"அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது " என்பது சத்தியமான வார்த்தை. இதை அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்வையும் அவனே வழங்கி அருள வேண்டும். "உன்னை உன்னும் உணர்வை நல்காய்" என்று திருவொற்றியூர் பெருமானிடம் வரம் வேண்டுகிறார் திருநாவுக்கரசர். "உணர்வித்தால் ஆர் ஒருவர் உணராதாரே ? " என்று அவரே வேறு ஓர் பாடலில் பாடுவார். அப்படி உணர்ந்துவிட்டால் இறை தொண்டு ஆற்றும் பேறும் கிடைத்து விடுகிறது. அத்தொண்டர்களுக்குத் தூய நெறியாகத் தானே முன்னின்று வழி காட்டுகிறான் சிவபெருமான்.
அப்பர் பெருமானால் பாடப்பெற்ற திருத்தலையாலங்காடு ஆலயத் திருப்பணியிலும் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கும் அரிய பேற்றினை நமது சபை பெற்றது. ஆலய மடப்பள்ளி,திருக்குளம்,நந்தவனம் ஆகியவை திருத்தம் பெறவும், சுப்பிரமணியர்,துர்க்கை ஆகிய நூதன விக்ரகங்கள் அமைக்கவும், சபாபதிக்கு ந்ருத்த சபை அமைக்கவும்,சபை அன்பர்கள் உதவி புரிந்தனர். தவிரவும் நண்பர்கள் மூலமாக யாகசாலை வஸ்திரங்களுக்கும், கட்டுமானப் பொருளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீன கர்த்தரும், கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தும்,அதனை இடிக்க ஆட்களும் தந்தருளியதோடு, தாமே மூன்றாம் கால பூஜைக்கு எழுந்தருளினார்கள். நாம் விண்ணப்பித்ததற்கு செவி சாய்த்து, ஆதீன சார்பில் ஆடல் வல்லானின் திருவுருவத்தைக் கோயிலுக்கு அமைத்துத் தருவதாகக் கருணை பாலித்தார்கள். ஆண்டுதோறும் செய்யப்படும் ஆறு அபிஷேகங்களையும் ஆதீன உபயமாகச் செய்து தருவதாக அருளியுள்ளார்கள். அவர்களது கருணைத்திறம் அளவிட ற்கு அரியது . கும்பாபிஷேக வைபவம் 8.7.2012 ஞாயிறன்று மிகச் சிறப்பாக நடந்தது.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியாக ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பெற்றது.கும்பாபீஷேகத்திற்குப் பிறகு ஆசார்யஉற்சவமும் , மாலையில் திருக்கல்யாணமும் ,திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. இவற்றை ஏற்ற இறைவனும் மழை பொழிந்து ஊரையும் உள்ளத்தையும் குளிர்வித்தான்.
இறை பணிசெய்வதோடு இறைவனுக்குப் பணி செய்பவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவுடன் நமது சபை , கிராமக் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வருகிறது. கடந்த 9.7.2012 திங்களன்று திருக்கடவூருக்கு அருகில் உள்ள ஆக்கூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வயம்புநாத ஸ்வாமி ஆலயத்தில் , ஹோமம், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை நிகழ்த்தப்பெற்று, ஆக்கூர், செம்பனார்கோயில், மா(மா)குடி, திருப்பறியலூர்,திருவிடைக்கழி ஆகிய தலங்களின் சிவாசார்யர்கள் கௌரவிக்கப்பெற்றனர்.
ஒவ்வொரு சிவாசார்யதம்பதிக்கும் பாத பூஜை, அர்ச்சனை, ஆகியவை செய்யப்பெற்று,புது வஸ்திரங்களும்,சௌபாக்ய திரவியங்களும் தலா ரூ 2000 மும் அளிக்கப்பெற்றன. திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் கருணையுடன் வழங்கிய வஸ்திரமும் உதவித்தொகையும் ஒரு சிவாசார்ய தம்பதிக்கு வழங்கப்பெற்றது. ஆதீனத்திலிருந்து கட்டளைத் தம்பிரான் ஸ்வாமிகள் வந்திருந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். அனைவருக்கும் அன்னம் பாலிப்பு செய்விக்கப் பெற்ற பின்னர் விழா இனிதே நிறைவேறியது. " முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்ற சுந்தரர் வாக்கை நமக்கு உணர்வித்த இறையருளுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?
A very good deed went on so nicely by His grace More such Kumbabishegams as well as Gurukkals Honouring is the nees of the hour.Let us come forward to take apledge to participate in such noble events .SIVAYANAMAHA.
ReplyDeleteசிறப்பானதொரு செய்தி நன்றி
ReplyDelete