Wednesday, October 28, 2015

பாடல் பெற்ற தலங்கள் பொலிவிழக்க விடலாமா?

திருக்கருப்பறியலூர் என்பது திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப்  பாடல் பெற்ற சிவஸ்தலம். தற்போது தலைஞாயிறு என்று மக்களால் அழைக்கப்பெறும் இத்தலம், வைதீஸ்வரன் கோயிலில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் பட்டவர்த்திக்கு முன்பாக உள்ள சர்க்கரை  ஆலையை ஒட்டி வடக்கெ செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது. சுவாமிக்குக் குற்றம் பொறுத்த நாதர் என்றும் அம்பிகைக்குக் கோல்வளை நாயகி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சுவாமி-அம்பாள் சன்னதிகள் சற்று உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளன. சுவாமியின்  கர்ப்ப  கோஷ் டங்களில் விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன்,துர்க்கை ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் கட்டுமலை அமைப்பைக் காணலாம். இது சீர்காழி ஆலயத்தை நினைவு படுத்துவதாக உள்ளது. படி ஏறிச்  சென்றால், தோணியப்பர் சன்னதியும் அதற்கும் மேலே மரப்படிகளில் ஏறினால்  சட்டநாத சுவாமியின் சந்நதிகளையும் தரிசிக்கலாம்.  அற்புதமான சோழர்காலக் கட்டிடக்  கலையைக்  கண்டு வியக்கிறோம். படிகளில் இறங்கி வந்து பிராகாரத்தை  வலம் வரத் துவங்கினால் ஸ்தல விருக்ஷமான முல்லையையும் அதன் அருகில் சிவலிங்க மூர்த்தியையும் தரிசிக்கிறோம்.

இப்படிப்பட்ட சிறப்புக்களைக் கொண்ட இத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.  நுழை வாயிலில் உள்ள மூன்று நிலைக்  கோபுரம் மரங்கள் வேரூன்றியதால் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்நிலை நீடித்தால் கோபுரமே இடிந்து விழும் அபாயம் உள்ளது. தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள இத்திருக்கோயில் திருப்பணியும் கும்பாபிஷேகமும் கண்டு  ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என அறிகிறோம். அதாவது , நான்கு கும்பாபிஷேகங்கள் நடந்திருக்க வேண்டிய இவ்வாலயம் ஒரு கும்பாபிஷேகத்தைக் கூட இக்கால  கட்டத்தில்     காணவில்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. மேல்தளமும் மழைக்காலங்களில் ஒழுகுவதாக அறிகிறோம். இதே போன்று ஐம்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேகமும் திருப்பணியும் காணாது பழுது பட்ட நிலையில் இவ்வாதீனக் கோயில்கள் பல உள்ளன. எனவே  தனது நிர்வாகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் உடனடியாகத் திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நடைபெறத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சைவ உலக அடியார்  பெருமக்கள் சார்பில் கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம். 

Wednesday, October 14, 2015

பெண்மையைப் போற்றுவோம்


கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில், பிரமச்சாரி பூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை,சுமங்கலி பூஜை ஆகியவை  நடைபெறுவது வழக்கம். அதுபோலவே நவராத்திரியின் போதும் கன்னிப் பெண்களையும் சுமங்கலிகளையும் அம்பிகையாகவே பாவித்துப் பூஜிப்பது நடைபெறுகிறது. அம்பாளைப்  பத்து வயது உள்ள இளம் சிவப்பு நிறம் வாய்ந்த " கௌரி" என்றும், சதாசிவ பதிவ்ரதை என்றும் , சதாசிவ குடும்பினியாக லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. இவ்வாறு பாலாயை என்றும், சுமங்கல்யை என்றும் சொல்லும் சஹஸ்ரநாமம், " சுவாசின்யர்ச்சன    ப்ரீதாயை"  என்று  பரமேசுவரி விளங்குவதாகக்  கூறுவதை ஒட்டி,  நாமும் பழங்காலம் தொட்டே பெண்களைப் பராசக்தியின் அம்சமாகப்  போற்றி வருகிறோம். நமது ஆலயங்களிலும் , அறம் வளர்க்கும் அன்னையாய் தர்ம   ஸம்வர்த்தனி என்றும் , மங்களத்தைத் தரும் மங்களாம்பிகையாகவும், அஞ்சேல் என்று அபயமளிக்கும் அபயாம்பிகையாகவும், கருவைக் காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகையாகவும் , ஞானம் அளிக்கும் ஞானாம்பிகையாகவும் பலப்பல நாமங்களோடு அம்பிகை காக்ஷி அளிக்கிறாள்.

இன்று ஆலய வழிபாடுகளில் அதிகமாகப் பங்கேற்பவர்கள் பெண்கள் என்பது உண்மை. பிரதோஷம்,வெள்ளிக் கிழமை ,பௌர்ணமி, நவராத்திரி போன்ற நாட்களில் பெண்கள் அதிக அளவில் ஆலய தரிசனத்திற்கு வருகிறார்கள். இந்த ஸ்திரீ தர்மத்தால் தான் ஓரளவாவது நமது கலாசாரம் பாதுகாக்கப் படுகிறது. சைவத்தைப் பாதுகாத்தவர்களில் மங்கையர்க்கரசியாரும், அப்பரது தமக்கையான திலகவதியாரும் ஆற்றிய தொண்டை நாம் நினைவு கூர  வேண்டும்.  காலக் கோளாறினால் பல பெண்கள் தொலைக் காட்சி, திரைப்படங்கள் ஆகியவற்றால் கவரப்பட்டாலும் ஆலய வழிபாட்டிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியைத் தரும் விஷயம். இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே எழுந்து விடுகிறது.

பெண்கள் பெருவாரியாகப் பங்கேற்கும்  நவராத்திரி நாட்களில் வயதானவர்களே அதிகம் காணப்படுவதால் இம்மாற்றம் தற்காலக் கல்வி முறையால் ஏற்பட்டதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. வீடுவீடாகச் சென்று தேவியின் மீது கொலுவின் முன் அமர்ந்து பாடிவிட்டுப் பெரியவர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைத்த குழந்தைகள் இப்போது எங்கே? முன்கூட்டியே இத்தனை மணிக்கு வருகிறோம் என்று " அப்பாயின்ட் மென்ட் "  வாங்கிக்கொண்டல்லவா போக வேண்டி இருக்கிறது!  அப்படியே போனாலும் எல்லாமே செயற்கையாக , பக்தியில்லாத, வெளி -வேஷம் கொண்ட  படாடோபமாகவே எஞ்சுவதைப் பார்க்கிறோம்.

பெண்ணடிமை என்ற விலங்கை உடைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாதுகாப்பற்ற சுதந்திரத்தை அல்லவா அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம்! மேற்கத்திய கலாச்சாரமும், நவீனக் கல்வியும் இவ்வாறு புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டு  அஞ்ச வேண்டிய நாம் ,  ஆனந்தப் படும் பெற்றோர்களைத்தான்  பார்க்க வேண்டியிருக்கிறது.

தொலைக் காட்சியில் தொல்லைக் காட்சிகளே அதிகம்.   மனத்தைக் கெடுப்பதும் , குற்றங்கள் புரியத் தூண்டுவதும் இதனால் முன்பை விடத்  துரிதமாக்கப் படுகின்றன.வீட்டில் உள்ள பெண்களை உருப்படியான வேலை செய்ய விடாமல் மதியம் முதல் நள்ளிரவு வரை அடிமைப் படுத்தி விடுகிறார்கள்.  ஆம்! இதுவும் ஒருவகையில் அடிமைத்தனம் தான். பெண்ணடிமை பற்றிப் பேசுபவர்கள் இந்த அடிமை விலங்கை உடைக்கக் காணோமே! இதன் பாதிப்பு அவரவர்கள் வீடுகளில் நடக்கும்போதுதான் உணருவார்களோ என்னவோ! அப்படிப்பட்ட நிலையும் பல குடும்பங்களில் நடைபெறுவது ஆரம்பமாகி விட்டது.

முன்பெல்லாம் பள்ளிக்கூட அளவில் தவறுகள் அவ்வளவாக நடை பெறவில்லை. இப்போது அதுவும் சீரழிந்து வருவது பரிதாபம். ஒருவேளை ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில் படிப்பதால் இவ்வாறு நடக்கிறதா என்று தெரியவில்லை. தனித்தனியே பள்ளிகள் இருந்தது போக, மேலை நாட்டுக் கல்வியை இருபாலாரும் ஒரே பள்ளியில் கற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது அதோடு நிற்காமல் சினிமா பாணியில் உடை அணிவதும் ஊர் சுற்றுவதும் பெற்றோரை அவமதிப்பதுமாக  அதிகரித்து வருவதை யாராவது மறுக்க முடியுமா ?  கோடியில் ஒரு பெண் குழந்தைக்குக் கூட இதுபோன்ற நிலை வர நாம் அனுமதிக்கலாமா?  இவற்றை நியாயப் படுத்துபவர்கள் இருப்பதால் தான் தவறுகள் ஊக்குவிக்கப் படுகின்றன.  அக்கிரமங்கள் நாளடைவில்  தொடர் கின்றன.  போலீஸ் ஸ்டேஷன்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவற்றைச் சுட்டிகாட்டுபவர்களைப் பத்தாம் பசலிகள் என்றும், அடிப்படைவாதிகள் என்றும் பெயர் சூட்டி விட்டுப்  , பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டிப்பதாக அறிக்கை விட்டு விட்டுக் கண்களை மூடிக் கொண்டு இருப்பது இன்றைய அலங்கோலம்!

ராஜராஜனின் பெரியன்னை செம்பியன்மாதேவியார் போன்ற சிவபக்தியும் பதிபக்தியும் மிக்கவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் புண்ணிய பூமி இது. அது கறை  பட்டு விடக் கூடாது. சைவ மறு மலர்ச்சிக்காகத் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்த மங்கையர்க்கரசியார்  சேக்கிழார் பெருமானால் " குல தெய்வம்" என்று போற்றப்படுகிறார். அத்தனை பெருமை மிக்க நமது பாரம்பர்யம் வீணாகாமல் தடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. குழந்தைகளை நல்வழியில் வளர்க்கும் பெற்றோர்களாகப் பெற்றோர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொண்டு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகள் அவ்வழியையே பின்பற்றுவார்கள். நமது பாரம்பரியமும் காப்பாற்றப் பட்டுவிடும். ஈசனைப் பிரியா நாயகியான அம்பிகையின் அருள் முன் நிற்பதாக.

Thursday, October 1, 2015

எல்லாப் பிழையும் பொறுப்பாய்

பெரியவர்கள் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்த காலம் போய் தற்போது ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு புதிய வழியை அமைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இதற்குத் தனி மனிதர் சுதந்திரம் என்று பெயர் இட்டு விடுகிறார்கள்! தற்கால நீதியும் இதற்குத் துணை செய்வதால் எனக்குப் பிடித்ததை நான் செய்வேன் என்ற எண்ணம் தலை தூக்குகிறது. தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழைகளைப் பொறுப்பாயாக என்று இறைவனிடம் வேண்டிய காலம் போய் விட்டது. வேண்டுமென்றே தவறுகள் செய்யும் காலம் இது. என்னைப் பொறுத்தவரையில் அது தவறு அல்ல என்ற எதிர் வாதம் வேறு! ஆகவே யாரும் யாரையும் திருத்த முடியாது என்ற நிலை இப்போது உருவாகி விட்டது.

தான் வேறு வழியில் போவதோடு நிற்காமல் மற்றவரை ஏளனம் செய்வதையும்  குறை  கூறி எழுதுவதையும்  தொழிலாகக் கொண்டவர்களையும்  பார்க்கிறோம். இதனால் பழைய நெறி முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர். நாகரீக உலகம் அவர்களை ஏற்பதில்லை. எளிய வாழ்க்கை முறை  நாகரீக வாழ்க்கைக்கு முன் அடி பட்டு விடும் போல் இருக்கிறது. சமூகத்தில் ஒரு அந்தஸ்தை நாடுபவர்கள்  இந்த நாகரீகப் போர்வையைப் போர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எப்பொழுது இந்த நாகரீகம் வீட்டிலேயே ஆரம்பித்து விட்டதோ அப்பொழுதே பழைய வாழ்க்கை முறைகள் திரும்பிப் பார்க்கப் படுவதில்லை.

இந்த மாற்றங்கள் ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. " வேத நெறி தழைத்து ஒங்க " என்று திருமுறை பாடி விட்டு மறுகணமே " புரியாத பாசை நமக்கு எதற்கு? "  என்று கேள்வி எழுப்புகிறார்கள். வடமொழி புரியாத பாஷையாகவே இருக்கட்டும். தமிழை முற்றிலும் பொருள் உணர்ந்து இவர்கள் படிக்கிறார்களா? இந்த மொழி துவேஷம், கோயில் வழிபாட்டிலும் சடங்குகளிலும் காட்டப்பட்டுத் திருமுறைகளை ஓதிக் குடமுழுக்கு செய்வதும் , திருமணங்கள் செய்வதும், இறுதிச் சடங்குகள் செய்வதும் சில இடங்களில் ஆரம்பமாகி இருக்கிறது. இவை எல்லாம் மொழியின் மேல் உள்ள பற்று என்றா நினைத்தீர்கள்? இல்லவே இல்லை. தமிழில் செய்து வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களை அல்லவா  பார்க்கிறோம்!

திருவாசக முற்றோதல் , கயிலாய வாத்தியம் ஒலித்தல் என்பன போன்ற மாற்றங்களும் அண்மைக் காலத்தில் அரங்கேறியுள்ளன. திருவாசகத்தை முற்றோதுவது சிறப்பானது தான். அதனை ஒரே மூச்சாக அரை நாளில் வாசிப்பதால் எத்தனை பேருக்கு அதன் பொருள் புரியும்? இதை விடக் கொடுமை என்னவென்றால் உயிர் நீத்தவர்களின் அந்திமக் கிரியைகளுக்கும் திருவாசகம் ஓதப் படுவதுதான். இதுபோன்ற தவறான வழி காட்டுதல்களை மடாதிபதிகள் திருத்த வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தான் நினைத்ததை எல்லாம் செய்வது என்று ஆகி விட்டால் சமயத்திற்கென்று ஒரு  நெறி இல்லாது போய் விடும். ஊர் ஊராக அவர்கள் விஜயம் செய்து மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். கயிலாய வாத்தியக் குழுக்கள் வந்தவுடன் நாதஸ்வரங்கள் உறையில் இடப்படுகின்றன. மந்திர ஒலியோ தேவார இசையோ கேட்பதில்லை. இவையெல்லாம் ஆரம்பத்திலேயே திருத்தப்படாவிட்டால் ஆல  விருட்சம்  ஆகி சமயத்திற்கே ஆபத்து விளைவித்து விடும்.

மாற்றங்கள் கால நிலைமையால் ஏற்படுபவை என்பது உண்மைதான். ஆனால் அவற்றின் மூலம் தலை கீழான மாற்றங்கள் ஏற்படுமானால் எதிர்மறை விளைவுகள் ஏற்படக் கூடும். ஆலயங்களை  பயபக்தியுடன் அணுகாவிட்டால்  அதிகாரம்,ஆணவம், ஆகியவை தலைதூக்கி விடும். இறைவனுக்கும் தலை வணங்காதபடி அகம்பாவம் நம்மைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

திருநாவுக்கரசரது  தேவாரப் பாடலின் ஒரு பகுதியை நாம் இங்கு நினைவு கூர்வோம்:
...." எ(ன் )னை  ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய் ; பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்  பிழைத்தனகள்  எத்தனையும் பொறுத்தாய் அன்றே..."

  நாம் அன்றாடம் செய்யும் அக்கிரமங்களை இறைவன் ஒருவனால் மட்டுமே பொறுக்க முடியும். ஆனால்  பிழைகள் நாளடைவில் எல்லையில்லாமல் போய்க் கொண்டு இருக்கின்றன. " எல்லாப்  பிழையும்  பொறுத்து அருள்வாய்" என்று  இப்போதாவது பிழை பொறுத்து மன்னிக்க வேண்டி நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். நம்மைப் பிடித்த ஆணவ மலம் அப்போதுதான் அகலும்.