தருமபுரம் சுவாமிநாத ஒதுவா மூர்த்திகள்
சிவபாதசேகரன்
தருமபுரம் சுவாமிநாத ஒதுவாமூர்த்திகளைப் பற்றி அறியாத திருமுறை அன்பர்கள் இரார். சிவபெருமான் திருவடிக்கே பதிந்த அன்பு கொண்ட இவர், திருமுறைகள் பால் கொண்டிருந்த அளவிலாப் பேரன்பை நேரில் பார்த்தவர்களே அறிவார்கள்.
தருமபுர ஆதீனத்தின் 24 வது குருமகா சந்நிதானத்திடம் பணிவிடைக்காகச் சேர்ந்த இவரது
குரல் வளத்தைக் கண்ட காசிமடத்து அதிபர் காசிவாசி அருள் நந்தித் தம்பிரான்
சுவாமிகள், இவரைத் தருமை ஆதீனத் தேவாரப்
பாடசாலையில் பயிலுமாறு பணித்தார்கள். அப்பாடசாலையின் ஆசிரியரான வேலாயுத ஒதுவா
மூர்த்திகள் பல மாணாக்கர்களுக்குப் பயிற்றுவித்தவர்கள். அவரிடம் மாணாக்கராகச்
சேர்ந்த இவரிடம் 25 வது குருமகாசந்நிதானம்
கயிலைக் குருமணி அவர்கள் மிகுந்த பிரியம் காட்டியதோடு தனது சிவத்தல
யாத்திரைகளுக்கு இவரை அழைத்துச் சென்று அங்குள்ள சிவ சன்னதிகளில் தேவாரம் பாடச்
செய்து மகிழ்ந்தவர்கள். சென்னையில் ஆதீனப் பிரசார நிலையம் துவங்கியபோது இவரை அங்கே
இருத்தி, திருமுறை ஆசிரியராக அமர்த்தினார்கள். அங்கு பணியாற்றிய பின்னர், இவர்
தனியாக வசித்து வந்தார். ஆனால் தமிழகக் கோயில்களில் நடைபெறும் வைபவங்களில்
திருமுறை விண்ணப்பம் செய்து வந்தார்.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர்
இவரை சென்னையில் மகாலிங்க புரத்தில் உள்ள சிவாலயத்தில் நடந்த மாதாந்திர
வழிபாட்டின்போது முதலாவதாகச் சந்தித்தபோது அப்போது பாடிய தேவாரப் பாடல்கள் மனத்தை
ஈர்க்கலாயின. அடுத்த மாத வழிபாடு நடைபெறும் தேதி, இடம்,நேரம் ஆகியவற்றை அந்நிகழ்ச்சியில் அறிவிப்பார்.
அதுமுதல் மாதம்தோறும் அவ்வழிபாட்டில் கலந்து கொண்டு திருமுறையைச் செவி மடுப்பது
உறுதி ஆகிவிட்டது.
சென்னை தங்கசாலையில் இருந்த சென்னைச் சிவனடியார்
திருக்கூட்டம் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலை முதல் மாலை வரை இவரைக் கொண்டு
பன்னிரு திருமுறை முற்றோதுதல் நடத்தி வந்தார்கள். அதைத் தவறாது கேட்டதால்
பண்களுக்கான ராகங்கள் அறிய வந்ததோடு திருமுறைகளின் மீது ஆர்வமும் பக்தியும்
பெரிதும் ஏற்பட்டது. தேவாரப் பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என்னைப் போன்றவர்களுக்கு
வரப் பிரசாதமாக இது அமைந்தது.
இந்நிகழ்ச்சிகளின் நடுவில் பலப் பல சொந்த அனுபவங்களையும்
கூறி அன்பர்களுக்கு சமய நம்பிக்கை வளரச் செய்தார். பாடல்களைப் பொருள் அறியும்
வண்ணம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். சொற்றொடர்கள் பலவற்றைக் கூட்டிப் பொருள்
உரைக்கும் திறமை படைத்தவர் இவர். அப்பொருள் நம் மனத்தை நீங்காமல் செய்வதை ஒரு உதாரணம் மூலம் இங்கு பார்க்கலாம்.
அப்பரடிகளின் “ வாழ்த்த வாயும் “ என்ற பாடல் பிரபலமானது.
“ வாழ்த்தவாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே.”
என்று அதை முழுதும் பாடிவிட்டுப் பின்னர் பொருள் விளங்கக்
கூட்டிப் பாடும்போது ,
“ சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே “ என்று வருவதை, நமக்கு
அறிவுரையாக, “ சூழ்த்த மாமலர் தூவித் துதி” என்று பாடி ஒரு சில வினாடிகள்
நிறுத்திவிட்டுப் பிறகு, “துதியாதே” என்று சேர்த்துப் பாடுவார்.
மேலும், தலைவனை
என்று வருவதைக் கூட்டிப் பாடும் திறனை,
“ வாழ்த்த வாயும் தந்த தலைவனை; நினைக்க நெஞ்சும் தந்த
தலைவனை; தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை; சூழ்த்த மாமலர் தூவித் துதி” எனப்
பாடுகையில் , கேட்பவர்கள் பரவசப் படுவர். மக்களிடையே பாடும்போது மட்டுமே
இம்முறையைக் கையாளுவார்.
திருமுறைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்றும்
அதனை வாசிப்பதும்,பூசிப்பதும் நமது கடமை என்றும் அடிக்கடி வலியுறுத்துவார்.
வீதிகளில் திருமுறையை அலங்காரம் செய்த வண்டியின் பின்னர் திருமுறை பாடிக் கொண்டு
செல்லும்போதும் நடுவில் மக்களுக்காக இக்கருத்தைப் பலவிடங்களில் கூறுவார்.
திருமுறைகளால் ஆகாதது எதுவும் இல்லை என்பார். தன்னையே
அதற்கு எடுத்துக் காட்டாகக் கூறுவார். அனுபவத்தைக் கூறுவதால் மக்களின் நம்பிக்கை
உறுதிப் படும் என்பது இவரது கருத்து. நேரத்தைத் தவறாது கடைப் பிடிக்கும்
வழக்கத்தைத் தருமபுர ஆதீன 24 வது குருமணிகளிடம் தான்
நேரில் கண்டதாகக் கூறுவார். இசைக் கச்சேரி செய்யும்போதும் தனக்குக் கொடுக்கப் பட்ட
நேரத்தை ஒருபோதும் தாண்டியதில்லை. தான் தருமையாதீன ஞானப் பண்ணையில் வளர்ந்ததை
அடிக்கடி நினைவு கூர்ந்ததோடு பல மேடைகளில் சொக்கநாத வெண்பா, சிவபோக சாரப்
பாடல்களைப் பாடி, குரு பக்தியை வெளிப் படுத்துவார்.
சென்னையில் வாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனது
ஆசிரியப் பெருமானை வரவழைத்து மரியாதை
செய்து ஆசி பெறத் தவறியதில்லை. அந்நாளில் ஒரு ஆலய வழிபாட்டையும்
நிகழ்ச்சியுடன் இணைத்திருப்பார். ஒரு சமயம், சைதாப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி
ஆலயத்தில் இந்த நிகழ்சசி ஏற்பாடாகியிருந்தது. அன்று காலை ஆசிரியருடன் ஆலய வழிபாடு
நடை பெற்றது. வலம் வருகையில் சிவ சன்னதி வந்தபோது ஞானசம்பந்தர் அருளிய “
வீடலாலவாயிலாய்” என்ற பதிகம் முழுவதையும் கௌசிகப் பண்ணில் பாடியபோது அடியார்கள்
மட்டுமல்லாமல், ஆசிரியப்பிரானும் முக மலர்ச்சியுடன் கேட்டு மகிழ்ந்தார். அன்று
மாலை ஆசிரியருக்கு நடந்த பாராட்டில் இவரது திருமுறைக் கச்சேரி நடைபெற்றது. இடையில்
திருச்சிராப்பள்ளி முத்துக் கந்தசுவாமி ஒதுவா மூர்த்திகள் வந்தபோது அவரையும் மேடையில்
தன்னுடன் உட்காரவைத்து, ஆசிரியர் மகிழும்படி இருவருமாக, “ மாதர் மடப்பிடியும் “
பாடியதைக் கேட்டு அங்கு வந்திருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.
தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலமான திருக்கச்சூரில்
ஒருசமயம் மலை மேலுள்ள மருந்தீசர் ஆலயத்தில் குறுகிய காலத்தில் கும்பாபிஷேகம் நடத்த
வேண்டியிருந்தது. பொருள் பற்றாக்குறை இருந்தபடியால் தேவார பாராயணம் ஏற்பாடு செய்ய
முடியவில்லை. அவ்வாறு விட்டுவிடலாகாது எனக் கருதி, இவரை நேரில் சந்தித்து
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு திருமுறை விண்ணப்பம் செய்ய வேண்டினோம். முன் பணம்
கொடுக்கக் கூட வசதி இல்லை. ஆனால் இவரோ எவ்வளவு சம்பாவனை தருவீர்கள் என்று ஒரு
வார்த்தை கூடக் கேட்காமல் , வருவதாகக் கூறினார்கள். அதன்படி முதல் நாள் இரவே
திருக்கச்சூருக்கு வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். எங்களால் முடிந்த சொற்பத்
தொகையை கொடுத்தபோதிலும் அதற்காக வருந்தாமல் சிவத் தொண்டு ஒன்றையே பெரிதாகக்
கருதினார்கள்.
மலையம்பாக்கத்தில் தனது தமக்கையாருடன் வசித்து வந்த இவர்
பின்னாளில், சேக்கிழாரது அவதார பூமியாகிய குன்றத்தூரில் வசிக்கலானார். அங்கிருந்த
சேக்கிழார் கோயில் இவரது முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்றுக் கும்பாபிஷேகம்
செய்யப் பெற்றது.
ஆண்டு இறுதியில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றம் நடத்தும் இசை
விழாவில் இவரது திருமுறை இசை அரங்கு நடைபெறும். திருமுறை அன்பர்கள் ஏராளமானோர்
வருகை தருவதால் அரங்கம் நிரம்பி வழியும். திருமுறை இசை அரங்குகளில் இவரது இசை நிகழ்ச்சிக்கே
இவ்வாறு பெருந்திரளான மக்கள் வருவதைக் கண்டிருக்கிறோம். நிகழ்ச்சி நிறைவடைய சில
மணித் துளிகளே இருக்கையில் “ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் “ என்று பாடி , வந்தவர்கள்
அனைவரையும் அதனைத் திரும்பப் பாட வைப்பார். “ நூற்றுக்கணக்கானோர் இப்போது பஞ்சாக்ஷரம்
சொல்கிறீர்கள் . இது கிடைத்தற்கு அரிய பாக்கியம் அல்லவா “ என்று சொல்வார்.
இவரது திருமுறைப் பாடல்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து
வெளியிடப் பல நிறுவங்கள் முன்வந்தன. அகில இந்திய வானொலியும், சென்னைத் தொலைக்
காட்சி நிலையமும் இவரது நிகழ்ச்சிகளை ஒலி / ஒளி பரப்பின. பல பட்டங்களும் இவரைத் தேடி
வந்தன.
இவருக்குச் சென்னை அன்பர்கள் பொற்றாளம் அளிக்கும் விழா
நடைபெற்றபோது பலர் புகழ் மாலைகள் சூட்டி மகிழ்ந்தனர். அரசும் இவருக்குக் “கலைமாமணி”
என்ற பட்டமளித்துக் கௌரவித்தது.
“எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிவாலயத்திற்குச்
சென்று நாள் தோறும் பத்துப் பதிகங்கள் பாடிவிடு” என்று காசிவாசி அருள்நந்தி
சுவாமிகள் அருளியதை வாழ்நாள் இறுதி வரை கடைப்பிடித்து வந்தார். தனது வாழ் நாளின்
இறுதி நாட்களைக் குன்றத்தூரிலே கழித்து வந்ததாக அறிகிறோம்.அவ்வமயம் உடல்
நலிவுற்றபோது நேரில் சென்று பார்த்து வந்தது நினைவுக்கு வருகிறது.