Sunday, September 23, 2012

கற்றதனால் விளையும் பயன் என்ன ??

கல்வி எல்லோருக்கும் வேண்டியது தான். அதில் எந்தவிதமான அபிப்ராய பேதமும் இருப்பதற்கு இல்லை. கல்வி என்பது கண்ணுக்கு சமம் என்று ஔவையார் சொன்னதை ,("எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ") என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்ததை நம்மில் சிலர் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கலாம். அந்தக் கல்வி எப்படிப்பட்டதாக இருந்தால் சிறப்பு என்பதே கேள்வி. அதற்கு விடையாகத் திருவள்ளுவர், " இறைவனது திருவடிகளைத் தொழ கல்வி எதுவாகாவிட்டால் கற்றதனால் விளையும் பயன் என்ன என்று கேட்கிறார்
 
என்ன படிப்பு படித்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் காலத்தில் வேத பாடசாலைகளிலும் ஆகம பாடசாலைகளிலும் படித்தவர்களுமே இவ்வாறு சம்பாத்தியத்தைப் பற்றியே நினைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. தாம் கற்றதை வைத்துக்கொண்டு வெளி நாட்டில் போய் சம்பாதிக்க நினைப்பவர்களும் உண்டு. ஒரு வேளை உள் நாட்டில் இருந்தாலும் , பாராயணம் , ஹோமம், கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு "கை நிறைய" சம்பாதிப்பதையே விரும்புகிறார்களே தவிர, கிராமக் கோயில்களில் நித்ய பூஜை செய்ய முன் வருபவர்கள் குறைவாக இருப்பது வருந்தத் தக்கது. அற நிலையத்துறை தரும் சொற்ப சம்பளமும் உள்ளூரில் ஆதரவு இல்லாததும் இந்த எண்ணத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

நாம் கஷ்டப்பட்டது போல நம் குழந்தைகளும் கஷ்டப் படக் கூடாது என்ற எண்ணத்தில் , சிரமப் பட்டாவது தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது முதல் படி. பெண்களையும் படிக்கவைத்துவிட்டு அதற்கு ஏற்ற வரனைத் தேடும் போது கோயில் பூஜை செய்யும் பையன்களை விரும்பாமல் வேலையில் இருக்கும் பையனைத் தேடுகிறார்கள். இதனால் (கோயில் பூஜை செய்யும் பையனுக்குப் பெண் கொடுக்கத் தயங்குவதால்) பையன்களுக்குக் கல்யாணம் ஆவது மிக மிகக் கஷ்டமாகி விடுகிறது. கிராமத்துப் பையனுக்குப் பெண்ணைக் கொடுக்கவும் தயக்கம் காட்டுகிறார்கள்! கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது இரண்டாவது படி. கிராமத்தில் வசிப்பவருக்கும் ,நகரங்களில் வசிப்பவருக்கும் , இக்கால வசதிகளுக்கு ஆசைப் படுவதில் வித்தியாசம் எதுவும் இல்லை. நகரங்களின் நெரிசலையும் பொருட் படுத்தாமல் குடியேறும் கிராமத்தினர் ஏராளம். நகரத்தில் குடியேறினால் வசதிகளும் வருமானமும் பெருகும் என்ற எண்ணமே இருக்கிறது. கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், நகரத்தில் வாடகை வீடுகளில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். கிராமக் கோயில் பூஜைகள் நசித்துப் போவதற்கு இது மூன்றாவது படி.

வங்கிகள் கல்விக்கடன் தரத் தயாராக இருப்பதால் எல்லோரும் என்ஜினீயர் ஆகத் துடிக்கிறார்கள். இது ஒன்று மட்டுமே கெளரவம் தரும் தொழிலாக நினைக்கிறார்கள். அப்படி எஞ்ஜினியர்களாக ஆன பிறகு கோயில் பூஜை பக்கம் திரும்பிப் பார்ப்பது சாத்தியமா? மற்றத் தொழில்களும் இதே போல் பாதிக்கப் பட்டுள்ளன. விவசாயிகளோ, நெசவாளிகளோ,கொத்தனார்களோ,தச்சர்களோ, எந்தத் தொழில் செய்தவர்களாக இருந்தாலும் , தங்கள் குழந்தைகளை அதே தொழிலைச் செய்வதை விரும்புவதில்லை. மாறாக,அவர்களைக் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் பல இடங்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

இதை எல்லாம் யாரால் சரி செய்ய முடியும்? அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். வோட்டுக்காக மக்களைப் பிரிப்பதை நிறுத்திக்கொண்டு, சமூக சீர்திருத்தம் செய்ய முனைய வேண்டும். பாரபட்சம் பாராமல் நடந்து கொண்டால் அவரவர்கள் தங்கள் தொழிலை மறக்காமல் இருக்க முடியும். என்ஜினீரிங் கல்லூரிகளை நிறுவியது போதும். பிற தொழில்கல்லூரிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.

கோவில் நிலங்களையும் அவற்றின் குத்தகை பாக்கியையும் வசூலித்துத் தராவிட்டால் அறநிலையத் துறை இருந்தும் என்ன பயன்? அவ்வாறு நெல்லும் சம்பளமும் முறையாகக் கொடுக்கப் பட்டால் அர்ச்சகர்கள் வேறு தொழிலுக்குத் தாவாமல் இருப்பார்கள் அல்லவா? இன்னும் எவ்வளவு காலம் தான் நகரங்களில் குடியேற இடம் கிடைக்கும்? அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டும். எதுவும் செய்து கொடுக்காவிட்டால் கிராமங்கள் எப்படி முன்னேறும்? நகரங்களுக்கு இணையாக அங்கு வருமானமும் வசதிகளும் பெருகினால் மட்டுமே நகரங்கள் ஜனத்தொகைப் பெருக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். வயல்கள் வானம் பார்த்த பூமியாக ஆகிவிட்ட பிறகு, பிளாட் போட்டு விற்பவர்களுக்கும், நதிகளில் மண்ணை அள்ளுபவர்களுக்கும், மலைப் பாறைகளை உடைத்துக் காசாக்குபவர்களுக்கும் கொண்டாட்டம் தான். இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் எல்லோருக்கும் கல்வி என்று முழங்கிக்கொண்டிருந்தால் , படிப்பை முடித்தவர்கள் கிராமப் பக்கமே தலை வைத்துப் படுக்கப் போவதில்லை. பணத்தை எண்ணுவது எப்படி என்ற ஆலோசனையில் மூழ்க ஆரம்பித்து விடுவார்கள். கோயில் பூஜைகள் மட்டுமல்ல. நமது பாரம்பர்யத்தையே குழி தோண்டுவதாக அமையும் அபாயம் உருவாகியிருக்கிறது. அதைச் சரி செய்ய இதுவே கடைசி சந்தர்ப்பம். செய்யப்போகிறார்களா பார்க்கலாம்.

Tuesday, September 18, 2012

கோயில் கட்டணங்கள்


உண்டியல் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அறநிலையத் துறை நுழைந்ததும் செய்த முதல் வேலை, உண்டியல் அமைத்ததுதான்! எங்கும் வசூல்,எதிலும் வசூல் என்பதைத்தான் காண நாம் பழகிவிட்டோம் இல்லையா? நுழைவு கட்டணம், சிறப்பு தரிசனக் கட்டணம், அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம், மொட்டை அடிக்கக் கட்டணம், காது குத்தக் கட்டணம், கல்யாணம் செய்ய கட்டணம், தேர் இழுக்கக் கட்டணம் என்று எத்தனையோ வகையான கட்டணங்கள்! இவ்வளவும் போதாதுஎன்று மூலைக்கு மூலை ஆள் உயர  உண்டியல்கள். அதில் மட்டுமே எவ்வளவு வகை தெரியுமா? பிரார்த்தனை உண்டியல், திருப்பணி உண்டியல், தேர் கட்டுமான உண்டியல், விமானத்தில் தங்க/வெள்ளி கலசம் பொருத்த உண்டியல், அன்னதான உண்டியல் என்று இப்படிப் பலவகைகளைக் காண்கிறோம்.

தர்ம தரிசனம் என்பது பெரிய கோயில்களில் ஏதோ "தர்மத்துக்காக " நடப்பதைப் போலத் தோன்றுகிறது. கட்டணம் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று பழகிப் போனவர்களுக்குத் தரும தரிசனத்தில் கால் கடுக்க நிற்பவர்களைப் பற்றி நினைவு கூட வருவதில்லை. சன்னதியை மறைத்துக் கொண்டு நிற்பார்கள். கட்டணம் செலுத்தியதால் தெய்வத்தையே விலை கொடுத்து வாங்கி விட்டதாக நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

ஊரின் பெயரை சொல்லாமல் விஷயத்துக்கு மட்டும் வருவோம். அந்தக் கோயிலில் கட்டுமலை மீது இருக்கும் முக்கிய சன்னிதி எத்தனையோ ஆயிரம் குடும்பங்களுக்குக் குலதெய்வ சன்னிதியாகக் கருதப்படுவது. படிக்கட்டுக்கள் மேல் ஏறிச்  சென்று தரிசிக்க வேண்டுமானால் ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். வெளியூர் காரர் இதைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை. உள்ளூர் பக்தர்கள் தினமும் தரிசிப்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. கீழே நின்றபடியே விமானத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு பிராகாரத்தை வலம் வருகிறார்கள்.

இதற்கு நடுவில், சந்நிதியை மறைத்துக் கொண்டு சஷ்டியப்த பூர்த்தி, சீரியல் ஷூட்டிங் ஆகியவற்றை செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் வரும் வருமானம் வேறு. பரிகாரத் தலங்களில் கோயிலுக்கு வெளியில் கார், வேன் ஆகியவற்றை நிறுத்தப் பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். கேட்டால் கோயில் நிர்வாகம் அதற்குக் "காண்ட்ராக்ட்" விட்டிருப்பதாகக்  கூறுகிறார்கள்.

வழக்கம் போல இந்த ஆண்டும் குல தெய்வமான சுவாமிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப் போனபோது ஆலயக் கட்டணங்கள் அதிகரித்து விட்டதாகச் சொன்னார்கள். 750 ரூபாயாக இருந்த அபிஷேகக் கட்டணம் 1500 ரூபாயாக உயர்த்தப் பட்டு விட்டது. இப்படி உயர்த்திக் கொண்டு போக  வேண்டிய அவசியம் என்ன  என்று புரியவில்லை. நிர்வாகச் செலவுகள் அதிகரித்து விட்டதாகச்  சொல்வார்கள் போலும்! நிர்வாக அதிகாரி ,துணை/இணை கமிஷனர் போன்ற அதிகாரிகளின் சம்பளம் வேண்டுமானால் உயர்ந்து கொண்டே போனாலும், ஆலய சிப்பந்திகளின் சம்பளம் சொல்லிக் கொள்ளும் அளவில் உயர வில்லையே! உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், ஆபரணங்கள் முதலியவை முறையாகச் செலவழிக்கப் படுகின்றனவா? இல்லாத கோயில்களின் திருப்பணிக்குக் கொடுக்கப்படுகிறது என்பார்கள். உண்மை என்ன என்றால் அது போன்ற "இல்லாத" கோயில்களுக்கும் திருப்பணிக்கு ஆகும் செலவில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக செலவுகளுக்கு ஒரு துரும்பு கூட நகர்த்தப் படுவதில்லை. நன்கொடையாளர்களே இதையும் ஏற்றுக் கொண்டால் தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும் என்ற நிலை.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று அன்னதானத்தின் பெருமை அந்தக் காலத்தில் பேசப் பட்டது. தற்கால உண்டியோ (உண்டியலோ) கோயிலுக்கு வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு மட்டும் அமைக்கப் பட்டுள்ளதாகக் கருத வேண்டியிருக்கிறது. ஆள் உயர உண்டியல்களை நிரப்ப நாம் தயாராக இருக்கும் போது அமைத்தவர்களுக்கு என்ன கவலை? உண்டியல் வருமானம் சொற்பமே உள்ள கோயில்களைப் பற்றியும் எவ்வளவு பேர்  கவலைப் படப் போகிறார்கள் ?  

Saturday, September 1, 2012

ஆலய பராமரிப்பு


கோயில் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நித்திய பூஜைகள் ஆகம விதி முறைகளோடு நடத்தப்பெறுவதும் ஆகும். ஆலய  விமானங்களிலும் கோபுரங்களிலும் ப்ராகாரங்களிலும் எத்தனையோ ஆண்டுகள் புதர் மண்டிக் கிடந்தாலும் , அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணமே திருப்பணி செய்யும்போது தான் வருகிறது. மாதம் ஒரு முறை சிறு செடிகளாக இருக்கும் போதே அவற்றை மிக எளிமையாக நீக்கி விடலாம். அலட்சியத்தால் இவை பெரிய மரங்களாக வேரூன்றி மாரிக்காலத்தில் நன்கு வளர்ந்து, கோயிலில் பல இடங்களில் பிளவுகளை உண்டாக்கிய பிறகு தானே நாம் விழித்துக் கொள்கிறோம்! அந்த சமயத்தில் இம்மரங்களை அகற்றுவது சுலபமான வேலை இல்லை. பழைய கட்டமைப்பை அகற்றிவிட்டு, மரத்தை வேரோடு வெளியே எடுத்துவிட்ட பிறகு, மீண்டும் பழையபடியே  அவ்வமைப்பைக் கட்ட வேண்டியிருக்கிறது. இதற்கு ஆகும் செலவை நாம் முன்நடவடிக்கை எடுப்பதால் தவிர்க்க முடியும். உழவார மன்றங்கள் பல அரும் பணி ஆற்றியும் , எதிர் பார்த்த பலன் இல்லை. மரங்களை முழுவதுமாகக் கட்டிடத்திலிருந்து  வேரோடு நீக்காமல் வெட்டுவதால் அவை அழிக்கப்படுவதில்லை. மாறாக, அடுத்த மழை ஆரம்பித்த உடனேயே, அவை ஆக்ரோஷமாக வளர ஆரம்பித்து விடுகின்றன.

விமானங்களிலும் கோபுரங்களிலும் வேரூன்றிய மரங்களை அழிக்க ஒரு கெமிக்கல் , சென்னை நிறுவனம் ஒன்றால் ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. இது பற்றிய விவரங்கள் உறுதி செய்யப்பட பின்னர், நமது சபை , பரிட்சார்த்தமாக ஒரு கோயிலில் பயன் படுத்தி , மரங்கள் அழிவதை உறுதி செய்தபிறகு, பிற ஆலயங்களிலும் இப்பணியைச் செய்ய எண்ணியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கும்போது ஏதோ ஒரு சிலர் மட்டும் இதைச்செய்ய முன் வந்தால் போதாது. பல ஆலயங்கள் அழிவிலிருந்து காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் நம்மில் பலர்  செயல் பட்டே ஆக வேண்டும்.

கோயிலைப் பராமரிப்பது போலவே, ஆலய பூஜைகள் எக்குறையும் இல்லாமல் நடைபெற வகை செய்ய வேண்டும். ஆலயப் பணியாளார்கள், அறநிலையத்துறை தரும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவது மிகக் கடினம் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்தும் அர்ச்சகர்களுக்கு முறையாகப் போதிய சம்பளம் தரப்படுவதில்லை. ஆன்மீக அன்பர்கள் பலர் தாமே முன்வந்து தம்மால் இயன்ற உதவியைப் பல இடங்களில் செய்து வருகிறார்கள். கிராமங்களில் இருக்கும் பல பாடல் பெற்ற தலங்களில் அர்ச்சகர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இந்நிலையில் , திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாலயங்களுக்கு அர்ச்சகர்களை ஏற்பாடு செய்து, நித்திய பூஜை நடைபெறச் செய்வது பாராட்டுக்கு உரியதாகும். சிவாகம நெறிகளையும், தெய்வத் தமிழையும், புரந்து வரும் ஆதீனத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் .

திருவாவடுதுறை ஆதீனம் , நந்தவனங்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்துவதை, நேரில் கண்டவர்கள் அறிவார்கள். சமீபத்தில், தலையாலங்காடு என்ற பாடல் பெற்ற தலத்தில் மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவை முன்னிட்டு, ஆதீனத்திலிருந்து பணியாட்கள் உழவாரப் பணிக்காக அனுப்பப் பெற்றனர். அவர்களே, பூச் செடிகளை நட்டுவிட்டு, நீர் ஊற்றினார்கள் என்பதை நேரில் கண்டபோது மனம் நன்றி கூறியது.

ஆதீனத்தின் ஆன்மார்த்த மூர்த்தி ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் ஆனதால், கூத்தப்பெருமான் , சிவகாமவல்லி ஆகிய மூர்த்திகளை ஸ்ரீ மகா சந்நிதானம் அவர்கள் இக் கோயிலுக்கு அருட் கொடையாக வழங்கி, பெருமானின் ஆறு அபிஷேகங்களையும் திரு மடமே ஏற்கும் என அறிவித்ததுடன், பிரதிஷ்டைக்கும் தாமே நேரில் வந்து கலந்து கொண்டு அன்பர்களை ஆசீர்வதித்தார்கள். அவர்களுக்கு சைவ உலகம் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையது.

சிவாலயங்களில் முறைப்படி பூஜைகள்  நடக்க வேண்டும் என்பதால் , பூஜை நின்றுபோன கோயில்களில் அதை மீண்டும் துவக்கும் எண்ணத்துடன்,அண்மையில் ஒரு தமிழ் நாளிதழில் அர்ச்சகர்களை  இதற்காக விண்ணப்பிக்க வேண்டி ஆதீனம் கேட்டுக்கொண்டுள்ளது.பிறருக்கு முன்னோடியாகத் திருவாவடுதுறை ஆதீனம் இவ்வாறு முனைந்துள்ளது அனைவராலும் வரவேற்கத்தக்கது.

வெளியூர் அன்பர்களும், ஆதீனங்களும் இத்தனை தூரம் உதவ முன்வந்துள்ளபோது, உள்ளூர் அன்பர்களும் தங்களால் ஆன ஒத்துழைப்பைத் தருவதோடு, வழிபாட்டில் கலந்துகொண்டு, ஆலயம் சீரும் சிறப்புமாகத்திகழ வகை செய்ய வேண்டும் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
திருக்குளத்தைத் தூர் வாரும் பணியையாவது உள்ளுர் அன்பர்கள் ஏற்றுப் போற்ற வேண்டும். இதனால்,  வடிகால்கள் மூலம் நீர் குளத்தில் விடப்பட்டு நிலத்தடி நீர் வளம் பெறுமாதலால், பஞ்சாயத்துக்கள் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். வெய்யில் காலத்தில் குளம் வறண்டு கிடக்கும் போது, நிலங்களில் வேலை செய்பவர்கள் ஊதியம் பெறவும் இதன் மூலம் ஏற்பாடு செய்யலாம் அல்லவா? நூறு நாள் வேலை என்கிறார்களே, அதில் ஒன்றாகத் தூர் வாரும் இப்பணியை மேற்கொள்வதால் ஊரும்  நலம் பெறும். சிவ புண்ணியமும் கை கூடும்.