவள் உயிரோடு இருக்கும் வரையில்தான் கணவன் அக்னிஹோத்திரம் செய்ய உரிமை உண்டு. பெண் குழந்தைகளை உரிய பருவத்தில் கல்யாணம் செய்து கொடுத்து அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பது முக்கியமாகக் கருதப்பட்டது. வேலைக்கும் சென்று விட்டு, வீட்டு வேலையையும் செய்ய வேண்டும் என்று இரட்டைப் பாரம் தூக்குவது இக்காலத்தில் சரியாகப் பலருக்குப் படலாம். ஆனால் அவள் எந்தவிதக் கஷ்டமும் படக் கூடாது என்று கருணையோடு அவளை க்ரஹிணியாக அமர்த்தி ஆராதிததது அன்றைய சமுதாயம். 

பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்பெற்ற அங்கீகாரம் ஆண்களுக்கு அளிக்கப்படவில்லை. கற்பு என்பது இருபாலார்க்கும் தான். ஒப்புக் கொள்கிறோம். ஆனால் பெண் மட்டுமே கற்புக்கரசி என்றும் மங்கையர்க்கு அரசி என்றும்,பதிவிரதை என்றும் புகழப் படுகிறாள். கற்புக்கரசன் என்றோ ஆடவர்க்கரசன் என்றோ பத்தினி விரதன் என்றோஆண்களை யாராவது புகழக் கேட்டிருக்கிறோமா? தயை என்பது தாய்க்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது. தந்தைக்குத் தயை இல்லையா என்று கேட்க முடியுமா? இறைவனே தாயுமானவனாகத் தானே வந்தான்! 

நிறைவாக ஒரு முக்கியக் கருத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்மணி இவ்வளவு எழுச்சி பெற வேண்டிய அவசியம் இல்லையோ என்று தோன்றுகிறது. எத்தனையோ வீடுகளில் பாரம்பர்யங்கள் காற்றில் விடப் படுகின்றன. பெற்றோர்கள் சொல்வதைக் கேட்காத குழந்தைகள் தன்னிச்சையாக இருக்கும்போது இப்பெண்மணி கவலையே பட வேண்டாம். அவரவர்களுக்குத் தங்கள் குழந்தைகள் அப்படி இருந்தால் மட்டுமே வலிக்கக்கூடிய விஷயம் இது. வாசலில் கோலம் போடுவதால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி கேட்கும் காலத்திற்கு ஏற்றபடி பலமாடிக் குடியிருப்புகள் வந்து விட்டன. ஒருவேளை நிரந்தரமாகக்  கோல- ஸ்டிக்கர் ஒட்டி விடுவார்களோ என்னவோ!     

பள்ளிக்கூடம் போவதற்கு முன்னாலேயே தன் குழந்தை சகலகலா வல்லவனாக வர வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப் படுகிறார்கள். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கவும்  தயங்குவதில்லை . சிலர் தன்னுடைய  சக்திக்கு அப்பாற்பட்டும் செலவழிக்கிறார்கள். அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி, வேறு வழியில் செல்லும்போது அப்பெற்றோர் படும் வேதனை இருக்கிறதே, அதை மற்றவர்களால் எப்படி உணரவோ சொல்லவோ முடியும்? 

முன்னோர்கள் சொன்னதை மூடத்தனம் என்று சொல்பவர்கள் அவற்றை எளிதாகக் கைவிட்டு விட முடியும். அதற்கு அதிக நாள் தேவைப் படாது. நல்ல பாதை வகுத்துக் கொடுத்த அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, நமக்கென்று தனி வழி வகுக்கத் துடிக்கும் ஆண்களும் பெண்களும் அதன் விபரீத பலன்களைப் பற்றி சிந்திப்பதில்லை. பெண் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள், அவர்களுக்குத் துன்பம் வரும் போது விலகிப் போய் விடுவார்கள். அப்போதுகூட, எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அரவனணப்பவர்கள் பெற்றோர்கள் மட்டுமே என்பதைப் பிற்காலத்தில் உணருவார்கள். 

முன்பெல்லாம் ஆணுக்குப் பெண் நிகர் என்று சொல்லி வந்தார்கள். இது ஒன்றும் புதியதாகச் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்ல. அர்த்தநாரீச்வரனாக இறைவன் காட்சி வழங்குவது "தொன்மைக் கோலம்" (எந்த யுகத்தில் நடந்தது என்று யாரால் சொல்ல முடியும்?) என்கிறார் மாணிக்க வாசகர். வேண்டுமானால் ஆணைக காட்டிலும் பெண் அதிகம் (உயர்ந்தவள்) என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு பட்டி மன்றத் தீர்ப்புக்கள் வழங்கக் கூடும். என்னதான் உண்மைகள் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தாழ்ந்துவிட்டோம் என்று சொல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இறைவனுக்கு ஒரே ராத்திரி பூஜை(சிவ ராத்திரி) இருந்தும் இறைவிக்கு நவராத்திரி கொண்டாடுவதும் ஒரு தத்துவமே. அம்பிகையை "அபின்ன நாயகி ,பாகம் பிரியாள்,பிரியாவிடை என்றெல்லாம் பெயர்கள் இட்டு இறைவனோடு சேர்த்துத் தோடுடைய செவியனாகத் தானே பார்க்கிறோம். "எம் பிராட்டியும் எம் கோனும் எம் இல்லங்கள் தோறும் எழுந்தருள வேண்டும்" என்று திருவாசகம் வேண்டுகோள் விடுத்தபடி, வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, நம்மால் முடிந்த அளவாவது நமது நெறிமுறைகளைப் பின்பற்றினால் பயன் அடையப் போவது நாம் தானே. அந்த அம்மணி சொன்னது போல பலனே இல்லாமல் போனாலும் பின்பற்றுவதால் நஷ்டம் எதுவும் இல்லை என்பது மட்டும் நிச்சயம். 

Saturday, October 20, 2012

சுய நிதிக் கோயில்கள்


சில சமயங்களில் ஏற்கனவே பலமுறை சொன்னதையே  திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. முதல் தடவை சொன்னபோது இரண்டு பேர் காது கொடுத்துக் கேட்டார்கள் என்றால் , இன்னொரு முறை சொன்னால் வேறு இரண்டுபேர் கேட்க மாட்டார்களா என்ற எண்ணத்தால் இப்படித் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தக் காலப் பேச்சாக , "அரைத்த மாவையே அரைக்கிரார்கள்" என்று வேண்டுமானால் சொல்லி விட்டுப் போகட்டும். ஆனால், சொல்ல வேண்டிய தருணங்களில் சொல்ல வேண்டியவைகளை  சொல்லாமல் "நமக்கேன்" என்று மட்டும் இருந்துவிடக் கூடாது. கேட்டால், "சும்மா இருப்பதே சுகம்" என்று விவேகமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறோம்.
நல்லதைக் கேட்பவர்கள் இல்லையோ என்று நமக்குள் பலபேருக்கு சந்தேகம் வரலாம். சொல்கிறபடி சொன்னால் கேட்பவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள்.இதில் துளிக்கூட சந்தேகம் இல்லை. ஆனால் ஒன்று: சொல்பவன் சுயநலம் இல்லாமல் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அவனது வார்த்தைகளில் கேட்பவனுக்குமுதலில்  நம்பிக்கை ஏற்படவேண்டும் ஆகவே, அந்த அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட ஒருவனையே மக்கள் மதிப்பார்கள்.

கிராமங்களில் யாத்திரை செய்யும்போது, அங்கு மக்களை நல்ல பாதையில் சுய நலமில்லாமல் வழி நடத்துபவர்கள் மிகவும் குறைந்து விட்டதால், மக்கள் தன்னிச்சையாகச் செயல் படுவதைக் காண்கிறோம்.தீய வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களைப் பார்த்துத் தாமும் குறுக்குவழியில் குறுகிய காலத்தில் சம்பாதிக்க முனைகின்றனர். மற்றவர்களோ,அவர்களைப் பார்த்துக் குமுறத்தான் செய்ய முடிகிறது. மற்றவர்களை ஏமாற்றிப் பொருள் சம்பாதிக்கவும் துணிந்து விட்டனர். கோயில்களின் நிலையோ பரிதாபத்துக்கு உரியது. கோயில் இடத்தில் வீடுகளில் பரம்பரையாக வசிப்பவர்கள் , முப்பாட்டன் காலத்தில் கொடுத்துக் கொண்டிருந்த அந்த அற்ப வாடகையைக் கூடக் கோயிலுக்குச் செலுத்துவதில்லை. சென்னையிலும் பிற ஊர்களிலும் இவ்வாறு வாடகை பாக்கி , பல கோடிகள் என்று பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. அவ்வாறு  வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை  அந்தக் கோவில்களில் எழுதி வைத்திருக்கிறார்களாம். இதைப் பார்த்தாவது, வாடகையைக் கொடுக்க முன் வருவார்களா பார்ப்போம்.

கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து தரவேண்டிய குத்தகைப் பாக்கியை வசூலிக்க என்ன செய்யப்போகிறார்கள்? பெயரை எழுதி வைத்தால் அவர்கள் கவலைப் படப் போவதாகத் தெரியவில்லை. கோர்ட்டுக்குப் போனால் முடிவு தெரிய பல ஆண்டுகள் ஆகும். அதுவரையில் அனுபவிப்போமே என்று இருக்கிறார்கள் குத்தகைக் காரர்கள். அவர்களைத் தெய்வம் மட்டுமே திருத்த முடியும். மழையே பெய்யாமல் இருந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? வறண்டுபோன நிலத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். இந்த ஆண்டு அப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. காவிரியும் பொய்த்து விட்டது. இப்பொழுதாவது தவற்றை உணர்ந்து திருந்துவார்களா? மழை பெய்தால் ஆறு வேலி நிலமும் , வெள்ளம்  நின்றால் ஆறு வேலி நிலமும் தருவதாக வேண்டிக் கொண்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருப்புன்கூர் இறைவன் அவ்வண்ணமே அருளியபடியால், தன் பிரார்த்தனையை நிறைவேற்றினார். இக்கால விவசாயிகள் அதுபோல் நிலம் தரும் தாராள மனத்தவர்களாக இல்லாவிட்டாலும் , குறுவைப் பயிர்  நன்றாக விளைந்தால் , கோவிலுக்கு உரிய நெல்லை முழுவதுமாகத் தருவார்களா?

குளங்களும் பிற நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப் படுகின்றன. பல கிராமக் கோவில்களுக்கு உள்ளேயே வீடுகள் கட்டி இருக்கிறார்கள். தவறைச் சுட்டிக் காட்டுவோர் யாரும் இல்லாததால் , இறைவனே ஏதாவது வழியில் உணர்த்தியாக வேண்டும்
.
ஒவ்வொரு கோவிலும்  ஒரு நிர்வாக அதிகாரியின் பொறுப்பில் உள்ளது. கோவிலுக்கு வருமானம் இல்லாவிட்டால் அந்தக் கோவிலின் பக்கமே அவர் திரும்பிப் பார்ப்பது கிடையாது. தப்பித் தவறி அக்கோவிலைத் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்பவர்கள் யாராவது முன்வந்தால் , கும்பாபிஷேகப் பத்திரிகையில் எல்லா அதிகாரிகளின் பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கோவில் சார்பில் மரியாதை வேறு செய்ய வேண்டுமாம்! அற்ப சம்பளம் வாங்கும் சிப்பந்திகளுக்கு மாதக் கணக்கில் பாக்கி வைத்திருக்கும் இவர்களுக்குக் கண்டிப்பாக மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்.

இந்த நிலைக்கு யார் காரணம்? மக்கள் தான் என்று நிச்சயமாகக் கூறலாம். நாம் அக்கறை இல்லாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்துவிட்டால் , விளைவுகள் இப்படித்தான் இருக்கும். விமானத்தின் மீது செடிகள் முளைக்கும் போதே பிடுங்கி எறியாமல் இருந்துவிட்டு, அதுவே பெரிய மரமாக வேரூன்றியபின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது போலத்தான் இதுவும்.இவ்வளவையும் பார்க்கும் பொது, அறநிலையத்துறை அவசியமா என்று யார் கேட்கப் போகிறார்கள்?  குறைந்த பட்சமாக, அத்துறையை அரசின் தலையீடு இல்லாமலாவது செய்யலாம் அல்லவா? சுயநிதிக் கல்லூரிகள் இருக்கும்போது, சுயநிதிக் கோவில்களை உருவாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?  

Sunday, September 23, 2012

கற்றதனால் விளையும் பயன் என்ன ??

கல்வி எல்லோருக்கும் வேண்டியது தான். அதில் எந்தவிதமான அபிப்ராய பேதமும் இருப்பதற்கு இல்லை. கல்வி என்பது கண்ணுக்கு சமம் என்று ஔவையார் சொன்னதை ,("எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ") என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்ததை நம்மில் சிலர் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கலாம். அந்தக் கல்வி எப்படிப்பட்டதாக இருந்தால் சிறப்பு என்பதே கேள்வி. அதற்கு விடையாகத் திருவள்ளுவர், " இறைவனது திருவடிகளைத் தொழ கல்வி எதுவாகாவிட்டால் கற்றதனால் விளையும் பயன் என்ன என்று கேட்கிறார்
 
என்ன படிப்பு படித்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் காலத்தில் வேத பாடசாலைகளிலும் ஆகம பாடசாலைகளிலும் படித்தவர்களுமே இவ்வாறு சம்பாத்தியத்தைப் பற்றியே நினைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. தாம் கற்றதை வைத்துக்கொண்டு வெளி நாட்டில் போய் சம்பாதிக்க நினைப்பவர்களும் உண்டு. ஒரு வேளை உள் நாட்டில் இருந்தாலும் , பாராயணம் , ஹோமம், கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு "கை நிறைய" சம்பாதிப்பதையே விரும்புகிறார்களே தவிர, கிராமக் கோயில்களில் நித்ய பூஜை செய்ய முன் வருபவர்கள் குறைவாக இருப்பது வருந்தத் தக்கது. அற நிலையத்துறை தரும் சொற்ப சம்பளமும் உள்ளூரில் ஆதரவு இல்லாததும் இந்த எண்ணத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

நாம் கஷ்டப்பட்டது போல நம் குழந்தைகளும் கஷ்டப் படக் கூடாது என்ற எண்ணத்தில் , சிரமப் பட்டாவது தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது முதல் படி. பெண்களையும் படிக்கவைத்துவிட்டு அதற்கு ஏற்ற வரனைத் தேடும் போது கோயில் பூஜை செய்யும் பையன்களை விரும்பாமல் வேலையில் இருக்கும் பையனைத் தேடுகிறார்கள். இதனால் (கோயில் பூஜை செய்யும் பையனுக்குப் பெண் கொடுக்கத் தயங்குவதால்) பையன்களுக்குக் கல்யாணம் ஆவது மிக மிகக் கஷ்டமாகி விடுகிறது. கிராமத்துப் பையனுக்குப் பெண்ணைக் கொடுக்கவும் தயக்கம் காட்டுகிறார்கள்! கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது இரண்டாவது படி. கிராமத்தில் வசிப்பவருக்கும் ,நகரங்களில் வசிப்பவருக்கும் , இக்கால வசதிகளுக்கு ஆசைப் படுவதில் வித்தியாசம் எதுவும் இல்லை. நகரங்களின் நெரிசலையும் பொருட் படுத்தாமல் குடியேறும் கிராமத்தினர் ஏராளம். நகரத்தில் குடியேறினால் வசதிகளும் வருமானமும் பெருகும் என்ற எண்ணமே இருக்கிறது. கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், நகரத்தில் வாடகை வீடுகளில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது மூன்றாவது படி.

வங்கிகள் கல்விக்கடன் தரத் தயாராக இருப்பதால் எல்லோரும் என்ஜினீயர் ஆகத் துடிக்கிறார்கள். இது ஒன்று மட்டுமே கெளரவம் தரும் தொழிலாக நினைக்கிறார்கள். அப்படி எஞ்ஜினியர்களாக ஆன பிறகு கோயில் பூஜை பக்கம் திரும்பிப் பார்ப்பது சாத்தியமா? மற்றத் தொழில்களும் இதே போல் பாதிக்கப் பட்டுள்ளன. விவசாயிகளோ, நெசவாளிகளோ,கொத்தனார்களோ,தச்சர்களோ, எந்தத் தொழில் செய்தவர்களாக இருந்தாலும் , தங்கள் குழந்தைகளை அதே தொழிலைச் செய்வதை விரும்புவதில்லை. மாறாக,அவர்களைக் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் பல இடங்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

இதை எல்லாம் யாரால் சரி செய்ய முடியும்? அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். வோட்டுக்காக மக்களைப் பிரிப்பதை நிறுத்திக்கொண்டு, சமூக சீர்திருத்தம் செய்ய முனைய வேண்டும். பாரபட்சம் பாராமல் நடந்து கொண்டால் அவரவர்கள் தங்கள் தொழிலை மறக்காமல் இருக்க முடியும். என்ஜினீரிங் கல்லூரிகளை நிறுவியது போதும். பிற தொழில்கல்லூரிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.

கோவில் நிலங்களையும் அவற்றின் குத்தகை பாக்கியையும் வசூலித்துத் தராவிட்டால் அறநிலையத் துறை இருந்தும் என்ன பயன்? அவ்வாறு நெல்லும் சம்பளமும் முறையாகக் கொடுக்கப் பட்டால் அர்ச்சகர்கள் வேறு தொழிலுக்குத் தாவாமல் இருப்பார்கள் அல்லவா? இன்னும் எவ்வளவு காலம் தான் நகரங்களில் குடியேற இடம் கிடைக்கும்? அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டும். எதுவும் செய்து கொடுக்காவிட்டால் கிராமங்கள் எப்படி முன்னேறும்? நகரங்களுக்கு இணையாக அங்கு வருமானமும் வசதிகளும் பெருகினால் மட்டுமே நகரங்கள் ஜனத்தொகைப் பெருக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். வயல்கள் வானம் பார்த்த பூமியாக ஆகிவிட்ட பிறகு, பிளாட் போட்டு விற்பவர்களுக்கும், நதிகளில் மண்ணை அள்ளுபவர்களுக்கும், மலைப் பாறைகளை உடைத்துக் காசாக்குபவர்களுக்கும் கொண்டாட்டம் தான். இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் எல்லோருக்கும் கல்வி என்று முழங்கிக்கொண்டிருந்தால் , படிப்பை முடித்தவர்கள் கிராமப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் போவதில்லை. பணத்தை எண்ணுவது எப்படி என்ற ஆலோசனையில் மூழ்க ஆரம்பித்து விடுவார்கள். கோயில் பூஜைகள் மட்டுமல்ல. நமது பாரம்பர்யத்தையே குழி தோண்டுவதாக அமையும் அபாயம் உருவாகியிருக்கிறது. அதைச் சரி செய்ய இதுவே கடைசி சந்தர்ப்பம். செய்யப்போகிறார்களா பார்க்கலாம்.

Tuesday, September 18, 2012

கோயில் கட்டணங்கள்


உண்டியல் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அறநிலையத் துறை நுழைந்ததும் செய்த முதல் வேலை, உண்டியல் அமைத்ததுதான்! எங்கும் வசூல்,எதிலும் வசூல் என்பதைத்தான் காண நாம் பழகிவிட்டோம் இல்லையா? நுழைவு கட்டணம், சிறப்பு தரிசனக் கட்டணம், அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம், மொட்டை அடிக்கக் கட்டணம், காது குத்தக் கட்டணம், கல்யாணம் செய்ய கட்டணம், தேர் இழுக்கக் கட்டணம் என்று எத்தனையோ வகையான கட்டணங்கள்! இவ்வளவும் போதாதுஎன்று மூலைக்கு மூலை ஆள் உயர  உண்டியல்கள். அதில் மட்டுமே எவ்வளவு வகை தெரியுமா? பிரார்த்தனை உண்டியல், திருப்பணி உண்டியல், தேர் கட்டுமான உண்டியல், விமானத்தில் தங்க/வெள்ளி கலசம் பொருத்த உண்டியல், அன்னதான உண்டியல் என்று இப்படிப் பலவகைகளைக் காண்கிறோம்.

தர்ம தரிசனம் என்பது பெரிய கோயில்களில் ஏதோ "தர்மத்துக்காக " நடப்பதைப் போலத் தோன்றுகிறது. கட்டணம் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று பழகிப் போனவர்களுக்குத் தரும தரிசனத்தில் கால் கடுக்க நிற்பவர்களைப் பற்றி நினைவு கூட வருவதில்லை. சன்னதியை மறைத்துக் கொண்டு நிற்பார்கள். கட்டணம் செலுத்தியதால் தெய்வத்தையே விலை கொடுத்து வாங்கி விட்டதாக நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

ஊரின் பெயரை சொல்லாமல் விஷயத்துக்கு மட்டும் வருவோம். அந்தக் கோயிலில் கட்டுமலை மீது இருக்கும் முக்கிய சன்னிதி எத்தனையோ ஆயிரம் குடும்பங்களுக்குக் குலதெய்வ சன்னிதியாகக் கருதப்படுவது. படிக்கட்டுக்கள் மேல் ஏறிச்  சென்று தரிசிக்க வேண்டுமானால் ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். வெளியூர் காரர் இதைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை. உள்ளூர் பக்தர்கள் தினமும் தரிசிப்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. கீழே நின்றபடியே விமானத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு பிராகாரத்தை வலம் வருகிறார்கள்.

இதற்கு நடுவில், சந்நிதியை மறைத்துக் கொண்டு சஷ்டியப்த பூர்த்தி, சீரியல் ஷூட்டிங் ஆகியவற்றை செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் வரும் வருமானம் வேறு. பரிகாரத் தலங்களில் கோயிலுக்கு வெளியில் கார், வேன் ஆகியவற்றை நிறுத்தப் பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். கேட்டால் கோயில் நிர்வாகம் அதற்குக் "காண்ட்ராக்ட்" விட்டிருப்பதாகக்  கூறுகிறார்கள்.

வழக்கம் போல இந்த ஆண்டும் குல தெய்வமான சுவாமிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப் போனபோது ஆலயக் கட்டணங்கள் அதிகரித்து விட்டதாகச் சொன்னார்கள். 750 ரூபாயாக இருந்த அபிஷேகக் கட்டணம் 1500 ரூபாயாக உயர்த்தப் பட்டு விட்டது. இப்படி உயர்த்திக் கொண்டு போக  வேண்டிய அவசியம் என்ன  என்று புரியவில்லை. நிர்வாகச் செலவுகள் அதிகரித்து விட்டதாகச்  சொல்வார்கள் போலும்! நிர்வாக அதிகாரி ,துணை/இணை கமிஷனர் போன்ற அதிகாரிகளின் சம்பளம் வேண்டுமானால் உயர்ந்து கொண்டே போனாலும், ஆலய சிப்பந்திகளின் சம்பளம் சொல்லிக் கொள்ளும் அளவில் உயர வில்லையே! உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், ஆபரணங்கள் முதலியவை முறையாகச் செலவழிக்கப் படுகின்றனவா? இல்லாத கோயில்களின் திருப்பணிக்குக் கொடுக்கப்படுகிறது என்பார்கள். உண்மை என்ன என்றால் அது போன்ற "இல்லாத" கோயில்களுக்கும் திருப்பணிக்கு ஆகும் செலவில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக செலவுகளுக்கு ஒரு துரும்பு கூட நகர்த்தப் படுவதில்லை. நன்கொடையாளர்களே இதையும் ஏற்றுக் கொண்டால் தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும் என்ற நிலை.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று அன்னதானத்தின் பெருமை அந்தக் காலத்தில் பேசப் பட்டது. தற்கால உண்டியோ (உண்டியலோ) கோயிலுக்கு வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு மட்டும் அமைக்கப் பட்டுள்ளதாகக் கருத வேண்டியிருக்கிறது. ஆள் உயர உண்டியல்களை நிரப்ப நாம் தயாராக இருக்கும் போது அமைத்தவர்களுக்கு என்ன கவலை? உண்டியல் வருமானம் சொற்பமே உள்ள கோயில்களைப் பற்றியும் எவ்வளவு பேர்  கவலைப் படப் போகிறார்கள் ?  

Saturday, September 1, 2012

ஆலய பராமரிப்பு


கோயில் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நித்திய பூஜைகள் ஆகம விதி முறைகளோடு நடத்தப்பெறுவதும் ஆகும். ஆலய  விமானங்களிலும் கோபுரங்களிலும் ப்ராகாரங்களிலும் எத்தனையோ ஆண்டுகள் புதர் மண்டிக் கிடந்தாலும் , அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணமே திருப்பணி செய்யும்போது தான் வருகிறது. மாதம் ஒரு முறை சிறு செடிகளாக இருக்கும் போதே அவற்றை மிக எளிமையாக நீக்கி விடலாம். அலட்சியத்தால் இவை பெரிய மரங்களாக வேரூன்றி மாரிக்காலத்தில் நன்கு வளர்ந்து, கோயிலில் பல இடங்களில் பிளவுகளை உண்டாக்கிய பிறகு தானே நாம் விழித்துக் கொள்கிறோம்! அந்த சமயத்தில் இம்மரங்களை அகற்றுவது சுலபமான வேலை இல்லை. பழைய கட்டமைப்பை அகற்றிவிட்டு, மரத்தை வேரோடு வெளியே எடுத்துவிட்ட பிறகு, மீண்டும் பழையபடியே  அவ்வமைப்பைக் கட்ட வேண்டியிருக்கிறது. இதற்கு ஆகும் செலவை நாம் முன்நடவடிக்கை எடுப்பதால் தவிர்க்க முடியும். உழவார மன்றங்கள் பல அரும் பணி ஆற்றியும் , எதிர் பார்த்த பலன் இல்லை. மரங்களை முழுவதுமாகக் கட்டிடத்திலிருந்து  வேரோடு நீக்காமல் வெட்டுவதால் அவை அழிக்கப்படுவதில்லை. மாறாக, அடுத்த மழை ஆரம்பித்த உடனேயே, அவை ஆக்ரோஷமாக வளர ஆரம்பித்து விடுகின்றன.

விமானங்களிலும் கோபுரங்களிலும் வேரூன்றிய மரங்களை அழிக்க ஒரு கெமிக்கல் , சென்னை நிறுவனம் ஒன்றால் ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. இது பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்பட பின்னர், நமது சபை , பரிட்சார்த்தமாக ஒரு கோயிலில் பயன் படுத்தி , மரங்கள் அழிவதை உறுதி செய்தபிறகு, பிற ஆலயங்களிலும் இப்பணியைச் செய்ய எண்ணியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கும்போது ஏதோ ஒரு சிலர் மட்டும் இதைச்செய்ய முன் வந்தால் போதாது. பல ஆலயங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் நம்மில் பலர்  செயல் பட்டே ஆக வேண்டும்.

கோயிலைப் பராமரிப்பது போலவே, ஆலய பூஜைகள் எக்குறையும் இல்லாமல் நடைபெற வகை செய்ய வேண்டும். ஆலயப் பணியாளார்கள், அறநிலையத்துறை தரும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவது மிகக் கடினம் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்தும் அர்ச்சகர்களுக்கு முறையாகப் போதிய சம்பளம் தரப்படுவதில்லை. ஆன்மீக அன்பர்கள் பலர் தாமே முன்வந்து தம்மால் இயன்ற உதவியைப் பல இடங்களில் செய்து வருகிறார்கள். கிராமங்களில் இருக்கும் பல பாடல் பெற்ற தலங்களில் அர்ச்சகர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இந்நிலையில் , திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாலயங்களுக்கு அர்ச்சகர்களை ஏற்பாடு செய்து, நித்திய பூஜை நடைபெறச் செய்வது பாராட்டுக்கு உரியதாகும். சிவாகம நெறிகளையும், தெய்வத் தமிழையும், புரந்து வரும் ஆதீனத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் .

திருவாவடுதுறை ஆதீனம் , நந்தவனங்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்துவதை, நேரில் கண்டவர்கள் அறிவார்கள். சமீபத்தில், தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற தலத்தில் மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவை முன்னிட்டு, ஆதீனத்திலிருந்து பணியாட்கள் உழவாரப் பணிக்காக அனுப்பப் பெற்றனர். அவர்களே, பூச் செடிகளை நட்டுவிட்டு, நீர் ஊற்றினார்கள் என்பதை நேரில் கண்டபோது மனம் நன்றி கூறியது.

ஆதீனத்தின் ஆன்மார்த்த மூர்த்தி ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதால், கூத்தப்பெருமான் , சிவகாமவல்லி ஆகிய மூர்த்திகளை ஸ்ரீ மகா சந்நிதானம் அவர்கள் இக் கோயிலுக்கு அருட் கொடையாக வழங்கி, பெருமானின் ஆறு அபிஷேகங்களையும் திரு மடமே ஏற்கும் என அறிவித்ததுடன், பிரதிஷ்டைக்கும் தாமே நேரில் வந்து கலந்து கொண்டு அன்பர்களை ஆசீர்வதித்தார்கள். அவர்களுக்கு சைவ உலகம் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையது.

சிவாலயங்களில் முறைப்படி பூஜைகள்  நடக்க வேண்டும் என்பதால் , பூஜை நின்றுபோன கோயில்களில் அதை மீண்டும் துவக்கும் எண்ணத்துடன்,அண்மையில் ஒரு தமிழ் நாளிதழில் அர்ச்சகர்களை  இதற்காக விண்ணப்பிக்க வேண்டி ஆதீனம் கேட்டுக்கொண்டுள்ளது.பிறருக்கு முன்னோடியாகத் திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாறு முனைந்துள்ளது அனைவராலும் வரவேற்கத்தக்கது.

வெளியூர் அன்பர்களும், ஆதீனங்களும் இத்தனை தூரம் உதவ முன்வந்துள்ளபோது, உள்ளூர் அன்பர்களும் தங்களால் ஆன ஒத்துழைப்பைத் தருவதோடு, வழிபாட்டில் கலந்துகொண்டு, ஆலயம் சீரும் சிறப்புமாகத்திகழ வகை செய்ய வேண்டும் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
திருக்குளத்தைத் தூர் வாரும் பணியையாவது உள்ளுர் அன்பர்கள் ஏற்றுப் போற்ற வேண்டும். இதனால்,  வடிகால்கள் மூலம் நீர் குளத்தில் விடப்பட்டு நிலத்தடி நீர் வளம் பெறுமாதலால், பஞ்சாயத்துக்கள் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். வெய்யில் காலத்தில் குளம் வறண்டு கிடக்கும் போது, நிலங்களில் வேலை செய்பவர்கள் ஊதியம் பெறவும் இதன் மூலம் ஏற்பாடு செய்யலாம் அல்லவா? நூறு நாள் வேலை என்கிறார்களே, அதில் ஒன்றாகத் தூர் வாரும் இப்பணியை மேற்கொள்வதால் ஊரும்  நலம் பெறும். சிவ புண்ணியமும் கை கூடும்.

Thursday, August 16, 2012

கணபதியின் கருணை மழை


சித்தர் பூமியில் அன்றும் இன்றும் அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. வானில் சென்ற சித்தர் பெருமான்  கீழே, மாடுமேயப்பவனான மூலன் என்பவன் இறந்ததால் அவனைச் சுற்றி நின்று கண்ணீர்  வடிக்கும் பசுக்களைக் கண்டு இரங்கி, அவனது உடலுள் புகுந்து பசுக்களின் துயரம் தீர்த்தார்.அதனால் திருமூலர் என்ற பெயரும் பெற்றார். இது நடந்தது சாத்தனூர் என்ற ஊரில். மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சிறிய கிராமம். பழங்காலத்தில் மிகப் பெரிய கிராமமாகத் திகழ்ந்து வந்தது என்பதை இதன் எல்லைக்குட்பட்டதாகக் கொண்டு  திருவாவடுதுறையைப் பாடியிருப்பதை  திருவிசைப்பாவின் மூலம் அறிகிறோம். சாத்தனூர் என்பதைச் சுருக்கமாகச் சாந்தை என்று சேந்தனார் குறிப்பிட்டிருக்கிறார். எனவே,  திருவாவடுதுறை தற்போது 3 கி. மீ. தொலைவில் இருந்தாலும், சாத்தனூரைச் சேர்ந்ததாக  இருந்தது என்று அறிகிறோம். இங்கு தனிக் கோயில் கொண்டுள்ள  சாஸ்தா, பல குடும்பங்களுக்குக்  குல தெய்வமாக விளங்குகிறார். சாத்தன் என்பது சாஸ்தாவைக்  குறிக்கும்.அதுவே சாத்தனூர் என்று ஆயிற்று. இந்த எல்லையில் ஐந்து சிவாலயங்களும், ஒரு விஷ்ணு ஆலயமும், உண்டு. எனவே இதனைப் பஞ்ச லிங்க க்ஷேத்ரம் என்பார்கள்.

திருவாவடுதுறையிலுள்ள கோமுக்தீச்வர ஸ்வாமி ஆலயம் மூவர் தேவாரமும் திருவிசைப்பாவும் பெற்றது. நவகோடி சித்தபுரம்  எனப்படுவது. இங்குள்ள அரச மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்து திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை அருளினார் திருமூலர். தனது தந்தை செய்யும் சிவ யாகத்திற்காகப் பொருள் வேண்டி, ஞானசம்பந்தரும் இறைவனிடம் பதிகம் பாடி ,ஆயிரம் பொன் பெற்றார். இந்த ஆலயம், திருவாவடுதுறை ஆதீனத்தால் திருப்பணிகள் அவ்வப்போது செய்யப்பெற்று, மிக நேர்த்தியாகப் பரிபாலிக்கப்படுகிறது.

சாத்தனூரில் உள்ள நான்கு சிவாலயங்களுள் முதலாவது, சித்தீச்வர ஸ்வாமி ஆலயமாகும். இங்கு திருமூலர் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அவரது திருவுருவமும் கோயிலில் இருக்கிறது. ஸ்வாமி நீண்ட பாணத்துடன்காட்சி அளிக்கிறார். அம்பிகை, ஆனந்த கௌரி என்ற பெயருடன் தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இக்கோயிலில் உள்ள விமான சுதை வேலைப்பாடு சிறப்பானது.

இதே ஊரின் மறு புறம், காசி விச்வநாத சுவாமி ஆலயம் இருக்கிறது. மிகவும் சிதிலம் அடைந்து இருந்த இக்கோயிலைச் சென்ற ஆண்டு புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். விசாலாக்ஷி சன்னதி தென்முகம் நோக்கியது.

ஊரின் கோடியில் மிகப்பெரிதாக இருந்த ஐராவதீச்வரர் கோயில் ,பாழடைந்து, சுற்றிலும் மரங்களும் புதர்களுமாகக் காட்சி அளித்தது. சுற்றிலும் வயல்கள். சுவாமியின் மிகப்பெரிய பாணம் ஒன்றே எஞ்சிய நிலையில், அதனை ஒரு கொட்டகைக்குள் வைத்திருக்கிறார்கள். அருகிலிருந்த புதர்களை அகற்றி, ஸ்வாமி சன்னதி எழுப்பப் படுகிறது. இம்முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியதொன்றாகும். அன்பர்கள் ஆதரவு இதற்கு மிகவும் தேவைப் படுகிறது.

ஊருக்குள் இருக்கும் மற்றொரு சிவாலயம், கைலாசநாதர் கோயில் எனப்படுகிறது. இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டபிறகே, பிற சிவாலயங்களின் திருப்பணிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் துவக்கப்பட்டன. இக்கோயிலுக்கும் , சித்தீச்வரர், விச்வநாதர் கோயில்களுக்கும் செய்யப்பட திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்களில் நமது சபை முக்கிய பங்கு ஆற்றும் பாக்கியம் பெற்றது.

கைலாசநாதர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும், முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள். பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல் மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள். எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை யாகப் பெய்ததால்  பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே, விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.

இந்த வருஷம், ஆடி மாதம் முடிந்தும், காவிரி நீர், மேட்டூர்  அணையிலிருந்து திறக்கப் படவில்லை. நெல் விதைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் சாத்தனூர் வாசிகள் சிலர் மிகவும் கவலையுடன் , தென்னை மரங்களும் கடும் கோடையால் வாடுவதைத் தெரிவித்து, ஆலங்கட்டி விநாயகருக்கு அபிஷேகம் செய்ய அழைப்பு விடுத்தார்கள். இதற்கு நம்மாலான ஒத்துழைப்பை அளிப்பதற்காக , மற்றுமோர் அன்பருடன்  சாத்தனூர் சென்றோம். வாய்க்கால் ,குளங்கள், கிணறுகள் எல்லாம் வறண்டு கிடந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியையே காணோம். வெயிலோ அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. மறு நாள் காலையில் அபிஷேகம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஆகிவிட்டது. மனத்தில் மாத்திரம் கவலை-- மழை  வர வேண்டுமே என்று. அதே நேரத்தில் , விநாயகர் அருள் இருந்தால் மேகங்கள் எப்படியும் வந்து விடும் என்ற திடமான நம்பிக்கையும் இருந்தது.

காலையில் வழக்கம் போல சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. 9 மணி அளவில் ஒருவர் வந்து, கைலாசநாதர்  கோவில் அருகில் ஒரு பெரியவர் மரணமடைந்து விட்டதாகக் கூறினார்.விசாரித்ததில் அந்த இடம் கோயிலுக்கு மிகவும் தள்ளி இருந்தது. இன்னும் ஒருவர், பம்ப் செட் மூலம் ஒரு சில வயல்களில் அன்று காலை விதை விதைத்திருப்பதாகவும், மழை பெய்தால் அவ்வளவும் வீணாகி விடும் என்றும் சொன்னார். நாம் ஆசைப்பட்டபடி சன்னதியை அடைத்து, அபிஷேகம் செய்ய முடியாமல் இவ்வளவு தடைகள் ஏற்பட்டன. இருந்தாலும் பிள்ளையாருக்கு வழக்கமான அபிஷேகத்தையாவது செய்து, மழைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு ஊருக்குத் திரும்புவது என்று முடிவு எடுத்தோம். கணபதி உபநிஷத், ருத்ரம் , திருமுறைப் பாராயணம் ஆகியவற்றோடு விநாயகருக்கு அபிஷேகங்கள் நடை பெற்றன. ஒரு சில மணி நேரத்துக்குப் பின் கரிய மேகங்கள் எங்கிருந்தோ வந்து சாத்தனூரைச் சூழ்ந்து கொண்டன. எங்களுக்கோ மாலையில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மழையில் மாட்டிக கொள்வோமோ என்ற அச்சமும் இருந்தது.  ரயிலடி போய்ச சேரும் வரையில் மழை பெய்யாமல் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். தூறல் மட்டும் பலமாக இருந்தது.

மறுநாள் காலை ஊருக்கு வந்துவிட்டு, மதியம் சாத்தனூருக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, அங்கு அடை மழை பெய்து வருவதாகவும்,  ஊரார் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும்  தெரிவித்தார்கள். இதை விட சந்தோஷம் தரும் செய்தி இருக்க முடியுமா? ஆலங்கட்டி விநாயக மூர்த்தியின் அழகிய திருவுருவம் கண் முன்னே நின்றது.