திருக்காறாயில் சிவாலயம் |
திருக்களர் பிராகாரக் கருங்கல் மதில் |
திருக்காறாயில் திருக்குளம் |
கடந்த அரை நூற்றாண்டைப் பார்க்கும்போது, புராதனக் கோயில்களைப் புதுப்பிப்பதில் நகரத்தாரின் பங்கு பற்றி அறிய ஆர்வம் ஏற்படுகிறது. நாம் அறிந்தவரையில் ,பல கோயில்களின் திருப்பணிக்கு இன்றும் உதவுகிறார்கள். ஆனால் அவர்களது முன்னோர்களைப் போன்று, மிகவும் பழுது அடைந்த சிவாலயங்களில் கருங்கல் திருப்பணி மேற்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. பண்டைக் காலம் போல் இன்றும் திரைகடல் தாண்டித் திரவியம் ஈட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அப்படியும், புதியதாக எந்த சிவாலயத்திலும் முழுமையாகக் கருங்கல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. வெளி நாடுகளில் வாழ்க்கை நடத்துபவர்கள் முன்வந்தால், முன்னைக் காட்டிலும் அதிக அளவில் சிவத் தொண்டாற்ற முடியும்.
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சங்கங்கள் அமைத்துத் தங்கள் சமூகத்திற்கு உதவி புரிந்து வருவதை மறுக்க முடியாது. அதில் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலய வைபவங்களிலும் பங்கேற்கிறார்கள். அதோடு, சுற்றுலா போன்றவைகளும் இடம் பெறுகின்றன. முன்னோர்கள் காட்டிச் சென்ற சிவாலயப் புனரமைப்பு , முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இடம் பெறாதது பெரிதும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
தமிழகக் கோயில்கள் பலவற்றின் தற்போதய நிலை என்ன என்பதைத் தலயாத்திரை செய்பவர்கள் நன்கு அறிவார்கள். அரசாலும்,ஊர் மக்களாலும் கைவிடப்பட்டு, மரம் முளைத்துப் போன ஆலயங்கள் ஏராளம். ஆண்டுக்கு நூறு கோயில்களைப் புனரமைத்தாலும்,எல்லாக் கோயில்களையும் சீர் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. சுற்றுச் சுவர்கூட இல்லாததால் மூர்த்திகள் களவாடப்படும் அவலம் வேறு ! இதை எல்லாம் யாரிடம் சொல்வது? பரம்பரையாக சிவபக்தி உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சொல்ல முடியும்.
நிலங்களிலிருந்து வருமானம் இல்லாததால் நான்கு காலம் பூஜைகள் நடந்த கோயில்கள் ஒரு கால பூஜை செய்யப்படுவதையும், விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாத நிலையையும் கண்டு எத்தனை பேர் மனம் உருகுகிறார்கள்? அற்ப சம்பளத்தை மாதக் கணக்கில் தராமல் இழுக்கடிக்கப்பட்டும் பூஜையை விடாமல் செய்யும் அர்ச்சகர்களை எவ்வளவு பேர் ஆதரிக்கிறோம்? இந்நிலை நீடித்தால் ஒரு கால பூஜைக்கும் ஆபத்து வரக்கூடிய நிலை தூரத்தில் இல்லை.
எஞ்சியது சிவனார் மட்டுமே |
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் கூடலையாற்றூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்குத் திருப்பணி செய்வதற்காக செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு செட்டியார் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தாராம். கருங்கற்கள் ஏற்றப்பட்ட வண்டிகள் தொடர்ந்து வந்தனவாம். இருட்டில் வழி மாறி, விடியற்காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, வேறு ஒரு சிவத்தலத்தில் (கடம்பூர் என்று நினைவு) வண்டி வந்து சேர்ந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் சிவாலயமும் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்ததைக் கண்டு இரங்கிய செட்டியார், அக்கற்களை அங்கேயே இறக்கச் சொல்லி, அக்கோயிலைத் திருப்பணி செய்து தந்தாராம். பின்னர் கூடலையாற்றூர் ஆலயமும் திருப்பணி செய்யப்பட்டது. அப்பொற்காலம் மீண்டும் வருமா?