Thursday, February 13, 2014

மாசற்ற திருப்பணி

நம் நாடு ஊழல் மலிந்த நாடு என்று ஒப்புக்கொள்ளமுடியாது  என்கிறார் ஒரு மத்திய அமைச்சர். உண்மை நிலை தெரிந்தும் இப்படிப் பேசும்போது நாம் என்ன சொல்ல முடியும்? ஊழலை ஒழிப்போம் என்று நான்கு புறமும் குரல்கள் ஒலிக்கும்போது இப்படி ஒரு தனிக்குரலும்  ஒலிக்கிறது.  நாம் இதுபோன்ற விவகாரங்களில் கருத்து சொல்வதோ, குறை கூறுவதோ கிடையாது என்றாலும், இந்த ஊழலால் ஆன்மீகமும் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையால் இப்படி எழுதும்படி ஆகி விட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஆட்சியாளர்கள் சிலர் நமது  ஆலயங்களுக்குத்  தம்  நினைவாக வழங்கப்பட்ட கொடைகள் பற்றி அறியும்போது நம்மை அறியாமல் அவர்கள் மீது மதிப்பு ஏற்படுகிறது. பவானியில் ஆலயத்திற்குப் பல்லக்கு அளித்த கலெக்டர் மீதும், ஊரையே மதுராந்தகம் ஏரியின் உடைப்பிலிருந்து காப்பாற்றியதற்காக ஆலயத்திற்கு ஊஞ்சல் அளித்த கலெக்டர் மீதும், மாசி மக  விழாவுக்காக விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீச்வர சுவாமி  ஆலயத் தேருக்குச்  சங்கிலியும் , அந்தக் கோவிலுக்குக் கருங்கலால்  தளவரிசையும் அமைத்துத் தந்த கடலூர் கலெக்டராக இருந்த ஆங்கிலேய கலெக்டர்  துரை மீதும்   இத்தனை ஆண்டுகள் ஆகியும் மதிப்பு வைத்து, இன்றும் நாம் மறவாது அவர்களை நன்றியுடன்  நினைவு கூர்கிறோம்.

சுதந்திர இந்தியாவில் ஹிந்து அறநிலையத் துறையில்  ஈடுபாட்டுடன் பணியாற்றியவர்களுள் திரு உத்தண்டராம பிள்ளை, சாரங்கபாணி முதலியார் போன்ற  பல ஆட்சியாளர்கள் ஆலய வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வந்தனர். ஆலய நிலங்களின் வருவாய்  குத்தகைக்காரர்கள் பலரால் தரப்படாத நிலையில் அறநிலையத்துறையும் செயல்பாடு குன்றியதோடு  பெயரளவுக்கே பராமரித்து வரும் நிலையும்  ஏற்பட்டது. இதனால் ஆலயத் திருப்பணிகள் நடத்தப்பெறாமல் ஏராளமான கிராமக் கோயில்கள் இடிந்த நிலையிலும்,பூஜை இன்றி இருப்பதையும்  இன்றும் காண்கிறோம். ஆலய சிப்பந்திகளும் வருவாய் இன்றி, வறுமைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

நன்கொடைகள் மூலம்  திருப்பணி செய்ய முன்வந்தால் முன்பெல்லாம் அனுமதி அளித்ததோடு, அதில் ஒரு சிறிய பணியை  அறநிலையத்துறை செய்து வந்தது. அதற்காக உரிய பொறியாளர்கள் மூலம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இப்போதும் அதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் இப்புனிதமான பணியிலும் சிலரது சுயநலமும் பணத்தாசையும் நுழைவதாகப் பக்தர்கள் கருதுகிறார்கள்.

 திட்ட மதிப்பீட்டுக்குப் பின் அரசின் உதவித்தொகை இருபது லக்ஷம் என்று வைத்துக்கொண்டால் சில அதிகாரிகள், அதைப் பெற்றுத் தருவதற்காகக்  கூசாமல் ஒரு லக்ஷம் லஞ்சம் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அவை உண்மையாக இருக்கக் கூடாது என்று நம்புகிறோம். எங்கேயாவது ஓரிரு இடங்களில் உண்மையாகவே அவ்வாறு நடந்து விட்டால் நம் புனிதமான  சமயத்திற்கே தீராத களங்கம் ஏற்பட்டு விடும் அல்லவா? ஆகவே நற்பணி மன்றங்களும் நன்கொடையாளர்களும் ஊர் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. இருபது  லட்சம் என்ன, அதற்கு மேல் எத்தனை உதவித் தொகை வழங்கப்பட்டாலும் அதிலிருந்து சல்லிக்காசு கூட எந்த அதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்கப்படக் கூடாது. அப்படி யாராவது கேட்டால் அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். இதை ஆரம்பகாலத்திலேயே செய்து விட்டால், பின்னர் லஞ்சம் வேரூன்றாதபடி செய்ய முடியும்.

கோவில்களில் பிராகாரங்களிலும் ,விமானங்களிலும், கோபுரங்களிலும் மரங்கள் வேரூன்றிய அவல நிலை போதும். லஞ்சம் வேரூன்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆலயம் என்பது சத்தியத்தின் இருப்பிடம். இறைவனோ மெய்யே வடிவானவன். பொய்யிலி . நமது அதர்மங்கள் கோவில்களுக்கு
வெளியில் இருப்பது போதாதா? உள்ளேயும் நுழைந்து, அதன் புனிதம் கெட வேண்டுமா ?  சிந்திக்க வேண்டும்.   இறைவன் மாசிலாமணி. அவனுக்குச் செய்யும் திருப்பணிகளும் மாசற்றவைகளாகவே இருக்கவேண்டும்.

4 comments:

  1. திருப்பணிகளும் மாசற்றவைகளாகவே இருக்கவேண்டும்...true line
    .

    ReplyDelete
  2. தன் கையே தனக்குதவி என்பது யாருக்குப் பொருந்துமோ, சனாதனிகளுக்கு மிகப் பொருத்தம், மிகுந்த அவசியமும் கூட. நாமாக ஒன்று சேர்ந்து இவற்றை சீர் செய்யாவிடில் குறை கூறிப் பயனில்லை. காசு வரும் இடத்தில் ஊழல் வரும் என்பது இயற்கை. எனவே எப்படி கணிணித்துறையில் ஓப்பன் சோர்ஸ் (Open Source) என்ற அற்புதம் ஏற்பட்டதோ, அதே போல இறைப்பணி, கல்வி மற்றும் மருத்துவம் இவற்றிலும் ஏற்பட நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். இது நம் கடமை மட்டுமல்ல, வெள்ளம் தலைக்கு மேலே போவதற்கு முன் செய்ய வேண்டிய தற்காப்பும் ஆகும்.

    ReplyDelete
  3. ஒரே ஒரு அன்பர் மட்டுமே இங்கு வெளியான புகைப்படத்தில் இருக்கும் கோயில் எங்கு உள்ளது என்று கேட்டிருந்தார். இக்கோவிலின் புனரமைப்புக்காக அவரது இதயம் ஏங்குவதை உணர முடிகிறது. மற்றவர்கள் பரிதாபப் படக் கூடும்! நிலைமை இவ்வாறு இருக்க, ஒன்று சேர்வது அத்தனை சுலபமாகத் தோன்றவில்லை.நீங்கள் குறிப்பிடும் அற்புதங்கள் பிற துறைகளில் வேண்டுமானால் நிகழலாம். ஆன்மீகத்தில் நடைபெறவேண்டுமே !

    ReplyDelete