Thursday, July 12, 2012

இரு வைபவங்கள்


"அவன் அன்றி ஓர் அணுவும்  அசையாது " என்பது சத்தியமான வார்த்தை. இதை அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்வையும் அவனே வழங்கி அருள வேண்டும். "உன்னை உன்னும் உணர்வை நல்காய்" என்று திருவொற்றியூர் பெருமானிடம் வரம் வேண்டுகிறார்  திருநாவுக்கரசர். "உணர்வித்தால் ஆர் ஒருவர் உணராதாரே ? " என்று அவரே வேறு ஓர் பாடலில் பாடுவார். அப்படி உணர்ந்துவிட்டால் இறை தொண்டு ஆற்றும் பேறும் கிடைத்து விடுகிறது. அத்தொண்டர்களுக்குத் தூய நெறியாகத் தானே முன்னின்று வழி காட்டுகிறான் சிவபெருமான்.

 அப்பர் பெருமானால் பாடப்பெற்ற திருத்தலையாலங்காடு ஆலயத் திருப்பணியிலும் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கும் அரிய பேற்றினை நமது சபை பெற்றது. ஆலய மடப்பள்ளி,திருக்குளம்,நந்தவனம் ஆகியவை திருத்தம் பெறவும், சுப்பிரமணியர்,துர்க்கை ஆகிய நூதன விக்ரகங்கள் அமைக்கவும், சபாபதிக்கு ந்ருத்த சபை அமைக்கவும்,சபை அன்பர்கள் உதவி புரிந்தனர். தவிரவும் நண்பர்கள் மூலமாக யாகசாலை வஸ்திரங்களுக்கும், கட்டுமானப் பொருளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 திருவாவடுதுறை ஆதீன கர்த்தரும், கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தும்,அதனை இடிக்க ஆட்களும் தந்தருளியதோடு, தாமே மூன்றாம் கால பூஜைக்கு எழுந்தருளினார்கள். நாம் விண்ணப்பித்ததற்கு செவி சாய்த்து, ஆதீன சார்பில் ஆடல் வல்லானின்  திருவுருவத்தைக் கோயிலுக்கு அமைத்துத் தருவதாகக் கருணை பாலித்தார்கள். ஆண்டுதோறும் செய்யப்படும் ஆறு அபிஷேகங்களையும் ஆதீன உபயமாகச் செய்து தருவதாக அருளியுள்ளார்கள். அவர்களது கருணைத்திறம் அளவிட ற்கு அரியது . கும்பாபிஷேக வைபவம் 8.7.2012 ஞாயிறன்று மிகச் சிறப்பாக நடந்தது.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியாக ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பெற்றது.கும்பாபீஷேகத்திற்குப் பிறகு ஆசார்யஉற்சவமும் , மாலையில் திருக்கல்யாணமும் ,திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. இவற்றை ஏற்ற இறைவனும் மழை பொழிந்து ஊரையும் உள்ளத்தையும் குளிர்வித்தான்.

இறை பணிசெய்வதோடு இறைவனுக்குப் பணி செய்பவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவுடன் நமது சபை , கிராமக் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வருகிறது. கடந்த 9.7.2012 திங்களன்று திருக்கடவூருக்கு அருகில் உள்ள ஆக்கூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வயம்புநாத ஸ்வாமி ஆலயத்தில் , ஹோமம், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை நிகழ்த்தப்பெற்று, ஆக்கூர், செம்பனார்கோயில், மா(மா)குடி, திருப்பறியலூர்,திருவிடைக்கழி ஆகிய தலங்களின் சிவாசார்யர்கள் கௌரவிக்கப்பெற்றனர்.
 ஒவ்வொரு சிவாசார்யதம்பதிக்கும் பாத பூஜை, அர்ச்சனை, ஆகியவை செய்யப்பெற்று,புது வஸ்திரங்களும்,சௌபாக்ய திரவியங்களும் தலா ரூ 2000 மும் அளிக்கப்பெற்றன. திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்  கருணையுடன் வழங்கிய வஸ்திரமும் உதவித்தொகையும் ஒரு சிவாசார்ய தம்பதிக்கு வழங்கப்பெற்றது. ஆதீனத்திலிருந்து கட்டளைத் தம்பிரான் ஸ்வாமிகள் வந்திருந்து நிகழ்ச்சியைச்  சிறப்பித்தார்கள்.  அனைவருக்கும் அன்னம் பாலிப்பு செய்விக்கப் பெற்ற பின்னர் விழா  இனிதே நிறைவேறியது. " முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்ற சுந்தரர் வாக்கை நமக்கு உணர்வித்த இறையருளுக்கு என்ன கைம்மாறு செய்ய  முடியும்?

Saturday, June 16, 2012

யாருக்கு வெற்றி ?


ஆனித் திருமஞ்சனம் பற்றிய ஒரு வலைப்பதிவைக் காண நேரிட்டது. அதைப் படித்த பெண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வலைப்பதிவாளர் பதில் தந்தாரா என்று தெரியவில்லை. அதாவது, கேள்வி இதுதான். இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய போது இடது திருவடியை  உயரத் தூக்கி ஆடினான். பெண்என்பதால் அவ்வாறு ஆடக் கூடாது என்று , காளிதேவி வாளா இருந்துவிட்டதை எப்படி அவள் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ள முடியும் என்பதே அவரது வினா. சரிபாதி பெண்மைக்குத் தந்த ஒரே தெய்வம் சிவபெருமான் என்பதை இப் பெண்மணி மறந்துவிட்டார் போலும்! எமனைக் காலால் உதைத்ததை சக்தி உபாசகர்கள் என்ன  சொல்வார்கள் தெரியுமா? உதைத்தது இடது கால் என்பதால் அன்னைக்கே அந்தப் புகழ் உரியது என்பார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும்போதும் தூக்கிய திருவடி அன்னை பாகத்தைச் சேர்ந்தது அல்லவா என்பார்கள். அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மதுரையில் சோமசுந்தரப் பெருமான் செய்திருந்த போதிலும், அக்கோவிலை மீனாக்ஷி கோவில் என்றல்லவா மக்கள் சொல்கிறார்கள்! இதில் தெய்வ தம்பதிகளிடையில் வெற்றி - தோல்வி என்பதேது?

நாம் தாழ்ந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. உண்மையில் அவர்களே உயர்ந்துவிட்டவர்கள் என்பதை இன்னமும் உணரவில்லை. ஒரு வீட்டை எடுத்துக்கொண்டால், க்ரஹிணி என்று பெண்ணே எஜமானியாகச்  சித்தரிக்கப்படுகிறாள். ஒரு வேதியருக்கு அக்னி ஹோத்திரம் செய்யும் உரிமை அவரது மனைவி கூட இருக்கும் வரையில்தான்.

காளி இறைவனுக்குப் போட்டியாக ஆடியது இருக்கட்டும். மனோன்மணியாகிய பராசக்தி, அப்பெருமானது பாகம் பிரியாத நாயகி தானே . அவள் ஆடியதாகச் சொல்லப்படுவதில்லை. "உமையவள் காண ஆடிய அழகா" என்றே திருமுறை பகர்கிறது. கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோவிலில், நடராஜப் பெருமான் ஆடும்போது,அம்பிகை தாளம் போட்டுக் கொண்டு, தன் நாயகனின் ஜதி பிழையாத ஆடலைக் கண்டு மகிழ்வதைத் தரிசிக்கலாம்.

கணவன் ஈட்டும் புண்ணியத்தில் ஒரு பாதி மனைவியைச் சேரும் ; ஆனால் அவனது பாவத்தில் எள்ளளவும் மனைவியைச் சேராது. அதே நேரத்தில், மனைவியின் புண்ணியத்தில் ஒரு சிறிதும் கணவனை அடைவதில்லை. அவளது பாவத்தில் ஒரு பங்கு மட்டும் கணவனை அடைவதாகப் பெரியோர்கள் கூறுவர். பூஜை, ஜபம் ஆகியவற்றை செய்யாமலே, கணவன் செய்யும் பூஜைக்கு உதவினாலே போதும். இவளுக்குப் பூஜை செய்த பலன் கிடைத்திவிடுகிறது. "உன்னடியார் தாள் பணிவோம்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்" என்ற திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கற்பாலான. இப்படிச் சொல்வதால் மனைவிக்குத் தெய்வ பக்தியே வேண்டாம் என்று பொருள் கொள்ளக் கூடாது. பதி- பக்தியின் மேன்மையைச் சொல்லி அப்படிப்பட்ட பெண் "பெய்" என்றால் மழை பெய்யும் என்றார் திருவள்ளுவரும். உனக்குப் பணி செய்யும் அடியவர்களே எங்கள் கணவராகும் வரத்தைக்கொடுப்பாயாக என்று பெண்கள் மார்கழி நோன்பு நோற்பதைத் திருவெம்பாவையில், " உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம் ;ஆங்கு அவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்" என்று மாணிக்க வாசகப் பெருமான் அருளியுள்ளதைக் காண்க. கல்யாண நலங்குகளில் தம்பதிகள் தேங்காயை ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிடுங்குவது போல அமைத்திருந்தாலும் , அப்படிப் பிடுங்கி, வெற்றி-தோல்வி என்று ஆகி விடாமல் விட்டுக் கொடுக்கும் மனப்  பான்மையை உண்டாக்குவதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.(சுற்றிலும் இருந்து வேடிக்கை பார்பவர்கள், "விடாதே, கையிலிருந்து பிடுங்கி விடு" என்று சொல்லாமல் இருந்தால் தம்பதிகளே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தொடங்கி விடுவர்.)  

சக்தியின் அம்சமான காளி தேவி , பரமேச்வரனை வழிபட்ட தலங்களுள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள காளி என்ற தலமும் ஒன்று. அவ்வாறு அவள் செய்த பூஜையின் பலனைப் பார்த்தீர்களா? ஊரின் பெயரே அவள் பெயரில் தான் இருக்கிறது. அதேபோல், பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள அம்பர்  மாகாளம் என்ற தலத்தில், அம்பராசுரனை வதம் செய்த காளி, சிவபூஜை  செய்ததால், ஊரின் பெயர் மாகாளம் ஆனதோடு, சுவாமியின் பெயரும் மாகாள நாதர் ஆயிற்று. இவ்வூரைப் பாடிய ஞானசம்பந்தக் குழந்தை, காளி வழிபட்டதைச் சொல்லும்போது, "நம் காளி " என்று மிக்க உரிமையோடு அம்பிகையைக் குறிக்கிறார்.

எனவே, ஆலங்காட்டில் காளியை வென்ற வெற்றிக்களிப்பில் இறைவன் ஆடவில்லை. அப்படி ஆடியிருந்தால் , காளி தோற்றதாகக் கொள்ளலாம். காளிக்கு அருள் அல்லவா செய்தான்! இப்படிச் சொல்கிறது திருவாசகம்:

" .. பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய
திருமுகத்து , அழகு உறு சிறுநகை இறைவன் ..."

இப்படியாகக் காளியும் , கயிலைமலை வல்லியும் மனமகிழத் தாண்டவம் நடைபெறும்போது, யார் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும்? தேவி மனமகிழ ஆடல் காட்டியதை அவனது திருவிளையாட்டாகக் கொண்டால் யாருக்கு வெற்றி என்ற வினாவே எழாது.  

Thursday, June 7, 2012

உதவிகள் பலவிதம்


உதவிகள் பலவகைப்படும். அவற்றுள் அறம் சார்ந்த உதவிகள் உயர்ந்தவை. ஒரு மரம் கூட நமக்கு நிழல் தந்து உதவும்போது, நாமும் அவ்வகையில் ஏதாவது செய்ய வேண்டாமா? இந்தக் காலத்தில் பிச்சைக் காரனுக்கு காசு போடுவதும் உதவி எனப்படுகிறது. எத்தனையோ பிச்சைக் காரர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒரு வேளை இதை எதிர்பார்த்துத்தான் ,"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்றார்களோ?

இதில் அரசாங்கமும் ஒன்றும் சளைத்ததாகத் தெரியவில்லை. ஊக்குவித்தல் என்ற பெயரில் லக்ஷக் கணக்கிலும், ஏன், கோடிக் கணக்கிலும் வரிப்பணத்தை செலவழிக்கிறார்கள். மக்கள் மத்தியில் பெயர் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அத்திரையைச் சேர்ந்த எத்தனை பேர் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? கோடீஸ்வரர்களாகத் திகழும் விளையாட்டு வீரர்களும் அகாடமி ,ஹோட்டல் என்று ஏற்படுத்தி வருமானத்தைப் பன் மடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பெறும் பரிசுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேறு!! விளம்பரத்தின் மூலமாக மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் எத்தனை பேர் பிறருக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்?

அண்மையில் ஒரு விளையாட்டு வீரர் உலக அளவில் வெற்றி பெற்றபோது, பாராட்டுவதோடு நிற்காமல் , இதற்கு முன் நான் அவருக்கு இவ்வளவு லட்சங்கள் கொடுத்தேன் என்றார் ஒருவர் . இதைக் கேட்ட இன்னொருவர் நான் அதற்கும் மேலே தருகிறேன் என்று அவருக்கு சில கோடிகள் கொடுத்தார். இப்படிப் பரிசுமழை பெற்றவர் ஒன்றும் வசதி இல்லாதவர்  இல்லை. வரிப்பணம் வீணாகப் போகிறதே என்று ஒரு வாசகர் தமிழ் நாளிதழில் எழுதியிருந்தார். விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அதற்காக இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளித் தர வேண்டுமென்பதில்லை.

ஆலய சிப்பந்திகளின் அவல நிலையைப் பற்றிப் பலமுறை குரல் கொடுத்து வருகிறோம். அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும் செவி மடுப்பதாகத் தெரியவில்லை. வசதி உள்ள இடங்களுக்கே உதவியும் ஊக்கமும் போய்ச்  சேருகின்றன. சமூக சேவை என்பது கல்விக்கும் உடல் நலத்துக்கும் மட்டுமே செய்யப்பட வேண்டியதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையில் தத்தளிக்கும் மற்றவர்களைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்களோ தெரியவில்லை. சேவை வரி, கல்வி வரி ஆகியவை மூலமாகவும் நிதி திரட்டுகிறார்கள். ஆனால், உண்டியல்கள் , பிற வருமானங்கள் மூலம் கோயில்களுக்கு வரும் நிதியைக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கணிசமாகக் கொடுக்கப்படுவதுபோல் ஆலய சிப்பந்திகளுக்கும் ஏன் கொடுக்க முன் வருவதில்லை? அவர்களை வருமான அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்களாக அறிவிக்கலாமே.

நிறைவாக ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். ஒரு நடனக் கலைஞர் பிரபலம் அடைந்துவிட்டால், தான் இன்று ஆடுவது, எல்லா உலகங்களையும் ஆட்டுவிக்கும் நடராஜப் பெருமானின் அருள் என்பதை உணர்ந்து, அவனது நிருத்த சபைகளைத் திருப்பணி செய்ய முன் வர வேண்டும். ஒரு சதுரங்கவீரர்  தான் பெறும் பல கோடிகளின் சிறு பகுதியையாவது, மன்னார்குடிக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான பூவனூர் சதுரங்க வல்லபேச் வரர்   கோயிலுக்கு அர்ப்பணிக்க முன் வர வேண்டும்.

பழந்துணிகளைக் காப்பகத்திற்குத் தந்து விட்டு, பிரமாதமாக சமூக சேவை செய்து விட்டதாகச் சொல்லிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் ஆணிவேருக்குச் செய்யப்படும் உதவி பிற்காலத்தில் மரமாக வளர்ந்து பலன் அளிக்கும். சிவதர்மம் செய்யும் போது, சிவ பெருமான் மட்டுமல்லாமல் உதவியைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைவர். செய்து பார்த்தால் தானே அதன் பலனும் பெருமையும் தெரிய வரும்! பிறருக்கு நிழல் தந்து உதவும் ஆல மரத்தையே தேர்ந்தெடுத்து அதன்கீழ் வேதப் பொருள்களை உரைத்த தக்ஷிணா மூர்த்தி, தர்மத்தின் உறைவிடம் அல்லவா; நம்மையும் அறம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா?

" .... அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்." -- சம்பந்தர் தேவாரம்.

Tuesday, May 8, 2012

தவறுகளைத் திருத்திக் கொள்வோம்


"தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே " என்று, தான் இறைவனிடம் வாதாடிய குற்றத்திற்காக வருந்திய  நக்கீரர் தவறு செய்த "மூர்க்க மாக்களைக்"கூற்றம் ஒறுக்காததும் தவறு எனப் பாடுவார். அன்றாட வேலைகளில் பிழைகள் ஏற்படுவது சகஜம் தான். இவற்றில் பெரும்பாலானவை அறியாமல் செய்தவைகளாகக் கூட இருக்கலாம். அதே சமயம்,அப்பிழைகளைப் பிறர் சுட்டிக்காட்டினால் அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வருவதில்லை.நாம் செய்வது அவ்வளவும் சரியே என்றும் இதைப் பிறர் திருத்துவதாவது என்ற கருத்தும் உடையவர்கள் இருக்கிறார்கள். திருத்த முனைபவர்களும் இதைக் கருத்தில் கொண்டு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. கம்பன் போன்ற புலவர்களும் "அவை அடக்கம்" பாடினார்கள். இப்போது அந்த அடக்கம் காணமல் போய்விட்டதோ என நினைக்க வேண்டியிருக்கிறது. பழைய  புத்தகங்களின் இறுதியில் பிழை திருத்தம் வெளியிடுவதோடு , மேலும் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள எதுவாக இருக்கும் என்று  விண்ணப்பித்திருப்பார்கள். நூல்களில் பிழைகள் களையப்படவேண்டும் என்று எண்ணிய காலம் அது. ஆனால் , இப்போதோ, " சென்னியில் வைத்த" என்ற வார்த்தையைச் "சென்னையில் வைத்த" என்று தவறாக அச்சிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினாலும் மறுமொழியோ, மாற்றமோ  கிடையாது. இதனால் சலிப்பு ஏற்பட்டு , நமக்கேன் என்று வாளா இருக்க வேண்டியிருக்கிறது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் தானே கெட்டு விடுகிறான் என்றார் திருவள்ளுவர்.கல்வி கேள்விகளில் மேம்பட்ட மந்திரிகளை இக்காரணம் பற்றியே அரசவையில் வைத்திருந்தார்கள் அரசர்கள். தவறான உச்சரிப்பையே திருத்த முன்வராத இக்காலத்தில் பிற பிழைகளையா திருத்திக் கொள்வார்கள்?  " ள" என்ற எழுத்து "ல" என்றும், "ண" என்ற எழுத்து "ன" என்றும் செய்தி  வாசிப்பவர்களாலும் பிறராலும் உச்சரிக்கப்படுவதை யார்  திருத்துகிறார்கள்?

நிலைமை இவ்வாறு இருக்க, கருத்துக் கணிப்பு என்ற நாடகமும் அவ்வப்போது நடைபெறுகிறது. ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கேட்டால், வித்தியாசமாக எழுதினால் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பர். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மக்களுக்குத்தானே  தெரியும்? மக்களின் எண்ணங்கள் எத்தனை முறை இவ்வூடகங்களில் பிரதிபலித்திருக்கின்றன? ஒவ்வொரு பத்திரிகையும், தொலைக்காட்சியும் தனக்கென்று விருப்பு வெறுப்புகளை வகுத்துக் கொண்டுள்ளதால் அந்த வரையறைக்கு உட்பட்டே பிறர் சுட்டிக் காட்ட முடியும்.

இதில், சமய உலகின் குறைகள் விமர்சிக்கப்படும் போது விமர்சகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சமயத்தின் நிறைகள் எழுதப்படும் போது பிற சமயத்தவர்கள் மௌனிகளாக இருப்பினும், குறைகள் வெளிவரும்போது மிகுந்த விழிப்புடன் இருப்பர். எனவே, வேற்றுமைகள் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே விமர்சிக்கப் படவேண்டும். எங்கு தான் குறை இல்லை? சம்பந்தப்பட்டவர்களும் தாமும் தம்மைச் சார்ந்த சமயமும் பழிக்கு ஆளாகாத வண்ணம் செயல் படவேண்டும். கோயில்களுக்குள்ளும் , மடாலயங்களுக்குள்ளும் தவறு நடக்கக் கூடாது என்று மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதும் நியாயமானதும் ஆகும். எனவேதான் ஆலய நிர்வாகிகளும் , மடாதிபதிகளும் தம்மைச் சார்ந்த ஆலயங்களுக்கும், பீடத்தின் பாரம்பர்யத்திற்கும் குந்தகம் ஏற்படாமல் இருக்கவேண்டியது அவசியமாகிறது. பிழை நேர்ந்தது தெரிய வரும்போது மக்கள் சுட்டிக்காட்டவே செய்வர். அவர்கள் மீது பொங்கி எழுவதை விடுத்து, குறையின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதை உடனே திருத்திக்கொள்ள முன்வருவதே சாலச் சிறந்தது.

நிர்வாகத்தில் குறை ஏற்பட்டால் அரசாங்கம் அந்த நிர்வாகத்தை எடுத்துக்கொள்வது தீர்வு ஆகாது. அரசுக்குச் சொந்தமான ஆலயங்களின் நிர்வாகத்தைத் தான் பார்க்கிறோமே! உண்மையிலேயே குறைபாடுகளைக் களைய விருப்பம் இருந்தால், தக்க சான்றோர்களைத் துனணயாகக்கொண்டு, நெறிமுறைகளை வகுக்க வேண்டும். ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இது வகை செய்யும். தன்னிச்சையாகச் செயல் படுவதையும் இதனால் தடுக்க முடியும். மரபுகளும் காக்கப்பெறும். செயல் படுத்த முன்வருவார்களா?

விரைந்தேன் மற்று எம்பெருமான் வேண்டியது வேண்டாது
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்து என்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதிதேவனே
ஆற்றவு நீ செய்யும் அருள்.
----- நக்கீரர்.

Thursday, May 3, 2012

கேரளம் வழிகாட்டுகிறது


தொழிற்சாலைகளில் சர்வதேசத் தரம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்போது, ஒரு எளிய வழியைக் கையாளச் சொல்வது வழக்கம். மற்றவர்கள் பின்பற்றும் உயர்ந்த உத்திகளை நாமும் கையாளவேண்டும் என்பதே அது. இது ஆலயப் பராமரிப்புக்கும் பொருத்தமாகத் தோன்றுகிறது. அண்மையில் கேரளத்தில் யாத்திரை மேற்கொண்டபோது,அங்கு கண்ட சிறப்பான பல அம்சங்களைத்   தமிழகத்திலும் பின்பற்றலாமே எனத் தோன்றியது.

ஆலயங்கள் சிறப்பாக நடைபெற அரசாங்கமும், பக்தர்களும்,அர்ச்சகர்களும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே இது சாத்தியம். ஆலயத்திற்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப் படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் அவற்றை விற்றுவிட அரசாங்கம் முடிவு செய்திருப்பது துரதிருஷ்டமே. அச் சொத்துக்கள் காலப் போக்கில் மதிப்பு கூடி ஆலயத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக அமைக்கப்பட்டவை. அவற்றால் வரும் வருவாய் ஆண்டுதோறும் பெருக வேண்டும் என்பதே அதன் நோக்கம். சென்னையில் மெட்ரோ ரயில் தடத்தில் இருந்த ஆலய நிலங்களை விற்பதில் பல கோடிகள் கிடைத்தும் அது அந்த அந்த ஆலயங்களுக்குச் சேர்க்கப்பட்டதா என்பதே கேள்வி. இந்து அறநிலையத் துறையின் பொதுநிதியில் சேர்ப்பதால் என்ன பயன்? ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களே ஏப்பமிடப்பட்டுள்ள கால கட்டத்தில் இப்படியும் ஒரு திட்டம் தேவையா? ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே அரசாங்கத்தின் கடமையாக இருக்க முடியும்.

ஆலயங்களை மக்கள் எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என்பதைக் கேரளத்துக் கோயில்களைக் கண்டவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள். குப்பைகளையும் , எச்சில் துப்பிய சுவர்களையும், கோயிலுக்குள் சாப்பிட்டுவிட்டு வீசி எறியப்பட்ட இலைகளையும் , துர்நாற்றத்தையும்,மதில்களை ஒட்டிய மூத்திரக்குட்டைகளையும் பார்த்துப் பழகிவிட்டவர்கள் , கேரளத்தைப் பார்த்தாவது கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குருவாயூர் போன்ற நெரிசல் மிக்க ஆலயங்களிலும் எவ்வளவு நேர்த்தியாக தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்கிறார்கள் தெரியுமா? மூத்த குடிமக்களுக்கும் , பெண்களுக்கும் தனி வரிசைகள் குறிப்பிட்ட நேரங்களில் ஒதுக்கப்படுகின்றன. இங்கேயோ வரிசைகள் சிறப்புக் கட்டணத்தைப் பொறுத்தே அமைக்கப் படுகின்றன. அதிலும் விழா நாளன்று இருபத்தைந்து ரூ டிக்கேட்கள் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டதாகச் செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.

விழாக்காலமாக இருந்தால் எங்கு பார்த்தாலும் வழியை மறைத்துக்கொண்டு கடைகள். எங்கும் வியாபாரம். எதிலும் வியாபாரம். உலகத்தில் வேறு எங்குமே கிடைக்காத பொருள்களை வாங்குவதாக எண்ணிக்கொண்டு வளைக் கடைகளின் முன்பு பெண்கள் கூட்டம்.மூர்த்தங்களைத் தொடுவதும் அவற்றிற்குத் தாங்களாகவே தீபம் காட்டுவதும் நந்தியின் காதில் ரகசியம் பேசுவதும் இங்கு அன்றாடும் காணும் காட்சிகள் அல்லவா? நெரிசலான ஆலய வரிசைகளில் நிற்கும் கேரளா மக்கள் இறைவனின் நாமத்தை உச்சரிக்கிறார்கள். அதிகக் கூட்டம் இல்லாத கோயில்களிலோ , நிசப்தமாக மெய்மறந்து நிற்கிறார்கள். விடியற்காலை சுமார் ஐந்து மணிக்கே கோயில்கள் திறக்கப் படுவதால், பலர் ,தலைக்கு நீராடித் தூய்மையான ஆடை உடுத்தி வருவதைக் காணலாம். ஆண்கள் கண்டிப்பாகச் சட்டை அணிவதில்லை. இங்கு அவ்விதம் சொன்னாலோ எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சம்பிரதாயங்கள் காற்றில் விடப்படுகின்றன.

கேரளா நம்பூதிரிகளின் ஈடுபாட்டை சொல்லியே ஆகவேண்டும். அவர்களால் கோவிலின் சாந்தித்யம் காப்பாற்றப்படுகிறது. உரிய நேரத்தில் , பண்டைய முறை தவறாமல் பூஜைகள் நடக்கின்றன. மூலவரிடத்தில் சுவற்றில் டைல்ஸ் பதிப்பதோ,மின்சார விளக்குகள் அமைப்பதோ அங்கு காண முடியாத ஒன்று. நெய் தீபங்கள் வரிசையாகவும் நேர்த்தியாகவும் ஏற்றப்படுகின்றன. பெரிய ஆலயங்களில் பிராகாரத்தில் எண்ணற்ற தீபங்கள் மாலை நேரங்களில் ஏற்றப்படுகின்றன. மூலவரிடம் தொடர்ந்து அர்ச்சனைகள் மிகுந்த சிரத்தையுடன் நடைபெறுகின்றன. பிரசாதங்கள் , உரிய நபர்களிடம் கைகளிலோ,நெற்றியிலோ தீண்டப்பெறாமல் வழங்கப்படுகின்றன.பக்தர்கள் அவற்றை முழு மன நிறைவோடு பெற்றுச் செல்கின்றனர். அங்கு நதிக்கரைகளில் செய்யப்படும் ஆறாட்டு பூஜை ஒன்றே போதும் , அவர்களின் சிரத்தையைப் பற்றிச் சொல்வதற்கு.

சந்தியாவந்தனம் , ஆத்மார்த்த பூஜை , விபூதி ருத்ராக்ஷம் தரித்தல் , பஞ்சாக்ஷர ஜபம் செய்தல் , வெளியில் சென்று வந்தால் கை-கால்களையும் வாயையும் சுத்தம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைதல் , வருபவர்களிடம் கோவிலின் சிறப்பையும் தலபுராணத்தையும் சொல்லுதல், உரிய காலத்தில் ஆகம விதிப்படி பூஜை செய்தல் ஆகியவற்றை முழுவதும் கடைப் பிடிக்கும் அர்ச்சகர்கள் இங்கும் இருந்தபோதிலும், பலர் இன்னும் முழுமையாகப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது.
    
ஒரு சில கோயில்களில் இங்கும் பசு மடங்கள் இருந்த போதிலும், கேரளத்தில் யானைகளைக் கூடப் பராமரிக்கிறார்கள் . குருவாயூர் கோவிலுக்கு 64 யானைகள் இருக்கின்றன. அவை யாவும் ஒரு பெரிய தோப்பில் தென்னை மரச் சூழலில் நன்கு பராமரிக்கப்படுகின்றன. அவற்றைக் குளிப்பாட்டத் தனியே சிறு குளம் அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாகச் சென்று அங்கு பக்கவாட்டில் படுத்துக் கொள்கின்றன. அவற்றின் உடலைப் பாகன்கள் சுத்தப் படுத்தித் தேய்த்து விடுகிறார்கள். பிராணி நல மருத்துவரும் இருக்கிறார். நம் ஊரிலோ மயில் பூஜித்த தலம் என்று சில மயில்களைக் கூட்டுக்குள் வளர்க்கிறார்கள். சில மாதங்களுக்குப் பிறகு பார்த்தால் கூடு காலியாகக் காட்சி அளிக்கிறது.

கேரளத்தில் பூஜா காலங்களில் வாத்தியங்கள் முழங்கப்படுகின்றன.குறைந்த பட்சம் ஒரு சித்த மத்தளமாவது இசைக்கப் படுகிறது. ஆனால், இங்கோ, காலம் காலமாக இசைக்கப்பட்டுவந்த நாதஸ்வரத்தையும்,மேளத்தையும் சில கோவில்களில் மட்டுமே காண்கிறோம். திருச்சூர் திருவம்பாடி கிருஷ்ணன் கோயிலில் சன்னதியில் பூஜைக்காகத் திரையிடப்பட்டிருந்தபோது, ஒருவர்  சித்த மத்தளத்தில் தனி ஆவர்த்தனமே வாசித்து அனைவரையும் மெய்மறக்கச்செய்து விட்டார்.

யாத்ரீகர்கள் தங்கும் விடுதியையும் சிற்றுண்டிச் சாலையையும் குருவாயூரில் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்க முடியுமோ அத்தனைச் சிறப்பாகப் பராமரிப்பதை நேரில் கண்டு அதை இங்கும் செயல் படுத்த வேண்டும். இவ்வளவுக்கும் லஞ்சம் போன்ற குறுக்கு வழிகளை அங்குக் காண்பது மிகவும் அரிது. பல இடங்களில் கோயிலிலும் வெளியிலும் அன்ன தானம் நிறையச் செய்கிறார்கள்.சில இடங்களில் தினமும் பாயசத்தோடு நல்ல சாப்பாடு பரிமாறப்படுகிறது. அங்கும் ஒரு சில குறைகள் இருக்கலாம். நிறைகள் ஏராளமாக இருக்கும்போது அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

         "Just follow the best practices of others" என்ற வழிகாட்டி ,கோயில் பராமரிப்பிற்கும் மிகவும் தேவையான ஒன்று தானே?

Saturday, April 7, 2012

கோயிலுக்குள் ஆக்கிரமிப்பு


 தேசீய நெடுஞ்சாலைத் துறையின் நால்வழிச்சாலைத் திட்டத்தால் விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள தேவாரப் பாடல் பெற்றதும், சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டதுமான ஆயிரம் வருடத்திற்கும் முற்பட்ட பனையபுரம் சிவாலயத்தை இடிக்கும் பேரபாயத்தைச் சுட்டிக்காட்டியதோடு, சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளுக்கும் கடிதம் எழுதி, இச்செய்கையைக்  கைவிடுமாறு விண்ணப்பித்திருந்தோம். அதிர்ச்சிக்கு உள்ளான  பல அடியார் பெருமக்களும் இவ்விதம் கடிதம் எழுதியதோடு,தலத்திற்கு நேரில் சென்று, இறைவனிடம் பிரார்த்தித்தனர். அரசாங்கம் இப்போக்கைக் கைவிட்டு, மாற்று வழியில் பாதை அமைக்கும் என நம்புகிறோம். அதற்கான அதிகார பூர்வமான அறிக்கையை அரசு உடனே வெளியிட வேண்டும்.

இப்படிப் பலவகைகளிலும் ஆலயங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்பு ஏற்படுத்துவதில் சில ஊர் மக்களே ஈடுபடும்போது  யாரிடம் முறையிடுவது? நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பணி செய்யப்படாத கிராமக் கோயில்கள் ஏராளம். அவற்றில் விமானங்கள் மரம்  முளைத்துப் பிளவு பட்டுக் காட்சி அளிக்கின்றன. நாளடைவில் சுற்றுச் சுவர்கள் விழுந்து விடுகின்றன. இதைப் பயன்படுத்திக் கோயிலுக்குள்ளேயே வீடுகளும் குடிசைகளும் கட்ட ஆரம்பித்து விட்டனர். கேட்பார் இல்லை. கோயில் திறந்தே கிடப்பதால், கோஷ்ட மூர்த்திகள் தீய சக்திகளால் மூளியாக்கப் படுகின்றன. கோயில் வளாகம் அவர்களால், தீய செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.

இங்கு நீங்கள் காண்பது ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டம். மதில் சுவர்கள் இல்லாவிட்டால், இப்படிச்  சுற்றுக்கம்பிகளின் மீது துணிகளைக் காயப் போடுகிறார்கள். சில ஆண்டுகளில் கம்பிகளை இணைக்கும் கம்பங்கள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்து விடுகின்றன. ஆலயம் இவ்வாறு அதன்  எல்லையை இழக்க ஆரம்பித்தவுடன் , மெதுவாக ஒருவர் பின் ஒருவராகக் குடிசைகளைக்  கட்டிக் கொள்கிறார்கள். கட்ட ஆரம்பிக்கும்போது மற்ற ஊர் மக்களோ ,நிர்வாக அதிகாரியோ எதிர்ப்பு தெரிவிக்காமல் , நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுகிறார்கள். அரசியல்வாதிகளோ, தங்களுக்கு வரவிருக்கும் குடிசை வாழ் மக்களின் ஓட்டுக்களை இழக்க விரும்பவில்லை. இப்படி இருக்கும் போது, சட்டம் மட்டும் தன் கடமையை எப்படிச் செய்யும்?

இதோ நீங்கள் பார்ப்பது, முள் வேலி கழல ஆயத்தமாக இருக்கும் நிலை. அதை ஒட்டியிருக்கும் குடிசைகள் , இவ்வேலிகள் விழுந்தவுடன் ,தங்கள் பரப்பளவை அகலப்படுத்த ஆயத்தமாக உள்ளன. அதுவரை பொறுமை காக்க முடியாதவர்கள் ,எந்நேரமும் ஆக்கிரமிக்கக் கூடும்.

இன்னும் சில துணிச்சல் காரர்கள் (!) வீடுகளையே கட்டிக்கொள்கிறார்கள். இவர்களை யார் அகற்றப் போகிறார்கள்? எல்லாவற்றையும் இழந்து, கோயிலும் விழுந்தபிறகு , ஒரு சில மூர்த்திகள் மட்டுமே எஞ்சுகின்றன.
 நல்ல மனம் கொண்ட சிலர், இவற்றைச் சிறிய  ஓலைக் கொட்டகைகளில் வைத்து வழிபடுகிறார்கள். ஓலைக் கொட்டகை திரும்பவும் ஆலயம் ஆவது எப்போது? இதைக் கண்ட யாராவது மீண்டும் முயற்சி செய்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லாவிட்டால் ஆலயம் இருந்த இடமே தெரியாமல் வீடுகளைக் கட்டி நிரப்பி விடுவார்கள். நம் கிராமம், நம் கோயில் என்ற உணர்ச்சி இருந்தாலொழிய இந்த  நிலை நீடிக்கும் அபாயம் இருக்கிறது.

Tuesday, March 20, 2012

ஆலயத்திற்கு வந்துள்ள ஆபத்து

              விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய் விரி
              பண்ணமர்ந்து  ஒலி சேர் புறவார் பனங்காட்டூர்ப்
              பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடைக்
              கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே.
                                                                                --திருஞானசம்பந்தர் தேவாரம்

              தன்னிடம் அடைக்கலமாக வந்த புறாவுக்காகத் தன் சதையையே அறுத்துத் தராசில் இட்ட சிபிச் சக்கரவர்த்தியின் கதை எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு போட்டாலும் தராசு நேராக நிற்காததால் தனது கண்ணையே பறித்து இட முற்படும்போது, பரமேச்வரன் பிரத்யக்ஷமாகி அவனுக்கு அருளிய ஊருக்குப்  புறவார் பனங்காட்டூர் என்று பெயர் வந்தது. அதனால் சுவாமிக்கும் நேத்திரோத் தாரகேச்வரர் என்று பெயர். சூரியன் இங்கு பூஜித்ததால் அவனது கதிர்கள், சித்தரை முதல் நாள் துவங்கி ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சுவாமியின் மீதும் பிறகு சத்தியாம்பிகையின் மீதும் விழுகின்றன. ஊரே பனங்காடாக இருந்ததால் பனங்காட்டூர் எனப்பட்டது. கோயிலுக்குள் ஸ்தல விருக்ஷமாக இரண்டு பனைமரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். தற்போது இவ்வூர்,பனையபுரம் என்று வழங்கப்படுகிறது. இது, நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தரின் ஒரு பதிகம் இதற்கு உண்டு. ஒவ்வொரு பாடலும், "அருளாயே" என்று முடியும்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசீய நெடுஞ்சாலையிலிருந்து  முண்டியம்பாக்கம் அருகில், பண்ருட்டி செல்லும் சாலை பிரிகிறது. திருச்சி செல்லும் சாலையைப்போலவே இதையும் நால்  வழிச் சாலையாக மாற்றுவதற்கு தேசீய நெடுஞ்சாலைத்துறை முன்வந்துள்ளது. குண்டும் குழியுமாக இருந்த இந்தச் சாலைக்கு ஒரு வழியாக விமோசனம் வந்தது என்று ஆறுதல் அடையும்போது, கூடவே ஒரு அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. இந்தச் சாலை, பனையபுரம் வழியாகச் செல்வதால், அங்குள்ள பாடல் பெற்றதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதுமான பனங் காட்டீசனின்  கோயிலை இடிக்க முன்வந்துள்ளது தேசீய நெடுஞ்சாலைத் துறை. இத்தகவல், செய்தித்தாள்களில் வெளி வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இத்தகவல், மார்ச் முப்பதாம் தேதியிட்ட குமுதம் ஜோதிடம் இதழில் வெளிவந்துள்ளதை அன்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டவுடன், துக்கமும் அதிர்ச்சியும் மேலிட்டது. நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டாகி விட்டது. அதற்கு மேல் என்ன செய்யலாம்? சுவாமி பார்த்துக்கொள்வார் என்று, சிவனே என்று இருந்து விடலாமா? பூஜை முடிவில் அந்த ஊர்ப் பதிகத்தையும் பாராயணம் செய்தாகிவிட்டது. மனதில் சலனம் இன்னமும் நிற்கவில்லை.   நேரில் சென்று ஸ்வாமியிடமே ப்ரார்த்தித்துக்கொண்டு வரலாமா?

இணைய தளத்தின் மூலம் நேஷனல் ஹைவேய்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா வில் எதிர்ப்பைப் பதிவு செய்து, இம்முடிவை உடனடியாகத் தள்ளுபடி செய்து, வேறு வழியாக, கோவிலைப் பாதிக்காத படி, மாற்றுப்பாதை அமைக்க விண்ணப்பித்துள்ளேன். இதேபோன்று அந்த இணைய தளத்தில் ஏராளமானோர் எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசின் இந்து அற  நிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள கோயில் இது. எனவே, அறநிலையத்துறை கமிஷனருக்கும் தந்தி கொடுக்கும்படி, திரு ஏ எம் ஆர் அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருக்கிறார்கள். அந்த கிராமத்து மக்களும் ஒன்று திரண்டு இவ்வாறு இடிப்பதை எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.

சமய உலகம் ஒன்று படவேண்டிய தருணம் இது. ஏதோ ஒரு கிராமத்துக் கோயில் தானே என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. பூண்டி நீர்த்தேக்கம் கட்டியபோது , திருவெண்பாக்கம் என்ற பாடல் பெற்ற சிவாலயத்தை இடித்தார்கள். லோயர் அணைக்கட்டு கட்டக் கருங்கல் தேவைப் பட்டபோது, கங்கைகொண்ட சோழபுரக் கோயிலின் கோபுரத்தை இடித்து அக்கற்களைப் பயன் படுத்தினர் என்பர். நாம் மௌனிகளாக இருக்கும் வரையில் இப்படித்தான் ஒவ்வொரு கோயிலாக இழக்க நேரிடும். இதே, வேற்று மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தால் இடிக்கும் துணிவு அரசாங்கத்திற்கு உண்டா?

மதத்தின் காவலர்களாகக் கருதப்படும் மடாதிபதிகள் இச்செயலைக் கண்டிப்பதோடு, இதற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஆன்மீகப் பற்றுள்ள வழக்கறிஞர்கள் இதற்கு ஆவன செய்ய முன்வரவேண்டும். இவ்வளவு ஏன்? அரசியலிலேயே ஆன்மீக நெஞ்சங்கள் ஏராளமாக உண்டே? தமிழக முதல்வர்மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். பத்திரிகை, மற்றும் தொலைகாட்சி ஊடகங்கள் இதனை முன்னின்று நடத்தித் தரவேண்டும். நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்று மகா பிரதோஷ தினம். " அருளாயே" என்று இத்தலப் பதிகத்தில் பாடல் தோறும் சம்பந்தர் வேண்டியது போல நாமும்,  நஞ்சை உண்டு எல்லா உலகங்களையும் காத்த நீலகண்டப் பெருமானிடம் வேண்டுவோம். இப்படிச் செய்யப்படும் பிரார்த்தனை கண்டிப்பாக வீண் போகாது.
                        "பொய்யிலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே" - சம்பந்தர்.  
http://www.nhai.asia/register/rgr/traffic.asp  என்ற முகவரியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.