கிழக்கு ராஜ கோபுரம், இராமநாத சுவாமி ஆலயம் |
தென்னிந்தியர்களுக்குக் காசி யாத்திரை எவ்வளவு முக்கியமானதோ அத்தனை
முக்கியம் வாய்ந்தது இராமேசுவர யாத்திரை. வாழ்நாளில் ஒரு முறையாவது இதை மேற்கொள்ள
வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை மேற்கொள்கிறார்கள். மேலும் இவ்விரண்டு தலங்களும் ஜ்யோதிர்
லிங்கத் தலங்கள் என்பது மேலும் புனிதம் சேர்ப்பதாகும்.
இராமேசுவரத்தில் கடலில்
நீராடிவிட்டுக் கடல் மணலை எடுத்துச் சென்று,கங்கையில் கரைத்துவிட்டுக் கங்கை
நீரால் விச்வநாதப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து விட்டுத் திரிவேணி சங்கமத்தில்
நீராடியபின்னர் ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய
இடங்களிலும் நீராடிவிட்டு, அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து மீண்டும்
இராமேச்வரம் அடைந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது என்ற யாத்திரை விதி முறை
இன்றும் பலரால் பின்பற்றப்படுகிறது.
முற்காலத்தில் கால்நடையாகவே பக்தர்கள் இந்த யாத்திரையைச் செய்து
வந்தனர். வாகன வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்திலும் பலவிதமான அசௌகர்யங்கள்
இருந்தபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மிகவும் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் இத்தலங்களுக்கு
வருகை தரும் யாத்திரீகர்களைப் பார்க்கும்போது பரவசம் ஏற்படுகிறது. பாரத நாட்டில்
பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் கலாசாரம் மக்களை ஒன்றாக இணைத்துவிடுகிறது.
ஒற்றுமைக்கு எதிராகப் பேசுபவர்கள் இங்கெல்லாம் போய்ப்
பார்க்கவேண்டும். யாத்திரீகர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள தர்ம சத்திரங்கள், உணவு
விடுதிகள் பலமாநிலங்களைத்தாண்டி வந்தவர்களுக்கு எப்படி அரவணைக்கின்றன என்பது
அப்போதுதான் தெரியும். இராமேசுவரத்தில் விடியலில் நடைபெறும் பூஜையைக் காண்பதற்காக
காலை மூன்று மணியிலிருந்தே வரிசையில் நிற்பவர்களில் பெரும்பாலோர் வடக்கிந்தியர்கள்.
இறைவனது நாமங்களை ஓதியவாறு அமைதியாக வரிசையில் நிற்கிறார்கள். பொறுமை இழந்து புலம்புவோரைப்
பார்ப்பது கடினம். மற்றவர்கள் அவர்களது பக்தி, ஈடுபாடு, பொறுமை, ஆகியவற்றுக்குத்
தலை வணங்கியே ஆக வேண்டும்.
விடியற்காலை முதற்கொண்டே கடலில்
நீராடிவிட்டு நேராகக் கோயிலுக்குச் செல்பவர்கள் ஏராளம். கோயில் வளாகத்தில் உள்ள 22
தீர்த்தங்கள் கிணறுகளாகவே (சேது மாதவ தீர்த்தம் தவிர) உள்ளன. அவற்றில்
நீரை வாளிகளில் முகந்து யாத்திரீகர்களின் தலையில் விடுவதற்கு ஒவ்வொரு கிணற்றிலும்
தேவஸ்தானப் பணியாளர்கள் உள்ளனர். இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ 25 வசூலிக்கிறார்கள் நூற்றுக்கணக்கில் ( ஆயிரக்கணக்கில் என்றுகூடச் சொல்லலாம் ) மக்கள் வரிசையில்
நிற்கும்போது சிலர் அங்கு வந்து அங்கு நிற்பவர்களைப் பார்த்து, “ வரிசையில் நின்று
குளித்து முடிய மூன்று மணி நேரம் ஆகும். ரூ 150 கொடுத்தால், வரிசையில் நிற்காமல் நேராகக்
குளிக்கப் போய் விட்டு அரை மணியில் திரும்பி விடலாம் “ என்கிறார்கள். வரிசையில்
நிற்பவர்கள் இதை உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர்
வயோதிகர்கள். அதிக நேரம் நிற்க இயலாது என்று எண்ணி இந்த தரகர்களிடம் பேரம் பேசி ரூ
125 தருவதாக ஒப்புக் கொண்டு அவர்கள் காட்டிய குறுக்கு வழியில் செல்லத்
துவங்குகிறார்கள்.
உண்மையாகப் பார்த்தால், இவ்வாறு “ குறுக்கு
வழியி” யில் செல்வதால் அதிக நேரம் ஒன்றும் மிச்சம் ஆகிவிடுவதில்லை. டிக்கெட் கொடுக்கும்
இடம் வரை சென்று அடையும் நேரம் மட்டுமே மிச்சமாகிறது. அதைத்தாண்டினால் கிணறுகளில்
எல்லோரையும் போலத்தான் வரிசையாக நின்று நீராட வேண்டும். நூற்றுக்கணக்கான பக்தர்கள்
இப்படிப்பட்ட இடைத்தரகர்களால் எமாற்றப்படுகிறார்கள். வரிசையில் நின்று டிக்கெட்
வாங்கி, தீர்த்தங்களில் நீராட மொத்தமே சுமார் ஒரு மணி நேரம் தான் ஆகிறது.
I agree, Shri Chandru!
ReplyDeleteபல கோயில்களில் இவ்வாறான இடைத்தரகர்கள் தவறான முறையில் பணம் ஈட்டுவது கண்டனத்துக்குரியது.
ReplyDelete