Monday, November 23, 2020

 

                 கருணையின் மறுபெயர் குரு            

                                         சிவபாதசேகரன்


அருள் என்பது கருணையின் விளைவு. குவலயம் தன்னில் குருபரனாக மாணிக்கவாசகர் பொருட்டு எழுந்தருளினான் இறைவன். நயன தீக்ஷையால் குரு தன்னை நாடியவருக்குக் கருணை பாலிக்கிறார். உபதேசம் பெற வேண்டுமானால் பக்குவப்பட்டோருக்கே அது சாத்தியமாகிறது. ஆனால் கருணைக் கண்களால் அருளப் பெற்றவருக்கோ அனைத்தும் சாத்தியம் ஆகிறது என்றும் சொல்லலாம். அத்தகைய குரு அபக்குவர்களையும் தனது கருணைக் கண்களால் நோக்கி அருளுவார்.

குரு உருவைக் கண்டவுடனேயே மனத்தில் தெளிவும் அமைதியும் பிறக்கின்றன. இதைதான் திருமூல நாயனார், “ தெளிவு குருவின் திருமேனி காண்டல்” என்று அருளினார். இந்நிலையில் குருவானவர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆதி குருவாகிய தக்ஷிணா மூர்த்தியைப் போலவே மௌன குருவாய் இருந்தாலும் தரிசித்த மாத்திரத்திலேயே வேண்டிய அனைத்தும் சித்திப்பதை அனுபவம் மூலம் அறியலாம். அதேபோல அருளை நாடி வந்தவரும் இதைக் கொடுங்கள் என்று வாய் விட்டுக் கேட்க வேண்டிய அவசியமும் இராது. வந்தவரது முகக் குறிப்பே அவர் குருவிடம் ஏதோ கேட்க விழைகிறார் என்று காட்டிவிடும். அதைக் கண்ட குருநாதரும் என்ன வேண்டும் என்று தாமாகவே கேட்பார். மயிலாடுதுறையில் உத்தர மாயூரத்தில் உள்ள சிவாலயத்தில் சுவாமிக்கு வதான்யேச்வரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. நாம் கேட்கும் முன்பே “ என்ன வேண்டும் கேள் “ என்று கருணையோடு கேட்கும் வள்ளலாகிய பெருமானுக்கு அப்பெயர் ஏற்றதேயாகும். அப்பெருமானைச் சிந்தையில் இருத்தி நியமத்துடன் பூஜிக்கும் குருநாதருக்கும் அக்குணம் ஏற்படுவது இயற்கையே. இவை யாவும் கருணையின் வெளிப்பாடே ஆகும். கயிலாய உபதேச பரம்பரையில் வந்தோர்க்கு இப்பண்பு இயல்பாகவே அமைந்து விடுகிறது.

மக்களுக்கு நல்லுணர்வை ஊட்டி, ஞானமும் முத்தியும் பெறும் வழிகளைக் காட்டி உய்யக் கொள்வதற்காகப் பல்வேறு கால கட்டங்களில் குருநாதர்கள் அவதரித்து, மடாலயங்களை நிறுவி, தங்களது உபதேச பரம்பரையைத் தழைக்கச் செய்தார்கள். அப்பரம்பரையில் வந்தோரது பெயர்களை அறிந்தபோதிலும் அவர்களது அருட்செயல்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறிய முடிகிறது. ஆனால் ஒரு சிலருக்குத் தமது வாழ் நாளில் மடாதிபதிகளாக இருந்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூடுதலாகவே அறிய வாய்ப்பு உண்டு. காஞ்சிப் பெரியவர்களைத் தரிசிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களைப் போலத் திருவாவடுதுறை ஆதீன 23 வது சந்நிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்ரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்த போது நேர்ந்த அனுபவங்களையும் கூடவே எண்ணிப் பார்க்கும் வாய்ப்பினை அன்னாரது குருபூஜை நன்னாளாகிய கார்த்திகை சதயத்தன்று பகிர்வதில் பெருமகிழ்வு கொள்ள முடிகிறது.

சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்து இளவரசாவதற்கு முன்பு சில முறை திருவாவடுதுறை ஆலயத்திற்குச் சென்று விட்டு நூல் நிலையத்தில் ஆதீன வெளியீடுகளை வாங்கிக் கொண்டு வந்து விடும் நிலையில், பிறிதொரு சமயம் ஆலய அர்ச்சகரான ஸ்ரீ தண்டபாணி சிவாசாரியார் அவர்கள் , துறைசை ஆதீனத்திற்குச் சின்னப் பட்டமாக ஒருவர் சந்நிதானத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார் என்றும் சிவப் பணி செய்து வருவோரைக் கண்டால் பெரிதும் மகிழ்வார் என்றும் கூறி இளைய சுவாமிகளிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்கள். அப்போது சுவாமிகள் பசுமடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். முக மலர்ச்சியோடு அவர்கள் பேசியதை என்றும் மறக்க இயலாது. அது முதல், திருவாவடுதுறை செல்லும்போதெல்லாம் சின்னப் பட்ட சுவாமிகளைத் தரிசிப்பது வழக்கமாகிவிட்டது. 

 திருவாவடுதுறையிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள திருக் கோழம்பம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் அறநிலையத் துறையைச் சேர்ந்து இருந்தபோதிலும் சரிவரக் கவனிக்கப்படாமல் புதர் மண்டி இருந்தது. ஆனாலும் ஸ்ரீ தண்டபாணி சிவாச்சார்யார் அவர்கள் தனது முதிர்ந்த வயதிலும் தினசரி அங்கு சென்று பூஜை செய்து வந்தார். இறைவனது திருவருள் , அக்கோயில் திருப்பணி ஆகிக் குடமுழுக்கு நிகழுமாறு கூட்டுவித்தது. அன்பர்கள் ஆதரவுடன், தலத் திருப்பதிகக் கல்வெட்டை சுவாமியின் மகா மண்டபத்தில் அமைத்து, அதனை அவ்வமயம் மகா சந்நிதானம் ஆகிவிட்ட நம் சுவாமிகளின் திருக் கரத்தால் திறக்க விரும்பியதை அவர்கள்  மனமுவந்து ஏற்றுக் கொண்டதுடன் குடமுழுக்குக்கு நேரில் வந்து கலந்து கொண்டு அருள் வழங்கினார்கள். மேலும், ஆதீனக் கோயில்களான திருவீழிமிழலை, திருமங்கலக்குடி ஆகியவற்றின் கும்பாபிஷேகத்திலும் சுவாமிகளை சந்திக்கும் போது அரிய நூல்களை வழங்கியருளினார்கள். இவ்வளவும் பெரும்பாலும் கண்கள் மூலமாகப்   பேசியவையே. அருகில் நின்று உரையாடும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை.

மற்றொரு சமயம், கருவிலி  (கருவேலி) என்ற பாடல் பெற்ற தலத்தின் திருப்பதிகக் கல்வெட்டை அக்கோயிலில் நமது உபயமாக சமர்ப்பித்த வேளையில் அதனை மகா சன்னிதானம் அவர்கள் திறந்து வைத்து அருளாசி வழங்க வேண்டும் என்ற பேரவா உண்டாயிற்று. ஏற்பாடு செய்திருந்த தினமோ குருவாரம். அன்று சுவாமிகள் மௌனம். இருந்தாலும் கோயிலுக்குத்  தரிசனம் செய்ய வருகிறேன் என்றார்கள். முன்னதாகவே அங்கு சென்று சுவாமிகளை எதிர்கொள்ளக் குடை, மேளம், பூர்ண கும்பம், பன்னீர் இலைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்கு எழுந்தருளினார்கள். ஓதுவாமூர்த்திகள் கூட வராததால் சுவாமி- அம்பாள் சந்நிதிகளில் அடியேனைப் பஞ்சபுராணம் , அபிராமி அந்தாதி ஆகியவற்றைப் பாடுமாறு சைகையால் காட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காகத்  திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் பதிவு செய்யும் கருவியோடு வந்திருந்தார்கள். சுவாமிகள் மௌனமாக இருந்தபடியால் அடியேனைப் பேசுமாறு பணித்தருளினார்கள். அத்தலத் தரிசனத்தில் பெரிதும் மகிழ்ந்தார்கள் என்பது அப்போது தெரியவில்லை.  

தை மாதத்தில் திருவாவடுதுறைக் கோயிலில் திருஞான சம்பந்தப் பெருமானுக்கு இறைவர் பொற்கிழி வழங்கும் விழாவைத் தரிசிக்கச் சென்றபோது மகா சந்நிதானம் அவர்கள் அங்கு எழுந்தருளி, விபூதிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்த அடியேனை சிப்பந்தி ஒருவர் மூலம் அழைத்து விபூதி அளித்துவிட்டு, “ கருவிலிக்கு மீண்டும் போனீர்களா “ என்று கேட்டார்கள். அப்போதுதான் தெரிந்தது அக்கோயிலின் மீது அவர்களுக்கு இருந்த ஈடுபாடு எத்தகையது என்று.

இடையில் சிறிது காலம் அவர்கள் காசியிலே வாசம் செய்திருந்த படியால் நேரில் தரிசிக்க இயலவில்லை. மீண்டும் மடத்துக்குத் திரும்பிவிட்டதை அறிந்தவுடன் நேரில் தரிசிக்க மடத்திற்குச் சென்றேன். காசியிலிருந்து கொணர்ந்த ஸ்படிக மணிகளை வழங்கி ஆசீர்வதித்தார்கள்.

அக்காலத்தில் மாதந்தோறும் பல கட்டுரைகளை எழுதி, சைக்லோஸ்டைல் செய்து, உடன் பணியாற்றிய அன்பர்களுக்குக் கொடுத்து வந்தேன். அதில் வெளியான வேதாரண்யப் புராணத்தைப் படித்த சுவாமிகள் மிகவும் அச்செயலைப் பாராட்டியருளினார்கள். மடத்தின் மாதாந்திர வெளியீடான மெய்கண்டார் இதழிலும் கட்டுரைகள் எழுதிவந்த போது அதனைப் பாராட்டி , அடியேனை  ஊக்குவித்து  மகிழ்ந்தார்கள்.

அறநிலையத் துறையைச் சேர்ந்த ஒரு பாடல் பெற்ற தலத்தின் திருப்பணியில் பங்கேற்றபோது கும்பாபிஷேகத்தை ஒட்டிப் புதியதாக நடராஜர் சிவகாம சுந்தரி உற்சவ மூர்த்திகளைச் செய்து வைத்தால் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினோம். மூலவர் பெயர் நடனத்தை ஒட்டியவாறு இருந்தும் அக்கோயிலில் நடராஜப் பெருமானது திருவுருவம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்தது.

கும்பாபிஷேகப் பத்திரிகையை மடத்திற்குச் சென்று சுவாமிகளிடம் சமர்ப்பித்து, குடமுழுக்கிற்கு எழுந்தருள வேண்டி நின்றோம். அதற்கு இசைந்ததோடு, அஷ்ட பந்தன மருந்து, அதனை இடிக்க ஆட்கள், பிராகாரம் சுத்தம் செய்ய ஆட்கள் ஆகியவற்றை நாங்கள் கேளாமலேயே தந்தருளினார்கள். நடராஜ மூர்த்தி பற்றி கேட்பதா என்று தயங்கி நின்றபோது, முகக்குறிப்பைக் கண்டு விட்டு “ இன்னும் ஏதாவது செய்துதர வேண்டுமானால் கேளுங்கள்” என்று கேட்டார்கள். ஒருமாதிரியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , “ கோயிலில் மூலவர் பெயர் பெருமானது நாட்டியத்தை ஒட்டி இருந்தும் உற்சவ மூர்த்தி இல்லாமல் உள்ளது. நமது மடத்தின் ஆத்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜப் பெருமான் ஆதலால், மடத்தின் சார்பாக நடராஜர்- சிவகாமி விக்ரகங்களை அருட்கொடையாக வழங்கியருள வேண்டும் என்று விண்ணப்பித்தேன். சுவாமிகள் உடனடியாக அவற்றைச் செய்து தர ஏற்பாடுகள் செய்யுமாறு சிப்பந்திக்குக் கட்டளையிட்டருளினார்கள்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆடல்வல்லான், சிவகாமசுந்தரி மூர்த்திகள் கோயிலுக்கு வந்தவுடன் பூர்ணகும்பம் அளித்துத் தெய்வ  தம்பதியரை வரவேற்றோம். சுவாமிகளும் வருகை தந்து அவற்றைப் பார்வையிட்டு மகிழ்ந்ததோடு, காரைக்கால் அம்மையார் விக்கிரகம் ஒன்றையும் புதிதாக வார்த்து ஆதீன சார்பாக அளித்தார்கள். ஆண்டில் ஆறு முறை செய்யப்படும் நடராஜர் அபிஷேகங்களை ஆதீன உபயமாக ஏற்றதோடு ஆலய சிவாச்சாரியாருக்கும் மாதந்தோறும்  உதவித்தொகை வழங்கிய கருணைத் திறம் அளவிடற்கரியது.  இதுபோலப் பலவிடங்களில் நடராஜர் அபிஷேகங்களை ஆதீன உபயமாகச்  செய்வித்தார்கள்.

மகேசன் பணியோடு மக்கள் பணியும் செய்த கருணையை நாம் இங்கு மறவாது போற்றவேண்டும். எத்தனையோ கோயில்களில் காலையிலும் மாலையிலும் சிற்றுண்டியும், மதிய உணவும் ஏழை எளியவர்களுக்கு வழங்கச் செய்த சிறப்பு இக்குருமூர்த்திகளுக்கே உரியது.

இவர்களது ஆட்சிக் காலம் , சைவ சித்தாந்தம் பயிலவும் அரிய பல நூல்கள் வெளிவரவும் , ஆதீனக் கோயில்கள் பலவற்றில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெறவும் சிறப்புற்று விளங்கியதை சைவ உலகம் நன்கறியும். ஸ்ரீ நடராஜப் பெருமானைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் சிறப்பிக்கையில், “ கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி “ எனப் பாடுவார். அத்த ஆனந்த தாண்டவத்தை  ஞானக் கண்களால் காணப் பெரிதும் தவம் செய்திருக்க வேண்டும். மற்றையோரும் உய்ய வேண்டி, குருநாதர்களது கருணையை  நமது ஊனக் கண்களால் காணும் பேற்றை அளித்து நம்மையும் ஒருபொருட்டாக ஏற்று, நாய் சிவிகை ஏற்றி இறைவன் அருளுகின்ற திறம் நம்மை அதிசயப் படுத்தும்.     

2 comments:

  1. ஹர ஹர ஹர ஹர
    குருபாதம்..������

    ReplyDelete
  2. சிவ சிவ

    ReplyDelete