காலம் பொன் போன்றது என்பார்கள். பொன் போன்றவற்றுக்குக் காலத்தைச் செலவிடும் நோக்கத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகப் பல வலைப் பதிவுகள் எழுதி வருகிறோம். அவற்றுக்கு எவ்வளவு தூரம் வரவேற்பு இருக்கிறதோ தெரியவில்லை. ஒரு நண்பர் மிகுந்த ஆதங்கத்துடன் கேட்டார் ; “ இப்படி எதற்காக எழுதுகிறீர்கள்? முதலாவதாக அவற்றைப் படிப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் இதனைத் தொடருகிறார்கள்? எழுதுவதால் ஏதாவது பயன் விளையும் என்று நினைக்கிறீர்களா? படித்தவர்களில் எத்தனை பேர் தங்கள் கருத்துக்களை அதே வலைப் பதிவில் பதிவு செய்திருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்தவரை ஒரு சிலரே! ஒருக்கால் அவர்களுக்குத் தாங்கள் எழுதுவது பிடிக்கவில்லையோ என்னவோ? தங்களது நேரம் வீணாகிறது என்றுகூட நினைக்கலாம் அல்லவா? உங்களுக்குப் பிடித்ததெல்லாம் அவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா? அப்படியானால் இது வீண் முயற்சி என்றே நினைக்கிறேன்” என்று மூச்சு விடாமல் கொட்டித் தீர்த்து விட்டார் அந்த மனிதர்.
நண்பர் நம்
மீது வைத்துள்ள அக்கறையால் உரிமையோடு இவ்விதம் கேட்டது மிகவும்
பிடித்திருந்தது. சற்று நேர யோசனைக்குப் பின் பதில் சொல்லத் தொடங்கினேன்: “
நீங்கள் கூறியது அத்தனையும் உண்மைதான். என்ன செய்வது! பல முறை எழுதுவதை நிறுத்தி
விடலாம் என்று நினைத்தபோது சிலரது நிர்ப்பந்தத்தின் பேரில் தொடர்ந்து எழதலானேன்.
நாம் எழுதுவதைப் பிறர் பாராட்ட வேண்டும் என்று ஒருக்காலும் நினைத்ததில்லை. ஐம்பது
பேருக்கு வலைப்பதிவை அனுப்பினால் அநேகர் அதைப் படிக்காமல் இருப்பதைத் தெரிந்து
கொள்ள முடிகிறது. நாம் அவர்களைத் தொந்தரவு செய்கிறோமோ என்று கூட நினைக்கத்
தோன்றுகிறது. இத்தனைக்கும் , படிக்கத் தேவையான நேரம் ஐந்து அல்லது பத்து
நிமிடங்களுக்கு மிகக்கூடாது என்ற எண்ணத்துடன் வளவள என்று எழுதுவதைத் தவிர்ப்பதைப் பல ஆண்டுகளாகக் கடைப் பிடித்து வருகிறோம்.
ஒருசில பதிவுகள் மட்டுமே தொடர்ச்சி காரணமாக நீண்டுவிட வாய்ப்பு உண்டு.” என்றேன்
நான்.
உடனே அடுத்த கேள்வி கேட்டார் நண்பர் “ எத்தனையோ
சமூக வலைத் தளங்கள் இருந்தும் படிப்பவர்கள் இல்லை என்று கூறுவதை நம்ப முடிவதில்லை.
கலை, அரசியல் தொடர்பாக எழுதுபவர்களுக்கு ஆயிரக்கணக்கில் வாசகர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள். நீங்கள் அதுபோல் தொடர்பு கொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன்”
என்றார். இது ஒரு முக்கியமான கேள்வி. நாம்
எழுதுவது முற்றிலும் சமயம் பற்றியது. இதில் கவர்ச்சிக்கோ அல்லது வாக்குவாதத்திற்கோ
இடம் ஏது ? பிறரைக் குறை கூறுவதோ அவர்களைத் திருத்துவதோ நமது நோக்கமும் அன்று.
உள்ளதை உள்ளபடி கூறுவதால் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்று எதிர் நோக்குவது
ஒன்றே நம்முடைய நோக்கம். பிறரைத் திருத்தவோ மாற்றுக் கருத்து வழங்கவோ நாம் யார் ?
நாமாகவும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல
மாட்டோம் . அவ்வாறு சொல்பவர்களையும் ஊக்குவிக்க மாட்டோம். நாம் இதில் கருத்து
வழங்குவதாலோ தலை இடுவதாலோ என்ன ஆகப் போகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் போலத்
தோன்றுகிறது. சர்ச்சைக்குரிய விஷயமாகத் தோன்றினால் அதிலிருந்து ஒதுங்கி விடுவது
நமக்குக் கைவந்த கலை ஆயிற்றே ! அதனால் தான் எந்த ஸ்தாபனத்தையோ, தனி நபரையோ
குறிப்பிட்டுச் சர்ச்சைக்கு ஆளாகாமல் எழுதுவது என்று இருக்கிறோம். மேலோடு
பார்த்தால் சர்ச்சை போலத் தோன்றி விட்டாலேயே யாரும் கருத்துக் கூற முன் வருவதில்லை.
இதுவும் நமது அனுபவம். எப்படியோ, நம்மைப் பாதிக்காமல் இருந்தால் சரி என்ற மனோபாவமே
இருக்கிறது. சில நாட்களுக்கு முன்
“ கொடுத்து அறியாதவர்கள்” என்ற
தலைப்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. ஓரிருவர்
மெயில் மூலம் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நமது நன்றி. ஆனால் மற்றவர்களோ இதில் ஏதோ சர்ச்சையைக்
கண்டவர்கள்போல வாளா இருந்துவிட்டதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். ஒரு பதிவு
செய்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம் இவ்வாறு வீணாகப் போகிறது. அந்த நேரத்தில் நாம்
எவ்வளவோ பயனுள்ளவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டிருக்கலாமே என்று தோன்றுகிறது.