" அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
பெம்மானே பேரருளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற் புலவாணர்க்கு ஓர்
அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே."
என்பது, திருவாரூரில் உள்ள பரவையுண் மண்டளி என்ற தலத்து இறைவன் மீது சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகத்தில் ஒரு பாடல். இப்பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சிவாகமத்தால் தன்னை ஆராதிப்பவர்களுக்கும் ,தெய்வத் தீந்தமிழ்ப் பாடல்களால் தன்னைத் துதிப்பவர்களுக்கும் அருள் புரியும் பெருமான் இவன் என்பார் சுந்தரர். காலத்தின் கோளாறினால் , ஆகமம் என்று திருமுறைகள் குறிப்பது தமிழில் இருந்து மறைந்து போனவையே என்றும், இப்போது வடமொழியில் இருப்பவை தமிழிலிருந்து மொழியாக்கம் செய்யப் பெற்றவை என்றும் ஒரு சாரார் பிரசாரம் செய்து வருவது விந்தையாக உள்ளது. ஆகமம், தமிழிலேயே இருந்திருந்தால், மேற்கண்ட பாடலில் தனித்தனியாக ஆகமம், தமிழ்நூல் என்று பாடியிருக்க நியாயமே இல்லை. வட மொழியின் மீதுள்ள தேவையற்ற துவேஷமே இவ்வாறு அவர்களைப் பேச வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. வேத நெறி என்று குறிக்கப் பெறுவது தமிழ் வேதமே என்று அடிப்படை அற்ற வாதம் செய்கிறார்கள். ஒரு சில மடங்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, திருமுறை வேள்வி, சிலை நிறுவுதல், குட நன்னீராட்டு (யாகம், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் என்றெல்லாம் சொல்லக்கூடாதாம்!) என்றெல்லாம் சில ஊர்களில் செய்து வருகிறார்கள். இதற்கு உடன்படாத சைவ ஆதீனங்கள் இந்நிகழ்ச்சிகள் ஆதரிப்பதில்லை. இருப்பினும் , இந்த துஷ்ப்ரசாரம் தொடர்கிறது.
ஆகமங்கள் கிரியைகளைச் செய்யும் மந்திரங்கள். அவற்றிற்குக் கற்சிலைகளில் இறைவனை எழுந்தருளுவிக்கும் ஆற்றல் உண்டு. இதற்குப் பதிலாகத் தமிழில் அக்கிரியைகளைச் செய்தால் அந்த ஆற்றலைப் பெற இயலுமா. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவனுக்கே செய்யும் குற்றம் அல்லவா இது? ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு என்ன தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க முடியும்? நம: என்பதைப் போற்றி என்பதும் பொருத்தமற்ற மொழிபெயர்ப்பே ஆகும். திருமுறைகள் அனைத்தும் தோத்திரங்கள். தோத்திரங்கள் வேறு , கிரியைகள் வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.தோத்திரங்கள், கிரியைகளுக்குப் பதிலாக அருளப் பட்டவை அல்ல. இவற்றில் ஒன்றுக்கு ஒன்று எது உயர்ந்தது அல்லது எது தாழ்ந்தது என்று ஆராய்வது தாழ்வு மனப்பான்மையால் ஏற்படுவதே ஆகும். பரமேச்வரனே ஆகமங்களைத் தோற்றுவித்து அருளினான் என்பதை ,"சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்ற திருவாசக வரிகளைப் பன்முறை ஓதியும் குருநாதரின் பெயரால் சிவப்பணிகள் செய்பவர்களும் அவரது வாக்கிற்கு மாறாக நடந்துகொள்வது துரதிருஷ்டமே.
நகரத்தார்கள் பல ஆகம நூல்களையும், தல புராணங்களையும் வெளியிட்டு சைவ உலகிற்குப் பேருபகாரம் செய்துள்ளார்கள். பல தலங்களில் வேத,சிவாகம, தேவார பாட சாலைகளை நிறுவியுள்ளார்கள். அதே போன்று, சைவ ஆதீனங்களும் பாட சாலைகளை அமைத்துப் பல மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார்கள். அண்மையில் மயிலாடுதுறையில் , சிவாகம பாடசாலை பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் அவர்கள் எழுந்தருளி ஆசி வழங்கினார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் பாடசாலை அமைக்க இடம் வழங்கிய இக் குருமூர்த்திகளின் வருகை , பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அன்று ஆடி சுவாதி ஆதலால் நமது சபை , சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அபிஷேக ஆராதனைகளை, அவரால் பாடல் பெற்ற மண்ணிப்படிக்கரை (இலுப்பப்பட்டு)என்ற தலத்தில் செய்துவிட்டு, மாலையில்,மாயூரம் பெரிய கோவிலில் நடந்த மேற்கண்ட விழாவில் கலந்து கொண்டு . வறுமைக்கோட்டில் வாடும் மடைப்பள்ளி ஊழியர்கள் ஐவருக்கு உதவியாகத் தலா ஆயிரமும், ஆடைகளும் வழங்க முன்வந்தபோது, ஸ்ரீ சந்நிதானம் அவர்கள், மடத்தின் சார்பில் இருவருக்கு உதவுவதாகக்கூறவே, அவர்களது திருக்கரத்தாலேயே இவ்வுதவிகள் வழங்கப் பெறும் பேறு பெற்றோம்.
இது போன்ற சர்ச்சைகளுக்குச் சில ஆண்டுகளாகச் சைவம் உட்படுத்தப்படுவது வேதனைக்குரியது. இதனால் சமய வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆலயவழிபாடு,மற்றும் விழாக்கள் எல்லாம் பல்வேறு பிரிவுபட்ட மக்களை ஒன்று சேர்ப்பதாக அமைந்துள்ளதை இவ்வாறு துவேஷம் பாராட்டுவதால் அவ்வொற்றுமை பிளவு படும் என்பதில் ஐயமில்லை. இது தேவைதானா என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும். சிவனுக்குத் தொண்டாற்றிய நாயன்மார்கள் சரித்திரத்தைப் பயின்றவர்களுக்கு அடியார்க்கு அடியனாகும் சிந்தையே மேலோங்கியிருக்க வேண்டுமே தவிர , காழ்ப்புணர்ச்சி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது.
எனவே , தவறான பாதையைக் காட்டுபவர்களைப் புறக்கணித்துவிட்டு, "எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசன் தொண்டே பற்றுக்கோடாகக் கொண்டு தொண்டு செய்ய வேண்டும். வேதம், ஆகமம் பயின்றவர்கள், ஆதரிப்போர் இன்றி கிராமக் கோவில்களில் இருந்து வெளியேறும் நிலையில் , இவ்விதம் வெறுப்பை உமிழ்ந்தால் அவர்கள் எங்கே போவார்கள் என்று சிந்திக்க வேண்டும். குறைகள் எங்கும் இருக்கக்கூடும். குறை இல்லாதவன் இறைவன் ஒருவனே. ஒரு சில நிறைகளையாவது எடுத்துக்கொண்டு பிழை பொறுத்தல் பெரியோர் கடனாகும். சிறிது சிறிதாக அப்பிழைகள் களைய வழி வகைகள் செய்ய வேண்டுமே தவிர , மரபையே மாற்ற முற்படுவது, மரக் கிளையின் மீது அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவதற்கு ஒப்பாகும்.