Wednesday, September 25, 2019

நாவடக்கம் இல்லாமல் ஆன்மிகம் பேசலாமா ?

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் 

கல்வியின் பயனே அறிவை வளர்த்துக்கொள்வதும் அதன் மூலம் தான் கற்றதைப் பிறருக்குப் பகிர்வதும் தான். அதிலும் இறைவனது தாள்களைத் தொழாவிடில் கல்வி கற்றும் பயன் என்ன என்கிறார் வள்ளுவர். கல்வியைக் காசாக்கும் காலம் இது. ஆன்மீகத்தையும் இது விட்டு வைக்கவில்லை. ஆன்மீக நூல்களைக் கற்றவர்கள் அதை வியாபாரம் செய்யத் துணிந்தது மாபெரும் குற்றமும் துரோகமும் ஆகும். தான் கற்றதையோ உரையாற்றியதையோ நூலாகவோ குறுந்தகடுகளாகவோ ஆக்கி சம்பாதிப்பது எப்படி சாத்தியமாயிற்று? அவர்களது பேச்சை மக்கள் மதித்துக் கேட்டதால் தானே ? சொல்லப்போனால் இவர்களை உச்சிக்குக் கொண்டு வைத்ததும் மக்கள்தான். பெயரும் புகழும் வந்துவிட்டால் பணத்தாசையும் கூடவே வந்து விடுகிறது. அப்புறம் என்ன? இவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்டே ஆகவேண்டும் .

மூளை வளர்ச்சியாவது ஒருவரது சிந்தனா சக்தி, நினைவாற்றல் மேம்படுவதால் ஏற்படுவது. மற்றவர்கள் சிந்திக்காதவற்றை சிந்தித்து, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு உரையாற்றும் திறமை இவர்களுக்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. வளர்ந்த மூளையை மழுங்கச் செய்வதுபோல் புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மக்கள் இவர்களைக் கண்டிப்பதோடு புறக்கணிக்கவும் செய்கின்றனர்.

ஆன்மீக ஆராய்ச்சி செய்வதிலும் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். உதாரணமாக ஒருசிலவற்றை இங்கு நோக்குவோம். திருவாசகத்தில் வரும் கோகழி என்ற ஊர் எங்கு உள்ளது என்று ஆய்வதில் தவறில்லை. அதுவும் ஒருவிதத்தில் ஆன்மீகத் தேடலே. ஒரே பெயரில் இரு தலங்கள் இருந்தால் எது பாடல் பெற்ற தலம் என்று ஆயும்போது கல்வெட்டுத் துணை கொண்டும் ஆராய்ச்சி செய்யலாம்.

இறைவனது அருளிச் செயல்களையும் அடியார்கள் செய்த அற்புதங்களையும் , பக்தர்களின் நம்பிக்கையையும் கேலி செய்வதால் இவர்களை எவ்வாறு ஆன்மீகப் பேச்சாளர்கள் என்பது ? ஆன்மீக நூல்களைப் படித்துவிட்டு எதிர்க் கேள்விகள் கேட்கவா சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்? மக்களிடையே பக்தியை வளர்ப்பதைவிட, கைதட்டல் வாங்குவதே இவர்களது குறிக்கோள் ஆகி விட்டது. கைதட்டல் இருந்தால் மட்டுமே அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் பேசத் துணிவு வந்து விட்டது. இவர்களுக்குப் பட்டம் கொடுத்துக் குட்டிச்சுவர்களாக ஆக்கி நம் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்ட நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

வாரியார்,கீரன் போன்றோர் இருந்தபோது இதுபோன்ற நிலை ஏற்படவே இல்லை. உள்ளதை உள்ளபடியே சொல்வார்கள். ஜன ரஞ்சகமான உதாரணங்களைச் சொன்னாலும் எடுத்துக் கொண்ட தலைப்புக்குப் பழுது வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆன்மீகப் புரட்சி  செய்வதாக நினைத்துக் கொள்ளும் ஒரு சிலர் கைத்தட்டலுக்காக நம் சமயத்தையே இழிவுபடுத்திப் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இராமாயணத்தில் வரும் நீதிகளை மாத்திரம் கோடிட்டுக் காட்டிய காலம் போய் வாலியை மறைந்திருந்து கொல்லலாமா என்றும், கற்பில் சிறந்தவள் சீதையா அல்லது மண்டோதரியா என்றும் பட்டி மன்றத்தில் வினா எழுப்பும் துணிவு எப்பொழுது வந்ததோ அப்பொழுதே, இறைவனையும், அடியார்களையும் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்பதற்குப் பச்சைக் கொடி காட்டியதுபோல் ஆகி விட்டது. ஆரம்ப காலத்தில் முளையில் கிள்ளி எறியாத தவற்றுக்காக இப்பொழுது நாம் அனுபவிக்கிறோம்.

புத்த சமண சமயங்கள் மேலோங்கியிருந்த காலத்தில் நாயன்மார்கள் அவதரித்து சைவத்தைப் புனருத்தாரணம் செய்தார்கள் . சைவம் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்து சமயமே தமிழகத்தில் காப்பாற்றப் பட்டது. தனது அவதார நோக்கமான பிற சமயங்களைக் கண்டித்து சைவத்தை நிலை நாட்டுவதை அறிவிப்பதுபோல சம்பந்தரின் பதிகங்களில் பத்தாவது பாடல்கள் அறிவிக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தெய்வத்திருமுறைகளை நாம் போற்றி வரும் நிலையில், வளர்த்துவிட்ட ஒரு மேதாவி இப்பாடல்கள் எதற்கு என்று கேள்வி எழுப்புவதாக அறிகிறோம். இது போன்ற அறிவிலிகள் ஆன்மிகம் பேசவில்லை என்று யார் அழப்போகிறார்கள்? வித்தியாசமாகப் பேசினால் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடி, வரவேற்புடன்,பண வரவும் அதிகரிக்கும் என்ற கணிப்பால் பேசுகிறார் போலும்.

நாவடக்கம் இல்லாதவர்களை நாவரசர், சொல்லுக்கே செல்வர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. இதனால் இவர்களுக்குத் தலைக் கனம் அதிகமாகி விட்டது. நம்மில் பெரும்பாலோர் நாம் வழிபடும் தெய்வத்தையோ மகான்களையோ குறை கூறுபவர்களைக் கண்டிக்காததால் கேட்பார் இன்றி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் பிடித்து அலைகிறார்கள். மழுங்கிய மூளை நெடு நாட்களுக்குப் பயன் தராது. கற்ற கல்வியோ ஈட்டிய செல்வமோ அந்திக் காலத்தில் கை கொடுக்கப்போவதில்லை. இதை மட்டுமாவது இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நினைவு தப்பும்போது அதுவும் கூட வராது.

Thursday, September 12, 2019

களவாடப்படும் உற்சவ மூர்த்திகள்


நமது உடைமைகளைக் காப்பதில் நமக்கு உள்ள அக்கறை பொது சொத்துக்களைக் காப்பதில் இல்லை என்பது வெட்கித் தலை குனிய வேண்டியதொன்று. அதிலும் கோயில் சொத்து என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அவற்றை அலட்சியமாகவே நாம் அணுகுகிறோம்.    ஆக்கிரமிப்புக்களும், கொள்ளைகளும் கண்ணுக்கு முன்னால் நடந்தாலும் தட்டிக் கேட்பவர் சிலரே. நமக்கேன் வம்பு என்று ஒதுங்குபவரே பலர். ஏதாவது காணாமல் போய் விட்டால் காவல் துறைக்குப் புகார் கொடுத்துவிட்டுக்  கையைக் கட்டிக் கொண்டு அயலவரைப் போல வேடிக்கை பார்க்கிறோம். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள்/ வெளிப்பாடுகள் களவு போனவற்றைப் பற்றிக் காவல் துறைக்கு அறிவிக்காமலும், முதல் அறிக்கை தயாரிக்காமலும் ஏமாற்றியிருப்பதாக வரும் செய்திகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன. வேலியே பயிரை மேய்வதுபோல் அதிகாரிகளே இக்குற்றங்கள் பலவற்றுக்கு உடந்தை ஆகி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கின்றது.

கெட்ட காலத்திலும் ஒரு நல்ல காலம் என்று சொல்வார்களே, அதுபோல் தமிழ்நாடு குற்றப்பிரிவுப் புலன் ஆய்வுத்துறைத் தலைவராகத்  திரு.பொன்மாணிக்கவேல் ஐயா அவர்கள் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை பல கோயில்களில் களவாடப்பட்ட மூர்த்திகளை அரும்பாடு பட்டுத் தேடிக் கண்டுபிடித்து,  நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுத் திரும்பக் கொண்டுவந்திருப்பது அனைவரும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். அரசியல் தலையீடுகள், மிரட்டல்கள் ஆகிய பல இடர்ப்பாடுகளைச் சந்திப்பது சாதாரணமான காரியம் அல்ல. நம் நாட்டுக்குள் இருந்தே மீட்டுக் கொண்டு வருவது கடினம். அதிலும் வெளி நாடுகளுக்குக் களவாடப்பட்ட மூர்த்திகளைக் கொண்டு வருவது அதை விடக் கடினம். உரிய ஆவணங்களைத் தயாரித்து நீதி மன்றத்தில் சமர்ப்பித்தாலும் நீதிக்காகக் காத்திருக்க வேண்டும். இரு நாட்டு  அரசாங்கங்களின் பரிந்துரை கிடைக்கவே ஆண்டுக்கணக்கில் ஆகலாம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக் குறிச்சியில் உள்ள அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயிலில் பூஜையில் இருந்த விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்க வாசகர் ஆகிய மூர்த்திகள் 1982 ம் ஆண்டு களவு போயின.     1984 வரை துப்பு எதுவும் கிடைக்காமல் போகவே வழக்கைக் காவல் துறை மூடி விட்டதாகக் கூறப்படுகிறது. மூர்த்திகளை அயல் நாட்டுக்குக் கடத்திவிட்டு அவற்றைப் போலவே போலியாக மூர்த்திகள் செய்து வைக்கப்பட்டுக் கிடைத்துவிட்டதாக வழக்கு மூடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது. உண்மை எதுவாயினும் களவு போனதை மறுக்க முடியாது. இந்நிலையில் இவ்வழக்கை முற்றிலும் ஆய்வு செய்த திரு பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள் இம்மூர்த்திகள் ஆஸ்திரேலிய நாட்டில் அடிலெய்டில் உள்ள அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை அறிந்தார்கள். தொல்லியல் நிபுணர் திரு இரா. நாகசாமி அவர்கள் தந்த கூடுதல் தகவல்களுடன் அருங்காட்சியகத்திற்குக் கடிதம் மூலம் தெரிவித்து, சட்டத்திற்குப் புறம்பாகக் களவாடப்பெற்ற மூர்த்திகளை 17 ஆண்டுகள் வைத்திருந்தது குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் உதவியுடனும் அணுகப்பெற்றது. நிறைவாக அருங் காட்சியக நிர்வாகி ராபின்சன் ,தனது செலவில் நடராஜ மூர்த்தியை அனுப்புவதாக சம்மதித்தார். இதனை இந்தியாவுக்குக் கொண்டுவரத் தமிழக அரசின் அனுமதியைப் பெற 300 நாட்களாகக் காத்திருந்த நிலை ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஒருவழியாகக் கடந்த வாரம் நடராஜ மூர்த்தியைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர். மற்ற மூர்த்திகளும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படும் என்கின்றனர். சுமார் 37 ஆண்டுகளுக்குப்பின்னர் மீட்கப்படும் நடராஜ மூர்த்தி தில்லியிருந்து சென்னைக்கு 13.9.2019 அன்று கொண்டு வரப்படுவதாகவும் , பின்னர், உரிய கோவிலில் ஒப்படைக்கப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.

பொறுப்பற்ற தலைப்பு 
ஆடல் வல்லானுக்கு ஆண்டில் ஆறு முறை செய்யப்படும் அபிஷேக நாட்களில் ஒன்றான ஆவணி சதுர்தசியை ஒட்டிப்  பெருமான் மீண்டும் எழுந்தருளுவது அனைவருக்கும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும் இவ்வேளையில், வழக்கம்போல் மூர்த்தியின் மதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாளிதழ்களும் தொலைக் காட்சிகளும் இன்னமும் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்களே என்று வேதனைப் பட வேண்டியிருக்கிறது. என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று பொது மக்கள் கேட்டார்களா ? இதனால் கோடியில் ஒருவனுக்கு அந்த குற்றத்தை நாமும்செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வர வாய்ப்பு உண்டு என்று இவர்கள் நினைக்கவே மாட்டார்களா? “ கடத்தல் மன்னன்  “ என்று கொள்ளைக்காரனுக்குப் பட்டம் தருவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே ! சமூக நலனில் இவர்களுக்குக் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் மூர்த்திகளைக் காப்பதற்காக ஏதாவது செய்ய முன் வந்திருக்கிறார்களா? இவர்களது கவனம் முழுதும் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுப் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான்.

பொது மக்களாகிய நாமும் நம்மாலான உதவிகளைச் செய்து ஆலயப் பாதுகாப்பைப் பலப்படுத்தலாம். காமிராக்களும்,அலாரங்களும் வாங்கித் தரலாம் என்றால், அவை வழங்கப்பெற்ற சில மாதங்களிலேயே, மூர்த்திகளை அருகிலுள்ள காப்பகத்தில் அடைத்து வைத்து விடுகிறார்களே  இதற்காகவா மூர்த்திகள் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன ?  உற்சவ மூர்த்தி வீதி உலா சென்றால் மூலவர்சன்னதியை மூடி விடுவது மரபு. ஆனால் நாம் இன்று காண்பது என்ன? உற்சவர்கள் காணமல் போனாலும், காப்பகத்தில் சிறை வைக்கப்பட்டாலும் மூலவருக்குப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதுவா நாம் மரபைக் காக்கும் லட்சணம் ?

தற்கால சூழ்நிலையில் நேர்மையாக செயல் படுபவர்களைப் பார்ப்பதே அரிது. அவ்வாறு செயல் படவும் விடமாட்டார்கள். இத்தனை தடைகளையும் தாண்டி மூர்த்திகளை மீட்டு வரும் ஆய்வுத்துறை அதிகாரிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அது நமது கடமையும் கூட.அவர்களுக்கு நமது சிரம்தாழ்ந்த நன்றிகள் பல.  அவர்கள் எல்லா நலன்களும் பெற எல்லாம் வல்ல ஆடல்வல்லானை சிந்தித்து வணங்கி வேண்டுகிறோம்.