Tuesday, January 12, 2016

குருவும் சிவமும்

காஞ்சி காமகோடி பெரியவர்கள் மொழி,இனம்,மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு  விளங்கி அனைவராலும் வணங்கப்பட்டவர்கள். தாம் வாழ்ந்த ஒரு நூற்றாண்டில் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களை நல்வழிப் படுத்தியவர்கள். அவரது எளிமை அனைவரையும் கவர்ந்தது. எல்லோரிடத்தும் சமமாகக் கருணை பாலித்த தனிப் பெருமை வாய்ந்தவர்கள் என்று சமய நம்பிக்கை அற்றவர்களும் ஏற்கும் அளவிற்கு நடந்து காட்டியவர்கள். குக்கிராமங்களுக்கும் நடந்தே சென்று எந்த வசதியும் இல்லாத அங்கு பல நாட்கள் தங்கிய பெருமையும் அவர்களைச் சாரும். அதே நேரத்தில் தனது நியமத்திலிருந்து கடுகளவும் தவறியதில்லை  மடத்தின் உயர்ந்த பாரம்பர்யத்தைக் காப்பதில் மிக்க அக்கறை காட்டியபடியால் குறுக்கு வழிகளையோ,மாற்று வழிகளையோ மக்களுக்கு ஒருபோதும் உபதேசித்தது கிடையாது. எனவே ஆதிசங்கரருக்குப் பின் வந்த ஆசார்யர்களில் இவருக்கும் சிறப்பிடம் உண்டு.

காஞ்சி மகான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்றும் பல தடவைகள் அவரை தரிசனம் செய்தோம் என்றும் அப்போது பெற்ற அனுபவங்கள் பற்றியும் நம்மில் அநேகர் பகிர்ந்து கொள்வது உண்டு. பெரியவர்கள் ஸித்தி ஆனாலும் இன்னும் நம்மிடையே கருணை பாலித்து வருவதாகப் பலர் மனம் நெகிழ்ந்து கூறுவதைக் கேட்கிறோம்.

காமகோடி பீடத்தில் ஆசார்யர்களாகத் திகழ்ந்த பலரது அதிஷ்டானங்கள் பல ஊர்களில் உள்ளன. கும்பகோணம்,கலவை,இளையாத்தங்குடி போன்ற இடங்களில் உள்ள அதிஷ்டானங்களுக்குப் பல முறை சென்று தங்கி குரு பக்தியின் முக்கியத்தைக் காட்டியதோடு, வடவம்பலம் என்ற ஊரில் ஒரு ஆச்சார்யரின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தியும் பெரியவர்கள் காட்டி அருளினார்கள்.

குருவே சிவத்தைக் காட்டுபவர். ஆகவே குரு மூலமாக மந்திரோபதேசம் செய்துகொள்வது நமது தேசத்தில் பன்னெடுங் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உபதேசம் செய்த குருவை தியானித்த பிறகு மூல மந்திர ஜபம் செய்வது வழக்கம். இதன் மூலம் மூல மந்திரத்திற்குரிய தேவதையின் அருள் சுலபமாகக் கிடைத்து விடுகிறது. ஆகவே நம்மைத் தெய்வத்திடம் எளிதில் கொண்டு செல்லும் ஏணியாக குரு விளங்குவதால் அவரை முதலில் வணங்க வேண்டும் என்ற கருத்தில் மாதா,பிதாவுக்கு அடுத்தபடியாகக் குருவைக் குறிப்பிட்டார்கள் நமது முன்னோர்கள்.

இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். நம்மை இறைவனிடம் இணைக்கும் பாலமாகக் கருதி குருவை வணங்க வேண்டும் என்ற மையக் கருத்தை மறந்து விடக் கூடாது. அதனால்தான் தவ வலிமை மிக்க முனிவர்களும் பிற மகான்களும் சித்தர்களும் தங்களால் எதை வேண்டுமானாலும்  செய்ய முடிந்த போதிலும் தாங்களே கடவுள் என்றும் தங்களையே வழிபட வேண்டும் எனும் ஒருபோதும் கூறியதில்லை. அப்படிக் கூறியவர்கள் வீழ்ச்சி அடைந்தார்கள் என்று புராணங்கள் வாயிலாக அறிகிறோம். காஞ்சி மகானிடம் தங்களது குறைகளைக் கூறுபவர்களுக்குப் பெரியவர் தந்த ஆறுதல் , " இன்று பூஜையில் சந்திரமௌலீசுவரரிடம் சொல்லி விடுகிறேன், கவலைப் படாதே " என்பதுதான்.  முக்தி வரம் வேண்டி வந்த செட்டியார் தம்பதிகளைத் திருவாலங் காட்டிற்குச் சென்று அங்கு காரைக்கால் அம்மைக்கு முக்தி வழங்கிய இரத்தின சபாபதியிடம் அனுப்பி வைத்தவர் நம் பெரியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

தேவாரம் பாடிய ஞானசம்பந்தரும் தான் பாடியவை அனைத்தும் சிவ வாக்கே என்பதை " எனது உரை தனது உரையாக" எனப்பாடுகிறார். " எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே ' எனப்பாடியவர் அவர் . நாம் அவரை சமயாசாரியாராகக் கொண்டாடினாலும் அவர் நமக்கு சிவநெறியே பவத்தை நீக்கும் வழி எனக் காட்டினார்.

குருவினிடத்தில் உள்ள அதீதமான பக்தி சில சமயங்களில் பல வகையாக வெளிப்படுகிறது. சிலர் குருவுக்குத் தாங்கள் வசிக்கும் பகுதியில் மணி மண்டபம் கட்டுகிறார்கள். இன்னும் சிலர் அவரை தெய்வத்திற்கு சமமான நிலையில் வைத்து வழிபடுகிறார்கள். சமய நூல்களில் தெய்வத்தின் மீது பாடப் பெற்ற பகுதிகளைச் சற்று மாற்றி குருவின் மீது அமைத்து விடுகிறார்கள். "தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற திருவாசக வரிகள், " தென்னாடுடைய பெரியவா போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி " என்று மாற்றப்படுகின்றன. பெரியவர் படுத்த நிலையில் உள்ள படத்தை சுருட்டுப் பள்ளி சுவாமியின் படத்தோடு வெளியிட்டு பெரியவரே சிவன் என்ற வாசகங்கள் எழுதப்படுகின்றன.

அண்மையியில் ஒரு நண்பர் அனுப்பிய படத்தில் காமாக்ஷியின் முன்புள்ள ஸ்ரீ  சக்கரத்தின் மீது பெரியவர்  அமர்ந்திருப்பதுபோல்  வரையப்பட்டிருந்தது. அனுப்பியவரோ நம்மைப் போலப் பெரியவரிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். அவரது ஒரே ஆதங்கம், இப்படி தெய்வத்தின் இடத்தில் குருவை வைத்து தெய்வ வழிபாட்டை மாற்றுவதோடு காஞ்சி மடத்தின் புகழை மங்கச் செய்கிறார்களே என்பதுதான் . சிலருக்கு இக்கருத்து ஏற்க முடியாமல் இருக்கலாம். இருந்தாலும் அவரது கேள்விக்குத் தக்க விடையைத் தேடும் முயற்சி செய்யாமல் குரு ஆராதனையையும் தெய்வ வழிபாட்டையும் இரு கண்களாகக் கொண்டு பக்தி செலுத்தலாம் அல்லவா?  இரு வழிபாடுகளும் முக்கியமானவை என்றாலும் நிறைவாக தெய்வத்திடமே நம்மைச்  செலுத்துபவை. ஆகவே ஒன்றின் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்ப வேண்டிய அவசியமே இல்லை

4 comments:

  1. Thanks for highlighting this key distinction. Well written

    Namahshivaya

    Ganesh

    ReplyDelete
  2. Clearly brought out in a gentle manner

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஸனாதன மார்க்கத்தின் பல கிளைகளிலிருந்து தத்தம் கடமைகளை ஆற்றும் பெரியோர்களும் என்னைப் போன்ற பல ஸாமான்யர்களும் மஹா பெரியவாளை தரிசிப்பதிலும் அதிலும் முக்கியமாக அவர் சிந்தனைகளை கிரஹிப்பதிலும் காட்டும் ஆர்வம் எல்லோருக்கும் நல்லதே செய்யும். அவரவர் முன்னோர்கள் பற்றிய வழிப்படி தெய்வவழிப் பாட்டைத் தொடரவே மஹா பெரியவாளின் புத்திமதியும் விருப்பமும் இருந்து வந்தன. அவரையே தெய்வமாக ஆராதிப்பதில் அவருக்கே சம்மதம் இருந்திருக்க நியாயமில்லை தான்.

    ReplyDelete