உலக நன்மைக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜைக்கு உரியவர்கள் சிவாச்சார்யர்கள் ஆவார்கள். சிவாகமப்படி காலம் தோறும் நியமத்துடன் இப்பூஜைகள் நடைபெறுவதற்காக அரசர்கள் பலர் நிபந்தங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். காலப்போக்கில், இத்தருமங்கள் யாவும் சரிவரப் பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. அவை விரைவாகத் திருத்தம் பெற வழி வகைகள் செய்யப்படாமல் இருப்பதால், பல கிராமங்களில் பூஜைகள் ஒரு காலம் நடைபெறுவதே சிரமமாக இருக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆலய சிப்பந்திகளே ஆவார்கள். கோயில் மேளங்களும், மடைப்பள்ளி ஊழியர்களும், ஓதுவார்களும், இப்பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். இதில் எஞ்சியவர்கள் சிவாசார்யர்கள் மட்டுமே. அவர்களிலும் பலர்,வறுமையால் பெரிதும் துன்பப்படுகின்றனர். அரசாங்கமோ அவர்களது நிலைக்கு இரக்கப்படுவதாகத் தெரியவில்லை. கொடுக்கும் இருநூறு- முன்னூ று ரூபாய் சம்பளத்தையும் ஒவ்வொரு மாதமும் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏராளமான கிராமக் கோயில்கள் பூட்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவரவர்கள் தங்கள் பூர்வீக கிராமக் கோயில்களுக்குத் தங்களால் ஆன உதவியைச் செய்யலாம். இன்னும் கொஞ்சம் வசதி உள்ளவர்கள், திருப்பணிக்கு உதவலாம். இன்னும் சிலர், பூஜைப் பொருள்களுக்கும், சிவாசார்யாரது சம்பளத்திற்கும் உதவ முன்வரவேண்டும். இதைத் தங்கள் கடமையாகக் கருதினால் நல்லது. வறுமையில் வாடும் பலரது வாழ்வில் ஒளி ஏற்றினால் நாமும் நமது குடும்பமும் சிவனருள் பெறலாம் அல்லவா? "முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்று பாடிக்கொண்டு மட்டும் இருக்காமல் அதைச் செயலிலும் காட்டினால் உயர்ந்தது தானே?
கடந்த இரு ஆண்டுகளாகத் திருவாதிரையான் திருவருட்சபை, கிராமங்களில் உள்ள சிவாலயங்க ளில் பரம்பரையாகப் பூஜை செய்துவரும் சிவாச்சார்யர்கள் இருபது பேரை அவர்களது துனைவியார்களோடு அர்ச்சித்து, கௌரவிக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி , திருவாரூருக்கு அண்மையில் உள்ள சாட்டியக்குடி என்ற தலத்தில் உள்ள ஸ்ரீ வேதநாயகி சமேத ஸ்ரீ வேதபுரீச்வர ஸ்வாமி ஆலயத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. சாட்டிய முனிவரால் வழிபடப்பெற்ற இத்தலத்தைக் கருவூர்த்தேவர் திருவிசைப்பா பதிகத்தால் போற்றியுள்ளார். இத் தலத்தின் அருகிலுள்ள வலிவலம் , வடகரை,பொரவாச் சேரி,பெரிய குத்தகை ஆகிய தலங்களின் சிவாசார்யர்களும் தங்கள் துனைவிமார்களோடு வந்திருந்து சிறப்பித்துத் தந்தார்கள்.
கணபதி பூஜை,புண்யாவசனம் ஆகியவை நடைபெற்றபின்னர் , ஸ்வாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. புதிய வஸ்திரங்கள் மற்றும் மலர் அலங்காரம் செய்த பிறகு, சுவாமிக்கு ருத்ர த்ரிசதியும் அம்பாளுக்கு அஷ்டோத்திரமும் செய்யப்பெற்று, பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஐந்து தலத்து சிவாச்சார்ய தம்பதிகளுக்கு புதிய வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின் , அர்ச்சனைகளும் தீபாராதனைகளும் செய்விக்கப்பட்டு சம்பாவனை செய்யப்பட்டு,அவர்களின் ஆசி பெறப்பட்டது. நிறைவாக மாகேச்வர பூஜையும் நடைபெற்றது. தலத்து ஓதுவா மூர்த்தி, மேளக் காரர், பிற சிப்பந்திகள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். நமது சபை அண்மையில் துவக்கியுள்ள Ardhra Foundation என்ற அமைப்பு இதுபோன்ற சிவபுண்யங்களை மேலும் மேலும் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீ முருகப்பன்,ஸ்ரீ வெங்கடேசன்,ஸ்ரீ கார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோருக்குச் சிவனருள் துணை நிற்பதாக.