Tuesday, May 26, 2009

ஸ்ரீ மகா கணபதி


मंगलम दिशतुमे विनायको मंगलम दिशतुमे षडाननःमंगलम दिशतुमे महेश्वरी मंगलम दिशतुमे महेश्वरः-- Sri Skaandha Maha Puranamஉலகங்கள் எல்லாவற்றையும் படைத்து , காத்து ,அருளி ,கருணையால் முக்தி வரம் தந்து உய்விக்கும் முழுமுதல் கடவுளை நாம் அறிய முயல்வது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல ஆகும். தெய்வத்தை ஆராய்ச்சியின் மூலம் அறியமுடியாது. அனுபவத்தாலும் அவன் அருளாலும் மட்டுமே உணர முடியும். எல்லாவற்றிலும் நிறைந்து விளங்கும் இறைவனை இப்படிப்பட்டவன் என்று வரையறைக்குள் கொண்டுவர முடியாது.இறைவன் உருவமும் அருவமும் உருவாருவமும் ஆனவன் என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அருவமாக இருக்கும் பரம்பொருள் நமக்கு எளிமையாக உருவம் கொண்டு காட்சி அளிக்கிறான். எத்தனையோ கடவுள் வடிவங்களில் தோன்றுவதைக் கண்டு இத்தனை கடவுள் வடிவங்கள் எதற்காக என்று கேட்பது அறியாமை. அவரவர்களது பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றபடி வடிவம் கொண்டு விளங்குகிறான் என்பதே நாம் அறிய வேண்டுவதாகும்.சிறு வயதிலிருந்தே ஏற்படும் பக்தி வளரக்கூடியது. நிலைத்து நிற்பது. குழந்தைகளும் விரும்பும் வடிவில் இறைவன் விநாயகர் வடிவில் அருளுகிறான். ஆகவே அக்குழந்தை தெய்வம் பெரியவர்களையும் தன்னிடம் ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை. குழந்தைகள் அப்பால கணபதியைத் தங்களைப்போல் ஒரு குழந்தையாக பார்ப்பார்கள். பெரியவர்களோ அவனிடம் எல்லாத் தத்துவங்களையும் பார்ப்பார்கள். குழந்தைகளுக்குத் தத்துவமோ மந்திரமோ தெரியாவிட்டாலும் பெரியவர்களுக்கே இல்லாத கள்ளம் கபடம் இல்லாத மனம் இருப்பதால் தானோ என்னவோ அவர்களுக்கு இறைவன் எளியவனாகிறான்.சிதம்பரத்துக்கு அருகில் திருநாரையூர் என்று ஒரு ஊர். அங்கே உள்ள சிவாலயத்தில் பூஜை செய்பவர் வெளியூர் சென்றதால் அவரது பிள்ளை பூஜை செய்யப் போனான். பிள்ளையார் நைவேத்தியத்தை சாப்பிடுவர் என்று நம்பினான் அந்த நம்பி. தனது பூஜையில் ஏதோ குறை இருப்பதாலேயே பிள்ளையார் சாப்பிடவில்லை என்று நினைத்து தன் தலையை அருகிலிருந்த கல்லில் மோதிக்கொள்ள ஆரம்பித்தான். அப்போது காட்சி தந்த விநாயகர் அவன் அளித்த மோதகாதிகளைத் தும்பிக்கையால் எடுத்து சாப்பிட்டதோடு அந்தக் குழந்தைக்கு எல்லாக் கலைகளையும் உபதேசித்தார். சிதம்பரத்தில் திருமுறை சுவடிகள் இருக்கும் இடத்தையும் நம்பிக்கு அருளியவர் இந்த விநாயக வள்ளல்.ஆதிதம்பதிகளான பார்வதி பரமேஸ்வர குமாரனாக கணபதி தோன்றியதைக் குறிக்கும் கதைகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஞானப்பழத்தைப் பெறுவதற்காக முருகன் மயிலேறி உலகை வலம் வரும் முன்பு தந்தையையும் தாயையும் வலம் வந்து பழம் பெற்றார் பிள்ளையார். உலக வலம் முடிந்த தம்பியை அப்பழத்தை தந்து சமாதானமும் செய்கிறார். உமாமகேச்வரர்களுக்குள் உலகத்தை கண்டவர் விநாயகர். உலகத்தையே உமாமகேச்வர வடிவமாகக் கண்டவர் முருகப்பெருமான்.


இனிக் கதைகளை விட்டுக் கொஞ்சம் விநாயக வடிவங்களையும் சில அடிப்படைத் தத்துவங்களையும் பற்றிக் காண்போம்.


அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் இந்த குழந்தை சுவாமி அணுவுக்குள் அணு வாகவும் இருப்பவர்.மஞ்சளில் பிடித்துவைத்து மகா கணபதிம் த்யாயாமி ஆவாஹயாமி என்றால் அதற்குள் காக்ஷி அளிக்கிறார். அதே சமயத்தில் 32 விதமான ரூபங்களும் அவருக்கு உண்டு. shreeganesh.com என்ற இணைய தளத்தில் இம் மூர்த்தி ரூபங்களை காணலாம்.


விநாயகருக்குள் சிவசக்தி அம்சங்களையும் மனித மிருக ரூபங்களில் கலப்பையும் காண முடிகிறது. மகேச்வர புத்திரன் என்பதற்காக பின் வலது கையில் மழு (பரசு) வும் உமா புத்திரன் என்பதற்காக பின் இடது கையில் பாசமும் வைத்திருக்கிறார்.நெற்றியில் இளம் சந்திர கலை விளங்குவதால் பால சந்திரர் என்று போற்றப்படுகிறார். (பாலம் என்றால் நெற்றி என்பது பொருள்).

தலைக்கு மேல் மிருகத்தையும் கீழே மனித உடலும் உள்ள சங்கமமாக காக்ஷி தருகிறார். வலது புறம் உள்ள தந்தத்தை (மகா பாரதம் எழுதவும் /அசுரனை அழிக்கவும்) கையில் ஏந்தியுள்ளார். இடது முன்கையில் மாம்பழம்/மோதகம் இருக்கிறது. தும்பிக்கையில் தாய் தந்தையை பூஜிக்க அபிஷேக கலசம் ஏந்தியுள்ளார். எல்லா அண்டங்களும் இவருக்குள் அடக்கம் என்று காட்ட வயிறு பெரிதாகத் தோன்றுகிறது. மொத்தத்தில் இவர் உருவம் ஓம்கார வடிவில் விளங்குகிறது. இவரே மூலாதார மூர்த்தி.

கணேச மகிமை தொடரும்


No comments:

Post a Comment