Sunday, October 20, 2013

அபயம் தரும் அபயாம்பிகை

யானை, குரங்கு, நாரை போன்ற உயிரினங்கள் சிவபெருமானைப் பூஜித்ததாகப் புராணங்கள் மூலமாக அறிகிறோம். இதெல்லாம் சாத்தியமா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்வர். வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள பட்டவர்த்திக்குப் பக்கத்தில் அப்பர் ஸ்வாமிகளின் தேவாரம் பெற்ற திருக்குரக்குக்கா(வல்) என்ற ஸ்தலத்தில் இன்றும் ஒரு அதிசயம் நடைபெறுகிறது.ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குரங்கு இக்கோயிலுக்குத் திடீரென வந்து, அங்குள்ள சிப்பந்திகள் வெளியேறும் வரையில் காத்திருந்து விட்டுப் பிறகு நேராக மூலவரி டத்தில் சென்று அமர்ந்து கொண்டு, தான் கொண்டு வந்த இலைகளையும்,பூக்களையும் போட்டுவிட்டுப் பிறகு அமைதியாக ஆலயத்தை விட்டு வெளியே செல்கிறது. ஒரு வருஷம் மகாசிவராத்திரியன்று வந்ததாகக் கூறினார்கள்.  சந்தேகக் கண்ணோடு நோக்குபவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ தெரியவில்லை!

கோயில்களில் பூனைகள் நடமாடுவது நாம் எல்லோரும் பார்த்ததுதான். அதிலும் சற்று வித்தியாசமான காட்சியை மயிலாடுதுறையிலுள்ள மாயூரநாதர் ஆலயத்தில் காண நேர்ந்தது. அந்த ஆலயத்திலுள்ள அம்பிகை மயிலுருவில் ஈசனை வழிபட்டுத் தன் பழைய உருவைப் பெற்றாள் என்கிறது தலபுராணம். பொன்னிற மேனியளாக ஆனதால் கௌரி எனப்படுகிறாள். சுவாமியும் கௌரி மாயூரநாதர்  எனப்படுகிறார். அம்பாளுக்கு அபயாம்பிகை என்றும்      அபயப் ப்ரதாம்பிகை என்றும் வடமொழியில் பெயர்கள் உண்டு. தமிழில் அஞ்சொல் நாயகி எனப்படுகிறாள். "அஞ்சொலாள் உமை" என்று இத்தலத்துத் தேவாரம்  குறிப்பிடுகிறது. இவ்வாறு எல்லாப் பெயர்களும்  அம்பிகைக்குப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கின்றன.

ஜகன்மாதாவான  அம்பிகை , நமக்கெல்லாம் அபயம் தந்து அஞ்சேல் என்று ரக்ஷிப்பதால் அவளை அபயாம்பிகை என்கிறோம். அதேபோல அஞ்சேல் என்று சொல்லும் அவளது குரல் இனிமையை எப்படி வருணிப்பது! அழகிய அந்தச்  சொல்லின் அழகும் , அந்தக் குரலின் அழகும் ஒன்றை ஒன்று விஞ்சுவதாக அல்லவா இருக்கின்றன!  அதனால் தான் அஞ்சொல் நாயகி என்ற பெயரும் அழகாகத்தான் இருக்கிறது. அஞ்சேல் என்று தஞ்சம் அளிப்பதை நேரில்      கண்டால்  அது எப்படிப்பட்ட இன்பம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பிற கோயில்களைப் போல இக்கோயிலிலும்  பூனைகள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்  கொண்டிருக்கும். சமீபத்தில் கண்ட காட்சி சிந்திக்கவும் வைத்துவிட்டது. அபயாம்பிகை சன்னதியில் ஆடிப்பூர  அம்மனுக்கென்று ஒரு தனி சன்னதி உள்ளது. வெளியில் பூட்டப்பட்டிருக்கும் கம்பிக்கதவின் வழியாக அம்பாளைத் தரிசிக்கலாம். அப்படித் தரிசிக்கும்போதுதான் இந்த அபூர்வக் காட்சி கிடைத்தது. ஆடிப்பூர அம்பாளின் பீடத்தில் ஒரு வெள்ளைப் பூனை உட்கார்ந்து கொண்டு இருந்தது. அதன் அருகில் ஒரு குட்டிப்பூனையும் இருந்தது. அது பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருக்கலாம். தாய்ப்பூனை தனது குட்டியை மிகவும் பாதுகாப்பான இடத்திலேயே விட்டு வைக்கும். அம்பாளுடைய பாதத்தைக் காட்டிலும் பாதுகாப்பான இடம் ஏது? சில நிமிடங்களில் குட்டிப்பூனை தனது தாயையும். உலக அன்னையையும் சேர்த்து ஒரு முறை சுற்றி வந்தது.தலையை நிமிர்ந்து அம்பாளின் திருமுகத்தை ஒரு கணம் நோக்கியது. பிறகு தாயிடம் சென்று ஒட்டிக்  கொண்டது. இக்காட்சியைக் கண்டவர்கள்  சிலிர்த்துப்போயினர். பூனைக்குட்டிக்கும் அபயம் அளிக்கும் அபயாம்பிகையின் கருணையைக் கண்டவுடன்  அந்தப் பெயர் எவ்வளவு அர்த்த புஷ்டியானது என்பதும் புரிந்தது. 

Friday, October 4, 2013

வேலியே பயிரை மேயலாமா?

பயிர்களைக் காப்பதற்கு வேலிஅமைப்பார்கள்.  பயிர்களைப் பிற மனிதர்களோ, விலங்கினங்களோ அண்டாமல் பாதுகாப்பது அந்த வேலி . இப்படி அரண் போல இருந்து காப்பதை வேலி என்பார்கள். எனவே, வேலி என்பது காவலாக அமைவது. தனது அடியானுக்காக நெல்லை வேலியிட்டுக் காத்து அருளியதால் நெல்லையப்பர் என்ற பெயர் ஈச்வரனுக்கு வந்தது. ஊரைச் சூழ்ந்து ஓடும் நதியும் இவ்வாறு வேலி ஆவதை, " ... சாம வேதம் பாடிய பாணியாலே ஆடினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே." என்கிறார் அப்பர் சுவாமிகள்.   கெடிலம் வேலி போலத் தோன்றினாலும், அனைத்து உலகங்களுக்கும் வேலி போல நின்று காப்பவன் பரமேச்வரன். நாம் அமைக்கும் வேலியும் நிரந்தரம் அல்ல. அவ்வப்போது அதனைச் சீர்திருத்த வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் , கிடைக்கும் இடைவெளி மூலமாகப் பிறர் புக ஏதுவாகிறது. அப்போது தேவையான அளவு நெருக்கமாக இல்லாததால் வேலி இருந்தும் பயிர் மேயப்படுகிறது. சாஸ்வதமான இருப்பவனே  அனைவரையும் காக்கும் ஒரே வேலி. மற்றதெல்லாம் வேலி போலத் தோன்றினாலும் உண்மையில் வேலி ஆகா.

வேலியைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு என்று தோன்றும். தர்மத்தை அரசர்கள் காத்து வந்தாலும், அவற்றை நேரிடையாகக் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்திருந்தார்கள். தங்களால் ஏற்படுத்தப்பட்ட நிபந்தங்கள் ஆலயங்களுக்கு உரிய முறையில் போய்ச் சேருகின்றனவா என்பதில் அவர்கள் காட்டிய அக்கறையே அலாதியானது. தென்காசி ஆலயத்தைக் கட்டிய மன்னன், " இதைத் திருப்பணிகள் செய்து  பராமரிப்போரது திருப்பாதங்கள் அடியேனது சிரத்தில் இருக்கக் கடவது" என்று கல்வெட்டில் எழுதினான்.   ஆனால் இன்று நடப்பது என்ன? அடியார்கள் இடும் காணிக்கைகளைக் களவாடுகிறார்கள் என்ற   அதிர்ச்சித் தகவல்களை செய்தித் தாள்கள் மூலம் அறிகிறோம்.

உண்டியல்கள் உடைக்கப்பட்டுக் காணிக்கைகள் களவாடப்படுவது நடைபெற்றபோதிலும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் உண்டியல்கள்  பல இடங்களில் களவாளப்படுகின்றன. அறநிலையத்துறையின் கோயில்களில் உண்டியல் எண்ணப்படும்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? எல்லாக் கோயில்களிலும் கேமிராக்கள் பொருத்தப்  படாத நிலையில் முறைகேடு நடக்காது என்பது என்ன நிச்சயம்? நேரம் கிடைத்த போதும், அதிகாரிகள் அதை எண்ணுவதற்கு மனமுவந்து (!) வரும்போதுமே  பெரும்பாலும் உண்டியல்கள் திறக்கப்படுகின்றன. அதிக வருவாய் வந்து உண்டியல் நிரம்பி வழிந்தாலும் கண்டு கொள்ளாமல் செளகரியப்பட்டபோது திறந்தால் போதுமானது என்று இருந்தால் திருடன் விட்டு வைப்பானா?   இது போன்ற நிலையில் மாதம் ஒரு முறை எண்ணுவது என்றில்லாமல் அடிக்கடி எண்ணினால் திருடப்படும் பணமும் ஓரளவாவது காக்கப்படும்.

மதுரை மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை முடிந்து சில வாரங்கள் கழித்து அதிகாரிகள் உண்டியலை எண்ணியபிறகு, கணக்கை சரிபார்க்கும்போது சில லட்சங்கள் களவாடப்பட்டிருப்பது தெரியவே, உயர் அதிகாரி மூலம் வீடியோ பதிவைப் பார்க்கும்போது ஒரு அதிகாரியே, பணத்தைக்  கைக்குட்டையால் மூடி எடுத்து வைத்துக் கொள்வது தெரிய வந்ததாம். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இப்படி ஒரு அதிர்ச்சித் தகவலை தினசரிச்  செய்தித் தாள்கள் வெளியிட்டுள்ளன. பக்தர்கள் தங்களது காணிக்கை இறைபணிக்கே போய்ச்சேருகிறது என்ற நம்பிக்கையில்தானே அதை  உண்டியலில் செலுத்தியிருப்பார்கள் ? அந்த நம்பிக்கை வீண் போகலாமா? அறத்தைக் காக்கும் கடமை கொண்ட அறநிலையத் துறை அதிகாரியே இப்படி செய்திருப்பாரேயானால் பிறகு ஆலய சொத்துக்களை யார் பாதுகாப்பது? வேலியே பயிரை மேய்வதாக அல்லவா முடியும்?  சந்தன மகாலிங்கத்திற்கே வெளிச்சம்.
  

Wednesday, October 2, 2013

பத்திரிகை உலகம் சிந்திக்குமா?

ஹிந்து சமயத்தின் அடிப்படை நோக்கமே மீண்டும் பிறவாத பேரின்ப முக்தியை அடைவது என்பது. முக்தியை அடையப் பல மகான்கள் அவதரித்துப் பல்வேறு மொழிகளிலும் நூல்கள் அருளித் தங்களது உபதேசங்களால் முக்தி அடைய வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். "பிறவாமை வேண்டும்" என்று முக்தி தரவல்ல மூர்த்தியைக் காரைக்கால் அம்மையார் வேண்டியதாகப் பெரிய புராணம் கூறும். பல ஸ்தலங்களில் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்ற திருநாமம் இருப்பதையும் நாம் இங்கு நினைவு கூர வேண்டும். பல்வேறு நூல்கள் வெவ்வேறு தெய்வங்களிடம் நம்மை ஆற்றுப் படுத்தினாலும், அனைவருக்கும் பொதுவான இலக்கு என்பது மீண்டும் பிறவா முக்தி நிலை என்பதில் ஐயமில்லை.ஒவ்வொருவரும் அம்மகான்கள் காட்டிய பாதையை ஏற்று அவர்கள் அருளிய நூல்களை ஓதி முக்தி வரம் பெறலாம் என்பது கோட்பாடு. " விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்..." என்று திருநாவுக்கரசரும், அனைத்துத் தெய்வ வழிபாடுகளும் மாதொரு பாகனையே சென்று அடையும் என்று சைவ சித்தாந்த சாஸ்திரமும் குறிப்பிடுவதை எடுத்துக் காட்டலாம்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர்  பேசியதாக அக்டோபர்  2 ம்  தேதியிட்ட தினசரி பத்திரிகையில் வெளியான செய்தி வியப்புக்குரியதாக இருக்கிறது. பேச்சாளர்கள் பெரும்பாலும் நிகழ்ச்சி நாயகர்களையோ, நூல்களையோ முன்னிலைப்படுத்திப் பேசுவது வழக்கம். அது நியாயமும் கூட! ஆனால் பிறரையோ அல்லது பிறரது நம்பிக்கைகளையோ அது பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒருக்கால் யாராவது வருத்தம் தெரிவித்தால், பேச்சாளர் தான் அப்படிப் பேசவில்லை என்றும் பத்திரிகை அதைத் திரித்து எழுதிவிட்டது என்றும் மறுப்பு தெரிவிப்பதும் உண்டு. எனவே, நாம் பத்திரிகையில் வெளியான செய்தியைக் கொண்டே இங்கு சில வார்த்தைகள் எழுத வேண்டியிருக்கிறது.
முன்னாள் அமைச்சரின் பேச்சை வெளியிட்டு அந்நாளிதழ் , " தமிழ் மொழிக்கு வைணவமும் திருவருட்பாவும் இரண்டு கண்கள் " என்று தலைப்பு கொடுத்திருக்கிறது. இனி, அந்த அமைச்சர் கூறியதாக வெளியான செய்தியை  இங்கு தருகிறோம்:-  " .... வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை. தமிழ் மொழிக்கு வைணவமும் திருவருட்பாவும் இரண்டு கண்கள்." இவ்வாறு பேசியதாக வெளியிடப்பட்டுள்ளது.

ஹிந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழுக்கு இரு கண்கள் இருக்கும் விளக்கத்தை இப்போது தான் புதிதாகக்  காண்கிறோம். தமிழில் உள்ள தெய்வ இலக்கியங்களுக்குச் சைவமும் வைணவமும் இரு கண்கள் என்று சொல்வதும் பொருத்தமே. சைவத்தை நீக்கி விட்டுத் திருவருட்பாவை ஒரு கண்ணாகக் கொண்டது நிகழ்ச்சி அமைப்பாலர்களைத் திருப்தி படுத்துவதற்காகத்தான் இருக்கக் கூடும் என்று நம்புகிறோம். சைவத்தையும் சைவ சமய குரவர்களையும் போற்றியுள்ள இராமலிங்க அடிகளுக்கே இதில் உடன் பாடு இராது என்றும் நம்புகிறோம்.

மேலும், வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை என்று எக்காரணம் பற்றி, எந்தப் பொருளில் அமைச்சர் பேசினார் என்று தெரியவில்லை. " ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்  புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே." என்ற திருஞானசம்பந்தரின் வாக்கில் திடமான நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்கள் முக்தி அடைவதில்லையா?  மூலன் உரைத்த மூவாயிரம் தமிழையும் காலை எழுந்து உள்ளன்போடு கருத்து அறிந்து  ஓதினால் ஞாலத்தலைவனான சிவபெருமானின் சேவடிகளை அடையலாம் என்று  திருமூலர் அருளுவதை நம்பி வாழ்பவர்கள் முக்தி அடைவதில்லையா? " முக்தியே சேர்வதற்கு அருள்வாயே "என்று அருணகிரிநாதர்  வேண்டியதை நமக்காக வேண்டியதாகக் கொண்டு திருப்புகழை அனுதினமும் பாராயணம் செய்பவர்கள் கந்தக் கடவுளின் கழலிணை களை அடைவதில்லையா?

ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு மார்கத்தில் பற்று இருக்கத்தான் வேண்டும். வள்ளலாரின் வாக்கைப் பின்பற்றினால் மோட்சம் கிடைக்கும் என்று சொல்லட்டும். ஆனால் "வள்ளலாரைப் பின்பற்றாதவர் மோட்சம் அடைவதில்லை" என்று சொன்னால், பிற நூல்கள் மூலம் இறையருளை அடைய முற்படுவோரது மனம் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சிந்திக்க வேண்டும். அதேபோல் நாம் பின்பற்றும் சைவம் , தமிழுக்கு ஒரு கண் இல்லையா என்று நினைக்கவும் இப்பேச்சு வகை செய்கிறது.

ஒரு அரங்கத்தில் கூடியுள்ள மக்கள் முன் இது போன்ற பேச்சுக்கள் எத்தனை எத்தனையோ ! அவை மக்களை இணைப்பதாக இருந்தால் பத்திரிகையில் வெளியிடலாம். பிரிப்பதாகவோ, ஒரு சாராரை மனவருத்தத்திற்கு  உள்ளாக்குவதாகவோ இருந்தால் அது போன்ற செய்திகள் அரங்கத்தொடு இருந்து விட்டுப் போகட்டும். அனைத்து மக்களும் அறியும்படி செய்திதாளில் வெளியிட வேண்டுமா? பத்திரிகை உலகம் சிந்திக்குமா?