Sunday, September 11, 2011

திருக்குளமும் நந்தவனமும்



ஸ்ரீ பரமேச்வரன், பலவகைப்பட்ட நீர் நிலைகளின் வடிவங்களாகவே இருப்பதாக ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. சிறு வாய்க்கால் நீராகவும், மலையிலிருந்து விழும் அருவியாகவும், மடுக்களில் உள்ள நீராகவும் ஓடை நீராகவும், நதியாகவும், சிறு குட்டைகளில் உள்ள நீராகவும் ,கிணறுகளில் உள்ள நீராகவும், மழை நீராகவும், பிரளய நீராகவும் இருப்பதாக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவ்வளவு விரிவாகக் கூறப்பட்டிருப்பதைப் பார்த்தாவது, ஜலத்தைக் கண்டவுடன் சிவஸ்வரூபம் என்ற எண்ணம நமக்கு வரவேண்டும். பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றான திருவானைக்காவை, "செழு நீர்த் திரளைச் சென்று ஆடினேனே" என்றும், "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்" என்று திருவாலங்காட்டையும் அப்பர் பெருமான் பாடியிருக்கிறார். நீர் மற்றும் நதிகளின் பெயரோடு சேர்ந்து, "ஜலகண்டேஸ்வரர்" என்றும் "கங்கா ஜடேஸ்வரர்" என்றும் சுவாமி பெயர்கள் வழங்கப்படுகின்றன. பல ஊர்களின் ஸ்தல புராணங்களில், தீர்த்தப் படலம் என்று தனியாக ஒரு படலமே பாடியிருக்கிறார்கள். திருவிடை மருதூர் காருண்யம்ருத தீர்த்தமும், மதுரையின் பொற்றாமரையும், ஸ்ரீ வாஞ்சியத்தின் குப்த கங்கையும், வேதாரண்யம் மணிகர்ணிகையும், திருவெண்காட்டு முக்குளமும், சிதம்பரம் சிவகங்கையும், திருவாரூர் கமலாலயமும், வைத்தீஸ்வரன் கோயில் சித்தாமிர்தத் தீர்த்தமும் சில உதாரணங்களாக இங்கு எடுத்துக் காட்டலாம். ராமேச்வரத்தில் தீர்த்தமாடுதல் பிரசித்தமாகக் காணப்படுகிறது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் பெருமையை அறியாதார் இலர்.


சில ஊர்களில், அருகில் உள்ள நதிகளில் தீர்த்தவாரியும் , அதற்காகவே அமைக்கப் பட்ட ஸ்நான கட்டங்களும் உள்ளன. காவிரிக் கரையில் உள்ள மாயூரம், திருவையாறு, கும்பகோணம்,கொடுமுடி,பவானி, திருப்பராய்த்துறை போன்ற தலங்கள் இவ்வகையில் அடங்கும்.



இத்தனை பெருமை வாய்ந்த தீர்த்தங்களையும், நதிகளையும் நாம் நன்கு பராமரிப்பதில்லை. திருக்குளங்கள் பாசி பிடித்தும்,குப்பைகளோடும் காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் கோயிலுக்கு வெளியில் உள்ள திருக்குளங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. அவற்றை அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும். இன்னும் பல இடங்களில் குளங்கள் வறண்டும் , செடிகள் முளைத்தும் பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. ஆலயத் திருப்பணி செய்பவர்களும் நிதிப் பற்றாக்குறை காரணமாகக் குளங்களைத் தூய்மைப் படுத்த முடிவதில்லை. கிராம சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் வாயிலாக இக் குளங்கள் தூர்வாரப்பெற்றுக் காப்பாற்றப்படவேண்டும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க வழி உண்டு. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். செய்வார்களா??


"வ்ருக்ஷேப்ய:" என்று ஸ்ரீ ருத்ரம், மரங்களின் வடிவாகவே சுவாமி இருப்பதாகப் போற்றுகிறது. மரமாகவும் செடியாகவும் கொடியாகவும் மரக் கிளைகளாகவும், உலர்ந்த கட்டையாகவும் அதில் ஈச்வரன் குறிப்பிடப்படுகிறான். வில்வவனேச்வரர்,வடாரண்யேச்வரர், தர்பாரண்யேச்வரர், ஏகாம்பரேச்வரர் முதலிய நாமங்கள் விருக்ஷங்களோடு தொடர்பு உடையவை. மற்ற ஊர்களில் குறைந்தது வில்வ வ்ருக்ஷமாவது பிராகாரத்தில் வளர்க்கப்படவேண்டும். திருப்பணி செய்வோர் ,நந்தவன அபிவிருத்திக்குக் கூடுதல் கவனம் செலுத்துதல் நல்லது. பல இடங்களில் இலவசமாகவே மரக் கன்றுகளைத் தருகிறார்கள். நாம் அவற்றைப் பயன் படுத்திக்கொள்வதில்லை. கேட்டால், "யார் தினம் தண்ணீர் ஊற்றுவது? " என்கிறார்கள். எனவே, கிராமக் கோயில்களில் சுவாமிக்கு சார்த்துவதற்கு பூக்களோ மாலைகளோ இருப்பதில்லை. ஒருக்கால் நந்தவனத்தில் பூக்கள் இருந்தாலும் அவற்றை பூஜா காலத்தில் பறித்துத் தருவார் இல்லை!! முருக நாயனார் கதையையும், செருத்துணை நாயனார் கதையையும் எறிபத்த நாயனார் கதையையும் இருந்த இடத்திலிருந்தே குருபூஜைக்காகப் பாராயணம் செய்வதைவிட, அன்றைய தினமாவது ஒரு கோயிலுக்குச் சென்று புஷ்ப கைங்கர்யம் செய்யலாமே. அதுதான் உண்மையான குருபூஜையும் கூட. நந்தவனங்களும் குளங்களும் அழிவதைப் பார்த்துக்கொண்டே , "காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்று இருந்த இடத்திலேயே தேவாரம் பாடிக்கொண்டு இருப்பதைவிட, சம்பந்தரின் உபதேசத்தை ஏற்று செயல் படுத்துவதே சிறந்த சிவபுண்ணியம் ஆகும்.


சிவனருளால் ஏற்பட்ட இந்த சிந்தனையைத் தலைமேற்கொண்டு நம்மால் இயன்ற அளவில் நந்தவனப் பணியும் திருக்குளப் பணியும் செய்ய நமது சபை தீர்மானித்துள்ளது. இதற்கான செயல் திட்டங்கள், அணுகு முறைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் அடியார்களின் ஈடுபாடும் நம்மை முன்னின்று நடத்தும் சிவனருளும் இப்பணிக்கும் உறுதுணையாக இருக்கும். "முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?"

Thursday, August 11, 2011

அன்ன தானமும் ஆலய பூஜையும்



"தானங்களில் சிறந்தது அன்ன தானம்" என்றும் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் சொல்வதால் அன்ன தானத்தின் உயர்வு தெரிய வரும். திருவிழா நாட்களில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக பழங்காலத்திலிருந்தே அன்னதான சத்திரங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன. சில ஆலயங்களில் தரிசனத்திற்காக வரும் தேசாந்திரிகளுக்காக அன்ன தானக் கட்டளைகள் அமைக்கப்பட்டன. வசதிகள் அற்ற சிறு கிராமங்களில் உள்ள கோயில்களைக் காண வரும் பக்தர்களுக்கு இந்த அமைப்பு பெரிதும் பயன் பட்டது. இப்பொழுது அரசாங்கமே, பல கோயில்களில் அன்னதானம் செய்ய முன்வந்திருப்பது பாராட்டுதற்குரியது. அதே சமயம், ஆலயங்களில் செய்வதற்கும் ,சமுதாய கூடங்களில் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயல் படுவது நல்லது. சமூகக் கூடங்களில் மதிய உணவு அளிப்பது போல அல்லாமல்,கோயில்களில் உணவளிப்பதன் முன் கூட்டு வழிபாடு செய்யப்படவேண்டும். இறைவனது பிரசாதமாக உணவு அளிக்கப் படுகிறது என்று உண்ண வருபவர் அனைவரும் உணரச்செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஐம்பது பேருக்கு உணவு அளிப்பதானால் , ஒரு கோயிலுக்கு, ஒரு ஆண்டுக்குக் குறைந்த பட்சம் மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



கோயில்களில் அன்னதானம் செய்ய வரும் அரசாங்கம், கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர் நலனையும் கவனத்தில் கொள்வது நல்லது. பல கோயில்களில் மாத சம்பளமாக (ஒரு கால பூஜை செய்வதற்கு) இருநூறு ரூபாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. பல இடங்களில் அதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.இதை வைத்துக் கொண்டு எப்படிக் குடும்பத்தை நடத்துவார்கள் என்று சிந்திக்க வேண்டும். இதனால் வருமானத்தைத் தேடி நகரங்களுக்குக் குடியேறும் நிர்பந்தம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் ஆன பல கிராமக் கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.





திருவாரூர் அருகில் உள்ள திருநாட்டியத்தான்குடி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்திற்கு அண்மையில் சென்றிருந்தோம்.புராணச் சிறப்புமிக்க இச்சோழர் காலக் கோயிலை நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் பல ஆண்டுகளுக்குமுன்னர் திருப்பணி செய்திருக்கிறார்கள். சமீபத்தில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. புதுப் பொலிவுடன் திகழும் இக் கோயில் பூட்டப்பட்டிருந்தது. மெய்க்காவலர் உதவியதால் ஆலய தரிசனம் செய்தோம்.நித்திய பூஜை நடைபெறுவதில்லை என்று அப்போது தான் தெரிய வந்தது. இரண்டு ஆண்டுகளாக விசேஷ நாட்களில் மட்டும் பூஜை நடை பெறுவதாக உள்ளூர் வாசி ஒருவர் கூறினார். கோயிலின் நிர்வாக அதிகாரியோ அல்லது கிராம மக்களோ முயன்றிருந்தால் ஒரு அர்ச்சகரை ஏற்பாடு செய்திருக்க முடியும். நிர்வாகமோ, மக்களோ அவரது சம்பளத்திற்கு ஏற்பாடு செய்ய முன்வராததால் இந்நிலை நீடிக்கிறது.



இத்தலத்து இறைவர் மாணிக்க வண்ணர் என்று சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறார். ராஜேந்திர சோழனும் அவனது தம்பியும் தங்கள் தந்தை விட்டுச்சென்ற ரத்தினங்களைப் பிரித்துக்கொள்ள முற்பட்ட பொது, இத்தல இறைவர் இரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றிப் பிரித்துத் தந்ததாகவும், அதனால் மகிழ்ந்த சகோதரர்கள் இறைவனுக்கும் இறைவிக்கும் இரத்தின ஆபரணங்கள் அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனால் சுவாமிக்கு ரத்னபுரீச்வரர் என்று பெயர் ஏற்பட்டது. யானை ஒன்று இங்கு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபாட்டு முக்தி அடைந்ததாகப் புராணத்தால் அறியலாம்.





சுந்தரர் இங்கு வந்தபோது கோயிலில் இறைவரைக் காணாது திகைத்தபோது, விநாயகப் பெருமான் , பக்கத்தில் உள்ள வயலில் அம்பிகையுடன், சுவாமி நாற்று நட்டுக் கொண்டிருப்பதைத் தனது திருக் கரத்தால் சுட்டிக் காட்டினாராம். கைகாட்டிய விநாயகர் சன்னதி கோயிலுக்கு எதிரில் உள்ளது.





அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான கோட்புலி நாயனார் அவதரித்த பதி இது. சிவத்தல யாத்திரையாக இங்கு வந்த சுந்தர மூர்த்தி நாயனாரை வரவேற்றுப் போற்றிய கோட்புலியார், தனது மகள்களான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரருக்கு மணம் முடிக்க முன்வந்தபோது, அதை மறுத்த சுந்தரர், அவ்விருவரையும் தன் மகள்களாக ஏற்றதோடு, தனது பதிகங்களில் தன்னைச் "சிங்கடி அப்பன் " என்றும் "வனப்பகை அப்பன்" என்றும் குறிப்பிடலானார்.


சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்துவந்த கோட்புலி நாயனார் ஒரு சமயம் போர் முனைக்குச் சென்றிருந்தபோது கடும் பஞ்சம் ஏற்படவே, அவரது குடும்பத்தார்கள், அன்னதானத்திற்காக வைத்திருந்த நெல்லை உபயோகப் படுத்தினர். ஊருக்குத் திரும்பியதும் இதனை அறிந்த நாயனார், அவர்களை சிவத்ரோகம் செய்தவர்களாகக் கருதித் தனது உடைவாளால் வெட்டி வீழ்த்தினார்.எஞ்சியிருந்த குழந்தையும் அப்பாவச்செயலைச் செய்த தன் அன்னையின் பாலை அருந்தியிருப்பதால் அதனையும் வெட்ட முற்பட்டார். அச்சமயம், ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் காட்சி அளித்த இறைவன் அனைவரையும் உயிர்ப்பித்து, இறுதியில் சிவமுக்தியும் அருளினான் என்று பெரிய புராணம் கூறுகிறது.


இத்தனை பெருமைகளை உடைய இக்கோயிலில் பூஜைகள் நடைபெறாதது நமது துரதிருஷ்டமே..அன்னதானம் செய்து காட்டிய கோட்புலி நாயனார் போற்றிய சிவாலயத்தில் பூஜைகள் நின்று போகலாமா?. அறநிலையத்துறையும் ஆன்மிகப்பெருமக்களும் சிந்திக்க வேண்டும். ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து அன்னதானம் செய்ய முன்வரும் அரசாங்கம் இதுபோன்ற கிராமக் கோயில்களில் உரிய சம்பளத்துடன் அர்ச்சகர்களை நியமிக்க முன்வராதது ஏன் என்று புரியவில்லை.

Monday, July 18, 2011

திருமேனி தீண்டுவோரைப் போற்றுவோம்




பெரிய புராணத்தில் பார்த்தால் பல இனத்தவர்கள் நாயன்மார்களாக இருக்கக் காண்கிறோம். அவரவர்கள் தங்கள் குலத் தொழிலைச் செய்துகொண்டு சிவ
பக்திச் சீலர்களாக விளங்கினார்கள். உருத்திர பசுபதி நாயனார் ருத்ர ஜபம் செய்தும், ஆனாய நாயனார் மாடுகளை மேய்த்துக் கொண்டே, குழலோசையில் பஞ்சாக்ஷரத்தை வாசித்தும், திருக்குறிப்புத் தொண்டர் அடியார்களுக்குத் துணிகளைத் தோய்த்துக் கொடுத்தும் , சொன்ன சொல் தவறாத திருநீலகண்டர் அடியார்களுக்கு மண் ஓடு செய்து கொடுத்தும் சிவனருள் பெற்றதைச் சில உதாரணங்களாகக் காட்டலாம். எத்தொழிலைச் செய்தாலும் சங்கரன் தாள் மறவாத சிந்தையோடு வாழ்ந்து காட்டினார்கள். "தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன்" கழலை வணங்குவதே தலையாய செல்வம் என்று உறுதி பூண்ட உத்தமர்கள் அவர்கள்.



பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்தால் தான் சமூகம் மதிக்கும் என்ற எண்ணத்தில் எந்த வகையில் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க மக்கள்
இக்காலத்தில் துணிந்துவிட்டார்கள். எந்தத் தொழிலுக்கும் உத்தரவாதம் இல்லாததால் நிலைமைக்கு ஏற்றபடி ஒரு தொழிலில் இருந்து மற்றொரு
தொழிலுக்கு மாறுகிறார்கள். குடும்பத் தொழில்களும் ,முக்கியமாக நமது பண்பாட்டு மையமாகத் திகழும் கலைகளும் நசித்துப் போகும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.விவசாயம் செய்வதிலேயே ஆர்வம குறைந்து அந்த நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றப்படுவதையும் பார்க்கிறோம்.



கிராமங்களை விட்டு மக்கள் நிலங்களையும் வீடுகளையும் விற்றுவிட்டு நகரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். இந்தப் பரிதாப நிலையில் கிராமக் கோயில்களில் பணி செய்பவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது. கோயில் நிலங்களை யார் யாரோ அனுபவிக்கிறார்கள்.பிற சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. கோயில் குளத்தைக் கூட விட்டு வைப்பதில்லை. கிராமக் கோயில்களில் பணியாற்றுபவர்களுக்கோ அரசாங்கம் மிக மிகக் குறைவான சம்பளத்தை அளித்து வருகிறது.



மற்றவர்களைப் போலத் தாங்களும் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்களின் சந்ததிக்கு ஏற்படுவது இயற்கை.வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஏக்கம் தலை தூக்குகிறது. விலைவாசி ஏற்றம் அவர்களையும் பாதிக்கிறது அல்லவா? நம் குழந்தைகளாவது சிரமப்படாமல் இருக்கட்டும் என்று அவர்களைக் கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் , கிராமக் கோயில்கள் பிற்காலத்தில் பூட்டிக் கிடக்கும் அபாயம் இருப்பதை மறுக்க முடியாது. சிறிய அளவிலாவது இக்குடும்பங்களுக்கு உதவ வேண்டும். சொந்த கிராமத்தை விட்டுவிட்டு நகரத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவரும் நபர்களுக்கு இரக்க சிந்தனையை இறைவன் தந்தருள வேண்டும்.




இந்த நோக்கத்துடன் , திருவாதிரையான் திருவருட் சபை , அன்பர்கள் ஆதரவுடன் வயதுமுதிர்ந்த சிவாச்சார்ய தம்பதிகளுக்கு புத்தாடைகளும் தலா இரண்டாயிரம் பண முடிப்பும் அளித்து கௌரவிக்கிறது. இவ்வகையில் சென்ற ஆண்டு ஒன்பது சிவாச்சாரிய தம்பதிகள் கௌரவிக்கப் பட்டனர்.இந்த ஆண்டு முதல் கட்டமாக , ஐந்து கிராமக் கோயில்களில் பணி செய்பவர்கள் சென்ற ஜூலை நாலாம் தேதி கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திரு நறையூர் சித்தீச்வரம் ஸ்ரீ சித்த நாத சுவாமி ஆலயத்தில் தம்பதிகளாக கௌரவிக்கப்பட்டனர்.



இந்தக் கைங்கர்யத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ பஞ்சாபகேசன் தம்பதிகள், ஸ்ரீ கணேஷ், சென்னை ஸ்ரீ வெங்கடேசன் ,கார்த்திகேயன்,திவ்யா ஸ்ரீநிவாசன் , கும்பகோணம் ஸ்ரீ சுவாமிநாதன் மற்றும் பலர் பெரும் கேற்றனர்.அவர்களுக்கு ஸ்ரீ சித்தநாதேஸ்வரரின் அருள் என்றும் துணை நிற்பதாக.வழக்கம்போல்
சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், ருத்ர த்ரிசதி அர்ச்சனை ஆகியவைக்குப் பின்னர் தம்பதி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று மாகேச்வர பூஜையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Friday, July 1, 2011

செல்லாத காசு

நம்மிடம் இருக்கவேண்டிய குணங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டுவந்த நாணயமே (Honesty) நாளடைவில் குறைந்து வரும்போது, உலோகங்களால் செய்யப்பட்டு அரசாங்கம் வெளியிடும் நாணயங்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருவதில் அதிசயம் இல்லைதான். ஜூன் முப்பதுக்கு மேல் இருபத்தைந்து பைசா காசுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டபின், ஒரு ஆங்கில நாளிதழ் , அந்த ஒரு நாணயத்தின் மதிப்பு எப்படியெல்லாம் இருந்தது என்று பட்டியலிட்டுக் கூறியிருக்கிறது. எண்பதுஆண்டுகளுக்கு முன்பு அதைக் கொண்டு ஒரு மூட்டை கோதுமையும், எழுபது ஆண்டுகள் முன்பு ஒன்றரை கிராம் வெள்ளியும் வாங்க முடிந்தது என்கிறார்கள். அதே சமயம், மாத வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இருந்தாலும், இந்த உயர்வு,விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி இல்லை என்பதே வாதம்.



எனவே, கையில் எஞ்சியிருந்த பதினொரு ரூபாய் மதிப்புள்ள இருபத்தைந்து பைசா காசுகளை அருகிலிருந்த பொதுத்துறை வங்கியில் மாற்றச்சென்றேன். அதை காஷியர் வாங்க மறுத்ததோடு, ரிசர்வ் வங்கிக்குச் சென்று மாற்றிக்கொள்ளச் சொன்னார். மற்றொருவரோ, அக்காசுகளைக் கோயில் உண்டியலில் போட்டுவிடும்படி பரிந்துரை செய்தார். நானோ, விடாப்பிடியாக அக்காசுகளைச் செல்லும் காசுகளாக மாற்றிக் கோயில் உண்டியலில் போடுவதாகக் கூறினேன். இதைக் கேட்டு மகிழ்ந்த வங்கி ஊழியர் ஒருவர்,தானே அக்காசுகளைப் பெற்றுக்கொண்டு காஷியரிடம் சென்று , மாற்றிக்கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். பதினொரு ரூபாய்க்கு இத்தனைப் போராட்டமா என்று கேட்கலாம். மக்கள் வளைந்து கொடுக்க கொடுக்க, அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய மறுப்பதோடு அலைக்கழிக்கவும் செய்கிறார்கள்.



நம்வீடுகளில் இருக்கும் பழைய சுவாமி படங்களை எங்கே கொண்டு வைப்பது என்ற நிலை வரும்போதும், பூஜை செய்யப்பட்ட மண் பிள்ளையார்களை எங்கே விடுவது என்னும்போதும் சட்டென்று நினைவுக்கு வருவது ஆலயமே!! அதேபோல செல்லாத காசுகளை யாரும் வாங்க மாட்டார்கள் என்ற நிலையில் கோயில் உண்டியலில் போட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஆலய அதிகாரிகள் பாவம். அதை எடுத்துக்கொண்டு ரிசர்வ் வங்கிக்கு அலைய வேண்டியதுதான்.



இனிமேல் விஷயத்திற்கு வருவோம். பத்து நாட்களுக்கு முன்பு, பஸ்ஸில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது பக்கத்தில் ஒரு சிவாசாரியார் வந்து அமர்ந்தார். வறுமையில் வாடும் அவரை சமூகம் எப்படி இழிவுபடுத்துகிறது என்பதை அறிய , அவர் சொன்ன தகவலைத் தருகிறேன்:


" நான் பூஜை செய்யும் கோவிலில் எப்போதாவது அர்ச்சனைக்கு கொடுப்பார்கள். தட்சிணையாக இரண்டு ரூபா கொடுப்பது வழக்கம். இருபத்தைந்து காசு செல்லாது என்றவுடன் அர்ச்சனை செய்ய வந்த ஒருவர் அந்த இரண்டு ரூபாய்க்கும் இருபத்தைந்து காசுகளாகவே தட்டில் போட்டார். யாரும் வாங்க மாட்டார்கள் என்றால் கோவில் குருக்களிடம் தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எங்கள் நிலை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா?"



உண்மைதான். செல்லாக் காசின் புகலிடம் ரிசர்வ் பாங்கா அல்லது கோயில் உண்டியலா என்று நிஜமாகவே புரியவில்லை. வாசி தீரக் காசு வழங்கிய பரமனுக்கே புரியும்.

Sunday, June 12, 2011

பழமையும் புதுமையும்(?)

கிராமங்களின் அமைப்பு, பெரும்பாலும் கோயில்களை மையமாகக் கொண்டே இருக்கக் காணலாம். ஒரு புறம் சிவாலயமும்,மற்றொரு புறம் விஷ்ணு ஆலயமும் ,அவற்றைச் சுற்றி குடியிருப்புக்களும் இருக்கும். கிராம தேவதைகளான சாஸ்தா(ஐயனார்) , பிடாரி, மாரியம்மன் ஆகியவற்றின் கோயில்கள் அநேகமாக எல்லைகளில் அமையப் பெற்று இருக்கும். தெருக் கோடியிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் சிறிய பிள்ளையார் கோயில்களும் இருக்கும். சிவாலயங்களில் கணபதி, முருகன், அம்பிகை, துர்க்கை போன்ற தெய்வ சன்னதிகளும், பல்வேறு சிவ மூர்த்தங்களும் இடம் பெற்றிருக்கும். அதே போல , பெருமாள் கோயிலிலும் , மகாலக்ஷ்மி, ராமர், கிருஷ்ணர்,ஹனுமான், சக்கரத்தாழ்வார் ,நரசிம்ஹர் ஆகிய மூர்த்தங்களும் அமையப் பெற்றிருக்கும். பரிவாரங்களாக அமைக்கப் பெரும் மூர்த்தங்களுக்குப் பெரும்பாலும் தனியாகக் கோயில்கள் அமைக்கப்படவில்லை. இஷ்ட மூர்த்தி எதுவாக இருந்தாலும் மேற்கண்ட இரு ஆலயங்களில் அவை இருப்பதே காரணமாக இருக்கலாம். ஆலய அமைப்புக்களும் சைவ-வைணவ ஆகமங்களை ஒட்டியே இருந்தன. தனி மனிதர்களின் கருத்துக்கு ஏற்றபடி அவற்றை மாற்றாமல் பழமையைப் பாதுகாத்து வந்தனர்.



இப்போது பார்த்தால், யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி தனக்குப் பிடித்த வகையில் கோயில் கட்டிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. எதை எடுத்தாலும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள்!! பண பலம் இருந்துவிட்டால் தன்னிச்சையாகச் செயல் படும் தைரியம் வந்துவிடுகிறது. ஆகம அறிவு இல்லாத மக்களும் , பிரமாண்டமாகக் கட்டி இருக்கிறார்களே என்று அசந்து போவதோடு,ஆதரவும் தருகின்றனர். இதைப் பயன் படுத்திக்கொண்டு, ஆலயம் கட்டுபவர்களும் , நம் பக்கத்தில் தொன்றுதொட்டு வழிபாட்டில் இல்லாத மூர்த்திகளுக்குக் கோயில் கட்டுகிறார்கள். பரிவார மூர்த்திகளுக்குத் தனி ஆலயம் அமைக்கிறார்கள். ஒரே கல்லில் முப்பது அடிக்கு மேலாக மூர்த்தியை செதுக்கி அதற்குக் கோயில் எழுப்புகிறார்கள். இதற்குத் தேவையான பணம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எப்படியோ வந்து விடுகிறது.



இதில் வேடிக்கை என்னவென்றால், இப்புதிய கோயில்கள் அமைக்கப் படும் ஊர்களிலும் , அதன் அருகாமையில் உள்ள ஊர்களிலும் உள்ள, மரம் முளைத்தும், இடிந்தும் பூஜை இல்லாமலும் இருக்கும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் இவர்கள் கண்களில் படவில்லை போல் இருக்கிறது. கோடிக் கணக்கில் செலவழித்துப் புதுக் கோயில் கட்ட வரும் இவர்கள் பழைய கோயில்களின் பக்கம் திரும்பிப் பார்க்காதது என்? இன்னும் சொல்லப் போனால், இடிந்த கோயில்கள் ஏராளமாகக் கேட்பாரற்று இருக்கும்போது , இப் புதிய கோயில்கள் தேவைதானா? தயவுசெய்து சிந்திக்கவேண்டும். புதிதாகக் கட்டிப் பெயரும் புகழும் சம்பாதிக்கத் துடிக்கும் இவர்கள், பழைய கோயில்களைத் திருப்பணி செய்து நற்பெயர் பெறலாமே? பழைய கூடலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மருத்துவக்குடி சிவாலயத்தைத் திருப்பணி செய்ததுபோல் , பொருள் வசதி படைத்தவர்கள் , புதுக் கோயில் கட்டுவதைக் காட்டிலும் புராதனமான ஆலயங்களை சீர்திருத்தி ஊர் மக்களை நல்வழிப் படுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால், உருக்குலைந்து போய்க்கொண்டிருக்கும் பல கிராமக் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதே நிலை இப்புதுக் கோயில்களுக்கும் பிற்காலத்தில் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

Wednesday, May 11, 2011

"வாங்காத வாழைப் பழம்"





சிவபெருமானின் சிருஷ்டித் தொழில் பிரம்ம தேவன் மூலமாகச் செய்யப் படுகிறது. தற்காலத்திலோ கற்பனைகளுக்குப் படைப்பு என்ற பெயரிட்டு , "நானும் இறைவனே" என்று சொல்லிக்கொள்கிறார்கள். பல்லாண்டுகளாகவே தெய்வங்களைப் பழித்தும் இழித்தும் , தெய்வ நம்பிக்கை உள்ளவர்களைப் புண் படுத்தும் செயல்களைத் திரை உலகம் செய்து வருவது எல்லோருக்கும் தெரியும். கடவுள்கள் சினிமா தியேட்டரில் க்யூவில் நிற்பது போலவும், பைக்கில் சவாரி செய்வது போலவும் காட்சிகள் திரைக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றைக் கண்டிப்பவர்களைத்தான் காணோம். அண்மையில் ஒரு ஆன்மிகப் பத்திரிகை இதுபோல , நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு பிரம தேவனைக் கேலி செய்திருப்பது வருந்துதற்கு உரியது.



பிரமனுக்கு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது போலவும், மயிலாப்பூரில் ஒரு பழ வண்டிக்காரனை அணுகி விலை கேட்டதும் "ஒன்னு அரை ரூபா" என்றவுடன் , பிரமன் இரண்டு டஜனுக்கு பன்னிரண்டு ருபாய் கொடுத்துவிட்டுப் பழங்களை எடுத்துக்கொண்டு கிளம்புவதாகவும், கடைக்காரன் அவரைப் பிடித்துக்கொண்டு, " ஏன்னா நழுவுறே, மீதி இருபத்து நாலு ரூபாயை உன் முப்பாட்டனா வந்து தருவான் ; உனக்குக் காது டப்பாவா? ஒரு பழம் ஒன்னரை ரூபான்னு சொன்னேன்யா பழம் வாங்கவந்த மூஞ்சியைப் பாரு" என்றவுடன், பிரம்ம தேவன் "நொந்து நூடுல்ஸ் ஆகி" விட்டாராம். இப்படி எழுதியிருப்பவர் ஒரு நகைச்சுவைக் கதை ஆசிரியர். சில பேர் சொல்லலாம். நகைச்சுவைக்கு எழுதியதை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று. இவை எல்லாம் வரம்பு மீறிய நகைச்சுவை.யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்(திமிரில்??) எழுதப்படுபவை. "தெய்வத்தைத் தானே கிண்டல் செய்திருக்கிறார்கள்; நமக்கு என்ன என்ற உணர்ச்சி இல்லாதவர்கள் உள்ளவரை இத்தகைய கேலிகள் தொடரும். இதில் வேதனை என்னவென்றால் , ஆன்மிகப் பத்திரிக்கைகளும் இவற்றை வெளியிடுவதுதான். சுட்டிக் காட்டினால் தவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப் பக்குவம் பல பத்திரிக்கைகளுக்கு இருப்பதில்லை. "இவன் என்ன நம்மைத் திருத்துவது "என்ற ஆணவமே மேலோங்கி நிற்கிறது. விற்பனை தொடரும் வரை அவர்கள் எதற்காகக் கவலைப் படப் போகிறார்கள். வியாபார நோக்கில் எதையும் செய்யலாம். சிலரது மனம் புண் படுவதைக் கண்டு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்களா என்ன? சந்தேகம் தான்.

Wednesday, April 20, 2011

கோயில்களில் பசுமடங்கள்



திருவொற்றியூர்,திருவலிதாயம்(பாடி) ஆகிய சிவஸ்தலங்களில் கோசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதேபோல் பல ஸ்தலங்களிலும் பசுமடங்கள் இருக்கக் காணலாம். எந்த ஊர்களில் காமதேனு பூஜித்ததாகத் தல வரலாறு கூறுகிறதோ, எந்தத் தலத்தில்பால் உகந்த நாதராக இறைவன் வீற்றிருக்கிராரோ அங்கெல்லாம் கண்டிப்பாக பசுக்கள் வளர்க்கப்பட வேண்டும். இடையன் மரணமுற்றபோது அவன் மேய்த்தபசுக்கள் சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறியபோது, அவற்றின் துன்பம் தீர்பதற்காக ஆகாய வீதியில் போய்க்கொண்டு இருந்த சித்தர் பெருமான் அந்த இடையனின் உடலுக்குள் புகுந்து, திருமூலர் ஆன வரலாற்றை நாம் அறிவோம். அந்த ஊரில் பசு மடம்இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. அதேபோல், பசு உருவில் அம்பிகை பூஜித்த ஊர்களான அசிக்காடு, தேரழந்தூர், கோமல், திருக்கோழம்பம் ஆகிய ஊர்க் கோயில்களில் ஓரிரு பசுக்களாவது வளர்க்கப்படவேண்டும்.

சண்டிகேஸ்வரர் பிறந்த திருச்செய்ஞலூரிலும் , அவர் மண்ணியாற்றங்கரையில் சிவலிங்கம் அமைத்து , பசுக்களை மேய்த்து அவற்றின் பாலால் அபிஷேகம் செய்த திருவாப்பாடியிலும் பசு மடம் இல்லாததோடு, பால் அபிஷேகமே விசேஷ நாட்களில் மட்டுமே நடைபெறுகிறது. பசுவை வாங்கித் தரலாம் என்றால் "யார் பராமரிப்பார்கள்?" என்று கேட்கிறார்கள். சிவாசாரியாரின் வீட்டில் பசுவை வைத்துக்கொண்டால் கோவிலுக்கு உபயோகப்படுத்தியதுபோக அவர் வீட்டிற்கும் சிறிது பயன்படும். தயிர், வெண்ணை முதலியவை கிடைப்பதோடு, சுத்தமான விபூதியும் தயாரிக்கலாம். சாணத்தை எருவாக அருகில் உள்ள நிலங்களுக்குப் பயன் படுத்தலாம். கோபார் வாயுவும் தயாரிக்கலாம். கொஞ்சமும் சிரமப்படாமலேயே, பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் தற்போது தலை தூக்கி நிற்கிறது.


பசுமடம் வைப்பவர்கள் பெரும்பாலோர் கோயில்களில் அமைக்காமல் தனியாக ஒரு இடத்தை வாங்கி அங்கு பசுக்களைப் பராமரிக்கிறார்கள். சில கோசாலைகளில் நூற்றுக்கணக்கான மாடுகள் பராமரிக்கப் படுகின்றன. இவ்வளவு வசதியும் பணப்புழக்கமும் படைத்தவர்கள் மேற்கண்ட ஊர்களில் தங்களது கோசாலைகள் தனியாகவோ கோயில்களுக்கு உள்ளோ இருக்கும்படி அமைக்கலாமே! புகழ் கிடைக்கிறதோ இல்லையோ, புண்ணியம் கண்டிப்பாகக் கிடைக்கும். தனியார் வங்கிகளும் கிராம முன்னேற்றத்திற்காகக் கால்நடைச் செல்வத்தைப் பெருக்கலாம்.


கும்ப கோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் பாபுராஜபுரம் என்ற சிறு கிராமம் இருக்கிறது. இங்குள்ள மழுவேந்திஅப்பர் கோயில் புராதனமானது. கருங்கல் திருப்பணி. செட்டியார் தம்பதிகளுக்கு இறைவன் அருளியதாக வரலாறு. இத்தம்பதியரின் உருவச்சிலைகள் மகாமண்டபத்தில் இருக்கின்றன. சுவாமி அம்பாளுக்கு வஸ்த்திரம் நேர்த்தியாக அணிவிக்கப் பட்டு இருக்கிறது. இக்கோயிலின் சிவாச்சாரியாருக்கு எழுபத்தெட்டு வயது ஆகிறது. தனியாக வீட்டில் இருந்துகொண்டு கைங்கர்யம் செய்கிறார். வீட்டுக் கொட்டகையில் பசு மாடுகளை வளர்க்கிறார். மாலை ஆனதும் மாட்டை வீட்டுத் தாழ்வாரத்தில் கொண்டு வந்து கட்டுகிறார். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் மாடு நிற்கும் இடத்தில் சிறிய மின்சாரக் காற்றாடியை அமைத்து இருக்கிறார். இது அவரது சக்திக்கு அப்பாற்பட்ட செயல். எவ்வளவு பாராட்டினாலும் தகும். வசதியுள்ள பசுமடங்களில் மின் காற்றாடி காணப்படுவதில் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை. உண்மையில் பெயரையும் புகழையும் கருதாமல் இக்குக் கிராமத்தில் இவர் செய்யும் சிவதர்மத்திற்கு ஈடு சொல்ல முடியுமா?