Friday, December 23, 2011

கோயில் யானைகள்

யானையை எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது என்பது என்னவோ உண்மை தான். பக்தர்கள் அதனை வினாயகராகவும் ,குழந்தைகள் அதை வியப்புடனும் பார்க்கின்றார்கள். பெரிய கோயில்களில் நுழைந்தவுடன் யானையைப் பார்த்துவிட்டுத்தான் சுவாமி தரிசனத்திற்குப் போகிறோம். அது நம் தலையைத் தொடும்போது ஏற்படும் அனுபவம் தனிதான். சிறு குழந்தைகளை அழ-அழ அதன் மத்தகத்தின் மீது ஏற்றி உட்கார வைத்துவிட்டுக் கீழே இறக்குவார்கள் பாகன்கள். கேரளத்தில் சுமார் ஐநூறு கோயில்களில் யானைகள் பராமரிக்கப் படுகின்றன என்கிறார்கள். தமிழகத்திலும் பெரிய தேவஸ்தானங்களில் யானைகள் இருக்கின்றன.

அரசர்கள் காலத்தில் யானைகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லாமல் போருக்குச் செல்பனவாகவும் இருந்தன. அரசன் யானை மீதிருந்தே போரிட்டு மாண்டால் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்று சிறப்பிக்கப் படுகிறான். மேலும், எடையுள்ள பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவும் யானைகள் பயன் படுத்தப்பட்டன. காட்டில் வெட்டப் பட்ட மரங்களை நதிக்கரைக்கு இழுத்துச் செல்ல யானைகள் உபயோகிக்கப்பட்டன. யானைகளின் லக்ஷணங்கள், அவற்றைக் கையாளும் முறைகள் பற்றி நூல்களும் இயற்றப்பட்டன. கோயில்களுக்கென்று விடப்பட்ட யானைகள் அருகிலுள்ள நதியிலிருந்து திருமஞ்சனம் கொண்டுவரவும், திருவிழாக்களுக்கும் பயன் படுத்தப்பட்டன. சில ஆலயங்களில் கஜ பூஜைகள் நியமத்துடன் நடைபெற்றன.இன்னும் சொல்லப்போனால், குருவாயூர் ஆலயத்திலிருந்த கேசவன் என்ற யானையின் படம் பல வீடுகளில் பூஜை அறையை அலங்கரிக்கிறது.

தற்காலத்தில் கோயில் யானைகளின் நிலையைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டி இருக்கிறது. காட்டில் வாழ வேண்டிய பிராணியை நாட்டில் வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. " யானையைக் கட்டித் தீனி போடுவது போல" என்றும், "யானை பசிக்கு சோளப்பொரியா?" என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசுகிறோம். கோயில் யானைகள் வயிறார சாப்பிடுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆறுகளில் அமிழ்ந்து குளிக்க வேண்டிய யானைகளை கோயில் வளாகத்தில் குழாய் நீரால் குளிப்பாட்டுகிறார்கள். பிறகு கோயிலைச் சுற்றி ஒரு வலம். கொடிமரத்தடியில் நின்று சன்னதியை நோக்கி துதிக்கையால் வணக்கம் தெரிவித்து விட்டு மடப்பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லப் படுகிறது. மூன்று நான்கு உருண்டைகளாக சாத உருண்டைகள் வாய்க்குள் திணிக்கப் படுகின்றன. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது, கொடிமரத்தருகில் போடப்பட்ட தென்னை மட்டையைத் தின்றபடியே, வருவோரிடம் பாகனுக்காக எடுக்கப்படும் பிச்சை. ஒரு காலையும் கனத்த இரும்புச் சங்கிலியால் கட்டிவிடுகிறார்கள். அப்படிக் கட்டப் படும் காலும் காலின் அடிப்புறமும் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

பழக்கப் படுத்தப்பட்ட யானைகளே சில சமயம் மிரளுவதும், மதம் வந்து ஓடுவதும் உண்டு. இந்தமாதிரி சமயங்களில் பல பாகன்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு யானை, பாகனை மிதித்துத் துதிக்கையால் வீசியெறிந்து கொன்றதாகச் செய்தி வெளியாகி இருந்தது. இவ்வளவும் நடந்தும். யானையின் அருகில் பலத்த வெடி சப்தமும்,வான வேடிக்கையும், செண்டா போன்ற வாத்தியங்களும் தொடர்ந்து முழங்குகின்றன. விழாக்காலங்களில் யானையைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அப்போது யானை மிரண்டால், மக்களே ஒருவர்மேல் ஒருவர் மிதிபட்டு உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது. பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் படங்களோடு செய்திகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன(அவற்றில் ஒரு சில படங்களையே இப்பதிவில் காண்கிறீர்கள்.அவர்களுக்கு நம் நன்றி உரியது.)

தமிழக அரசு, கோயில் யானைகளைப் புத்துணர்ச்சி(!) முகாமுக்காக 48 நாட்கள் முதுமலை காட்டில் பாகன்களோடு அனுப்பி வைக்கிறது. இவற்றை லாரிகளில் ஏற்றும் சிரமம் ஒரு பக்கம். திரும்பிவந்தபிறகும் இதே உண்டைகட்டியும், கால்சங்கிலியும் தொடரும் தானே? இங்குதான், தற்கால சூழ்நிலையில் கோயில்களுக்காக யானைகள் தேவைதானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருவானைக்காவல் போன்ற யானை வழிபட்டதாகப் புராணங்களில் கூறப்படும் தலங்களில் மட்டும் அந்த ஐதீகத்திற்காக யானைகள் பராமரிக்கப்பட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஒரு யானையைப் பராமரிக்க ஆகும் செலவில் பல பசுக்களைக் கோயில்வளாகத்தில் வளர்க்கலாம். அவற்றால் பயனும் உண்டு.(யானையால் என்ன பயன் என்பது வேறு விஷயம்) . மக்களுக்கு-- குறிப்பாக பாகன்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கவும் முடிகிறது. பசுமாடுகளைப் பராமரிக்க ஒரு சிலரை நியமிக்கலாம். கால நடை மருத்துவர் மூலம் அவற்றின் நலனையும் பேணலாம். யானைகளுக்கும் சித்திரவதையிலிருந்து சுதந்திரம் கிடைக்கும். அவற்றிற்கு உண்மையிலேயே "புத்துணர்ச்சி" கிடைக்கும். அரசாங்கப் பணமும் மிச்சமாகும்.

Thursday, December 1, 2011

ஆண்டவனே கதி


பல கோயில்கள் "கமர்ஷியலாக" ஆகி வருவதாக அங்கலாய்த்துக் கொள்வோர்கள் உண்டு. அப்படி ஆகாத கோயில்கள் ஏராளமாக இருக்கும்போது அங்கு ஏன் செல்லக்கூடாது என்று எண்ணிப் பார்ப்பதில்லை. மின்சாரக் கட்டணம் என்று வரும்போது அரசாங்கமும் கோயில்களைக் "கமர்ஷியல்"களாகவே பார்க்கிறது. வீடுகளுக்கான கட்டணத்தையே கோயில்கள் செலுத்திக் கொண்டு இருந்ததை "கமர்ஷியல்" கட்டணமாக அரசு உயர்த்தியபோது ஒருசிலர் அதிருப்தி தெரிவித்தபோது, " சுவாமிக்குப் பின்னால் ஒளி வட்டம் இருப்பது போல் படம் போடும் போது மின் விளக்கு எதற்கு?" என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஏளனம் பேசியவரும் உண்டு.

தற்போது மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த உத்தேசித்திருக்கும்போது, குறைந்த கட்டணத்தையும், பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்தையும் உயர்த்த சிபாரிசு செய்யப்படுகிறது. எல்லாக் கோயில்களும் பழநியோ,திருச்செந்தூரோ,மதுரையோ அல்ல. எந்த விதமான வருமானமும் இல்லாத கிராமக் கோயில்கள் ஏராளம். நிலங்களில் இருந்து வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் தவிக்கும் ஆலயங்கள் ஏராளம். நிலைமை இப்படி இருக்கும் போது, மின்கட்டண உயர்வை அக்கோயில்கள் எப்படி சமாளிக்க முடியும்? .  அரசுக்குப் பரிந்துரைக்கும் குழு இதனைப் பரிசீலிக்க வேண்டும்.

வீடுகளுக்கான மின் கட்டணமும் உயர்வதைத் தட்டிக்கேட்போர் இருக்கிறார்கள். எதிர்கட்சிகளும் இருக்கின்றன. ஆலயங்களோ அனாதையாக விடப்படுகின்றன.இவ்வளவு ஆன்மீகவாதிகளும்,மடாதிபதிகளும் இருந்தும் யாரும் அதிருப்தி தெரிவிக்கக் காணோம்.மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு, மடங்கள் வெளியிடும் பத்திரிகைகளுக்கும் தபால் தலை கட்டணத்தை உயர்த்தியபோது, திருவாதிரையான் திருவருட்சபை , அப்போதைய பிரதமர் திரு வாஜ்பாய் அவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதன் நகல, திருவாவடுதுறை ஆதீன மாத இதழான "மெய்கண்டார்"ல் வெளியாயிற்று.

ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களில் பெரும்பாலும் அப்பூஜைகள் பகலிலேயே நடக்கின்றன என்றாலும் கிணற்று/ ஆழ் துளை நீரைப் அபிஷேகத்திற்காகப்பயன்படுத்த வேண்டி மின்சார மோட்டார் வேண்டியிருக்கிறது. மழைக் காலங்களில் பகல் நேரத்திலேயே கோயிலுக்குள் கும்மிருட்டாக இருப்பதால் மின் விளக்குகள் தேவைப் படுகின்றன. பழங்காலத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு வரவில்லையா எனக் கேட்கலாம். உண்மைதான். எண்ணெய் வாங்க மன்னர்கள் ஏற்படுத்தி வைத்த நிபந்தங்கள் கைப்பற்றப்பட்டு விட்ட தற்காலத்தில் இது சாத்தியமில்லாமல் போய் விட்டது அல்லவா? நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தும், "மின்சார நிதி" என்று மக்களிடம் கை ஏந்தவேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டு விட்டன நம் ஆலயங்கள்? ஒரு பல்பு செயலிழந்து போனால் உபயகாரர் யாராவது வாங்கிக்கொடுத்தால் தான் அதற்கு விடிவு காலம்.

இப்படிப்பட்ட துர்பாக்கியக் காலகட்டத்தில் பக்தர்கள் செய்யக்கூடியதும் உண்டு. குறைந்த மின் செலவு ஆகும் பல்புகளை ஆலயத்திற்கு வழங்கலாம். சூரிய ஒளிமூலம் மின்சாரம்  பெறும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம். இரவு நேரத்தில் ப்ராகாரங்களுக்காவது ஒளி இவ்விதம் பெற முடியும். தேவையற்ற இடங்களில் மின்சாரம் வீணாவதைத் தடுப்பதாலும் மின் கட்டணம் குறையும்.

மின் வெட்டுக்களும், மின் கட்டண உயர்வும் இருக்கும்போது, கோயில்களைப் பாதுகாக்கும் "பாதுகாப்பு அலாரங்களுக்கு" என்ன வேலை? பழையபடி பாதுகாப்பின்றிக் கிடக்க வேண்டியதுதான். இவ்வாறு அக்கறையின்றி விடப்பட்ட ஆலயங்களுக்கு என்னதான் தீர்வு? தோன்றாத்துணை ஆகிய இறைவனுக்காக நீதி மன்றங்களில் முறை இடலாம். எதற்கெல்லாமோ நிலுவை பெறப் படும் இக்காலத்தில் இதற்குக் கிடைக்காமலா போய்விடும்?  ஆனால் இப்பொதுநல வழக்கை இறைவனுக்காகத் தொடுப்போர்தான் இல்லை. அனாதை ஆகிவிட்ட ஆலயங்களுக்கு அந்த ஆண்டவனே கதி.