Monday, May 27, 2013

தமிழ் ஞானசம்பந்தர்

முன்பெல்லாம் "தமிழ் " என்ற சொல்லில் வரும் ழகரத்தை  ளகரமாக உச்சரிப்பதைப் பார்த்திருக்கிறோம். வாழைப்பழத்தை வாளைப்பழம் என்றே சொல்வார்கள். இம்மொழியிலோ , ழகர, ளகர,ணகர ப்  பயன்பாடுகள் அதிகம். மாறாக உச்சரித்தால் காதுகளை மூடிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. சிறு வயது முதலே ஆசிரியர்களோ,பெற்றோர்களோ இக்குறையை சரி செய்ய முன்வருவதில்லை. ஒருவேளை,இப்படிப் பேசுவதை எல்லோரும்  வித்தியாசமாகக் கொள்ளவேண்டும் என்று கருதுகிறார்களோ என்னவோ!

ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசினால் கெளரவம் என்று கூடச் சிலர் பேசியதைக் கண்டிருக்கிறோம். "பட்" ஆனால் என்று ஆரம்பிப்பர். இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தானே! பிறகு வந்தது யதார்த்தம் என்ற சொல்லைத் தேவை இல்லாத இடங்களில் எல்லாம்  உப யோகிப்பது. தமிழில் பேசிக்கொண்டிருக்கும்போதே, "அண்ட்" என்று இடையில் பேசுவது

தூர் தர்ஷன் தொலைக்காட்சியிலும், அகில இந்திய வானொலியிலும் செய்திகளை வாசிப்போரது உச்சரிப்பைக் கேட்டுப் பலரும் பாராட்டியதுண்டு. இப்பொழுது செய்தி வாசிப்போர்களது உச்சரிப்பைக் கேட்டால் ஏன்தான் தமிழ் இவர்களிடம் இந்தப் பாடு படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

 " அவரவர்கலது பல்லிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கலிடம் சென்று மதிப்பென் க லைப் பெற்றுக் கொல்லுமாறு கேட்டுக்  கொல்லப் படுகிறார்கல். "  என்று செய்தி வாசிக்கப்படுகிறது. இவ்வாறு நம்மைக் கொல்கிறார்கள்.

பக்திப் பாடல்களைப் பாட எது மிகவும் முக்கியம் என்று கேட்டால் . நல்ல குரல் வளம் என்று சொல்வதை விடப் , பிழை இல்லாத உச்சரிப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. "வேயுறு தோளி பங்கன் " என்பதை, "வேயுறு தோலி" என்று உச்சரித்தால் என்ன செய்வது!

ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால், "இப்ப பாத்தீங்கன்னா.." என்று சொல்வது "லேடஸ்ட் பாஷன்" என்கிறார்கள்!  " பார்த்துக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தை கொச்சையாக, "பார்த்துக்கங்க" என்று இருந்தது போக, "பார்த்துகோங்க" என்று பேசப் படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற எத்தனையோ மாற்றங்கள்/அபத்தங்கள்.

செம்மொழி என்று கௌரவமாகச் சொல்லிக் கொள்வது இருக்கட்டும். எத்தனை பேர் அதை "செம்மொளி" என்று உச்சரிக்கிறார்கள் என்பதைக் காணும்போது வேதனையே மிஞ்சும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துவிட்டு வெளியில் வந்தவர்கள் எத்தனை பேர் தவறில்லாமல் எழுதுகிறார்கள்?

 பக்தி இலக்கியங்களைப் பள்ளிப் பாடங்களிலிருந்து ஓரம்  கட்டி, நேற்று எழுதப்பட்ட கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது போக, தமிழ் படிப்பதே தவிர்க்கப்படுமோ என்று அஞ்ச  வேண்டியிருக்கிறது. இவ்வளவும் தெய்வத் தமிழைப் புறக்கணித்ததால் வந்த வினை. இரண்டாயிரம் ஆண்டுகளாக பக்தி மற்றும் நீதி இலக்கியங்களில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ், பள்ளிகளிலாவது கட்டாயப் பாடமாகப் படிக்கப்படக் கூடாதா? தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தனது ஆயுளில் ஒரு முறையாவது திருக்குறளையும் , தேவார திருவாசகங்களையும், நீதி நூல்களையும் இனி எப்படிப் படிக்கப் போகிறான் என்பதே கேள்விக் குறி ஆகி விடும் போல் இருக்கிறது.

கேட்டால் , நாங்கள் தான் தமிழின் காவலர்கள் என்று பலரும் சொல்லிக் சொல்கிறார்கள். உண்மை நிலை மாறாக இருக்கும்போது, தமிழ் செய்தித் தாள்களும், திரைப் படங்களும் மட்டுமே மிஞ்சுமோ எனத் தோன்றுகிறது. இதைத் தான் "தமிழ் இனி மெல்லச் ....." என்று      குறிப்பிட்டார்களோ?

பலருக்குத் தனது பெயரிலேயே தமிழ் இருக்கிறது என்று பெருமிதம் வேறு! (உதாரணம்: தமிழ்ச் செல்வி,தமிழரசன் ....) அதனால் மட்டுமே  அந்த நபரால் தமிழ் நாடு பயன் அடைந்து விடுமா? தனது பெயரோடு தமிழையும் சேர்த்துக் கொண்டு, "தமிழ் ஞானசம்பந்தன்" என்று பாடினார், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய" திருஞானசம்பந்தப் பெருமான்.   சமண-பௌத்த மதங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சம்பந்தப் பெருமான் அவதரித்து, சைவத்தை நிலை நாட்டியதோடல்லாமல் அவரது திருவாக்கால் தமிழையும்  ஏற்றம் பெறச் செய்தார்.அவரது குருபூசைத் திருநாளாகிய இன்று (வைகாசி மூலம்) அவரது மலர்ச் சேவடிகளை வணங்கி, "இருந்தமிழ் நாடு உற்ற இடர் நீங்க " அருள வேண்டும் என்று பிரார்த்திப்போமாக. 

Monday, May 20, 2013

ஒரு கால பூஜை !


ஒரு கால பூஜையை மேலும் விஸ்தரிப்பதாகத்  தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு காலம் கூட ப்  பூஜை நடைபெறாமல் இருக்கும் கோயில்களுக்கான ஏற்பாடு இது. இதன்படி, ரூ பத்தாயிரத்தை  ஊரார்கள் செலுத்தினால், அரசாங்கம் தன் பங்காக, ரூ தொண்ணூறாயிரம் செலுத்தி, மொத்தம் ஒரு லக்ஷ ரூபாயை அக்  கோவிலின் வங்கிக்கணக்கில்  வைப்பு நிதியை ஏற்படுத்தும். இதனால் வரும் வட்டித்தொகை, ஒருகால பூஜைக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டின்படி,மாதம் தோறும் ரூ ஆயிரத்திற்கும் குறைவாகவே  வட்டி வரும். இதை வைத்துக்கொண்டு, நைவேத்திய சாமான்கள் வாங்கவும், அர்ச்சகரது  மாதாந்திர சம்பளத்திற்கும் ஒருபோதும் இவ்வட்டித்தொகை போதுமானதாக இருக்காது. அதிலும் ஒரு கால பூஜையை பல கிராமக் கோ யில்களில் அருகிலுள்ள ஊர்களிளில் இருந்து சைக்கிளிலும்,நடந்து வந்தும் செய்து விட்டுப் போகிறார்கள். இதற்குக் கொடுக்கப்படும் மாதாந்திர சம்பளமோ சில நூறுகளே! பல ஊர்களில் தங்கள் சொந்த செலவில் அர்ச்சகர்களே பழுதான மின்சார பல்புகளை மாற்றிக்கொள்ள  வேண்டியிருக்கிறது.

கோவில் நிலங்களிளிருந்தும், கட்டட வாடகை போன்ற வற்றிலிருந்தும் வருவாய் ஒழுங்காக வந்துகொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? அரசாங்கமும் மக்களும் யோசிக்க வேண்டும். சுயாட்சி நிறுவனமாக விளங்கவேண்டிய கோயில்கள், பிறரிடம் கைஎந்தவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் யார்? அற நிலையத் துறை சட்டம் இதற்கு வகை செய்யாவிட்டால் தகுந்த சட்ட -மாற்றங்கள் ஏன் கொண்டு வரப் படுவதில்லை? சட்ட சபை நடக்கும் போது, இந்த அவலநிலையை ஏன் விவாதிக்க முன் வருவதில்லை? சலுகைகள் பலருக்கும் வாரி வழங்கப்படும்போது ஆலய சிப்பந்திகள் மட்டும் விதி விலக்காவது ஏன்? ஆலய நிர்வாகத்திற்கென்றே ஒரு அமைச்சகம் இருந்தும், பல்லாண்டுக் கணக்கில் இன்னும் தீர்வு ஏற்படாதது ஏன்?

அரசாங்கத்தைக் குறை கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் அவரவர் பங்கைச் செய்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கிராமங்களில்  இன்னமும் வாழ்பவர்களானாலும் , வெளியூருக்கு இடம் பெயர்ந்து வாழ்பவர்களானாலும் கோயில் பக்கம் வந்து பார்த்தால் பிரச்சினைக்கு ஒரு முடிவு பிறக்கும். குத்தகைக்காரர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் மனசாட்சி உண்டு அல்லவா? கோவிலை ஏமாற்றினால் கேட்பார் இல்லை என்ற எண்ணம் வரலாமா? சிவ சொத்து குல நாசம் என்பதை அவர்கள் கேட்டிருப்பார்களே! அவ்வாறு ஏமாற்றியவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதையும் பார்த்துமா இன்னும் திருந்தாமல் இருக்கிறார்கள்?அதனால் தான் காவிரி பொய்த்து விட்டதோ? தெய்வக்குற்றத்திற்கு ஆளாகாமல் ,செய்த பிழைக்கு வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால், அவர்களது குற்றங்களை எல்லாம் அவன் பொறுத்து, நலம் மிகக் கொடுப்பான் என்பது உறுதி.

அரசாங்கமோ , குத்தகைக் காரர்களோ மனம் வைக்கும் வரையில் கோவில்களை அப்படியே விட்டுவிட முடியாது. அவரவர்கள் வசிக்கும் கிராமங்களிலாவது, பூஜை நடைபெறச் செய்ய வேண்டும். அர்ச்சகர்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும். இவ்வளவு தெய்வ குற்றங்கள் நடை பெறும் போதும் கருணைக் கடலான கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை. இயற்கை சீற்றங்கள் வந்தபோதிலும் அதிக பாதிப்பு ஏற்படாத வண்ணம் நாம் காக்கப்படுகிறோம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அண்மையில் தோன்றிய "மாகேசன்" புயலும் மகேசன் அருளால் திசை மாறிச் சென்றது.

கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களிலும் பூஜை நடத்துவது சிரமாக இருக்கிறது. திருப்பணிக்கு வசூல் செய்பவர்கள், நித்திய பூஜைக்கு வழி செய்யாததே இதற்குக் காரணம். இவ்வளவு சிரமமான கால கட்டத்திலும், அன்புள்ளம் கொண்டவர்கள் மூலமாகப் பூஜைகளை ஏற்றுக்கொள்கிறான் இறைவன். மாதாந்திர பூஜை செலவுகளை ஏற்க முன் வருகிறார்கள். நமது சபை அன்பர்களும் அப்பணியில் முன்னிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, திருவருளால் அன்பு உள்ளங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை உணருகிறோம்.இதற்கு மேலும் இறைவனிடம் கேட்க என்ன வரம் இருக்கிறது? "உனக்குப் பணி செய்ய உந்தன்னை எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீ தா.." என்ற வாக்கை நினைத்து மனம் நெகிழ்வோமாக.

Thursday, May 9, 2013

டெண்டரோ டெண்டர்


இந்து சமய அறநிலையத் துறை, ஆலய வருவாயைப் பெருக்க எத்தனையோ வழிகளைக் கையாளுகிறது. இதனால்,சம்பந்தப்பட்ட  ஆலயம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது வேறு விஷயம். பலதரப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப் படுவதையும், அவற்றை உயர்த்தியுள்ளதையும் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளோம். ஒரு கோவில் பிரபலமாகிவிட்டால் போதும்! கட்டணப் பட்டியல் பின்னாலேயே தொடர்ந்து வரும்!

சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் உள்ள சிவாலயம்,திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாமலும்,பனை மரங்கள் சூழப்பெற்றும் அமைதியாக விளங்கியது. சிறு சந்துகள் மூலம் விசாரித்துக் கொண்டேதான் கோவிலை அடைவது வழக்கம். (இப்போதும் குறுகிய சாலை மூலம் தான் கோயிலை அடைகிறோம்!) அந்நாட்களில் திருவலிதாயம் என்று அழைக்கப்பட்ட பாடியை, பாடல் பெற்ற தல யாத்திரையாக வருபவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருவர்.
நாளடைவில் காலனிகள் பெருகவே, மக்கள் அதிகமாக வரலாயினர். குரு ப்ரீதி தலம் என்று சொன்னவுடன், பரிகாரம் செய்துகொள்பவர்களும் வரத் தொடங்கி விட்டனர். இப்போது பார்த்தால், கோ சாலை ஒரு பக்கம்; பிராகாரத்தில் புறாக்களுக்குத் தீவனம் இடுவோர்  ஒரு பக்கம்; புதியதாகக் கட்டப்பட்டுள்ள குருவின் சன்னதியில் நிற்பவர்கள் ; இப்படிப் பலதரப்பட்ட வகையில் மக்கள் கூடுகின்றனர். வருமானமும் நாளடைவில் பெருகும் வாய்ப்பும் இருக்கிறது.

இதற்கிடையில், டெண்டர் அறிவிப்பு வேறு; கோயில் சன்னதி தெரு விசாலமானது. எவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இரு புறமும் வாகனங்களை நிறுத்த முடியும். அப்படி இருந்தும், இதற்குக் குறைந்தது ரூ 246000 க்கான டெண்டர் வரவேற்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு முன்பே, ஒருவர்,ரசீது புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். ரூ 10,20,25 என்று ஒவ்வொரு காருக்கும் வசூலிப்பார். கேட்டால்,டெண்டர் எடுத்திருக்கிறேன் என்பார். இது,மக்கள் அதிகமாக வருகை தரும் எல்லாக் கோயில்களிலும் அன்றாடம் காணும் காட்சி தான்!

மயிலை கபாலீஸ்வரர் ஆலய வடக்கு மாட வீதியில் சென்னை கார்பரேஷன் ,வாகன நிறுத்தத்திற்காக வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூ 5 மட்டுமே. அரக்கோணம் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வசூலிக்கப்படுவது ரூ 25 ! டெண்டர் தொகையை லட்சக் கணக்கில் வாங்குவதால், கட்டணங்கள் இவ்வாறு கண்மூடித்தனமாக வசூலிக்கப் படுகின்றன. அர்ச்சனை பொருள் விற்க டெண்டர் தொகையாக, ரூ 267000 அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அர்ச்சனை செய்பவர்களுக்கு, இரண்டு காய்ந்த வெற்றிலையும், இரண்டு உபயோகமற்ற பாக்குகளும் ,மெலிந்த இரு வாழைப் பழங்களும், குரும்பை போன்ற தேங்காயும், ப்ளாஸ்டிக் பேப்பரில் சுருட்டப்பட்ட கற்பூரமும் ரூ 25 க்குத் தலையில் கட்டப்படுகிறது. பாவம் பக்தர்கள் மட்டுமல்ல. அந்த இறைவனும் கூடத்தான்!

இவைதவிர, சமயப்புத்தக விற்பனைக்  கடைக்கு ரூ 135000, பிரசாத(??) க் கடைக்கு ரூ 75000, நெய் தீபத்திற்கு ரூ 168000 என்று, டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.நல்ல வேளை ! புறாத் தீவனக் கடைக்கு உரிமை வழங்கி,டெண்டர் கோரப் படவில்லை.(அதிலும் வியாபாரம் அமோகமாக இருக்கக் கூடும்) இவை எல்லாம் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மட்டுமே சாத்தியம்.  பாடியிலேயே நிலவரம் இப்படி என்றால், பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற தலங்களில் நிலை எப்படி இருக்கும்? இப்படி வசூலாகும் பல்வகைக்கட்டணங்களும்,உண்டியல் வருமானங்களும் பல கோடிகள் சம்பாதித்துத் தரும்போது அது எவ்வாறு முறைப்படி செலவழிக்கப்படுகிறது என்று சொல்பவரைக் காணோம். ஆண்டுத் தணிக்கை நடப்பது                  என்னவோ உண்மைதான். அதன் விவரம் அந்த அந்தக் கோவிலின்  அறிவிப்புப் பலகையில் பக்தர்கள் பார்வையில் படும்படி செய்யலாமே!

டெண்டரில் இத்தனை தீவிரம் காட்டும் அறநிலையத்துறை, கோவில் குத்தகை வசூலிலும், நிலங்களை மீட்பதிலும், கோவில் வீடுகளிலிருந்து முறையான வாடகை வசூலிப்பதிலும், கோவில் சொத்துக்களைத் தன் பெயரில் பொய் பட்டா மூலம் மாற்றுபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பதிலும் தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை. சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்குச் சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களைப் போலி ஆவணங்கள் மூலம் விற்றதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பத்திரிகை செய்தி கூறுகிறது. சர்ச்சைக்குரிய நிலங்களுக்கும் கட்டிடங்களுக்கும் மின்சாரம்,தண்ணீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படவேண்டும் என்று பத்திரிகைகள் எழுதியும் பலன் இல்லை. இவற்றை மீட்டால்,டெண்டர்  விட்டு மக்களை  அச்சுமையைத் தாங்கச் செய்ய வேண்டிய நிலை இருக்காது

யார் காதில் விழப்போகிறதோ தெரியவில்லை.

Thursday, May 2, 2013

கேலிகள் தேவையா?


நமது பாரம்பர்யம் பல வகைகளிலும் கைவிடப்படுவதைக் கண்டு வருந்தும் இவ்வேளையில் அதனைச் சிலர் வேரோடு வீழ்த்திவிடுவார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு அது நகைப்புக்கு உரியதாக ஆகி வருகிறது. இத்தகைய கேலிகள் ஒன்றும் புதியதில்லை என்றாலும் இதனால் சிலர் பிரபலம் அடைய முயல்வதும், சம்பாதிக்க முயல்வதும் தான் வேதனையாக இருக்கிறது. கேட்க யாரும் இல்லாததால், கிண்டல்கள் தொடர் கதை ஆகி வருகின்றது.

சமயச் சின்னங்களையும், பாரம்பர்யச் சின்னங்களையும் பழிப்பவர்களும் இழிப்பவர்களும் இருப்பது ஒரு பக்கம். சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்ததுபோல் பேசுபவர்களுமா  இப்படி மக்கள் மத்தியில் பேசவேண்டும்?
சிகையின் முக்கியத்துவத்தைக் கூற வந்த காஞ்சி பெரியவர்கள், 1932 ம் ஆண்டு சொன்னதை முதலில் படித்துவிட்டு, அப்புறம் விஷயத்திற்கு வருவோம்.

" சிகை வைக்கும் கர்மாவும் பகவானுக்கு அர்ப்பணமாகிறது. சத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ண வேண்டும். மந்த்ரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையை முன்பு பரமேச்வரனுக்குப் பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்துவிடுவது தப்பு. பரமேச்வரப் ப்ரீதியாக சங்கல்பம் பண்ணிக்கொண்டு சம்ஸ்காரம் பண்ணி கிள்ளுக்கீரையாக எண்ணி ,வைத்துக்கொண்ட சிகையை மனம் போனபடி எடுக்கக் கூடாது. இப்படிப் பண்ணுபவர்கள் முதலில் அதைப் பண்ணாமல் இருக்க வேண்டும்."

திருப்பூரில் அண்மையில் நடந்த ராமாயண உபன்யாசம் செய்த அனந்த பத்மனாபாசார்யார் சொன்னதாக வெளிவந்த பத்திரிகை செய்தி, " குடுமி வச்சா அவ்ளோதான்" என்ற தலைப்பில் வந்துள்ளது. இச்செய்தியின் நம்பகத்தன்மை அதை வெளியிட்ட நாளிதழுக்கே உரியது. இருப்பினும் , மக்கள் பார்வைக்குத் தெரியும்படி அச்சேறியுள்ளதால், நமது பாரம்பர்யத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளவர்களது மனத்தைப் புண் படுத்தும் வகையில் இக்கேலிப்பேச்சு அமைந்துள்ளது. உபன்யாசகரை மெச்சிக் கொள்வதா அல்லது இதையும் ஒரு செய்தியாகக் கருதி வெளியிட்ட நாளிதழின் "பத்திரிகை தர்மத்தை" மெச்சிக் கொள்வதா தெரியவில்லை.

அனந்த பத்மநாபாசார்யார் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி: " ஒரு உபன்யாசத்துக்கு சென்ற போது,ஒருவர், "சுவாமி, உங்க குடுமியிலே பூ வைக்கலாமே" என்று கூறி, பூ கொடுத்தார். "இப்போதைக்கு "ஹேர் பின் தான் வைக்க முடியும். பூ வேண்டாம்னு சொல்லிட்டேன் " என்றார். இதைகேட்ட முன்வரிசையில் அமர்ந்திருந்த அன்பர் ஒருவர், "அந்தக் காலத்துலே ஆத்துக்காரிஎல்லாம் குடுமியைப் பிடித்து அடிக்க மாட்டா ; இப்பெல்லாம் குடுமி வைச்சா அவ்ளோதான். பின்னிப் பெடலெடுத்துடுவா. அதனால் தான் எல்லோரும் "ஹேர் கட் " பண்ணிடறா." எனத் தன் அனுபவத்தை எடுத்துக் கூற மற்றவர்கள் சிரித்தனர்."  சிரிக்கும் படியான விஷயமா இது? வெட்கப்படவேண்டிய விஷயம் அல்லவா? ராமன் குடுமி வைத்திருந்தான் எனக் கூறி எங்கெங்கோ போனதால் வந்த விளைவு தானே இது? பின்னிப் பெடலெடுக்கும் ஆத்துக் காரிகள் என்று பொதுப் படையாகச் சொல்வது தவறு. ஆண்களை விட, நமது சம்பிரதாயத்தில் மிக்க ஈடுபாடும் பக்தியும் கொண்ட எத்தனையோ பெண்மணிகளைக் காண்கிறோம். தாழ்வு மனப்பான்மை காரணமாக சிகையை  எடுத்துவிடத் துணியும்  ஆண்  வர்க்கம், அப்பழியைப் பெண்கள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது.

அரை டிராயர்,முக்கால் டிராயர், நைட்டீ என்றெல்லாம் உடுக்கும் இக்காலத்தில் . சிகையையும் பாரம்பர்ய உடைகளையும் பின்பற்றும் மிகச்சிலரின் மனம் புண்பட வேண்டுமா? அதற்கு உபன்யாச மேடையே துணை போகலாமா? அப்படியே போனாலும் அதைப் பெரிது படுத்திப் பத்திரிகையில் வெளியிட்டு அனைவரின் நகைப்புக்கு ஆளாக்க வேண்டுமா? நெற்றியில் நாமம் இட்டுக் கொள்வதைப் பிறர் பரிகசித்தால் அதை இட்டுக் கொள்ளாமல் விட்டு விடுவார்களா? ஒருவேளை ஓரிரு ஆத்துக்காரிகள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அவர்களை அன்பாகத் திருத்தி, சமயச் சின்னங்களின் உயர்வைத் தெரியப்படுத்த வேண்டாமா? அதை விட்டு விட்டு, ஏளனமாகப் பேசினால், சிலரின் கைத்தட்டுக்களை வேண்டுமானால் சம்பாதிக்கலாம். அதே நேரத்தில் பலரின் மனக் கசப்பையும் கூடவே சம்பாதிக்க நேரிடுகிறது. வெளிவர இருக்கும் ஒரு படத்தின் தலைப்பு, பாரம்பர்ய உடை உடுத்தும் ஒரு சாராரை மனம் நோகவைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. உபன்யாச அரங்கத்தில் எழும்பும் கேலிகளை யாரிடம் போய் முறையிடுவது?