Thursday, August 16, 2012

கணபதியின் கருணை மழை


சித்தர் பூமியில் அன்றும் இன்றும் அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. வானில் சென்ற சித்தர் பெருமான்  கீழே, மாடுமேயப்பவனான மூலன் என்பவன் இறந்ததால் அவனைச் சுற்றி நின்று கண்ணீர்  வடிக்கும் பசுக்களைக் கண்டு இரங்கி, அவனது உடலுள் புகுந்து பசுக்களின் துயரம் தீர்த்தார்.அதனால் திருமூலர் என்ற பெயரும் பெற்றார். இது நடந்தது சாத்தனூர் என்ற ஊரில். மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சிறிய கிராமம். பழங்காலத்தில் மிகப் பெரிய கிராமமாகத் திகழ்ந்து வந்தது என்பதை இதன் எல்லைக்குட்பட்டதாகக் கொண்டு  திருவாவடுதுறையைப் பாடியிருப்பதை  திருவிசைப்பாவின் மூலம் அறிகிறோம். சாத்தனூர் என்பதைச் சுருக்கமாகச் சாந்தை என்று சேந்தனார் குறிப்பிட்டிருக்கிறார். எனவே,  திருவாவடுதுறை தற்போது 3 கி. மீ. தொலைவில் இருந்தாலும், சாத்தனூரைச் சேர்ந்ததாக  இருந்தது என்று அறிகிறோம். இங்கு தனிக் கோயில் கொண்டுள்ள  சாஸ்தா, பல குடும்பங்களுக்குக்  குல தெய்வமாக விளங்குகிறார். சாத்தன் என்பது சாஸ்தாவைக்  குறிக்கும்.அதுவே சாத்தனூர் என்று ஆயிற்று. இந்த எல்லையில் ஐந்து சிவாலயங்களும், ஒரு விஷ்ணு ஆலயமும், உண்டு. எனவே இதனைப் பஞ்ச லிங்க க்ஷேத்ரம் என்பார்கள்.

திருவாவடுதுறையிலுள்ள கோமுக்தீச்வர ஸ்வாமி ஆலயம் மூவர் தேவாரமும் திருவிசைப்பாவும் பெற்றது. நவகோடி சித்தபுரம்  எனப்படுவது. இங்குள்ள அரச மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்து திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை அருளினார் திருமூலர். தனது தந்தை செய்யும் சிவ யாகத்திற்காகப் பொருள் வேண்டி, ஞானசம்பந்தரும் இறைவனிடம் பதிகம் பாடி ,ஆயிரம் பொன் பெற்றார். இந்த ஆலயம், திருவாவடுதுறை ஆதீனத்தால் திருப்பணிகள் அவ்வப்போது செய்யப்பெற்று, மிக நேர்த்தியாகப் பரிபாலிக்கப்படுகிறது.

சாத்தனூரில் உள்ள நான்கு சிவாலயங்களுள் முதலாவது, சித்தீச்வர ஸ்வாமி ஆலயமாகும். இங்கு திருமூலர் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அவரது திருவுருவமும் கோயிலில் இருக்கிறது. ஸ்வாமி நீண்ட பாணத்துடன்காட்சி அளிக்கிறார். அம்பிகை, ஆனந்த கௌரி என்ற பெயருடன் தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இக்கோயிலில் உள்ள விமான சுதை வேலைப்பாடு சிறப்பானது.

இதே ஊரின் மறு புறம், காசி விச்வநாத சுவாமி ஆலயம் இருக்கிறது. மிகவும் சிதிலம் அடைந்து இருந்த இக்கோயிலைச் சென்ற ஆண்டு புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். விசாலாக்ஷி சன்னதி தென்முகம் நோக்கியது.

ஊரின் கோடியில் மிகப்பெரிதாக இருந்த ஐராவதீச்வரர் கோயில் ,பாழடைந்து, சுற்றிலும் மரங்களும் புதர்களுமாகக் காட்சி அளித்தது. சுற்றிலும் வயல்கள். சுவாமியின் மிகப்பெரிய பாணம் ஒன்றே எஞ்சிய நிலையில், அதனை ஒரு கொட்டகைக்குள் வைத்திருக்கிறார்கள். அருகிலிருந்த புதர்களை அகற்றி, ஸ்வாமி சன்னதி எழுப்பப் படுகிறது. இம்முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியதொன்றாகும். அன்பர்கள் ஆதரவு இதற்கு மிகவும் தேவைப் படுகிறது.

ஊருக்குள் இருக்கும் மற்றொரு சிவாலயம், கைலாசநாதர் கோயில் எனப்படுகிறது. இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டபிறகே, பிற சிவாலயங்களின் திருப்பணிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் துவக்கப்பட்டன. இக்கோயிலுக்கும் , சித்தீச்வரர், விச்வநாதர் கோயில்களுக்கும் செய்யப்பட திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்களில் நமது சபை முக்கிய பங்கு ஆற்றும் பாக்கியம் பெற்றது.

கைலாசநாதர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும், முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள். பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல் மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள். எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை யாகப் பெய்ததால்  பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே, விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.

இந்த வருஷம், ஆடி மாதம் முடிந்தும், காவிரி நீர், மேட்டூர்  அணையிலிருந்து திறக்கப் படவில்லை. நெல் விதைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் சாத்தனூர் வாசிகள் சிலர் மிகவும் கவலையுடன் , தென்னை மரங்களும் கடும் கோடையால் வாடுவதைத் தெரிவித்து, ஆலங்கட்டி விநாயகருக்கு அபிஷேகம் செய்ய அழைப்பு விடுத்தார்கள். இதற்கு நம்மாலான ஒத்துழைப்பை அளிப்பதற்காக , மற்றுமோர் அன்பருடன்  சாத்தனூர் சென்றோம். வாய்க்கால் ,குளங்கள், கிணறுகள் எல்லாம் வறண்டு கிடந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியையே காணோம். வெயிலோ அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. மறு நாள் காலையில் அபிஷேகம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஆகிவிட்டது. மனத்தில் மாத்திரம் கவலை-- மழை  வர வேண்டுமே என்று. அதே நேரத்தில் , விநாயகர் அருள் இருந்தால் மேகங்கள் எப்படியும் வந்து விடும் என்ற திடமான நம்பிக்கையும் இருந்தது.

காலையில் வழக்கம் போல சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. 9 மணி அளவில் ஒருவர் வந்து, கைலாசநாதர்  கோவில் அருகில் ஒரு பெரியவர் மரணமடைந்து விட்டதாகக் கூறினார்.விசாரித்ததில் அந்த இடம் கோயிலுக்கு மிகவும் தள்ளி இருந்தது. இன்னும் ஒருவர், பம்ப் செட் மூலம் ஒரு சில வயல்களில் அன்று காலை விதை விதைத்திருப்பதாகவும், மழை பெய்தால் அவ்வளவும் வீணாகி விடும் என்றும் சொன்னார். நாம் ஆசைப்பட்டபடி சன்னதியை அடைத்து, அபிஷேகம் செய்ய முடியாமல் இவ்வளவு தடைகள் ஏற்பட்டன. இருந்தாலும் பிள்ளையாருக்கு வழக்கமான அபிஷேகத்தையாவது செய்து, மழைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு ஊருக்குத் திரும்புவது என்று முடிவு எடுத்தோம். கணபதி உபநிஷத், ருத்ரம் , திருமுறைப் பாராயணம் ஆகியவற்றோடு விநாயகருக்கு அபிஷேகங்கள் நடை பெற்றன. ஒரு சில மணி நேரத்துக்குப் பின் கரிய மேகங்கள் எங்கிருந்தோ வந்து சாத்தனூரைச் சூழ்ந்து கொண்டன. எங்களுக்கோ மாலையில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மழையில் மாட்டிக கொள்வோமோ என்ற அச்சமும் இருந்தது.  ரயிலடி போய்ச சேரும் வரையில் மழை பெய்யாமல் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். தூறல் மட்டும் பலமாக இருந்தது.

மறுநாள் காலை ஊருக்கு வந்துவிட்டு, மதியம் சாத்தனூருக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, அங்கு அடை மழை பெய்து வருவதாகவும்,  ஊரார் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும்  தெரிவித்தார்கள். இதை விட சந்தோஷம் தரும் செய்தி இருக்க முடியுமா? ஆலங்கட்டி விநாயக மூர்த்தியின் அழகிய திருவுருவம் கண் முன்னே நின்றது.

Thursday, August 2, 2012

"வானங்காள் பெய்க மழை"


காவிரி பொய்த்துவிட்டது. ஆடிப் பெருக்கன்று காவிரியில் நீர் இல்லை என்ற நிலை இதற்கு முன் ஏற்பட்டதாக நினைவில்லை. சிலர் சொல்லலாம் , அணை திறக்காததால் தானே நீர் வரவில்லை என்று. பெய்ய வேண்டிய மழை பெய்திருந்தால் அணையை மூடி வைக்கவா முடியும்? வேண்டுமானால் காவிரி பொய்த்துவிட்டது என்று சொல்வதற்கு பதிலாக, வானம் பொய்த்து விட்டது என்று சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால் மனிதர்கள் பொய்த்து விட்டதால் தான் இந்த நிலை வந்திருக்கிறது எனலாம். வேதமும் வேள்வியும் மிகுந்திருந்த காலத்தில் வான் முகில் வழாது பெய்து மலி வளம் சுரந்தது. செங்கோல் வழியில் அரசனும் ஆட்சி செலுத்தினான். உயிர்கள் யாவும் குறைவில்லாமல் வாழ்ந்தன. மெய்மொழி யாகக் கருதப்பட்ட  நான்மறைகளை  ஓதியவர்கள் "பொய்யாத வேதியர்" என்று சிறப்பிக்கப்பட்டனர். மந்திர மறைகளால் வான் மழை பொழிந்தது.

மழை பொய்த்த காலங்களில் இறைவனிடம் ஊருக்காக, நாட்டிற்காக மனமுருகி வேண்டியதால்  மழை பெய்த வரலாறுகள் உண்டு.  திருப்புன்கூர் என்ற தலத்தில் வயலில் நீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்ட போது , மழை வேண்டிய  ஏயர்கோன் கலிக்காம நாயனார் , ஆறு வேலி நிலம் கோயிலுக்குத் தருவதாகப்ப்ரார்த்தித்தார். கன மழை பெய்தது. வாக்குத் தவறாத நாயனாரும் ஆறு வேலி நிலத்தை சிவலோகநாதருக்கு அர்ப்பணித்தார். மழை விடாது பெய்து வெள்ளம் வந்ததால் , அதனை நிறுத்தினால் மேலும் ஆறு வேலி நிலம் தருவதாக இறைவனிடம் வேண்டினார். வெள்ளம் நின்றவுடன்  சிவார்ப்பணமாக மேலும் ஆறு வேலி நிலத்தை வழங்கினார் என்று திருமுறைகளால் அறிகிறோம். இப்பொழுது ஊருக்காக இறைவனிடம் வேண்டுவோர் இல்லையா? ஆறும் ஆறும் பன்னிரண்டு ரூபாய் தருவதாகக்கூட யாரும் முன்வருவதாகத் தெரியவில்லையே!! தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மட்டும் உண்டியல்களை நிரப்புகிரார்களே தவிர உலக நலன் என்று சொல்வதெல்லாம் வாய் அளவோடு  சரி.

சங்கீத பிரபலங்களும் பெயருக்கும் புகழுக்கும் பணத்துக்குமே நாட்டம் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. சங்கீத மும்மணிகளுள் ஒருவரான  ஸ்ரீ  முத்து ஸ்வாமி தீக்ஷிதர், அம்ருத வர்ஷனி என்ற ராகத்தில் அம்பிகையின் மீது பாடி மழை வரவழைத்தார். விளம்பரம் இல்லாமல் ஆத்மார்த்தமாக அந்தக் கிருதியை உலக நமைக்காகப் பாட முன்வருவோர் எத்தனை பேர்?
திருநெல்வேலி சீமையில் ஸ்தல யாத்திரை செய்து வந்த சைவ மடாதிபதி ஒருவர் , அங்கு மழை இல்லாமல் மக்கள் துயரம் அடைவதைக்  கண்டு, "வானங்காள்  பெய்க மழை " என்ற ஈற்றோடு ஒரு பாடல் பாடியதும் பெரு மழை பொழிந்தது. காஞ்சி காமகோடி பெரியவர்களும் நமக்காகப் பிரார்த்தித்து  மழை வரவழைத்த வரலாறுகளும் உண்டு. குன்றக்குடி முருகனைத் தரிசிக்கச் சென்ற சிருங்கேரி ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஒரு சுலோகம் சொல்லி மழை பெய்வித்தார்கள்.

முன்பெல்லாம் சன்யாசிகள் சாதுர் மாஸ விரதத்தை சிறிய ஊர்களிலும் ,கிராமங்களிலும் அனுஷ்டித்து வந்தார்கள். இப்பொழுது பெரும்பாலும் அது நகரங்களிலேயே நடை பெறக்  காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள்  இருக்கலாம். பல அஸௌகர்யங்களும் இருக்கலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் , குறைந்த பக்ஷம் சிறு ஊர்களிலாவது நடத்தி உலக நன்மைக்காகப் பூஜை செய்தால் ஊர் மக்களும் நல்வழிப் பட  ஏதுவாகும் அல்லவா?

ஸ்திரீ தர்மம் நிலைத்திருக்கும் வரை நமது மதத்திற்கு ஆபத்து கிடையாது என்று கூடச்  சொல்லலாம். அதைப் பதிவ்ரதா தர்மம் என்றும் சொல்வர். அதற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொலைக்காட்சி வீடு தேடி வந்து புத்தியைக் கெடுக்கிறது. பெண்கள்  பழி வாங்குபவர்களாகவும், கொலை செய்யவும் அஞ்சாதவர்களாகவும் தொடர்களில் சித்தரிக்கப்படுவதைப் பெண்களும் வயோதிகர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கோயில்களில்  பெண்கள் கூட்டம் இருந்தாலும் இந்த மாயை அவர்களைப் பெரிதும் பாதித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. கோயிலில் இருக்கும் போதுகூட, சீரியல் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்ற நினைப்பு வந்து விட்டால் அப்புறம் வழிபாடாவது ஒன்றாவது!! நேராக வீட்டுக்கு ஓடி வரும் நிலை வந்து விடும். இப்படிப்பட்டவர்கள் "பெய்" என்றால் மழை எப்படிப் பெய்யும். இப்படிச் சொல்வதை , யாரையும் புண் படுத்துவதாகக்   கொள்ளக் கூடாது. நமது கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு முன்னால் சீரழிவதைப் பார்த்து வேதனையோடு எழுத வேண்டியிருக்கிறது.

 விவசாய நிலங்கள்  ஏராளமாகக் கோயில்களுக்கு வழங்கப்பட்டிருந்தும் அவற்றிலிருந்து சல்லிக்காசு கூட வருமானம் வராத கோயில்கள் ஏராளம். அற நிலையத்துறை என்ன  செய்து கொண்டிருக்கிறதோ  தெரியவில்லை. சென்ற ஆண்டைப் போல பல ஆண்டுகள்  நல்ல மகசூல் கிடைத்தும் கோயிலுக்கு உரியதைக்  கொடுக்காதவர்கள் ஏராளம். ஓட்டைக் குறி வைப்பவர்களுக்கு இது பற்றிக் கவலை இல்லை. நெல்லை மட்டுமாவது வாங்கிக் கொண்டு அரசாங்கம் தரும் அற்ப சம்பளத்தைப் பற்றி மூச்சு கூட விடாமல் கடமை ஆற்றி வந்த கிராமக் கோயில் அர்ச்சகர்கள் இன்னும் எத்தனை  நாட்கள் அந்த நெல்லும் தரப் படாமல் காலம் தள்ள முடியும்? எப்படி ஐயா நம் ஊரில் மாதம் மும்மாரி பெய்யும்? சிவாலய பூஜைகளுக்குத் தட்டுப்பாடு வந்தால் மழை பெய்யாது என்று திருமூலரும் எச்சரித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதில்லை. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நினைப்பில் மிதப்பவர்கள் இவர்கள். அந்தப் பணமும் சிவன் தந்தது என்று அவர்களும் உணரும் காலம் விரைவிலேயே வந்து விடும். பேராசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து இறைவனே அவர்களைத் திருத்தி விடுவான்.
உண்மையான அடியார்கள் என்ன  செய்வார்களாம் தெரியுமா? வானம் பொய்த்தால் என்ன, மண்ணுலகம் ஸ்தம்பித்துவிட்டால் தான் என்ன, எல்லா அரசர்களுமாக ஒன்று சேர்ந்து நம்மைத் தாக்க முற்பட்டால் என்ன, சிவனருள்  இருக்கையில் நாம் எதற்காக அஞ்ச வேண்டும்? இப்படிச் சொல்கிறார்  அப்பர் பெருமான் . இதோ அப்பாடல்:

"தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
ஒப்பில் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்
செப்பமாம் சேறை செந்நெறி மேவிய
அப்பனார் உளர்  அஞ்சுவது என்னுக்கே. "

இவ்வாறு அப்பர் சுவாமிகளைப் போன்ற மகான்கள் மட்டுமே சொல்ல முடியும். நமக்கு இன்னும் அப்பக்குவம் வரவில்லையே!என்ன செய்வது?  

Sunday, July 29, 2012

ஆகமமும் தமிழும்


                               
                                " அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
                                   பெம்மானே  பேரருளாளன் பிடவூரன்
                                   தம்மானே  தண்டமிழ்  நூற் புலவாணர்க்கு ஓர்  
                                  அம்மானே பரவையுண்  மண்டளி  அம்மானே."

என்பது, திருவாரூரில் உள்ள பரவையுண் மண்டளி என்ற தலத்து இறைவன் மீது சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகத்தில் ஒரு பாடல். இப்பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சிவாகமத்தால் தன்னை ஆராதிப்பவர்களுக்கும் ,தெய்வத் தீந்தமிழ்ப்  பாடல்களால் தன்னைத் துதிப்பவர்களுக்கும் அருள் புரியும் பெருமான் இவன் என்பார்  சுந்தரர். காலத்தின் கோளாறினால் , ஆகமம் என்று திருமுறைகள் குறிப்பது தமிழில் இருந்து மறைந்து போனவையே என்றும், இப்போது வடமொழியில் இருப்பவை  தமிழிலிருந்து மொழியாக்கம் செய்யப் பெற்றவை என்றும் ஒரு சாரார்  பிரசாரம் செய்து வருவது விந்தையாக உள்ளது. ஆகமம், தமிழிலேயே இருந்திருந்தால், மேற்கண்ட பாடலில் தனித்தனியாக ஆகமம், தமிழ்நூல் என்று பாடியிருக்க நியாயமே இல்லை. வட மொழியின் மீதுள்ள தேவையற்ற  துவேஷமே இவ்வாறு அவர்களைப் பேச வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. வேத நெறி என்று குறிக்கப் பெறுவது தமிழ் வேதமே என்று அடிப்படை அற்ற வாதம் செய்கிறார்கள். ஒரு சில மடங்களின்  ஆதரவைப் பெற்றுக்கொண்டு, திருமுறை வேள்வி, சிலை நிறுவுதல், குட நன்னீராட்டு (யாகம், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் என்றெல்லாம் சொல்லக்கூடாதாம்!) என்றெல்லாம் சில ஊர்களில் செய்து வருகிறார்கள். இதற்கு உடன்படாத சைவ ஆதீனங்கள் இந்நிகழ்ச்சிகள் ஆதரிப்பதில்லை. இருப்பினும் , இந்த துஷ்ப்ரசாரம் தொடர்கிறது.

ஆகமங்கள் கிரியைகளைச் செய்யும் மந்திரங்கள். அவற்றிற்குக் கற்சிலைகளில் இறைவனை  எழுந்தருளுவிக்கும் ஆற்றல்  உண்டு. இதற்குப் பதிலாகத் தமிழில் அக்கிரியைகளைச் செய்தால் அந்த ஆற்றலைப் பெற இயலுமா. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவனுக்கே செய்யும் குற்றம் அல்லவா  இது? ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு என்ன தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க முடியும்? நம: என்பதைப் போற்றி என்பதும்  பொருத்தமற்ற மொழிபெயர்ப்பே ஆகும். திருமுறைகள் அனைத்தும் தோத்திரங்கள். தோத்திரங்கள் வேறு , கிரியைகள் வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.தோத்திரங்கள், கிரியைகளுக்குப் பதிலாக அருளப் பட்டவை அல்ல. இவற்றில் ஒன்றுக்கு ஒன்று எது உயர்ந்தது அல்லது எது தாழ்ந்தது என்று ஆராய்வது தாழ்வு மனப்பான்மையால் ஏற்படுவதே ஆகும். பரமேச்வரனே ஆகமங்களைத் தோற்றுவித்து  அருளினான் என்பதை ,"சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்ற திருவாசக வரிகளைப் பன்முறை ஓதியும் குருநாதரின் பெயரால் சிவப்பணிகள் செய்பவர்களும் அவரது வாக்கிற்கு மாறாக நடந்துகொள்வது துரதிருஷ்டமே.

நகரத்தார்கள் பல ஆகம நூல்களையும், தல புராணங்களையும்  வெளியிட்டு சைவ உலகிற்குப் பேருபகாரம் செய்துள்ளார்கள். பல தலங்களில் வேத,சிவாகம, தேவார பாட சாலைகளை நிறுவியுள்ளார்கள். அதே போன்று, சைவ ஆதீனங்களும் பாட சாலைகளை அமைத்துப் பல மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார்கள். அண்மையில் மயிலாடுதுறையில் , சிவாகம பாடசாலை பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் அவர்கள் எழுந்தருளி ஆசி வழங்கினார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் பாடசாலை அமைக்க இடம் வழங்கிய இக் குருமூர்த்திகளின் வருகை , பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அன்று ஆடி சுவாதி ஆதலால் நமது சபை , சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அபிஷேக ஆராதனைகளை, அவரால் பாடல் பெற்ற மண்ணிப்படிக்கரை (இலுப்பப்பட்டு)என்ற தலத்தில் செய்துவிட்டு, மாலையில்,மாயூரம்  பெரிய கோவிலில் நடந்த மேற்கண்ட விழாவில் கலந்து கொண்டு . வறுமைக்கோட்டில் வாடும் மடைப்பள்ளி ஊழியர்கள் ஐவருக்கு உதவியாகத் தலா ஆயிரமும், ஆடைகளும்  வழங்க முன்வந்தபோது, ஸ்ரீ சந்நிதானம் அவர்கள், மடத்தின் சார்பில் இருவருக்கு உதவுவதாகக்கூறவே, அவர்களது திருக்கரத்தாலேயே இவ்வுதவிகள் வழங்கப் பெறும் பேறு பெற்றோம்.

இது போன்ற சர்ச்சைகளுக்குச் சில ஆண்டுகளாகச்  சைவம் உட்படுத்தப்படுவது வேதனைக்குரியது. இதனால் சமய வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆலயவழிபாடு,மற்றும் விழாக்கள் எல்லாம் பல்வேறு பிரிவுபட்ட மக்களை ஒன்று சேர்ப்பதாக அமைந்துள்ளதை  இவ்வாறு துவேஷம் பாராட்டுவதால் அவ்வொற்றுமை பிளவு படும் என்பதில் ஐயமில்லை. இது தேவைதானா என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும். சிவனுக்குத் தொண்டாற்றிய நாயன்மார்கள் சரித்திரத்தைப் பயின்றவர்களுக்கு அடியார்க்கு அடியனாகும் சிந்தையே மேலோங்கியிருக்க வேண்டுமே தவிர , காழ்ப்புணர்ச்சி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது.

எனவே , தவறான பாதையைக் காட்டுபவர்களைப் புறக்கணித்துவிட்டு, "எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசன் தொண்டே பற்றுக்கோடாகக் கொண்டு தொண்டு செய்ய வேண்டும். வேதம், ஆகமம் பயின்றவர்கள், ஆதரிப்போர் இன்றி கிராமக் கோவில்களில் இருந்து வெளியேறும் நிலையில் , இவ்விதம் வெறுப்பை உமிழ்ந்தால் அவர்கள் எங்கே  போவார்கள் என்று சிந்திக்க வேண்டும். குறைகள் எங்கும்  இருக்கக்கூடும். குறை இல்லாதவன் இறைவன் ஒருவனே. ஒரு சில நிறைகளையாவது எடுத்துக்கொண்டு பிழை பொறுத்தல் பெரியோர் கடனாகும். சிறிது சிறிதாக அப்பிழைகள் களைய வழி வகைகள் செய்ய வேண்டுமே தவிர , மரபையே மாற்ற முற்படுவது, மரக் கிளையின்  மீது அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவதற்கு ஒப்பாகும்.

Tuesday, July 17, 2012

எல்லோரும் இன்புற வேண்டுவோம்


சுமார்  25 ஆண்டுகளுக்கு முன்  சிதம்பரத்தில் நடந்த சம்பவம். மார்கழி திருவாதிரை அபிஷேகம் ஆயிரம் கால் மண்டப முகப்பில் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அமர்ந்த வண்ணம், ஆனந்த நடராஜ மூர்த்தியைக் கண் இமைக்காமல் பார்த்த வண்ணம் இருந்தனர். முன் வரிசையில் இருந்தோர் சற்று உயரமாக இருந்ததால், பின்னால் இருந்த பெண்மணிக்கு அவர்களது தலைகளையே பார்க்க முடிந்தது. இதனால் கோபப்பட்ட அவர், "நடராஜா, இவர்கள் எல்லோரும் என்னைப் பார்க்க விடாமல் மறைக்கிறார்களே! இவர்களை அழித்துவிடு" என்று வாய் விட்டுக் கூறினார். இதைக் கேட்ட பலருக்கு சிரிப்புத்தான் வந்தது. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நானும் என் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள் ஏராளம். உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மிகச் சிலரே. அத்தனை பரந்த மனப்பாமை வராவிட்டாலும்  நம்முடைய  குடும்பத்தைச்  சேராத ஒருசிலருக்காவது வேண்டிக்கொள்ளலாமே! பிறருக்காக வேண்டும் பொழுது பலன் கைமேல் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

நமது சபையின்  தொண்டுகளில் பங்கேற்கும்  அன்பர்களில் ஒருவர்  அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரது மகன் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும் அதற்கு இறைவனிடம் வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நோயின் கடுமை பற்றி அறிந்தவுடன் அவரை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் பலன் பெறலாம் என்று தெரிவிக்கத்திருவருள் கூட்டியது. அவர் நெடுந்தொலைவில் இருப்பதால் நேரில் வர முடியாத சூழ் நிலை.எனவே , அவரது சார்பில் அத்தலத்திற்கு, வரும் 26- ம்  தேதிநேரில்  சென்று அர்ச்சனைகள் செய்துவரத் தீர்மானமாகியது. இதனைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் அன்றையதினம் , தீரா நோய் தீர்த்து அருளவல்ல ஸ்ரீ வைத்யநாதப் பெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்றைய தினம் களையாத உடலோடு கயிலை சென்ற ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூஜை ஆதலால், அதனை, அவரால் பாடப்பெற்ற மண்ணிப்படிக்கரை என்ற தலத்தில் காலை சுமார் 10 மணி அளவில் அபிஷேக ஆராதனைகளுடனும் , வேத- திருமுறைப்பாராயணங்களுடனும் நிகழ்த்த இருப்பதும் திருவருள் உணர்த்தியதால் தான். வைதீஸ்வரன் கோயிலில் இருந்தும் மயிலாடுதுறை , கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும் வருபவர்கள், மணல்மேடு என்ற ஊரில் இறங்கி, சுமார் 1.5 கி.மீ. நடந்து வந்தால், இலுப்பப்பட்டு என்று தற்போது வழங்கப்பெறும் மண்ணிப் படிக்கரையை அடையலாம்.

குருபூஜைகளை அபிஷேக ஆராதனைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் , குருநாதர்களது உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது அன்று கடைப் பிடித்தல் சிறப்பாகும் எனக்கருதி, சுந்தரர்,  சிவபெருமானுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் எல்லார்க்கும் அடியவன் என்று தன்னைப் பாடியதால், நமது சபை கடந்த சில ஆண்டுகளாகக் கோயில்களில் பணி புரியும் சிவாசார்யப் பெருமக்களுக்கு இயன்றவரை உதவி செய்து வருகிறது. இந்த ஆண்டு ஆடி சுவாதி அன்று (26.7.2012) சிவாலயங்களில் இருக்கும் மடைப்பள்ளிகளில் பல்லாண்டுகளாகப் பணி புரியும் ஐந்து பேருக்கு  மயிலாடுதுறையிலுள்ளஸ்ரீ கௌரி மாயூரநாத ஸ்வாமி கோயிலில் மாலை சுமார் 6.30 மணி அளவில் நடைபெறும் சுந்தரர் குருபூஜைக்குப் பின்னர் , வஸ்திரமும்,சம்பாவனையாகத் தலா ரூ 1000-மும் சபையின் சார்பில் வழங்கப்படுகிறது. இவ்வளவு சிவ புண்ணியத்தையும் மேற்படி அன்பர்  நமது சபை மூலம் ஏற்றுப் போற்றுகின்றார். அவரது மகன் விரைவில் நலம் பெறத் திருவருளையும் குருவருளையும் மனமார  வேண்டுவோமாக.  

Thursday, July 12, 2012

இரு வைபவங்கள்


"அவன் அன்றி ஓர் அணுவும்  அசையாது " என்பது சத்தியமான வார்த்தை. இதை அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்வையும் அவனே வழங்கி அருள வேண்டும். "உன்னை உன்னும் உணர்வை நல்காய்" என்று திருவொற்றியூர் பெருமானிடம் வரம் வேண்டுகிறார்  திருநாவுக்கரசர். "உணர்வித்தால் ஆர் ஒருவர் உணராதாரே ? " என்று அவரே வேறு ஓர் பாடலில் பாடுவார். அப்படி உணர்ந்துவிட்டால் இறை தொண்டு ஆற்றும் பேறும் கிடைத்து விடுகிறது. அத்தொண்டர்களுக்குத் தூய நெறியாகத் தானே முன்னின்று வழி காட்டுகிறான் சிவபெருமான்.

 அப்பர் பெருமானால் பாடப்பெற்ற திருத்தலையாலங்காடு ஆலயத் திருப்பணியிலும் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கும் அரிய பேற்றினை நமது சபை பெற்றது. ஆலய மடப்பள்ளி,திருக்குளம்,நந்தவனம் ஆகியவை திருத்தம் பெறவும், சுப்பிரமணியர்,துர்க்கை ஆகிய நூதன விக்ரகங்கள் அமைக்கவும், சபாபதிக்கு ந்ருத்த சபை அமைக்கவும்,சபை அன்பர்கள் உதவி புரிந்தனர். தவிரவும் நண்பர்கள் மூலமாக யாகசாலை வஸ்திரங்களுக்கும், கட்டுமானப் பொருளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 திருவாவடுதுறை ஆதீன கர்த்தரும், கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தும்,அதனை இடிக்க ஆட்களும் தந்தருளியதோடு, தாமே மூன்றாம் கால பூஜைக்கு எழுந்தருளினார்கள். நாம் விண்ணப்பித்ததற்கு செவி சாய்த்து, ஆதீன சார்பில் ஆடல் வல்லானின்  திருவுருவத்தைக் கோயிலுக்கு அமைத்துத் தருவதாகக் கருணை பாலித்தார்கள். ஆண்டுதோறும் செய்யப்படும் ஆறு அபிஷேகங்களையும் ஆதீன உபயமாகச் செய்து தருவதாக அருளியுள்ளார்கள். அவர்களது கருணைத்திறம் அளவிட ற்கு அரியது . கும்பாபிஷேக வைபவம் 8.7.2012 ஞாயிறன்று மிகச் சிறப்பாக நடந்தது.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியாக ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பெற்றது.கும்பாபீஷேகத்திற்குப் பிறகு ஆசார்யஉற்சவமும் , மாலையில் திருக்கல்யாணமும் ,திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. இவற்றை ஏற்ற இறைவனும் மழை பொழிந்து ஊரையும் உள்ளத்தையும் குளிர்வித்தான்.

இறை பணிசெய்வதோடு இறைவனுக்குப் பணி செய்பவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவுடன் நமது சபை , கிராமக் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வருகிறது. கடந்த 9.7.2012 திங்களன்று திருக்கடவூருக்கு அருகில் உள்ள ஆக்கூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வயம்புநாத ஸ்வாமி ஆலயத்தில் , ஹோமம், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை நிகழ்த்தப்பெற்று, ஆக்கூர், செம்பனார்கோயில், மா(மா)குடி, திருப்பறியலூர்,திருவிடைக்கழி ஆகிய தலங்களின் சிவாசார்யர்கள் கௌரவிக்கப்பெற்றனர்.
 ஒவ்வொரு சிவாசார்யதம்பதிக்கும் பாத பூஜை, அர்ச்சனை, ஆகியவை செய்யப்பெற்று,புது வஸ்திரங்களும்,சௌபாக்ய திரவியங்களும் தலா ரூ 2000 மும் அளிக்கப்பெற்றன. திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்  கருணையுடன் வழங்கிய வஸ்திரமும் உதவித்தொகையும் ஒரு சிவாசார்ய தம்பதிக்கு வழங்கப்பெற்றது. ஆதீனத்திலிருந்து கட்டளைத் தம்பிரான் ஸ்வாமிகள் வந்திருந்து நிகழ்ச்சியைச்  சிறப்பித்தார்கள்.  அனைவருக்கும் அன்னம் பாலிப்பு செய்விக்கப் பெற்ற பின்னர் விழா  இனிதே நிறைவேறியது. " முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்ற சுந்தரர் வாக்கை நமக்கு உணர்வித்த இறையருளுக்கு என்ன கைம்மாறு செய்ய  முடியும்?

Saturday, June 16, 2012

யாருக்கு வெற்றி ?


ஆனித் திருமஞ்சனம் பற்றிய ஒரு வலைப்பதிவைக் காண நேரிட்டது. அதைப் படித்த பெண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வலைப்பதிவாளர் பதில் தந்தாரா என்று தெரியவில்லை. அதாவது, கேள்வி இதுதான். இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய போது இடது திருவடியை  உயரத் தூக்கி ஆடினான். பெண்என்பதால் அவ்வாறு ஆடக் கூடாது என்று , காளிதேவி வாளா இருந்துவிட்டதை எப்படி அவள் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ள முடியும் என்பதே அவரது வினா. சரிபாதி பெண்மைக்குத் தந்த ஒரே தெய்வம் சிவபெருமான் என்பதை இப் பெண்மணி மறந்துவிட்டார் போலும்! எமனைக் காலால் உதைத்ததை சக்தி உபாசகர்கள் என்ன  சொல்வார்கள் தெரியுமா? உதைத்தது இடது கால் என்பதால் அன்னைக்கே அந்தப் புகழ் உரியது என்பார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும்போதும் தூக்கிய திருவடி அன்னை பாகத்தைச் சேர்ந்தது அல்லவா என்பார்கள். அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மதுரையில் சோமசுந்தரப் பெருமான் செய்திருந்த போதிலும், அக்கோவிலை மீனாக்ஷி கோவில் என்றல்லவா மக்கள் சொல்கிறார்கள்! இதில் தெய்வ தம்பதிகளிடையில் வெற்றி - தோல்வி என்பதேது?

நாம் தாழ்ந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. உண்மையில் அவர்களே உயர்ந்துவிட்டவர்கள் என்பதை இன்னமும் உணரவில்லை. ஒரு வீட்டை எடுத்துக்கொண்டால், க்ரஹிணி என்று பெண்ணே எஜமானியாகச்  சித்தரிக்கப்படுகிறாள். ஒரு வேதியருக்கு அக்னி ஹோத்திரம் செய்யும் உரிமை அவரது மனைவி கூட இருக்கும் வரையில்தான்.

காளி இறைவனுக்குப் போட்டியாக ஆடியது இருக்கட்டும். மனோன்மணியாகிய பராசக்தி, அப்பெருமானது பாகம் பிரியாத நாயகி தானே . அவள் ஆடியதாகச் சொல்லப்படுவதில்லை. "உமையவள் காண ஆடிய அழகா" என்றே திருமுறை பகர்கிறது. கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோவிலில், நடராஜப் பெருமான் ஆடும்போது,அம்பிகை தாளம் போட்டுக் கொண்டு, தன் நாயகனின் ஜதி பிழையாத ஆடலைக் கண்டு மகிழ்வதைத் தரிசிக்கலாம்.

கணவன் ஈட்டும் புண்ணியத்தில் ஒரு பாதி மனைவியைச் சேரும் ; ஆனால் அவனது பாவத்தில் எள்ளளவும் மனைவியைச் சேராது. அதே நேரத்தில், மனைவியின் புண்ணியத்தில் ஒரு சிறிதும் கணவனை அடைவதில்லை. அவளது பாவத்தில் ஒரு பங்கு மட்டும் கணவனை அடைவதாகப் பெரியோர்கள் கூறுவர். பூஜை, ஜபம் ஆகியவற்றை செய்யாமலே, கணவன் செய்யும் பூஜைக்கு உதவினாலே போதும். இவளுக்குப் பூஜை செய்த பலன் கிடைத்திவிடுகிறது. "உன்னடியார் தாள் பணிவோம்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்" என்ற திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கற்பாலான. இப்படிச் சொல்வதால் மனைவிக்குத் தெய்வ பக்தியே வேண்டாம் என்று பொருள் கொள்ளக் கூடாது. பதி- பக்தியின் மேன்மையைச் சொல்லி அப்படிப்பட்ட பெண் "பெய்" என்றால் மழை பெய்யும் என்றார் திருவள்ளுவரும். உனக்குப் பணி செய்யும் அடியவர்களே எங்கள் கணவராகும் வரத்தைக்கொடுப்பாயாக என்று பெண்கள் மார்கழி நோன்பு நோற்பதைத் திருவெம்பாவையில், " உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம் ;ஆங்கு அவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்" என்று மாணிக்க வாசகப் பெருமான் அருளியுள்ளதைக் காண்க. கல்யாண நலங்குகளில் தம்பதிகள் தேங்காயை ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிடுங்குவது போல அமைத்திருந்தாலும் , அப்படிப் பிடுங்கி, வெற்றி-தோல்வி என்று ஆகி விடாமல் விட்டுக் கொடுக்கும் மனப்  பான்மையை உண்டாக்குவதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.(சுற்றிலும் இருந்து வேடிக்கை பார்பவர்கள், "விடாதே, கையிலிருந்து பிடுங்கி விடு" என்று சொல்லாமல் இருந்தால் தம்பதிகளே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தொடங்கி விடுவர்.)  

சக்தியின் அம்சமான காளி தேவி , பரமேச்வரனை வழிபட்ட தலங்களுள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள காளி என்ற தலமும் ஒன்று. அவ்வாறு அவள் செய்த பூஜையின் பலனைப் பார்த்தீர்களா? ஊரின் பெயரே அவள் பெயரில் தான் இருக்கிறது. அதேபோல், பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள அம்பர்  மாகாளம் என்ற தலத்தில், அம்பராசுரனை வதம் செய்த காளி, சிவபூஜை  செய்ததால், ஊரின் பெயர் மாகாளம் ஆனதோடு, சுவாமியின் பெயரும் மாகாள நாதர் ஆயிற்று. இவ்வூரைப் பாடிய ஞானசம்பந்தக் குழந்தை, காளி வழிபட்டதைச் சொல்லும்போது, "நம் காளி " என்று மிக்க உரிமையோடு அம்பிகையைக் குறிக்கிறார்.

எனவே, ஆலங்காட்டில் காளியை வென்ற வெற்றிக்களிப்பில் இறைவன் ஆடவில்லை. அப்படி ஆடியிருந்தால் , காளி தோற்றதாகக் கொள்ளலாம். காளிக்கு அருள் அல்லவா செய்தான்! இப்படிச் சொல்கிறது திருவாசகம்:

" .. பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய
திருமுகத்து , அழகு உறு சிறுநகை இறைவன் ..."

இப்படியாகக் காளியும் , கயிலைமலை வல்லியும் மனமகிழத் தாண்டவம் நடைபெறும்போது, யார் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும்? தேவி மனமகிழ ஆடல் காட்டியதை அவனது திருவிளையாட்டாகக் கொண்டால் யாருக்கு வெற்றி என்ற வினாவே எழாது.  

Thursday, June 7, 2012

உதவிகள் பலவிதம்


உதவிகள் பலவகைப்படும். அவற்றுள் அறம் சார்ந்த உதவிகள் உயர்ந்தவை. ஒரு மரம் கூட நமக்கு நிழல் தந்து உதவும்போது, நாமும் அவ்வகையில் ஏதாவது செய்ய வேண்டாமா? இந்தக் காலத்தில் பிச்சைக் காரனுக்கு காசு போடுவதும் உதவி எனப்படுகிறது. எத்தனையோ பிச்சைக் காரர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒரு வேளை இதை எதிர்பார்த்துத்தான் ,"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்றார்களோ?

இதில் அரசாங்கமும் ஒன்றும் சளைத்ததாகத் தெரியவில்லை. ஊக்குவித்தல் என்ற பெயரில் லக்ஷக் கணக்கிலும், ஏன், கோடிக் கணக்கிலும் வரிப்பணத்தை செலவழிக்கிறார்கள். மக்கள் மத்தியில் பெயர் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அத்திரையைச் சேர்ந்த எத்தனை பேர் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? கோடீஸ்வரர்களாகத் திகழும் விளையாட்டு வீரர்களும் அகாடமி ,ஹோட்டல் என்று ஏற்படுத்தி வருமானத்தைப் பன் மடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பெறும் பரிசுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேறு!! விளம்பரத்தின் மூலமாக மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் எத்தனை பேர் பிறருக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்?

அண்மையில் ஒரு விளையாட்டு வீரர் உலக அளவில் வெற்றி பெற்றபோது, பாராட்டுவதோடு நிற்காமல் , இதற்கு முன் நான் அவருக்கு இவ்வளவு லட்சங்கள் கொடுத்தேன் என்றார் ஒருவர் . இதைக் கேட்ட இன்னொருவர் நான் அதற்கும் மேலே தருகிறேன் என்று அவருக்கு சில கோடிகள் கொடுத்தார். இப்படிப் பரிசுமழை பெற்றவர் ஒன்றும் வசதி இல்லாதவர்  இல்லை. வரிப்பணம் வீணாகப் போகிறதே என்று ஒரு வாசகர் தமிழ் நாளிதழில் எழுதியிருந்தார். விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அதற்காக இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளித் தர வேண்டுமென்பதில்லை.

ஆலய சிப்பந்திகளின் அவல நிலையைப் பற்றிப் பலமுறை குரல் கொடுத்து வருகிறோம். அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும் செவி மடுப்பதாகத் தெரியவில்லை. வசதி உள்ள இடங்களுக்கே உதவியும் ஊக்கமும் போய்ச்  சேருகின்றன. சமூக சேவை என்பது கல்விக்கும் உடல் நலத்துக்கும் மட்டுமே செய்யப்பட வேண்டியதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையில் தத்தளிக்கும் மற்றவர்களைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்களோ தெரியவில்லை. சேவை வரி, கல்வி வரி ஆகியவை மூலமாகவும் நிதி திரட்டுகிறார்கள். ஆனால், உண்டியல்கள் , பிற வருமானங்கள் மூலம் கோயில்களுக்கு வரும் நிதியைக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கணிசமாகக் கொடுக்கப்படுவதுபோல் ஆலய சிப்பந்திகளுக்கும் ஏன் கொடுக்க முன் வருவதில்லை? அவர்களை வருமான அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்களாக அறிவிக்கலாமே.

நிறைவாக ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். ஒரு நடனக் கலைஞர் பிரபலம் அடைந்துவிட்டால், தான் இன்று ஆடுவது, எல்லா உலகங்களையும் ஆட்டுவிக்கும் நடராஜப் பெருமானின் அருள் என்பதை உணர்ந்து, அவனது நிருத்த சபைகளைத் திருப்பணி செய்ய முன் வர வேண்டும். ஒரு சதுரங்கவீரர்  தான் பெறும் பல கோடிகளின் சிறு பகுதியையாவது, மன்னார்குடிக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான பூவனூர் சதுரங்க வல்லபேச் வரர்   கோயிலுக்கு அர்ப்பணிக்க முன் வர வேண்டும்.

பழந்துணிகளைக் காப்பகத்திற்குத் தந்து விட்டு, பிரமாதமாக சமூக சேவை செய்து விட்டதாகச் சொல்லிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் ஆணிவேருக்குச் செய்யப்படும் உதவி பிற்காலத்தில் மரமாக வளர்ந்து பலன் அளிக்கும். சிவதர்மம் செய்யும் போது, சிவ பெருமான் மட்டுமல்லாமல் உதவியைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைவர். செய்து பார்த்தால் தானே அதன் பலனும் பெருமையும் தெரிய வரும்! பிறருக்கு நிழல் தந்து உதவும் ஆல மரத்தையே தேர்ந்தெடுத்து அதன்கீழ் வேதப் பொருள்களை உரைத்த தக்ஷிணா மூர்த்தி, தர்மத்தின் உறைவிடம் அல்லவா; நம்மையும் அறம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா?

" .... அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்." -- சம்பந்தர் தேவாரம்.