Saturday, August 24, 2019

இராமேசுவரம் தேவஸ்தானம் கவனிக்குமா ?

கிழக்கு ராஜ கோபுரம், இராமநாத சுவாமி ஆலயம் 
தென்னிந்தியர்களுக்குக் காசி யாத்திரை எவ்வளவு முக்கியமானதோ அத்தனை முக்கியம் வாய்ந்தது இராமேசுவர யாத்திரை. வாழ்நாளில் ஒரு முறையாவது இதை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை மேற்கொள்கிறார்கள். மேலும் இவ்விரண்டு தலங்களும் ஜ்யோதிர் லிங்கத் தலங்கள் என்பது மேலும் புனிதம் சேர்ப்பதாகும். 

இராமேசுவரத்தில் கடலில் நீராடிவிட்டுக் கடல் மணலை எடுத்துச் சென்று,கங்கையில் கரைத்துவிட்டுக் கங்கை நீரால் விச்வநாதப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து விட்டுத் திரிவேணி சங்கமத்தில் நீராடியபின்னர்  ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களிலும் நீராடிவிட்டு, அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து மீண்டும் இராமேச்வரம் அடைந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது என்ற யாத்திரை விதி முறை இன்றும் பலரால் பின்பற்றப்படுகிறது.

முற்காலத்தில் கால்நடையாகவே பக்தர்கள் இந்த யாத்திரையைச் செய்து வந்தனர். வாகன வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்திலும் பலவிதமான அசௌகர்யங்கள் இருந்தபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மிகவும் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் இத்தலங்களுக்கு வருகை தரும் யாத்திரீகர்களைப் பார்க்கும்போது பரவசம் ஏற்படுகிறது. பாரத நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் மக்களை ஒன்றாக இணைத்துவிடுகிறது.

ஒற்றுமைக்கு எதிராகப் பேசுபவர்கள் இங்கெல்லாம் போய்ப் பார்க்கவேண்டும். யாத்திரீகர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள தர்ம சத்திரங்கள், உணவு விடுதிகள் பலமாநிலங்களைத்தாண்டி வந்தவர்களுக்கு எப்படி அரவணைக்கின்றன என்பது அப்போதுதான் தெரியும். இராமேசுவரத்தில் விடியலில் நடைபெறும் பூஜையைக் காண்பதற்காக காலை மூன்று மணியிலிருந்தே வரிசையில் நிற்பவர்களில் பெரும்பாலோர் வடக்கிந்தியர்கள். இறைவனது நாமங்களை ஓதியவாறு அமைதியாக வரிசையில் நிற்கிறார்கள். பொறுமை இழந்து புலம்புவோரைப் பார்ப்பது கடினம். மற்றவர்கள் அவர்களது பக்தி, ஈடுபாடு, பொறுமை, ஆகியவற்றுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும்.

விடியற்காலை முதற்கொண்டே கடலில் நீராடிவிட்டு நேராகக் கோயிலுக்குச் செல்பவர்கள் ஏராளம். கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் கிணறுகளாகவே (சேது மாதவ தீர்த்தம் தவிர) உள்ளன. அவற்றில் நீரை வாளிகளில் முகந்து யாத்திரீகர்களின் தலையில் விடுவதற்கு ஒவ்வொரு கிணற்றிலும் தேவஸ்தானப் பணியாளர்கள் உள்ளனர். இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ 25 வசூலிக்கிறார்கள் நூற்றுக்கணக்கில் ( ஆயிரக்கணக்கில் என்றுகூடச் சொல்லலாம் ) மக்கள் வரிசையில் நிற்கும்போது சிலர் அங்கு வந்து அங்கு நிற்பவர்களைப் பார்த்து, “ வரிசையில் நின்று குளித்து முடிய மூன்று மணி நேரம் ஆகும். ரூ 150  கொடுத்தால், வரிசையில் நிற்காமல் நேராகக் குளிக்கப் போய் விட்டு அரை மணியில் திரும்பி விடலாம் “ என்கிறார்கள். வரிசையில் நிற்பவர்கள் இதை உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வயோதிகர்கள். அதிக நேரம் நிற்க இயலாது என்று எண்ணி இந்த தரகர்களிடம் பேரம் பேசி ரூ 125 தருவதாக ஒப்புக் கொண்டு அவர்கள் காட்டிய குறுக்கு வழியில் செல்லத் துவங்குகிறார்கள்.

உண்மையாகப் பார்த்தால், இவ்வாறு “ குறுக்கு வழியி” யில் செல்வதால் அதிக நேரம் ஒன்றும் மிச்சம் ஆகிவிடுவதில்லை. டிக்கெட் கொடுக்கும் இடம் வரை சென்று அடையும் நேரம் மட்டுமே மிச்சமாகிறது. அதைத்தாண்டினால் கிணறுகளில் எல்லோரையும் போலத்தான் வரிசையாக நின்று நீராட வேண்டும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இப்படிப்பட்ட இடைத்தரகர்களால் எமாற்றப்படுகிறார்கள். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, தீர்த்தங்களில் நீராட மொத்தமே சுமார் ஒரு மணி நேரம் தான் ஆகிறது.

சேதுபதி மன்னர்களின் திருப்பணிகளால் தமிழகக் கலைச்சிறப்பும், ஆன்மீகமும் உலகமே வியக்கும் அளவில் வடிவமைக்கப்பட்டிருப்பது பெருமிதத்திற்குரியது. கடல் சூழ்ந்த தீவுக்குள் கருங்கற்களை எடுத்துச் சென்று பிராகாரங்களை அமைத்த சேதுபதி அரசர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் போதாது. இன்றும் அவ்வரச பரம்பரையினர் ஆலய நிர்வாகத்தை நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். ஆனாலும் இந்து சமய அறநிலையத்துறை ஆட்சிக்கும் உட்பட்டதாகக் கூறுகிறார்கள். எது எப்படியாயினும், மக்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவதை நிர்வாகம் தடுக்கலாம். இதனால் மறைமுகமாகப் பயன் பெறுவோர் யார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். ஆயிரக்கணக்கில் நம் வட இந்திய சகோதரர்கள் வந்து செல்லும் இப்புனிதத் தலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்க விடக்கூடாது. தமிழகக் கோயில்கள் என்றாலே காசு பறிக்கும் கும்பல்கள் இருக்கும் இடங்கள் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடக் கூடாதல்லவா ?     

Saturday, July 20, 2019

கோயில்கள் வெறிச்சோட விடலாமா ?

சோழ நாட்டில் உள்ள பல சிவாலயங்கள் மிகப் பிரம்மாண்டமான விஸ்தீரணத்துடன் கட்டப்பட்டிருப்பதை அன்பர்கள் அறிவார்கள்.சில எடுத்துக்காட்டுகளாகத் திருவாரூர்,திருவிடைமருதூர்,மயிலாடுதுறை, சிதம்பரம், நாகை, சீர்காழி,வேதாரண்யம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களைக் கூறலாம். ஊரிலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்பவோ, மகிமைக்கு ஏற்பவோ இவ்வாறு பல பிராகாரங்களோடு கூடிய மிகப் பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் மக்கள் இடம் பெயரும் போது வருவோர் எண்ணிக்கை குறைய நேரிட்டது . மக்கள் ஆதரவு குறைவதால் பராமரிப்பில் மந்த நிலை ஏற்படுகிறது. விஷமிகள் ஆக்கிரமிப்பு செய்யும் அளவுக்குச் சில ஆலயங்களில் ஊடுருவல் நடைபெறுகிறது.

எப்போதாவது இதுபோன்ற கோயில்களைத் திரும்பிப் பார்ப்பவர்கள், பெரிய பிராகாரங்களில் ஈ, காக்காய் கூட இல்லையே என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். இந்நிலைக்குத் தன்னைப் போன்றவர்களும் காரணம் என்பதை உணராமல் மேலேழுந்தபடியாகப் பேசும் பேச்சு இது! பழைய பொலிவை ஏற்படுத்த முடியாவிட்டாலும், இதுபோன்ற கோயில்களின் பராமரிப்பிற்காவது உதவக் கூடாதா ? தனக்கென்ற செலவுகளில் பல வீண் செலவுகளாக இருந்தபோதிலும், செலவழிக்கத் தயங்குவதில்லையே ஆனால் தருமம் என்னும்போதில் மட்டும் கைகள் முடங்கிவிடுகின்றன.

கோயில்களுக்கு என்னவோ தலபுராணச் சிறப்புக்கள் பல இருந்தும், தினசரி வழிபடுவோர் இன்றி,தலயாத்திரை செய்ய வருவோரை நம்பியே இன்று அவை விளங்குகின்றன. பெயர் அளவிற்கே அர்ச்சனை,அபிஷேகம் ஆகியவை செய்ய முன் வருகின்றனர். இதற்குத் தேவைப்படும் பொருள்கள் அநேகமாக வீட்டுக் கொல்லையிலே கிடைப்பனவாக இருந்தாலும் அவற்றை  இறைவனுக்கு அர்ப்பணிக்க முன்வருவதில்லை. பாடல் பெற்ற தலங்கள் பலவற்றிலும் இதேநிலைதான்! காரணம் அவை பெரும்பாலும் கிராமங்களிலேயே இருப்பதுதான் !வெளியூர் அன்பர்கள் திருப்பணி செய்ய உதவினாலும் தினமும் ஆலயத்திற்கு வருகை தர வேண்டியவர்கள் அந்தந்த ஊர் மக்கள் தானே !

விடியற்காலையில் வீட்டின் அருகே உள்ள ஆலயத்திற்குச் சென்று பெருக்கியும் மெழுகியும்,கோலம் போட்டும்,விளக்கேற்ற எண்ணையும் வழங்கியவர்கள் இப்போது அங்கு அநேகமாக இல்லை! கோயிலில் பனி செய்வதையும் வழிபாடு செய்வதையும் தினசரி கடமையாக அவர்கள் கருதி வந்ததால் கோயில்கள் பொலிவுடன் திகழ்ந்தன. பல்வேறு காரணங்களால் இவை தடை பட்டுப் போயின. பல இடங்களில் கோயிலைக் கவனிக்க அர்ச்சகர் குடும்பம் மட்டுமே ஊரில் இருக்கிறது. மற்றவர்கள் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் இருந்து விடுகிறார்கள். இதன் விளைவே கோயில்கள் வெறிச்சோடியிருப்பதற்குக் காரணம்.

இப்படிக் கைவிடப்பட்ட நிலையிலும்,விழாக் காலங்களிலும்,பிற விசேஷ தினங்களிலும் ஊர் மக்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. அப்படி வருபவர்கள் ஆன்மிகம் பற்றி மிகக் குறைவாக அறிந்தவர்களாகக் கூட இருக்கக் கூடும். வேடிக்கை பார்க்க வந்தவர்களாகவும் இருக்கலாம். திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்படும் கடைகளில் பல பொருள்களை வாங்குவதற்காக வந்தவர்களாகவும் இருக்கலாம். இருக்கட்டுமே! அதில் என்ன தவறு ? அறியாமலேயே செய்யப்படும் புண்ணியமாக இருக்கட்டுமே !

திருவாரூர் கும்பாபிஷேகம்- நன்றி-வலைத்தளப் படம் 
தங்கள் ஊர் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கப்போகிறது என்று தெரிந்தவுடன் அவர்களுக்கு ஈடுபாடு தானாகவே வந்து விடுகிறது. பரம ஏழையும் தன்னால் முடிந்ததை அர்ப்பணிக்கிறான். உடல் வருத்தம் பாராமல் கும்பாபிஷேகத்திற்கு முன்னாள் இரவு கண் விழித்துப் பங்கேற்கிறான். அவன் எதிர்நோக்குவதெல்லாம் மறுநாள் பொழுது சீக்கிரமே விடிந்து விமான கலசங்களுக்கு விடப்படும் கலச நீர்த் திவலை தன் மீதும் படாதா என்பதுதான். ஆவலோடு ஆகாயத்தை மற்றவர்களோடு சேர்ந்து பார்க்கிறான்- கருடன் அக்கும்பாபிஷேகத்தைக் காண வந்து மும்முறை விமானத்தை வலம் செய்துவிட்டு அடுத்த வினாடி விண்ணில் மறைவதை.

சப்த ஸ்தான பல்லக்கு-திருச்சோற்றுத்துறை 
எனவே ஆலயங்களில் மக்கள் கூட வேண்டும் என்றால் அங்கு ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றே ஆக வேண்டும். அது உழவாரப் பணியாக இருக்கலாம். லக்ஷார்ச்சனையாக இருக்கலாம். வீதி உலாவாகவும் இருக்கலாம். விசேஷ தினமாகவோ, திருவிழாவாகவோ இருக்கலாம். அடிப்படைக் கருத்துக்களை வழங்கும் சொற்பொழிவுகளாக  இருக்கலாம். குடமுழுக்கு நடைபெற்ற தினத்தில் மறு கும்பாபிஷேகம் நடைபெறும் வரை செய்யப்படும் சம்வத்சராபிஷேகமாகவும் கூட இருக்கலாம். ஐம்பது ஆண்டுகளாகியும் திருப்பணியோ கும்பாபிஷேகமோ செய்யாமல், பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று யார் சொல்வது என்று வினா எழுப்புபவர்களுக்கு என்ன சொல்வது ? அறியாதவர்களுக்கு மட்டுமே பிரமாண வாக்கியங்கள் மூலம் எடுத்துக் காட்டலாம். அறியாதவர்கள் போல இருப்பவர்களுக்கு எப்படிச் சொல்வது? 

நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுவதற்கு நிதி வேண்டுமே என்று கேட்கலாம். தாமாகவே முன்வந்து நிதி தந்த காலம் போய் விட்டது. ஊர் கூடிக் கலந்து ஆலோசிக்கும்போது, நிதி தர முன்வருவோர் பலர். இதை நம்முடைய  அனுபவத்தில் பார்க்கலாம். வலைத்தளம் மூலம் விண்ணப்பித்தால் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வேண்டிய நிதி பெறப்படுகிறது. நாம் செய்ய வேண்டுவதெல்லாம் ஊரைக் கூட்டுவது ஒன்றுதான். இந்த ஒற்றுமை, கோயில் சொத்தை அபகரித்தவர்களையும் சிந்திக்க வைக்கும் அல்லவா ?  

ஆகவே, பெரிய மனிதர்களையும்,மடாதிபதிகளையும் மட்டுமே எண்ணி இருக்காமல், நம்முடைய ஊர், நம்முடைய கோயில், நம்முடைய ஊரின் பாரம்பரிய அடையாளம் என்று இருந்துவிட்டால், பிராகாரங்கள் நிரம்பி வழியும். வெறிச்சோடிய காலமும் விலகி விடும். ஊர் கூடித் தேர் இழுப்பது என்பதும் இதுதான்.

Monday, June 10, 2019

இராஜராஜ மாமன்னர்

இராஜராஜரும் கருவூர்த்தேவரும் 
ஒருவரைத் தமிழ் மொழியில் சுட்டிக்காட்டும்போது , அவன் ,அவள், என்று இரண்டு  வகையில் சுட்டிக்காட்டுவதும் , மரியாதை நிமித்தமாக வயதில் பெரியவர்களைக் குறிக்கும்போது அவர் என்றே சொல்வதும் வழக்கம். உரிமை காரணமாகவோ அல்லது பக்தி மேலீட்டாலோ இறைவரை மட்டும் இறைவன் என்று சுட்டுதல் வழக்கம். ‘” பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே “ என்றார் ஞானசம்பந்தக் குழந்தை. நாடாளும் அரசரையும் அரசன்  என்கிறோம். முன்னோர்களைக் குறிப்பிடும்போதும் அன் அல்லது அள் விகுதியைப் பயன்படுத்தாது அர் விகுதியைப் பயன்படுத்துவது நமது மரபாகும். இத்துணை நாகரீகச் சொற்கள் இருக்கும்போது “ கனியிருக்கக் காய் கவர்ந்தற்று “ என்றபடி, மரியாதை குறைவான விகுதிகள் மக்களிடையே பயன் படுத்தப்படுகின்றன.

பரம்பொருளையும் பாராளும் வேந்தர்களையும் குறிப்பிடுகையில் அதீதமான பற்றின் காரணமாக இருவகை விகுதிகளையும் பயன்படுத்துகிறோம். ஆன்மிகம் மற்றும் சரித்திர நூல்களும் இதனையே பின்பற்றுவதைப் பார்க்கலாம். தசரத மன்னரின் திருமகனாரைக் குறிப்பிடுகையில் “ சக்கரவர்த்தித் திருமகன் “ என்ற தலைப்பிலும், சோழ குலத்திற்கே திலகம் எனத் திகழ்ந்த அருள்மொழி வர்மரைப் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலும்  குறித்த நூல்கள் மக்களிடையே பிரபலமானவை என்று சொல்லத் தேவை இல்லை.

இன்றைக்குத் தமிழர்களுக்குத் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டுகளின் வரலாறு கிடைக்கிறது என்றால் அவை யாவும் பெரும்பாலும் கல்வெட்டுக்களின் மூலமும் , செப்பேடுகளின் மூலமும் நமக்கு அறிவித்த சோழ மன்னர்களது கொடை என்பதை நாம் மறத்தலாகாது. அம்மாமன்னர்களை நன்றி உணர்வோடு போற்றாவிட்டாலும் போகட்டும். அவன் இவன் என்று மரியாதைக் குறைவாக சுட்டிக் கொள்ளட்டும். ஆனால் அவர்களை ஏசத் தொடங்கும் அளவிற்கா நன்றி கெட்ட ஜன்மங்களாக மாறி வருகிறோம்?

சரித்திர நூல் வரிசையில் ஒப்பற்ற இடத்தைப் பெற்ற “ பொன்னியின் செல்வன் “ ஆசிரியர் கல்கி அவர்களும் அந்நூலில் இராஜராஜ சோழரை அர் விகுதியில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். சோழர்கள் கோவில்களைக் கட்டி, பராமரிப்புக்காக நில தானம் வழங்கினார்கள் என்று கூறுபவர்கள், அம்மன்னர்கள் வேறு யாருடைய நிலத்தையும் பிடுங்கி நிபந்தங்களை வழங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் நன்மை பெறுவதற்குக் கோயில்கள் நிலைக் களங்களாக விளங்கின என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமன்றி அனைவரும் தெளிவு பெற வேண்டி சற்று விரிவாகவே அது பற்றிக் காண்போம்.

வரலாற்று ஆசிரியர்  திரு S.R. பாலசுப்பிரமணியம் அவர்கள் சோழர்கள் பற்றி எழுதிய நூலின் ஒரு பகுதியை இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம்:

“ கோயில் கல்வியின் நிலைக் களனாக இருந்தது. அவற்றுள் பள்ளிகளும் கல்லூரிகளும் இடம் பெற்றன. ( அவ்வளவு பரந்த நிலப்பரப்பைக் கொண்ட கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் யார் என்று அரைகுறை ஞானிகள் விளக்கட்டும்). ஆசிரியர்களுக்கும், அங்குப் பயிலும் மாணாக்கர்களுக்கும் தேவைப்பட்ட வசதிகள் செய்துதரப் பலராலும் அறக் கட்டளைகள் நிறுவப்பெற்றன. 

கோயில்களில் சிற்சில இடங்களில் உணவு விடுதிகள் அமைக்கப்பெற்றன. சிறந்த நூல்கள் பனை ஓலைகளில் எழுதப்பெற்றுக் கோயில் நூல் நிலையங்களில் சேகரித்து வைக்கப்பெற்றன. வேதங்களையும் வேதாங்கங்களையும் ,தேவாரம்,திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றைக் கற்பிக்கப் பல நன்கொடைகள் வழங்கப்பட்டன. திருவாமாத்தூரில் தேவாரம் விண்ணப்பம் செய்யக் கண் ஒளி  அற்றவர்கள் பதின்மர் நியமிக்கப்பட்டனர்.இத்தகைய விழியற்றோர் குழாத்தின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்குப் பழைய ஊதியத்துடன் நன்கொடை வழங்கியதோடு, அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு இருவரை நியமித்தார் மன்னர். சிறந்த சிற்பிகளும் ஓவியர்களும் ஊக்குவிக்கப்பெற்றனர். திருவிழாக்காலங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சந்தைகள் அமைக்கப்பெற்றன.

சிறந்த புலவர்கள் தாம் இயற்றிய நூல்களைக் கோயில்களிலேயே அரங்கேற்றினர். அரசர்களது நன்கொடைகள், கோயில்களின் நித்திய பூஜைக்குப் பயன்பட்டதோடு, திருவிழாக்கள் நிகழ்த்துதல், கோயில்களைப் பழுது பார்க்கும் கொத்தர்கள், தச்சர்கள், கொல்லர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் பயன்பட்டது.

கோயில்கள் மக்களுடைய வாழ்க்கையைப் பெரிதும் சீர்திருத்தி அவர்களுடைய நல்வாழ்விற்குப் பெரிதும் துணை புரிந்தன. அக்காலத்தில் மக்கள் உண்மையான தெய்வ நம்பிக்கையோடு கோயில் காரியங்களை நிர்வகித்து வந்ததனால் மட்டமான மனப்பான்மையும், தன்னலப் பேராசையும் சிறிதும் இடம்பெறவில்லை. நிர்வாகத்தில் ஊழல் ஏற்பட்டாலோ, முறைகேடாகக் கோயில் சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டாலோ அரசரால் விசாரணை செய்யப்பெற்றுக் கோயில் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டன. 

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தம சோழரின் அன்னையாரும் கண்டராதித்த சோழரின் மாதேவியாரும், சோழர் குல மங்கையர் திலகமும் ஆகிய செம்பியன் மாதேவியார் திருநல்லம் கோயிலுக்கு அறக்கொடையாகப் பெரிய நிலத்தை வழங்கினார். அதன் வருவாய் மூலம், அந்தணர்,அறவோர் மட்டுமல்லாது, யாத்திரீகர்கள், திருவீதி உலாவின்போது குடை பிடிப்போர் , பூமாலை கட்டி வழங்குவோர், கோயிலைச் சுத்தம் செய்வோர், மெய்க்காவலர்கள், திருப்பதிகம் பாடுவோர், கோயில் கணக்கை சரிபார்க்கும் அரசுத் தணிக்கையாளர், கோயிலுக்கு மண்பாண்டங்கள்,ஆடைகள் அளிப்போர், திருமஞ்சன நீர் கொணர்வோர், பஞ்சாங்கம் வாசிப்போர், கொத்தர், தச்சர், கொல்லர், மடைப்பள்ளிப் பணியாளர்கள் ஆகிய பல்வேறு இனத்தாரும் ஆதரிக்கப்பெற்றனர். வீடுகள் கட்டித் தரப்பட்டன. கோயில் புதுப்பிக்கப்படும்போது, அங்கிருந்த பழைய கல்வெட்டுக்கள் பாதுகாப்பாகப் படிஎடுக்கப்பட்டுப் புதிய கல்வெட்டுக்களாக அமைக்கப்பெற்றன. இம்முறையில் திருமழபாடி ஆலயம் இராஜ ராஜ சோழரது ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டது. உத்தரமேரூர்க் கல்வெட்டால் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை அறிகிறோம். அதுமட்டுமல்ல. சோழப்பேரரசானது பின்னர் வடதிசையில் கங்கை வரையிலும், தென்திசையில் ஈழத்தையும், குடதிசையில் மகோதையையும், குண திசையில் கடாரத்தையும் எல்லைகளாகக் கொண்டு தமிழர் வீரத்தை மட்டுமல்லாது, நாகரீகத்தையும் பறை சாற்றியது.”

இராஜராஜ சோழர் தனது பெயரை சிவபாதசேகரன் என்றே கல்வெட்டுக்களில் பொறிக்கச் செய்தார். சிவபெருமானது திருவடிகளை சிரத்தின் மீது சூடியவன் என்பது அதன் பொருள். ஆனால் தஞ்சைக் கோயிலில் பணி புரிந்த அத்தனை சிப்பந்திகளின் பெயர்களையும் கல்வெட்டில் பொறித்து வைத்தார். எண்ணற்ற ஏரிகளை உண்டாக்கி நீர்ப்பாசனத்தை மேம்படுத்தினார். புதிய வாய்க்கால்கள் வெட்டப்பெற்று நீர் வளமற்ற இடங்களும் பயன் பெறலாயின. இந்த நீர்நிலைகளை வரும் தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்டவர்களின் பாதங்கள் தன் தலையின் மீது என்றும் இருப்பன என்றும் கல்வெட்டில் குறிப்பிட்ட பண்பு வேறு யாருக்கு வரும் ?

இம்மாபெரும் மன்னரின் பெருமையையும்,கொடையையும்,வீரத்தையும் பற்றிச் சற்றும் அறியாத அறிவிலிகள், மக்களது நிலங்களை மன்னர் பறித்துக் கொண்டது போலப் பேசுவது நகைப்புக்குரியது. கண்டிக்கத்தக்கதுமாகும். அந்த நிலங்களை யார் தற்போது அனுபவிக்கிறார்கள் என்று பட்டியலிட இவர்களுக்குத் துணிவு உண்டா? அவற்றை மீட்கத்தான் ஆண்மை உண்டா? அம்மாமன்னரின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதி இல்லாதவர்கள் சூரியனைப் பார்த்து ஏதோ குரைப்பது போலக் கூப்பாடு போடட்டும். ஐப்பசி சதயத்தன்று அரசரது பிறந்தநாள் விழாவைக் காணச் செல்பவர்களாவது அவரது மாண்பைப் பற்றி ஓரளவேனும் அறிய வேண்டுவது அவசியம். நமக்கு அது பற்றி அக்கறை இருக்கிறதோ இல்லையோ, வட நாட்டில் இராஜ ராஜரின் பெயரும்,இராஜேந்திரர் பெயரும் பல இடங்களில் சூட்டப்பெறுகின்றன. ஆனால் நாமோ கோயில் சொத்தைத் திருடியவர்களையும் கோயில்கள் அழியும்படிப் பார்த்துக்கொண்டு வாளா இருப்பவர்களையும், தண்டிக்கப்பட வேண்டியவர்களைக் கொண்டாடியும் நமக்கு நாமே களங்கத்தையும் அழிவையும் தேடிக் கொள்கிறோம். 

Friday, March 22, 2019

அலங்காரமா அலங்கோலமா

பங்குனி உத்திரம் வந்தால் சிவாலயங்களிலும்  , முருகன் கோயில்களிலும் வீதி உலாக்களும் திருக்கல்யாண வைபவங்களும்  தொன்று தொட்டு நடை பெற்று வருகின்றன. உத்திரத்தன்று தீர்த்தவாரி நடை பெற்றதாகத் தேவாரமும் நமக்குத் தெரிவிக்கிறது. இத்தனை புராதானமான விழாவைப் பக்தியுடன் அணுகாமல் மனம்போன போக்கில் எல்லாம்  மாற்றிக் கொள்ளும் ஆகம விரோத செயல்கள் சில ஊர்களில் நடை பெறுவதைக் காண்கிறோம். 

உற்சவருக்கு மட்டுமல்லாமல் மூலவரையே இஷ்டத்திற்கு அலங்காரம் செய்வதன் மூலம் மாற்றி விடுவது கண்டிக்கத்தக்கது. அன்னாபிஷேகம் என்பது அன்னத்தால் செய்யப்படும் அபிஷேகம் என்பது போக, அன்னத்தால் செய்யப்படும் அலங்காரம் என்று ஆகி விட்டது.  ஆரம்ப காலத்தில் அன்னத்தை சார்த்தியதோடு காய் கறிகள் ,பழங்கள்,வடை,அப்பம் ஆகியவைகளையும் சுவாமியின் மீது சார்த்தத் தொடங்கினர், இப்போது அருவருவத் திருமேனியானாகிய  சிவலிங்கப்பெருமானுக்கு முகம் வரைவது, ஒரு பாகத்தில் அம்பாள் போல் அலங்கரிப்பது (?) கண் மீசை வரைவது என்றெல்லாம் அபத்தத்தின் உச்ச கட்டத்திற்குப் போய் விட்டார்கள். 

பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள ஒரு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் நடைபெற்றதாக முக நூலில் படத்துடன் செய்தி வந்தது. அதில் முருகனை ஒரு இரு சக்கர வாகனத்தில் அமர்த்தித் தலைக்கு ஹெல்மெட்டும் அணிவித்து வீதி உலா நிகழ்த்தியிருக்கிறார்கள். நம்மோடு பலரும் முகநூலில் அதற்குக் கண்டனம் தெரிவித்தது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி ஒரு அலங்காரம் செய்ய அர்ச்சகருக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. ஊருக்குள் யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா ? 

இளந்தலைமுறையைச் சேர்ந்த அர்ச்சகரே இந்த வேலையைச் செய்திருக்கக்கூடும் என்று கருதுகிறோம். இதற்குப் பெயர் வித்தியாசம் என்று அவர் நினைக்க வேண்டாம். வேறு எதிலாவது அவரது திறமையைக் காட்டட்டும். தெய்வ காரியங்களில் வேண்டாம்.  பார்ப்பவர்கள் சொரணை அற்றவர்கள் என்ற தைரியத்தில் எப்படி வேண்டுமானாலும் செய்யத் துணிவதா ? கோயில் நிர்வாகம் உடனடியாக இவரை ஆலயப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மற்றவர்களுக்கும் அது ஓர் பாடமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். 

தரை விரிப்புக்கள் மற்றும் குளியலறை சாதன மூடிகளில் இந்துக் கடவுளர்களின் படங்களைப் போட்ட கம்பெனிகளுக்கு  மக்கள்  எதிர்ப்புத் தெரிவித்ததால் உடனடியாக அச்செயலைக் கை விட்டனர். ஆனால் இந்த அர்ச்சகர் போகிற போக்கில், இரு சக்கரக் கம்பெனிகள் தங்களது வண்டியை உலாவில் பயன் படுத்தும் படியாக   ஸ்பான்ஸர்கள்  ஆகி விடுவார்களே !! 

Sunday, January 6, 2019

உள்ளூர்க்காரர்களுக்கு அக்கறை இல்லையா ?

திருச்சோற்றுத்துறையில் மக்களின் ஈடுபாடு 
தினமும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஊரிலும் கோயில்கள் அமைந்தன. உள்ளூர்  மக்களும்  ஆலய வழிபாட்டைத் தினசரி கடமையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். மக்களிடையே நாத்திகம் விதைக்கப்பட்ட காலத்திலிருந்துதான்  திருக் கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டுக்  கேட்க நாதி இல்லாமல் போய் விட்டது.  போதாக் குறைக்கு நகரங்களையும் வெளி நாடுகளையும் நோக்கி மக்கள் நகரத் துவங்கியதும்  பராமரிப்பு என்பது அநேகமாக இல்லாமல் போய் விட்டது. எஞ்சியுள்ள உள்ளூர் மக்களோ அக்கறை இன்றி, கோயில்கள் மரம் முளைத்துப் போய் இடிந்து விழுவது கண்டும் திருப்பணிக்கான முயற்சி எடுக்காமலேயே இருக்கிறார்கள் !  அறநிலையத்துறை ஆலயங்கள் மட்டுமல்லாமல்  ஒரு சில ஆதீனக் கோயில்களும் பல்லாண்டுகளாகத் திருப்பணி செய்யப்படாமல்  மரங்கள் முளைத்துக் கிடப்பதைக்  காணும் போது வேதனையே ஏற்படுகிறது.

நன்றி :   வலைத்தளப்படம் 
சமூக வலைத்தளங்களில் பலர்  இவ்வாறு ஆதீனக் கோயில்கள்  மரம் முளைத்துப் போய் இடிபாடுகளோடு காணப்படுவதைப் புகைப் படங்களோடு வெளியிட்டுத் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.  கேட்டால், பாலாலயம் செய்தாகி விட்டது என்றோ, திருப்பணி அனுமதி கிடைக்கவில்லை என்றோ நிர்வாகத்திலிருந்து பதில் வரும். பாலாலயம் செய்துவிட்டால்  மட்டும் போதாது. ஆறு மாத காலத்திற்குள்ளாவது திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் நடை பெற வேண்டும்.  வருமானம்  நிறைய இருக்கும் தேவஸ்தான நிதியிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோயிலைக் கூடத் திருப்பணி செய்ய முடியாதா ? 

நன்றி : வலைத்தளப் படம் 
வலைத் தளத்தில் எழுந்துள்ள மற்றுமோர் குற்றச்சாட்டும் அனைவரது கவனத்திற்கும் உரியது. அதாவது ஒரு பிரபலமான கோயிலில் திரைப்படக் காட்சிகள் எடுக்க அனுமதி கொடுத்திருப்பதுதான் !  ஆலயத்திற்கு வருமானம் தேவைதான். அதற்காக எந்த வழியின் மூலமாகவும்  வரலாம் என்று முடிவு எடுக்கலாமா ?  ஆலயம் என்பது வழிபாடு நடைபெறும் இடம் . அங்கு வருவோரை வழி மறிக்கின்றனர்  படப்பிடிப்புக் குழுவினர். நம்மில் பலரும் ஆலயத்திற்கு வந்தோம் என்பதையே மறந்து வெட்கமில்லாமல் படப்பிடிப்பு பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். 

குருபீடங்களுக்குத் தெரியாததல்ல. அவர்களைக் குறை கூற நாம் யார் ? அறுபது ஆண்டுகளாகத் திருப்பணி செய்யவில்லையே என்ற ஏக்கமே மக்களை இவ்வாறு வேதனைப் படச் செய்கிறது. பிழையானால் பொறுப்பர் என நம்புகிறோம். 

உள்ளூர்க் காரர்களுக்கு மட்டும் நம்முடைய கோயில் என்ற உணர்வு இருந்தால் இந்நிலை ஏற்படுமா? நமக்கென்ன என்றல்லவா இருக்கிறார்கள் !  இதைத்தான் பிற மதத்தவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர். " அரன்  பொற்கழல் உள்  இருக்கும் உணர்ச்சி இல்லாதவர் நள்ளிருப்பர்  நரகக் குழியிலே " என்றார் அப்பர் சுவாமிகள்.  நம்  ஊர்க் கோயில் மரம் முளைக்கலாமா என்று கவலைப் படுவோர் சிலரே.  மரத்தை அகற்றுவதையும் வெளியூர்க் காரர்களே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா ?  திருப்பணி, கும்பாபிஷேகம் ஆகிய எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கும் ஊர்கள் ஏராளம்.   

உள்ளூர்க்காரர்களுக்குத் தங்கள் கோயில் மீது அக்கறை இல்லாமல் போகலாமா ? கும்பாபிஷேகம் ஆன பிறகாவது தினமும் கோயிலுக்கு வந்து, நித்திய பூஜைகள் நடை பெறச் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லையே .
  
உள்ளூர்க் காரர்களுக்கு உணர்ச்சி ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியம். தட்டிக் கேட்க ஆளில்லாததால் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு முற்றோதுதல் செய்தால் மட்டும்  போதுமா ?  களப்பணி ஆற்றினாலே இதுபோன்ற கைவிடப்பட்ட கோயில்களைக் காப்பாற்ற முடியும்.  அடியார் கூட்டங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளூர்க் கார்களை  நல்வழிப் படுத்த வேண்டும். அவ்வாறு நல்வழிப் படுத்த வேண்டியவர்கள்  பாராமுகமாய் இருப்பதால் அப்பொறுப்பைப்  பொது மக்களே ஏற்க வேண்டி உள்ளது.
  
விதி விலக்காகச்  சில ஊர்களில் உள்ளூர் மக்கள் முழுமையாகத் தங்களை ஆலயத்தோடு இணைத்துக் கொண்டிருப்பது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் அற நிலையத் துறையின்  தயவை எதிர் பார்ப்பதில்லை. கோயிலைப் பளிச்சென்று வைத்துக் கொண்டு தொண்டு ஆற்றுகிறார்கள். 

மார்கழி வைகறையில் பாவைப் பாடல்கள் மங்கள ஜோதியுடன் 
உதாரணத்திற்குத் திருவையாற்றுக்கு அண்மையில் உள்ளதும், சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்றுமான திருச்சோற்றுத்துறை ஓதன வனேசுவர சுவாமி ஆலயத்தைக் குறிப்பிடலாம். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  ஆலய வழிபாட்டில் சிறந்து விளங்குவதை அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத் தெரியும். மார்கழியில் திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி பாடல்களைப் பாடிக் கொண்டு வீதிகளை வலம் வரும் காட்சி கண்டோரைப் பரவசப் படுத்தும். இதுபோல மற்ற ஊர்களும்  அக்கறையோடு செயல் பட்டால்  பிரகாரங்கள் புதர்கள் முளைத்துப் பாம்புகளின் கூடாரங்களாக ஆகாமல் காக்கலாம். உதவிக் கரம் நீட்ட வெளியூர் மக்கள் பலர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எதையும் எதிர்பாராமல் உழவாரப் பணி செய்கின்றனர். ஆனால் பயன் படுத்திக்கொள்ளத்  தயாராக இல்லாத உள்ளூர் வாசிகளையும் , வெறும் பெயர்ப் பலகையில்   " ...... க்குச் சொந்தமான "  என்று பொறித்துக் கொள்ளும் நிர்வாகத்தையும்  யாரால் மாற்ற முடியும் ? ஈசன் திருவருள் ஒன்றே இந்நிலையை மாற்ற வல்லது.  

Tuesday, December 25, 2018

மூர்த்திகள் வெறும் சிலைகள் அல்ல

கண்ணுக்கும் உணர்வுக்கும் எட்டாத பரம்பொருளை நமது ஊனக் கண்களுக்கு முன்னே காட்டி ,அதில் லயிக்க வைத்து, பக்தியை ஊட்டி அதன் பின்பு ஞானத்தையும் வைராக்கியத்தையும் `உணர்த்திப் பக்குவப்படுத்தி, முத்தி நிலைக்கு ஆளாக்கி அருளுவதற்கு உருவ வழிபாடு முதல் படியாக அமைகிறது. அப்படியைத்  தாண்டி ஆத்மானுபவம் பெற்றதும்  நாம் அடுத்த நிலைக்குத் தயாராக வேண்டும். கோயில் கோபுர வாயிலில் உள்ள படியைத் தாண்டி  அடி எடுத்து வைக்கும்போதாவது நமக்கு இந்த எண்ணம் ஏற்படவேண்டும். 

" மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை " என்று திருமூலர் அருளுவது போல்  விக்கிரகத்துள் இருந்து அருள் பாலிக்கும் திருவருளையே சிந்திக்க வேண்டுமே தவிர, அம்மூர்த்தி எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம்  ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் அடுத்த நிலையை எப்படி அடைவது?  கலை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கு அகக் கண்கள் திறப்பதில்லை. பக்தி இல்லாமல் மூர்த்திகளைக் கலைப் பொருளாகவே பார்க்கிறார்கள். அவற்றின் கால ஆராய்ச்சியும், விலை மதிப்புமே அவர்களது கண்களுக்குத் தெரிகின்றன. 

மூர்த்திகளின் அழகைக் கண்டு வியப்பதில் தவறில்லை. கோயில் திருவிழாக்களில் அலங்காரம் செய்து பார்க்கட்டும். தவறில்லை. ஆனால்  அம்மூர்த்திகளைக் கண்டு பக்தி பரவசம் ஏற்பட்டுக் கண்கள் நீர் மல்க, கைகள் உச்சி மேல் கூப்பி நெஞ்சம் உருகாதவரையில் என்ன பயன் விளையும் ? அதேபோல , மூர்த்தியின் கருணையில் நனைந்து, வேதப் பொருளாக விளங்கும் விமலனைக் கண் எதிரில் கண்டு அவன் புகழைப் பாடாமல், வெறும் வாயளவில் வேதத்தையோ, திருமுறை முதலான பாடல்களையோ ஓதுபவர்களும் முதல் நிலையிலேயே நின்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில் சான்னித்தியம் குறையவும் வாய்ப்பு உண்டு. பதிவு செய்யப்பட ஒலி  நாடாக்கள் எழுப்பும் ஒலிக்கும், பெருமானது சன்னதியில் நாம் கரைந்து கரைந்து ஓதுவதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா?

முக்கியமான விஷயத்திற்கு இப்போது வருவோம். மார்கழித் திருவாதிரை யன்று எல்லா உயிர்களும் மழையிலும் பனியிலும் நனைகின்றன. மழையைத் தரும் மேகமாகவும்,துளியில் நின்ற நீராகவும் கருணை பாலிக்கும் கடவுளை த்  தில்லையில் கண்டு ஆனந்த பரவசம் அடையும் வேளையில், கை கூப்பவேண்டிய கரங்கள், கைப்பேசியையும், காமிராவையும் இயக்குகின்றன. அதோடு நில்லாமல் அப்படங்களை வலைத் தளங்களில் பரவச் செய்யத் துடிக்கின்றன. அது மட்டுமா?  " மரகதக் கல் நடராஜர் "  என்று தலைப்பு வேறு கொடுக்கிறார்கள். இதில் பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சிக் காரர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர். அது இத்தனை மதிப்புடையது என்று உலகச் சந்தைக்குப் பறை அறிவிக்கிறார்கள். மூர்த்தியின் கால நிர்ணயம் பற்றிக் கலந்துரையாடல்கள் வேறு!  பொறுப்பற்ற ஊடகங்களின் இச் செயல்களால் மூர்த்திகளின்  பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதை ஏன் இவர்கள் உணருவதில்லை? ஒருவேளை உணர்ந்தும், பரபரப்பான செய்திகளை வெளியிட்டால் மக்களின் கவனம் ஈர்க்கப்படும் என்று நினைக்கிறார்கள் போல் இருக்கிறது. இதன் மூலம் இவர்களே சந்தைத் தரகர்களாக மாறி விடும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. 

சில ஊர்களில் மூர்த்திகளின் அபிஷேகக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. வரமுடியாதவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பார்க்கலாமே என்ற விளக்கம் வேறு !  பின்னால் அமர்ந்து தரிசிக்க வந்தவர்கள் பார்க்க முடியாத வகையில் வீடியோ காமிராவை  ஸ்டாண்டில் பொருத்துகிறார்கள். வீதி உலா செல்லும் மூர்த்தியின் வெகு அருகில் சென்று முகத்தில் மின்னல் போன்ற ஒளிமிக்க ப்ளாஷ் உபயோகித்துப் படம் பிடிக்கிறார்கள். இதனால் விளையக்கூடும் தீங்குகளைப் பற்றி  எல்லாம் கோயில் நிர்வாகிகளோ, மற்றவர்களோ எண்ணிப்பார்ப்பதில்லை. வெறும் பெயரளவிற்குத்தான் செல் போன்,காமிரா  கோயிலுக்குள் பயன் படுத்தக் கூடாது என்று அறிவிப்புப் பலகையில் எழுதி  வைத்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கலைச் செல்வங்களை இழந்தும் நமக்கு இன்னும் புத்தி வரவில்லை. பக்தி ஏற்படாமல், கலைப் பொருளாகக் காண்பதால் ஏற்படும் விபரீதம் இதுவே ஆகும். 

கேரளத்தில் உள்ள குருவாயூரில், கோயிலுக்குள் செல்பவர்களின் உடைமைகள் சோதிக்கப்படுகின்றன. போன், காமிரா போன்றவற்றை வெளியில் உள்ள காப்பகத்தில் வைத்து விட்டுத்தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். இம்முறையைத் தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களிலாவது பின்பற்றலாமே 

 இங்குதான் பக்தியும், பயமும் போய் மூர்த்திகள் விலை பேசப் படுகின்றனவே !  பக்தியையும் ஒழுக்கத்தையும்  உண்டாக்கத்தான்  ஞான நூல்களும்,நீதி நூல்களும் இயற்றினார்கள். அவற்றைப் படிக்கத் தவறிய மக்களை நல்வழிப்படுத்துவோர் ஒரு சிலரே. ஊர் ஊராக- கிராமம்-கிராமமாகக் கால் நடையாகச் சென்று மக்களுக்குப்  பக்தியை உண்டாக்குபவர்கள் வராதவரையில், கோயில்கள் காட்சிக் கூடங்களாகவும், மூர்த்திகள் வெறும் கல்லாலும் உலோகத்தாலும் செய்த சிலைகளாகவுமே பாமர மக்களுக்குத் தோற்றம்  அளிக்கும்.  

Thursday, November 29, 2018

பொன் மாணிக்கவேல் ஐயா பதவிக்காலம் நீடிக்கட்டும்

பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள்.  நன்றி: வலைத்தளம் 
தமிழக போலீஸ் துறை அதிகாரி ஐ. ஜி. திரு. பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களின் பதவிக்காலம்  நவம்பரில் முடிவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. நேர்மையான அதிகாரிகளுள் என்றும்  மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் மாமனிதர் இவர். உலக அளவில் நடைபெறும் கொள்ளைகளை அறிந்து அபாரமாகச் செயல் புரிந்த இவரது அரும் பணிக்காக அரசும்,மக்களும் தலை வணங்கியே ஆக வேண்டும். சிலை மீட்ட செம்மல் போன்ற பட்டங்கள் கொடுத்துப் பாராட்டி விட்டுப் பொன்னாடைகள் போடுவதைக்காட்டிலும், அவரது துறையைச் சேர்ந்தவர்கள் இவருடைய  அடிச் சுவட்டில் பணியாற்றுவதே இவருக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

1960 களிலிருந்தே சிலைக் கடத்தல்கள் நடைபெறுவதாகக் கண்டறிந்த இவர் முனைப்பாகச் செயலாற்றியதால் தான் பல கொள்ளை போன விக்கிரகங்கள் மீட்கப் பட்டன. இன்னும் அவர் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருந்தும், பதவிக்கால நிறைவானது குறுக்கிடுவது பெரும் தடையாக இருக்கிறது. இன்னும் அவரது பதவிக்காலம் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது நீடிக்கப்பட வேண்டும் என்பது ஆன்மீக அன்பர்களின் அவா. நிறைவேற்ற வேண்டியது அரசின் கையில் தான் உள்ளது. கடத்தல் வாதிகளுக்குத் துணையாக அரசு அதிகாரிகளோ ஆட்சி வர்க்கத்தைச் சார்ந்த பிறரோ ஒருபோதும் துணை போய் விடக் கூடாது. நேர்மையான அதிகாரியின் செயல்பாட்டுக்கு இடையூறாக அரசியல் புகுந்து விட்டால் நேர்மையின் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய் விடும். 

ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு ஐயா அனுபவங்கள் பலவற்றை நிச்சயமாகச் சந்தித்திருக்கக் கூடும். அந்தப் பாதை எவ்வளவு கரடு முரடானது என்றும், ஆபத்துக்கள் நிறைந்தது என்றும், அவர் நன்றாக அறிவார். இத்தனையையும் மீறிச்  செயல் பட்டார் என்றால், அவருக்குத் துணிவும், ஆண்டவன் அருளுமே துணையாக நின்றன என்று நிச்சயமாகக் கூறலாம். 

பரபரப்பான தகவல்களுக்காகவே தவம் கிடக்கும் மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் அவரிடமே கேள்வி கேட்பார்கள். மீட்டுக் கொண்டு வந்த சிலையின் சந்தை விலை என்ன என்பார்கள். அதையே தலைப்புக் கட்டித் தொலைக் காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடுவதோடு, கொள்ளை அடித்தவனை " சர்வதேசக் கடத்தல் மன்னன் " என்று வர்ணிப்பார்கள் அந்த மானம் கெட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் நமது ஐயா பாடுபட்டு சிலைகளை மீட்டு வந்ததைப பாராட்ட மனம் இருக்கிறதோ இல்லையோ, வெளியிடுவதற்குச் சூடான தகவல் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். 

பதுக்கி வைத்த கற்சிலைகளை ஐயா மீட்ட பிறகு அவற்றைப்  பாது காப்பாக வைக்க ஒரு இடம் கூடத் தரவில்லை நமது அரசு. அதற்கும் தளராமல் தமது அலுவலகத்திலேயே அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

கொள்ளைக் காரர்கள் வெளி நாட்டவர்களது கைக்கூலியாகச் செயல் பட்டு நமது மூர்த்திகளைத் திருடிச் சென்றதைத் தான் நாம் கேள்விப் பட்டு வந்தோம். வேலியே பயிரை மேய்வது போல அறநிலையத்துறையின் கோயில் மூர்த்திகள் பாதுகாப்புக்காக ( ??? )  வேறு கோயிலில் வைக்கப் பட்டது போக, அக்கோயிலில் பணியாற்றும் அறநிலையத்துறை ஊழியர்களும், மேலதிகாரியின் துணையோடு  களவாடிச் சென்று விற்றதை  நமது ஐயா அவர்கள் கண்டறிந்து அனைவருக்கும் வெளிப்படுத்தியவுடன்  ஆன்மீக உலகே அதிர்ச்சி அடைந்தது. விக்கிரகத்தையே மாற்றி ஏமாற்றிய  கேடு கேட்ட பிழைப்புக்கு ஸ்தபதி ஒருவரும் உடந்தை என்பது மேலும் அதிர்ச்சி அடையச் செய்தது.

ஐயா அவர்களின் சீரிய தொண்டால் அறநிலையத்துறையின் ஒழுங்கீனங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படத் துவங்கியுள்ளன. ஆயிரத்திற்கும் மேலான அறநிலையத் துறை கோயில்கள் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டமை அம்பலமாகி உள்ளன. 

அரும்பாடு பட்டு ஐயா அவர்கள் மீட்டுத் தந்த மூர்த்திகள் உரிய கோயில்களில் தகுந்த பாதுகாப்பு வசதிகளோடு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூஜை செய்ய வழி வகுத்தால் தான் அவருடைய அயரா உழைப்புக்கு நாம் தரும் நன்றிக் கடன் ஆகும். ஆனால் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகமோ, பணியாளர்களோ,  உள்ளூர் வாசிகளோ தொடர்ந்து அலட்சியம் காட்டுவது வேதனைக்கு உரியது. 

ஏதும் பொறாதவற்றுக்கெல்லாம் போராட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவிக்கும்  உள்ளூர் வாசிகளும் பிற ஊர் அன்பர்களும் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் ? நமது தெய்வ நம்பிக்கையும், ஈடுபாடும் அவ்வளவு தானா ? வெறும் வாய்ப் பேச்சில் வல்லவர்களா நாம் ?