Thursday, May 3, 2012

கேரளம் வழிகாட்டுகிறது


தொழிற்சாலைகளில் சர்வதேசத் தரம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்போது, ஒரு எளிய வழியைக் கையாளச் சொல்வது வழக்கம். மற்றவர்கள் பின்பற்றும் உயர்ந்த உத்திகளை நாமும் கையாளவேண்டும் என்பதே அது. இது ஆலயப் பராமரிப்புக்கும் பொருத்தமாகத் தோன்றுகிறது. அண்மையில் கேரளத்தில் யாத்திரை மேற்கொண்டபோது,அங்கு கண்ட சிறப்பான பல அம்சங்களைத்   தமிழகத்திலும் பின்பற்றலாமே எனத் தோன்றியது.

ஆலயங்கள் சிறப்பாக நடைபெற அரசாங்கமும், பக்தர்களும்,அர்ச்சகர்களும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே இது சாத்தியம். ஆலயத்திற்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப் படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் அவற்றை விற்றுவிட அரசாங்கம் முடிவு செய்திருப்பது துரதிருஷ்டமே. அச் சொத்துக்கள் காலப் போக்கில் மதிப்பு கூடி ஆலயத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக அமைக்கப்பட்டவை. அவற்றால் வரும் வருவாய் ஆண்டுதோறும் பெருக வேண்டும் என்பதே அதன் நோக்கம். சென்னையில் மெட்ரோ ரயில் தடத்தில் இருந்த ஆலய நிலங்களை விற்பதில் பல கோடிகள் கிடைத்தும் அது அந்த அந்த ஆலயங்களுக்குச் சேர்க்கப்பட்டதா என்பதே கேள்வி. இந்து அறநிலையத் துறையின் பொதுநிதியில் சேர்ப்பதால் என்ன பயன்? ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களே ஏப்பமிடப்பட்டுள்ள கால கட்டத்தில் இப்படியும் ஒரு திட்டம் தேவையா? ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே அரசாங்கத்தின் கடமையாக இருக்க முடியும்.

ஆலயங்களை மக்கள் எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என்பதைக் கேரளத்துக் கோயில்களைக் கண்டவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள். குப்பைகளையும் , எச்சில் துப்பிய சுவர்களையும், கோயிலுக்குள் சாப்பிட்டுவிட்டு வீசி எறியப்பட்ட இலைகளையும் , துர்நாற்றத்தையும்,மதில்களை ஒட்டிய மூத்திரக்குட்டைகளையும் பார்த்துப் பழகிவிட்டவர்கள் , கேரளத்தைப் பார்த்தாவது கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குருவாயூர் போன்ற நெரிசல் மிக்க ஆலயங்களிலும் எவ்வளவு நேர்த்தியாக தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்கிறார்கள் தெரியுமா? மூத்த குடிமக்களுக்கும் , பெண்களுக்கும் தனி வரிசைகள் குறிப்பிட்ட நேரங்களில் ஒதுக்கப்படுகின்றன. இங்கேயோ வரிசைகள் சிறப்புக் கட்டணத்தைப் பொறுத்தே அமைக்கப் படுகின்றன. அதிலும் விழா நாளன்று இருபத்தைந்து ரூ டிக்கேட்கள் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டதாகச் செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.

விழாக்காலமாக இருந்தால் எங்கு பார்த்தாலும் வழியை மறைத்துக்கொண்டு கடைகள். எங்கும் வியாபாரம். எதிலும் வியாபாரம். உலகத்தில் வேறு எங்குமே கிடைக்காத பொருள்களை வாங்குவதாக எண்ணிக்கொண்டு வளைக் கடைகளின் முன்பு பெண்கள் கூட்டம்.மூர்த்தங்களைத் தொடுவதும் அவற்றிற்குத் தாங்களாகவே தீபம் காட்டுவதும் நந்தியின் காதில் ரகசியம் பேசுவதும் இங்கு அன்றாடும் காணும் காட்சிகள் அல்லவா? நெரிசலான ஆலய வரிசைகளில் நிற்கும் கேரளா மக்கள் இறைவனின் நாமத்தை உச்சரிக்கிறார்கள். அதிகக் கூட்டம் இல்லாத கோயில்களிலோ , நிசப்தமாக மெய்மறந்து நிற்கிறார்கள். விடியற்காலை சுமார் ஐந்து மணிக்கே கோயில்கள் திறக்கப் படுவதால், பலர் ,தலைக்கு நீராடித் தூய்மையான ஆடை உடுத்தி வருவதைக் காணலாம். ஆண்கள் கண்டிப்பாகச் சட்டை அணிவதில்லை. இங்கு அவ்விதம் சொன்னாலோ எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சம்பிரதாயங்கள் காற்றில் விடப்படுகின்றன.

கேரளா நம்பூதிரிகளின் ஈடுபாட்டை சொல்லியே ஆகவேண்டும். அவர்களால் கோவிலின் சாந்தித்யம் காப்பாற்றப்படுகிறது. உரிய நேரத்தில் , பண்டைய முறை தவறாமல் பூஜைகள் நடக்கின்றன. மூலவரிடத்தில் சுவற்றில் டைல்ஸ் பதிப்பதோ,மின்சார விளக்குகள் அமைப்பதோ அங்கு காண முடியாத ஒன்று. நெய் தீபங்கள் வரிசையாகவும் நேர்த்தியாகவும் ஏற்றப்படுகின்றன. பெரிய ஆலயங்களில் பிராகாரத்தில் எண்ணற்ற தீபங்கள் மாலை நேரங்களில் ஏற்றப்படுகின்றன. மூலவரிடம் தொடர்ந்து அர்ச்சனைகள் மிகுந்த சிரத்தையுடன் நடைபெறுகின்றன. பிரசாதங்கள் , உரிய நபர்களிடம் கைகளிலோ,நெற்றியிலோ தீண்டப்பெறாமல் வழங்கப்படுகின்றன.பக்தர்கள் அவற்றை முழு மன நிறைவோடு பெற்றுச் செல்கின்றனர். அங்கு நதிக்கரைகளில் செய்யப்படும் ஆறாட்டு பூஜை ஒன்றே போதும் , அவர்களின் சிரத்தையைப் பற்றிச் சொல்வதற்கு.

சந்தியாவந்தனம் , ஆத்மார்த்த பூஜை , விபூதி ருத்ராக்ஷம் தரித்தல் , பஞ்சாக்ஷர ஜபம் செய்தல் , வெளியில் சென்று வந்தால் கை-கால்களையும் வாயையும் சுத்தம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைதல் , வருபவர்களிடம் கோவிலின் சிறப்பையும் தலபுராணத்தையும் சொல்லுதல், உரிய காலத்தில் ஆகம விதிப்படி பூஜை செய்தல் ஆகியவற்றை முழுவதும் கடைப் பிடிக்கும் அர்ச்சகர்கள் இங்கும் இருந்தபோதிலும், பலர் இன்னும் முழுமையாகப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது.
    
ஒரு சில கோயில்களில் இங்கும் பசு மடங்கள் இருந்த போதிலும், கேரளத்தில் யானைகளைக் கூடப் பராமரிக்கிறார்கள் . குருவாயூர் கோவிலுக்கு 64 யானைகள் இருக்கின்றன. அவை யாவும் ஒரு பெரிய தோப்பில் தென்னை மரச் சூழலில் நன்கு பராமரிக்கப்படுகின்றன. அவற்றைக் குளிப்பாட்டத் தனியே சிறு குளம் அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாகச் சென்று அங்கு பக்கவாட்டில் படுத்துக் கொள்கின்றன. அவற்றின் உடலைப் பாகன்கள் சுத்தப் படுத்தித் தேய்த்து விடுகிறார்கள். பிராணி நல மருத்துவரும் இருக்கிறார். நம் ஊரிலோ மயில் பூஜித்த தலம் என்று சில மயில்களைக் கூட்டுக்குள் வளர்க்கிறார்கள். சில மாதங்களுக்குப் பிறகு பார்த்தால் கூடு காலியாகக் காட்சி அளிக்கிறது.

கேரளத்தில் பூஜா காலங்களில் வாத்தியங்கள் முழங்கப்படுகின்றன.குறைந்த பட்சம் ஒரு சித்த மத்தளமாவது இசைக்கப் படுகிறது. ஆனால், இங்கோ, காலம் காலமாக இசைக்கப்பட்டுவந்த நாதஸ்வரத்தையும்,மேளத்தையும் சில கோவில்களில் மட்டுமே காண்கிறோம். திருச்சூர் திருவம்பாடி கிருஷ்ணன் கோயிலில் சன்னதியில் பூஜைக்காகத் திரையிடப்பட்டிருந்தபோது, ஒருவர்  சித்த மத்தளத்தில் தனி ஆவர்த்தனமே வாசித்து அனைவரையும் மெய்மறக்கச்செய்து விட்டார்.

யாத்ரீகர்கள் தங்கும் விடுதியையும் சிற்றுண்டிச் சாலையையும் குருவாயூரில் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்க முடியுமோ அத்தனைச் சிறப்பாகப் பராமரிப்பதை நேரில் கண்டு அதை இங்கும் செயல் படுத்த வேண்டும். இவ்வளவுக்கும் லஞ்சம் போன்ற குறுக்கு வழிகளை அங்குக் காண்பது மிகவும் அரிது. பல இடங்களில் கோயிலிலும் வெளியிலும் அன்ன தானம் நிறையச் செய்கிறார்கள்.சில இடங்களில் தினமும் பாயசத்தோடு நல்ல சாப்பாடு பரிமாறப்படுகிறது. அங்கும் ஒரு சில குறைகள் இருக்கலாம். நிறைகள் ஏராளமாக இருக்கும்போது அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

         "Just follow the best practices of others" என்ற வழிகாட்டி ,கோயில் பராமரிப்பிற்கும் மிகவும் தேவையான ஒன்று தானே?

2 comments:

  1. நேர்த்தியான யதார்த்தமான கட்டுரை. ஸம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் ஸகலருக்கும் ஹிதமாகயிருக்கும்

    ReplyDelete
  2. Extremely informative and inspiring. Your words will most certainly not go in vain. Thiagarajan, Durban, South Africa. Siva Siva

    ReplyDelete