நந்தியே சாட்சி |
இதற்கிடையில், உண்டியல் வருமானத்தைக் கோயில்களுக்குச் செலவிடுவதோடு, அரசின் பிற செலவுகளுக்கும் பயன் படுத்தப் படுகிறது என்ற புகார் எழுகிறது. இதனால் தணிக்கை என்ற ஒன்று ஆண்டுதோறும் முறையாக நடைபெறுகிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
பல கோயில்களில் உண்டியல் நிரம்பி வழியும்போதும் திறந்து எண்ணுவதற்கு அதிகாரிகள் வருவதில்லை என்று மக்கள் தரப்பில் குறை கூறப்படுகிறது. உண்டியலில் கால் வாசியோ அல்லது அரைவாசியோ காணிக்கை வந்தவுடன் திறந்து எண்ணுவதால் பல நன்மைகள் உண்டு. மொத்தமாகப் பெரிய தொகை களவாடப்படுவது தவிர்க்கப்படுகிறது. எண்ணுவதற்கான நேரமும் குறையும். எண்ணும் நபர்களும் அதிகம் தேவைப் படாததால் முறைகேடு நடப்பது குறைக்கப்படும். எண்ணுவதற்காகவாவது அதிகாரிகள் கோயிலுக்கு வருவார்கள் அல்லவா?
பிரபல தொலைக் காட்சி ஒன்றில் கோயில் உண்டியல் எண்ணப்படும்போது ,அதிகாரி ஒருவர் நோட்டுக் கட்டுக்களைத் தனது பான்ட் பாக்கெட்டில் பதுக்கிக் கொண்டதை (வீ டியோ காமிராவில் பதிவானதைக்)காட்டினார்கள். அப்படிக் களவாடப்பட்ட தொகை இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இதை விடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்? ஆதாரத்துடன் வெளியாகிய தகவலுக்குத் தண்டனை பெற வேண்டிய அந்த அதிகாரியை மற்றொரு பிரபலமான கோயிலுக்கு மாற்றியதோடு பதவி உயர்வும் கொடுத்திருக்கிறார்களாம்! அங்கு போயும் உண்டியல் பணத்தில் கை வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எந்த தண்டனையும் வழங்கப்படாததற்கு எதற்காக மூலைக்கு மூலை காமிரா அமைத்துத் தண்டச் செலவு செய்கிறார்கள்? திருடன் உள்ளே இருந்தால் ஒரு நீதி. வெளியிலிருந்து வந்தால் வேறு நீதியா?
டியூப் லைட்டில் கூடப் பெயர் போட்டுக் கொள்கிறார்கள் என்று கிண்டல் பேசுபவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவ்வாறு போடாவிட்டால், நிர்வாகம் வாங்கிப் போட்டதாக அதிகாரி பொய்க் கணக்கு எழுதிவிட்டு, அதோடு பொய் ரசீதையும் இணைத்து விடுவார் என்ற ஐயமே காரணம். இந்த அதிகாரிகள் ஒன்றும் குறைவாக சம்பளம் வாங்குவதில்லை. அரசாங்க வேலை மற்றும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே உண்டியல், கட்டிட ஒப்பந்தக்காரர்கள், கோயில் மனைகள் மூலமும் நிலங்கள் மூலமும்,பெற வேண்டிய வருமானங்களைக் கேட்காமல் காலம் தாழ்த்தியும் ஆதாயம் அடைகிறார்கள். இவர்களுள் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கலாம். எனினும் சில புல்லுருவிகளின் செயலால் மொத்தத் துறையே தலை குனிந்து நிற்கிறது. இப்படி இருந்தும், அரசாங்கம் அறநிலையத் துறையை விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பானேன் என்று கேட்கலாம். ஏனென்றால் அது பொன் முட்டை இடும் வாத்து.