Wednesday, May 27, 2015

அரசு கைவிட்டால் ஆண்டவனே கதி

மத்திய அரசின் பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த அறிக்கையின் முழு விவரங்களும் இன்னமும் தெரியாவிட்டாலும், அதன் நோக்கம் ஓரளவு தெளிவாகவே புரிகிறது. அதாவது, பழைய கலைப் பொருள்களை வெளி நாடுகளுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு அதே நேரத்தில் உள்  நாட்டில் அவற்றை விற்க அனுமதி வழங்க யோசிப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறு சட்ட திருத்தம் கொண்டு வருவதால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்று நம்பினாலும், உள்நாட்டுக்குள் அவற்றை விற்கலாம் என்று அனுமதித்தால் நமது கலைப்பொருள்களுக்கும், பாதுகாப்பின்றி கிடக்கும் நமது கலைச் செல்வங்களுக்கும் ஆபத்து வரும் என்பதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. அதிக சிரமில்லாமல் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் பெருகி வரும் நிலையில் இப்படிப்பட்ட சட்டம் தேவையா ? கபூர் போன்ற கொள்ளைக் காரர்கள் அதிகரிக்கவே இது வகை செய்வதாக முடியும்.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தாலே "கலைப் பொருள் "  என்று சட்டம் இருக்கும்போது அதை மேலும் கிடுக்கிப்பிடியாக இறுக்கவேண்டுமே தவிர, தளர்த்தப்படக் கூடாது. கொள்ளைக் காரர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க வேண்டும். அவர்களைக் கொள்ளைக் காரர்கள் என்றே அழைக்க வேண்டும். ஆனால் நமது பத்திரிகைகளோ, புழல் சிறையில் இருக்கும் கபூரைக் " கில்லாடி கபூர் "  என்றும்  "  கடத்தல் மன்னன் " என்றும் வெட்கம் இல்லாமல் குறிப்பிடுகிறார்கள்.

நமது கிராமங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆலயங்களின் கலைச் செல்வங்கள் களவாடப் படும் தற்போதைய நிலையில், இதுபோன்ற சட்ட திருத்தம் பேராபத்தையே விளைவிக்கும். மாநில அளவில் அற  நிலையத்துறை  இதுபோன்ற கோயில்களுக்கு மதில் சுவர்களும் , உறுதியான  பாதுகாப்பு அறைகளும் ,பாதுகாவலர்களும் இருக்கும் நிலையை ஏற்படுத்தாமல் காலம் தள்ளுவதால் தான் இது போன்ற திருட்டுக்கள் நடை பெறுகின்றன. அப்படியானால் இந்தத் துறையை அரசாங்கம் நிர்வகிக்கக் கூடாது. நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையில் எழுப்ப வேண்டிய கேள்வி இது. இதுவரை யாரும் எழுப்பியதாகத் தெரியவில்லை!!

இப்பொழுது நாம் செய்யக் கூடியதெல்லாம் ஒன்று தான். மத்திய அரசு தனது இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மகஜர் தர வேண்டியது ஒவ்வொரு இறைநம்பிக்கை உள்ளவரும் செய்ய வேண்டிய கடமை. யார் எப்படிப் போனால் என்ன; நமக்கு வேண்டியது   பேரும்  , புகழும்,காசும் மட்டுமே  என்று சுய நல வாதிகளாக இருந்தது போதும். உங்களது கருத்தை, மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் பின்வரும் வலைத்தளத்தில் பதிவு செய்து கடமை ஆற்றுங்கள். பிறரையும் செய்யச் சொல்லுங்கள்.


இடிந்து கிடக்கும் கோயில்களின் எஞ்சியவற்றையாவது சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றி மீண்டும் பழைய நிலை மாறாதவாறு புனரமைப்போம்.மக்களிடம், " நமது கோயில் நமது பண்பாட்டுச் சின்னம் " என்ற கருத்தைத் தெளிவுபட எடுத்துச் சொல்வோம். இனி வரும்  தலைமுறையினருக்கு நல்ல வழி காட்டுவோம். இவ்வளவுக்கும் மேல் அரசாங்கம் செவி சாய்க்காவிட்டால் ஆண்டவனே கதி. 

Friday, May 8, 2015

கருத்தும் கண்ணியமும்

கடந்த காலத்தைப் பற்றிப் பேசும்போது அது பற்றிய முழு அறிவு இருக்கவேண்டியது அவசியம். சரித்திரத்தை மேலோடியாகப் பார்ப்பவர்களுக்கு உண்மை வெளிப்படாததோடு தங்களது கருத்தே எல்லோராலும் ஒப்புக்கொள்ள வேண்டியது என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதுவே சில சமயங்களில் ஆணவத்தில் கொண்டு விட்டு விடுகிறது.  அரைகுறையாக சரித்திரம் படித்தவர்களும் தங்கள் கருத்தைச் சொல்வதில்  கண்ணியம் தேவை  என்ற அடிப்படையைக் கூடப் புரிந்துகொள்ள முடியாதது அவர்களாலேயே நியாயப்படுத்தமுடியாத ஒன்று.

சமயப்பொறை என்பது காலம் காலமாக நமது தாய்த் திருநாட்டில் நமது ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதைச்  சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் தலைசிறந்து விளங்கிய நம்மைப் பிறர் ஆண்டபோதும், அடிமைப்படுத்திய போதும்   கூட இந்த மார்க்கத்தை விட்டு நாம் விலகியதில்லை. அவரவர் தமது சமயத்தைப் பின்பற்றுவதை நமது அரசர்கள்  போற்றியிருக்கிறார்கள். நாகைப்பட்டினத்து சூளாமணி விகாரத்தை ராஜராஜன் போற்றியதை சரித்திரம் அறிந்தவர்கள் அறிவார்கள். அதே சமயம் பிற சமயத்தவர்கள்  நமது சமயத்தை அழிக்க முற்பட்டபோது நமது மகான்கள் அவ்வாறு அழியாமல் காத்தது தவறா?
திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதை நாம் தடுக்கவில்லையாம். சொல்லுவது யாரோ சரித்திரப் பேராசிரியர் என்று நினைக்க வேண்டாம். சரித்திரத்தை அரைகுறையாகப் படித்தவர்களது பிதற்றலே இது. இப்போதாவது சரிவரப் படிக்கட்டும்.

இவர்களுக்கெல்லாம் புரியும்படியாகப் பதில் சொன்னால் தான் புரிந்துகொள்வார்களோ என்னவோ! இவர்கள் யாரிடமாவது பந்தயம் வைக்கும்போது ஜெயித்தாலோ  தோற்றாலோ  என்ன செய்ய வேண்டும் என்று உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள் அல்லவா? தோற்றுப் போனவர்கள் அந்த உடன்படிக்கையின்படி நடந்துகொள்ளும்போது ஜெயித்தவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்களா? பார்வையாளர்கள்தான் இதில் என்ன செய்ய முடியும்? ஜல்லிக்கட்டு போன்ற பந்தயங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். அதிலும் அரசனே அப்பந்தயத்தை நிறைவேற்றும்போது பார்வையாளர் எதுவும் செய்ய முடியாது. அதேபோலத்தான் சமணர்கள் தாங்கள் தோற்றுப்போனால் கழுவேறுவதாக அரசன் முன்பு சபதம் செய்ததால் அரசனும் அதை நிறைவேற்ற வேண்டியதாயிற்று. இதைப் பிறர் நிறுத்த அதிகாரம் எது? நமது உச்ச நீதி மன்ற தீர்ப்பை  பிரதம மந்திரி நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது போலத்தான்.

இவ்வளவு தூரம் ஆதாரம் அது இது என்று பேசுபவர்கள் சமணர்கள் திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காளவாயில் இட்டதையும், அவருக்கு விஷம் கொடுத்ததையும் , யானையை ஏவி மிதிக்கச் செய்ததையும் அவரைக் கல்லோடு கட்டிக் கடலில் வீசியதையும் படிக்கவில்லையா? அல்லது பாசாங்கு செய்கிறார்களா? அகிம்சையைப் போதிப்பவர்கள் இவ்வாறு செய்யலாமா என்று கேள்வி எழுப்ப மனம் வரவில்லையா?  இத்தனை தூரம் பாதிக்கப்பட்டிருந்தும், நாம் இன்றளவும் அச்சமயத்திடம் சகோதர மனப்பான்மையுடன் பழகி வருகிறோம் என்பதை அந்த அறிவு ஜீவிகள் உணர வேண்டும். அச்சமயத்தவரும் நம்மிடம் அன்போடு பழகி வருகிறார்கள் என்பது நாம் காணும் உண்மை. அதை விட்டு விட்டு ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டவரைப்போல பிதற்றிவிட்டால் அது உண்மை ஆகி விடாது. மாறாக இரு தரப்பினரிடையே நிலவி வரும் சகோதர மனப்பான்மைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விஷமமாக ஆகிவிடும். இனியாவது இவர்கள் நா காக்க வேண்டும்.

கண்ணியம் என்றால் என்ன விலை என்று கேட்பவர்கள் சமுதாய சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார்கள். ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் செய்யாத சீர் திருத்தத்தையா  இவர்கள் செய்வதாக நினைக்கிறார்கள்!  கால சக்கரம் சுழலும்போது இதுபோன்ற சிறு மாற்றங்கள் இயற்கையாகவே நிகழக்கூடும். யாரும் தீவர்த்தி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. இவர்களது பேச்சே  விளம்பரத்தை உத்தேசிப்பது என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டிற்கே நாயகனாக இருக்கத் தவறியவர்கள்  உலகத்திற்கே நாயகனாகி விட்டது போன்ற மாயையில் பேசும் பேச்சு அது. வேறு எங்காவது வேண்டுமானால் நிழல்கள் நிஜமாகலாம். ஆனால் நிஜ வாழ்க்கை அப்படியல்ல. புரிந்துகொள்ளத்தவறுபவர்களுக்கு நீதி மன்றங்கள் புரிய வைக்கின்ற காலம் இது. வணங்காமுடியாக வலம் வருபவர்களும் நீதிதேவதைக்கு வணங்கியே ஆக வேண்டும்.