Thursday, February 25, 2010

பன்னகாபரணன்


ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பன்னகாபரணன் என்று ஒரு நாமம் உண்டு.திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள திருச்சாட்டியக்குடி என்ற ஊரில் மூலவருக்கு இந்தப் பெயர்தான் வழங்கப்படுகிறது. பல ஊர்களில் மூலவருக்கு வெள்ளியில் நாகாபரணம் சார்த்திப் பார்க்கிறோம். பன்னகம் என்றால் நாகம் அல்லது பாம்பு என்று அர்த்தம். ஆதிசேஷனால் சிவராத்திரி பூஜை செய்யப்படும் திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில் மூலவர் மீது பாம்பு சட்டை உரித்துவிட்டுச் சென்றதை சில வருஷங்கள் முன்பு பத்திரிக்கைகளில் பார்த்தோம். திருநாகேஸ்வரத்தில் நாகராஜா (ராகு பகவான்) சன்னதியிலும் இரவில் பாம்பு விட்டுச்சென்ற சட்டையை மறுநாள் காலை அநேகர் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் சென்ற கிரகண தினத்தன்று தேப்பெருமாள் நல்லூர் என்ற ஊரில் நடைபெற்ற அதிசயம் யாரும் கேள்விப் படாததொன்று

கும்பகோணத்திற்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்தின் அருகில் உள்ளது தேப்பெருமாள் நல்லூர் என்ற கிராமம். தேப்பெருமாள் நல்லூர் சிவன் என்ற மகா சிவபக்தரைப் பற்றி காஞ்சிப் பெரியவர்கள் மிகவும் புகழ்ந்துள்ளார்கள். காரணம் தான் ஒருவராகவே கையில் செம்பு ஏந்தியவராகத் திரவியங்களை
சேகரித்து , கும்பகோணத்தில் மரங்கள் முளைத்துக் கிடந்த ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோபுரத்தைத் திருப்பணி செய்ததோடு பல சிவ க்ஷேத்திரங்களில் அன்ன தானம் ஏராளமாக செய்ததால் எல்லோரும் அவரை அன்னதான சிவன் என்றே அழைத்தனர். அப்படிப்பட்ட மகானைத் தந்தது தேப்பெருமாநல்லூர்.

இந்த ஊர் சிவாலயத்தில் சென்ற கிரகணத்தன்று ஒரு நல்ல பாம்பு வில்வ இலைகளை சிவ சன்னதிக்குள் நுழைந்து சுவாமியின் சிரசில் வைப்பதை அர்ச்சகர் பார்த்துவிட்டு, போட்டோ எடுப்பவரை அழைத்துக் காட்டியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்களைத்தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.


முதல் படத்தில் பிராகாரத்தில் உள்ள வில்வ மரத்தில் பாம்பு வில்வ இலையை எடுப்பதைக் காண முடிகிறது.அடுத்ததாக, அப்பாம்பு,கர்ப்பக்ருகத்தின் கோமுகி வழியாக சுவாமி சன்னதிக்குள் நுழைவதைத் தெளிவாகக் காணலாம். அடுத்த படங்களில் அது மூலவருக்கு முன் வந்துவிட்டதையும்,அதன் வாயில் வில்வ தளம் இருப்பதையும் கவனிக்கலாம். கடைசியாக , சுவாமியின் பாணத்தைச் சுற்றி சிரத்தை அடைந்து வில்வ அர்ப்பணம் செய்துவிட்டுப் படம் எடுத்து நிற்பதையும் பார்க்கும் போது,பரவசம் அடைகிறோம்.
புகைப்படத்தைப்பார்த்தும் நம்பாதவர்கள் இருக்கிறார்கள்.பல ஊர்களில் சுவாமியின் மீது பாம்பு சுற்றிக் கொள்வதையும் சட்டையை விட்டுவிட்டுப் போவதையும் எவ்வளவோ பேர் பார்த்திருந்தும்,போட்டோ எடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். திருக்குரக்குக்கா(வல் ) என்ற பாடல் பெற்ற ஸ்தலம் மாயூரம் அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு குரங்கு (ஊர்ப் பெயருக்கு ஏற்ற மாதிரி) கருவறைக்குள் சென்று இலைகளாலும் மலர்களாலும் சுவாமியை அர்ச்சிக்கிறது. இதைப் படம் எடுத்தாலும் நம்பமாட்டேன் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். பாம்பு,குரங்கு இவற்றிற்கு ஆறறிவு ஏது என்பார்கள். அவை சாதாரண பாம்போ குரங்கோ அல்ல. யாரோ சாப விமோசனத்திற்காக இந்த உருவங்களில் வந்திருக்கக் கூடும். நமது அறிவுக்குத் தெரியாதவற்றை மறுப்பது அறிவீனம்.

யக்ஷர்,கின்னரர்,யமன்,வருணன்,அக்னி,வாயு,சூர்யன்,வசுக்கள்,தேவர்கள்,மனிதர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் ,வானரமும்,நாகமும் அயர்வே இல்லாமல் உன்னை பூஜித்து,வரங்கள் எல்லாம் பெறுவதைக் கண்டு,அடியேனும் உன் திருவடிகளை அடைந்தேன் என்று திருப்புன்கூர் தேவாரப் பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடுவதைப்போல், நாமும் நாகம் செய்யும் பூஜையைப் பார்த்தாவது, ஈச்வரனை வில்வ தளங்களால் பூஜிப்போமாக.

Tuesday, February 9, 2010

கயிலையில் மகாசிவராத்திரி


கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறார் நக்கீரர். அதில் ஒரு பாட்டு கயிலையைப் பற்றியும் அடுத்த பாட்டு காளத்தியைப்பற்றியும் மாறி மாறி வரும். கயிலைக்கு நிகரான ஸ்தலம் என்பதால் தக்ஷிண கைலாசம் எனப்படும் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியை தரிசிக்கப் பல்லாயிரம் ஜனங்கள் இங்கு வருகிறார்கள்.


சிலந்தி,பாம்பு,யானை,கண்ணப்பர் ஆகியோரது பூஜையை ஏற்றுக் கொண்டுள்ள காளத்திநாதனைமூவரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள். சாந்த்ர மாதக் கணக்கில் இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 12 தேதி மகாசிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.(தமிழ் நாட்டில் சௌரமாதக் கணக்கு அனுசரிப்பதால் மார்ச் 13 அன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது).


29 ஆண்டுகளாக தேவகோட்டை ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாசிவராத்திரியை தரிசித்து வந்தார். அப்போது ஆலய குருக்களாக இருந்தவருக்கு 20 வருஷங்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட செட்டியார்,அந்த ஆண்டு மகாசிவராத்திரி ஆறு கால பூஜை செலவுகளையும் தானே ஏற்று விரதம் இருந்து குருக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை வீண் போக வில்லை.பரமேச்வரனுடைய கருணையால் பிள்ளைக் குழந்தை பிறந்தது.


செட்டியார் மகா சிவபக்தர் ஆதலால் காளத்தி நாதனின் கோயிலைத் திருப்பணி செய்யத் தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரமாண்டமான அத்திருப்பணி ஒன்பது லட்சத்தைத் தாண்டியதாம். 1912 ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தி மகிழ்ந்தார் செட்டியார். அதனால் மக்கள் அவரைத் திருப்பணிச் செட்டியார் என்று அழைத்தார்கள்.


தனது முப்பதாவது ஆண்டு மகாசிவராத்திரியைக் கொண்டாட 1942 ல் அங்கு சென்ற செட்டியார் காலம் தோறும் தன் மனைவியுடன் சுவாமியின் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்துவிட்டு ஆறாவது காலத்தின் இறுதியில் அருகே நின்ற மனைவியிடம் தாலியைக் கழற்றி ஸ்ரீ ஞானப்ப்ரசூனாம்பிகையின் கழுத்தில் அணிவிக்கும்படிக் குருக்கள் கையில் கொடுக்கச் சொன்னார். அம்பாளுக்கு அது சார்த்தப் பட்டுக் கற்பூர தீபம் நடந்தது. தனது இடத்தை வந்து அடைந்ததும் சிவசிவ என்று சொல்லிக்கொண்டே விபூதி இட்டுக் கொண்டவுடன் மனைவி கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் ஒருமுறை சிவசிவ என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடினார். அடுத்த நிமிடம் அவரது ஜீவன் ஸ்ரீ காளத்தி நாதனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. இன்றும் கோயில் வாயிலில் சிலாரூபமாகத் திருப்பணிச் செட்டியார் கைகளைக் கூப்பியபடிக் காட்சி அளிக்கிறார்.


தன் நினைவாகவே இருக்கும் பக்தர்களைக் கடைசி வரையிலும் கூட இருந்து என்றும் காப்பாற்றும் பரமேச்வரன் சர்வ மங்களங்களையும் அளிக்க வேண்டும்படி ஸ்ரீ மகாசிவராத்திரி தினத்தில் பிரார்த்திப்போமாக.

Monday, January 25, 2010

தெய்வ சோதனை

நமக்கு அடிக்கடி வரும் சந்தேகங்களில் ஒன்று , பக்தர்களை சுவாமி ஏன் சோதிககிறார் என்பது. இதற்கு பதில் கேள்வியிலேயே இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். உண்மையான பக்தர்களையே சுவாமி சோதிக்கும் போது , எண்ணியது எல்லாம் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்த்து சுவாமியை வழிபடும் நமக்கெல்லாம் ஏன் சோதனை வரக்கூடாது?


திருமுருகன் பூண்டி என்ற சிவஸ்தலம் திருப்பூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிவ பூஜை செய்ததால் மூலவருக்கு முருக நாதர் என்று பெயர். தன்னுடைய ஆப்த நண்பரான சேரமான் பெருமாள் நாயனார் தந்த காணிக்கைகளை எடுத்துக்கொண்டு ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் இந்த ஊர் வழியாகப் போகும்போது நடந்த சம்பவம், நமக்கு உணர்த்துவதற்காக நடந்ததாகக் கொள்ளவேண்டும். நம்முடைய சொத்து சுகம் எல்லாம் சுவாமி தந்தது என்றா நினைக்கிறோம்? நாம் சம்பாதித்தது என்று தானே நினைக்கிறோம்? சுந்தரர் மூலம் நமக்காகவே ஒரு பாடம் உணர்த்தப்படுகிறது. சிவபூதங்கள் வேடர்கள் உருவத்தில் போய் சுந்தரரை மிரட்டி அவரிடம் இருந்த பொருள்களைப் பறித்துக்கொண்டு போய் விடுகின்றன. சுந்தரருக்கு வருத்தம் தாங்கமுடியவில்லை. நேராகத் திருமுருகன்பூண்டிக் கோவிலுக்குப் போய் சுவாமி மீது தேவாரப் பதிகம் பாடுகிறார்.(சுவாமியும் இதைக் கேட்க வேண்டும் என்ற ஆசையால் தானே இப்படி நாடகம் நடத்தினார்!) வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று நிந்திப் பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இப்பொழுது சுவாமி கொடுத்த பொருள் என்று சொல்வதுதானே நியாயம்!

நம்மிடம் உள்ள ஐச்வர்யம் மற்றவர்களுக்கு உதவி செய்யவே ஈச்வரனால் கொடுக்கப் பட்டது என்பதை அறிய வேண்டும். அப்படிக் கொடுக்காத உலோபிகளுக்குக் கடுமையான நரகங்களை சுவாமி வைத்துள்ளதாக அப்பர் சுவாமிகள் பாடியிருக்கிறார்.

இன்னொரு விஷயம். தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் தங்களை கேட்டுக் கொள்ளலாம். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காமல் கண்ணீர் மல்க என்றைக்கு சுவாமி சன்னதியில் நிற்கிறோம்? சோதனை வந்தால் சுவாமியிடம் கோபிக்க மட்டும் தவறுவதில்லை. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்? சுவாமி கண் திறக்கவில்லையே என்று அலுத்துக் கொள்பவர்கள் பலர். எது நடந்தாலும் நடக்கட்டும். ஈச்வர சங்கல்பப் படியே நடக்கும் என்று திடமாக இருப்பவர்கள் மிகச் சிலரே. அவர்கள் சோதனைகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். அவர்கள் சோதனைகளை வென்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படிப் பட்ட பக்தி நமக்கு உண்டாகும்படி ஸ்ரீ பரமேச்வரன் அருள வேண்டும்.

Saturday, December 5, 2009

சண்டிகேஸ்வரர்


நம்மில் பலருக்குக் கோயில்களில் பல மூர்த்திகளைப் பற்றித் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் காட்டுவதில்லை. அம்மூர்த்திகளுள் சண்டிகேஸ்வரரும் ஒருவர்.அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவரைப்பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அவரிடம் கையைத் தட்டிவிட்டு வர மட்டும் நமக்குத் தெரியும். காரணம் தெரியாமலே கையைத் தட்டுகிறோம். பஞ்ச மூர்த்தி புறப்பாட்டில் சண்டிகேஸ்வரரும் ஒரு மூர்த்தியாக சுவாமியுடன் தீர்த்தவாரிக்கு வருகிறார். அவருக்கு அந்தப்பதம் எப்படிக் கிடைத்தது என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?

திருப்பனந்தாளுக்குப் பக்கத்தில் திருச் சேய்ஞலூர் என்ற ஊர் இருக்கிறது. இங்கு முருகன் சிவபூஜை செய்ததாக ஸ்காந்த புராணம் சொல்கிறது. இவ்வூரில் காச்யப கோத்திரத்தில் வேதியர் வம்சத்தில் எச்சதத்தன் என்பவனுக்கு உலகம் உய்யும் பொருட்டு விசாரசர்மன் என்ற குழந்தை பிறந்தது. ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன் வேதம் முறையாகப் பயின்று வரும் நாளில் ஊரிலுள்ள பசு மாடுகளை மண்ணி ஆற்றங்கரை அருகில் மேய்த்து ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து அதை பசும் பாலால் அபிஷேகம் செய்து வந்தான் அச்சிறுவன் .ஊரார் புகார் செய்ததால் தந்தை எச்சதத்தன் மரத்தின் பின் நின்று இதைப் பார்த்துக் கோபம் கொண்டு சிவபூஜைக்காக அங்கு வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தான். சிவத்தியானம் நீங்கிக் கண் விழித்த பாலகன், சிவாபராதம் செய்தது தந்தை என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர் என்று தீர்மானித்து அருகில் இருந்த மாடு மேய்க்கும் கோலை கையில் எடுத்தவுடன் அது மழுவாக மாற , அதைக் கொண்டு தகப்பனாரின் உதைத்த காலை வெட்டி வீழ்த்தினார். அடுத்த கணமே சிவபூஜையைத் தொடர ஆரம்பித்தார்.
பால் உகந்த நாதனாகிய பரமேச்வரன் உமா தேவியோடு வ்ருஷப வாகனத்தில் அக்குழந்தைக்குமுன் காட்சிஅளித்தார். ரிஷிகள் வேத கோஷம் செய்யவும் பூத கணங்கள் அருகில் நிற்கவும் பரம கருணையுடன் வெளிப் பட்ட புண்ணிய மூர்த்தியைக் கண்டு ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற அப்பாலகன் சுவாமியின் பாத மலர்களை நமஸ்கரித்தான்.

அக்குழந்தையை எடுத்த ஈச்வரன் ,"என்னிடம் வைத்த பக்தியால் தகப்பனாரின் காலை வெட்டின உனக்கு அடுத்த தந்தை இனி நானே " என்று சொல்லி அப்பாலனைத் தழுவி கருணையோடு தடவி உச்சி மோந்து ,
"உனக்கு சண்டேசப் பதம் தந்தோம். இனி நாம் உண்பதும் உடுப்பதும் சூடுவதும் உன்னிடமே வந்து சேரும் " என்று சொல்லித் தனது சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக்குழந்தைக்குச் சூட்டினார்.

எனவேதான் கோயில்களில் சிவ நிர்மால்யம் வரும் கோமுகத்தின் அருகில் (வடக்குப் பிராகாரத்தில்) தெற்கு நோக்கியவாறு சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கிறது. இவரை தரிசித்தால்தான் சிவ தரிசனம் செய்த பலன் கிடைக்கும். சதா சிவத்யானத்தில் இருக்கும் இவருக்கு அஞ்சலி செய்ய கையை லேசாகத் தட்டி அவரிடம் சிவாலய தரிசன பலனைப் பெறுகிறோம்.

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீச்வரர் கோவிலில் வடக்குப் பிராகார சுவற்றில் சுவாமியும் அம்பாளும் அமர்ந்த கோலத்தில் கொன்றை மாலையை ஒப்பற்ற பக்தனுக்குச் சூட்டும் பெரிய சிற்பத்தைக் கண்டு மகிழ ஒரு தடவையாவது அங்கு நேரில் செல்ல வேண்டாமா?

Wednesday, November 18, 2009

திருப்புன்கூரில் சனி மகா பிரதோஷம்





தற்காலத்தில் ஜனங்களிடம் சிவ பக்தி அதிகமாகிறது என்பதை பிரதோஷங்களில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறவர்கள் ஒத்துக்கொள்வார்கள். உத்சவ காலங்களிலும் இதே போல் கூட்டம் தான்,அண்மையில் துலா உத்சவத்தின் போது மயிலம்மன் நடராஜர் சன்னதியில் ஆடியதை மயிலாடுதுறையில் பக்தர் கூட்டம் வழிபடுவதை இங்கு காண்கிறீர்கள்.

எத்தனையோ கவலைகளும் பிரச்சினைகளும் நிம்மதி இன்மையும் அதிகமாகிக் கொண்டு இருப்பதாலோ என்னவோ ஒவ்வொரு சிவாலயத்திலும் கூட்டம் அதிகமாகிக் கொண்டு போகிறது. சனி மகா பிரதோஷ மகிமையைத் தெரிந்துகொண்டவர்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் எல்லோருக்கும் சோம சூத்திர பிரதட்சிணம் முதலிய விதிமுறைகள் ஒருவேளை தெரிந்திருக்காவிட்டாலும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பதே சிவானுக்ரகம் தான். பசும் பாலுக்குப் பதிலாக பாக்கெட் பால் கொடுப்பதை நிறுத்தினால் விசேஷம்.

நந்திகேச்வரருக்கு விசேஷமாக விளங்கும் ஆலயங்களில் பிரதோஷ தரிசனம் செய்வது இன்னமும் ஆனந்தம் அளிக்கிறது.வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகிலுள்ள திருப்புன்கூர் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலுக்கு சனி மகா பிரதோஷம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.ராஜ கோபுர வாயிலுக்கு நேராக இல்லாமல் சற்று விலகிய நிலையில் (நந்தனாருக்காக)நந்தி பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறார். ஸ்ரீ சிவலோகநாத சுவாமி ஸ்வயம்பு மூர்த்தி.மூவராலும் தேவாரம் பாடப்பெற்றவர். மழை பெய்வதற்காகவும் வெள்ளம் நிற்பதற்கும் கலிக்காம நாயனாரிடம் நிலம் பெற்ற மூர்த்தி. அம்பிகை சௌந்தர நாயகி என்ற பெயரில் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறாள்.



ஸ்தல விருக்ஷம் புங்க மரம் வெளி பிராகாரத்தில் இருக்கிறது. மேடையில் பஞ்ச லிங்கங்கள் இருப்பதைக் காணலாம்.



சுமார் நான்கு மணி அளவில் நந்திக்கு அபிஷேகம் ஆரம்பிக்கிறது. சாரத்தில் நின்றுகொண்டு சிவாசாரியார் அபிஷேகம் செய்கிறார். குடம் குடமாக பால், தயிர், சந்தனம் முதலிய திரவியங்கள் அபிஷேகம் செய்வதைக் காண ஆயிரம் கண் வேண்டும். தீபாராதனைக்குப் பிறகு மலர் மாலைகளால் அற்புதமாக அலங்காரம் செய்கிறார்கள். சுமார் பத்து நபர்கள் கீழே நின்று கொண்டு திரவியங்களை எடுத்துக்கொடுத்தும் தரையை சுத்தப்படுத்தியும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தும் உதவுகிறார்கள். சிவ பஞ்சாக்ஷரம் எழுத தாள்களை விநியோகம் செய்கிறார்கள்.பள்ளிக் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அதில் பஞ்சாக்ஷரம் எழுதிப் பூர்த்தி செய்த தாள்களைதிருப்பிக் கொடுக்கிறார்கள். ஆறரை மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

பிரதோஷ தரிசனம் ஆரம்பித்ததிலிருந்து பலத்த மழை பெய்தது. பக்தர்களும் அக்கருணை மழையில் நனைந்தனர். ஆயுட்காலத்தில் ஒரு தடவையாவது சிவலோகனாதனின் பிரதோஷ தரிசனத்தை சிவ பக்தர்கள் அவசியம் செய்ய வேண்டும்.












Monday, October 19, 2009

தீபாவளி சிந்தனை

தீபாவளி என்றவுடனேயே காசியும் கங்கையும் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் காசிக்குப் போய்விட்டு வந்தவர்கள் சில பழங்களையும் காய் கறிகளையும் மீதி உள்ள தங்கள் ஆயுள் காலத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்று வைராக்யமாக இருந்தார்கள். சிலர் தங்களிடம் உள்ள கெட்ட குணங்களை விட்டு விடுவது என்று தீர்மானிப்பார்கள். தீர்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும். கோபம் முதலிய கெட்ட குணங்கள் நம்மை விட்டுப் போவது அவ்வளவு சுலபமா என்ன ? துர்வாச மகரிஷி என்றவுடன் அவரது கோபமும் சாபமும் நினைவுக்கு வரும். ரிஷிக்கே தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. திருக்களர் என்ற க்ஷேத்ரத்தை அடைந்து தபஸ் பண்ணினார். இந்த ஊர் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் இருக்கிறது. சுவாமிக்குப் பெயர் பாரிஜாத வநேச்வரர் என்பதாகும். ஸ்ரீ பரமேச்வரன் ரிஷிக்கு தரிசனம் அளித்து ஆனந்த தாண்டவம் காட்டி அவரை ஆனந்த மயமாக்கிணன் என்பது அந்த ஊர் புராணம்.

இப்பொழுது பார்த்தால் கெட்ட குணங்கள் இருப்பதாக யாரும் ஒத்துக்கொள்வதில்லை. நாம் செய்வது எல்லாம் சரி என்ற எண்ணம் (ஆணவம் என்று கூட சொல்லலாம்) முட்டுக்கட்டையாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது ஒருக்கால் இவர்கள் காசிக்குப் போய்விட்டு வந்தாலும் எதையும் த்யாகம் செய்யப் போவதில்லை. இவர்கள் வரும் தலைமுறைக்கும் நல்ல வழியைக் காட்டாமல் போகிறார்களே என்பதைப் பார்க்கும்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்தக் காலப் பெரியவர்கள் காயையோ பழத்தையோ த்யாகம் செய்வதை விட தாங்கள் அனுதினமும் ச்ரத்தையுடன் பார்க்கும் டிவி சீரியல்கள் பலவற்றில் சிலவற்றையாவது பார்க்காமல் இருந்தால் பெரிய புண்ணியமாகப் போகும். பொழுது போகவில்லை என்பதால் கண்டவற்றையெல்லாம் பார்க்காமல் ஆத்மா லாபத்திற்கு வழி தேடவேண்டும். குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்து காட்ட வேண்டும்.

தீபாவளி செய்தி என்று வருஷா வருஷம் நரகாசுரன் கதையை மட்டும் சொல்லி விட்டுப் பக்ஷணம் சாப்பிட்டுவிட்டு டிவிநிகழ்ச்சிகள் ஒன்று விடாமல் பார்த்துக்கொண்டு தீபாவளியை கொண்டாடுவதைத்தானே நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! பண்டிகை என்பது நம்மை மேலும் புனிதப் படுத்துவதற்காக ஏற்பட்டது என்பதை மறந்து உல்லாசமாகப் பொழுது போக்குவதாக மாறி விடக்கூடாது. இந்த எண்ணம் எல்லோருடைய மனதிலும் தோன்றுமாறு ஸ்ரீ பரமேச்வரன் அனுக்ரகம் செய்ய வேண்டும்.

Tuesday, September 22, 2009

சிவ தருமம்

தர்மங்களில் உயர்ந்தது சிவ தர்மம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். செய்யும் செயல்கள் எல்லாம் ஒ சம்புவே , உனக்குச் செய்யும் ஆராதனை என்று கொள்வாய் என ஆதி சங்கரரும் பிரார்த்திக்கிறார். சங்கீதமும் ஈச்வர உபாசனை ஆகிறது என்று ஸ்ரீ தியாகராஜசுவாமிகளும் பாடுகிறார். ராஜாக்கள் சிவ தர்மம் தொடர்ந்து நடப்பதற்காக நிலங்களை அளித்தார்கள். ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்ட கோவிந்ததீக்ஷிதர் ,சிறுத்தொண்டர் ஆகியோரும் சிவ தர்மம் தழைக்கப் பணிசெய்தார்கள். பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த ஆலயத் திருப்பணிகளும் சிவ தருமங்களும் எல்லோருக்கும் தெரியும்.

நாளடைவில் இந்த தர்ம காரியங்கள் சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்தன. கோயில் நிலங்களில் இருந்து குத்தகை பாக்கி வசூல் ஆகாமல் பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் ஆலயங்களில் பொறுப்பு ஏற்று நிலைமை இன்னும் மோசமானது. பொது மக்களோ அரசாங்கமோ தட்டிக் கேட்பதில்லை. அர்ச்சகர்கள் தங்கள் சொற்ப சம்பளத்தையும் பல மாதங்கள் கழித்தே பெறுகிறார்கள். பிரார்த்தனை ஸ்தலங்கள் உண்டி வருமானத்தில் இந்த நிலையில் இருந்து தப்பிக்கின்றன. கிராமக் கோயில்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. வெளியூருக்குப் பிழைக்கச் சென்றவர்கள் பலர் தங்கள் கிராமத்தை திரும்பிப்பார்பதில்லை.

நமக்கு சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி இருப்பவர் சிலர். பகவான் பார்த்துக்கொள்வார் என்று சிலர். இதில் குளிர் காய்பவர்கள் குத்தகைக் காரர்களும் வோட்டு வங்கிக்காக அலையும் அரசியல்வாதியும் தான். ஆன்மீக நாட்டம் உண்டு என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் தங்களுக்குப் பிரச்னை வந்தால்தான் சுவாமியைப் பற்றி நினைக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் கிராமக் கோயில்களில் பூஜை செய்பவர்கள் மிகவும் குறைந்து விடுவார்கள். கோயில்களும் சீரழிந்து போகும்.
இந்த நிலை மாற விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் சம்பளத்தில் மாதம் தோறும் இயன்ற தொகையை சிவ தர்மமாக ஒதுக்க வேண்டும். பல வழிகளில் பணம் தண்ணீராகச் செலவழியும் இக்காலத்தில் இது ஒன்றும் சிரமான காரியமே இல்லை. மனதில் தர்ம சிந்தனை வந்தாலே போதும். ஆலய திருப்பணியோடு அர்ச்சகர்களின் நல்ல வாழ்க்கைக்கும் உபகாரம் செய்தால் அந்த தர்மம் குடும்பத்தையே காப்பாற்றும். கல்யாணங்களில் வீண் டாம்பீகமாக செலவாகும் தொகையில் சிறிய பங்கை சிவ தர்மம் செய்தால் தம்பதிகளின் வாழ்க்கை குறைவில்லாமல் இருக்கும். செய்து பார்த்தால்தான் இதன் அருமை புரியும்.

ஸ்தல யாத்திரை செய்பவர்கள் எத்தனை ஊர்கள் பார்த்தோம் என்று எண்ணி கொள்கிறார்களே தவிர அந்த ஊர் கோயில் களுக்கும் சிப்பந்திகளுக்கும் உதவி செய்தோமா என்று நினைப்பதில்லை. சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார்களே என்று கவலைப்படுவதில்லை. கோவில்கள் மரம் முளைத்து இடிந்திருந்தால் பாவம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள்.

நவீன வாழ்க்கை நடத்தும் நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பிறருக்காக உதவ முன்வர வேண்டும். ஏதாவது ஒரு வகையில் சிவ தர்மம் செய்வதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி நம்மை வாழ்வாங்கு வாழ்விக்கும். இது வரை செய்யாவிட்டால் இன்று முதல் செய்யத் தொடங்குவோம். அதுவே ஆலயங்களில் பூஜை செய்பவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையும்.