Saturday, September 1, 2012

ஆலய பராமரிப்பு


கோயில் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நித்திய பூஜைகள் ஆகம விதி முறைகளோடு நடத்தப்பெறுவதும் ஆகும். ஆலய  விமானங்களிலும் கோபுரங்களிலும் ப்ராகாரங்களிலும் எத்தனையோ ஆண்டுகள் புதர் மண்டிக் கிடந்தாலும் , அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணமே திருப்பணி செய்யும்போது தான் வருகிறது. மாதம் ஒரு முறை சிறு செடிகளாக இருக்கும் போதே அவற்றை மிக எளிமையாக நீக்கி விடலாம். அலட்சியத்தால் இவை பெரிய மரங்களாக வேரூன்றி மாரிக்காலத்தில் நன்கு வளர்ந்து, கோயிலில் பல இடங்களில் பிளவுகளை உண்டாக்கிய பிறகு தானே நாம் விழித்துக் கொள்கிறோம்! அந்த சமயத்தில் இம்மரங்களை அகற்றுவது சுலபமான வேலை இல்லை. பழைய கட்டமைப்பை அகற்றிவிட்டு, மரத்தை வேரோடு வெளியே எடுத்துவிட்ட பிறகு, மீண்டும் பழையபடியே  அவ்வமைப்பைக் கட்ட வேண்டியிருக்கிறது. இதற்கு ஆகும் செலவை நாம் முன்நடவடிக்கை எடுப்பதால் தவிர்க்க முடியும். உழவார மன்றங்கள் பல அரும் பணி ஆற்றியும் , எதிர் பார்த்த பலன் இல்லை. மரங்களை முழுவதுமாகக் கட்டிடத்திலிருந்து  வேரோடு நீக்காமல் வெட்டுவதால் அவை அழிக்கப்படுவதில்லை. மாறாக, அடுத்த மழை ஆரம்பித்த உடனேயே, அவை ஆக்ரோஷமாக வளர ஆரம்பித்து விடுகின்றன.

விமானங்களிலும் கோபுரங்களிலும் வேரூன்றிய மரங்களை அழிக்க ஒரு கெமிக்கல் , சென்னை நிறுவனம் ஒன்றால் ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. இது பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்பட பின்னர், நமது சபை , பரிட்சார்த்தமாக ஒரு கோயிலில் பயன் படுத்தி , மரங்கள் அழிவதை உறுதி செய்தபிறகு, பிற ஆலயங்களிலும் இப்பணியைச் செய்ய எண்ணியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கும்போது ஏதோ ஒரு சிலர் மட்டும் இதைச்செய்ய முன் வந்தால் போதாது. பல ஆலயங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் நம்மில் பலர்  செயல் பட்டே ஆக வேண்டும்.

கோயிலைப் பராமரிப்பது போலவே, ஆலய பூஜைகள் எக்குறையும் இல்லாமல் நடைபெற வகை செய்ய வேண்டும். ஆலயப் பணியாளார்கள், அறநிலையத்துறை தரும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவது மிகக் கடினம் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்தும் அர்ச்சகர்களுக்கு முறையாகப் போதிய சம்பளம் தரப்படுவதில்லை. ஆன்மீக அன்பர்கள் பலர் தாமே முன்வந்து தம்மால் இயன்ற உதவியைப் பல இடங்களில் செய்து வருகிறார்கள். கிராமங்களில் இருக்கும் பல பாடல் பெற்ற தலங்களில் அர்ச்சகர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இந்நிலையில் , திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாலயங்களுக்கு அர்ச்சகர்களை ஏற்பாடு செய்து, நித்திய பூஜை நடைபெறச் செய்வது பாராட்டுக்கு உரியதாகும். சிவாகம நெறிகளையும், தெய்வத் தமிழையும், புரந்து வரும் ஆதீனத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் .

திருவாவடுதுறை ஆதீனம் , நந்தவனங்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்துவதை, நேரில் கண்டவர்கள் அறிவார்கள். சமீபத்தில், தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற தலத்தில் மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவை முன்னிட்டு, ஆதீனத்திலிருந்து பணியாட்கள் உழவாரப் பணிக்காக அனுப்பப் பெற்றனர். அவர்களே, பூச் செடிகளை நட்டுவிட்டு, நீர் ஊற்றினார்கள் என்பதை நேரில் கண்டபோது மனம் நன்றி கூறியது.

ஆதீனத்தின் ஆன்மார்த்த மூர்த்தி ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதால், கூத்தப்பெருமான் , சிவகாமவல்லி ஆகிய மூர்த்திகளை ஸ்ரீ மகா சந்நிதானம் அவர்கள் இக் கோயிலுக்கு அருட் கொடையாக வழங்கி, பெருமானின் ஆறு அபிஷேகங்களையும் திரு மடமே ஏற்கும் என அறிவித்ததுடன், பிரதிஷ்டைக்கும் தாமே நேரில் வந்து கலந்து கொண்டு அன்பர்களை ஆசீர்வதித்தார்கள். அவர்களுக்கு சைவ உலகம் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையது.

சிவாலயங்களில் முறைப்படி பூஜைகள்  நடக்க வேண்டும் என்பதால் , பூஜை நின்றுபோன கோயில்களில் அதை மீண்டும் துவக்கும் எண்ணத்துடன்,அண்மையில் ஒரு தமிழ் நாளிதழில் அர்ச்சகர்களை  இதற்காக விண்ணப்பிக்க வேண்டி ஆதீனம் கேட்டுக்கொண்டுள்ளது.பிறருக்கு முன்னோடியாகத் திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாறு முனைந்துள்ளது அனைவராலும் வரவேற்கத்தக்கது.

வெளியூர் அன்பர்களும், ஆதீனங்களும் இத்தனை தூரம் உதவ முன்வந்துள்ளபோது, உள்ளூர் அன்பர்களும் தங்களால் ஆன ஒத்துழைப்பைத் தருவதோடு, வழிபாட்டில் கலந்துகொண்டு, ஆலயம் சீரும் சிறப்புமாகத்திகழ வகை செய்ய வேண்டும் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
திருக்குளத்தைத் தூர் வாரும் பணியையாவது உள்ளுர் அன்பர்கள் ஏற்றுப் போற்ற வேண்டும். இதனால்,  வடிகால்கள் மூலம் நீர் குளத்தில் விடப்பட்டு நிலத்தடி நீர் வளம் பெறுமாதலால், பஞ்சாயத்துக்கள் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். வெய்யில் காலத்தில் குளம் வறண்டு கிடக்கும் போது, நிலங்களில் வேலை செய்பவர்கள் ஊதியம் பெறவும் இதன் மூலம் ஏற்பாடு செய்யலாம் அல்லவா? நூறு நாள் வேலை என்கிறார்களே, அதில் ஒன்றாகத் தூர் வாரும் இப்பணியை மேற்கொள்வதால் ஊரும்  நலம் பெறும். சிவ புண்ணியமும் கை கூடும்.

No comments:

Post a Comment