Monday, June 20, 2016

கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டுமே

நமது கோயில்கள் வழிபாட்டுக்கு உரிய இடங்களாகவே மட்டும்  இருக்கவேண்டும். ஆனால் நாம் இன்று காண்பது என்ன ?  ஊர் வம்பு பேசவும் காற்று வாங்கும்  இடங்களாகவும் பலர்  அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மன அமைதியை நாடி வருபவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இந்த நிலை பெரும்பாலும் நகர்ப்புறக்  கோயில்களில் அதிகம். சில கோவில்களில் எழுதி  வைத்திருக்கிறார்கள் , " பரம்பொருளின் நாமத்தைத்தவிர வேறொன்றும்  ஆலயத்தில்  பேச  வேண்டாம் "  என்று.  கேட்டால் தானே?  நான் பேசுவதைக் கேட்க இவர்கள்  யார் என்பார்கள். சன்னதியை மறைத்துக் கொண்டு பிறரைத்  தரிசிக்க விடாமல்  செய்வார்கள். அண்மையில் நடைபெற்ற திருவாரூர் தேர் விழாவின் போது தேர் சக்கரத்தருகில்  எவரும்  நிற்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப ஒலிபெருக்கி  மூலம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு இருந்தார்கள். சக்கரத்திற்கு அருகில் நிற்பது ஆபத்து  என்று சொன்னாலும் கேட்காமல் அடம் பிடிப்பவர்களை என்ன  செய்வது ? கோயில் வழிபாட்டில் கூடவா ஒழுங்கீனத்தைக்  கையாள  வேண்டும் ? 

பல கோயில்களில்  படப்பிடிப்பு தாராளமாக நடத்தப்படுகிறது.  அப்படி நடக்கும்போது தரிசிக்க வருபவர்களை  உள்ளே நுழைய விடாமல்  படப்பிடிப்புக் குழுவினர் தடுக்கிறார்கள். அப்படித் தடுக்க இவர்களுக்கு ஏது அதிகாரம் என்று புரியவில்லை. சின்னத்திரைப் படப்பிடிப்பும் இதேபோல நடந்து வருகிறது. எதிர்ப்பவர்களைக் காணோம். அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு கோயில் பின்னணியில் கண்ட கண்ட நடனங்களைக் கொண்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சில நோட்டுக் கற்றைகளை வீசி  அனுமதி பெற்று விடுகின்றனர். இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்ன  என்றால் கோயிலுக்கு வந்தவர்கள்  படப்பிடிப்பை வேடிக்கை  பார்ப்பதுதான். 

அண்மையில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம்  கோவிலில் விக்கிரகங்கள் களவாடுவதை மையக்  கருத்தாகக் கொண்டு இருப்பதாக அறிகிறோம். இந்த  தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் சமூகப் பொறுப்பு என்ற ஒன்றே கிடையாதா? நாடு எக்கேடு கேட்டாலும் காசு சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்களா? இவர்களுக்கு சிந்திப்பதற்கு வேறு கதையே கிடைக்கவில்லையா? சதித் திட்டம் தீட்டுவதற்கு சின்னத்திரையில் கோயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களைக்  கேட்கிறோம். நீங்கள்  மாறப்போவதில்லை. சின்னஞ் சிறிய வயதினரைப் பாழ் செய்தது போதும். கோவிலில் களவாடக்  கற்றுக்  கொடுக்காதீர்கள். கோடியில் ஒருவன் அதைப் பார்த்து வீணாகப் போனாலும் நாடு  தாங்காது. நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள்.  

களவு போவது ஒரு பக்கம்  போதாததற்கு விக்கிரகத்தையே மாற்றும்  ஏற்பாடுகள் அற நிலையத்துறையால் செய்யப்படுகிறது. இதைக்  கண்டித்து அடியார்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.  அதோடு நிறுத்தக்கூடாது. கோயில்கள் வியாபாரக் கூடங்களாக மாறுவதையும், படப்பிடிப்பு நிலையங்களாக  ஆவதையும் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும். கேட்பதற்கு யாரும் இல்லாததால் தானே இவ்வாறு படம் எடுக்கத் துணிகிறார்கள்?  அடியார் பெருமக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் மட்டுமே இதற்கு விடிவு காலம். 

Friday, June 3, 2016

இன்று நல்ல நாள்

" எல்லா நாட்களும் நல்ல நாட்களாக இருப்பதில்லை. அதேசமயத்தில் நல்லது ஒன்று கூட நடைபெறாத நாளே இருப்பதில்லை " என்ற ஒரு வாசகத்தை அண்மையில் படிக்க நேரிட்டது. அது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஏற்றது என்று அப்போது அவ்வளவாக விளங்கவில்லை. படித்த சில மணி நேரத்தில் வீட்டிற்குப் பசும்பால் கொடுப்பவர் ஒருவர் அடியேனிடம் வந்தார். அதுவரையில் ஒருவருக்கு ஒருவர் அளவளாமல் இருந்தும், அடியேனது கழுத்தில் இருந்த ருத்திராக்ஷத்தைப் பார்த்ததாலோ என்னவோ  அண்மையில் வந்து ஒரு கேள்வி கேட்டார். " ஐயா, ஒரு மாதம் முன்பு எனக்கு நான்கு முக ருத்திராக்ஷம் ஒன்று கிடைத்தது. அதை வீட்டில் உள்ள சிவன் படத்தருகில் வைத்திருந்தேன். என்னிடம் பதினொரு பசுக்கள் உள்ளன. நன்றாகப் போய்க் கொண்டிருந்த பால் வியாபாரம் திடீரென்று சரிவடையத் தொடங்கியது. அசைவம் சாப்பிடும் வீட்டில் ருத்திராக்ஷம் வைத்துக் கொண்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். அதை ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடலாமா? அல்லது தங்களிடமே வேண்டுமானாலும் கொடுத்து விடட்டுமா? " என்றார்.

அவரது பேச்சில் ஒரு வித பயம் கலந்திருப்பது தெரிந்தது. ருத்திராக்ஷம் போடுபவரிடம் அதைப் போட வேண்டாம் என்ற பதிலை எதிர் பார்க்கிறாரோ? ஒருவாறு அவரை சமாதானப் படுத்தத் துணிந்தோம். " நீங்கள் வாரம் ஒரு முறை அசைவம் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுவதாகச் சொல்கிறீர்கள். அசைவ உணவும் அப்படி ஒன்றும் மலிவாகக் கிடைப்பதில்லை என்று தெரிகிறது. மேலும் மனிதக் கழிவுகளும் ரசாயனக் கழிவுகளும் கொட்டப்படும் கடலில் பிடிபட்ட மீன்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவைகளாக இருந்தால் அம்மீன்களை உட்கொள்பவர்களுக்குக் கொடிய வியாதிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்கள். எனவே எந்த மாற்றத்தையும் உடனே செய்துவிடுவது கஷ்டம்தான். படிப்படியாகத் தான்  மாறியாக வேண்டும். உங்களைப் பொறுத்தவரையில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். உங்களைப் பார்த்து வீட்டில் உள்ளவர்களும் மாறலாம். முழுவதும்  மாறியபின் அந்த ருத்திராக்ஷத்தைக் கயிற்றில் கட்டிக் கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். பால் வியாபாரம் மட்டுமல்ல. எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள். குடும்பமும் செழிக்க ஆரம்பித்து விடும். அந்த நல்ல செய்தியை ஒரு மாதத்தில் நீங்களே வந்து சொல்வீர்கள் என்று நம்புகிறேன் " என்று கூறி விடை கூறி அனுப்பி வைத்தோம்.
 
இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ருத்திராக்ஷம் போடுவதையோ  அல்லது அதை வேறிடத்தில் கொடுத்து விடுவதையோ , வியாபார முன்னேற்றத்தையோ மட்டும் நாம் இங்கு கவனிப்பதை விட ருத்திராக்ஷம் இருக்கும் இடத்தில் தூய்மையும் பக்தியும் இருக்க வேண்டும் என்று அவர் உணரத் தொடங்கி விட்டார் அல்லவா? அதைப் பாராட்டியே ஆக வேண்டும். அதைப் போட்டுக் கொள்வதை நாகரீகச் சின்னமாக நினைத்து ஆட்டம் பாட்டம் போடுவதும் கேலிக் கூத்தாக்குவதும் வாடிக்கை ஆகிப் போய் விட்ட இக்காலத்தில் இப்படியும் சிலர் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாளையும் நல்ல நாளாக ஆக்கிய அந்த அன்பருக்கும் மறைந்திருந்து நம்மை ஆட்டுவிக்கும் அந்த இறைவனுக்கும் எந்த வகையில் நன்றி செலுத்துவது?