Thursday, April 14, 2016

அற நிலையத் துறை விளக்கம் தரட்டும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றை முகநூலில் ஒரு அன்பர் வெளியிட்டிருந்தார்.   தெய்வங்களுக்கு அணிவிக்க  வழங்கப்படும் நகைகள் பல கோயில்களில் களவு போவதும்,போலியாக மாற்றி வைக்கப்படுவதும் நடைபெறுவது தொடர்கதை ஆகி விட்டது. அது மட்டுமல்ல. பல கோயில்களில் கல்லாலும் பஞ்ச லோகத்தாலும் ஆன  மூர்த்திகள்  களவாடப்பட்டுள்ளன. இப்படி நகைகளும் மூர்த்திகளும் எத்தனை களவாடப்பட்டுள்ளன என்றும் எத்தனை மீட்கப்பட்டுள்ளன என்றும் இச்சட்டத்தின் மூலமாகக் கேட்கப்பட்டதற்கு அறநிலையத்துறை தந்துள்ள விவரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  இவ்வளவு நடைபெற்றும் அற நிலையத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

26.7.2010  தேதியிட்ட கடிதத்தில் தந்துள்ள தகவலின்படி 1999 ம் ஆண்டு முதல்  ஜூலை 2010 இடைப்பட்ட காலத்தில் 215 கோயில்களில் நகைத் திருட்டு நடைபெற்றுள்ளது. அதில் 16 கோயில்களின் நகைகளே மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 175 கற்சிலைகள் காணாமல் போனதில் 30  மட்டும் மீட்கப்பட்டுள்ளன. களவாடப்பட்ட 415 பஞ்சலோக விக்கிரகங்களில் 25 மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 1999 ம் ஆண்டுக்கு முன்பும், 2010 ம் ஆண்டுக்குப் பிறகும் நாம் இழந்தது எத்தனையோ!!




மேற்கண்ட கடிதத்தின் பெறுநர் விவரம்  முகநூலில் மறைக்கப்பட்டிருக்கிறது. எப்படியானாலும் தரப்பட்ட தகவல் உண்மையானது என்று நம்புவோம்.
அறநிலையத்துறை அமைக்கப்பட்டதன் நோக்கமே ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குத்தான். களவாடவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. இந்தத் திருட்டுக்களுக்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? துறையின் அமைச்சரா, அல்லது,ஆணையரா, அல்லது இணை/துணை கமிஷனர்களா அல்லது குறைந்த பட்சம் நிர்வாக அதிகாரியா? திருட்டு நடைபெற்றால் ஒருவரும் தண்டிக்கப்படுவதில்லை. இடமாற்றம் கூடச் செய்யப்படுவதில்லை.        " இதெல்லாம் ஆலயங்களில் நடைபெறுவது சாதாரணம் அப்பா.." என்று கூடச் சொல்லிவிட்டு மௌனிகளாகி விடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது இந்த அரசுத் துறை தேவையற்றது என்று சட்ட சபையில் எவரும் குரல் எழுப்புவதில்லை.

பஞ்சலோக மூர்த்திகள் களவாடப்படுவதைத் தடுப்பதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை வேறு ஒரு பெரிய கோயிலுக்கு இட மாற்றம் செய்கிறார்கள். எந்தக் கோயிலுக்காக அம்மூர்த்திகள் மன்னர்களால் செய்து வைக்கப்பட்டதோ  அவை இப்போது அங்கு இல்லாமல் போய் விடுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்றால் அவற்றை உரிய கோயிலுக்குக் கொண்டு வர அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. அர்ச்சகரும் ஊராரும் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்து கையெழுத்து இட வேண்டியிருக்கிறது. அதற்கான முழுச் செலவையும் ஊராரே ஏற்க வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரிக்கு வேறு என்னதான் பொறுப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

 ஐம்பொன் மூர்த்திகளை இட மாற்றம் செய்து வீட்டுப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். கற்சிலைகள் பராமரிப்பின்றி அனாதையாக விடப்படுவதை ஏன் இவர்கள் கண்டு கொள்வதில்லை? சுற்றுச் சுவர் கூட அமைக்கப் படாமல் , உளுத்துப் போன கதவுகளே காவல் என்று இருக்கும் அவல நிலைக்கு யார் காரணம்?  சில ஊர்களில் அந்தக் கதவுகளுக்கும் வருகை தரும்  சேவார்த்திகளே பூட்டு  வாங்கித்தருகிறார்கள். மின்சார பல்பு பழுதுபட்டால் அதையும் அவர்களே வழங்குகிறார்கள்.  இதெல்லாம் யார் செய்ய வேண்டியது? நில வருவாயைத்தான் மீட்டுத் தர முடியவில்லை. பாதுகாப்பையாவது பலப் படுத்தக் கூடாதா?

இனி உடனடியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுற்றுச் சுவர் அமைத்தல், பலமான விக்கிரகப் பாதுகாப்பு அறை , பாதுகாப்பு அலாரம், முழுநேரக் காவலர்கள் , நகைப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.  இவற்றைச்  செய்யாமல் களவு பற்றிப் போலீசாரிடம் தகவல் தந்துவிட்டால் கடமை முடிந்து விடாது.  கடமை தவறும் அரசுத் துறையால்  ஆலயங்கள் இழந்தவை ஏராளம். எஞ்சியவற்றையாவது பாதுகாக்க வேண்டாமா?  

Sunday, April 10, 2016

யாக சாலைக்குள் மொபைல் போன் வேண்டாமே

உலகம் எதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ அதன்படி நம்மை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. " உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்றார் வள்ளுவர். பொதுக் காரியங்களில் ஈடுபடும்போது இன்னமும் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டியிருக்கிறது. எத்தனையோ கண்கள் நம்மைப் பலவகைப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு பார்க்கின்றன என்பதை உணர வேண்டும். எனக்குப் பிடித்ததைச் செய்வேன் என்ற கொள்கையைத் தளர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிலும் ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் அதற்குரிய நியமங்களுடன் விளங்குவதையே மக்கள் விரும்புவர். இன்னும் சொல்லப்போனால், இறைவனைத் தீண்டி அன்றாடம் பூஜை செய்வோர்  பாரம்பர்யத்திலிருந்து சிறிது விலகினாலோ,அசிரத்தை காட்டினாலோ பார்ப்பவர்கள் முகம் சுளிக்க நேரிடுகிறது. எல்லோருக்கும் காலமாற்றத்தால் ஏற்படும் ஆசா பாசங்கள் எங்களுக்கும் ஏற்படுவது தவறா என்று வாதிடுவதால் உபயோகம் எதுவும் இல்லை.

“ முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்” என்று ஆதி சைவப் பெரு  மக்களைத் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்திருக்கிறார் சுந்தரர். அவ்வாறு தொகை அடியார் வரிசையில் வைத்துப் புகழப்படும் அளவுக்கு சிவபெருமானிடம்  மாறாத அன்பு பூண்டவர்கள் ஆதி சைவர்கள். தினையளவும் ஆகம வழியிலிருந்து மாறாமல் நியமத்துடன் பூஜைகள் செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நேர வாய்ப்பு உண்டு என்பதால் சிவாகம வழி பூஜை முடிவில் ஆசீர்வாதம் கூறும்போது மந்திர,தந்திர, கால, ,சிரத்தா,நியம லோபங்கள் (குற்றங்கள்) தற்செயலாக நிகழ்ந்து விட்டால் அதற்குப் பெருமானிடம் மன்னிப்பு வேண்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது அறிந்தே தவறு செய்யத் துணியலாமா?

கால நிலைமையால் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வந்த ஆலயங்கள் பலவற்றில் ஒரு கால பூஜையே நடக்கக் காண்கிறோம். அந்த ஒரு கால பூஜைக்கும் ஆபத்து வந்து விடும் சூழ்நிலை உருவாகிறது. இதற்கிடையில் பல ஆலயங்கள் திருப்பணி செய்யப்பட்டுக்  கும்பாபிஷேகம் நடைபெறுவது ஆறுதலான விஷயமாக இருந்தாலும் அவையும் நவீன மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

 இந்நாட்களில் சிவாசாரியப் பெருமக்களுக்கு ஓரளவு வருவாயைத் தருவது கும்பாபிஷேகங்களும் ஹோமங்களும் மட்டுமே. கிராமக் கோயில்களில் பணி செய்பவர்கள் இவற்றையே பெரும்பாலும் நம்பி அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அப்படி கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும்போது மேற்கண்ட லோபங்கள் நடைபெறாமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த வைபவத்தால் மூர்த்திகளின் சாந்நித்தியம் கூடுவதோடு, உலக நன்மையையும் கோரப்படுகிறது. அது சித்திக்க வேண்டுமானால் பங்குகொள்பவர்களது சிரத்தையும் நியமமும் முக்கியம் தானே?

சில ஊர்களில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற சிவாசார்யார்களுக்கு உரிய சம்பாவனை கொடுக்கப்படாமலோ,காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டோ அவர்களுக்கு மனவேதனையை அளிப்பது உண்மை தான்.பிரபலமான ஒரு கோயிலிலும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டதை ஒரு சிவாசாரியார் அண்மையில் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அதே ஆலயத்தில் அனேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறும்போது சில ஆசாரியர்கள் அங்கு வருகை தரும் முக்கிய புள்ளிகளோடு மொபைலில் படம் எடுத்துக் கொள்வதைக் கண்டு ஓர் அன்பர் முகநூலில் மனம் வருந்திக் குறிப்பிட்டிருக்கிறார். தங்களது கோயிலில் சிவராத்திரி பூஜை செய்த ஒருவர் மூலவரின் பக்கத்தில் நின்று கொண்டு படம் எடுத்து முக நூலில் வெளியிட்டிருக்கிறார். இவற்றைக் காணுபவர்கள்  என்ன நினைப்பார்கள் என்று எண்ணிப் பார்ப்பதோடு இந்த செய்கைகள் முறைதானா என்று தங்களுக்குள்ளே கேட்டுப்பார்ப்பது நல்லது எனக் கருதுகிறோம். யாக சாலையில் ஜோதிப் பிழம்பாகப் பெருமான் காட்சி அளிக்கும்போது அதனைக் கண்டு களித்து, வேத- ஆகம மந்திரங்களால் பெருமானைப் போற்ற வேண்டிய  கடமையிலிருந்து விலகுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?


இவ்வாறு சுட்டிக்காட்டுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இவ்வாறு எழுதுவதை நாம்  பல காலம் தவிர்த்து வந்த போதிலும் சமூக வலைத்தளங்களில் பலரும் எடுத்துக் காட்டும் போது இனியாவது அப்படி நேராதபடி திருத்திக் கொள்ள வேண்டும் என்பதால் எழுதும்படி ஆகி விட்டது. ஒரு சிலர் இவ்வாறு செய்வதால் ஆதிசைவ குலம் முழுவதையும் ஒன்றாகவே மக்கள் எடை போடுவார்கள் என்பதால் முன்னைக் காட்டிலும் அதிகக் கட்டுப்பாடு அவசியமாகிறது. யாக சாலை பூஜைகளின்போது மொபைலில் பேசுவதையோ,படம் எடுப்பதையோ பங்குகொள்ளும் சிவாச்சாரியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். எவ்வளவு பேர் இக்கருத்தை ஏற்பார்கள் என்று தெரியவில்லை. ஏற்க மறுக்கும் பட்சத்தில் கும்பாபிஷேக யாக சாலைகளில்  ஒருபுறத்தில் போட்டோ ஷாப்பும், மற்றொரு புறம் காப்பி பாரும் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். அதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சுவாமிதான் யாக சாலாப் பிரவேசம் செய்ய வேண்டும். மொபைல்போன் அல்ல!