Sunday, August 13, 2017

தரைமட்டம் ஆக்கப்பட்ட மானம்பாடி சிவாலயம்

மானம்பாடி ஆலயம் - பழைய படம் 
கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பெருவழியில் சாலை ஓரமாகவே இருப்பது மானம்பாடி என்ற ஊரில் உள்ள ( இருந்த ?? ) சிவாலயம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசீய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய வேண்டி இக்கோயிலின் மதிலை இடித்து விட்டுப்  பிராகாரத்தின் ஒரு பகுதியையும் சாலையோடு இணைக்க முன்வந்தார்கள் நெடுஞ்சாலைத் துறையினர். மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட இக்கிராமத்தில் இதனைத் தட்டி கேட்க முடியாது போகவே, வெளியூர் அன்பர்களின் பெரு  முயற்சியால் கோயில் காப்பாற்றப்பட்டது. 

பழைய முன்புறத் தோற்றம் 
அந்த நாட்களில் கோயில் பல இடங்களில் சிதிலமாகியும், விமானங்கள் வேரோடியதால் முன் மண்டபம் பிளவு ஏற்பட்டும் மேற்புறம் புதர்களோடு காணப்பட்டது. ஒரு கால பூஜையே நடந்து வந்த நிலையில் யாரும் திருப்பணி செய்ய முன்வரவில்லை. வரலாறு மற்றும் கல்வெட்டு ஆர்வலர்கள் இக்கோயில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்று கட்டுரை எழுதினார்களே ஒழிய, திருப்பணிக்கான முயற்சியை எவரும் மேற்கொள்ளவில்லை. 

பழுதடைந்த விமானம் 
ஒரு வழியாகத்  திருப்பணியானது சுமார் ஓராண்டு முன் நடை பெறத் தொடங்கியது.  அந்த சமயத்தில் கோயிலுக்குச் சென்ற போது , ஆலய நிர்மாணக் கற்களை எண்களிட்டு ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து இடைவெளியில் ஊடுருவியிருந்த வேர்களை அகற்றியபின், உரிய எண்ணின் படி, கற்களை அதே இடங்களில் அமைத்துக் கட்டப்போவதாகத் தெரிவித்தனர். 

சில மாதங்கள் முன்பு அந்த வழியில் போகும் போது பார்த்தால், அங்கே கோயில் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது தெரிய வந்தது. கோஷ்டத்தில்  இருந்த  மூர்த்திகளும், மூல மூர்த்திகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. இதைப்பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் தமிழ் நாட்டிலுள்ள புராதனக் கோயில்களின் தற்போதய நிலை பற்றி யுநெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கோயில் தரை மட்டமாக ஆக்கப்பட்டதைப் பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கு இந்து அறநிலையத் துறையும், தொல்பொருள் துறையும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். சாலை விரிவாக்கத்தின்போது தான் மௌனிகளாக இருந்தார்கள். இப்போதாவது வாயைத் திறக்கக் கூடாதா? தமிழர் பண்பாடு, கலை,  நாகரீகம், வரலாறு, கல்வெட்டு என்றெல்லாம் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொள்பவர்கள் எதற்காகக் கவலைப் படப் போகிறார்கள் ?  இராஜேந்திரனின் ஆயிரமாண்டைக் கொண்டாடுவதாகக் கூறிக் கொண்டு பலனை அனுபவித்தவர்கள் ஆயிற்றே ! ஆகவே சிவனடியார்களது மனம் மட்டுமே வேதனைப் படுகிறது. 

தரை மட்டமாக இடித்தவர்கள் மீண்டும் அதே இடத்தில் அதே கற்களைக் கொண்டு பழமை மாறாமல் கட்டுவார்களா? அப்படியானால் வேலை எப்பொழுது துவங்கி எப்பொழுது நிறைவு பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெறும்? அதிகாரிகள் யாராவது பதில் சொல்ல முன் வருவார்களா? 
    

Thursday, August 3, 2017

ஆலயத் திருட்டுக்கு அதிகாரிகள் பொறுப்பு ஏற்பரா ?

ஆலயங்களில் திருட்டுக்கள்  தொடர்ந்து நடைபெற்றும், தேவையான தடுப்பு நடவடிக்கை  எடுக்க அரசாங்கம் முனைவதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உற்சவ மூர்த்திகளை ஒரு பெரிய கோவிலில் வைத்து ஆண்டுக்கணக்கில் புழுதி பட வைத்துப் , பூஜைகள் இல்லாமல் பூட்டி வைப்பது ஒன்றுதான். கிராமக் கோயில்களில் உள்ள  மூர்த்திகளுக்குத்தான் இந்த நிலை என்பதில்லை. நகரத்தில் உள்ள பெரிய கோயில் ஒன்றிலும் இதே நிலை என்பதை அண்மையில் அறிந்து மனம் குமுறியது. இவ்வளவுக்கும் நிர்வாக அதிகாரியின் அலுவலகம் இயங்கும் கோயில் அது. காணாமல் போனால் நாம் அல்லவா பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தால் அனைத்தையும் ஒரே அறையில் பாது காப்பு என்ற பெயரில்  வைத்து ப் பூட்டி  விடுகிறார்கள். அந்நாளில் மூர்த்திகளை இதற்காகவா கோயில்களுக்கு வடிவமைத்துக் கொடுத்தார்கள்? அப்படியானால், கோயில் நிலங்களையும், நிலங்களையும், நகைகளையும்,கட்டிடங்களையும் பாதுகாக்காமல் எதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே கேள்வி. தாங்கள் அமர்ந்திருக்கும் ஆலயங்களுக்குள் நடைபெறுவதையே மேற்பார்வை இடாதபோது தேரடியில் உள்ள தேர்சிற்பங்கள் களவாடப் படுவதற்காகவா  கவலைப் படப் போகிறார்கள் ? 

சென்ற வாரம் கும்பகோணம் கும்பேசுவர சுவாமி கோயிலில் உள்ப்ராகாரத்தில் இருந்த லிங்க பாணம் காணாமல் போய் விட்டது என்ற பத்திரிக்கை செய்தி பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் யாராவது குரல் கொடுத்தார்களா என்றால் இல்லை என்ற பதிலே வரும். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வருகை தரும் இந்தக் கோயிலிலேயே  பாதுகாப்பு இல்லை என்றால் கிராமக் கோயில்களைப் பற்றிச் சொல்வானேன்?  பாதுகாப்புக்காக இரும்புக் கதவு அமைத்துக் கொடுத்தால் அதை மூடிப் பூட்டி வைப்பதில்லை. நிர்வாகம் செய்ய வேண்டிய அதிகாரி இதுபோன்ற குறைபாடுகளை அவ்வப்போது நேரில் கண்டறிந்து திருத்தியிருந்தால் இப்படி நடந்திருக்குமா? தமது சவுகரியப்பட்ட நேரத்துக்கு வருகை தந்துவிட்டுக் கோயிலுக்குள் செல்லாமல், அலுவலகத்தோடு திரும்பிவிடும் அதிகாரிகளைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். 

தெய்வத்திற்கு அஞ்சி இதுபோன்ற பாவச் செயல்கள் செய்யாமல் இருந்த காலம் போய், விதி முறைகள் மீறுவது என்பது வாடிக்கை ஆகி விட்டது. கோபுர வாசல் வழியாக அனைத்து வாகனங்களும் கொடி மரம் வரையில் வருகின்றன. கண் காணிப்பு கேமரா பொருத்துவதோடு சரி. யார் வருகிறார்கள் என்று கண் காணிக்கப்படுவதில்லை. பிறகு ஏன் இப்படித் தெண்டச் செலவு செய்கிறார்கள்? அர்த்தமண்டபம் வரையில் அனைவரும் செல்ல அனுமதிக்கும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

இவ்வாறு புலம்பிப் ,போஸ்ட் மார்டம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தீர்வு ஏதாவது உண்டா என்று பார்ப்போம். முதலாவதாக இந்தப் பிரச்னைக்கு மூல காரணம் போதிய பாதுகாப்பு இல்லாததும், மேற்பார்வை செய்யப் படாததும், பொறுப்பு வழங்கப்படாததும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். இந்த மூன்றிலும், பொறுப்பு அளிக்கப்பட்டால் மீதி இரண்டும் தற்காப்புக்காகவாவது நடத்திக் கொள்ளப் பட்டுவிடும்.  

ஒவ்வொரு அதிகாரிக்கும் ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் வழங்கப்படும்போது அவர்களைப் பொறுப்பு உடையவர்களாக ஆக்க வேண்டும். ஆலய சொத்து காணாமல் போனால் நிர்வாக அதிகாரியே அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அந்தப்பகுதி துணை/இணை கமிஷனர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். அறநிலையத்துறை அமைச்சரோ , கமிஷனரோ (ஆணையரோ) பொறுப்பு ஏற்காத நிலையில் இவர்களாவது பொறுப்பு ஏற்கட்டுமே! துறையைத் தலைமை வகிப்பவர் ராஜினாமா செய்வதற்கு அவர்  லால்பகதூர் சாஸ்திரியா என்ன? குறைந்த பட்சம் அவர்கள் களவாடப்பட்ட கோயில்களுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்கிறார்களா பார்ப்போம் . 

இனியாகிலும் ஓர் விதி செய்வோம். கோயிலில் திருட்டு நடந்தால் நிர்வாக அதிகாரி,துணை மற்றும் இணை கமிஷனர்கள் மறுநாளே தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுப் பின்னர் இட மாற்றம் செய்யப் படவேண்டும். இவ்வாறு பொறுப்பு வந்தவுடன் அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட வழி ஏற்படுகிறது. இப்போது நடைபெறுவதுபோலப்  போலீசிடம் புகார் அளித்துவிட்டு,சம்பந்தப்படாதவர்களைப் போலக்  காற்றாடியின் கீழ் அமர்ந்துகொண்டு சொந்த வேலையைப் பார்க்க முடியாது அல்லவா? தற்போதைய நிலை என்னவென்றால் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் சிப்பந்திகளே பலி கடாக்களாக ஆக்கப் படுகின்றனர். நாம் நமது புராதனப் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றாக இழந்து வரும்போதும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அறநிலையத்துறை என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படும். அரசாங்கத்தின் காதுகளில் விழும் வரை இந்த ஆராய்ச்சி மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.