Sunday, June 12, 2011

பழமையும் புதுமையும்(?)

கிராமங்களின் அமைப்பு, பெரும்பாலும் கோயில்களை மையமாகக் கொண்டே இருக்கக் காணலாம். ஒரு புறம் சிவாலயமும்,மற்றொரு புறம் விஷ்ணு ஆலயமும் ,அவற்றைச் சுற்றி குடியிருப்புக்களும் இருக்கும். கிராம தேவதைகளான சாஸ்தா(ஐயனார்) , பிடாரி, மாரியம்மன் ஆகியவற்றின் கோயில்கள் அநேகமாக எல்லைகளில் அமையப் பெற்று இருக்கும். தெருக் கோடியிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் சிறிய பிள்ளையார் கோயில்களும் இருக்கும். சிவாலயங்களில் கணபதி, முருகன், அம்பிகை, துர்க்கை போன்ற தெய்வ சன்னதிகளும், பல்வேறு சிவ மூர்த்தங்களும் இடம் பெற்றிருக்கும். அதே போல , பெருமாள் கோயிலிலும் , மகாலக்ஷ்மி, ராமர், கிருஷ்ணர்,ஹனுமான், சக்கரத்தாழ்வார் ,நரசிம்ஹர் ஆகிய மூர்த்தங்களும் அமையப் பெற்றிருக்கும். பரிவாரங்களாக அமைக்கப் பெரும் மூர்த்தங்களுக்குப் பெரும்பாலும் தனியாகக் கோயில்கள் அமைக்கப்படவில்லை. இஷ்ட மூர்த்தி எதுவாக இருந்தாலும் மேற்கண்ட இரு ஆலயங்களில் அவை இருப்பதே காரணமாக இருக்கலாம். ஆலய அமைப்புக்களும் சைவ-வைணவ ஆகமங்களை ஒட்டியே இருந்தன. தனி மனிதர்களின் கருத்துக்கு ஏற்றபடி அவற்றை மாற்றாமல் பழமையைப் பாதுகாத்து வந்தனர்.



இப்போது பார்த்தால், யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி தனக்குப் பிடித்த வகையில் கோயில் கட்டிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. எதை எடுத்தாலும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள்!! பண பலம் இருந்துவிட்டால் தன்னிச்சையாகச் செயல் படும் தைரியம் வந்துவிடுகிறது. ஆகம அறிவு இல்லாத மக்களும் , பிரமாண்டமாகக் கட்டி இருக்கிறார்களே என்று அசந்து போவதோடு,ஆதரவும் தருகின்றனர். இதைப் பயன் படுத்திக்கொண்டு, ஆலயம் கட்டுபவர்களும் , நம் பக்கத்தில் தொன்றுதொட்டு வழிபாட்டில் இல்லாத மூர்த்திகளுக்குக் கோயில் கட்டுகிறார்கள். பரிவார மூர்த்திகளுக்குத் தனி ஆலயம் அமைக்கிறார்கள். ஒரே கல்லில் முப்பது அடிக்கு மேலாக மூர்த்தியை செதுக்கி அதற்குக் கோயில் எழுப்புகிறார்கள். இதற்குத் தேவையான பணம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எப்படியோ வந்து விடுகிறது.



இதில் வேடிக்கை என்னவென்றால், இப்புதிய கோயில்கள் அமைக்கப் படும் ஊர்களிலும் , அதன் அருகாமையில் உள்ள ஊர்களிலும் உள்ள, மரம் முளைத்தும், இடிந்தும் பூஜை இல்லாமலும் இருக்கும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் இவர்கள் கண்களில் படவில்லை போல் இருக்கிறது. கோடிக் கணக்கில் செலவழித்துப் புதுக் கோயில் கட்ட வரும் இவர்கள் பழைய கோயில்களின் பக்கம் திரும்பிப் பார்க்காதது என்? இன்னும் சொல்லப் போனால், இடிந்த கோயில்கள் ஏராளமாகக் கேட்பாரற்று இருக்கும்போது , இப் புதிய கோயில்கள் தேவைதானா? தயவுசெய்து சிந்திக்கவேண்டும். புதிதாகக் கட்டிப் பெயரும் புகழும் சம்பாதிக்கத் துடிக்கும் இவர்கள், பழைய கோயில்களைத் திருப்பணி செய்து நற்பெயர் பெறலாமே? பழைய கூடலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மருத்துவக்குடி சிவாலயத்தைத் திருப்பணி செய்ததுபோல் , பொருள் வசதி படைத்தவர்கள் , புதுக் கோயில் கட்டுவதைக் காட்டிலும் புராதனமான ஆலயங்களை சீர்திருத்தி ஊர் மக்களை நல்வழிப் படுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால், உருக்குலைந்து போய்க்கொண்டிருக்கும் பல கிராமக் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதே நிலை இப்புதுக் கோயில்களுக்கும் பிற்காலத்தில் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

Wednesday, May 11, 2011

"வாங்காத வாழைப் பழம்"





சிவபெருமானின் சிருஷ்டித் தொழில் பிரம்ம தேவன் மூலமாகச் செய்யப் படுகிறது. தற்காலத்திலோ கற்பனைகளுக்குப் படைப்பு என்ற பெயரிட்டு , "நானும் இறைவனே" என்று சொல்லிக்கொள்கிறார்கள். பல்லாண்டுகளாகவே தெய்வங்களைப் பழித்தும் இழித்தும் , தெய்வ நம்பிக்கை உள்ளவர்களைப் புண் படுத்தும் செயல்களைத் திரை உலகம் செய்து வருவது எல்லோருக்கும் தெரியும். கடவுள்கள் சினிமா தியேட்டரில் க்யூவில் நிற்பது போலவும், பைக்கில் சவாரி செய்வது போலவும் காட்சிகள் திரைக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றைக் கண்டிப்பவர்களைத்தான் காணோம். அண்மையில் ஒரு ஆன்மிகப் பத்திரிகை இதுபோல , நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு பிரம தேவனைக் கேலி செய்திருப்பது வருந்துதற்கு உரியது.



பிரமனுக்கு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது போலவும், மயிலாப்பூரில் ஒரு பழ வண்டிக்காரனை அணுகி விலை கேட்டதும் "ஒன்னு அரை ரூபா" என்றவுடன் , பிரமன் இரண்டு டஜனுக்கு பன்னிரண்டு ருபாய் கொடுத்துவிட்டுப் பழங்களை எடுத்துக்கொண்டு கிளம்புவதாகவும், கடைக்காரன் அவரைப் பிடித்துக்கொண்டு, " ஏன்னா நழுவுறே, மீதி இருபத்து நாலு ரூபாயை உன் முப்பாட்டனா வந்து தருவான் ; உனக்குக் காது டப்பாவா? ஒரு பழம் ஒன்னரை ரூபான்னு சொன்னேன்யா பழம் வாங்கவந்த மூஞ்சியைப் பாரு" என்றவுடன், பிரம்ம தேவன் "நொந்து நூடுல்ஸ் ஆகி" விட்டாராம். இப்படி எழுதியிருப்பவர் ஒரு நகைச்சுவைக் கதை ஆசிரியர். சில பேர் சொல்லலாம். நகைச்சுவைக்கு எழுதியதை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று. இவை எல்லாம் வரம்பு மீறிய நகைச்சுவை.யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்(திமிரில்??) எழுதப்படுபவை. "தெய்வத்தைத் தானே கிண்டல் செய்திருக்கிறார்கள்; நமக்கு என்ன என்ற உணர்ச்சி இல்லாதவர்கள் உள்ளவரை இத்தகைய கேலிகள் தொடரும். இதில் வேதனை என்னவென்றால் , ஆன்மிகப் பத்திரிக்கைகளும் இவற்றை வெளியிடுவதுதான். சுட்டிக் காட்டினால் தவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப் பக்குவம் பல பத்திரிக்கைகளுக்கு இருப்பதில்லை. "இவன் என்ன நம்மைத் திருத்துவது "என்ற ஆணவமே மேலோங்கி நிற்கிறது. விற்பனை தொடரும் வரை அவர்கள் எதற்காகக் கவலைப் படப் போகிறார்கள். வியாபார நோக்கில் எதையும் செய்யலாம். சிலரது மனம் புண் படுவதைக் கண்டு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்களா என்ன? சந்தேகம் தான்.

Wednesday, April 20, 2011

கோயில்களில் பசுமடங்கள்



திருவொற்றியூர்,திருவலிதாயம்(பாடி) ஆகிய சிவஸ்தலங்களில் கோசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதேபோல் பல ஸ்தலங்களிலும் பசுமடங்கள் இருக்கக் காணலாம். எந்த ஊர்களில் காமதேனு பூஜித்ததாகத் தல வரலாறு கூறுகிறதோ, எந்தத் தலத்தில்பால் உகந்த நாதராக இறைவன் வீற்றிருக்கிராரோ அங்கெல்லாம் கண்டிப்பாக பசுக்கள் வளர்க்கப்பட வேண்டும். இடையன் மரணமுற்றபோது அவன் மேய்த்தபசுக்கள் சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறியபோது, அவற்றின் துன்பம் தீர்பதற்காக ஆகாய வீதியில் போய்க்கொண்டு இருந்த சித்தர் பெருமான் அந்த இடையனின் உடலுக்குள் புகுந்து, திருமூலர் ஆன வரலாற்றை நாம் அறிவோம். அந்த ஊரில் பசு மடம்இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. அதேபோல், பசு உருவில் அம்பிகை பூஜித்த ஊர்களான அசிக்காடு, தேரழந்தூர், கோமல், திருக்கோழம்பம் ஆகிய ஊர்க் கோயில்களில் ஓரிரு பசுக்களாவது வளர்க்கப்படவேண்டும்.

சண்டிகேஸ்வரர் பிறந்த திருச்செய்ஞலூரிலும் , அவர் மண்ணியாற்றங்கரையில் சிவலிங்கம் அமைத்து , பசுக்களை மேய்த்து அவற்றின் பாலால் அபிஷேகம் செய்த திருவாப்பாடியிலும் பசு மடம் இல்லாததோடு, பால் அபிஷேகமே விசேஷ நாட்களில் மட்டுமே நடைபெறுகிறது. பசுவை வாங்கித் தரலாம் என்றால் "யார் பராமரிப்பார்கள்?" என்று கேட்கிறார்கள். சிவாசாரியாரின் வீட்டில் பசுவை வைத்துக்கொண்டால் கோவிலுக்கு உபயோகப்படுத்தியதுபோக அவர் வீட்டிற்கும் சிறிது பயன்படும். தயிர், வெண்ணை முதலியவை கிடைப்பதோடு, சுத்தமான விபூதியும் தயாரிக்கலாம். சாணத்தை எருவாக அருகில் உள்ள நிலங்களுக்குப் பயன் படுத்தலாம். கோபார் வாயுவும் தயாரிக்கலாம். கொஞ்சமும் சிரமப்படாமலேயே, பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் தற்போது தலை தூக்கி நிற்கிறது.


பசுமடம் வைப்பவர்கள் பெரும்பாலோர் கோயில்களில் அமைக்காமல் தனியாக ஒரு இடத்தை வாங்கி அங்கு பசுக்களைப் பராமரிக்கிறார்கள். சில கோசாலைகளில் நூற்றுக்கணக்கான மாடுகள் பராமரிக்கப் படுகின்றன. இவ்வளவு வசதியும் பணப்புழக்கமும் படைத்தவர்கள் மேற்கண்ட ஊர்களில் தங்களது கோசாலைகள் தனியாகவோ கோயில்களுக்கு உள்ளோ இருக்கும்படி அமைக்கலாமே! புகழ் கிடைக்கிறதோ இல்லையோ, புண்ணியம் கண்டிப்பாகக் கிடைக்கும். தனியார் வங்கிகளும் கிராம முன்னேற்றத்திற்காகக் கால்நடைச் செல்வத்தைப் பெருக்கலாம்.


கும்ப கோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் பாபுராஜபுரம் என்ற சிறு கிராமம் இருக்கிறது. இங்குள்ள மழுவேந்திஅப்பர் கோயில் புராதனமானது. கருங்கல் திருப்பணி. செட்டியார் தம்பதிகளுக்கு இறைவன் அருளியதாக வரலாறு. இத்தம்பதியரின் உருவச்சிலைகள் மகாமண்டபத்தில் இருக்கின்றன. சுவாமி அம்பாளுக்கு வஸ்த்திரம் நேர்த்தியாக அணிவிக்கப் பட்டு இருக்கிறது. இக்கோயிலின் சிவாச்சாரியாருக்கு எழுபத்தெட்டு வயது ஆகிறது. தனியாக வீட்டில் இருந்துகொண்டு கைங்கர்யம் செய்கிறார். வீட்டுக் கொட்டகையில் பசு மாடுகளை வளர்க்கிறார். மாலை ஆனதும் மாட்டை வீட்டுத் தாழ்வாரத்தில் கொண்டு வந்து கட்டுகிறார். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் மாடு நிற்கும் இடத்தில் சிறிய மின்சாரக் காற்றாடியை அமைத்து இருக்கிறார். இது அவரது சக்திக்கு அப்பாற்பட்ட செயல். எவ்வளவு பாராட்டினாலும் தகும். வசதியுள்ள பசுமடங்களில் மின் காற்றாடி காணப்படுவதில் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை. உண்மையில் பெயரையும் புகழையும் கருதாமல் இக்குக் கிராமத்தில் இவர் செய்யும் சிவதர்மத்திற்கு ஈடு சொல்ல முடியுமா?

Saturday, March 12, 2011

உழவாரத் தொண்டைப் போற்றுவோம்

உலகத்தில் பிறந்ததன் பயனை இரண்டு செயல்களால் அடையலாம் என்று பெரிய புராணம் கூறுகிறது. அதில் முதலாவது, சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பது; மற்றொன்று, சிவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்களைக் கண்ணாரக் காண்பது. முன்பெல்லாம் ஒரு சிவனடியாருக்காவது அன்னம் பாலித்துவிட்டுப்பிறகே உணவு உண்பது என்ற நியமத்தோடு பலர் வாழ்ந்து வந்தார்கள். வசதி உள்ளஆலயங்களும் தேசாந்திரிகளுக்கு மதிய உணவு அளித்து வந்தன. கர்நாடக மாநிலத்தில் இரு வேளையும்யாத்திரீகர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது. ஆனால் தமிழகத்திலோ பெரும்பாலும் பெயரளவுக்கே மதிய உணவு கோயில்களில் வழங்கப்படுகிறது.

சிவனடியாருக்கு அன்னம் பாலிப்பதைப் பிறவிப் பயனாக சொல்லும்போது, அச் சிவனடியார்கள் உழவாரத் தொண்டு செய்பவர்களாகவோ , புஷ்ப கைங்கர்யம் செய்பவர்களாகவோ , சன்னதியில் கீதம் பாடுபவர்களாகவோஆலயத் திருப்பணி செய்பவர்களாகவோ இருந்தால் இன்னும் சிறப்பு அல்லவா? இத்தகைய சிவத் தொண்டர்களுக்கு அன்னம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து தருவது நமது கடமை ஆகும்.

தர்ம சிந்தனை நாளுக்கு நாள் குறைந்து சுய நலம் மேலோங்குவதால் கலியின் வலிமை அதிகரித்து பிறவிப் பயன் கிடைக்கவொட்டாமல் ஆகி விடுகிறது. கிராமங்களிலும் குறுகிய மனப் பான்மை காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. கிராமங்களில் உள்ள மரம் முளைத்துப்போயும் , பாழடைந்தும் போன கோயில்களில் உழவாரத்தொண்டு செய்ய வெளியூர் அன்பர்கள் பலர் முன்வருகிறார்கள். இவர்கள் பயணச் செலவையோ பிற செலவையோ பொருட்படுத்தாமல் உழவாரத் தொண்டு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகிறார்கள். பிரதி பலனாகக் கிராம மக்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

கிராம மக்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். அறநிலையத் துறையோ உள்ளூர் மக்களோ கவலைப்படாமல் கோயில்கள் சிறிது சிறிதாக அழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிராமக் கோயில்களில் உழவாரத்தொண்டு செய்ய வரும் சிவனடியார்களுக்கு நாம் நன்றி செலுத்தும் முகமாக மதியம் ஒருவேளை உணவாவது உள்ளூர்மக்கள் அளிக்க முன்வர வேண்டாமா? அண்மையில் ஒரு கிராமத்தில் சிதிலமாயிருந்த ஆலயத்தில் உழவாரத் தொண்டு செய்ய முன்வந்த வெளியூர் அன்பர்களுக்கு அக் கிராம மக்கள் உணவளிக்க முன்வராததால் அருகில் இருந்த ஹோட்டலில் இருந்து அந்த ஐம்பது பேர் குழுவுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நிலச்சுவான்தார்கள் ஒருவருக்காவது தர்ம சிந்தனை ஏற்படாதது துர்பாக்கியமே.

கோயில்கள் புறக்கணிக்கப் படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் இக்காலத்தில் , மனம் பதைபதைத்துத் தொண்டாற்றுபவருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, திருவாதிரையான் திருவருட் சபை , மாதம் தோறும் ரூ ஐநூறு , உழவாரத் தொண்டுக்காக அளிக்க முன்வந்துள்ளது. இத் தொகை , மதிய உணவுக்குப் பயன்படும் வகையில் அமையும். இனியாவது, ஆலையங்களில் உழைத்தவர்களுக்கு உணவு இல்லை என்ற நிலை ஏற்படாதிருக்க, ஸ்ரீ ஒதனவநேச்வரரையும் ஸ்ரீ அன்னபூரணி அம்பிகையையும் பிரார்த்திக்கிறோம்.

Sunday, February 20, 2011

கோடி ருத்ர ஜபமும் ஏகதின லக்ஷார்ச்சனையும்

நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் வரும். தெய்வம் எங்கே இருக்கிறது என்பதே அது. இதற்கு விடையாக வேதம் சொல்லும் பதில் ," எங்கே தான் இல்லை?" என்பதே. நாம் கண்ணால் காணும் உயிருள்ள மற்றும் உயிரற்ற (?) பொருள்கள் எல்லாவற்றிலும் ஸ்ரீ பரமேச்வரன் இருப்பதை ஸ்ரீ ருத்ரம் விவரமாக எடுத்துக் காட்டுகிறது. விஸ்வரூபேப்யனான பகவான், சபாபதியாகவும் , கணங்களுக்கு அதிபதியாகவும் , வில்லும் வாளும அம்பறாத்தூணியும் எந்தியவனாகவும் காட்டப்படும் அதே சமயம், குதிரைத்தலைவனாகவும், நாய்களின் தலைவனாகவும், கள்வர்களின் தலைவனாகவும் சித்தரிக்கப்படுகிறான். இப்படி, உலக உற்பத்திக்கு முன்பே இருப்பவனும், தேவர்களில் முதல்வனும் ஆன சர்வேச்வரன்(" அக்ரியாய்சபிரதமாய்ச") தாவரங்களின் வடிவிலும் இருப்பதை, "சுஷ்க்யாய ச ஹரித்யாய ச" என்றதால், காய்ந்த கட்டையிலும், ஈரமுள்ள கட்டையிலும் கூட இருக்கிறான் எனப்படுகிறது. பொதுவாக நீரில் நீக்கமற விளங்குகின்றான் என்று சொல்வதை, விரிவாகவே, வாய்க்கால் நீரிலும், அருவி நீரிலும், மடுவிலுள்ள நீரிலும் , நதி, கடல் கிணறு, சுனை முதலியவற்றில் உள்ள நீராக இருக்கிறான் எனக்காட்டப்படுகிறது.மேகமாகவும்மின்னலாகவும், மழைகாற்றாகவும் இருக்கும் அவனே, மழை இல்லாத பூமியிலும் இருக்கிறான் (நமோ வர்ஷ்யாய்ச அவர்ஷ்யாய்ச)என்கிறது வேதம். வேண்டும் வரங்களை வாரி வழங்குவதில் ஒப்பற்றவனும் பரம மங்கள ரூபியுமான ஸ்ரீ பரமேச்வரன், எல்லா நன்மைகளையும் வழங்கவேண்டும் ( "மீடுஷ்டமசிவதம சிவோன:சுமநாபவ) என்று பிரார்த்திக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மகிமை உள்ள ஸ்ரீ ருத்ரத்தை ஜபிப்பதால் உலக நன்மை உண்டாகும் என்பதால், கர்நாடக மாநிலத்தில் கோகர்ணம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ மகாபலேஸ்வரர் கோயிலில் கோடி ருத்ர ஜபம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.





பெங்களூரிலிருந்து சுமார் 450 கி. மீ. தொலைவில் அரபிக்கடலை நோக்கியவாறு அமைந்துள்ள இத் தலம் மிகவும் பழமை வாய்ந்தது. ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கத்தை விநாயகப்பெருமான் ஒரு சிறுவனாக வந்து இங்கேயே வைத்துவிட்டதால், ராவணனால் அதைப் பெயர்க்கமுடியவில்லை.ராவணனால் குட்டுப்பட்ட கணபதியும் தனி ஆலயத்தில் காட்சி அளிக்கிறார். சுவாமியை ஞான சம்பந்தர் மற்றும் அப்பர் தேவாரப் பதிகங்கள் துதிக்கின்றன. ஆதிசங்கரரும் இங்கு தரிசிக்க வந்ததாகச் சொல்வர். அவரது பெரிய திருவுருவச்சிலை கடலை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. கோடி தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தம் ஊருக்குள் இருக்கிறது. மகா சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவார்களாம். இரு தினங்கள் இந்த கோடி ருத்ர ஜெபத்தில் கலந்துகொண்டு, ஒவ்வொரு காலத்திலும் ஆத்மலிங்க தரிசனம் கிடைத்தது பாக்கியமே. சிவ லிங்கத்தின் பிரம பாகம் பெரும்பாலும் வட இந்தியக் கோயில்களில் பார்க்க முடியாது. விஷ்ணு பாகமான ஆவுடையாரையும் அதன் மேலே உள்ள சிவ மூர்த்தியையும் மட்டுமே தரிசிக்கலாம். ஆனால் இந்த ஸ்தலத்திலோ, ஆவுடையார் மட்டுமே காணப்படுகிறது. அதன் நடுவில் உள்ள குழிவான இடத்தில் நீர் தேங்கியிருக்கிறது. அதை சற்று அகற்றிவிட்டு, கையை விட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். அப்பொழுது சிறிய லிங்கம் இருப்பதை உணர முடிகிறது. அவசியம் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

ஊருக்குத் திரும்பியவுடன் மற்றும் ஓர் அழைப்பு. 13 ம தேதி திருக்கள்ளில் என்ற ஸ்தலத்தில் நடைபெற்று இருக்க வேண்டிய ஏக தின லக்ஷாச்சனை, 19 ம தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்ததால் அந்த வைபவத்தையும் காணும் பாக்கியம் கிடைத்தது.





திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருக்கள்ளில் என்ற இந்த ஸ்தலம், சென்னையிலிருந்து பெரிய பாளையம் போகும் வழியில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கள்ளி மரம் ஸ்தல விருக்ஷம். சோமாஸ்கந்த வடிவில் , சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அபிஷேக அலங்காரங்கள் ஆனவுடன், லக்ஷார்ச்சனையும், ருத்ர த்ரிசதியும் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆலய சிவாசாரியார் , ஸ்ரீ ஆறுமுக குருக்களுக்கு அண்மையில் 100 ஆண்டுகள் பூர்த்தி ஆனதை ஒட்டி அன்பர்கள் அவருக்கு விழா எடுத்தார்கள். தனது 18 வது வயதிலிருந்து, தொடர்ந்து சுவாமிக்கு இந்த உள்ளடங்கிய/ வசதிகள் மிகக் குறைவாக உள்ள இக்கிராமத்தில் இருந்து கொண்டு பூஜை செய்துவரும் இப் பெரியவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்றைய தினம் அவரது ஆசிகளை பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள்.

Sunday, January 2, 2011

அடியார் கூட்டம் அருள்வாய்

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டுப் பல ஆலயங்கள் நள்ளிரவில் திறக்கப் படுகின்றன. பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நமக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பது வேறு விஷயம். ஆண்டு முழுவதும் நல்லதாகவே நடைபெறவேண்டும் என்று அவரவர்கள் பிரார்த்திக்கிறார்கள். இதற்காகவாவது வருகிறார்களே என்று நினைக்க வேண்டியிருக்கிறது. புதிய ஆண்டில் நாம் என்ன செய்ய இருக்கிறோம் என்று தீர்மானிப்பவர்கள் சிலரே. அதிலும் இறை பணிக்காக என்ன செய்ய இருக்கிறோம் என நினைப்பவர்கள் மிக மிகச் சிலரே. அதைவிட, ஆண்டு முழுவதும் இதே சிந்தனையோடும் செயல் பாட்டோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அருமையிலும் அருமை. அப்படிப்பட்ட ஒருவரை அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நான் குறிப்பிடும் இவர் , பூஜைகள் நடைபெறாத சிவாலயங்களைக் கண்டு மனம் வருந்துவதோடு, அங்கு பூஜைகள் எப்படியாவது துவங்கவேண்டும் என்று செயல் படுபவர். மக்களுக்கு மகேசனின் பெருமைகளை அறிய வைப்பவர். மரம், செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் ஆலயங்களில் உழவாரத் தொண்டு செய்பவர். இத்தகைய கோயில்களின் அவல நிலையைத் திருமடங்களின் பார்வைக்குக் கொண்டு வருபவர். இளம் வயதினராகிய இவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர் என்று அறிகிறேன். தற்போது கும்பகோணத்தில் வசிக்கும் இவர் , காவி அணிந்த கோலத்துடன் எளிமையாகக் காணப் படுகிறார். ஜோதிமலை சுவாமிகள் என்று அன்பர்களால் அழைக்கப்படும் இவர், சிவாலயத் தொண்டு செய்யாத நாட்களே இல்லை எனலாம்.





சோழ நாட்டில், குறிப்பாக, கும்பகோணம் பகுதியில் மரம் முளைத்துப்போயும், பூஜைகள் நின்று போயும் ஊர்மக்களால் கைவிடப்பட்ட கிராமக் கோயில்கள் ஏராளம். இப்படிப்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று, அன்பர்களது உதவியுடன் உழவாரத் தொண்டு செய்தும், ஆலய சன்னதிகளைச் சுத்தம் செய்தும் மகத்தான சேவை செய்து வருகிறார் நம் ஸ்வாமிகள். உழவாரப் பணியில் இவருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சென்னையைச் சேர்ந்த அன்பர்கள். இவர்கள் மாதம் தோறும் கும்பகோணம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் உழவாரப் பணிசெய்கிறார்கள்.

நாச்சியார் கோயில் அருகிலுள்ள துக்காச்சி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தின் பரிதாப நிலையைப் பற்றி சில மாதங்கள் முன்பு எழுதியிருந்தோம். இந்த ஆண்டு , அக்கோவிலில் மார்கழி மாத பூஜைகள் நடை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் , நம் ஸ்வாமிகள், சில அன்பர்களுடன் விடியற்காலை அங்கு சென்று, ஆலயத்தில் அபிஷேக ஆராதனை செய்து, வீதிகளில் ஊர்க் குழந்தைகளுடன் பஜனை செய்து விட்டு வருகிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் அக்குழந்தைகளுக்குத் தோத்திரங்கள் சொல்லிக் கொடுக்கிறார். இது போல ஊர் விட்டு ஊர் சென்று தொண்டு செய்பவர்களை நாம் பாராட்டுவதோடு அவர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்.

நகரக் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசைகளில் மணிக் கணக்கில் காத்திருப்பவர்களில் சிலரது கவனமாவது கிராமத்துக் கோயில்களின் பக்கம் திரும்பினால் நன்றாக இருக்கும். தாங்கள் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு அடிக்கடி செல்வதோடு ஊர்மக்களுக்கும் ஈடுபாடு வரும்படி செய்வது மிகவும் முக்கியம். புதிய கோவில்களைக் கட்டுவதை விட நம் முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயங்களை ஒழுங்காகப் பராமரிப்பதே சிறந்த சிவபுண்ணியம் ஆகும்.

இந்த மார்கழி மாதத்தில் மட்டும் பலகோடிகளை உண்டியல் மூலம் ஈட்டும் ஆலயங்கள் அதில் சிறு பகுதியையாவது இத்தகைய காரியங்களுக்கு ஒதுக்கலாமே. சொல்வார் இல்லையா அல்லது கேட்பவர்கள் இல்லையா என்று நினைக்கத் தோன்றுகிறது. கிராமக் கோவில்களுக்குச் சென்றுவந்தால் கண்ணீர் தான் மிஞ்சுகிறது. மழை விட்டவுடன் மிக எளிதில் பிராகாரத்தில் வளர்ந்துள்ள சிறு செடிகளைப் பிடுங்கி எறியலாம். நிலம் காய்ந்தால், அதைக் களைய மண்வெட்டி தேவைப் படுகிறது. நிலம் ஈரமாக இருக்கும்போது, செடியை வேரோடு கையால் பிடுங்கமுடிகிறது. இதுபோன்ற எளிய வகையில் முடிந்த அளவு பணிகளைச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். முன்னோடியாகவும் வழிகாட்டிகளாகவும் ஜோதிமலை சுவாமிகள் போன்றவர்கள் நிறைய பேர் தோன்றினால் தான் கோயில்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். விமானங்களுக்கும் கோபுரங்களுக்கும் ப்ராகாரங்களுக்கும் மரங்களால் ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய அடியார் கூட்டத்தை அருளுமாறு ஆபத்சஹாயப் பெருமானை வேண்டுவோமாக.

Thursday, December 9, 2010

ஆதி சைவர்களைப் போற்றுவோம் - II

உலக நன்மைக்காக ஆலயங்களில் செய்யப்படும் பூஜையைப் பரார்த்த பூஜை என்பார்கள். இதைச் செய்யும் உரிமை உடையவர்கள் குருக்கள்/பட்டர் என்று தற்காலத்தில் வழங்கப்படும் ஆதிசைவப்பெருமக்களே ஆவார்கள். மாதொரு பாகனுக்கு வழிவழி அடிமை செய்யும் இக்குலம், கிராமப்புறங்களில் ஆதரவின்றி அல்லல் படுவதைக் காண்கிறோம். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, நமது சபை , பழமை வாய்ந்த கிராமக் கோயில்களில் நீண்ட காலமாகப் பணியாற்றும் சிவாசார்யார்களை அவர்களது மனைவிமார்களோடு ஒரு சிவாலயத்திற்கு வரவழைத்து , அவர்களை ர்ச்சித்து, புத்தாடைகளும் பண உதவியும் செய்து இயன்றவரை தொண்டாற்றி வருகிறது. இந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து சிவாச்சாரியார்கள் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிசெம்பர் 4- அன்று வைதீஸ்வரன் கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் உள்ள தலை ஞாயிறு என்ற ஸ்தலத்தில் மேலும் நான்கு ஆலயத்தைச் சேர்ந்த சிவாச்சார்யர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு எனப்பட்ட இத்தலம், தேவாரத்தில் திருக்-கருப்பறியலூர் எனப்படுகிறது. மீண்டும் பிறவிக்கு ஏதுவான கருவை பறித்து முக்தி தருவதால் இப்பெயர் பெற்றது. சீர்காழிக்கு மேல் திசையில் இருப்பதால் மேலக்காழி எனப்படுகிறது. சீர்காழியைப் போலவே இங்கும் மேல் அடுக்குகளில் உமாமகேஸ்வரர், சட்டைநாதர் சன்னதிகள் உள்ளன. ஸ்தல விருக்ஷம் கொகுடி முல்லை ஆதலால் கொகுடிக் கோயில் எனப்படுகிறது. சம்பந்தர்,சுந்தரர் ஆகிய இருவர் தேவாரப் பதிகங்களும் இதற்கு உண்டு. இச்சோழர் கால ஆலயம் , மேல் தளம் பழுதடைந்து, மழை நீர் ஒழுகுவதால், உடனடியாகத் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

விழா நாளன்று பலத்த மழை விடாது பெய்துகொண்டிருந்ததால், சாலைகள் மிகவும் சேதமாகி, மழை நீர் தேங்கிக் கிடந்தன. கால தாமதம் ஆனபோதிலும், திருச்சிற்றம்பலம், ஆத்தூர்,கொண்டல் ஆகிய கிராமத்துக் கோயில்களின் சிவாச்சார்யார்கள் தமது மனைவியருடன் தலைஞாயிறு கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். கடலங்குடி ஆலய அர்ச்சகர் மட்டும் வர இயலவில்லை.

ஸ்ரீ அபராத க்ஷமாபநேஸ்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) மற்றும் ஸ்ரீ கோல்வளை நாயகிக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக , ஸ்ரீ ருத்ரம் , சாமவேத , திராவிடவேத பாராயணத்துடன் நடைபெற்றது. சுவாமி-அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் சார்த்தி அலங்காரம் செய்யப்பட பின், சுவாமிக்கு ஸ்ரீ ருத்ர த்ரிசதி அர்ச்சனை, வில்வ தளங்களைக்கொண்டு ஒரே நேரத்தில் ஐந்து சிவாச்சர்யர்களால் செய்யப்பட்டு, ஐந்து பேராலும் பஞ்சமுக தீபாராதனை செய்யப்பட்டது.

பின்னர் நான்கு சிவாசாரிய தம்பதிகளை அமரவைத்து, அந்த அந்த ஊர் சுவாமி- அம்பாள் எனப் பாவித்து, அர்ச்சனை,தூப தீபங்கள் செய்யப்பெற்றன. புதிய வஸ்திரங்கள் வழங்கப்பெற்று, ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ 2000 சம்பாவனையாக அளிக்கப்பெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீ பாஸ்கர், ஸ்ரீராம்,கணேஷ், கோமதிநாயகம் , சந்திரமோகன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவர்களுக்குச் சிவனருள் மேலும் பெருகுவதாக. இச்சிவ புண்ணியத் தொண்டு தொடர்ந்து நடைபெற அடியார்கள் உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தனைக்கும் மூல காரணமாக இருந்து அருள் வழங்கும் தோன்றாத்துணை யாம் பரமேச்வரன் , நம் குற்றங்கள் யாவற்றையும் பொறுத்துக் குணங்களை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.