Wednesday, September 25, 2019

நாவடக்கம் இல்லாமல் ஆன்மிகம் பேசலாமா ?

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் 

கல்வியின் பயனே அறிவை வளர்த்துக்கொள்வதும் அதன் மூலம் தான் கற்றதைப் பிறருக்குப் பகிர்வதும் தான். அதிலும் இறைவனது தாள்களைத் தொழாவிடில் கல்வி கற்றும் பயன் என்ன என்கிறார் வள்ளுவர். கல்வியைக் காசாக்கும் காலம் இது. ஆன்மீகத்தையும் இது விட்டு வைக்கவில்லை. ஆன்மீக நூல்களைக் கற்றவர்கள் அதை வியாபாரம் செய்யத் துணிந்தது மாபெரும் குற்றமும் துரோகமும் ஆகும். தான் கற்றதையோ உரையாற்றியதையோ நூலாகவோ குறுந்தகடுகளாகவோ ஆக்கி சம்பாதிப்பது எப்படி சாத்தியமாயிற்று? அவர்களது பேச்சை மக்கள் மதித்துக் கேட்டதால் தானே ? சொல்லப்போனால் இவர்களை உச்சிக்குக் கொண்டு வைத்ததும் மக்கள்தான். பெயரும் புகழும் வந்துவிட்டால் பணத்தாசையும் கூடவே வந்து விடுகிறது. அப்புறம் என்ன? இவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்டே ஆகவேண்டும் .

மூளை வளர்ச்சியாவது ஒருவரது சிந்தனா சக்தி, நினைவாற்றல் மேம்படுவதால் ஏற்படுவது. மற்றவர்கள் சிந்திக்காதவற்றை சிந்தித்து, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு உரையாற்றும் திறமை இவர்களுக்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. வளர்ந்த மூளையை மழுங்கச் செய்வதுபோல் புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மக்கள் இவர்களைக் கண்டிப்பதோடு புறக்கணிக்கவும் செய்கின்றனர்.

ஆன்மீக ஆராய்ச்சி செய்வதிலும் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். உதாரணமாக ஒருசிலவற்றை இங்கு நோக்குவோம். திருவாசகத்தில் வரும் கோகழி என்ற ஊர் எங்கு உள்ளது என்று ஆய்வதில் தவறில்லை. அதுவும் ஒருவிதத்தில் ஆன்மீகத் தேடலே. ஒரே பெயரில் இரு தலங்கள் இருந்தால் எது பாடல் பெற்ற தலம் என்று ஆயும்போது கல்வெட்டுத் துணை கொண்டும் ஆராய்ச்சி செய்யலாம்.

இறைவனது அருளிச் செயல்களையும் அடியார்கள் செய்த அற்புதங்களையும் , பக்தர்களின் நம்பிக்கையையும் கேலி செய்வதால் இவர்களை எவ்வாறு ஆன்மீகப் பேச்சாளர்கள் என்பது ? ஆன்மீக நூல்களைப் படித்துவிட்டு எதிர்க் கேள்விகள் கேட்கவா சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்? மக்களிடையே பக்தியை வளர்ப்பதைவிட, கைதட்டல் வாங்குவதே இவர்களது குறிக்கோள் ஆகி விட்டது. கைதட்டல் இருந்தால் மட்டுமே அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் பேசத் துணிவு வந்து விட்டது. இவர்களுக்குப் பட்டம் கொடுத்துக் குட்டிச்சுவர்களாக ஆக்கி நம் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்ட நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

வாரியார்,கீரன் போன்றோர் இருந்தபோது இதுபோன்ற நிலை ஏற்படவே இல்லை. உள்ளதை உள்ளபடியே சொல்வார்கள். ஜன ரஞ்சகமான உதாரணங்களைச் சொன்னாலும் எடுத்துக் கொண்ட தலைப்புக்குப் பழுது வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆன்மீகப் புரட்சி  செய்வதாக நினைத்துக் கொள்ளும் ஒரு சிலர் கைத்தட்டலுக்காக நம் சமயத்தையே இழிவுபடுத்திப் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இராமாயணத்தில் வரும் நீதிகளை மாத்திரம் கோடிட்டுக் காட்டிய காலம் போய் வாலியை மறைந்திருந்து கொல்லலாமா என்றும், கற்பில் சிறந்தவள் சீதையா அல்லது மண்டோதரியா என்றும் பட்டி மன்றத்தில் வினா எழுப்பும் துணிவு எப்பொழுது வந்ததோ அப்பொழுதே, இறைவனையும், அடியார்களையும் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்பதற்குப் பச்சைக் கொடி காட்டியதுபோல் ஆகி விட்டது. ஆரம்ப காலத்தில் முளையில் கிள்ளி எறியாத தவற்றுக்காக இப்பொழுது நாம் அனுபவிக்கிறோம்.

புத்த சமண சமயங்கள் மேலோங்கியிருந்த காலத்தில் நாயன்மார்கள் அவதரித்து சைவத்தைப் புனருத்தாரணம் செய்தார்கள் . சைவம் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்து சமயமே தமிழகத்தில் காப்பாற்றப் பட்டது. தனது அவதார நோக்கமான பிற சமயங்களைக் கண்டித்து சைவத்தை நிலை நாட்டுவதை அறிவிப்பதுபோல சம்பந்தரின் பதிகங்களில் பத்தாவது பாடல்கள் அறிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தெய்வத்திருமுறைகளை நாம் போற்றி வரும் நிலையில், வளர்த்துவிட்ட ஒரு மேதாவி இப்பாடல்கள் எதற்கு என்று கேள்வி எழுப்புவதாக அறிகிறோம். இது போன்ற அறிவிலிகள் ஆன்மிகம் பேசவில்லை என்று யார் அழப்போகிறார்கள்? வித்தியாசமாகப் பேசினால் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடி, வரவேற்புடன்,பண வரவும் அதிகரிக்கும் என்ற கணிப்பால் பேசுகிறார் போலும்.

நாவடக்கம் இல்லாதவர்களை நாவரசர், சொல்லுக்கே செல்வர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. இதனால் இவர்களுக்குத் தலைக் கனம் அதிகமாகி விட்டது. நம்மில் பெரும்பாலோர் நாம் வழிபடும் தெய்வத்தையோ மகான்களையோ குறை கூறுபவர்களைக் கண்டிக்காததால் கேட்பார் இன்றி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் பிடித்து அலைகிறார்கள். மழுங்கிய மூளை நெடு நாட்களுக்குப் பயன் தராது. கற்ற கல்வியோ ஈட்டிய செல்வமோ அந்திக் காலத்தில் கை கொடுக்கப்போவதில்லை. இதை மட்டுமாவது இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நினைவு தப்பும்போது அதுவும் கூட வராது.

No comments:

Post a Comment