தீபாவளி என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வருபவை புதிய ஆடைகளும், பட்சணங்களும், பட்டாசுகளுமே தான்.
சிலருக்கு நரகாசுரன் கதையும் நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கு டீ.வி.யில் காட்டப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைக்கு வரும் படங்களும் கூட ஞாபகம் வரும். ஆனால் நமக்கு நினைவுக்கு வராத எவ்வளவோ இருக்கும்போது அவற்றையும் சிறிது சிந்திக்க வேண்டியிருக்கிறது.
தீபாவளி வந்துவிட்டதே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்கள்.
எல்லாம் இருந்தும் நோய்வாய்ப்பட்டு அன்றைய தினம் ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள்.
குடும்பத்தவர் காலம் சென்றதால், ஓராண்டு பண்டிகை கொண்டாடாமல் இருப்பவர்கள்.
குடும்பத்திலிருந்து தனித்து விடப்பட்டோர்.
குடும்பத்தைப் பிரிந்து அயல் நாட்டில் தனியே வசித்து வேலை செய்பவர்கள்.
உற்றார் உறவினர் இருந்தும் பாசம் என்பதையே அனுபவிக்காதவர்கள்.
வசதிபடைத்த வீட்டுப் பையன்கள் முகத்தையே பாவமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் வெடித்துச் சிதறிக் கிடந்த வெடிகளைப் பொறுக்கிக்கொண்டுபோய் தானும் வெடிக்க ஆசைப் படும் ஏழைச் சிறுவர்கள்.
போரில் சிறைக்கைதிகளாகப் பிடிபட்டு அயல்நாட்டுச் சிறைகளில் இருக்கும் நமது ஜவான்கள்.
இப்படிப் பலதரப்பட்ட மக்கள் தீபாவளியை இன்பமாகக் கொண்டாடமுடியாமல் துன்பப்படுகிறார்கள்.
இவர்களைப் பற்றி எண்ணுவதாலும். ப்ரார்த்திப்பதாலும் அத்துன்பச்சுமை உடனே குறையப் போவதில்லை என்றாலும், நமக்கு இரக்க குணம் ஏற்பட வகை செய்கிறது அல்லவா? இந்த குணம் இல்லாததால் தான்
தற்காலத்தில் சுயநலம் ஓங்குகிறது. இல்லாதவனுக்கு இரக்கப்படுவதும் அவனுக்கு உதவுவதும் இருப்பவனது கடமை. இல்லாதவர்கள் பலராக இருப்பதன் காரணம் முற்பிறவியில் அவர்கள் நல்வினைகளைச் செய்யாததால்தான் என்கிறார் திருவள்ளுவரும்.
நமக்கு நல்ல குணங்கள் வர வேண்டும் என்று ஈச்வரனைப் பிரார்த்திக்க வேண்டும். " அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே." என்று அப்பர் தேவாரம் சொல்கிறது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று திருமூலர் பாடியருளியதுபோல், நாமும் சிந்திப்போமானால் நமது எண்ணங்கள் உயர்ந்தவை ஆகும்.
ஜனங்களின் நல்ல குணங்கள் போய்விடக்கூடாதே என்று கவலைப் படும் விதமாக 1949 ம் வருடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்கள் ஆற்றிய உரையை 19.5.2004 தேதியிட்ட "துக்ளக்" இதழ் வெளியிட்டிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது:
" பொது ஜனங்களுக்கு நற்குணங்கள் அதிகரிக்கவோ, அவர்கள் தர்ம மார்க்கமான புண்ய மார்கத்தில் போய் ஈசன் அருளை அடையவோ ஜனநாயகம் உதவுகிறதா அல்லது ஜனங்களைக் கெடுத்து சிலருடைய நலனை மட்டும் பேணுவதற்கு சகாயம் செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். "Of the people,by the people,for the people" என்றெல்லாம் என்னென்னவோ
சொல்கிறார்களே, அதெல்லாம், விஷயம் தெரியாத மக்களால், விஷயம் தெரியாத (ஆனால் சுய நலம் தெரிந்த) மக்களைக் கொண்டு, அவர்களைச் சேர்ந்த சில மக்களுக்காகவே அமைத்த சர்க்கார் என்பதாக முடிந்துவிடுமோ என்று கூடப் பயப்படும்படி இருக்கிறது. உத்திர மேரூர் சாசனத்தில் உள்ள எல்லா clause க்கும் ஷரத்துக்களுக்கும் அடிப்படை , வேட்பாளருக்கு அர்த்த சுத்தியும்,ஆத்மசுத்தியும் இருக்க வேண்டும் என்பதே. தற்போது குற்றவாளி என்று நிரூபணம் ஆனவரைத்தவிர எவரும் வேட்பாளராக நிற்க முடியும். இப்போது நடக்கிற மறைமுகக் குற்றங்களுக்கோ எல்லை இல்லை.பெரிய தப்புகள்கூட, சாமர்த்தியமாகப் பண்ணிவிட்டு சாட்சியம் போதவில்லை என்று தப்பிவிட முடிகிறது.
பிரஜைகள் அத்தனை பேரின் அர்த்த,ஆத்ம சுத்திகள் கெட்டுப்போக வழி செய்து கொடுக்கும்படியாக இப்போது தேர்தல் முறை செய்யப்பட்டிருக்கிறதே என்பதை நினைத்தால் மிகவும் கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. வெகுகால வெள்ளைக்கார ஆட்சிக்குப் பிறகு, இப்போது சுதந்திரம் கிடைத்திருக்கும்போது, எல்லோரும்
நிதானம் இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல்,விவஸ்தை இல்லாமல் கிளம்புவதற்கு இடம் ஏற்பட்டிருக்கிறது. உலகத்திலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை காட்டுவதற்காக தர்மத்தில் சிறுமை அடைந்துவிட்டால் நம்முடைய ஜனநாயக வேஷம், பிராணன் போன உடம்புக்கு அலங்காரம் செய்கின்ற மாதிரி தான். நான் பாலிடிக்ஸ் பேசப்படாதுதான். ஆனால் பாலிடிக்ஸ் தர்மத்திலே வந்து முட்டி மோதி, நம்முடைய ஜனங்களின் நல்ல பண்புகளை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற நிலை ஏற்படும்போது, தர்ம பீடங்களாகவே மடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதால்,எப்படி வாயை மூடிக்கொண்டிருப்பது? "
அறுபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ பெரியவர்கள் கவலை தெரிவித்தார்கள். அதுவோ சுயநலத்தின் ஆரம்பகாலம். இப்போதோ அது வேரூடிக் கிடக்கிறது. உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல்ல பண்புகளை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். தீபாவளி கொண்டாடும் நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் இதை சிந்திக்க வேண்டும்.
பிறர் நலம் பற்றி அக்கறை கொண்டால் தேசநலம் ஏற்பட்டு விடும். அப்படிப்பட்ட ஞானத்தை, ஞான பரமேச்வரனாகிய தக்ஷிணாமூர்த்தி நமக்கெல்லாம் அருள வேண்டும்.
"வையகமும் துயர் தீர்கவே." --- சம்பந்தர் தேவாரம்.