முன்னோர்களின் கனவை இப்படிச் சிதைய விடலாமா ? |
இந்த அசுர வேகத்திற்குத் துணையாகப் புதுப் புதுத் தொழில்களால் கவரப்படும் இளைய சமுதாயம் எவ்வாறு நமது பழம் பெருமைகளை அறிய முடியும்? இவை எல்லாம் தவிர்க்க முடியாத மாற்றங்கள் என்கிறார்கள். ஒளி மயமான எதிர் காலம் என்று கற்பனை செய்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம். இருண்ட காலத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை அறியாத அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?
ஊரை விட்டுப் பெரும்பாலானோர் நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்போது மிகச் சிலரே "எனது ஆயுள் காலம் முடியும் வரை பூர்வீக கிராமத்தை விட்டுப் போக மாட்டேன் " என்று உறுதியாய் இருக்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் கிராமக் கோயில்களில் பல பரம்பரைகளாகப் பணி செய்பவர்கள். உலகம் இவர்களை அங்கீகரிக்காதபோதும் இந்த உறுதியிலிருந்து அவர்கள் தளர்வதில்லை. அப்படியும் வறுமையின் விளிம்புக்கே சென்றவர்கள் அந்த உறுதியைக் கைவிடும் கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இதைத் தான் நாம் பல கிராமங்களில் பார்க்க முடிகிறது.
கிராமத்தை விட்டு நகருக்குச் சென்றது போக இப்போது நாட்டை விட்டே செல்லத் தொடங்கிய நாளிலும் சிலர் அங்கு இருந்து கொண்டே நமது பண்டைய கலாசாரத்தின் மீது காட்டும் ஈடுபாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது கோயில்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார்கள். எனவே, ஆலயத் திருப்பணியும் வெளியூர் மற்றும் வெளி நாட்டு அன்பர்களாலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது. இதைப் பார்த்த பிறகாவது கிராம மக்கள் தினமும் தங்கள் ஊர்க் கோவிலுக்கு வருகை தரமாட்டார்களா என்ற ஒன்றையே இந்த நன் கொடையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முற்றோதுதல், உழவாரப் பணிகள், கயிலாய வாத்தியம் இசைத்தல் போன்ற பல்வேறு பணிகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் பிரபலமான கோவில்களில் நடை பெறுகின்றன. பல சிவாலயங்கள் அமைந்துள்ள கிராமங்கள் வருவோர் இல்லாததோடு பிற மதத்தோர் பெரும்பான்மையாக வாழும் ஊர்களாகி வருவது அனைவரும் அறிந்த செய்தி ஆகும். மேற்கண்ட பணிகளை நகரங்களில் செய்வதை விட இது போன்ற ஊர்களில் செய்யலாம் அல்லவா? நீடூர், சக்கரப்பள்ளி, இலம்பயங்கோட்டுர்,திருப்பாசூர் , தலையாலங்காடு,திருக் கோழம்பம் போன்ற தலங்களில் அடியார்கள் இவற்றை மேற்கொள்ளலாம். இங்கெல்லாம் ஏதோ ஒரு நாள் தேவாரம் படித்த சிலர் போவதை விட , ஆலயப் பணி செய்யும் அன்பர்கள் குழுக்களாக அடிக்கடிச் சென்றால் அவை மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு உண்டு. தலைக்கு மேல் போன பிறகு அங்கலாய்ப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததோடு நமது கடமையும் ஆகிப் பிறருக்கு நல்வழி காட்டும். அதனால் அங்குள்ள சன்னதிகளிலும் தீபம் எரியும். அதைச் செய்யாத வரையில் எந்த வகையிலும் நமது புராதன ஆலயங்கள் நம் கண்ணுக்கு முன்னால் அழிவதைத் தவிர்க்க முடியாது. கை நிறைய சம்பாதிக்கும் பூர்வீகக் குடி மக்களும் தொண்டர் குழாங்களும் சிந்திப்பார்களா? நமது பூர்வீகக் கலாசாரம் பொலிவும் புனிதமும்பெறத் திருவருள் துணை நிற்பதாக.