Wednesday, April 14, 2010

வேண்டும் வரம்


சுவாமியிடம் தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்பது ஒரு வகை. தனக்கு எப்பொழுது என்ன தர வேண்டும் என்று சுவாமிக்குத் தெரியாதா என்ன என்று ஸ்வாமியிடமேவிட்டுவிடுவது இன்னொரு வகை. குழந்தைகள் தாயார் தகப்பனாரிடம் கேட்டு வாங்கிக்கொள்வதைப்போலஉலகத்துக்கே மாதாபிதாவாக விளங்கும் உமா மகேச்வரர்களிடம் வேண்டிக்கொள்வதில்தவறு இல்லை தான். ஆனால் ஒன்று மட்டும் முக்கியமாகச் சொல்லத் தோன்றுகிறது. நியாயமானவைகளை மட்டுமாவது பிரார்த்திக்கலாம் என்பதே அது.இதைத்தான் "வேண்டத்தக்கது" என்றார் மாணிக்கவாசகர்.


வேண்டுவது அத்தனையும் சுவாமி அருளுவார் என்பதால், சூரபத்மனைப்போல் வரம் கேட்கக்கூடாது. கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்று கூட சிலர் வேண்டுவதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. இன்ன பலன் கிடைக்கும் என்பதால் மட்டுமே பாராயண நூல்களைப் படிப்போர் பலர். அப்படியாவது படிக்கிறார்களே என்றுதான் சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது. இத்தனை தடவை வந்தால் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்று கோயில்களுக்கு வருபவர்களும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவற்றில் சுயநலமே ஓங்கி இருப்பதைப் பார்க்கலாம்.


லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று பூஜை முடிவில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்காகவும் பிரார்த்திப்பது உண்டு. தமிழிலும்,"குறைவு இல்லாது உயிர்கள் வாழ்க " என்றும் "வையகமும் துயர் தீர்கவே" என்றும் பிரார்த்திப்பார்கள். நடைமுறையில் ஒன்றை அனுபவ ரீதியில் சொல்கிறேன். பிறருடைய கஷ்டங்கள் நிவர்தியாகும்படி பிரார்த்தித்தால் பலன் கை மேல் கிடைப்பதையும் நமக்காக மட்டும் வேண்டிக் கொண்டால் காலம் தாழ்ந்தோ அல்லது பலன் தராமலோ போவதைப் பார்க்கலாம்.


ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்று அறுபத்து மூவரில் ஒருவர். ஒரு சமயம் மழை இல்லாமல் கடும் பஞ்சம் வந்தது. அருகில் இருந்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியிடம் நாயனார் என்ன வேண்டிக்கொண்டார் தெரியுமா? இந்தப் பஞ்சம் நீங்கும் படி மழை பெய்வித்தால் கோவிலுக்கு நிலம் தருவதாக வேண்டிக்கொண்டார். மழையும் நிறையப் பெய்தது. ஆனால் கூடவே வெள்ளமும் வந்து பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் நின்றால் மீண்டும் நிலம் தருவதாகப் பிரார்த்தித்தார் கலிக்காம நாயனார். வெள்ளமும் நிற்கும்படி அருளினார் சுவாமி. இப்படியாக,பன்னிரண்டுவேலி நிலத்தைக் கோயிலுக்கு வழங்கினாராம் நாயனார். இது நடந்தபிறகு அங்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரது சிவபக்தியை சிறப்பித்து திருப்புன்கூர் தேவாரத்தில் பாடியிருக்கிறார்.


தனக்காகப் பிரார்த்தனை செய்வதிலும் உயர்ந்தவை சிலவற்றை சொல்லலாம். காரைக்கால் அம்மையார் செய்த பிரார்த்தனையே முதலில் நினைவுக்கு வருகிறது. "உன்னிடம் இறவாத /மாறாத/மறையாத பக்தி வேண்டும். பிறவாத நிலை ஏற்படவேண்டும். ஒருவேளை பிறந்துவிட்டால் உன்னை என்றும் மறவாத வரம் தந்து அருள வேண்டும். அந்தப்பிறவியில் நான் உன்னைப் பாடவேண்டும்.அப்பாடலைக் கேட்டுக் கொண்டே நீ ஆடும்போது உன்னுடைய தூக்கிய திருவடியின் கீழ் நான் இருக்க வேண்டும் . " என்பதே அவர் வேண்டிய வரம். இதற்குமேல் உயர்ந்த பிரார்த்தனை இருக்கமுடியுமா?


கடல் போலவும் நதி போலவும் பகவானின் கருணை வெள்ளம் இருக்கும்போது அதை வாரி விழுங்கிக்குடிக்காமல் நாய் நக்கிக் குடிப்பதுபோல இருக்கிறேனே என்று மனம் உருகிப் பாடுகிறார் மாணிக்கவாசகர். இக பர சௌபாக்கியம் அத்தனையும் தரும் ஈச்வரனிடம் நாமும் உலகத்திலுள்ள அல்ப சுகங்களை வரமாகக் கேட்காமல் எல்லோரும் இன்புற்று வாழவும் பிறப்பு-இறப்பு இல்லாத மோக்ஷத்தைப் பெறவும் பிரார்த்திப்போமாக.

No comments:

Post a Comment