கேரளத்துக் கோயில்களுக்குச் சென்று வந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகக் கவனத்திற்கு வந்திருக்கும். பாரம்பர்யம் எவ்வாறு அங்கு காப்பாற்றப்படுகிறது என்பதே அது. ஆண்கள் சட்டை அணிந்து செல்ல மாட்டார்கள். கோயில் கருவறையில் மின் விளக்கே இருக்காது. நெய் தீபமே சுடர் விட்டு எரியும். சன்னதியில் வீண் வம்பு அடிப்பவர்களைப் பார்ப்பது மிகமிக அரிது. கோயில் சுத்தத்தின் இருப்பிடமாக இருக்கும். குருவாயூர் போன்ற பிரபலமான கோயில்களிலும் பிராகாரத்தில் லட்டு கடையோ, பிற கடைகளோ இருப்பதைக் காண முடியாது. எல்லாம் கோயிலுக்கு வெளியில் தான். தூணுக்குத் தூண் , உண்டியல்களையும் காணோம்! அவர்களால் இக் காலத்திலும் எப்படி இவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது என்று பார்த்தால், தெய்வத்தின் மீதும் , பாரம்பர்யத்தின் மீதும் அவர்கள் காட்டும் மதிப்பும் மரியாதையுமே காரணம் எனலாம்.
தமிழகக் கோயில்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. நாளுக்கு நாள் மாற்றங்கள் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் பூமி இது. கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டுப் போகும் போது இப்படித்தான் ஆகிவிடும். எதையும் மீறும் மனோபாவம் வந்துவிட்டால் கலாசாரமாவது ஒன்றாவது!
இங்கு சட்டை,கைலி, பேண்ட் என எதை வேண்டுமானாலும் அணிந்து கொண்டு ஆலயத்திற்குச் செல்லத் தடை ஏதும் இல்லை. கேட்டால் மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்று வாதம் செய்வார்கள். தானே சாமிக்குத் தூபம், தீபம் முதலியன காட்டுவார்கள். நந்தியைக் கட்டிக்கொண்டு ரகசியம் பேசுவார்கள். பிராகாரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசுவதோ கை வந்த கலை. பேசும் போது வெறும் வாயோடு பேசலாமா? தேவஸ்தான பிரசாதக்(?) கடைகள் தான் இருக்கின்றனவே, கொரித்துக் கொண்டே பேசுவதற்கு!
கோயில்களில் தானே நாம் மிகுந்த தமிழ் பற்று உடையவர்கள் என்று காட்டிக் கொள்ள முடியும்! வீட்டில் தேவார திருவாசக பாராயணம் செய்யாதவர்கள் கோயில்களில் சர்ச்சை செய்வார்கள். பிற கோயில்களில் , மகா மண்டபத்தில் தேவாரம் ஒலிக்கப்படுவது போலத் தில்லைக் கோயிலிலும் ஒலித்தால் அதற்கு எதிர்ப்பு. சாமிக்குப் பக்கத்திலேயே சென்று பாடினால் என்ன என்று! இதெல்லாம் வேடிக்கையாகத் தோன்றவில்லை? தேவையற்ற காழ்ப்பு உணர்ச்சி வித்திடப்படுகிறது. கும்பாபிஷேகத்தைத் தமிழிலேயே, திருமுறைகளை ஓதிச் செய்தால் என்ன என்று சில பேர்கள் கிளம்பியிருக்கிறார்கள். திருமால் கோயில்களில் இதைத் திவ்வியப் ப்ரபந்தம் ஓதியபடியே செய்தால் என்ன என்று யாராவது கேட்கிறார்களா பாருங்கள்.
காலம் காலமாகப் போற்றப்பட்டுவந்த மேளம், நாதஸ்வரம் ஆகியவற்றிற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது. கோயில்களில் நடக்கும் வைபவங்களில் கேரளத்து செண்டா வாத்தியக் காரர்கள் வரவழைக்கப் படுகின்றனர். தமிழகக் கிராமக் கலையான மேளமும் நாதஸ்வரமும் ஓரம் கட்டப் படுகின்றன. அவற்றை வளர்த்ததே கோயில்கள் தான் என்பதை மறுக்கமுடியாது. ஒரு காலத்தில் , ஸ்வாமி புறப்பாட்டின் போது, நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிப்பதைக் கேட்க இரவு முழுதும் வீதிகளில் சங்கீத ரசிகர்கள் இருந்தார்கள்.
இப்பொழுது இவ்வளவு சங்கீத சபாக்கள் இருந்தும், நாதஸ்வரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. தென்மாவட்டங்களில் திருமணங்களிலும் செண்டா வாத்தியம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாதஸ்வரம் வாசிப்பவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டி வந்து விடும். கேரள பூமியின் கலாசாரத்தை அவர்கள் காப்பாற்றுவதைப் போலத் தமிழகத்தின் கலைகளைக் காப்பாற்ற வேண்டாமா? பஞ்சமுக வாத்தியமும் பாரி நாயனமும் காட்சிப் பொருள்கள் ஆகி விட்டதைப் போல மேளமும் நாதஸ்வரமும் ஆகிவிடாமல் காப்பாற்றப் பட வேண்டும். யார் சொன்னால் எடுபடுமோ தெரியவில்லை. சொல்ல வேண்டியவர்கள் மௌனம் சாதித்துக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு பாரம்பர்யக் கலையும் நசித்துப்போய் விடும் என்பதில் சந்தேகமே இல்லை.