Wednesday, February 29, 2012

உருவமும் அருவமும்


 நமக்குத்தான் எத்தனை எத்தனை சந்தேகங்கள்!! அதிலும் ஆன்மிகம் பற்றிய சந்தேகங்கள் அநேகம்! "தேவரீர் என் மனத்துள் எழுந்தருளி ஐயத்தைத் தீர்த்தருள வேண்டும்" என்று இறைவனை வேண்டுவதும் இல்லை. இறைஅருள் பெற்றவர்களை நாடுவதும் இல்லை.  எனவே நமக்கு நம் சமயத்தின் அருமை-பெருமைகள் தெரியாமலே போய் விடுகிறது.  சில சமயங்களில், வேற்றுச் சமயத்தவர்கள் செய்வதையும் பேசுவதையும் பார்த்து, நம்மிடம் அது போல் இல்லையே என்று அங்கலாய்க்கவும் செய்கிறோம். அவர்கள் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறார்கள்; நமக்கோ அனேக கடவுளர்கள் என்று சொல்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறோம்.

இதற்கெல்லாம் விடை காண முயலுபவர்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள  வேண்டும். நம்மிடம் அருவ வழிபாடு இல்லை என்பது தவறு. "உருவமும் அருவமும் ஆய பிரான்" என்று சிவபெருமானைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர். முதலில் அவனது உருவம் பற்றிச் சிந்திப்போம். எத்தனையோ உருவங்களில் 64 வடிவங்கள் சிவபிரானுக்குப் பெரிதும் பேசப்படுகின்றன. அவற்றுள் சோமாஸ்கந்தர், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி ,சந்திரசேகரர் போன்ற சாந்த வடிவங்கள் அவனது அருள் வடிவங்கள். பைரவர்,வீரபத்திரர், போன்ற மூர்த்தி வடிவங்கள்  அவனது மறக்  கருணையைக் காட்டுபவை. இவ்வளவு வடிவங்கள் இருந்தும், அவன் வடிவம் இன்னது என்று சொல்லிவிட முடியாது.

"இப்படியன்,இந்நிறத்தன்,இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட" முடியாத பரம்பொருள் என்கிறார் அப்பர் பெருமான். அப்படியானால் இத்தனை வடிவங்களில் வருவானேன்  என்றால், " அருள் காரணத்தால் வருவான்" என்கிறது தேவாரம். பதஞ்சலி- வியாக்கிரபாத முனிவர்களுக்கு ஆடல்வல்லானாகக்  காட்சி அளிக்கும் அதே இறைவன், சனகாதி முனிவர்களுக்கு முன்னர் ஆலின் கீழ் அரு மறை உரைக்கும் குருநாதனாகத் தோன்றினான். சிறுத்தொண்ட நாயனார்க்கு முன்னர் ,ரிஷப வாகனத்தில் சரவணபவனும் உமாதேவியும் உடன் எழுந்தருள, சோமாஸ்கந்த சிவமாகக் காட்சி வழங்குகிறான். இப்படி அவன் ஏற்ற ஒவ்வொரு வடிவங்களும் ஒப்புயர்வற்றவை.

அந்தகனையும், காலனையும் அழிக்கும்போது சூலம் ஏந்திய நிலையிலும், ஐந்து தொழில்களும்  அவனுள் அடக்கம் என்பதை ஆனந்த தாண்டவ வடிவிலும், மான் மழு ஏந்தும் சோமாஸ்கந்த வடிவிலும் பல்வேறாகக் காட்சி அளிக்கும் இறைவன், அருவ  வடிவினன் ஆக இருப்பதைத் தான் சிதம்பர ரகசியம் என்கிறார்கள். அங்கு உருவத்திருமேனி இருப்பதில்லை. எங்கும்வியாபிக்கும்  சிவ சிதம்பரமாகப்   பொன்னம்பலத்தில் சிதாகாசனாகத் தோற்றமளிக்கிறான்.

உருவ நிலைக்கும் அருவ நிலைக்கும் இடைப்பட்ட நிலையைத்தான் உருவாருவம் என்ற இரண்டும் கலந்த நிலை என்கிறோம். அதுவே சிவலிங்கமாகும். அந்த நிலையில் இதுவே உருவம் என்று சொல்லமுடியாதபடி,பாணம்,ஆவுடையார்,பீடம் என்ற முப்பிரிவுகளாகக்  காண்கிறோம். அதே சமயம் அருவமாக இல்லாதபடி லிங்க வடிவைக் காண்கிறோம். சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் உருவம் காட்டியும், சந்திரமௌளீச்வர ஸ்படிக லிங்கமான உருவாருவம் காட்டியும், பரந்த வெளியான சிதம்பர ரகசியம் எனப்படும் அருவமாகவும் முக்கோலங்களையும்  உணர்த்தும் தத்துவனாவதை நாம் சிந்திக்க வேண்டும்.  எவ்வளவோ பெரிய தத்துவத்தை இப்படி எல்லாம் தெரிந்துவிட்ட மாதிரி விளக்க முற்படுவதே ஒரு வகையில் தப்புதான்.

ஒரு முருக பக்தர் பாடினார்: எமன் வந்து என் உயிரைக் கவர முற்படும்போது நீ என்னைக் காத்து அருளவேண்டும் என்று சொல்ல வந்தவர், வள்ளி தேவானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி, காலால் நடந்து வந்து என் முன்னே வந்தருள வேண்டும் என்று பாடினார். வேண்டுவார் வேண்டுவது  அனைத்தையும் தரும் இறைவன் செவி சாய்க்காமல் இருப்பானா? எந்த உருவில் த்யாநித்தாலும் அந்த உருவில் எழுந்தருளுவதால் பக்தன் மகிழ்வதற்காக இவ்வாறு உருவம் தாங்கி எழுந்தருளுவது  அவனது பெருங் கருணையைக்  காட்டுகிறது.

அதே சமயத்தில் சிறிது சிறிதாக, உருவ வழிபாட்டிலிருந்து உருவருவமான சிவலிங்க வழிபாட்டின் பெருமையை உணர்த்துவதாக, சிவாலயங்களில் அந்த உருவாருவமான மகாலிங்கமே நடு நாயகமாகக் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த நிலையாக , உள்ளம் பெரிய கோவிலாகவும், உடலே ஆலயமாகவும், அருவ நிலையில் உள்ள பெருமானை யோகத்தால் த்யானிப்பது உயர்ந்தது. ஆகவே இம்மூன்று நிலைகளாலும் இறைவனைக் காணலாம்.இதைத்தான்  அருணகிரிநாதரும், "உருவாய் அருவாய்உளதாய் இலதாய்.." என்று பாடினார்.  மற்றவர்கள் படிப்படியாகக்  காட்ட முற்படாததை, அவரவர் பக்குவத்திற்கு ஏற்றபடி, மூன்று நிலைகளாகக் காட்டி நல்ல கதிக்கு வழி காட்டுகிறது நம் மதம். இதைப் புரிந்துகொண்டால் தான் நம் பெருமை  நமக்குத் தெரிய வரும்.

அண்மையில் ஒரு அன்பர்  கேட்டிருந்தார்: " நம் கடவுளர்கள் எப்போதும் அதே நிலையில் தான் இருப்பார்களா. அல்லது இவை யாவும் யாராவது கற்பித்ததா" என்று. அக்கேள்விக்கு விடையாகத்தான் இவ்வளவும் எழுதத் திருவருள் கூடியது. சித்தாந்தம் மூலமாக இன்னும் விளக்கங்கள் பெறலாம். அதற்கும் திருவருள் கூட்ட வேண்டுமே!

அடுத்ததாக, எந்த உருவில் இறைவனை வழிபடுவது என்ற சந்தேகமும் கூடவே வந்து விடுகிறது. ஒரு குழந்தை, தன்னை ஒத்த குழந்தைப் போல் தோன்றும் பிள்ளையார் பொம்மையைக் கண் - வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் உண்டு. இஷ்ட தெய்வம் இருந்தாலும் குல தெய்வத்தை மறக்கக் கூடாது. ஆக, எந்த வடிவில் வழிபட்டாலும், இறைவன் அந்த வடிவில் வந்து, அருளுவான். ஒரே வடிவில் இரு மூர்த்திகள் ஒன்றி இருப்பதை,சங்கரநாராயணர் வடிவிலும் அர்த்தநாரீச்வரர் வடிவிலும் ஒன்றிலிருந்து இரு மூர்த்திகள்(பிரம-விஷ்ணுக்கள்)தோன்றுவதை ஏக பாத மூர்த்தி வடிவிலும் காணும் அதே சமயத்தில் பிரளய காலத்தில் எல்லாத் தேவர்களும் சிவத்தோடு ஒடுங்கிவிடுவதை சீர்காழி சட்டைநாதர் வடிவிலும் காண்கிறோம்.இந்த வடிவங்கள் மனிதனின் கற்பனை அல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைவன் வெளிப்பட்ட நிலையைக் காட்டுவனவாக  அந்தத் திருவுருவங்கள் காட்சி அளிக்கின்றன.

நிறைவாக ஒன்று மட்டும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். நமக்கு எப்பொழுதெல்லாம் சந்தேகங்கள் ஏற்படுகின்றதோ அவற்றை உடனுக்குடன் தீர்த்துக் கொண்டால் , நம்மைப் பிறர் ஏசும்போது பதில் சொல்லத்தெரியாமல் விழிக்கும் நிலை வராது. "வேதாகமம் " "ஜபம்" "கர்த்தா" போன்ற சொற்கள் எந்த மதத்தைச் சேர்ந்தது என்றுகூடத் தெரியாத துர்பாக்கிய நிலைக்கு அல்லவா தள்ளப் பட்டிருக்கிறோம்!!  

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Your Exposition is vibrant and helps in reconciliation of personal and social aspects of religion. The choice of a particular form of God is destined by the Divine and cannot be infused or inculcated. It is like conception of aesthetics. It is based on instinctive reflexes. Inner Life is directed by Divine. No form of expression can disrupt its manifestation apart from the Divine itself. Nama: Shivaya

    ReplyDelete