Wednesday, April 14, 2010

வேண்டும் வரம்


சுவாமியிடம் தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்பது ஒரு வகை. தனக்கு எப்பொழுது என்ன தர வேண்டும் என்று சுவாமிக்குத் தெரியாதா என்ன என்று ஸ்வாமியிடமேவிட்டுவிடுவது இன்னொரு வகை. குழந்தைகள் தாயார் தகப்பனாரிடம் கேட்டு வாங்கிக்கொள்வதைப்போலஉலகத்துக்கே மாதாபிதாவாக விளங்கும் உமா மகேச்வரர்களிடம் வேண்டிக்கொள்வதில்தவறு இல்லை தான். ஆனால் ஒன்று மட்டும் முக்கியமாகச் சொல்லத் தோன்றுகிறது. நியாயமானவைகளை மட்டுமாவது பிரார்த்திக்கலாம் என்பதே அது.இதைத்தான் "வேண்டத்தக்கது" என்றார் மாணிக்கவாசகர்.


வேண்டுவது அத்தனையும் சுவாமி அருளுவார் என்பதால், சூரபத்மனைப்போல் வரம் கேட்கக்கூடாது. கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்று கூட சிலர் வேண்டுவதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. இன்ன பலன் கிடைக்கும் என்பதால் மட்டுமே பாராயண நூல்களைப் படிப்போர் பலர். அப்படியாவது படிக்கிறார்களே என்றுதான் சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது. இத்தனை தடவை வந்தால் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்று கோயில்களுக்கு வருபவர்களும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவற்றில் சுயநலமே ஓங்கி இருப்பதைப் பார்க்கலாம்.


லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று பூஜை முடிவில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்காகவும் பிரார்த்திப்பது உண்டு. தமிழிலும்,"குறைவு இல்லாது உயிர்கள் வாழ்க " என்றும் "வையகமும் துயர் தீர்கவே" என்றும் பிரார்த்திப்பார்கள். நடைமுறையில் ஒன்றை அனுபவ ரீதியில் சொல்கிறேன். பிறருடைய கஷ்டங்கள் நிவர்தியாகும்படி பிரார்த்தித்தால் பலன் கை மேல் கிடைப்பதையும் நமக்காக மட்டும் வேண்டிக் கொண்டால் காலம் தாழ்ந்தோ அல்லது பலன் தராமலோ போவதைப் பார்க்கலாம்.


ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்று அறுபத்து மூவரில் ஒருவர். ஒரு சமயம் மழை இல்லாமல் கடும் பஞ்சம் வந்தது. அருகில் இருந்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியிடம் நாயனார் என்ன வேண்டிக்கொண்டார் தெரியுமா? இந்தப் பஞ்சம் நீங்கும் படி மழை பெய்வித்தால் கோவிலுக்கு நிலம் தருவதாக வேண்டிக்கொண்டார். மழையும் நிறையப் பெய்தது. ஆனால் கூடவே வெள்ளமும் வந்து பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் நின்றால் மீண்டும் நிலம் தருவதாகப் பிரார்த்தித்தார் கலிக்காம நாயனார். வெள்ளமும் நிற்கும்படி அருளினார் சுவாமி. இப்படியாக,பன்னிரண்டுவேலி நிலத்தைக் கோயிலுக்கு வழங்கினாராம் நாயனார். இது நடந்தபிறகு அங்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரது சிவபக்தியை சிறப்பித்து திருப்புன்கூர் தேவாரத்தில் பாடியிருக்கிறார்.


தனக்காகப் பிரார்த்தனை செய்வதிலும் உயர்ந்தவை சிலவற்றை சொல்லலாம். காரைக்கால் அம்மையார் செய்த பிரார்த்தனையே முதலில் நினைவுக்கு வருகிறது. "உன்னிடம் இறவாத /மாறாத/மறையாத பக்தி வேண்டும். பிறவாத நிலை ஏற்படவேண்டும். ஒருவேளை பிறந்துவிட்டால் உன்னை என்றும் மறவாத வரம் தந்து அருள வேண்டும். அந்தப்பிறவியில் நான் உன்னைப் பாடவேண்டும்.அப்பாடலைக் கேட்டுக் கொண்டே நீ ஆடும்போது உன்னுடைய தூக்கிய திருவடியின் கீழ் நான் இருக்க வேண்டும் . " என்பதே அவர் வேண்டிய வரம். இதற்குமேல் உயர்ந்த பிரார்த்தனை இருக்கமுடியுமா?


கடல் போலவும் நதி போலவும் பகவானின் கருணை வெள்ளம் இருக்கும்போது அதை வாரி விழுங்கிக்குடிக்காமல் நாய் நக்கிக் குடிப்பதுபோல இருக்கிறேனே என்று மனம் உருகிப் பாடுகிறார் மாணிக்கவாசகர். இக பர சௌபாக்கியம் அத்தனையும் தரும் ஈச்வரனிடம் நாமும் உலகத்திலுள்ள அல்ப சுகங்களை வரமாகக் கேட்காமல் எல்லோரும் இன்புற்று வாழவும் பிறப்பு-இறப்பு இல்லாத மோக்ஷத்தைப் பெறவும் பிரார்த்திப்போமாக.

Tuesday, March 16, 2010

சாக்ஷிநாதன்

ஸ்ரீ பரமேச்வரனே சாக்ஷி சொன்னதாகச் சில ஸ்தல புராணங்களில் இருந்து தெரிந்து கொள்கிறோம். வன்னி மரமும் கிணறும் சுவாமியுடன் வந்து சாட்சியாக நின்றதைத் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. அம்பாளும் திருவாமாத்தூர் என்ற ஸ்தலத்தில் சத்யத்தை நிலை நாட்டி இருக்கிறாள். தம்பியை ஏமாற்றி அத்தனை நாணயங்களையும் ஒரு மூங்கில் குழாய்க்குள் போட்டுவிட்டு ஏமாற்றினானாம் அண்ணன். தம்பிக்கோ முக்தாம்பிகையைத் தவிர சாட்சி சொல்ல யாரும் இல்லை. எனவே அம்பாள் முன்னால்இப்படிச் சொல்லுவாயா என்று அண்ணனிடம் கேட்க "முக்தாம்பிகை கொத்தி விடுவாளா" என்று அகம்பாவத்தோடு கேட்டானாம். அடுத்த நிமிடமே பூமி பிளந்து ஒரு பாம்பு வெளியில் வந்து அவனைக் கொத்தியதும் அவன் மாண்டான். அவன் ஒளித்துவைத்திருந்த காசுகள் மூங்கில் குழாயிலிருந்து வெளியில் கொட்டின. இப்பொழுதும் எத்தனையோ குடும்பங்களுக்கு அம்பாள் சாட்சியாக இருந்து காப்பாற்றி வருகிறாள்.


தஞ்சாவூருக்குப் பக்கத்தில் அவளிவணல்லூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்தில் சுவாமிக்கு சாட்சிநாதர் என்று பெயர். அந்த ஆலயத்தில் பூஜை செய்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளை கல்யாணம் பண்ணிக்கொண்டவன் காசிக்குப் போய் விட்டுத் திரும்பி வந்தபோது தனது மனைவி வைசூரி போட்டியதால் அழகு இழந்து காணப்பட்டதைக் கண்டு அவளது தங்கையே தனது மனைவி என்று சாதித்தான். இதனால் மிகவும் துக்கம் அடைந்த அர்ச்சகர் சுவாமியிடம் சென்று முறையிட்டுக் கதறினார். அகில உலகங்களுக்கும் சாட்சியாக விளங்கும் ஈச்வரன் தன்னை தினமும் பூஜிக்கும் பக்தனைக் கை விடுவானா? சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சுவாமி தனக்கு முன்னால் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்த மூத்த மகளைச் சுட்டிக்காட்டி "அவள் இவள்" என்று சாக்ஷி சொன்னதால் ஊர் பெயரும் அவளிவ நல்லூர் என்று ஆனது. அப்பெண்ணும் கோயில் குளத்தில் (தை அமாவாசை அன்று) ஸ்நானம் செய்தவுடன் முன்னை விட அழகுடன் கரை ஏறினாள்.

அரக்கோணத்திற்கு அருகில் உள்ள திருவாலங்காட்டிலும் சொன்ன சொல்லைக் காக்க வேண்டித் தீப் பாய்ந்த வேளாளர்களுக்கு சுவாமி சாட்சியாக விளங்கி முக்தி தந்து சாக்ஷி பூதேச்வரனாகக் காட்சி அளிக்கிறான்.


தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ பாபங்களைத் தினமும் செய்கிறோம். வாக்காலும் மனத்தாலும் செய்யும் பாபங்களுக்கு அளவே இல்லை. தெய்வக் குற்றங்களே செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. தெய்வ சொத்தைத் தனது என்று கோர்ட்டிலும் பொய் சாட்சி செய்யத் துணிந்து விட்டார்கள். தெய்வமாவது தண்டிப்பதாவது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. சாட்சிகளின் அடிப்படையிலே நீதி மன்றங்களும் நடைபெறுவதால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.நியாயமாகப் பார்த்தால் இவ்வளவு பாபங்கள் செய்யும் நமக்கு சாப்பாடு கிடைப்பதே சுவாமியின் பரம கருணையை காட்டுகிறது என்று காஞ்சிப் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அக்கிரமங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்ளும் பலருக்கு இதுவே பதில். அடுத்தவன் அதிகமாக பாவம் செய்தால் நாம் ஒருக்கால் சற்றுக் குறைவாகப் பாவம் செய்கிறோமோ என்னவோ. குறைவே இல்லாத நிறைவாக ஈச்வரன் ஒருவனே விளங்குகின்றான் என்று திருவாசகம் சொல்கிறது.சுவாமி எல்லோரையும் உடனே தண்டிப்பது என்று ஆரம்பித்தால் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள்? அதனால்தான் வேத மாதா நமக்காகப் பரம கருணையுடன் பரமேச்வரனை வேண்டிக்கொள்கிறாள். "ஹே சம்போ உன்னுடைய கோபத்துக்கு நமஸ்காரம்" என்று ஸ்ரீ ருத்ரம் ஆரம்பிக்கிறது

ம்ருடன் , சங்கரன் என்றெல்லாம் ஆராதிக்கப் படும் பகவானை வேதம் மேலும் கேட்கிறது: "எங்களிடம் நீ பரம கருணையோடு அருளவேண்டும். அதனால் பினாக பாணியான நீ வில்லையும் அம்புகளையும் இறக்கி வைத்துவிட்டு வர வேண்டும். பிரதம வைத்யனான நீ எல்லா நலன்களையும் அருள வேண்டும் " என்றெல்லாம் பிரார்த்திக்கிறது.

Thursday, February 25, 2010

பன்னகாபரணன்


ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பன்னகாபரணன் என்று ஒரு நாமம் உண்டு.திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள திருச்சாட்டியக்குடி என்ற ஊரில் மூலவருக்கு இந்தப் பெயர்தான் வழங்கப்படுகிறது. பல ஊர்களில் மூலவருக்கு வெள்ளியில் நாகாபரணம் சார்த்திப் பார்க்கிறோம். பன்னகம் என்றால் நாகம் அல்லது பாம்பு என்று அர்த்தம். ஆதிசேஷனால் சிவராத்திரி பூஜை செய்யப்படும் திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில் மூலவர் மீது பாம்பு சட்டை உரித்துவிட்டுச் சென்றதை சில வருஷங்கள் முன்பு பத்திரிக்கைகளில் பார்த்தோம். திருநாகேஸ்வரத்தில் நாகராஜா (ராகு பகவான்) சன்னதியிலும் இரவில் பாம்பு விட்டுச்சென்ற சட்டையை மறுநாள் காலை அநேகர் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் சென்ற கிரகண தினத்தன்று தேப்பெருமாள் நல்லூர் என்ற ஊரில் நடைபெற்ற அதிசயம் யாரும் கேள்விப் படாததொன்று

கும்பகோணத்திற்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்தின் அருகில் உள்ளது தேப்பெருமாள் நல்லூர் என்ற கிராமம். தேப்பெருமாள் நல்லூர் சிவன் என்ற மகா சிவபக்தரைப் பற்றி காஞ்சிப் பெரியவர்கள் மிகவும் புகழ்ந்துள்ளார்கள். காரணம் தான் ஒருவராகவே கையில் செம்பு ஏந்தியவராகத் திரவியங்களை
சேகரித்து , கும்பகோணத்தில் மரங்கள் முளைத்துக் கிடந்த ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோபுரத்தைத் திருப்பணி செய்ததோடு பல சிவ க்ஷேத்திரங்களில் அன்ன தானம் ஏராளமாக செய்ததால் எல்லோரும் அவரை அன்னதான சிவன் என்றே அழைத்தனர். அப்படிப்பட்ட மகானைத் தந்தது தேப்பெருமாநல்லூர்.

இந்த ஊர் சிவாலயத்தில் சென்ற கிரகணத்தன்று ஒரு நல்ல பாம்பு வில்வ இலைகளை சிவ சன்னதிக்குள் நுழைந்து சுவாமியின் சிரசில் வைப்பதை அர்ச்சகர் பார்த்துவிட்டு, போட்டோ எடுப்பவரை அழைத்துக் காட்டியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்களைத்தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.


முதல் படத்தில் பிராகாரத்தில் உள்ள வில்வ மரத்தில் பாம்பு வில்வ இலையை எடுப்பதைக் காண முடிகிறது.அடுத்ததாக, அப்பாம்பு,கர்ப்பக்ருகத்தின் கோமுகி வழியாக சுவாமி சன்னதிக்குள் நுழைவதைத் தெளிவாகக் காணலாம். அடுத்த படங்களில் அது மூலவருக்கு முன் வந்துவிட்டதையும்,அதன் வாயில் வில்வ தளம் இருப்பதையும் கவனிக்கலாம். கடைசியாக , சுவாமியின் பாணத்தைச் சுற்றி சிரத்தை அடைந்து வில்வ அர்ப்பணம் செய்துவிட்டுப் படம் எடுத்து நிற்பதையும் பார்க்கும் போது,பரவசம் அடைகிறோம்.
புகைப்படத்தைப்பார்த்தும் நம்பாதவர்கள் இருக்கிறார்கள்.பல ஊர்களில் சுவாமியின் மீது பாம்பு சுற்றிக் கொள்வதையும் சட்டையை விட்டுவிட்டுப் போவதையும் எவ்வளவோ பேர் பார்த்திருந்தும்,போட்டோ எடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். திருக்குரக்குக்கா(வல் ) என்ற பாடல் பெற்ற ஸ்தலம் மாயூரம் அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு குரங்கு (ஊர்ப் பெயருக்கு ஏற்ற மாதிரி) கருவறைக்குள் சென்று இலைகளாலும் மலர்களாலும் சுவாமியை அர்ச்சிக்கிறது. இதைப் படம் எடுத்தாலும் நம்பமாட்டேன் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். பாம்பு,குரங்கு இவற்றிற்கு ஆறறிவு ஏது என்பார்கள். அவை சாதாரண பாம்போ குரங்கோ அல்ல. யாரோ சாப விமோசனத்திற்காக இந்த உருவங்களில் வந்திருக்கக் கூடும். நமது அறிவுக்குத் தெரியாதவற்றை மறுப்பது அறிவீனம்.

யக்ஷர்,கின்னரர்,யமன்,வருணன்,அக்னி,வாயு,சூர்யன்,வசுக்கள்,தேவர்கள்,மனிதர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் ,வானரமும்,நாகமும் அயர்வே இல்லாமல் உன்னை பூஜித்து,வரங்கள் எல்லாம் பெறுவதைக் கண்டு,அடியேனும் உன் திருவடிகளை அடைந்தேன் என்று திருப்புன்கூர் தேவாரப் பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடுவதைப்போல், நாமும் நாகம் செய்யும் பூஜையைப் பார்த்தாவது, ஈச்வரனை வில்வ தளங்களால் பூஜிப்போமாக.

Tuesday, February 9, 2010

கயிலையில் மகாசிவராத்திரி


கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறார் நக்கீரர். அதில் ஒரு பாட்டு கயிலையைப் பற்றியும் அடுத்த பாட்டு காளத்தியைப்பற்றியும் மாறி மாறி வரும். கயிலைக்கு நிகரான ஸ்தலம் என்பதால் தக்ஷிண கைலாசம் எனப்படும் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியை தரிசிக்கப் பல்லாயிரம் ஜனங்கள் இங்கு வருகிறார்கள்.


சிலந்தி,பாம்பு,யானை,கண்ணப்பர் ஆகியோரது பூஜையை ஏற்றுக் கொண்டுள்ள காளத்திநாதனைமூவரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள். சாந்த்ர மாதக் கணக்கில் இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 12 தேதி மகாசிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.(தமிழ் நாட்டில் சௌரமாதக் கணக்கு அனுசரிப்பதால் மார்ச் 13 அன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது).


29 ஆண்டுகளாக தேவகோட்டை ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாசிவராத்திரியை தரிசித்து வந்தார். அப்போது ஆலய குருக்களாக இருந்தவருக்கு 20 வருஷங்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட செட்டியார்,அந்த ஆண்டு மகாசிவராத்திரி ஆறு கால பூஜை செலவுகளையும் தானே ஏற்று விரதம் இருந்து குருக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை வீண் போக வில்லை.பரமேச்வரனுடைய கருணையால் பிள்ளைக் குழந்தை பிறந்தது.


செட்டியார் மகா சிவபக்தர் ஆதலால் காளத்தி நாதனின் கோயிலைத் திருப்பணி செய்யத் தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரமாண்டமான அத்திருப்பணி ஒன்பது லட்சத்தைத் தாண்டியதாம். 1912 ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தி மகிழ்ந்தார் செட்டியார். அதனால் மக்கள் அவரைத் திருப்பணிச் செட்டியார் என்று அழைத்தார்கள்.


தனது முப்பதாவது ஆண்டு மகாசிவராத்திரியைக் கொண்டாட 1942 ல் அங்கு சென்ற செட்டியார் காலம் தோறும் தன் மனைவியுடன் சுவாமியின் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்துவிட்டு ஆறாவது காலத்தின் இறுதியில் அருகே நின்ற மனைவியிடம் தாலியைக் கழற்றி ஸ்ரீ ஞானப்ப்ரசூனாம்பிகையின் கழுத்தில் அணிவிக்கும்படிக் குருக்கள் கையில் கொடுக்கச் சொன்னார். அம்பாளுக்கு அது சார்த்தப் பட்டுக் கற்பூர தீபம் நடந்தது. தனது இடத்தை வந்து அடைந்ததும் சிவசிவ என்று சொல்லிக்கொண்டே விபூதி இட்டுக் கொண்டவுடன் மனைவி கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் ஒருமுறை சிவசிவ என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடினார். அடுத்த நிமிடம் அவரது ஜீவன் ஸ்ரீ காளத்தி நாதனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. இன்றும் கோயில் வாயிலில் சிலாரூபமாகத் திருப்பணிச் செட்டியார் கைகளைக் கூப்பியபடிக் காட்சி அளிக்கிறார்.


தன் நினைவாகவே இருக்கும் பக்தர்களைக் கடைசி வரையிலும் கூட இருந்து என்றும் காப்பாற்றும் பரமேச்வரன் சர்வ மங்களங்களையும் அளிக்க வேண்டும்படி ஸ்ரீ மகாசிவராத்திரி தினத்தில் பிரார்த்திப்போமாக.

Monday, January 25, 2010

தெய்வ சோதனை

நமக்கு அடிக்கடி வரும் சந்தேகங்களில் ஒன்று , பக்தர்களை சுவாமி ஏன் சோதிககிறார் என்பது. இதற்கு பதில் கேள்வியிலேயே இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். உண்மையான பக்தர்களையே சுவாமி சோதிக்கும் போது , எண்ணியது எல்லாம் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்த்து சுவாமியை வழிபடும் நமக்கெல்லாம் ஏன் சோதனை வரக்கூடாது?


திருமுருகன் பூண்டி என்ற சிவஸ்தலம் திருப்பூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிவ பூஜை செய்ததால் மூலவருக்கு முருக நாதர் என்று பெயர். தன்னுடைய ஆப்த நண்பரான சேரமான் பெருமாள் நாயனார் தந்த காணிக்கைகளை எடுத்துக்கொண்டு ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் இந்த ஊர் வழியாகப் போகும்போது நடந்த சம்பவம், நமக்கு உணர்த்துவதற்காக நடந்ததாகக் கொள்ளவேண்டும். நம்முடைய சொத்து சுகம் எல்லாம் சுவாமி தந்தது என்றா நினைக்கிறோம்? நாம் சம்பாதித்தது என்று தானே நினைக்கிறோம்? சுந்தரர் மூலம் நமக்காகவே ஒரு பாடம் உணர்த்தப்படுகிறது. சிவபூதங்கள் வேடர்கள் உருவத்தில் போய் சுந்தரரை மிரட்டி அவரிடம் இருந்த பொருள்களைப் பறித்துக்கொண்டு போய் விடுகின்றன. சுந்தரருக்கு வருத்தம் தாங்கமுடியவில்லை. நேராகத் திருமுருகன்பூண்டிக் கோவிலுக்குப் போய் சுவாமி மீது தேவாரப் பதிகம் பாடுகிறார்.(சுவாமியும் இதைக் கேட்க வேண்டும் என்ற ஆசையால் தானே இப்படி நாடகம் நடத்தினார்!) வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று நிந்திப் பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இப்பொழுது சுவாமி கொடுத்த பொருள் என்று சொல்வதுதானே நியாயம்!

நம்மிடம் உள்ள ஐச்வர்யம் மற்றவர்களுக்கு உதவி செய்யவே ஈச்வரனால் கொடுக்கப் பட்டது என்பதை அறிய வேண்டும். அப்படிக் கொடுக்காத உலோபிகளுக்குக் கடுமையான நரகங்களை சுவாமி வைத்துள்ளதாக அப்பர் சுவாமிகள் பாடியிருக்கிறார்.

இன்னொரு விஷயம். தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் தங்களை கேட்டுக் கொள்ளலாம். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காமல் கண்ணீர் மல்க என்றைக்கு சுவாமி சன்னதியில் நிற்கிறோம்? சோதனை வந்தால் சுவாமியிடம் கோபிக்க மட்டும் தவறுவதில்லை. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்? சுவாமி கண் திறக்கவில்லையே என்று அலுத்துக் கொள்பவர்கள் பலர். எது நடந்தாலும் நடக்கட்டும். ஈச்வர சங்கல்பப் படியே நடக்கும் என்று திடமாக இருப்பவர்கள் மிகச் சிலரே. அவர்கள் சோதனைகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். அவர்கள் சோதனைகளை வென்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படிப் பட்ட பக்தி நமக்கு உண்டாகும்படி ஸ்ரீ பரமேச்வரன் அருள வேண்டும்.

Saturday, December 5, 2009

சண்டிகேஸ்வரர்


நம்மில் பலருக்குக் கோயில்களில் பல மூர்த்திகளைப் பற்றித் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் காட்டுவதில்லை. அம்மூர்த்திகளுள் சண்டிகேஸ்வரரும் ஒருவர்.அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவரைப்பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அவரிடம் கையைத் தட்டிவிட்டு வர மட்டும் நமக்குத் தெரியும். காரணம் தெரியாமலே கையைத் தட்டுகிறோம். பஞ்ச மூர்த்தி புறப்பாட்டில் சண்டிகேஸ்வரரும் ஒரு மூர்த்தியாக சுவாமியுடன் தீர்த்தவாரிக்கு வருகிறார். அவருக்கு அந்தப்பதம் எப்படிக் கிடைத்தது என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?

திருப்பனந்தாளுக்குப் பக்கத்தில் திருச் சேய்ஞலூர் என்ற ஊர் இருக்கிறது. இங்கு முருகன் சிவபூஜை செய்ததாக ஸ்காந்த புராணம் சொல்கிறது. இவ்வூரில் காச்யப கோத்திரத்தில் வேதியர் வம்சத்தில் எச்சதத்தன் என்பவனுக்கு உலகம் உய்யும் பொருட்டு விசாரசர்மன் என்ற குழந்தை பிறந்தது. ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன் வேதம் முறையாகப் பயின்று வரும் நாளில் ஊரிலுள்ள பசு மாடுகளை மண்ணி ஆற்றங்கரை அருகில் மேய்த்து ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து அதை பசும் பாலால் அபிஷேகம் செய்து வந்தான் அச்சிறுவன் .ஊரார் புகார் செய்ததால் தந்தை எச்சதத்தன் மரத்தின் பின் நின்று இதைப் பார்த்துக் கோபம் கொண்டு சிவபூஜைக்காக அங்கு வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தான். சிவத்தியானம் நீங்கிக் கண் விழித்த பாலகன், சிவாபராதம் செய்தது தந்தை என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர் என்று தீர்மானித்து அருகில் இருந்த மாடு மேய்க்கும் கோலை கையில் எடுத்தவுடன் அது மழுவாக மாற , அதைக் கொண்டு தகப்பனாரின் உதைத்த காலை வெட்டி வீழ்த்தினார். அடுத்த கணமே சிவபூஜையைத் தொடர ஆரம்பித்தார்.
பால் உகந்த நாதனாகிய பரமேச்வரன் உமா தேவியோடு வ்ருஷப வாகனத்தில் அக்குழந்தைக்குமுன் காட்சிஅளித்தார். ரிஷிகள் வேத கோஷம் செய்யவும் பூத கணங்கள் அருகில் நிற்கவும் பரம கருணையுடன் வெளிப் பட்ட புண்ணிய மூர்த்தியைக் கண்டு ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற அப்பாலகன் சுவாமியின் பாத மலர்களை நமஸ்கரித்தான்.

அக்குழந்தையை எடுத்த ஈச்வரன் ,"என்னிடம் வைத்த பக்தியால் தகப்பனாரின் காலை வெட்டின உனக்கு அடுத்த தந்தை இனி நானே " என்று சொல்லி அப்பாலனைத் தழுவி கருணையோடு தடவி உச்சி மோந்து ,
"உனக்கு சண்டேசப் பதம் தந்தோம். இனி நாம் உண்பதும் உடுப்பதும் சூடுவதும் உன்னிடமே வந்து சேரும் " என்று சொல்லித் தனது சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக்குழந்தைக்குச் சூட்டினார்.

எனவேதான் கோயில்களில் சிவ நிர்மால்யம் வரும் கோமுகத்தின் அருகில் (வடக்குப் பிராகாரத்தில்) தெற்கு நோக்கியவாறு சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கிறது. இவரை தரிசித்தால்தான் சிவ தரிசனம் செய்த பலன் கிடைக்கும். சதா சிவத்யானத்தில் இருக்கும் இவருக்கு அஞ்சலி செய்ய கையை லேசாகத் தட்டி அவரிடம் சிவாலய தரிசன பலனைப் பெறுகிறோம்.

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீச்வரர் கோவிலில் வடக்குப் பிராகார சுவற்றில் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் கொன்றை மாலையை ஒப்பற்ற பக்தனுக்குச் சூட்டும் பெரிய சிற்பத்தைக் கண்டு மகிழ ஒரு தடவையாவது அங்கு நேரில் செல்ல வேண்டாமா?

Wednesday, November 18, 2009

திருப்புன்கூரில் சனி மகா பிரதோஷம்





தற்காலத்தில் ஜனங்களிடம் சிவ பக்தி அதிகமாகிறது என்பதை பிரதோஷங்களில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறவர்கள் ஒத்துக்கொள்வார்கள். உத்சவ காலங்களிலும் இதே போல் கூட்டம் தான்,அண்மையில் துலா உத்சவத்தின் போது மயிலம்மன் நடராஜர் சன்னதியில் ஆடியதை மயிலாடுதுறையில் பக்தர் கூட்டம் வழிபடுவதை இங்கு காண்கிறீர்கள்.

எத்தனையோ கவலைகளும் பிரச்சினைகளும் நிம்மதி இன்மையும் அதிகமாகிக் கொண்டு இருப்பதாலோ என்னவோ ஒவ்வொரு சிவாலயத்திலும் கூட்டம் அதிகமாகிக் கொண்டு போகிறது. சனி மகா பிரதோஷ மகிமையைத் தெரிந்துகொண்டவர்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் எல்லோருக்கும் சோம சூத்திர பிரதட்சிணம் முதலிய விதிமுறைகள் ஒருவேளை தெரிந்திருக்காவிட்டாலும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பதே சிவானுக்ரகம் தான். பசும் பாலுக்குப் பதிலாக பாக்கெட் பால் கொடுப்பதை நிறுத்தினால் விசேஷம்.

நந்திகேச்வரருக்கு விசேஷமாக விளங்கும் ஆலயங்களில் பிரதோஷ தரிசனம் செய்வது இன்னமும் ஆனந்தம் அளிக்கிறது.வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகிலுள்ள திருப்புன்கூர் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலுக்கு சனி மகா பிரதோஷம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.ராஜ கோபுர வாயிலுக்கு நேராக இல்லாமல் சற்று விலகிய நிலையில் (நந்தனாருக்காக)நந்தி பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறார். ஸ்ரீ சிவலோகநாத சுவாமி ஸ்வயம்பு மூர்த்தி.மூவராலும் தேவாரம் பாடப்பெற்றவர். மழை பெய்வதற்காகவும் வெள்ளம் நிற்பதற்கும் கலிக்காம நாயனாரிடம் நிலம் பெற்ற மூர்த்தி. அம்பிகை சௌந்தர நாயகி என்ற பெயரில் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறாள்.



ஸ்தல விருக்ஷம் புங்க மரம் வெளி பிராகாரத்தில் இருக்கிறது. மேடையில் பஞ்ச லிங்கங்கள் இருப்பதைக் காணலாம்.



சுமார் நான்கு மணி அளவில் நந்திக்கு அபிஷேகம் ஆரம்பிக்கிறது. சாரத்தில் நின்றுகொண்டு சிவாசாரியார் அபிஷேகம் செய்கிறார். குடம் குடமாக பால், தயிர், சந்தனம் முதலிய திரவியங்கள் அபிஷேகம் செய்வதைக் காண ஆயிரம் கண் வேண்டும். தீபாராதனைக்குப் பிறகு மலர் மாலைகளால் அற்புதமாக அலங்காரம் செய்கிறார்கள். சுமார் பத்து நபர்கள் கீழே நின்று கொண்டு திரவியங்களை எடுத்துக்கொடுத்தும் தரையை சுத்தப்படுத்தியும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தும் உதவுகிறார்கள். சிவ பஞ்சாக்ஷரம் எழுத தாள்களை விநியோகம் செய்கிறார்கள்.பள்ளிக் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அதில் பஞ்சாக்ஷரம் எழுதிப் பூர்த்தி செய்த தாள்களைதிருப்பிக் கொடுக்கிறார்கள். ஆறரை மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

பிரதோஷ தரிசனம் ஆரம்பித்ததிலிருந்து பலத்த மழை பெய்தது. பக்தர்களும் அக்கருணை மழையில் நனைந்தனர். ஆயுட்காலத்தில் ஒரு தடவையாவது சிவலோகனாதனின் பிரதோஷ தரிசனத்தை சிவ பக்தர்கள் அவசியம் செய்ய வேண்டும்.