Monday, February 10, 2014

பகிர்விற்கும் எல்லை உண்டு

 " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றார் திருமூலர். மகான்களுடைய சிந்தனையும் கவலையும் இப்படித்தான் இருக்கும். தனக்குக் கிடைத்த இறை அருளும்  அனுபவமும் உலகம் முழுவதும் பெற்றுக் கடைத்தேற வேண்டும் என்றே விரும்புவார்கள். உலகத்திலுள்ள துயரங்கள் எல்லாம் நீங்குவதாக என்று பாடினார் திருஞானசம்பந்தர். பிறருக்காக ஏங்குவதும், வேண்டுவதும் ஞானிகளுக்கே உரிய தனிச் சிறப்பு. அத்தனை உயர்ந்த நிலை நமக்கு வராவிட்டாலும் பிறருக்காக இரக்கப்படவோ , வருந்தவோ செய்யலாம் அல்லவா? தனக்குப் பிடித்ததை எல்லாம் பிறருக்குத் தெரிவிப்பதை  இந்தக் காலத்தில் பகிர்ந்து கொள்ளுதல் என்கிறார்கள். இங்கேதான் சங்கடம் வருகிறது. பிடிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக இருக்கிறது. பலருக்கும் பிடிக்கும் விஷயம் சிலருக்குப்
 பிடிக்காமல் போய் விடுகிறது. அதேபோல் சிலர் மட்டுமே விரும்பும் விஷயம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. விவாத மேடையில் கொண்டு விடுகிறது.

விஞ்ஞானம் வளர வளர சிந்தனைகள் வேறுபட இடம் கிடைத்துவிடுகிறது. வாழ்க்கை நடைமுறைகளிலும் இம்மாற்றங்கள் திணிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலையையும் பார்க்கிறோம். முன்னேற்றம் இருந்தால் அதை நல்ல வழியில் பயன் படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நல்ல வழி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போவதோடு தனக்கென்று ஒரு வழியையும் அமைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்தவும் துணிந்து விட்டார்கள்.

கணினி மூலம் நாம் பெற்ற ஏராளமான நல்ல பயன்களுக்கு இடையில் தீமையையும் துவேஷத்தையும் ,ஆணவத்தையும்  விளைவிக்கும் விஷயங்களும் பெருகி வருவது வருத்தப்படவேண்டிய ஒன்று.
எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலை வந்து விட்டது. போதாக்குறைக்கு முகநூல் மூலமாகக்  சொந்த  விவகாரங்களையும், பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றை உரிய நபர்களுக்கு மட்டும் மெயில்,வாட்ஸ் அப் , ஹாங் ஔட் போன்றவற்றின் மூலமாகப் பகிர்ந்து கொள்ளலாமே!

இந்தப் பகிர்வு ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை! முதலில் கேமெராவில் ஆரம்பித்து, வீடியோ வரையில் கோயில்களும் கோயில் நிகழ்ச்சிகளும் படம் எடுக்கப்பட்டுத்  தொலைக்காட்சிகளில்
காட்டப்படுகின்றன. வீட்டில் உட்கார்ந்தபடியே ஆலயங்களைத் தரிசிக்கலாம் என்கிறார்கள். பரிகாரங்களும் பரிந்து உரைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் கோவிலின் கோபுரம்,விமானங்கள் , தூண் சிற்பங்கள், பிராகாரங்கள் என்பவற்றைப் படம் எடுத்ததுபோக, கருவறைக்கு உள்ளே இருக்கும் மூலவர்களையும் புகைப்படமும்,வீடியோவும் எடுக்கிறார்கள். அர்ச்சகர்கள் இல்லாத போது திருட்டுத் தனமாக டிஜிடல் காமிராக்கள் வேலை செய்கின்றன. அதனால் தவறு ஒன்றும் இல்லை என்று வாதம் செய்யவும் தயாராக இருக்கின்றனர்.

அண்மையில் ஒரு அன்பர் பாடல் பெற்ற அத்தனை சிவாலயங்களின் மூலவர்களையும் படம் எடுத்து ஒரே பதிவாக வெளியிட்டிருந்தார். நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என்று உண்மையிலேயே புரியவில்லை. இதனால் சுவாமியின் சாந்நித்தியம் குறைந்து விடுமா என்ன என்று எதிர்  கேள்வி கேட்பவர்களிடம் என்ன சொல்வது? பக்தி குறைந்து , அடக்கம் குறைந்து ஆணவம் மேலோங்க இது வழி செய்கிறது என்பதை மட்டும் மறுக்க முடியாது. பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று துணிந்த பின் , பக்தி பறந்தோடிவிடும். ஆலயங்கள் படப்பிடிப்பு நிலையங்களாக மாறவும் இதுவே காரணம்.

அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக மற்றொன்றை முக நூலில் காண நேரிட்டது. சிதம்பரம் நடராஜ சபையையே ஒருவர் திருட்டுத்தனமாகப படம் எடுத்து அதில் வெளியிட்டிருக்கிறார். நந்தியும்,பஞ்சாக்ஷரப் படியும், நடராஜப் பெருமானும் அதில் தோற்றம் அளிப்பதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அதற்குப் பின்னூட்டம் இட்டிருக்கும் பலரில் ஒருவர் சொல்லியிருப்பதுதான் வேதனையிலும் வேதனை. தீக்ஷிதருக்குப் பணம் கொடுத்து இன்னும் அருகிலேயே சென்று தெளிவாகப் படம் எடுத்திருக்கலாமே என்கிறார் இவர். கோடி ரூபாய் கொடுத்தாலும் தீட்சிதர்கள்
இதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இவர் அறியாதவர் போல் இருக்கிறது.

ஒரு மடாதிபதி பூஜை செய்வதை வீடியோ காட்சியாகக் காட்டுகிறார்கள். இதுபோல் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்று சிலாரூபங்களைப் படம் எடுக்கிறார்கள். இவற்றால் அவற்றிற்கு நன்மைகள் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அவற்றின் பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படும் என்பதை ஏன் இவர்கள் யோசிப்பதில்லை? ஏராளமான விக்ரகங்கள் திருட்டுப் போயிருந்தும்
அவற்றைத்  தடுக்க என்ன செய்து இருக்கிறார்கள்? எல்லாவற்றையும் ஒரே ஊருக்கு எடுத்துச் சென்று காற்று கூடப் புக முடியாத அறையில் பூஜை இன்றி பூட்டி வைக்க மட்டுமே தெரியும்.

குருவாயூருக்குச் சென்று பாருங்கள். ஆலயத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரது உடைமையும்  முழுமையாகச் சோதிக்கப்படுகின்றது. காமெரா, செல்போன் போன்றவற்றை உள்ளே அனுமதிப்பதில்லை
வெளியிலுள்ள பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு மட்டுமே செல்ல முடியும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. கோவிலுக்கு உள்ளே திருமணம்,படப்பிடிப்பு ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன. பாதுகாப்போ பூஜ்யம் தான்! இதுவரையில் செய்த தவறுகள் போதும் இனியாவது திருத்திக் கொள்வோம். பகிர்வு வேண்டியது தான் . ஆனால் அது எல்லை மீறியதாக இருக்கக் கூடாது.        

1 comment:

  1. உண்மை. தமிழக ஆலயங்கள் இந்து அறநிலயத்துறையின் கீழ் இருப்பதும் குருவாயூர் அவ்வாறு அரசு கட்டுப்பாட்டின் கீழ் இல்லாது இருப்பதும் தான் வேறுபாடு. முன்பு ஒரு முறை களப்பிர ர் கள் ஆட்சியில் இருந்தோம், இப்போது....

    ReplyDelete