Sunday, July 5, 2009

தெய்வங்களின் வாகனங்கள்





ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு வாகனம் இருப்பது எல்லோருக்கும் தெரியும் . பிள்ளையாருக்கு மூஷிகமும் முருகனுக்கு மயிலும் விஷ்ணுவுக்கு கருடனும் அம்பாளுக்கு அன்னபக்ஷியும் இருப்பதைப் பார்த்து பலருக்கு இவை எப்படி சுவாமியை தாங்க முடியும் என்ற சந்தேகமும் கூடவே வருகிறது. தத்துவ ரீதியில் இதற்குவிளக்கம் சொன்னாலும் நடைமுறையில் விளக்கம் சொல்லுவது பலருக்கும் பலன் அளிக்கும் என்று தோன்றுகிறது.

வெளி நாட்டு நபர் ஒருவர் பல வருஷங்களுக்கு முன் காஞ்சிபெரியவரை தரிசிக்க போனபோது பெரியவர் பல்லக்கில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தார். பல்லக்கு தூக்கிய ஆட்களிடம் அவர் பேசியபோது ஆச்சர்யமான விஷயம் தெரியவந்தது. பெரியவாள் பல்லக்கில் இருந்தால் தூக்குவதற்கு மிகவும் சுலபமாகவும் தனி பல்லக்கை தூக்கும் போது மிகவும் கனமாகவும் இருப்பதாக அவர்கள் சொன்னார்களாம். தன்னைத் தூக்குபவர்களுக்கும் சிரமம் தரக்கூடாது என்று பெரியவாள் மனதில் தோன்றிஇருக்கலாம்.

அஷ்டமா சித்திகள் எட்டில் உடம்பை அணு அளவில் ஆக்கிக் கொள்வதுஒரு சித்தி. மகான்கள் இந்த சித்தியை மற்றவர்களுக்கு அருள் செய்யும் போது உபயோகிப்பார்கள். இப்போது பிள்ளையார் விஷயத்திற்கு வருவோம். சுவாமி அணுவாகவும் அதற்கு அப்பால் பட்டவராகவும் இருக்கிறார் என்று அவ்வை பாட்டி சொல்கிறார் இல்லையா? அசுரனை சம்காரம் செய்த பிறகும் அவனுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டி தன்னை அவன் தூக்கும் அளவுக்கு மெல்லிசாக ஆக்கிக் கொள்கிறார் சுவாமி. இப்போது சொல்லுங்கள். ஒரு நெட்டி பிள்ளையாரை மூஷிகம் தூக்குவது சாத்தியம் ஆகி விடுகிறது அல்லவா?

இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சுவாமியை தூக்குவது அந்த வாகனத்திற்குப் பாக்கியமே தவிர சுவாமிக்கு அதனால் பெருமை இல்லை. உத்தர மாயூர ஸ்தல புராணத்தில் பரமேஸ்வரனுக்கு வாகனமானதில் நந்திதேவர் கர்வம் கொண்டவுடன் ஈஸ்வர ஆக்யையால் மாயூர க்ஷேத்ரத்திற்கு வந்து தவம் செய்த பிறகு ஈஸ்வரனே அவருக்கு உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ மேதா தக்ஷிணா மூர்த்திக்கு எதிரில் நந்தி இருப்பதை இன்றும் அங்கு பார்க்கலாம்.
மதுரையில் சுவாமி செய்த 64 திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடலில் பல சித்திகளை செய்து காட்டுவதை அறியலாம். எனவே இந்த வாகன விஷயம் ஒன்றும் சுவாமிக்குப் பெரியது இல்லை. நம்மால் முடியாததையும் கண்ணால் காணாததையும் வைத்துக்கொண்டு இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று விடை தெரியாமல் குழம்பிப்போய் பதில் தெரியாமலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலும் நாளைக் கழிக்கிறோம்.


ஈஸ்வரனுக்குத் தனது ஸ்ருஷ்டியில் எல்லாம் சமமே. தேவர்கள் முதல் எறும்பு வரை எல்லா ஜீவ ராசிகளுக்கும் அனுக்ரகம் செயவதால் தான் சுவாமியை விஸ்வநாதன் என்றும் அம்பாளை அகிலாண்டேஸ்வரி என்றும் சொல்கிறோம்.
(தொடரும்)

Tuesday, May 26, 2009

ஸ்ரீ மகா கணபதி


मंगलम दिशतुमे विनायको मंगलम दिशतुमे षडाननः



मंगलम दिशतुमे महेश्वरी मंगलम दिशतुमे महेश्वरः



-- Sri Skaandha Maha Puranam



உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து , காத்து ,அருளி ,கருணையால் முக்தி வரம் தந்து உய்விக்கும் முழுமுதல் கடவுளை நாம் அறிய முயல்வது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல ஆகும். தெய்வத்தை ஆராய்ச்சியின் மூலம் அறியமுடியாது. அனுபவத்தாலும் அவன் அருளாலும் மட்டுமே உணர முடியும். எல்லாவற்றிலும் நிறைந்து விளங்கும் இறைவனை இப்படிப்பட்டவன் என்று வரையறைக்குள் கொண்டுவர முடியாது.



இறைவன் உருவமும் அருவமும் உருவாருவமும் ஆனவன் என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அருவமாக இருக்கும் பரம்பொருள் நமக்கு எளிமையாக உருவம் கொண்டு காட்சி அளிக்கிறான். எத்தனையோ கடவுள் வடிவங்களில் தோன்றுவதைக் கண்டு இத்தனை கடவுள் வடிவங்கள் எதற்காக என்று கேட்பது அறியாமை. அவரவர்களது பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றபடி வடிவம் கொண்டு விளங்குகிறான் என்பதே நாம் அறிய வேண்டுவதாகும்.



சிறு வயதிலிருந்தே ஏற்படும் பக்தி வளரக்கூடியது. நிலைத்து நிற்பது. குழந்தைகளும் விரும்பும் வடிவில் இறைவன் விநாயகர் வடிவில் அருளுகிறான். ஆகவே அக்குழந்தை தெய்வம் பெரியவர்களையும் தன்னிடம் ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை. குழந்தைகள் அப்பால கணபதியைத் தங்களைப்போல் ஒரு குழந்தையாக பார்ப்பார்கள். பெரியவர்களோ அவனிடம் எல்லாத் தத்துவங்களையும் பார்ப்பார்கள். குழந்தைகளுக்குத் தத்துவமோ மந்திரமோ தெரியாவிட்டாலும் பெரியவர்களுக்கே இல்லாத கள்ளம் கபடம் இல்லாத மனம் இருப்பதால் தானோ என்னவோ அவர்களுக்கு இறைவன் எளியவனாகிறான்.



சிதம்பரத்துக்கு அருகில் திருநாரையூர் என்று ஒரு ஊர். அங்கே உள்ள சிவாலயத்தில் பூஜை செய்பவர் வெளியூர் சென்றதால் அவரது பிள்ளை பூஜை செய்யப் போனான். பிள்ளையார் நைவேத்தியத்தை சாப்பிடுவர் என்று நம்பினான் அந்த நம்பி. தனது பூஜையில் ஏதோ குறை இருப்பதாலேயே பிள்ளையார் சாப்பிடவில்லை என்று நினைத்து தன் தலையை அருகிலிருந்த கல்லில் மோதிக்கொள்ள ஆரம்பித்தான். அப்போது காட்சி தந்த விநாயகர் அவன் அளித்த மோதகாதிகளைத் தும்பிக்கையால் எடுத்து சாப்பிட்டதோடு அந்தக் குழந்தைக்கு எல்லாக் கலைகளையும் உபதேசித்தார். சிதம்பரத்தில் திருமுறை சுவடிகள் இருக்கும் இடத்தையும் நம்பிக்கு அருளியவர் இந்த விநாயக வள்ளல்.



ஆதிதம்பதிகளான பார்வதி பரமேஸ்வர குமாரனாக கணபதி தோன்றியதைக் குறிக்கும் கதைகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஞானப்பழத்தைப் பெறுவதற்காக முருகன் மயிலேறி உலகை வலம் வரும் முன்பு தந்தையையும் தாயையும் வலம் வந்து பழம் பெற்றார் பிள்ளையார். உலக வலம் முடிந்த தம்பியை அப்பழத்தை தந்து சமாதானமும் செய்கிறார். உமாமகேச்வரர்களுக்குள் உலகத்தை கண்டவர் விநாயகர். உலகத்தையே உமாமகேச்வர வடிவமாகக் கண்டவர் முருகப்பெருமான்.


இனிக் கதைகளை விட்டுக் கொஞ்சம் விநாயக வடிவங்களையும் சில அடிப்படைத் தத்துவங்களையும் பற்றிக் காண்போம்.


அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் இந்த குழந்தை சுவாமி அணுவுக்குள் அணு வாகவும் இருப்பவர்.மஞ்சளில் பிடித்துவைத்து மகா கணபதிம் த்யாயாமி ஆவாஹயாமி என்றால் அதற்குள் காக்ஷி அளிக்கிறார். அதே சமயத்தில் 32 விதமான ரூபங்களும் அவருக்கு உண்டு. shreeganesh.com என்ற இணைய தளத்தில் இம் மூர்த்தி ரூபங்களை காணலாம்.


விநாயகருக்குள் சிவசக்தி அம்சங்களையும் மனித மிருக ரூபங்களில் கலப்பையும் காண முடிகிறது. மகேச்வர புத்திரன் என்பதற்காக பின் வலது கையில் மழு (பரசு) வும் உமா புத்திரன் என்பதற்காக பின் இடது கையில் பாசமும் வைத்திருக்கிறார்.நெற்றியில் இளம் சந்திர கலை விளங்குவதால் பால சந்திரர் என்று போற்றப்படுகிறார். (பாலம் என்றால் நெற்றி என்பது பொருள்).

தலைக்கு மேல் மிருகத்தையும் கீழே மனித உடலும் உள்ள சங்கமமாக காக்ஷி தருகிறார். வலது புறம் உள்ள தந்தத்தை (மகா பாரதம் எழுதவும் /அசுரனை அழிக்கவும்) கையில் ஏந்தியுள்ளார். இடது முன்கையில் மாம்பழம்/மோதகம் இருக்கிறது. தும்பிக்கையில் தாய் தந்தையை பூஜிக்க அபிஷேக கலசம் ஏந்தியுள்ளார். எல்லா அண்டங்களும் இவருக்குள் அடக்கம் என்று காட்ட வயிறு பெரிதாகத் தோன்றுகிறது. மொத்தத்தில் இவர் உருவம் ஓம்கார வடிவில் விளங்குகிறது. இவரே மூலாதார மூர்த்தி.

கணேச மகிமை தொடரும்