Tuesday, September 10, 2013

நாமே வாய் இல்லா ஜீவன்கள்

ஸ்ரீ  பரமேசுவரனுக்கு  வழங்கப்படும் எத்தனையோ பெயர்களில் பசுபதி என்பது  முக்கியமானது ஆகும். உலகத்து உயிர்களாகிய பசுக்களுக்கெல்லாம் பதியாக அவன் இருப்பதால் அப்பெயர் ஏற்பட்டது. கரூர், ஆவூர், திருக்கொண்டீச்வரம் போன்ற தலங்களில் சுவாமிக்கு இப்பெயரே வழங்கப்படுகின்றது. நேபாளத்திலுள்ள  காத்மாண்டு மகாதேவர் கோவிலும் பசுபதிநாத்  மந்திர் என்றே அழைக்கப்படுகிறது. பசுக்கள் எல்லாம் தங்களைப் பிற விலங்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள  திருவாமாத்தூர் என்ற தலத்தில் இறைவனை வழிபட்டுக் கொம்புகளைப் பெற்றதாக அந்த ஊர்த்  தலபுராணம் கூறும். எனவே, அத்தலத்தை, கோ மாத்ருபுரம் என்பர். ஆனால் மனிதர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அக்காலத்தில் இல்லாத படியால் அதற்காகத் தவம்  செய்யவில்லை போலும் !

ஒரு புறாவைக் காப்பாற்ற வேண்டித் தனது உடல் சதையை அரிந்து கருணை காட்டிய சிபிச் சக்கரவர்த்தியும் , தனது கன்று , அரசகுமாரனின் தேரில் சிக்கி உயிர் நீத்தபின், அரண்மனை வாயிலில் கதறிய தாய்ப்பசுவின் கதறலைக் கண்டு மனம் பதறி, அதற்கு இணையாகத் தனது மகனையே தேர்ச்சக்கரத்தில் ஏற்றிய மனுநீதிச் சோழனும் வாழ்ந்த நாட்டிலா நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ?

வெறிபிடித்த நாய்கள் எத்தனையோ வழிப்போக்கர்களையும் குழந்தைகளையும் கடித்தும் , அவற்றைக் கொல்லக்கூடாது என்று பிராணி நல அமைப்புக்கள் சொல்கிறார்கள். அதுவும் நியாயம் தான். எந்த வாயில்லா ஜீவனையும் கொல்லக்கூடாதுதான். அதே சமயம் கழுத்து ஓடியும்படி மாடுகள் வண்டிச்  சுமை ஏற்றிச் செல்லும்போது, வண்டியை இழுக்கமுடியாமல் வாயால் நுரை தள்ளுவதைக் கண்டும் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அவற்றைப் பிரம்பால் விளாசுகிறார்களே, அக்காட்சியை இந்த அமைப்பினர் கண்டதே இல்லையா! அல்லது கண்டும் காணாததுபோல் பாசாங்கு செய்கிறார்களா?

ஈரோட்டில் இறைச்சிக்காகக் கொண்டுவரப்படும் மாடுகளை மூச்சு முட்டும்படியாக லாரியில் திணித்து ,அவற்றின் கால்கள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில், அவற்றைக் காலால் உதைத்துக் கீழே தள்ளும் காட்சியை இன்றைய {10.9.2013 தேதியிட்ட )  தினமலர் நாளிதழ் வெளியிட்டிருந்தது. அத்துடன் வெளியான புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள் (நன்றி: தினமலர்) அச்செய்தியின் ஒரு பகுதி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது : " அப்போது தலை குப்புற விழுந்த மாடுகளின் கதறல் சத்தம் அவ்வழியாகச் சென்றவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. .. மாடுகள் சித்திரவதை செய்யப்படுவது வாடிக்கையாக நடக்கிறது."

ஒவ்வொரு சுங்கச்சாவடியைக் கடந்தும் இந்த லாரிகள் மாடுகளை ஏற்றிச் செல்லும்போது       போலீ சாரும், பிராணி நல அமைப்பினரும் மனம் வைத்தால் இதைத் தடுக்க முடியாதா? ஒவ்வொருவாரமும் சந்தைகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் கால்நடைகள் அனுப்பப் படுவதைத் தடை செய்ய முடியாதா?

மாடு வைத்திருப்பவர்களும் சுயநலமாக நடந்து கொள்வதும் ஒரு காரணமே! ஓர் மாடு காளைக் கன்று போட்டால் அது தேவையற்றது என்று கருதுகிறார்கள். அதேபோல் பசுவும் பால் கறப்பது குறைந்து விட்டாலோ,நின்றுவிட்டாலோ அதனை  விற்று விடுகின்றனர் (விரட்டி விடுகின்றனர் என்று சொல்வதே பொருத்தம் என்று தோன்றுகிறது!) அதுவரையில் கோமாதா என்றும் மாட்டுப் பொங்கல் என்றும் பேசியவர்கள் எப்படி மாறுகிறார்கள் பார்த்தீர்களா? கேட்டால் ,  அவற்றை எப்படிப் பராமரிப்பது என்று கேட்கிறார்கள்.

அண்மையில் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்ட செய்தி. காஞ்சிப் பெரியவர்கள் ஒரு காட்டுப் பகுதியின் வழியாக யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள், அவர் இருக்கும் இடத்தை நோக்கி ஒரு மான் ஓடி வந்தது. அதைப் பல நாய்கள் துரத்திக்கொண்டு வந்தன. மானைக் காப்பாற்றுவதற்காக நாய்களின் மீது மடத்து சிப்பந்திகள் கற்களை வீச முற்படும்போது அதைத் தடுத்த பெரியவர்கள், " நாயும் வாய் இல்லா ஜீவன்தானே, அதைக் கல்லால் அடித்து விரட்டுவதற்குப் பதிலாக, அவற்றின் கவனத்தைத் திருப்புவதாக, சில பிஸ்கட் பாக்கெட்டுக்களை அவற்றிடம் போட்டால் அவை மானை விரட்டுவதை விட்டுவிட்டு,    பிஸ்கெ ட்டை நோக்கித் திரும்பிவிடும். இதனால் மானும்  காப்பாற்றப்படும் அல்லவா "  என்றார்களாம். இந்த உத்தியைக் கையாண்டதும், மானும்  காப்பாற்றப்பட்டது. இப்படி எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் மகான்கள் அளவுக்கு நமக்குக் கருணையும் ஞானமும் இல்லாவிட்டாலும் வயிற்றை நிரப்புவதற்காக நமக்குத் தாயாகப் பால் அளிக்கும் ஜீவன்களைக் கொல்லலாமா?

கோசாலைகள் பல இருந்தாலும் காளை மாடுகள் வேண்டாதனவாக ஆகிவிட்டன ! அவற்றையும் பராமரித்தால் இயற்கை உரம், எரி வாயு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.உழவுக்கும் வண்டிகளுக்கும் பயன் பட்டு வந்த அந்த காளை இனமே இல்லாமல் போய் விடும் அபாயம் வந்திருக்கிறது. பசுவினத்தைத் தெய்வமாகப் பாவிக்கிறோம். காமதேனு, பட்டி ஆகியவை பூஜித்த தலங்கள் என்று தலங்களின் புராணங்களில் காண்கிறோம். அப்படி இருந்தும் சண்டேச நாயனார் போல் அவை எல்லாம் நம் நந்திதேவரது குலம் என்று எண்ணுவதில்லை. இதைக் கேட்க வாய் இல்லாதவர்களாகிய நாமே உண்மையில் வாய் இல்லா ஜீவன்கள். செயலற்றவர்களாக இன்னும் எத்தனை நாள் இக்கொடுமையைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமோ தெரியவில்லை. ஆனேறு ஏறும் ஆனிலையப்பரே அருள வேண்டும்.

2 comments:

  1. ஐயா மிகவும் ஆர்வமாக தங்களுடைய இந்த கட்டுரையை படித்தேன், படித்த பின்பு ஏன் அதை படித்தோம் என்ற அளவிற்கு மனம் வேதனை அடைந்தது, கலியுகம் என்பது சரியாக தானே இருக்கின்றது பரிகளை நரிகலாக்கியவர் தாமே இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார். திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete
  2. Very well written article. We see these things everyday around us and watch helplesslessly.

    I hope good sense will prevail by God's grace

    S.Srinivasan

    ReplyDelete